Published:Updated:

சர்வைவர் 48: லேடி காஷ் தேடிய `கடல்லயே இல்லியாம்’ ஸ்டார் ஃபிஷ்... நந்தாவுக்குக் கையில் என்ன பிரச்னை?

சர்வைவர் 48

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 48-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் 48: லேடி காஷ் தேடிய `கடல்லயே இல்லியாம்’ ஸ்டார் ஃபிஷ்... நந்தாவுக்குக் கையில் என்ன பிரச்னை?

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 48-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் 48
முன்தின எபிசோடைப் போலவே நேற்றைய எபிசோடும் ஜாலியான டாஸ்க்குகளால் நிறைந்திருந்தது. வரப்போகும் கடுமையான சவால்களுக்கு முன்பாக இளைப்பாறுதல் நிகழ்வுகள் போல இந்தத் தினங்கள் இனிமையாக அமைந்திருந்தன.

நண்டு பிடிப்பது, கழுத்தளவு மணலில் புதைந்திருப்பது என்கிற சுவாரஸ்யமான விளையாட்டுக்களைத் தந்துவிட்டு, “இதையெல்லாம் விளையாட்டா எடுத்துக்காம சீரியஸா ஆடுங்க. அப்படி முடிச்சா உங்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு” என்று சர்வைவர் டீம் இவர்களை உசுப்பேற்றி விட்டது.

சர்வைவர் 48-ம் நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் 48
சர்வைவர் 48

போட்டியாளர்கள் தீவிற்கு வந்த நாளில் இருந்து அதுவரை அல்லாத அளவிற்கு மழை கொட்டித் தீர்த்ததால் போட்டியாளர்கள் கூடாரத்தில் பரிதாபமாக ஒண்டிக் கொண்டிருந்தார்கள். சாலையோரத்தில் வசிக்கும் மனிதர்கள் மழை பெய்தால் எவ்வாறெல்லாம் கஷ்டப்படுவார்கள் என்பது இப்போது அவர்களுக்கு நன்கு விளங்கியிருக்கும்.

சர்வைவர் 48
சர்வைவர் 48

நந்தாவின் கை சிகிச்சைக்காக மருத்துவர்கள் வந்திருந்தனர். உலகமெங்கிலும் டாக்டர்கள் ஒரே மாதிரியாகத்தான் பேசுவார்கள் போலிருக்கிறது. “48 மணி நேரம் கழிச்சுதான் எதையும் சொல்ல முடியும்” என்கிற குறிப்புடன் விலகினார் மருத்துவர். (இந்தியாவில் படித்திருப்பார் போல!).

இரு அணிகளுக்கும் ஓலை வந்தது. சில ஜாலியான சவால்களைப் பட்டியல் இட்டு “இதை சீரியஸா செய்யுங்க. ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கு” என்று உசுப்பேற்றியது அந்த ஓலை.
சர்வைவர் 48
சர்வைவர் 48

’15 தேங்காய்களை தொழில் சுத்தமாக வெட்ட வேண்டும்’ என்பது அதிலுள்ள ஒரு சவால். தேங்காய் என்றதுமே வேடர்களின் ஒட்டுமொத்த அணியும் இனிகோவைத் திரும்பிப் பார்க்க “நான்தானா..? இப்படி என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளமா ஆக்கிடுங்க” என்று சிரிப்புடன் சலித்தபடி களத்தில் இறங்கினார் இனிகோ. கடப்பாறையை தலைகீழாக கவிழ்த்து நட்டு அதில் தேங்காய் உறிப்பதென்றால் பழகியவர்களுக்கு எளிதான சமாச்சாரம். ஆனால் இரண்டு மொண்ணை அரிவாள்களோடு போராடுவது பெரிய விஷயம். கைகள் வலிக்க வலிக்க, நந்தா பிசியோதெரபி உதவி செய்ய, ஒருமாதிரியாக செய்து முடித்தார் இனிகோ.

