Published:Updated:

சர்வைவர் - 39 | வேடர்களின் `சிரிக்கறோம், ஜெயிக்கறோம்' பாலிசி, நந்தாவை வென்ற உமாபதியின் டெக்னிக்!

சர்வைவர் - 39

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 39-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 39 | வேடர்களின் `சிரிக்கறோம், ஜெயிக்கறோம்' பாலிசி, நந்தாவை வென்ற உமாபதியின் டெக்னிக்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 39-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 39
வேடர்கள் அணி தனது ஐந்தாவது தோல்வியை வெற்றிகரமாகத் தொடர்ந்து சந்தித்தது. ஏதோவொரு துரதிர்ஷ்டம் அவர்களைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது. ஐஸ்வர்யா மட்டும் ஒரு சரியான முடிவை தக்க சமயத்தில் எடுத்திருந்தால் நிலைமை இப்போது பெரிதும் மாறியிருக்கலாம். அணி மாற்றத்தின் போது உமாபதியை அவர் தேர்வு செய்திருந்தால், வேடர்களுக்கு அது பெரிய ப்ளஸ் ஆக அமைந்திருக்கும். மாறாக பாசம் காரணமாக நந்தாவை அவர் தேர்வு செய்ததின் பலனை வேடர்கள் அனுபவிக்கிறார்கள்.

நந்தாவும் வலிமையான போட்டியாளர்தான். ஆனால் அவரை விடவும் உமாபதி வலிமையானவர் என்பதே நிதர்சனம். முன்னர் செய்த ஒரு சிறிய சறுக்கல், பெரிய பாதிப்பாக வேடர்களை இன்னமும் துரத்திக் கொண்டிருக்கிறது.

சர்வைவர் 39-ம் நாளில் என்ன நடந்தது?

“எப்பப்பாரு ஜஸ்ட் மிஸ்லதான நாம தோக்கறோம். நம்மளோட உத்தியை மாத்துவோம். சிரிச்சிக்கிட்டே எதிராளியை கன்ப்யூஸ் பண்ணுவோம். டாஸ்க்கின் போது சீரியஸாக இருப்போம். மத்த நேரத்துல விழுந்து விழுந்து சிரிப்போம். அப்படி சிரிக்கறது நமக்குள் இறுக்கத்தைக் குறைக்கும்” என்று laughter therapy-ஐ இனிகோ முன்வைக்க அதை இறுக்கமாகப் பற்றிக் கொண்ட வேடர்கள் ‘கெக்கே... பிக்கே’ என்று பிறகு சிரித்துக் கொண்டேயிருந்தார்கள்.

சர்வைவர் - 39
சர்வைவர் - 39

இது மாற்று உத்தியாக மேற்பார்வைக்கு தெரிந்தாலும், அவர்களின் தோல்வி உளைச்சலில் இருந்து தங்களை மறைத்துக் கொள்வதைப் போலவும் தெரிந்தது. “சிரிக்கறோம்... ஜெயிக்கறோம்” என்கிற புது டெக்னிக்கை பயன்படுத்த முடிவு செய்தார்கள் வேடர்கள். ஆனால் இறுதியில் அவர்களின் பிழைப்புதான் சிரிப்பாகச் சிரித்தது.

“சரணைத்தான் அவங்க தூக்கியிருக்கணும்” என்று இன்னமும் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார் லட்சுமி. விக்ராந்த், உமாபதி உள்ளிட்டவர்கள் கூட சரணிடம் இவ்வளவு ஆவேசம் காட்டுவதில்லை. ஆனால் லட்சுமி மட்டும் ஏன் சரண் மீது இத்தனை கொலைவெறியுடன் இருக்கிறார் என்பது தெரியவில்லை. இப்படி ஓவராக சீன் போடுவதின் மூலம் ‘காடர்கள்’ அணிக்கு தான் விசுவாசமாக இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காகவா?

காடர்கள் அணியின் தலைவர் லேடி காஷிற்கு ஒரு எக்ஸ்ட்ரா வாக்கு ஓலை ரகசியமாகக் கிடைத்தது. “இந்த வாரமும் நாம இம்யூனிட்டி சேலன்ஞ்சில் ஜெயிச்சிட்டோம்னா. எதிர் டீம் மொத்தமும் காலி” என்று சொல்லிக் கொண்டிருந்தார் அம்ஜத்.

“களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்” என்று வரவேற்ற அர்ஜூன் ஸ்டைலாக கூலிங்கிளாஸ் எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார். “இன்னிக்கு ரிவார்ட் சேலன்ஞ்சில் ஜெயிக்கப் போகிற அணிக்கு செமத்தியான விருந்து காத்துக்கிட்டு இருக்கு” என்று ஆரம்பத்திலேயே வெறியைக் கிளப்பினார்.

