Published:Updated:

சர்வைவர் - 44 | காயத்ரியை மூன்றாம் உலகத்தில் இருந்தும் வெளியேற்றிய அம்ஜத்… இனி என்ன நடக்கும்?!

சர்வைவர் - 44

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 44-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 44 | காயத்ரியை மூன்றாம் உலகத்தில் இருந்தும் வெளியேற்றிய அம்ஜத்… இனி என்ன நடக்கும்?!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 44-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 44
‘மூன்றாம் உலகத்தின் ஓனர்’ என்று செல்லமாக அழைக்கப்படும் வகையில் அந்த நிலத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த காயத்ரி, நேற்று சர்வைவர் போட்டியிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டதை துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். “எனது அணிக்குத் திரும்ப வேண்டும். ‘வேண்டாம்’ என்று என்னை நிராகரித்து அனுப்பியவர்களுக்கு முன்னால் நிரூபித்துக் காட்ட வேண்டும்’’ என்பதுதான் காயத்ரியின் லட்சியமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமலேயே அவர் போட்டியில் இருந்து வெளியேறியது பரிதாபம்தான்.

சர்வைவர் 44-ம் நாளில் என்ன நடந்தது?

ட்ரைபல் பஞ்சாயத்து வாக்கெடுப்பு முடிவுகளின் படி வெளியேற்றப்பட்ட அம்ஜத்தைத் தனியாக விசாரிக்க ஆரம்பித்தார் அர்ஜுன். இது மிகச்சுருக்கமான விசாரணையாக முடிந்தது. “இங்க வெற்றி தோல்வியை விடவும் அணியின் ஒற்றுமைக்கு அதிகம் முக்கியத்துவம் தர்றாங்க. அதுதான் நான் வெளியேறுவதற்குக் காரணமாக இருந்தது” என்றார் அம்ஜத். “ஒருவேளை வேடர்கள் அணியிலேயே நீங்கள் இருந்திருந்தால் போட்டியில் நீடித்திருப்பீர்களோ?” என்று அர்ஜுன் கேட்டதற்கு “இல்ல சார்... அங்க நான் பாதுகாப்பா இல்லை. காடர்கள் அணியிலும் பாதுகாப்பு இல்லைதான். ஆனா இங்க நட்பும் மகிழ்ச்சியும் நிறைய இருந்தது. வேடர்களிடம் இந்த விஷயம்தான் நிறைய மிஸ்ஸிங்” என்றார் அம்ஜத்.

சர்வைவர் - 44
சர்வைவர் - 44

“கேமா மட்டும் யோசிச்சா காடர்கள் என்னை அனுப்பினது நியாயமில்லாத விஷயம். நான் பலமான போட்டியாளர்” என்று அம்ஜத் சொல்வதின் மூலம் காடர்கள் செய்த முறையற்ற முடிவை மறைமுகமாகச் சுட்டிக் காட்டினார். “ஓகே... உங்களுக்கு இன்னொரு சான்ஸ் இருக்கு. மூன்றாம் உலகம் போறீங்களா?” என்று அர்ஜூன் கேட்டதும் ‘‘அய் ஜாலி... போலாம் டாடி’’ என்கிற சிறுவன் மாதிரி உற்சாகமாகி விட்டார் அம்ஜத்.

மூன்றாம் உலகம். பாவப்பட்ட அந்த இரண்டு ஜீவன்களும் கடாயில் மிச்சமிருந்த உணவைச் சுரண்டி தின்று கொண்டிருந்தனர். குடும்பத்திலிருந்து காயத்ரிக்குக் கடிதம் வந்திருந்தது. கடிதம் தந்த உணர்ச்சியோடு சேர்ந்து, ‘வளர்ப்பு முயலை’ வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கும் சோகமும் இணைந்து கொள்ள கண்ணீர்விட்டு கலங்கினார் காயத்ரி. (முயலை கையோடு கொண்டு வந்திருந்தால் இங்கு ரோஸ்ட் போடவாவது உதவியிருக்கும்!).