வனேசாவின் நண்டுபிடித்தல் டாஸ்க்தான் இருப்பதிலேயே அதிக காமெடியாக இருந்தது. இதற்காக பிரத்யேக பின்னணி இசையை ஒலிக்கவிட்டு நகைச்சுவையை தூக்கலாகத் தந்திருந்தது சர்வைவர் டீம். “இவர் நண்டைப் பிடிக்கிறாரா, நண்டு இவரைப் பிடிக்கிறதா என்று தெரியவில்லை" என்று ஜாலியாக கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தார் விக்ராந்த். “வந்துடுடா... செல்லம்” என்று நண்டுடன் உரையாடல் நடத்திக் கொண்டிருந்த வனேசா, நண்டு அருகில் வந்ததும் பதறி அலறியடித்து விலகினார். ஒருவழியாக இவர் வேட்டையாடி எடுத்து வந்திருந்த நண்டுகள் வண்டு சைஸில் இருந்தன. இவர் செய்த இம்சை தாங்காமல் அதில் ஒன்று செத்துப் போயிருக்க, “சாரி நண்டு..” என்று சோகத்தைச் சிந்தினார் வனேசா. இதையே கிரேவியாக தந்திருந்தால் ஒரு ரவுண்டு கட்டியிருப்பார்.

சர்வைவர் 48
சர்வைவர் 48

‘ஸ்டார் ஃபிஷ் பிடித்து வர வேண்டும்’ என்கிற சவாலை தானே முன்வந்து உற்சாகமாக ஏற்றுக் கொண்டார் லேடி காஷ். கடலில் நிறைய ஸ்டார் ஃபிஷ்களை ஏற்கெனவே பார்த்திருக்கிறாராம். ஆனால் “நாம் எதைத் தேடிப் போகிறாமோ, அன்றைய நாளில் அது கிடைக்காது” என்கிற தத்துவம்தான் ஜெயித்தது. லேடி காஷ் வருவது தெரிந்ததும் அனைத்து நட்சத்திர மீன்களும் வானத்திற்கு சென்றுவிட்டது போல! அவர் கரையோரப் பகுதியை முழுவதும் சலித்தும் ஒன்று கூட கிடைக்கவில்லை. ‘கடல்லயே இல்லியாம்’ என்று என் மைண்ட் வாய்ஸில் தோன்றியதை, பிறகு உமாபதியும் சொன்ன போது “மேட்சிங்... மேட்சிங்” என்று தோன்றியது.

குச்சி நட்டு தென்னங்காயை வீசி ‘ஹாட்ரிக்’ விக்கெட் எடுக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார் லட்சுமி. இவர் கிரிக்கெட்டர் என்பது இந்த விளையாட்டைத் தேர்ந்து எடுத்ததற்குக் காரணம். லட்சுமியின் உயரத்திற்குக் குச்சிகளை எடுத்து வந்து போங்காட்டம் ஆட முயல, “காடர்கள் எப்பவுமே நியாயமாத்தான் விளையாடுவோம்” என்று சொல்லி ஸ்டம்ப்பின் அளவிற்குச் சரியான குச்சிகளை எடுத்து வந்தார் உமாபதி. (காடர்கள் நியாயமானவர்களா? என்னப்பா... ஹாஸ்பிட்டல்ல பிஸ்கெட்லாம் எடுத்து சாப்பிட்டீங்களாமே?!).

சர்வைவர் 48
சர்வைவர் 48
ஏதோ பும்ரா ரேஞ்சிற்கு ஒரு கிலோ மீட்டர் பின்னால் போய் ஓடி வந்து ஃபாஸ்ட் பெளலிங் செய்து கொண்டிருந்த லட்சுமியால் பலமுறை முயன்றும் ‘ஹாட்ரிக்’ எடுக்க முடியவில்லை. “ஹலோ... உன்னை என்ன இந்தியன் டீமிற்கா செலக்ட் செய்யறாங்க? பக்கத்துல வந்து போடு” என்று விக்ராந்த் அறிவுரை சொன்னவுடன் அதுபோல் லட்சுமி வீசியதில் ஒருவழியாக வெற்றி கிடைத்தது.

கழுத்தளவு மணலில் புதைந்து கிடக்கும் சவாலை ஏற்றுக் கொண்டார் சரண். உஷாராக பக்கத்தில் நிறைய சாக்லேட்டுக்களை எடுத்து வந்து வைத்துக் கொண்டார். போதிய இடைவெளியில் யாராவது வந்து இவருடைய வாயில் சாக்லேட்டை போட வேண்டுமாம். மண்ணில் புதைந்திருப்பது பார்க்க ஜாலியாக இருந்தாலும் மூக்கு அரிக்கும் போது சொறிந்து கொள்ள முடியாமல் இருக்கும் வேதனையை அனுபவித்தால்தான் தெரியும். சவால் நேரம் முடிந்ததும் சரணால் அத்தனை எளிதில் வெளியே வர முடியவில்லை. இனிகோவும் நாராயணனும் உதவி செய்தும் கூட உள்ளே புதைந்திருந்த கால் அத்தனை எளிதில் வரவில்லை. பிறகு மண்வெட்டியை வாங்கி தானே மணலைத் தள்ளி ஒருவழியாக வெளியே வந்தார் சரண்.