சர்வைவர் - 39
சர்வைவர் - 39

“சரண்... புது லீடர்... உங்க உத்தி என்ன?” என்று கேட்டதற்கு "பழைய தோல்விகளை சிரிப்பின் மூலம் மறந்து புது எனர்ஜியோட வந்திருக்கோம்” என்று விளக்கம் அளித்தார் சரண். “ஐஸ்வர்யா. நீங்க பி.எஸ்.வீரப்பா வாய்ஸ்ல சிரிக்கற சத்தம் இந்தத் தீவு முழுக்க கேட்குதே” என்று அர்ஜுன் கிண்டல் செய்ய அதுபோல் சிரித்துக் காட்டினார் ஐஸ்வர்யா.

இந்த ‘laughter therapy’ ஐடியாவை முன்வைத்ததே இனிகோதான். ஆனால் அவரே சேம் சைட் கோல் போடுவது போல் தங்கள் அணியைப் பற்றி கிண்டல் செய்வது போல் பேச, காடர்கள் அணி நமட்டுச் சிரிப்புடன் இவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தது. சிரிப்பது ஓர் உத்தி என்றாலும் அதை இத்தனை வெளிப்படையாக வேடர்கள் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

“எங்களுக்கு laughter therapy எல்லாம் தேவைப்படாது. ஜெயிக்கறது எங்களுக்கு பழக்கமாயிடுச்சு. இந்த முறையும் நாங்கதான் ஜெயிப்போம்” என்று வேடர்களை நக்கல் செய்வதுபோல் சொன்னார் காடர்கள் அணித்தலைவர் லேடி காஷ். இந்த அணியில் ஒருவர் அதிகமிருப்பதால் ‘வெளியில் நின்று ஆதரவு தரும்’ நபராக தானே வெளியேறிச் சென்றார் லேடி காஷ். லட்சுமி இதை முன்பே சொல்லியிருந்தாராம்.

சர்வைவர் - 39
சர்வைவர் - 39

ரிவார்ட் சேலன்ஞ் பற்றி விளக்க ஆரம்பித்தார் அர்ஜூன். கடல் நீரின் நடுவே ஒரு துலாபாரம் இருக்கும். அணியில் இருந்து ஒருவர் அதில் ஏறி அமர்வார். மற்ற நால்வரும் கயிற்றை இழுத்துப் பிடிப்பதின் மூலம் துலாபாரம் கீழே இறங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் நான்கு நிலைகள் இருக்கும். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஆள் குறைந்து கொண்டே வருவார். அதாவது முதல் ஐந்து நிமிடம் முடிந்ததும், வரிசையின் முதல் இடத்தில் நிற்பவர் விலகிவிடுவார்.

இறுதிக் கட்டத்தில் யார் அதிக நேரம் கயிற்றை இழுத்துப் பிடித்து துலாபாரம் நீரில் இறங்காதவாறு தாங்கிப் பிடிக்கிறாரோ... அந்த அணி வெற்றி பெறும். அந்தக் கயிறு நைலானால் அமைந்தது. நீண்ட நேரம் இழுத்துப் பிடிப்பது சிரமம் என்பது ஒருபக்கம். ஸலிப் ஆனால் கையின் தோலைக் கூட அது சேதப்படுத்தி விடலாம்.

இந்தப் போட்டியில் கடைசியில் நிற்பவர் அதிக வலிமையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்தான் இறுதிவரை தாக்குப்பிடிக்கப் போகிறவர். எனவே இதற்காக காடர்கள் உமாபதியையும் வேடர்கள் நந்தாவையும் தேர்ந்தெடுத்தது சிறப்பு. துலாபாரத்தில் அமர்பவர், உடல் எடை குறைவானவராக இருத்தல் அவசியம். எனவே ஐஸ்வர்யா, வனேசா அதில் அமர்ந்ததும் நல்ல உத்தி.

முதல் ஐந்து நிமிடத்தை சரணும் லட்சுமியும் வெற்றிகரமாக கடந்தார்கள். கடைசியில் நிற்பவருக்கு அதிக சிரமம் இல்லாமல் இருக்குமாறு முன்னால் இருப்பவர்கள் பார்த்துக் கொண்டார்கள். அப்போதுதான் அவர் இறுதியில் நெடுநேரம் தாக்குப் பிடிக்க முடியும். முதலிலேயே அதிக சக்தியை அவர் செலவழிக்கக்கூடாது.

