Published:Updated:

சர்வைவர் - 47: உமாபதியின் ரகளை, லட்சுமியின் ஐஸ் மழை, லேடி காஷ் சர்வைவரில் சந்தித்த பிரச்னைதான் என்ன?

சர்வைவர் - 47

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 47-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 47: உமாபதியின் ரகளை, லட்சுமியின் ஐஸ் மழை, லேடி காஷ் சர்வைவரில் சந்தித்த பிரச்னைதான் என்ன?

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 47-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 47
ஒரு பரபரப்பான போட்டி நடந்து முடிந்த பிறகு, போட்டியாளர்கள் ஓய்வறையில் சாவகாசமாக அமர்ந்து அதைப் பற்றி தங்களுக்குள் சிரித்துப் பேசிக் கொள்வார்கள் அல்லவா? அதைப் போலத்தான் இருந்தது நேற்றைய எபிசோட். முக்கியமான நிகழ்வுகள் என்று ஏதுமில்லை.

இதைத் தாண்டி சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் இருந்தன. குறிப்பாக வேடர்கள் அணியை ஜாலியாக வைத்திருப்பதில் உமாபதியின் பங்கு மிகப்பெரியது.

சர்வைவர் 47-ம் நாளில் என்ன நடந்தது?

நீண்ட வருடங்களுக்குப் பிறகு ‘சோறு’ என்கிற வஸ்துவை கண்ணால் பார்த்ததில் வேடர்கள் கண்ணீர் விட்டார்கள். இது ஆனந்தக் கண்ணீர். சிக்கன், மட்டன், பர்கர், ஜூஸ் என்று விதம் விதமான உணவுகள் அவர்களுக்காகக் காத்திருந்தன. வந்த சூட்டில் அப்படியே அமர்ந்து உண்ணத் துவங்கினார்கள். அத்தனை பசி.

சர்வைவர் - 47
சர்வைவர் - 47

இனிகோ பெரும் அதிர்ஷ்டக்காரர். சமீபத்தில்தான் அவர் எதிர் அணியில் ஒரு விருந்திற்குச் சென்று ‘விழாவைச் சிறப்பித்துவிட்டு’ வந்திருக்கிறார். இப்போது மீண்டும் ஒரு விருந்து. “அங்கே விருந்தாளியாகச் சென்றிருந்தேன். ஆனால் இங்கு எங்கள் அணி வெற்றி பெற்றதில் கிடைத்த விருந்து இது” என்று இதன் முக்கியத்துவத்தை பெருமையுடன் இனிகோ சொன்னது சிறப்பு. (என்ன இருந்தாலும் நம்மாளுய்யா இவன்!).

நான்வெஜ் அயிட்டங்களே அதிகம் இருந்ததால் ஐஸ்வர்யாவும் நாராயணனும் சற்று ஏமாற்றம் அடைந்தார்கள். பசியில் சில அசைவ உணவுகளை லைட்டாக முயன்று பார்த்தார் ஐசு. ஜூஸ்ஸை கைப்பற்றிய நாராயணன் "ரொம்ப வருஷம் கழிச்சு ஏப்பம்-ன்ற சத்தத்தை இப்போதான் கேட்கறோம்” என்று ஜாலி கமெண்ட் அடித்தார். ஐஸ்வர்யா வேண்டுகோளின் படி அடுத்த முறையாவது 'சைவ உணவுகளை' சர்வைவர் டீம் அனுப்பி வைக்க வேண்டும்.

சர்வைவர் - 47
சர்வைவர் - 47

ஐஸ்வர்யாவும் நாராயணனும் 'ஷாப்பிங்' கிளம்பினார்கள். வேடர்கள் அனுபவிக்கப் போகும் முதல் ஷாப்பிங் அனுபவம் இது. ஆனால் அங்கேயும் துரதிர்ஷ்டம் இவர்களைத் துரத்தியது. முட்டை போன்ற உணவுகளே இருந்தன. எனவே அவற்றையும் எண்ணைய், காய்கறி போன்றவற்றையும் வாங்கிக் கொண்டு திரும்பினார்கள். வேடர்கள் எடுக்கும் சிறிய முடிவுகளில்கூட நந்தாவின் ஆதிக்கம் இருப்பது குறித்தான மனப்புழுக்கம் இனிகோவிற்கு இன்னமும் இருக்கிறது.

காடர்கள் அணிக்கு ஓர் ஓலை வந்திருந்தது. 'உங்கள் தோல்விக்கு யார் காரணம்? அவருக்கு ஒரு தண்டனை இருக்கிறது' என்பதே அதன் சாரம். வேடர்களாக இருந்தால் யார் காரணம், தண்டனையை யார் ஏற்றுக் கொள்வது என்று ஒருவருக்கொருவர் குடுமிப்பிடிச் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் காடர்கள்தான், 'வானத்தைப் போல' டீம் ஆச்சே? எனவே 'நான் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்" என்று விக்ராந்த்தும் உமாபதியும் ஜாலியாகப் போட்டியிட்டார்கள். இவர்களை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் விரைவில் ஒரு படம் இயக்கினால் நன்று.

