சர்வைவரில் நேற்று நிகழ்ந்த ரிவார்ட் சேலன்ஞ் ‘வாழ்வா... சாவா...’ என்னும் அளவிற்குப் பரபரப்பாக அமைந்தது. போட்டியின் அழுத்தம் தாங்காமல் ஒரு கட்டத்தில் அம்ஜத் வாய்விட்டு அழுதுவிட்டார். முயல் – ஆமை கதை கிளைமாக்ஸ் போல இதன் முடிவு அமைந்துவிட்டது.
பிக்பாஸில் கும்மியடித்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்களை இரண்டு நாள்களாவது சர்வைவரில் தூக்கிப் போட்டு வேடிக்கை பார்க்க வேண்டும் என்கிற விபரீத ஆசை கூட எழுந்தது. அந்தளவிற்கு விறுவிறுப்பான போட்டி!
உடலை ஃபிட்னெஸாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வை இந்த நிகழ்ச்சி நமக்குள் உருவாக்கக்கூடும். அருகிலிருக்கும் இடத்திற்குக்கூட நடக்காமல் ஆப்பில் ஆர்டர் செய்து சொந்தமாக ஆப்பு வைத்துக்கொள்ளும் சோம்பேறிகளாக இருந்து உடலைப் பழிவாங்குகிறோம். அதிலிருந்து விலகி குறைந்தபட்ச உடற்பயிற்சியையாவது செய்ய வேண்டும் என்கிற உத்வேகத்தை சர்வைவர் தருகிறது என்று நினைக்கிறேன்.
இன்னொன்று, இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு இதன் டெக்னிக்கல் டீமைத்தான் அடிப்படைக் காரணமாக சொல்வேன். அட்டகாசமான ஒளிப்பதிவு, அற்புதமான கோணங்கள், பரபரப்பைக் கூட்டும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ், அதிரடியான பின்னணி இசை, புத்திசாலித்தனமான எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப சமாச்சாரங்கள் சர்வைவரின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துகின்றன.

சர்வைவர் 32வது நாளில் என்ன நடந்தது?
வேடர்களின் புதிய தலைவரான நாராயணன் ‘என் அரண்மணைக்குள்ள போறேன். நீங்களும் வந்து எட்டிப் பார்த்துட்டுப் போங்க’ என்று தனது கூடாரத்திற்குள் மற்றவர்களை அழைத்துக் கொண்டிருந்தார். ஐஸ்வர்யாவின் உழைப்புதான் தான் தலைவர் பதவியைப் பெறுவதற்கு முக்கிய காரணம் என்று அவருக்குத் தெரியும். எனவே தனது பதவியை அனுபவிக்க உள்ளுக்குள் கூச்சம் கொண்டிருந்தார் என்று தோன்றுகிறது. ‘லீடர்ஷிப்பை விட ஃபிரெண்ட்ஷிப் முக்கியமாம்’.
“கேப்டன், என்ன பண்ணப் போறீங்க?” என்று காடர்கள் புதிய லீடர் வனேசாவைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். “இதுவரைக்கும் நான் உங்களுக்கு என்ன பண்ணியிருக்கேன்... எதுவும் பண்ணலைல்ல.. அதேதான் இனிமேயும்” என்கிற காமெடி மாதிரி, “முந்தைய அணித்தலைவர்கள் சென்ற பாதையை நானும் பின்பற்றுவேன். வெற்றி தோல்வி குறித்து கவலையில்ல. அணியா இருந்து சாதிப்போம்” என்று விக்ராந்த்தின் முந்தைய வீரவுரையை வனேசாவும் வழிமொழிந்தார். நைட் எபெக்ட் காட்சியில் இவர்களைப் பார்க்க பேய்ப் படம் மாதிரியே இருந்தது.
“எல்லோர்கிட்டயும் நேர்மை இருக்கணும்னு நீ சொன்ன கன்டென்ட் சரியா இருக்கலாம். ஆனா நீ சொன்ன விதம் தப்பு” என்று சரணுக்குச் சரியான ஆலோசனையை சொல்லிக் கொண்டிருந்தார் நாராயணன். பிறகு தனது அணியிடம் அவர் சொன்ன விஷயம் முக்கியமானது. சரண் சொல்லியதாம் அது.