இரண்டாம் ஐந்து நிமிடத்தைக் கடந்தவர்கள் நாராயணன் மற்றும் விக்ராந்த். இதில் நாராயணன் சற்று சிரமப்பட்டாலும் எப்படியோ தாக்குப் பிடித்து அடுத்து வந்தவர்களிடம் ஒப்படைத்தார். துலாபாரத்தில் அமர்ந்திருந்த ஐஸ்வர்யா, தனது அணி வீரர்களை அங்கிருந்தபடியே கத்தி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். “நாம ஆடாம, அசையாம உட்கார்ந்திருந்தாதான் கயிறு பிடிக்கறவங்களுக்கு ஈஸி. அது ஐஸ்வர்யாவிற்கு தெரியல. கத்தறாங்க. காலை அசைக்கறாங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார் வனேசா.

வனேசா இருந்த தராசு பெரும்பாலும் நிலையாக அப்படியே இருக்க, ஐஸ்வர்யாவின் தராசோ, மைனாரிட்டி அரசு போல் ஊசலாடிக் கொண்டே இருந்தது. மேலும் கீழுமாக இறங்கியது. மூன்றாம் ஐந்து நிமிடத்திற்கு அம்ஜத்தும் இனிகோவும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இருவரும் முதல் சில நிமிடங்களுக்கு தாக்குப் பிடித்தாலும் இனிகோ மிகவும் தடுமாறினார். தனது பொஷிஷனை மாற்றி மாற்றி வைத்து அவதிப்பட்டார். அவர் நாராயணனுக்கு உதவி செய்யும்போது அதிக சக்தியை செலவிட்டு விட்டாரா என்று தெரியவில்லை. அந்தப் பக்கத்தில் அம்ஜத்தும் மிக சிரமப்பட்டார். என்றாலும் இந்த டீம் எப்படியோ தாக்குப் பிடித்து கடைசி நிலையில் உள்ளவர்களுக்கு வெற்றிகரமாகக் கைமாற்றிவிட்டது.

இப்போது கயிறு உமாபதி மற்றும் நந்தாவின் கைகளில் இருந்தது. இதில் யார் கடைசிவரை தாக்குப் பிடிக்கிறாரோ, அந்த அணிதான் வெற்றி பெறும். எனவே போட்டி உச்சக்கட்ட பரபரப்பை அடைந்தது. உடல்வலிமை சார்ந்த போட்டி என்றால் உமாபதிக்கு அல்வா சாப்பிடுவது போல. எனவே தன் நிலையை அவ்வப்போது ஜாலியாக மாற்றினார். இதை ஈயடிச்சான் காப்பியாக நந்தாவும் செய்து கொண்டிருந்தார்.

சர்வைவர் - 39
சர்வைவர் - 39

கண்களை மூடிக் கொண்டு நந்தா நின்றது ஓர் அருமையான உத்தி. இதனால் சூழலின் அழுத்தம், வலி போன்றவற்றை மறந்து இழுப்பதில் மட்டும் ஃபோகஸ் செய்ய முடியும். தூரத்தில் இருந்து பிளையிங் கிஸ் எல்லாம் தந்து நந்தாவை உற்சாகப்படுத்தினார் ஐஸ்வர்யா. ஒரு கட்டத்தில் தனது காலை மாற்றி வைத்து பேலன்ஸ் செய்யும் வேலையில் உமாபதி ஈடுபட, நந்தாவும் அதைப் பார்த்து காப்பியடிக்க முயல... அவ்வளவுதான். நந்தாவின் கிரிப் விடுபட துலாபாரம் சர்……ரென்று கீழே இறங்கியது.

“எனக்குத் தெரியும். முதல்ல இருந்தே நான் பண்ணதைப் பார்த்து அவர் காப்பிடியச்சாரு. அதனால்தான் காலை மாற்றி வைத்தேன்” என்று நக்கலாகப் பிறகு சொன்னார் உமாபதி. அவரை வேடிக்கை பார்க்காமல் தன் உத்தியில் மட்டும் நந்தா கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்றாலும் கூட வெற்றி கிடைப்பது கடினம்தான்.

நந்தாவின் தோளில் சுற்றியிருந்த கயிறு மொத்தமும் கையில் வந்து விட்டதால் ஐஸ்வர்யாவின் எடை இழுக்க, அவரின் கையில் இருந்த கயிற்றின் அழுத்தம் அதிகமாகியது. வலி தாங்காமல் அப்படியே அவர் சாய்ந்து விட “உதவி... உதவி” என்று கத்தினார் உமாபதி. விக்ராந்த் ஓடி வந்து கயிற்றின் இறுக்கத்தை தளர்த்தி விட முயல, இதில் பின்னர் அர்ஜுனும் வந்து இணைந்தார்.