சர்வைவர் 48
சர்வைவர் 48

‘மணல் வீடு’ கட்டிக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவிடம் “குடியிருக்க வரலாமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தார் இனிகோ. கிளிஞ்சல்களை வைத்து அழகு செய்து நான்கு புறமும் குச்சி நட்டு அழகான வீட்டைக் கட்டியிருந்தார் ஐசு. மற்றவர்கள் வந்து பாராட்டும் போது முகத்தைப் பெருமிதமாக அவர் வைத்துக் கொண்டது, வளர்ந்த குழந்தையைப் பார்ப்பது போலவே இருந்தது.

சோகமயமாக அமர்ந்திருந்த நந்தாவின் முகம் ஓர் ஓவியருக்கு உண்டான பொருத்தத்துடன் இருந்தது. அவர் அந்தத் தீவை வரைந்திருக்கிறாராம். ஓகேதான்! கரையிலிருந்து சற்று தூரத்தில் நட்டப்பட்டிருக்கும் கொடியை நீச்சல் அடித்து எடுத்துவர நாராயணன் முன்வந்தார். ஐஸ்வர்யாதான் இவருடைய நீச்சல் குருவாம். கம்பை எடுக்க முடியாமல் கொடியைப் பிய்த்துக் கொண்டு வந்து கரை சேர்ந்தார் நாராயணன்.

சர்வைவர் 48
சர்வைவர் 48

தென்னம் ஓலையால் டென்னிஸ் பந்தை நூறு முறை தட்ட வேண்டும் என்பது விக்ராந்திற்கு வந்த டாஸ்க். இதை நாம் வீடுகளில் விளையாட்டாகச் செய்வோம். கிரிக்கெட்டரான விக்ராந்திற்கு இது உண்மையிலேயே எளிதான விளையாட்டாக இருந்தது. ஒரே முறையில் இவர் விடாமல் தட்டிக் கொண்டிருந்ததை ஏதோ உலக சாதனை போல் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார் வனேசா. “சூப்பர்ண்ணா... ஒரே டைம்ல பண்ணிட்டீங்க” என்று மகிழ்ந்தார் உமாபதி. விக்ராந்த் செய்தது சிறப்புதான். ஆனால் இந்த எளிய டாஸ்க்கிற்கு இத்தனை பரவசம் சற்று ஓவர்தான்.

தீவில் கிடைக்கும் பொருள்களை வைத்து ஏதாவது ஆபரணம் செய்ய வேண்டும். இந்த டாஸ்க்கை செய்ய முதலிலேயே ஆர்வமாக இடம்பிடித்தார் உமாபதி. இது குறித்து பின்னர் முனகிக் கொண்டிருந்தார் வனேசா. கலைப்பொருள்களை கையாள்வதில் உமாபதிக்கு ஆர்வம் அதிகமாம். அங்குள்ள இலைகளை வைத்து கீரிடம், மாலை போன்றவற்றை செய்து லேடி காஷிற்கு அணிவித்து அழகு பார்த்தார்கள்.

ஒருவழியாக அனைவரின் டாஸ்க்குகளும் வெற்றிகரமாக முடிந்தன. ‘கடல்லயே இல்லையாம்’ லேடி காஷின் டாஸ்க் மட்டும் தோல்வி. எனவே அவரைத் தவிர மற்றவர்களுக்கு பரிசுகள் வந்தன. “பீட்ஸாவோ... பிரியாணியோ...” என்று நினைத்தால் குடும்பத்தினர் அனுப்பியிருக்கும் நினைவுப் பொருள்கள் அது.
சர்வைவர் 48
சர்வைவர் 48

இனிகோவின் அண்ணன் பையன்களின் புகைப்படம் வந்திருந்தது. அதைப் பார்த்ததும் நெகிழ்ந்துவிட்டார் இனிகோ. இருவரும் குழந்தையில் இருந்து ‘சித்தப்பா... சித்தப்பா...’ என்று இவரிடம்தான் அதிகம் இருந்தார்களாம். இதில் பெரிய பையன் இனிகோவை அவ்வப்போது ஆசையாகக் கடித்துவிடுவானாம். (சர்வைவருக்கு வருங்கால போட்டியாளர் ரெடி!).

