Published:Updated:

சர்வைவர் - 31 | `என்னா அடி!' ஆக்ஷன் கிங்கின் அதிரடி சிபிஐ விசாரணை... சிக்கித் தவித்த சரண், ஐஸ்வர்யா!

சர்வைவர் - 31

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 31-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 31 | `என்னா அடி!' ஆக்ஷன் கிங்கின் அதிரடி சிபிஐ விசாரணை... சிக்கித் தவித்த சரண், ஐஸ்வர்யா!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 31-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 31
சர்வைவர் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சூடு ஏறிக் கொண்டே போகிறது. தவறு செய்யும் போட்டியாளர்களை எவ்வித கருணையும் இல்லாமல் "வெளியே போறதுன்னா உடனே கிளம்புங்க. ஒருத்தரை நம்பி ஷோ இல்லை" என்று லெஃப்ட் அண்ட் ரைட் அடித்து வெளுக்கிறார் ஆக்ஷன் கிங். இவரை சிறிது நாளைக்கு பிக்பாஸ் ஷோ ஹோஸ்ட் ஆக அமர்த்தி வைத்து அழகு பார்த்தால் எப்படியிருக்கும் என்று கூட தோன்றிவிட்டது. அந்தளவிற்கு கறார் காட்டுகிறார் அர்ஜுன். ஆனால் சில தவறுகளை தாமதமாகக் கண்டிப்பதை விடவும் அவை வெளிப்படும் போதே சுட்டிக் காட்டினால் நன்றாக இருக்கும்.

இன்று இரு அணிகளுக்கும் தலைவர் பதவிக்கான போட்டி நடந்தது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்கு முன் நிகழ்ந்த விசாரணையில் கோபம், வன்மம், அழுகை, துரோகம் என்று நவரசங்களும் கலந்து இருந்தன.

31-ம் நாள் நிகழ்ச்சியில் என்ன நடந்தது?

வேடர்கள் தீவு. தலைவர் போட்டிக்கான வார்ம் -அப்பில் போட்டியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். 'அதிகம் வழிபவர்' என்கிற பட்டம் ஐஸ்வர்யாவிற்குக் கிடைத்தது பொருத்தமானதுதான். புது வரவான சரணிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார் அவர். சரணைக் காப்பாற்றுவதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றியடைந்ததால் அம்மணி சந்தோஷமாக இருக்கிறார்.

சர்வைவர் - 31
சர்வைவர் - 31

"நான் இங்க வந்தது சில பேருக்கு பிடிச்சிருக்கு. சில பேருக்கு பிடிக்கலை" என்று சரண் அனத்தியபோது "அதைப் பத்தியெல்லாம் நீ ஏன் கவலைப்படறே. புதிய அணி... புதிய ஆரம்பம்-னு நெனச்சுக்கோ. நானே உனக்கு எல்லாத்தையும் ஊட்டி விட முடியாது. உன்னோட முயற்சியும் இருக்கணும்" என்று ஊக்கம் தந்தார் தலைவி. (ஆனால், இதுவே இவருக்கு பின்னால் வினையாக வந்தது).

இந்த வாரத் தலைவருக்கான தகுதி 'இனிமையான நண்பன்' என்பதாக இருக்க வேண்டுமாம். வேடர்கள் அணியில் இனிகோவும் நாராயணணும் காடர்கள் அணியில் வனேசாவும் லேடி காஷூம் தலைவர் பதவிக்கு வேட்பாளர்களாக நிற்பதாக முடிவு செய்யப்பட்டது. "நான் இப்பத்தான் இந்த டீமிற்கு வந்திருக்கேன்" என்று சொல்லி போட்டியிட மறுத்துவிட்டார் சரண் .

"களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்" என்று தன் சிக்னேச்சர் வசனத்துடன் வரவேற்றார் அர்ஜுன். போட்டியை உடனே துவங்குவார் என்று பார்த்தால் தனது அதிரடி சிபிஐ விசாரணையைத் துவக்கினார். "காடர்களே... கவனிச்சீங்களா... எதிர் டீம்ல விஜயலஷ்மி இல்ல" என்று அவர்களை ஆழம் பார்க்க ஆரம்பித்தார் அர்ஜுன். இதை ஏற்கெனவே கவனித்துவிட்ட விக்ராந்த்தும் உமாபதியும் சோகமாக இருந்தார்கள்.

