Published:Updated:

சர்வைவர் - 50: மீண்டும் சரணுக்கு அடித்த அதிர்ஷ்டம், வெளியேறிய லட்சுமி... இனிகோ துரோகம் செய்தாரா?!

சர்வைவர் - 50

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 50-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 50: மீண்டும் சரணுக்கு அடித்த அதிர்ஷ்டம், வெளியேறிய லட்சுமி... இனிகோ துரோகம் செய்தாரா?!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 50-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 50
இது சர்வைவரின் 50வது எபிசோடு. ஆனால் சில உள்விவகாரங்களால் திட்டமிட்ட நாள்களுக்கு முன்பே போட்டி முடித்து வைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். சர்வைவர் நிர்வாகத்தின் மீது லேடி காஷ் புகார் தெரிவித்த தினத்தை கணக்கு வைத்துக் கொண்டால் குத்துமதிப்பாக இதை ஆராய முடியும்.

ஓகே. இந்த உள்விவகாரங்கள் நமக்கு வேண்டாம். 'கோழி குருடாக இருந்தாலும் குழம்பு ருசியாக இருக்கிறதா?' என்றொரு பழமொழி இருக்கிறது. அதன்படி நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கிறதா என்று மட்டும் பார்க்கலாம்.

டிரைபல் பஞ்சாயத்தில் முதன்முறையாக இரு அணிகளுமே இணைந்து வந்திருந்தார்கள். இரு அணிகளில் இருந்தும் தலா ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார். எனவே நிகழ்ச்சி சில திருப்பங்களால் களைகட்டியது. ‘யார் வெளியேற்றப்படுவார்’ என்பதை ஒரு மாதிரியாக முன்பே யூகிக்க முடிந்தது. ஆனால் இனிகோ வைத்திருந்த ‘இம்யூனிட்டி ஐடல்’ ஒரு சுவாரஸ்ய டிவிஸ்டை தந்தது.

சர்வைவர் 50-ம் நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் - 50
சர்வைவர் - 50

சர்வைவரின் டெக்னிக்கல் டீமை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வியக்கலாம்; பிரமிக்கலாம். அத்தனை கடின உழைப்பைக் கொட்டி காட்சிகளை சிறப்பான முறையில் தருகிறார்கள். டிரைபல் பஞ்சாயத்து காட்சி வரும் போதெல்லாம் அதன் சூழல், லைட்டிங், பிரார்ப்பர்டிஸ் போன்றவற்றை நான் மிகவும் வியப்பேன். இன்றும் அப்படியே! நெருப்பின் வெளிச்சத்தில் ஒவ்வொரு முகமும் ஒளிர்வதைக் காண மிகவும் வசீகரமாக இருந்தது.

இன்று இரு அணிகளையுமே அர்ஜுன் விசாரணைக்கு உட்படுத்தினாலும் வேடர்களின் பக்கம் டேமேஜ் அதிகமாக இருந்தது. அர்ஜுனின் இந்தப் பாரபட்சம் சமயங்களில் நெருடலாக இருக்கிறது. சரண் எப்பவோ செய்த பிழைகளைப் பற்றி இன்னமும் தொடர்ச்சியாக அவர் கேள்வி கேட்பதுபோல விக்ராந்த், உமாபதி, விஜி ஆகியோரை கேட்பதில்லை.

“இனிகோ... வேடர்கள் டீமில் செட்டில் ஆயிட்டீங்களா?” என்று வேண்டுமென்றே ஒரு கேள்வியை கேட்டு அர்ஜுன் போட்டு வாங்க முயல, “ஒரு மாதிரியா ஆயிட்டேன். இன்னமும் முழுக்க இல்லை சார்” என்ற உண்மையை போட்டு உடைத்தார் இனிகோ.

“ஐஸ்வர்யா... உங்களுக்கு சரண்தான் முக்கியம்ன்ற மாதிரி தெரியுது... தப்பு பண்ண சரணை விட தப்பு செய்யாத இனிகோ பெட்டர் சாய்ஸ் இல்லையா?” என்று அர்ஜுன் மடக்க முயல, பதில் சொல்ல முடியாமல் திணறினார் ஐஸ்வர்யா. என்றாலும் சுதாரித்துக்கொண்டு, "சரண் தப்புகளை திருத்திக்கறான். அவன் மேல எனக்கு முழு நம்பிக்கையிருக்கு. ஆனா இனிகோ மேல நம்பிக்கையில்லை. அவர்கிட்டயே நேரா இதைச் சொல்லிட்டேன்” என்றார் ஐஸ்வர்யா.