சர்வைவரில் வடிவமைக்கப்படும் போட்டிகளைக் கவனித்தால் முதலில் மலைப்பாகவே இருக்கும். ஆனால் சற்று நிதானமாக யோசித்தால் எந்தவொரு மனிதனும் செய்யக்கூடியதாகத்தான் அவை இருக்கும். அப்படித்தான் டிசைன் செய்திருப்பார்கள். ஒரு போட்டியை எவ்வாறு அணுகுகிறோம் என்பதைப் பொறுத்துதான் வெற்றியை விரைவில் அடைய முடியும். உதாரணத்திற்கு மரக்கட்டைகளின் மீது கால் வைத்து நகரும் போட்டியை புத்திசாலித்தனமாக திட்டமிட்டுக் கொண்டால் எளிதில் கடந்துவிடலாம். உடல் வலிமையோடு புத்திக்கூர்மையும் அதிகம் இருக்க வேண்டும்.
“சோறு முக்கியம் குமாரு. இந்த ரிவார்ட் சேலன்ஞை எப்படியாவது நாம அடிக்கறோம். ஐஸ்கிரீம் வாங்கி ஐசு முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கிறோம்” என்று சோற்றைக் காட்டி உத்வேகம் தந்து கொண்டிருந்தார் வேடர்கள் அணித்தலைவர் நாராயணன்.

“களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்” என்று அழைத்தார் அர்ஜூன். தென்னை மரக்கிளை ஒன்று லேடி காஷின் தலையில் விழுந்ததால் அவரை போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்களாம். (லேடி காஷ் வெளியில் வந்து தந்த ஸ்டேட்மெண்ட்டையும் இது போன்ற சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இப்பவே ஏதோ புகைய ஆரம்பிச்சிடுச்சு போல). எனவே வேடர்கள் அணியிலும் ஒருவர் விலக வேண்டும் என்றார் அர்ஜூன். ரவிக்கு இது செளகரியமாகப் போயிற்று. அவர் விலகிக் கொண்டார். ஒருவேளை அவர் கலந்து கொண்டிருந்தால் மிகவும் சிரமப்பட்டிருப்பார்.
“பழைய விஷயத்தையே மனதில் சுமந்து கொண்டிருக்காதீர்கள். புதிய போட்டிகளின் மீது கவனம் செலுத்துங்கள்” என்று அறிவுரை வழங்கிய அர்ஜூன், அன்றைய நாளின் ‘ரிவார்ட் சேலன்ஞ்’ பற்றி விளக்க ஆரம்பித்தார்.
A ஷேப் வடிவில் இருக்கும் கோபுரத்தில் அனைவரும் ஏறி பின்புறமுள்ள கயிற்றைப் பிடித்து சறுக்கி இறங்க வேண்டும். பிறகு வழுக்கு மரத்தைப் பிடித்து மேலேயுள்ள ஒரு மேடையை அடைய வேண்டும். அங்கிருந்து கயிற்று ஏணி வழியாக கீழே இறங்கியவுடன் ஒருவர் மட்டும் நீச்சல் அடித்து சென்று கயிற்றை அவிழ்த்து புதிர்க்கட்டைகளை ரிலீஸ் செய்ய வேண்டும். பிறகு இரண்டு பேர் மட்டும் சேர்ந்து புதிரை சால்வ் செய்ய வேண்டும். முதலில் முடிக்கும் அணி வெற்றி பெறும்.
போட்டி ஆரம்பித்தது. ரெடி, ஸ்டெடி என்று சொல்லும்போதே பாயத் தயாராக இருக்கும் வேங்கையின் உடல் போல் மாற ஆரம்பித்தது ஐஸ்வர்யாவின் உடல்மொழி. மற்றவர்கள் எல்லாம் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்கள். கோபுரத்தின் மீது மளமளவென முதலில் ஏறிய ஐஸ்வர்யா, கயிற்றைப் பிடித்துக் கொண்டு சரசரவென இறங்கிவிட்டார். பின்னாலேயே அனைத்து உறுப்பினர்களும் வந்தார்கள்.

