பண்டிகை தினத்தையொட்டி எவ்வித பரபரப்பான போட்டியும் இல்லாததால் நேற்றைய எபிசோட் பெரும்பாலும் ஜாலி சமோசாவாக இருந்தது. கூட தொட்டுக் கொள்ள சென்டிமென்ட் சாஸ்.
குடும்பம், வீடு, உணவு போன்ற ஆதாரமான விஷயங்களின் அருமையை பிரிவின் போதுதான் நாம் அழுத்தமாக உணர்வோம். நேற்றைய எபிசோடில் நடந்த ஏலத்தில் சாம்பார் சாதம், ரசம் சாதம் கூட 3000 மதிப்புள்ள கரன்ஸிக்கு விலைபோனது.
சர்வைவர் நிகழ்ச்சி நமக்கு கற்றுத்தரும் ஆதாரமான பாடம் இதுதான். ‘நாம் எத்தனை செளகரியமான வாழ்க்கையை இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ என்பது முதல் செய்தி. ஆனால் இதற்கே ஆயிரம் புகார்கள் சொல்லி முனகிக் கொண்டிருக்கிறோம். இரண்டாவது செய்தி, ‘குறைந்த பட்ச வசதியிலும் வாழ முடியும்’. அந்த மினிமலிச வாழ்க்கையைக் கற்றுக் கொண்டால் எங்கு வேண்டுமானாலும் வாழ்ந்துவிட முடியும்.

சர்வைவர் 34-வது நாளில் என்ன நடந்தது?
‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்று ஆரம்பத்திலேயே அழைப்புவிடுத்தார் அர்ஜுன். மக்கள் புத்தம் புது ஆடையணிந்து மகிழ்ச்சியுடன் வந்து அமர்ந்தார்கள். “காடர்களே... சொல்லுங்க. பிரியாணி எப்படியிருந்தது?” என்று கேட்க "செம... சார். சூப்பர் சார்...“ என்று அவர்கள் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டே சொன்ன விதம் வேடர்கள் அணியை நிச்சயம் காண்டாகி இருக்கும். “படுபாவிகளா!” என்று மனதிற்குள் முனகியிருப்பார்கள்.
“சார்... ரொம்ப நாள் கழிச்சு நல்ல தண்ணில குளிச்சது… அற்புதமான அனுபவமா இருந்தது. தண்ணீரோட அவசியம் பத்தி இப்பத்தான் ரொம்ப புரியது” என்று நெகிழ்ச்சியோடு சொன்னார் நந்தா. (அரசாங்க அலுவலகங்களில் “தண்ணியில்லாத காட்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணிடுவேன்” என்று மேலதிகாரிகள் மிரட்டும் வழக்கம் ஏன் வந்தது என்பது இப்போதுதான் நன்றாகப் புரிகிறது.)

‘இன்று ஏல நிகழ்ச்சி நடைபெறும்’ என்று அறிவித்தார் அர்ஜுன். ஜாலியும் சிரிப்பும் கேலியுமாக இந்த நிகழ்ச்சி நடந்தது. சிறிய பெட்டிகள் மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. போட்டியாளர்கள் அவர்களாக ஒன்றை தேர்வு செய்து எடுக்கலாம். அவரவர்களின் அதிர்ஷ்டத்தின்படி உள்ளே பொருள்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும். அதை அவர்கள் யாருக்கு விரும்புகிறார்களோ, அவர்களுக்குப் பரிசளிக்கலாம்.
தாங்கள் கொண்டு வந்த பெட்டியை காடர்கள் அணி முதலில் பிரித்தது. அம்ஜத்திற்கு ‘கேஸ் ஸ்டவ்’ பரிசாக வந்திருந்தது. “என்கிட்ட வேலை செய்யற பையனுக்கு இதை கிஃப்ட் பண்றேன் சார்” என்று சிறப்பாகத் துவக்கிவைத்தார் அம்ஜத். வனேசா எப்போதுமே பயங்கர அதிர்ஷ்டம் உள்ளவர். அவருக்கு ‘ஹோம் தியேட்டர்’ பரிசு என்றதும் மற்றவர்கள் வாய் பிளந்தனர். “என் பிரதருக்குக் கொடுத்துடுவேன்” என்றார் வனேசா. லட்சுமிபிரியாவிற்கு blender பரிசாக வந்தது. தானே அதை வைத்துக் கொண்டார்.
உமாபதிக்கு மிக்ஸர் கிரைண்டர் பரிசாக வந்தது. ‘சூப்பர் மாம்’ விஜிக்குப் பரிசாக அளிப்பதாக சொல்லி ஆச்சர்யத்தைக் கூட்டினார். விக்ராந்திற்கு ‘சாண்ட்விச் மேக்கர்’ வந்தது. மனைவிக்கு பரிசளிக்கப் போகிறாராம்.