“தூதுவன் வருவான்... மாரி பெய்யும்’’ என்பதுபோல் தூரத்தில் என்ட்ரி கொடுத்த அம்ஜத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தார் விஜி. “இந்த உயிரினம் இன்னமுமா இங்கு வாழ்கிறது?” என்பது மாதிரி காயத்ரியை ஆச்சர்யமாகப் பார்த்தார் அம்ஜத். இவரின் வாயைக் கிளறி பழைய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார் விஜி. ‘’ஹேய்... பாருடி... LP-க்கு இம்யூனிட்டி ஐடல் கிடைச்சுதாம்” என்று விஜி சொல்லும்போது தீய்ந்த வாடை வந்தது.

சர்வைவர் - 44
சர்வைவர் - 44

தாங்கள் சாப்பிட்ட Barbeque விருந்து பற்றி அம்ஜத் விவரிக்க ஆரம்பிக்க, அதனால் காண்டான காயத்ரி, ‘’நான் கடாய் கழுவப் போறேன்” என்றுகிளம்பி விட்டார். மூன்றாம் உலகத்தில் பல ஆண்டுகளாக உப்பு இல்லாமல் கஞ்சி குடிப்பவரிடம் விருந்து பற்றி பேசினால் காண்டாக மாட்டாரா?

“அது சரி... இங்க என்ன டாஸ்க் நடக்கும். பகல்லயா, நைட்லயா?” என்று அம்ஜத் பதிலுக்கு விசாரிக்க, "ரைட்டு... ஆடு சிக்கிடுச்சு. பிரியாணி போட்டுட வேண்டியதுதான்" என்று விஜியும் காயத்ரியும் முடிவு செய்து கொண்டார்கள்.

"யார் எலிமினேட் ஆகி மூன்றாம் உலகத்திற்கு வந்தாலும் அவர்களை முதலில் போட்டியிட வைத்து வெளியே அனுப்பிவிட வேண்டும்" என்பது இவர்கள் ஏற்கெனவே பேசிவைத்துக் கொண்ட பிளானாம். எனவே, “நான் ரொம்ப வருஷமா இங்க இருக்கேன். கோபமா வருது. வீட்டுக்குப் போகணும்” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு காயத்ரி நடிக்க ஆரம்பிக்க, அந்த அனுதாப அலையில் மனம் உருகிய அம்ஜத் போட்டியில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டுவிட்டார். “பாவம்டி அவரு... ரொம்ப நல்ல மனுஷனா தெரியறாரு” என்று பிறகு சங்கடப்பட்டார் காயத்ரி. ‘‘இதுக்கெல்லாம் பாவம் பார்த்தா பிரியாணி சாப்பிட முடியுமா?” என்று தைரியப்படுத்தினார் விஜி.

சர்வைவர் - 44
சர்வைவர் - 44
மூன்றாம் உலகத்தின் போட்டி நடக்கும் ஏரியா. “வாங்க சர்வைவர்ஸ்’’ என்று இவர்களை வரவேற்றார் அர்ஜுன். பிறகு பருத்திமூட்டையை குடோனில் சென்று போட்ட சம்பவத்தைப் பற்றி விசாரித்தார். “மூன்றாம் உலகத்துல சும்மா சோறு போட மாட்டோம். ஏதாவது வேலை செய்ங்கன்னு சொல்லிட்டாங்க. மரம் உடைக்கற வேலை ரொம்ப கஷ்டமா இருந்தது” என்று இருவரும் தங்களின் துயரக்கதைகளைச் சொன்னார்கள்.

“ஓகே... போட்டிக்குப் போகலாமா? எப்படி ரெண்டு பேரும் போட்டியிட ஒத்துக்கிட்டீங்க?” என்று தெரியாதது போல் நமட்டுச்சிரிப்புடன் அர்ஜுன் கேட்க, “அய்யோ... நம்ம பிளானை இவர் போட்டுக் கொடுத்துடுவாரு போலயே” என்று அசட்டுச்சிரிப்பை விஜியும் காயத்ரியும் தந்தார்கள். இவர்களின் பிளான் அறியாமல் “யாரும் விட்டுக் கொடுத்து நான் ஜெயிக்க விரும்பவில்லை” என்று அப்பாவியாகக் கெத்து காட்டினார் அம்ஜத்.