அடுத்த கேள்வியை எங்கு கேட்டால் பஞ்சாயத்தின் சூடு அதிகமாகும் என்கிற சூட்சுமம் அறிந்த அர்ஜுன், “உமாபதி...” என்று அழைக்க விஜியின் பாசத்தம்பியான அவர், “சரணை வெச்சுக்கிட்டு விஜியை அனுப்பினீங்களே?” என்கிற மாதிரி ஐஸ்வர்யாவின் மீது கோபம் அடைந்தார்.

‘நாம யாரு வம்புக்கும் தும்புக்கும் போறதில்ல’ என்பதுபோல் அனைத்தையும் கேட்டுக் கொண்டு மெளனமாக அமர்ந்திருந்த சரணிடம், “என்னப்பா ஒண்ணும் சொல்ல மாட்டேன்ற” என்று அந்தப் பக்கமும் கிளற முயன்றார் அர்ஜுன். “நான் எதுவும் யோசிக்கலை சார்” என்று ஜாக்கிரதையாக பதில் சொன்னார் சரண்.

சர்வைவர் - 50
சர்வைவர் - 50

“டீம் லீடரான ஐஸ்வர்யாவிற்குப் பத்திற்கு என்ன மார்க் கொடுப்பீங்க?" என்ற கேள்விக்கு இனிகோ 7-ம் நந்தா 8-ம் தந்தார்கள். “டாஸ்க் நடக்கும்போது கொஞ்சம் ஓவரா எக்சைட் ஆயிடுவாங்க” என்பதுதான் இருவரும் தெரிவித்த காரணம்.

ஓர் அணியின் தலைவரைப் பற்றி இன்னொரு அணியிடம் மதிப்பெண் கேட்பது அடிப்படையிலேயே முறையற்றது. இந்த வகையில் ஐஸ்வர்யாவைப் பற்றி காடர்களிடம் மதிப்பெண் கேட்டது அநியாயம். அவரின் செயல்பாடுகளைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? என்றாலும் இது ரியாலிட்டி ஷோ ஆயிற்றே?

“ஐஸ்வர்யாவிற்கு என்ன மார்க் கொடுப்பீங்க?” என்று விக்ராந்திடம் கேட்டதற்கு மிக அநியாயமான பதிலைச் சொன்னார் அவர். இரண்டே மார்க்குகள்தான் தருவாராம். ஐஸ்வர்யாவிடம் சின்னச் சின்ன குறைகள் இருக்கலாம். ஆனால் போட்டியிலும் சரி, அணியை நிர்வகிப்பதிலும் சரி, ஐஸ்வர்யா ஒரு கில்லி. இந்த விஷயம் விக்ராந்த்திற்கு நிச்சயம் சிறிய சதவிகிதமாவது தெரிந்திருக்கும்.

ஐஸ்வர்யாவிற்கே விக்ராந்த் இரண்டு மதிப்பெண்கள் தருகிறார் என்றால் தன் அணியில் உள்ள வனேசா, லேடி காஷ் ஆகியோருக்கு என்ன தருவார்? மனசாட்சியுடன் அவர் பதில் அளித்தால், மதிப்பெண்கள் மைனஸில்தான் போகும். ஆனால் காடர்கள் அணி அப்படிச் செய்யாது. அதுதான் பாசக்கார அணியாயிற்றே?!

விக்ராந்த்தின் தோழரான உமாபதியும் ஐஸ்வர்யாவை பார்டரில் பாஸ் செய்ய வைத்து 3.5 மதிப்பெண்களைத் தந்தார். ‘வெளியூர் ஆட்டக்காரனை உள்ளூர் ஆட்டக்காரன் மதிக்கணும்' என்கிற நீதி ‘கரகாட்டக்காரன்’ படத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை நியாயம் கூட அறியாதவராக உமாபதி இருக்கிறார். ஆனால் ஆண்களுக்கு நிகராக பத்து கிலோ சுமையை ஐஸ்வர்யா தூக்கியதை உமாபதி பாராட்டியது நல்ல விஷயம்.