அடுத்த நிலையாக வழுக்குமரம் இருந்தது. இந்த வழுக்குமரம்தான் இன்றைய எபிசோடின் ஹீரோ எனலாம். அந்த அளவிற்கு போட்டியாளர்களுக்கு மகா சிரமம் தந்த பகுதி இது. சர்வைவரின் முதல்நாளில் சாப்பிட்ட சாப்பாடு கூட வெளியில் வந்திருக்கும். அந்த அளவிற்கு தண்ணீர் குடிக்க வைத்துவிட்டது வழுக்கு மரம். குறிப்பாகக் காடர்கள் அணி இதைக் கடக்க முடியாமல் நெடும் நேரம் ‘ததிங்கினத்தோம்’ போட்டார்கள்.
வழுக்கு மரத்தில் முதலில் ஏறி சாதனைப் படைத்தவர் நந்தா. தனது உடலை அவர் எத்தனை ஃபிட்னெஸூடன் வைத்திருக்கிறார் என்பதற்கான உதாரணம் இது. சற்று தடுமாறினாலும் அடுத்து வந்துவிட்டவர் இனிகோ. “கிராமத்துல மரம் ஏறி எனக்கு பழக்கங்க” என்று அவர் சொன்ன காரணம் சரியானது.

ஐஸ்வர்யா ஒரு நல்ல விளையாட்டு வீரர்தான். ஆனால், சாதாரணமாக செய்து ஜெயிப்பதைக்கூட பல்டியெல்லாம் அடித்து கேமராக்குத் தீனி போடவேண்டும் என்று நினைக்கிறாரா என்று தெரியவில்லை. வழுக்கு மரத்தை அடிப்பக்கமாக பிடித்துக் கொண்டு முன்னால் நகர ஆரம்பித்தார். இது ஒரு நல்ல உத்திதான். ஆனால் உடலைச் சட்டென்று திருப்பும் லாகவம் வேண்டும். ஆனால் ஐஸ்வர்யாவால் அப்படிச் செய்ய முடியவில்லை. மேலேயுள்ளவர்கள் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக இழுக்க, ஒருவழியாக மேலே வந்துவிட்டார்கள்.
வேடர்கள் அணியில் எல்லோரும் ஏறி விட்டாலும் கடைசியாக இருந்த நாராயணனின் கதிதான் பெரும்பாடாக அமைந்து விட்டது. இவரும் ஏறி விட்டிருந்தால் கூடுதல் நேரம் கிடைத்திருக்கும். நாராயணன் வெவ்வேறு உத்தியைப் பயன்படுத்தினாலும் அவரால் ஏறவே முடியவில்லை. சில விஷயங்களுக்கு உடல் பழகாவிட்டால் கற்றுக்கொள்ள நீண்ட நேரம் பிடிக்கிறது என்பதற்கான உதாரணம் இதுதான்.
நாராயணன் மிகவும் சிரமப்படுவதைப் பார்த்து நந்தா செய்த அந்தக் காரியம் இருக்கிறதே... அற்புதம்! தலைமைப் பண்பு உள்ள ஓர் ஆசாமி இப்படித்தான் தானே களத்தில் இறங்குவார். மடமடவென கீழே இறங்கிய நந்தா, நாராயணினின் பின்னால் நின்று முட்டுக் கொடுத்து அவரை மேலே கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தினார். அப்போது கூட நாராயணன் சிரமப்பட்டாலும் எப்படியோ ஒருவழியாக அவரை இழுத்து மேலே போட்டார்கள்.
‘ஹப்பாடா!' என்று அப்படியே சாய்ந்துவிட்டார் நாராயணன். தனது உடலை உடும்பு மாதிரியாகப் பிடித்துக்கொண்டு கடகடவென இரண்டாம் முறையும் மேலே ஏறிவிட்டார் நந்தா. (அது எப்படிய்யா... உனக்கு மட்டும் ஈஸியா இருக்கு?! அவ்வ்வ்வ்வ்!).