சர்வைவர் - 44
சர்வைவர் - 44

‘’ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ’’ என்பது மாதிரிதான் சர்வைவரின் போட்டிகள் ஒவ்வொன்றும் இருக்கின்றன. இந்தப் போட்டியின் கான்செப்ட்டை விளக்க ஆரம்பித்தார் அர்ஜுன். ஒரு நீளமான மரப்பலகையின் மேல் 20 மரத்துண்டுகளை அடுக்கி வைக்க வேண்டும். கடைசி துண்டை தள்ளி விட்டவுடன், அது சீட்டுக்கட்டு போல வரிசையாக ஒன்றன் மீது ஒன்று சரிந்து விழ வேண்டும். இறுதித் துண்டானது கீழேயிருக்கும் இரும்பு தகடு மீது சரியாக விழுந்தால் வெற்றி என்று அர்த்தம்.

ஆனால், இதில் கூடுதலாக ஒரு தடை இருந்தது. மரத்துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து வந்து அடுக்கும் போது போட்டியாளர்கள் நடக்கும் பகுதியில் மரச்சட்டங்களினால் அமைந்த கட்டங்கள் இருக்கும். அவற்றின் நடுவில்தான் அவர்கள் நடக்க வேண்டும். சட்டத்தின் மீது கால் தவறி பட்டு விட்டால் அது இவர்கள் அடுக்கியிருக்கும் பலகைகளை தள்ளி விட்டு விடும். அது போன்ற ஊசலாடும் செட்டப்பில் தடை அமைக்கப்பட்டிருந்தது. (என்னா வில்லத்தனம்?!).

போட்டி ஆரம்பித்தது. இருவரும் வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தினார்கள். கடைசி துண்டு எப்படி விழுந்தால் இரும்புத்தகட்டின் மீது படும் என்பதை காயத்ரி டெமோ பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அம்ஜத்தோ கடகடவென்று மரத்துண்டுகளை அடுக்கிக் கொண்டிருந்தார். இதில் சில துண்டுகள் எடை சற்று குறைவாக இருந்தததை அம்ஜத் கவனித்தார். இதை இடையில் வைக்க இவர் பிளான் செய்தது மிகவும் தவறு.

சர்வைவர் - 44
சர்வைவர் - 44

ஒரு மரத்துண்டு இன்னொன்றின் மீது சரிந்து தள்ளும் படியான இடைவெளியில் கச்சிதமாக அடுக்க வேண்டும். அப்படி நகரும் போது கீழேயுள்ள தடையையும் கவனிக்க வேண்டும்.. பொறுமையை அதிக அளவில் சோதிக்கும் போட்டியாக இது இருந்தது. ஓரமாக அமர்ந்திருந்த விஜி “எனக்கு நிறைய ஐடியா தோணுது. காயத்ரிக்கு சொல்லணும்னு தோணுது” என்று ஐடியா மணியாக மைண்ட் வாய்ஸில் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்.

காயத்ரியோடு ஒப்பிடும் போது முன்னணியில் இருந்த அம்ஜத், ஒருவழியாக துண்டுகளை அடுக்கிவிட்டு, கடவுளையெல்லாம் வேண்டிக் கொண்டு ஆரம்பித்து வைக்க, வரிசையாகச் சரிந்த துண்டுகள் அதன் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டுவிட்டன. சோர்ந்துபோன அம்ஜத், மீண்டும் எடுத்து அவற்றை அடுக்க ஆரம்பித்தார்.

சர்வைவர் - 44
சர்வைவர் - 44

காயத்ரியும் தன்னுடைய வேலையை முடித்து முதல் துண்டை சரிய வைக்க... வரிசையாக சரிந்த துண்டுகள்... சரவெடி போல் கடகடவென்று சென்றன. காயத்ரி வென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கும்போது துரதிர்ஷ்டம் இவரையும் துரத்தியது. கடைசி இரண்டு துண்டுகள் மட்டும் சரியாமல் அப்படியே நின்று விட, காயத்ரி தலையில் கை வைத்துக் கொண்டார்.

இப்போது அம்ஜத் தனது இரண்டாவது முயற்சியை ஆரம்பித்தார். இது ஆரம்பக்கட்டத்திலேயே முடிவிற்கு வந்தது. இப்போதுதான் அம்ஜத்திற்குப் புரிந்தது. எடை குறைந்த துண்டுகளை இடையில் வைக்காமல் வரிசையின் கடைசியில் வைக்க வேண்டும் என்பது. எடை மிகுந்த துண்டுகள்தான் சரிவின் வேகத்தை அதிகப்படுத்தும் என்பது புரிந்ததும் அதற்கேற்ப துண்டுகளை மாற்றி அடுக்க ஆரம்பித்தார்.

