‘அட்வான்டேஜ்’ சேலன்ஜில் ஒருவழியாக வேடர்கள் வெற்றி பெற்றார்கள். இதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். நீண்ட நாள்களுக்குப் பிறகு வேடர்களுக்கு கிடைத்த வெற்றி இது. 'சரி சின்னப்பசங்க... பாவம் பிழைச்சுப் போகட்டும்’ என்கிற மாதிரி காடர்கள் இதை இடதுகையால் ஹேண்டில் செய்தார்கள்.
அந்த ‘அட்வான்டேஜ் பெட்டியில்’ என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்து வேடர்களின் பயணம் இனி அமையும்.
சர்வைவர் 41-ம் நாளில் என்ன நடந்தது?
பிறந்த வீட்டில் இருந்து திரும்பும் மருமகளுக்காக, மாமியார், கணவர், நாத்தனார் ஆகியோர் ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தார்கள். இனிகோவைப் பார்த்ததும் வேடர்களின் கண்களில் மகிழ்ச்சி. கூடவே ‘பயபுள்ள என்னெல்லாம் உளறிருக்கோ?” என்கிற சந்தேகமும்.

“நாங்க கஞ்சி குடிச்சோம். நீங்க அங்க என்ன சாப்பிட்டீங்க?” என்று இனிகோவை விசாரிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் அப்படிக் கேட்டிருக்க வேண்டாம். தான் சாப்பிட்ட விதம் விதமான உணவுகளைப் பற்றி இனிகோ விவரிக்கும்போது ஒவ்வொருவரின் நாக்கிலிருந்தும் புகை வந்தது. “நானே போயிருக்கலாம் போலயே” என்று சரண் பெருமூச்சு விட, அந்த உணவுகளைக் கற்பனை செய்து நாக்கைச் சப்புக் கொட்டினார் ஐஸ்வர்யா. பாவம்!
“அம்ஜத்தும் லட்சுமியும் அந்த அணியோட இணைஞ்சிட்டாங்களா?” என்பது வேடர்களின் அடுத்த கேள்வி. “செமயா செட் ஆயிட்டாங்க... அங்க எல்லோருமே ரொம்ப ஹாப்பியா இருக்காங்க” என்று இனிகோ சொன்னதும் இவர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்திருக்கலாம். “நாமளும் முதல்ல இருந்தே அப்படி சந்தோஷமாக இருந்திருக்கலாம்” என்றார் இனிகோ.

வேடர்கள் அணியோடு ஒப்பிடும் போது காடர்கள் அணி ஒற்றுமையாகவும் ஜாலியாகவும் இருப்பது உண்மைதான். ஆனால் காடர்களில் இருப்பவர்கள் பலரும் இளம்பருவத்தினர். அதிலும் முன்னாளில் இருந்தே நண்பர்களாக சிலர் இருக்கிறார்கள். எனவே அங்கு மகிழ்ச்சியும் ஒற்றுமையும் இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் வேடர்கள் அணியில் ஐஸ்வர்யாவைத் தவிர அனைவருமே நடுத்தர வயதை நெருங்கப் போகிறவர்கள். சரணும், இனிகோவும் இப்போதுதான் வந்திருக்கிறார்கள். எனவே இவர்களிடம் ஆட்டம் பற்றிய சிந்தனையும் ஈகோ மோதலும் அதிகம் இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் வேடர்கள் அணியிலும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.
“எனக்கு உன் மேல சில விஷயங்களில் தெளிவில்லாமல் இருந்தது. அதை நான் நேர்மையா சொல்லிடறேன். எதையும் முன்னாடி பேசறதுதானே சரியா இருக்கும்” என்று இனிகோவை ஓரங்கட்டி சொல்லிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. பிறகு "அங்க என்ன பேசினீங்க?” என்கிற முக்கியமான கேள்விக்கு வந்தார். “ஒண்ணுமில்ல… சும்மா ஜாலியா பேசிட்டு இருந்தோம்..” என்று பூசி மெழுகிய இனிகோ, அந்த உரையாடலைத் தவிர்ப்பதற்காக "குளிச்சுட்டு வர்றேன்” என்று கிளம்பிவிட்டார். தான் செய்த கிண்டல்களை அவரால் சொல்லவா முடியும்?
குளிக்கப்போன இனிகோ, ரகசிய இடத்தைத் தேடி தனக்கான ‘இம்னியூட்டி அடையாளத்தை’ தேடி எடுத்துவிட்டார். பிறகு ‘வெற்றி நிச்சயம்... இது வேத சத்தியம்’ என்கிற லுக்கோடும் கெத்தோடும் சிரித்துக் கொண்டே திரும்பினார்.
“இனிகோ கிட்ட அவிய்ங்க என்ன கேட்பாங்க?” என்று காடர்கள் அந்தப் பக்கம் யூகித்துக் கொண்டிருந்தார்கள். "என்ன... அங்க மாமியார் கொடுமை ஓவராக இருக்கும்” என்று கிண்டலடித்தார் உமாபதி.