சர்வைவர் - 47
சர்வைவர் - 47
"ஒரு நல்ல லீடரா சொல்றேன். நான் சொல்றதைக் கேளு" என்று அடம்பிடித்த விக்ராந்த்திடம் "நீதான் நல்ல லீடர் இல்லையே?!" என்று கலாய்த்தார் உமாபதி. 10 கிலோ மண்மூட்டையை ஒரு மணி நேரம் சுமக்க வேண்டும் என்பதுதான் தண்டனையாம். (?!)

பார்வதி விஷயத்தில் கூட இதைக் குறிப்பிட்டிருந்தேன். ஒரு சிலர்தான் தனக்கு கிடைக்கும் தண்டனையைக்கூட கொண்டாட்டமாக மாற்றிக் கொள்வார்கள். உமாபதி இந்தத் தண்டனையை தனக்கு உடற்பயிற்சி கிடைத்த வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு சர்வைவர் டீமிற்கு நன்றி சொன்னார். அவரின் இந்த பாசிட்டிவ் அணுகுமுறையைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. ஒருவேளை வேடர்களுக்கு கிடைத்தது போல் 'ஓர் இரவு முழுவதும் கைவிலங்கோடு இருக்க வேண்டும்' என்கிற தண்டனை காடர்களுக்கு கிடைத்திருந்தால்? அதையும் கூட உமாபதி ஜாலியாகவே மாற்றியிருப்பார் என்று தோன்றுகிறது.

சர்வைவர் - 47
சர்வைவர் - 47

"இதுவே வேடர்கள் டீமா இருந்தா இந்தத் தண்டனையை ஏத்துக்கறதுக்குள்ள ரெண்டு மண்டை உடைஞ்சிருக்கும். இங்க ஜாலியா இருக்காங்க. பாசிட்டிவ் vibe கிடைக்குது" என்று காடர்கள் டீமிற்கு கன்னாபின்னாவென்று நற்சான்றிதழ் தந்து கொண்டிருந்தார் லட்சுமி.

குச்சிகளை வைத்து கம்பு செய்யும் டாஸ்க்கில் வனேசா பயங்கரமாக சொதப்பியது, போட்டிகளின் போது ஐஸ்வர்யா போடும் கூச்சல், நீச்சல் தெரியாமல் லேடி காஷ் தத்தளித்தது ஆகிய சம்பவங்களை வைத்து ரகளையாக கிண்டல் செய்து கொண்டிருந்தார் உமாபதி. லேடிகாஷ், லட்சுமி ஆகிய இருவரும் விழுந்து விழுந்து சிரிக்க வெட்கத்துடன் முகத்தை மூடிக் கொண்டார் வனேசா. உமாபதிக்கான தண்டனை நேரம் முடிந்ததும் அந்தப் பத்து கிலோ பையைத் தூக்கிக் கொண்டு லட்சுமி ஓடி உமாபதியை துரத்திப்பிடிக்க முயன்ற காட்சி சுவாரஸ்யம். "வேடர்கள் அணியில் இருந்தபோது இப்படியெல்லாம் நான் விளையாடியதே இல்லை" என்று மறுபடியும் ஜாலியாக அனத்தினார் லட்சுமி.

"எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் நாராயணன் வந்தார். சைக்கோ மாதிரி நடந்து கொண்டார்" என்று ஐஸ்வர்யா தனக்கு வந்த கனவைப் பற்றி சொல்ல "உண்மையே அதுதானே. இது ஏன் கனவுல வரணும்?" என்று நாராயணனைப் பங்கமாக கலாய்த்தார் இனிகோ. ஐஸ்வர்யாவின் மடியில் சரண் படுத்திருக்க, ஐவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்துப் பேசிய காட்சி ரசிக்கும்படியாக இருந்தது. "எங்களுக்கும் சிரிக்கத் தெரியும்" என்பதை வேடர்கள் அணி நிரூபித்த தருணம் இது. ரிவார்ட் சேலன்ஞ்சில் என்னவெல்லாம் நடந்தது என்பதை இவர்கள் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

சர்வைவர் - 47
சர்வைவர் - 47
அடுத்ததாக ஓர் ஓலை வந்தது. போட்டி நடைபெறாத நாள் என்பதால் எப்படியாவது ஃபுட்டேஜ் தேற்ற வேண்டுமே என்று சர்வைவர் டீம் போராடுகிற நாள்களில் இதுவும் ஒன்று. எனவே நேற்று, இன்று, நாளை என்று தங்களின் கதைகளைப் பற்றி ஒவ்வொரு போட்டியாளரும் சொல்ல வேண்டும்.