விஜி வெளியேறியதன் பின்னணியை அர்ஜுன் விளக்க ஆரம்பித்தார். அவர் எய்த அம்பு சரியாகப் பாய்ந்தது. சரண்தான் விஜியின் எலிமினேஷனுக்குக் காரணம் என்பதை காடர்கள் அறிந்ததும் அவர்களின் கோபம் சரண் மீது மொத்தமாக பாய்ந்தது. "அண்ணன்டா... தம்பிடா..." என்று ஒரு காலத்தில் பாசமாக நின்று கொண்டிருந்த சரணும் விக்ராந்த்தும் இப்போது 'அக்னி நட்சத்திரம்' திரைப்படத்தின் பிரபு - கார்த்திக் போல முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். வேடர்கள் அணிக்காக விஜி எழுதிய கடிதம் வாசிக்கப்பட்டபோது உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் சிந்தினார் உமாபதி. "இதப் பத்தி என்ன நினைக்கறீங்க?" என்று அர்ஜுன் கேட்டபோது வந்த கோபத்தில் 'நோ கமெண்ட்ஸ்' என்றார் அவர்.

சர்வைவர் - 31
சர்வைவர் - 31

"காடர்கள் அணியிலேயே இருந்திருந்தால் ஒருவேளை நான் சேஃபா இருந்திருப்பேன்" என்று விஜி தனது கடிதத்தில் குறிப்பிட்ட ஒரு வரியை மேற்கோள் காட்டிய விக்ராந்த் "வேடர்கள் அணிக்கு அவங்க மட்டும் போயிருந்தா விஜி அங்க சேஃபா இருந்திருப்பாங்க" என்றார். 'பாம்பு' என்கிற வார்த்தையைச் சொன்னார் உமாபதி. இருவரின் மறைமுகமான குத்தல் சரணின் மீதுதான் என்பது அனைவருக்கும் புரிந்தது.

வனேசாவிற்கும் விஜயலட்சுமிக்கும் சண்டை மூளலாம் என்று நான் கணித்திருந்தது தவறாகப் போயிற்று. "என்னமோ தெரியல... உன்னைத்தான் நேத்து அதிகம் மிஸ் பண்ணேன்" என்று விஜி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததால் வனேசாவும் கண் கலங்கினார்.

"தங்களுக்குத் துரோகம் செய்யப்பட்டது போல் காடர்கள் அணி உணர்றாங்க. இதை என்னால புரிஞ்சுக்க முடியது. எனக்கும் இந்த மாதிரிதான் நடந்தது" என்று சைடு கேப்பில் வேடர்கள் அணியை முள்ளால் குத்தினார் லட்சுமிபிரியா.

விக்ராந்த்தும் உமாபதியும் தன்னை பெரிய துரோகி போல் சித்தரிப்பதைக் கண்டு வருந்திய சரண் "நான் விளையாட்டை விட்டு வெளியேறுகிறேன்" என்று பக்கத்தில் இருந்த ஐஸ்வர்யாவிடம் ரகசியமாகச் சொல்ல "நீ என்ன லூஸா? சும்மா இரு" என்பது போல் அதட்டினார் ஐஸ்வர்யா.

லட்சுமிபிரியாவிடம் பேசிக் கொண்டிருந்த அர்ஜுன் இதைக் கவனித்து விட்டு "அங்கே என்ன குசுகுசு...?" என்று பின்பெஞ்ச் மாணவர்களை ஆசிரியர் அதட்டுவது போல் கேள்வி கேட்க "ஒண்ணுமில்லீங் சார்... சரண் மத்தியானத்துக்கு சிக்கன் பிரியாணி கிடைக்குமா, மட்டனா -ன்னு கேட்டுட்டு இருந்தான் சார். இருடா ஆப்ல ஆர்டர் போட்டிருக்கேன்னு சொல்லிட்டு இருந்தேன் சார்'' என்பது போல் எதையோ சொல்லி மழுப்ப முயன்றார் ஐஸ்வர்யா. சரணைக் காப்பாற்றப் போய் இவரும் சிக்கலில் மாட்டிக் கொள்வார் போலிருக்கிறது.