இப்போது காடர்கள் அணி செய்த சாகசத்தைப் பார்ப்போம். அந்த அணியில் மிக வலிமையானவர் உமாபதிதான். ஆனால் அவரே மிகவும் தத்தளித்துதான் வழுக்கு மரத்தில் ஏறி மேலே வர முடிந்தது. பின்னால் வந்த விக்ராந்த் மிகவும் சிரமப்பட்டார். ஆனால் காடர்கள் ஒரு புதிய உத்தியைக் கடைப்பிடித்தார்கள். சங்கிலியின் கண்ணிகள் போல உடலை அமைத்துக் கொண்டு ஒருவரையொருவர் பற்றி ஏறி வர முயன்றார்கள். வனேசா தன் உடலை ஒரு மாதிரியாக பேலன்ஸ் செய்து ஏறினாலும் சற்று சிரமப்பட்டார். லட்சுமிபிரியா சற்று லாகவமாக ஏறிவிட்டார். ஆனால் கடைசியில் வருபவர்களுக்குத்தான் பெரும் சோதனையாகி விடுகிறது. நாராயணனைப் போலவே கடைசியாக வந்த அம்ஜத் பெரும் சிரமத்திற்கு ஆளானார்.
மற்றவர்கள் ஏறுவதற்காக தன் சக்தியை நெடுநேரம் செலவு செய்தார் அம்ஜத். எனவே மிகவும் சோர்வடைந்து எப்படி ஏற முயன்றாலும் இயலாமல் நீரில் சறுக்கி விழுந்தார். அவரின் உடல் எடையும் அவருக்கு சற்று எதிராக இருந்தது. தான் அணிந்திருக்கும் டீஷர்ட்தான் அதிக வழுக்கலை ஏற்படுத்துகிறதோ என்று நினைத்தவர் அதையும் கழற்றிவிட்டார்.

‘எதிரணி மளமளவென முன்னேறி போய்க் கொண்டிருக்கிறதே... தங்கள் அணியில் உள்ள மற்றவர்களும் மேலே இருக்கிறார்களே... தான் மட்டும் இப்படி தவிக்கிறோமே… தோல்விக்குக் காரணமாகி விடுவோமோ… என்கிற அச்சம் அவருக்குள் பரவிவிட்டது போல! ஒரு கட்டத்தில் இதன் அழுத்தம் தாங்காமல் வாய்விட்டு அவர் அழ, காடர்கள் அணியில் இருந்தவர்கள் ‘ஒண்ணும் பிரச்சினையில்ல. அழாதீங்க... பார்த்து வாங்க” என்று ஊக்கம் தந்து கொண்டிருந்தார்கள். இப்போது உமாபதி ஒரு படி கீழே இறங்கி தன் உடலை ஏணியாக வைத்து அம்ஜத்திற்கு உதவி செய்ய, அவரின் கால்களைப் பற்றிக் கொண்டு ஒருவழியாக மேலே வந்து சேர்ந்தார் அம்ஜத்.
நந்தா செய்ததை முன்மாதிரியாக வைத்துக் கொண்டு உமாபதியும் அதுபோல் சட்டென்று கீழே இறங்கி அம்ஜத்தை முன்னோக்கி நகர்த்திவிட்டு அவர் பின்னால் வந்திருக்கலாம். ஆனால் இறங்கிவிட்ட பிறகு தன்னால் வர முடியவில்லையென்றால் என்னவாகும் என்கிற அச்சம் அவருக்குள் தோன்றியிருக்கலாம்.

வழுக்கு மரத்தில் காடர்கள் அணி இப்படியாக தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் வேடர்கள் அணி மளமளவென முன்னேறிவிட்டது. ஐஸ்வர்யா நீச்சல் அடித்து புதிர்க்கட்டைகளை ரிலீஸ் செய்ய, சரணும் நந்தாவும் அதை அமைக்கத் துவங்கினார்கள். ஏறத்தாழ அவர்கள் அதை முடிக்கும் சமயத்தில்தான் காடர்கள் அணி வந்து சேர்ந்தது. அவர்களும் புதிரை அமைக்கத் துவங்கினார்கள். வனேசாவும் லட்சுமிபிரியாவும் இதில் இறங்கினார்கள்.
இந்த இடத்தில் அடிக்கோடிட்டு ஒன்றைச் சொல்ல வேண்டும். அம்ஜத் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது மற்றவர்கள் உதவி செய்ய, லட்சுமி பிரியா மட்டும் திரும்பி நின்று கொண்டு வேடர்கள் அணி புதிரைக் கையாளும் விதத்தை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். இதன் மூலம் அவர்கள் செய்த சரிகளையும் தவறுகளையும் அவர் மனதில் கவனமாகக் குறித்துக் கொண்டிருப்பார். இதுவொரு அட்டகாசமான திட்டமிடல்!