போட்டியாளர்கள் தங்களின் பிரியமானவர்களுக்கு கடிதம் எழுதும் பகுதி. இது போன்ற பிரிவுகளின் போதுதான் உறவுகளை எவ்வளவு பிரிந்திருக்கிறோம் என்பதின் துயரம் நமக்குள் ஆழமாக உறைக்கும். அந்த வலி ஒவ்வொருவரின் கடிதத்திலும் வெளிப்பட்டது. அம்ஜத் தன் மனைவிக்கும் குழந்தைக்கும் கடிதம் எழுதினார். வனேசா, தன் குடும்பத்திற்கும் உயிர் நண்பராக இருந்தவருக்கும் (பெயர் சுரேஷாம்!). உருக்கத்துடன் எழுதியிருந்தார். இனிகோவின் கடிதம் இயல்பான வட்டார வழக்கில் இருந்தது. ‘இந்தக் கடிதத்திற்கு பதில் போட வேண்டாம்’ என்று வித்தியாசமாகப் பின்குறிப்பு எழுதியிருந்தார். பதில் போட்டால் உடனே கிளம்பிவிட வேண்டும் என்று தோன்றி விடுமாம்.
லட்சுமி தன் கணவருக்கு காதல் பொங்க எழுதியிருந்தார். ‘ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்ணும் இருக்கலாம்’ என்கிற மேற்கோளில் நம்பிக்கையுள்ள லேடி காஷ், தன் அம்மா, அக்கா, தோழி ஆகியோருக்கு நன்றி சொல்லி எழுதியிருந்தார். சரண் தன் அப்பாவிற்கும், (தோழிக்கு எழுதலையா தம்பி?!), நாராயணன் தன் சகோதரனுக்கும், ஐஸ்வர்யா தன் அம்மாவிற்கும் (நேர்மையை கத்துக் கொடுத்திருக்கீங்க!) எழுதியிருந்தார்கள்.
நந்தா தன் மகளை எண்ணி உருக்கத்துடன் எழுதிய கடிதம் தனி வீடியோவாகக் காட்டப்பட்டது. மிக நெகிழ்வான காட்சியாக இது இருந்தது. “கிரிக்கெட்டராக ஆகணும்னு ஆசைப்பட்டேன். அது நடக்கலை. சாரி” என்று எழுதியிருந்தார் விக்ராந்த். இருப்பதிலேயே ரகளையான கடிதம் உமாபதியுடையதுதான். ‘அன்புள்ள பிரியாணியே’ என்று ஆரம்பித்து பிரியாணியையும் அதன் உறவினர்களையும் தான் எவ்வாறெல்லாம் மிஸ் செய்கிறேன் என்று அவர் எழுதியிருந்தது அட்டகாசமான காமெடி. (அர்ஜுன் நிச்சயம் இதை குறிப்பிடுவார்).