"நீங்க பேசறதெல்லாம் ரெக்கார்டு ஆயிட்டிருக்கு... தெரியுமில்ல. ஒழுங்கா என்ன பேசினீங்கன்னு சொல்லுங்க" என்று அர்ஜுன் அதட்டியவுடன் "அவன் ஆட்டத்தை விட்டுப் போறேன்னு சொல்றான் சார்" என்று அவர் வேறுவழியின்றி உண்மையைச் சொல்ல வேண்டியதாகப் போயிற்று. "போறதுன்னா இப்பவே கிளம்புங்க. ஒருத்தரை நம்பி ஷோ இல்ல. இந்தப் பூச்சாண்டி காட்டற வேலை எல்லாம் வேணாம்" என்று ஆக்ஷன் கிங்கின் வசனங்களில் அனல் பறக்கவே அனைவரின் முகங்களிலும் திகில் பரவியது.

சர்வைவர் - 31
சர்வைவர் - 31

தன்னை மட்டுமே குற்றம் சாட்டுவதால் கோபம் அடைந்தாரோ என்னவோ... "விஜியும்தான் போன் பேசினாங்க.." என்றொரு பகீர் தகவலை சபையில் தெரிவித்தார் சரண். (இந்த விசாரணைல பல விஷயங்கள் வெளியே வரும் போலிருக்கே!). "அதெல்லாம் எனக்குத் தெரியாது" என்று விக்ராந்த் மறுத்தது அப்பட்டமான புளுகு என்பது நன்றாகவே தெரிந்தது.

"மத்தவங்க தப்பு பண்ணா, அதைப் பார்த்து நீங்களும் பண்ணுவீங்களா...?" என்று அர்ஜுன் கேட்க, "நான் பண்ணத பார்த்துதான் விஜி பண்ணாங்க" என்று தான் சேம் சைட் கோல் அடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுகூட புரியாமல் புகார் சொல்லிக் கொண்டிருந்தார் சரண். "கேமரா இல்லாதப்ப... என் கேர்ள் பிரண்டு அழுவுறா-ன்னு சொல்லி சரண் போன் பேசினான் சார். வேணுமின்னா போன் தந்தவரை கூப்பிட்டுக் கேளுங்க... நானும் சொல்ல வேணாம்னு பார்க்கறேன். வாயைக் கிளர்றான்" என்பது மாதிரி பொங்கினார் விக்ராந்த்.

இந்தச் சர்ச்சை சற்று ஓய்ந்ததும் அடுத்த விசாரணையை வேடர்களிடம் ஆரம்பித்தார் அர்ஜுன். "கேமரால பதிவு பண்ணாதீங்க. எங்களுக்கு பிரைவேட் ஸ்பேஸ் வேணும்னு கேட்டீங்களா? ரெஸ்ட் ரூம் ஏரியால மட்டும்தான் உங்களுக்கு பிரைவஸி கிடைக்கும். மத்தபடி உங்கள் நடவடிக்கைகளை கேமரா தொடர்ந்து பதிவு செய்யும். அது தெரிஞ்சுக்கிட்டுதானே வந்தீங்க? நீங்க எப்படி விளையாடறீங்க... என்ன நெனக்கறீங்கன்னு மக்களுக்கும் எங்களுக்கும் தெரிய வேண்டாமா? அதுதானே ஷோவோட கான்செப்ட்?" என்றெல்லாம் அர்ஜுன் எகிறித் தள்ள "நான் அந்த மாதிரி சொல்லல சார்" என்று மறுத்தார் ஐஸ்வர்யா.

"ப்ரூவ் பண்ணட்டுமா..? உண்மைன்னு தெரிஞ்சா கேமை விட்டுப் போறீங்களா?" என்று அர்ஜுன் சவால்விட உணர்ச்சிப் பெருக்கில் ஐஸ்வர்யா அழ ஆரம்பித்துவிட்டார். எதிரணியில் இருந்து பதறி ஓடி வந்த அம்ஜத், ஐஸ்வர்யாவை அணைத்து ஆறுதல் சொன்னார்.
சர்வைவர் - 31
சர்வைவர் - 31