சர்வைவர் - 39
சர்வைவர் - 39

தான் ரிலீஸ் செய்யப்படும் வரையெல்லாம் காத்திருக்காமல், மேலேயிருந்து லாகவமாக இறங்கி நீரில் குதித்து நடந்துவந்தார் ஐஸ்வர்யா. “இந்தப் போட்டியில் என்னால் பங்கெடுக்க முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. என்றாலும் பரவாயில்லை. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்” என்கிற பாலிசியை சிரித்துக் கொண்டே சொன்னார். ஐஸ்வர்யாவிற்குள் இருக்கிற இந்த ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் பாராட்டத்தக்கது.

ஆக... வேடர்கள் தொடர்ச்சியாக அடைந்த ஐந்தாவது தோல்வி இது. “கயிறு கையில் மாட்டிக்கிச்சு சார். உமாபதி வேற ஏதேதோ கிம்மிக்ஸ் பண்ணிட்டு இருந்தார்” என்று விளக்கம் அளித்தார் நந்தா. (டேய்... அவன் எப்படிப் போட்டாலும் அடிக்கறாண்டா!). “லட்சுமிபிரியா... டான்ஸ் ஆடிக் காட்டுங்க” என்று அர்ஜூன் கிண்டல் செய்ய முதலில் வெட்கத்துடன் மறுத்த லட்சுமி, பிறகு அதை செய்து காட்டினார். இனிகோவின் முகத்தில் சங்கடமான புன்னகை.

சர்வைவர் - 39
சர்வைவர் - 39

“ஓகே... உங்களுக்கான வெகுமதியைப் பார்த்துடலாமா?’ என்று அர்ஜூன் சொன்னவுடன் காடர்கள் அணி ஆவலாகப் பார்த்தது. சில அடிகள் கழுத்தை முன்னே வளைத்து ஆசையாக பார்த்தார் லட்சுமி. இவர்களுக்கு விதம்விதமான Barbeque உணவுகள் காத்திருந்தன. “சிக்கன், இறால்ன்னு ஏகப்பட்ட அயிட்டங்கள் உங்க தீவில் காத்திருக்கு. எஞ்சாய்” என்றார் அர்ஜூன்.

“வேடர்கள் அணியில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து விருந்தாளியாக அனுப்பி வைக்கலாம். யார் அதுன்னு சொல்லுங்க?” என்று டீம் லீடர் சரணைக் கேட்டார் அர்ஜூன். அவர் தனது அணியுடன் விவாதிக்க, “டிஸ்கஸ்லாம் பண்ணக்கூடாது. நீங்களேதான் சொல்லணும்” என்று அர்ஜுன் கறாரான குரலில் சொல்ல “ஓகே சார். இனிகோவை அனுப்பறோம்” என்று சரண் சொல்ல, இரு அணிகளையும் வழியனுப்பி வைத்தார் அர்ஜூன்.

சரண் செய்தது மிகப்பெரிய தவறு. “என்னை அனுப்புன்னு சொல்லிட்டே இருக்கேன். நீ அதைக் கவனிக்கலையா?” என்று போகும் வழியில் சொன்ன ஐஸ்வர்யா. சரணை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார். இனிகோ ஏற்கெனவே வேடர்கள் அணியில் இன்னமும் ஒட்டாமல் விலகியே இருக்கிற ஆசாமி. அவரைப் போய் எதிர்அணிக்கு ஒருநாள் அனுப்பி வைப்பது தற்கொலைக்கு சமம். “இனிகோ விசுவாசமாத்தான் இருக்கார். ஆனா அங்க பேசி குழப்பி விட்ருவாங்க” என்று ஐஸ்வர்யா கோபப்படுவதில் முழு நியாயம் இருக்கிறது.

சர்வைவர் - 39
சர்வைவர் - 39

சரண் எதிர் அணிக்குச் செல்ல முடியாது. பழைய விரோதங்கள் உண்டு. எனவே அவர் ஐஸ்வர்யா, நாராயணன் ஆகிய இருவரில் இருந்து ஒருவரை அனுப்பியிருக்கலாம். நந்தா ஏற்கெனவே சென்று வந்துவிட்டார்.

காடர்கள் அணிக்கு விருந்துண்ணச் சென்றிருக்கும் இனிகோ, தனது அணியைப் பற்றி என்னவெல்லாம் புறணி பேசப் போகிறார்? இவரிடமிருந்து காடர்கள் என்ன என்ன விஷயத்தையெல்லாம் போட்டு வாங்கப் போகிறார்கள்?

பார்த்துடுவோம்.