லட்சுமி சற்று பரவாயில்லை. பழைய பாசத்தில் ஐஸ்வர்யாவிற்கு ஆறு மதிப்பெண்கள் தந்தார். டாஸ்க்கின்போது சில விதிமீறல்களை ஐஸ்வர்யா செய்ததால் சில புள்ளிகளைக் குறைத்துவிட்டாராம். எனில் லட்சுமி செய்த விதிமீறல்களின் கதி என்ன? நேற்று நடந்த டாஸ்க்கில் கூட கைகளை ஊன்றிக் கொண்டு இருந்தார் லட்சுமி. இதை அர்ஜுன் சரியாக கவனிக்கவில்லை. ஆனால் ஆட்ட சுவாரஸ்யத்தில் தான் செய்த விதிமீறல்களை ஐஸ்வர்யா நேர்மையாக ஒப்புக் கொண்டார்.

சர்வைவர் - 50
சர்வைவர் - 50

ஐஸ்வர்யாவிற்கு வாங்கித்தர வேண்டிய திட்டுக்களையெல்லாம் வாங்கித் தந்துவிட்டு “ஐஸ்வர்யா ஒரு நல்ல பிளேயர்" என்பது போல் பிறகு அர்ஜுன் தந்த சான்றிதழ் அநியாயமான குறும்பு. வேடர்கள் அணியில் நந்தா செல்வாக்கு செலுத்துகிறாரா அல்லது மற்றவர்கள்தான் அவருக்கு மயங்குகிறார்களா என்கிற விவாதம் மறுபடியும் ஓடியது.

“திருமணம் ஆகி சந்தோஷமாத்தான் இருக்கேன். ஆனா 'வாழ்ந்துக்கிட்டு இருக்கேனா’ன்னு கேட்டா... இல்லை” என்று 96 திரிஷா சொல்லும் வசனத்தைப் போல, "காடர்கள் அணியில் செளகரியமாக இருக்கிறேன். வசதியா இருக்கிறேன். ஆனால் பாதுகாப்பாக இல்லை. ஆனால் இதற்காக அவர்களையும் குறை சொல்ல முடியாது. அவர்களின் அணிப்பாசம் அப்படி” என்று விரக்திச் சிரிப்புடன் சொன்னார் லட்சுமி.

நான் தொடர்ச்சியாக முன்வைக்கும் ஒரு புகாரைப் பற்றிய கேள்வியை அர்ஜூன் இன்றைக்குத்தான் பேசினார். “விக்ராந்த்.. இந்த விளையாட்டில் ஜெயிக்கணும்ன்றதுதான் முக்கியம். அதான் இறுதி இலட்சியம். ஆனா சிலரை நீங்க பாதுகாப்பா வெச்சிருக்கீங்களா?” என்று தேங்காய் உடைப்பதுபோல் கேட்டுவிட்டார் அர்ஜூன்.

ஆனால் விக்ராந்த் இதற்கு சொன்ன பதில் மழுப்பலாக இருந்தது. “அம்ஜத்தை அனுப்பிய பின்தான் நான் மிகவும் குற்றவுணர்வாக இருந்தேன். இந்த கேம்மோட ஃபார்மட்டா... என்னன்னு தெரியல” என்று அவர் சொன்னது நேரடியான பதிலாக அமையவில்லை. பலமான போட்டியாளரான அம்ஜத்தை அனுப்பியது குற்றவுணர்வு என்றால், இப்போது லட்சுமியை வெளியே அனுப்பி மறுபடியும் கில்ட்டியாகக்கூடாது என்பதுதான் எளிய தர்க்கம்.

லட்சுமியுடம் கேட்ட அதே கேள்வியை வனேசாவிடம் கேட்டார் அர்ஜூன். “வேடர்கள் அணியில் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?”. அம்மணிக்கென்ன, அந்த அணியின் அதிர்ஷ்ட தேவதை. கேக், பிரியாணி வருவதற்கு காரணகர்த்தா! எனவே "நன்றாகத்தான் இருக்கிறேன். இங்க நேர்மையா இருக்காங்க... ஒருத்தரோட ஒருத்தர் நல்ல புரிதல் இருக்கிறது” என்று பெருமிதத்துடன் சொன்னார்.