இரு அணிகளுக்கும் ஓலை வந்தது. வழக்கமான முறையில் இருந்து விலகி வித்தியாசமாக இருந்த போட்டி இது. சர்வைவர் ‘அட்வான்டேஜ் பெட்டி’ ஒன்று தரப்பட்டிருந்தது. கூடவே மண்வெட்டி போன்றவையும் இருந்தன. ஒவ்வொரு அணியும் அந்தப் பெட்டியை தங்களின் தீவில் ஒளித்து வைக்க வேண்டும். பிறகு அதைக் கண்டுபிடிப்பதற்கான அடிப்படையான ‘க்ளூ’வையும் தர வேண்டும். எதிர் அணியிலிருந்து தலைவரும் கூட உதவிக்கு ஒருவரும் வருவார்கள். இப்படி பரஸ்பரம் இரு அணிகளிலும் நிகழும். எந்த அணி முதலில் பெட்டியைக் கண்டுபிடிக்கிறார்களோ, அவர்களே வெற்றியாளர்.
வேடர்கள் அணியிலிருந்து தலைவர் சரணும், உதவிக்கு ஐஸ்வர்யாவும் கிளம்பினார்கள். சரணுக்கு காடர்கள் தீவு பற்றி ஏற்கெனவே தெரியும் என்பது கூடுதல் உபயோகம். காடர்கள் அணியிலிருந்து தலைவி லேடி காஷூம் உதவிக்கு அம்ஜத்தும் கிளம்பினார்கள். வேடர்கள் தீவின் ஒவ்வொரு அங்குலமும் அம்ஜத்திற்குத் தெரியும்.

இனிகோவிற்கு மரம் ஏறத் தெரியும் என்பது ஒரு பிரத்யேகமான தகுதியாக இருந்தது. எனவே அங்குள்ள தென்னை மரங்களில் ஒன்றின் மேல் பெட்டியை ஒளித்து வைக்கலாம் என்று வேடர் அணியினர் திட்டமிட்டார்கள். எதிர் அணியில் உள்ள எவருக்கும் மரம் ஏறத்தெரியாது என்பது இவர்களுக்கு ப்ளஸ் பாயிண்ட்டாக அமைந்தது. அதன்படி இனிகோ மரத்தில் ஏறி பெட்டியை ஒளித்து வைத்தார்.
ஆனால் காடர்கள் தீவில் இருக்கும் ஜீனியஸான லட்சுமி, அடுத்த சீனில் சட்டென்று இதை யூகித்துவிட்டார். "இனிகோவிற்கு மரம் ஏறத் தெரியும். அங்கதான் ஒளிச்சு வெச்சிருப்பாங்க” என்று. லட்சுமியின் யூகத்தை அம்ஜத் சீரியஸாக எடுத்துக் கொண்டிருந்திருக்கலாம். அவருக்கும் அந்தச் சந்தேகம் இருந்தாலும் கீழே அநாவசியமாக மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்தார்.

“நேராப் போயி ரைட்ல போனா ஒரு பிள்ளையார் கோயில் வரும். அது பக்கத்துல பச்சை பெயிண்ட் அடிச்ச வீடு வரும்” என்கிற மாதிரி டீடெய்லாக வேடர்கள் குறிப்பு எழுதி வைத்திருந்தார்கள். ஆனால் இங்கு ஏராளமான தென்னை மரங்கள் இருப்பதால் எந்த மரம் என்று தெரியாது.
காடர்களின் குறிப்பு இதற்கு எதிர்மாறாக சுருக்கமாக இருந்தது. ‘தனியொருவன்’ என்கிற க்ளூவை மட்டும் அவர்கள் தந்திருந்தார்கள். காடர்களின் தீவில் ஒரேயொரு மாமரம் மட்டுமே இருந்தது. அங்கு ஏற்கெனவே புழங்கியிருந்த சரண், இதை உடனே யூகித்திருக்க வேண்டும். ஆனால் தனியாகத் தெரிந்த மரத்தையெல்லாம் அவர் சந்தேகமாக பார்த்துக் கொண்டிருந்தார். கூட இருந்த ஐஸ்வர்யாவும் பரபரப்பாக ஆங்காங்கே மண்ணைத் தோண்டினார்.
"இவிங்க நிச்சயம் கண்டுபிடிக்க மாட்டாங்க” என்று உமாபதி கிண்டல் செய்து கொண்டிருந்தார். ஆனால் வேடர்கள் தொடர்ந்து தோற்பதால் ‘ஜெயித்துவிட்டுப் போகட்டுமே’ என்பது போன்ற சிறிய சாஃப்ட் கார்னர் காடர்களிடம் இருப்பதைப் போல் தோன்றியது.