கல்லூரி காலத்தில் தனக்கு ஏற்பட்ட காதல் கதையைச் சொன்னார் நாராயணன். "அதுல ஒண்ணுமில்ல. கீழே போட்டுடு" என்கிற காமெடியாக இந்த அனுபவம் இருந்தது. விக்ராந்த்திற்கும் ஒரு காதல் தோல்வி ஏற்பட்டிருக்கிறதாம். நிச்சயதார்த்தம் வரை சென்ற ஓர் உறவில் பிறகு பிரிவு ஏற்பட்டுவிட்டதாம். 'தியாகம்' என்கிற தலைப்பில் உமாபதி ஏதாவது சொல்ல வேண்டும். "இந்த டீம்ல இருக்கறதே பெரிய தியாகம்தான்" என்று தன் வழக்கமான பாணியில் கலாய்த்தார் உமாபதி.

'துரோகம்' என்கிற தலைப்பில் தன் அனுபவத்தைப் பகிர்ந்த லேடி காஷ், இசைத்துறையில் நிகழும் சில கசப்பான அனுபவங்கள் தன் உள்ளுணர்வை வலுப்படுத்தி ஜாக்கிரதையாக இருக்க வைத்திருக்கிறது என்றார். "இங்க கூட அப்படியொரு அனுபவம் ஏற்பட்டது" என்று லேடி காஷ் குறிப்பிட்டது எந்தச் சம்பவத்தை? சரணிற்கு இதை விடவும் பொருத்தமான தலைப்பு கிடைக்காது. 'தவறுகள்' என்கிற தலைப்பில் பேச வேண்டும். "இதுவரைக்கும் செஞ்சதில்ல (நம்பிட்டோம்!) இங்க வந்து தெரியாம சில விஷயங்கள் செஞ்சிட்டேன். இனிமே என்னைத் திருத்திப்பேன்" என்று நல்ல பிள்ளையாகச் சொன்னார்.

'துரோகம்' என்கிற விஷயத்தைப் பற்றி ஐஸ்வர்யா சொன்னது அருமை. "நான் இதுவரைக்கும் துரோகத்தை சந்தித்தில்லை. நானும் பண்ணதில்லை. யாராவது செஞ்சிருந்தா அவங்க பார்வைல ஏதாவது காரணம் இருக்கலாம்னு நெனச்சிப்பேன்" என்று ஐசு சொன்னது அற்புதமான தத்துவம். 'Rowing' என்பதுதான் ஐஸ்வர்யாவின் கரியராக இருந்ததாம். பிறகு அங்கிருந்து திசை மாறி கார்ப்பரேட் பணிக்குச் சென்று 'இது தன்னுடைய இடம் இல்லை' என்று உணர்ந்து உடற்பயிற்சி வீடியோக்களை இணையத்தில் இட்டு புகழ் பெற்றதின் வழியாக 'சர்வைவர்' வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.

சர்வைவர் - 47
சர்வைவர் - 47

இந்த டாஸ்க்கில் சிலர் மட்டுமே ஆத்மார்த்தமாக பேச, பலர் பேசியது சம்பிரதாய வார்த்தைகளுடன் இருந்தது. 'பகை' என்கிற தலைப்பில் பேசும்போது "இதுவரைக்கும் யார்கிட்டயும் இல்லை. யாராவது என்கிட்ட காட்டினா மன்னிப்பு கேட்டுடுவேன்... இல்லைன்னா... விலகிப் போயிடுவேன்" என்றார் நந்தா. இவர் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு சர்காஸ்டிக் புன்னகையை சிந்தினார் இனிகோ. (என்னவொரு வில்லத்தனம்?!). 'வெறுப்பு' என்பதைப் பற்றி பேசும் போது தான் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்கள் பற்றி கசப்புடன் சொன்னார் லேடி காஷ்.

'நட்பு' என்று வரும்போது 'சர்வைவரில் கிடைத்த நட்புதான் பொக்கிஷம். இது நீடிக்கும்' என்பதுபோல் சொல்லி பலரும் ஜல்லியடித்தார்கள். மலேசிய மாடல் என்பதைத் தாண்டி சர்வதேச லெவலுக்கு நகர்வதே வனேசாவின் லட்சியமாம். "கேமராவிற்குப் பின்னால் பணிபுரியத்தான் ஆசை. ஆனால் முன்னால் வர வேண்டியிருந்தது. இனி என் பயணம் எப்படியிருக்கும் என்று பார்ப்போம்" என்று முடித்துக் கொண்டார் உமாபதி.

சர்வைவர் - 47
சர்வைவர் - 47

இது போன்ற பாசாங்கான டாஸ்க்குகள் ஒரு பக்கம் சலிப்பை ஏற்படுத்தினாலும் போட்டியாளர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை நாம் அறிவதற்கான சில புள்ளிகள் இதில் ஒளிந்திருக்கும். அவற்றை அறிந்துகொண்டால் இந்த நிகழ்ச்சியில் இவர்கள் எவ்வாறெல்லாம் செயல்பட்டார்கள் என்பதை ஆராய்வதற்கு உதவிகரமாக இருக்கும்.

இன்று ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சியிலும் சில ஜாலியாக டாஸ்க்குகள் இருக்கும்போல் தெரிகிறது. அடுத்து நிகழவிருக்கும் இம்யூனிட்டி சவால் முக்கியமானது. இதில் யார் வெல்வார்கள்?

பார்த்துடுவோம்.