இப்போது வேடர்கள் அணியின் பரிசுகள். ரவிக்கு ஹோம் தியேட்டர் அதிர்ஷ்டம் அடித்தது. நண்பருக்குத் தந்து விடுவாராம். நாராயணணுக்கு blender வந்தது. “இதை வெச்சிக்கிட்டு நான் என்ன பண்றது?” என்று அவர் முனக “எனக்கு கொடுத்துடுடா” என்றார் அம்ஜத். அவர் ஜூஸ் கடை வைத்திருக்கிறார். இனிகோவிற்கு ‘மைக்ரோ வேவ்’ கிடைத்தது. சரணிற்கும் நந்தாவிற்கும் காஃபி மேக்கர் வந்தது. ஐசுவிற்கு ‘டோஸ்டர்’ லக் அடித்தது.
ஏலத்தின் அடுத்த பகுதி. அதே பெட்டியில் ஒவ்வொருவருக்குமான அதிர்ஷ்டத்தின்படி கரன்ஸி தொகை இருக்கும். அதை வைத்து அர்ஜுன் விற்கும் பொருட்களை ஏலம் கேட்கலாம். இதிலும் வனேசாதான் அதிக லக். 15000 மதிப்புள்ள கரன்ஸி இருந்தது. ஐசுவிற்கு 2000 மட்டுமே கிடைத்தது.
ஏலத்தில் வந்த முதல் பொருளே அட்டகாசம். ‘சிக்கன் ரோல்’. அதைப் பார்த்ததும் அனைவரின் கண்களும் ஆச்சர்யத்தில் விரிந்தன. நாக்கைத் தடவிக் கொண்டார்கள். சோற்றுக்காக ஆவலாயப் பறக்கும் அவர்களின் நிலையில் இருந்து பார்த்தால்தான் இந்த உணவின் அருமை புரியும்.

“எனக்கு சோறுதான் முக்கியம்” என்று முடிவு செய்து கொண்ட விக்ராந்த், மற்றவர்கள் கேட்ட விலையைத் தாண்டி 5000 கரன்ஸி கொடுத்து சிக்கனை வாங்கினார். ஆனால் இதை அவர் தனியாகத்தான் சாப்பிட வேண்டுமாம். “அது தெரிஞ்சுதான் சார் வாங்கினேன்” என்று ஜாலி கமெண்ட் அடித்த விக்ராந்த், மற்றவர்கள் பார்த்து வயிறு எரிய தனியாக மொக்கத் துவங்கினார்.
அடுத்ததாக வந்தது ‘சீக்ரெட் ஓலை’. இதில் என்ன இருக்குமென்று யாருக்கும் தெரியாது. ஆனால் இதிலும் வனேசாவிற்கு அடித்தது லக். 7000 தந்து ஏலத்தில் எடுத்தார் அவர். (பணக்காரியாச்சே!). அதன்படி அவருக்கு ஒரு சூப்பர் பவர் வந்தது. அதாவது இன்றைய ஏலத்தில் யார் எந்த உணவுப்பொருளை எடுத்தாலும் அதில் வனேசாவிற்கு பத்து சதவீத உணவை தந்து விட வேண்டுமாம். ரவுடிக்கு மாமூல் தருவது போல, உணவுப்பொருள்களை வாங்கியவர்கள் வனேசாவின் பங்கை வரிசையாக தந்துவிட்டுச் சென்றார்கள். (ஆனால் அம்மணி... தன்னுடைய டீம் ஆட்கள் வந்தபோது மடடும் குறைவாக எடுத்துக் கொண்டாராம்! வெஷம். வெஷம்!).