“நீங்கள் எழுதிய க்ளூ தெளிவாக இல்லை” என்று வேடர்களிடம் புகார் சொன்னார் அம்ஜத். எனவே பெட்டி ஒளிக்கப்பட்டிருந்த ஏரியாவின் சுற்றளவை உத்தேசமாகச் சொன்னார் இனிகோ. ‘மரத்தின் மேலே இருக்கும்’ என்கிற அழுத்தமான யூகம் அம்ஜத்திற்கு இருந்தாலும் கீழே இருந்து பார்க்கும் போது எந்த மரம் என்கிற வ்யூ சரியாகக் கிடைக்கவில்லை.
ஐஸ்வர்யா மற்றும் சரணாலும் பெட்டியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. "எங்கயாவது புதுசா மண்ணைத் தோண்டிய அடையாளம் தெரியுதான்னு பாரு” என்று தடயவியல் நிபுணர் போல சொல்லிக் கொண்டிருந்தார் சரண். ஆனால் பல இடங்களில் தோண்டிப் பார்த்தும் கிடைக்காததால் சோர்ந்து போய் அடுத்த க்ளூவைக் கேட்டார்கள். “ஏண்டா... மாமரம்னு விவரம் கூட சொல்லிட்டேன். இன்னமும் என்ன சொல்றது? இங்க இருந்து நாலு சென்டிமீட்டர் பக்கத்துல இருக்குன்னு சொல்லவா?” என்று சரணிடம் கிண்டலடித்தார் உமாபதி.
ஐஸ்வர்யா சிறந்த உழைப்பாளி என்றாலும் புதிர்களைக் கண்டுபிடிப்பதில் அத்தனை சாமர்த்தியம் இல்லை. ‘தனியொருவன்’ என்கிற வார்த்தையின் பொருள் தாமதமாகத்தான் சரணிற்கு புரிந்தது. பிறகு அங்கு சென்று மண்வெட்டி எளிதாகச் செல்லும் மண் பகுதியைக் கண்டுபிடித்தவுடன்… யெஸ்... பெட்டி இருக்கும் இடம் தெரிந்தவுடன் மிகவும் உற்சாகமாகிவிட்டார் ஐஸ்வர்யா.

இந்தத் தகவல் உடனே வேடர்கள் அணிக்குச் சென்று விடவே "ஆட்டத்தை நிறுத்துங்கள்... எங்கள் அணி அங்கே பெட்டியைக் கண்டுபிடித்துவிட்டது" என்று உற்சாகமாகக் கூவினார் நாராயணன். பிறகு மரத்தின் மேலே பெட்டி ஒளிக்கப்பட்டிருந்த இடத்தைக் காட்டினார் இனிகோ. “நீங்க கொடுத்த க்ளு கிளியரா இல்லை. மரத்து மேலேன்னு தெரியும். ஆனா கீழே இருந்து எப்படி பார்க்கறது?” என்று புகார் சொல்லிக் கொண்டிருந்தார் அம்ஜத்.
எது எப்படியோ, ஆறாவது முறையிலும் தோற்றுவிடாமல் தென்னை மரத்தின் மூலம் வெற்றி பெற்றது வேடர்களுக்கு பெரிய ஆறுதலாக இருந்திருக்கும். அந்தப் பெட்டியின் உள்ளே இருக்கும் ‘அட்வான்டேஜ்’ என்ன?