லட்சுமியின் ஃபேவரைட் பொம்மை ஒன்றை தேடி அனுப்பியிருந்தார் அவருடைய அம்மா. அதைப் பார்த்ததும் ஆசையாகக் கன்னத்தில் வைத்துக் கொண்டார் லட்சுமி. கரடி பொம்மைக்கும் பெண்களுக்கும் அப்படி என்னதான் பூர்வாந்திர உறவோ?! “வீடே என்கிட்ட வந்துட்ட மாதிரி இருக்கு” என்று பரவசமானார் லட்சுமி.

சர்வைவர் 48
சர்வைவர் 48

சரணிற்கு ஆடை வந்திருந்தது. மணிரத்னம் படங்களில் வரும் குடும்பம்போல ஆங்கிலத்தில் கடிதம் வந்திருந்தது. "நந்தா... உங்க பொண்ணு போட்டோ வரப்போகுது. எப்படியும் ஒரு அழுகாச்சி சீன் உண்டு” என்று இனிகோ ஜாலியாக யூகித்தது நிஜமாகியது. நந்தாவுடைய மகளின் சிறுவயது புகைப்படம் ‘க்யூட்டாக’ இருந்தது.

வனேசாவின் அண்ணன் ஹாண்ட்பேக் அனுப்பியிருந்தார். "ஒரு தீவுல இருக்க பொண்ணுக்குப் போய் ஹாண்ட்பேக் அனுப்புற ஆசாமி உலகத்திலேயே என் அண்ணன்தான்” என்று சர்காஸ்டிக்காக மெச்சிக் கொண்டார் வனேசா.

விக்ராந்த்திற்கு காதல் பொங்க மனைவியிடமிருந்து கடிதம் வந்திருந்தது. அதை வாசித்ததும் சென்டியானார் விக்ராந்த். ‘அதெல்லாம் கிடக்கட்டும். கூடவே மைசூர்பாகு வந்திருக்கு பாரு... அதை முதல்ல பிரி. சாப்பிடலாம்” என்று உற்சாகமானார் உமாபதி. விக்ராந்த்தின் மனைவி அனுப்பிய ஓவியம் எளிமையான அழகோடு இருந்தது. ஓவியத்தில் இருந்த அதே நிறத்தில் டீஷர்ட்டை அவர் அனுப்பியிருந்தது செம ஐடியா.

‘வருங்காலத்தில் ஒரு சிறந்த இயக்குநர் ஆக வாழ்த்துகள்’ என்கிற குறிப்பு கொண்ட டைரியும் மஞ்சள் நிற தொப்பியும் உமாபதிக்கு வந்திருந்தது. “எங்க டீமோட கலர்” என்று பெருமையாக அணிந்து கொண்டார் உமாபதி.

சர்வைவர் 48
சர்வைவர் 48

ஐஸ்வர்யாவிற்கு ஃபேமிலி போட்டோ வந்திருந்தது. தன் அம்மாவைப் பார்த்து கூடுதலாக நெகிழ்ந்தார் ஐசு. நாராயணின் இளமைக்கால புகைப்படங்களை வைத்து ஒரு கடிகாரம் அனுப்பியிருந்தார்கள். அதன் கூடவே வந்திருந்ததுதான் ஸ்பெஷல். ஒரு பெரிய பெட்டி நிறைய விதம்விதமான இனிப்புகள், நொறுக்குத்தீனிகள் வந்திருந்தன. “அய்... சாக்லேட்டு” என்று பெட்டியின் மீது பாய்ந்த ஐஸ்வர்யாவை ‘அமைதி... அமைதி... உனக்கு வேணும்கிறதை முதல்ல எடுத்துக்கோ” என்று அனுமதியளித்தார் நாராயணன்.

புயலுக்கு முன்னே அமைதி என்பது போல வரப்போகிற இம்யூனிட்டி சவால் என்கிற புயலுக்கு முன்னால் வீசுகிற தென்றலை போட்டியாளர்கள் இனிமையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இனி என்னவாகும்?

பார்த்துடுவோம்.