"நந்தா... நீங்களும் அந்த மாதிரி சொன்னீங்களா... பிரைவேட் ஸ்பேஸ் வேணுமின்னு" என்று வண்டியை வேகமாக அந்தப் பக்கம் திருப்பினார் அர்ஜுன். "என் ஃபேமிலி மேட்டர் பேசும்போது மட்டும்தான் அப்படிச் சொன்னேன்... மத்தபடி இந்த விளையாட்டு ஃபார்மட் பத்தி தெரியும்" என்று கெத்து குறையாமல் நந்தா சொன்னது ஒருவகையில் சிறுபிள்ளைத்தனமானது. தன் குடும்ப விஷயம் ஊருக்குத் தெரிய வேண்டாம் என்றால் இந்த நிகழ்ச்சியில் அதைப் பற்றி அவர் பேசாமல் இருப்பதுதான் சரியானது.

மறுபடியும் சரணை நோக்கிய அர்ஜுன், "நேர்மையோட இந்த விளையாட்டை ஆடணும்" என்று முறைப்பாக சொல்ல 'சின்னப் பையன்-னுதானே என்னையே அடிக்கறீங்க.. முடிஞ்சா விக்ராந்த் மேல கை வெச்சுப் பாருங்க' என்று சொல்ல நினைத்தாரோ என்னமோ "அந்த நேர்மை எல்லோருக்கும் இருக்கணும்" என்று சரண் முணுமுணுக்க அர்ஜுனுக்குக் கோபம் வந்துவிட்டது.

'கில்லி' பிரகாஷ்ராஜ் மாதிரி 'தப்பு... தப்பு... தப்பு... அத நீ சொல்லக்கூடாது. எழுந்து நில்லு" என்று டென்ஷன் ஆகிவிட்டார். "இதுதான் உங்களுக்கு கடைசி வார்னிங்... இனிமே யாராவது இப்படித் தப்பு செஞ்சா கேமைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும்" என்ற அர்ஜுன், பிறகு கோபம் தணிந்து "நீங்கள்லாம் சிறந்த ஆட்டக்காரங்க. ஏன் இப்படிப் பண்றீங்க?" என்று இறங்கி வந்தார்.

அர்ஜுன் கறாராக விசாரணை மேற்கொள்வதெல்லாம் சரி. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை கையும் களவுமாக உடனே விசாரிக்காமல் 'பண்டோரா பெட்டி' திறந்து ஏராளமான தவறுகள் வெளியே வரும்போது விசாரிப்பது முறையானதாகத் தெரியவில்லை. "மீன்காரர் கிட்ட வழிஞ்சு மீன் வாங்கினார் விஜி" என்று சொல்லப்பட்ட போதே "அது சர்வைவர் ரூலுக்கு எதிரானது" என்று அடித்துச் சொல்லியிருக்க வேண்டாமா?

இது மட்டுமல்லாமல் சரண் மீது காட்டப்படும் கடுமை, பாரபட்சமில்லாமல் அனைவரின் மீதும் காட்டப்பட வேண்டும். தனது அணியில் நிகழும் குற்றங்களை கண்டும் காணாமலும் இருந்த விக்ராந்த் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? "நீ நேர்மையா இரு. மத்தவங்களை குத்தம் சொல்லாதே" என்று சரணை மட்டும் அர்ஜுன் அடக்குவது முறையான நீதியாகத் தெரியவில்லை.

சர்வைவர் - 31
சர்வைவர் - 31

"சரணை என்னோட டீம்ல சகஜமாக்கறதுக்காக சில விஷயங்களைப் பேச வேண்டியிருந்தது. அணி நன்மைக்காகவே அதைச் செய்தேன். இனி இந்தத் தவற்றைச் செய்ய மாட்டேன்" என்றுதான் அழுததின் பின்னணியை பிறகு விளக்கினார் ஐஸ்வர்யா.

தலைவருக்கான போட்டி ஆரம்பித்தது. இரண்டு ஆள் உயரமிருக்கும் பலகையில் ஒழுங்கற்ற இடைவெளியில் எண் பொறிக்கப்பட்ட மரத்துண்டுகள் செருகப்பட்டிருக்கும். போட்டியிடுபவர் அந்தத் துண்டின் மீது கால் வைத்து பேலன்ஸ் செய்து நிற்க வேண்டும். அர்ஜுன் எந்த எண்ணைக் குறிப்பிடுகிறாரோ, அந்த எண் கொண்ட மரத்துண்டை எடுத்து கீழேபோட வேண்டும். இப்படியாக மரத்துண்டுகள் குறையக் குறைய, மீதமிருக்கும் துண்டுகள் மீது கால்வைத்து சமாளிக்க வேண்டும். எந்த ஜோடி இறுதிவரை தாக்குப் பிடிக்கிறதோ... அது வெற்றி பெறும்.