முதல் முயற்சி அநியாயமாக தோல்வியுற்றதால் காயத்ரி இரண்டாவது முயற்சியில் மனம் தளராமல் இறங்கத் துவங்கினார். இதற்குள் மடமடவென்று செயல்பட்ட அம்ஜத், எல்லா துண்டுகளையும் அடுக்கி விட்டு மூன்றாம் முயற்சியை நிறைவு செய்தார். அவர் தலையைச் சாய்த்து துண்டுகளின் கோணத்தைப் பார்க்கும்போது அவருக்கே திருப்தியாகத் தெரிந்தது. அவர் முதல் துண்டை தள்ளி விட... இந்த முறை அவருக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. துண்டுகள் கச்சிதமாக சரிந்தது மட்டுமல்லாமல், கடைசி துண்டு இரும்புத்தகட்டில் விழுந்து ‘டணார்’ என்கிற வெற்றியொலியை அம்ஜத்திற்கு தந்தது.

சர்வைவர் - 44
சர்வைவர் - 44
இதற்குள் காயத்ரி தனது இரண்டாவது முயற்சியை நிறைவு செய்து வைத்திருந்தார். அம்ஜத் வெற்றி பெற்றது உறுதியாகிவிட்டாலும் ‘சும்மா தள்ளிப் பார்ப்போமே’ என்று தள்ளி விட்டார். துண்டுகள் கச்சிதமாகச் சரிந்து வரிசை நிறைவுற்றாலும் கடைசி துண்டு தகட்டின் அருகில் மட்டுமே சென்று விழுந்தது.

தன்னுடைய சபதம் நிறைவேறாமல் போட்டியில் இருந்து வெளியேறுகிறோம் என்கிற உணர்வு காயத்ரிக்கு அழுகையை வரவழைத்தது. இது மட்டுமல்லாமல் மூன்றாம் உலகத்தில் இத்தனை நாள்கள் தாக்குப் பிடித்து, அங்கு நிகழ்ந்த போட்டிகளில் பலமுறை வென்று, அணிக்குத் திரும்புவோம் என்று கனவு கண்டு கொண்டிருந்தவருக்கு இந்தத் தோல்வி சோகத்தை ஏற்படுத்தியது.

சர்வைவர் - 44
சர்வைவர் - 44

“மத்தவங்களை விடவும் நீங்கதான் ரியல் ஃபைட்டர். மிகச் சிரமமான இந்தச் சூழலை தாக்குப் பிடிச்சிருக்கீங்க. நீங்கதான் ஒரிஜனல் சிங்கப்பெண். சிலர் போகும் போதுதான் எனக்கே கஷ்டமா இருக்கும். நீங்க அப்படிப்பட்ட ஒரு போட்டியாளர்” என்று அர்ஜூன் பல்வேறு விதங்களில் ஆறுதல் கூறிய பிறகுதான் காயத்ரியின் முகத்தில் புன்னகை வந்தது.

“‘என் தம்பியின் படிப்பிற்காகத்தான் இந்தப் போட்டிக்கு வந்தேன். நானும் கூட படிக்க விரும்புகிறேன்’ அப்படின்னு காயத்ரி சொல்லிட்டே இருப்பா. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இந்த மூணு வாரத்துல நாங்க ரொம்ப நெருங்கிட்டோம்” என்ற விஜி, உருக்கத்துடன் காயத்ரிக்கு விடை தந்தார். அம்ஜத்தும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை காயத்ரிக்குத் தெரிவிக்க அவர் விடைபெற்றார்.

சர்வைவர் - 44
சர்வைவர் - 44
காயத்ரி தொடர்பான வீடியோ காட்டப்பட்ட போது இறுதி ஷாட்டில் ‘Queen of the island’ என்கிற பின்னணி குரல் ஒலிக்க, ஒரு பாறையின் மீது காயத்ரி கம்பீரமாக நிற்கும் அந்த சில்அவுட் ஷாட் பார்க்கவே அத்தனை பரவசமாக இருந்தது.

காடர்கள் அணியில் இருந்து அம்ஜத் வெளியேற்றப்பட்ட நிலையில் இரு அணிகளிலும் அதன் பாதிப்பு எவ்வாறாக இனி இருக்கும்?

பார்த்துடுவோம்.