“ஹே... ஹே... முடித்து விட்டோம்” என்று வேடர்கள் அணி உற்சாகமாகக் கூவ நமக்கு கூட அப்படித்தான் தோன்றி விட்டது. ‘Stop the Game’ என்றார் அர்ஜூன். ஆனால் ‘என் ஸ்வப்னா புத்திசாலி. அவளை யாராலயும் ஏமாத்த முடியாது’ வசனத்தைப் போல், வேடர்கள் அணி செய்திருந்த சிறு தவற்றை வனேசா பார்த்துவிட்டார். எனவே "நிறுத்தாதீங்க... நீங்க இதுல ஃபோகஸ் பண்ணுங்க” என்று லட்சுமியிடம் சொன்னார்.
அப்போதுதான் வேடர்களுக்கே தெரிந்தது. ஒரு நட்சத்திரத்தின் மேல் பகுதி மாற்றி வைக்கப்பட்டிருந்தது. அது மேல்அடுக்கில் இருந்தால் கூட பரவாயில்லை. சரியாக கீழ் அடுக்கில் இருந்தது. எனவே அத்தனை பலகைகளையும் தூக்கிவிட்டு மீண்டும் சரியாக்கி அடுக்கத் துவங்கினார்கள். இந்தக் கட்டத்தில் கூட வேடர்கள்தான் ஜெயிப்பார்கள் என்று தோன்றியது. ஆனால், இவர்கள் குழம்பித் தவித்த நேரத்தில் காடர்கள் அணி வேகமாக செயல்பட்டு புதிரை அட்டகாசமாக முடித்துவிட்டது. இந்த வெற்றியை நிச்சயம் லட்சுமிபிரியாவிற்குத்தான் சமர்ப்பணம் செய்ய வேண்டும். அவரின் முன்கூட்டிய திட்டமிடல்தான் இதற்குக் காரணம்.
முயல் – ஆமை கதை போல எத்தனை முன்னால் வந்திருந்தாலும் ஒரு சிறிய பிழையால் வேடர்கள் அணி தோற்றுவிட்டது. LP சந்தோஷத்தில் உற்சாகமாகக் குதிக்க, அநியாயமாக தோற்றுவிட்ட சோர்வில் ஐஸ்வர்யா காலை உதைத்துக் கொண்டதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

இரண்டாம் முறையாக கீழே இறங்கி நாராயணன் மேலே வருவதற்கு உதவி செய்த நந்தாவை சிறப்பாக குறிப்பிட்டு பாராட்டிய அர்ஜூன், லட்சுமி பிரியாவிற்கு ‘Puzzle Queen’ என்று அடைமொழி தந்தார். இந்தச் சமயத்தில் லட்சுமிக்காக சர்வைவர் எடிட்டீங் டீம் தயார் செய்திருந்த ஒரு குறும்படம் உண்மையிலேயே சிறப்பு.
“அம்ஜத் மேலே வர முடியாது தவிக்கும்போது அவரோட மனைவி பெயரைக் குறிப்பிட்டு 'அவங்க பார்த்திட்டிருப்பாங்க. மேலே வாடா'ன்னு கத்தினேன்” என்றார் உமாபதி. “ஓ... பொண்டாட்டி பெயரைச் சொன்னா எது வேணா பண்ணிடுவீங்களோ?” என்று கிண்டல் செய்தார் அர்ஜூன்.

ரிவார்ட் சேலன்ஞ்சில் வெற்றி பெற்ற காடர்களுக்கு வெகுமதி தரப்படும் நேரம். இது அவர்களின் ஹாட்ரிக் வெற்றி. வழக்கமாகத் தரப்படும் 30 கரன்சிகளுக்குப் பதில் 50 கரன்சி தரப்பட்டது. “சோறு போடுங்க சார்” என்று அவர்கள் கதறினார்கள்.
“ஷாப்பிங் போங்க. அங்க பிரியாணி இருக்கலாம்” என்று அர்ஜூன் சொன்னதும் உற்சாகத்தில் காடர்கள் கத்த “ஒரு பேச்சுக்குச் சொன்னேன். சாம்பார் சாதம் கூட இருக்கலாம்” என்று அந்த உற்சாகத்தில் வெந்நீரைக் கொட்டினார் அர்ஜூன். (என்னாவொரு வில்லத்தனம்?!).