போட்டியிடுபவர் தனக்கு உதவியாக ஒருவரை அழைத்துக் கொள்ளலாம். ஒரு மரத்துண்டை ஒரே சமயத்தில் இரண்டு பேர் பிடிக்கக்கூடாது. ஒருவர் கீழே கால் வைத்துவிட்டால் தோற்றதாக அர்த்தம்.

முதலில் காடர்கள் அணியில் இருந்து வனேசா வந்தார். இவருக்கு உதவி செய்ய லட்சுமிபிரியா. இவருடன் போட்டியிட லேடி காஷ் வந்தார். அவருக்கு உதவியாக அம்ஜத். சுவற்றில் பல்லி போல இவர்கள் ஒட்டிக் கொண்டிருக்க, அர்ஜுன் ஒவ்வொரு எண்ணாகச் சொல்ல, அந்த மரத்துண்டுகளைச் சிரமத்தோடு எடுத்துப் போட்டார்கள். லேடி காஷிற்கு உதவி செய்த அம்ஜத் மிகச் சிறப்பாக விளையாடினார். மிகவும் சிக்கலான கோணங்களில் உடலை வளைத்து துண்டுகளை எடுத்தார். எதிர்பக்கம் வனேசா பதற்றப்படாமல் சிரித்துக் கொண்டே விளையாடினார். லட்சுமி பிரியாவின் சரியான உதவி அவருக்கு இருந்தது.

சர்வைவர் - 31
சர்வைவர் - 31

கட்டைகள் குறையக் குறைய நிற்பதற்கு இடம் குறைந்து கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் லேடிகாஷ் தவறுதலாக காலை கீழே வைத்துவிட்டதால் தோல்வியடைந்தார். வனேசா வெற்றி பெற்றார்.

அடுத்ததாக வேடர்கள் அணித்தலைவருக்கான போட்டி. இனிகோவும் நாராயணனும் போட்டியிட்டார்கள். இவர்களுக்கு உதவி செய்ய முறையே நந்தாவும் ஐஸ்வர்யாவும் வந்தார்கள். இதில் ஐஸ்வர்யா செய்த ஜிம்னாஸ்டிக் வேலைகள் இருக்கிறதே... பிரமாதம்! அத்தனை பல்டி வேலைகளைச் செய்து பிரமிப்பூட்டினார். இவரும் நாராயணனும் ஒரு சிக்கலான போஸில் நிற்கும்போது "பார்க்கும்போதே நல்ல டிசைனா தெரியுது" என்று மகிழ்ந்து பாராட்டினார் ரவி.

சர்வைவர் - 31
சர்வைவர் - 31

ஒரு கட்டத்தில் இனிகோவால் சமாளிக்க முடியாமல் கீழே இறங்கிவிட நாராயணன் வெற்றி பெற்றார். இந்த விளையாட்டில் நாராயணனின் பங்களிப்பு நன்றாக இருந்தாலும் சில இடங்களில் மிகவும் சிரமப்பட்டார். ஐஸ்வர்யாவின் கடும் உழைப்புதான் அவருக்கு வெற்றியை பெற்றுத் தந்தது என்று சொல்லலாம்.

'தவறான பாதையில் வேகமாகச் செல்வதைவிடவும் சரியான பாதையில் நிதானமாகச் செல்வதே சிறந்தது' என்கிற வாக்கியத்தைக் குறிப்பிட்டு இரு அணிகளையும் வழியனுப்பி வைத்தார் அர்ஜுன். "நேர்மையாக விளையாடுங்கள்" என்பதே அவர் சொன்ன வாக்கியத்தின் உள்குத்து.

ஒற்றுமையான, ஜாலியான அணி என்று கருதிக் கொண்டிருந்த காடர்களிடம் இத்தனை சறுக்கல்கள் இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை. இன்னமும் என்னென்ன கோல்மால்கள் வெளியாகப் போகின்றனவோ?

பார்த்துடுவோம்.