அடுத்து இன்னொரு சீக்ரெட் ஓலை ஏலத்திற்கு வந்தது. தொடர்ந்து இது வரும்போதே மக்கள் சற்று சுதாரித்துக் கொண்டிருக்கலாம். அம்ஜத் ஆவேசமாக ஏலம் கேட்டு, கையில் இருப்பதையெல்லாம் வழித்துக் கொடுத்து (10000) எடுத்து வந்தார். இதை அம்ஜத்திடம் தரும் போது நமட்டுச் சிரிப்பு சிரித்தார் அர்ஜுன். அம்ஜத்திற்கு சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டது போல் ஆகிற்று. அவர் இந்த ஏலத்தில் தொடர்ந்து கலந்து கொள்ள முடியாது என்கிற அறிவிப்பு அதில் இருந்தது. (இதுக்காப்பு 10000?!). உமாபதி உள்ளிட்ட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
‘வெஜிடபிள் புலவ்’ இதுதான் அடுத்து வந்த ஏல அயிட்டம். ‘வெஜ்ன்னா... எவனும் மதிக்க மாட்டான்’ என்று யாரோ கமெண்ட் அடித்தார்கள். ஆனால் 3000 தந்து நாராயணன் இதை ஏலம் எடுத்தார். “இந்தக் கலர் சோறு பார்த்து எவ்ள நாளாகுது?” என்கிற பரவசத்துடன் சாப்பிட ஆரம்பித்தார். 5000 தந்து ஷாம்பெயின் பாட்டிலை ஏலம் எடுத்தார் லேடி காஷ் (தன் பங்கை வேண்டாம் என்று மறுத்துவிட்டார் வனேசா… பார்றா!).

அடுத்து வந்தது ‘சாம்பார் சாதம்’. யார் இதை சட்டை செய்வார்கள் என்று பார்த்தால் 6000 தந்து வாங்கிக் கொண்டார் சரண். நந்தாவிற்கு நல்ல பசி. மற்றவர்கள் சாப்பிடும் உணவின் வாசனை வேறு அவருக்கு பசியைக் கிளப்பியது. எனவே அடுத்த வந்த சிக்கன் பர்கரை 9000 தந்து வாங்கி வந்து ஆவலாக கடித்து மென்றார்.
“ஓகே. பணம் குறைவா வெச்சிருக்கறவங்க... அதிகமா வெச்சிருக்கறவங்க கிட்ட இருந்து வாங்கிக்கலாம்” என்று விதியைத் தளர்த்தினார் அர்ஜுன். இந்த நோக்கில் உமாபதியிடம் ஏராளமான செல்வம் குவிந்தது. “இந்த ரோடு என்னா விலைன்னு கேளு... அர்ஜுன் சார் சட்டை என்னா விலைன்னு கேளு?” என்று அவர் அலப்பறை தந்து கொண்டிருந்தார். இது மட்டுமல்லாமல் மற்றவர்களின் விலையையும் விளையாட்டாக ஏற்றிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். (வனேசா தான் வைத்திருந்த பணத்தை உமாபதிக்கு தந்திருக்கலாம்).

அடுத்து வந்தது சப்பாத்தி + மட்டன் கறி. "அடடே! இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணியிருக்கலாமோ?” என்று மக்கள் நாக்கைக் கடித்துக் கொண்டார்கள். “இத எப்படியாவது தூக்கிரணும்” என்று முடிவு செய்து கொண்ட இனிகோ விலையை ஏற்றிக் கொண்டே போக, திடீர் பணக்காரராகி விட்ட உமாபதி மிக அதிக விலையைக் கேட்டு மட்டன் கறியை தட்டிப் பறித்தார். “டேய்... நீயெல்லாம் விளங்கவே மாட்டேடா...” என்று ஜாலியாக சாபம் கொடுத்தார் இனிகோ.
அடுத்ததாக வந்தது பெட்ஷீட் + தலையணை. ‘இதையாவது அடித்து விட வேண்டும்’ என்ற போட்டியில் இனிகோ ஆவேசமாக விலையை ஏற்றிக் கேட்க அவருடன் கடுமையாகப் போட்டியிட்டார் உமாபதி. பிறகுதான் தெரிந்தது, உமாபதி வேண்டுமென்றே விலையை ஏற்றிவிட்டார் என்பது. உமாபதியை மைண்ட் வாய்ஸில் திட்டிக் கொண்டே 7000 கரன்ஸியை கொடுத்து தலையணை வாங்கிவந்தார் இனிகோ. (தலையணையை வாங்கிவிடலாம். தூக்கத்தை வாங்க முடியுமா? – மெசேஜ் சொல்றாராமாம்!).

அடுத்ததாக வந்த சாக்லேட் பெட்டியை ஆசையாக ஏலத்தில் எடுத்து வந்தார் லட்சுமிபிரியா. இவர் சாக்லேட்டை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இரண்டு ஆச்சர்ய ஓலைகள் கையில் தட்டுப்பட்டன. ‘இம்யூனிட்டி பவர்’ தரும் ஓலை அது. திருட்டுத்தனமாக அதை சைலண்ட்டாக ஒளித்து வைத்துக் கொண்டார் லட்சுமி. இந்த வகையில் வனேசாவை விடவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர் லட்சுமிதான்.
அழகுசாதனப் பொருள்களை 6000 வந்து வாங்கிக் கொண்டார் திடீர் பணக்காரர் உமாபதி. ('அல்பத்திற்கு வாழ்வு வந்தா...’ என்றொரு பழமொழி இருக்கிறது). 'Spicy Grilled Fish’ என்ற உணவை 7000 தந்து ஏலம் எடுத்தார் ரவி. ஆனால் இவருடைய விலையையும் ஏற்றிவிட்டு வேடிக்கை பார்த்தார் உமாபதி.

வெறும் ரசம் சாதத்திற்கு ஐசு தந்த விலை 3000. (பாவம்!). இந்த ஏல பட்டியலில் கடைசியாக வந்ததுதான் மெயின் அயிட்டம். குடும்பத்திடமிருந்து கடிதங்கள் வந்திருந்தன. உணவை மொக்குவதற்காக ஒவ்வொருவரும் பணத்தை காலி செய்துவிட்டதால் ‘அடடே!’ என்று விழித்தார்கள். ஆனால் விக்ராந்த்தின் கையில் சற்று பணம் இருந்தது. எனவே அவர் ஏலம் கேட்டு கடிதங்களின் தொகுப்பை எடுத்து வந்தார்.
ஆனால் இந்த இடத்தில் விக்ராந்திற்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. “நீங்க ஏலம் எடுத்தீங்க ஓகே. ஆனா அதில் ஒரு கண்டிஷன். ஒண்ணு... உங்க லெட்டரை மட்டும் படிச்சுக்கலாம். இல்லைன்னா... உங்க லெட்டரை மட்டும் விட்டுட்டுட்டு மத்தவங்க அவங்க அவங்க லெட்டரை படிக்கலாம்” என்று அநியாய விதியை உருவாக்கினார் அர்ஜுன். “ஊரு நல்லாயிருந்தா போதும் சார்” என்று தியாகியான விக்ராந்த்தை அனைவரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள்.

ஒவ்வொருவரின் கடிதமும் உணர்ச்சிகரத்துடன் வாசிக்கப்பட்டது. இயக்குநர் தம்பி ராமையா, தன் மகன் உமாபதிக்கு அழகானதொரு கடிதம் எழுதியிருந்தார். “நல்லவன் என்கிற ஒற்றைத் தகுதியோடு திரும்பினால் போதும்" என்று உபதேசித்திருந்த அந்தக் கடிதத்தில் மற்றவர்களுக்கும் வாழ்த்து சொல்லியிருந்தார். இதைக் கேட்டதும் உமாபதியின் கண்கள் கலங்கின. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணீர் கடிதம் அன்பினால் பிசைந்து எழுதப்பட்டிருந்தது. நந்தாவிற்கு வந்த கடிதம் ‘ஹாய் மச்சான்...’ என்று ஆரம்பித்திருந்தது. அவருடைய நண்பர் போல என்று நினைத்தால், நந்தாவின் மனைவி ‘மச்சான்...’ என்றுதான் கூப்பிடுவாராம்.
“சார். எல்லோர் லெட்டரையும் படிச்சிட்டோம். விக்ராந்த் லெட்டரையும் தாங்களேன்” என்று இனிகோ வேண்டுகோள் வைக்க “அவர் செஞ்ச தியாகத்திற்கு ஒரு அர்த்தம் இருக்கணும்ல” என்று சஸ்பென்ஸ் வைத்த அர்ஜுன்... “பின்னே தந்துதானே ஆகணும்.. இல்லைன்னா. இவங்க என்னை அடிச்சிட மாட்டாங்க” என்று சிரித்தபடி விக்ராந்த்திற்கான கடிதத்தைத் தந்தார். (ரியாலிட்டி ஷோல இந்த மாதிரி எத்தனை டிராமாக்களை நாம பார்த்திருப்போம்?!).

“குடும்பம்–ன்ற விஷயம் எவ்வளவு அழகானது.. முக்கியமானது…ன்ற விஷயம். அதைப் பிரிஞ்சிருக்கும் போதுதான் நமக்கு அதிகமாகப் புரியுது இல்லையா” என்கிற அழகான செய்தியுடன் விடைபெற்றார் அர்ஜுன்.
இந்தச் செய்தியை சொன்னதற்காக நாமும் சொல்லலாம். இன்றைய போட்டியில் வென்றவர் அர்ஜுன்தான்!