“எப்படியும் இந்த டீம்ல இருந்து ஒருத்தர் ஜெயிக்கப் போறாங்க” என்பதுபோல் காடர்களுக்கு வனேசா ஆதரவு தந்து பேசிக் கொண்டிருக்க, “இப்பவே விட்டுக் கொடுத்துட்ட மாதிரி பேசறீங்களே?" என்று வனேசாவிற்கு சரியாக செக் மேட் வைத்தார் அர்ஜூன்.

சர்வைவர் - 50
சர்வைவர் - 50

“ஓகே. வேடர்கள் அணி... நீங்க சொல்லுங்க… விக்ராந்திற்கு பத்துக்கு எத்தனை மார்க் கொடுப்பீங்க?” என்றதும் “எட்டு மார்க் தருவேன். அவர் மேல மரியாதை இருக்கு” என்றார் ஐஸ்வர்யா. ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்கிற குறளுக்கு வாழும் உதாரணம் (?!) ஐசுதான். விக்ராந்திற்கு இப்போது குற்றவுணர்வு அதிகமாகியிருக்கும். சரண் 9ம், நாராயணன் 9ம், நந்தா 10-ம் தந்தார்கள். “விக்ராந்த் பொறுமையா, நிதானமா இருப்பாரு” என்று நற்சான்றிதழ் தந்தார் நந்தா.

காடர்கள் அணி விக்ராந்திற்கு பத்திற்கு பத்து மதிப்பெண்கள் தருவார்களாம். 'நீ ஊதவே வேணாம்’ என்பது போல் இந்த துதிபாடல் அமைந்திருந்தது.

“ஓகே வாக்கெடுப்பு போயிடலாம்” என்று ஆரம்பித்த அர்ஜுன், முதலில் வேடர்கள் அணியை அழைத்தார். இவர்கள் எப்போதுமே நவக்கிரக அணிதான். எனவே முடிவுகள் குழப்பமாகத்தான் அமையும். சரணிற்கு 3 வாக்குகளும் இனிகோவிற்கு 2 வாக்குகளும் வந்திருந்தன. மற்றவர்களின் வாக்குகள் பற்றி நமக்கு முன்னமே தெரியும். ஆனால் சரணிற்கு எதிராக நாராயணன் வாக்களித்திருந்ததுதான் சர்ப்ரைஸ். அவர் இனிகோவிடம் “உனக்கு எதிராக வாக்களிக்க மாட்டேன்" என்று முன்பே சொல்லியிருந்தார் போல.

“யாராவது இம்யூனிட்டி ஐடல் வெச்சிருக்கீங்களா?” என்று முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பு அர்ஜுன் கேட்டதும் இனிகோ தயங்கியபடி கையைத் தூக்கினார். வேடர்கள் அனைவருக்குமே அதிர்ச்சி. "எங்களுக்கே விபூதி அடிச்சிட்டல” என்பதுபோல் இனிகோவை திகைத்துப் பார்த்தார்கள். எதிரணியில் இருந்த உமாபதியைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தார் இனிகோ. “என்னாலதான் தம்பி... நீ பிழைச்சே” என்பது மாதிரி சிரித்தார் லட்சுமி.

உண்மையில் இனிகோ தன்னுடைய இம்யூனிட்டி ஐடலை பயன்படுத்தியிருக்கவே தேவையில்லை. ஏனெனில் சரணிற்குத்தான் அதிக வாக்குகள் பிறகு வந்திருந்தது. ஆனால் வேடர்கள் கடைசி நிமிடத்தில் எப்படி வேண்டுமானாலும் மனம் மாறுவார்கள் என்று பயந்த இனிகோ, தன் ஆயுதத்தை முன்பே பயன்படுத்திவிட்டார். ஆனால் இது வீணான சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது.

சர்வைவர் - 50
சர்வைவர் - 50

காடர்கள் அணியின் வாக்களிப்பு அடுத்ததாக துவங்கியது. இதில் லட்சுமியைத்தான் பலியிடப் போகிறார்கள் என்பது ஏற்கெனவே தீர்மானித்த விஷயம்தான். எனவே பலி பீடத்திற்குத் தயாராகவே இருந்தார் லட்சுமி. ‘வலிக்காமல் வெட்ட வேண்டும்’ என்கிற காரணத்திற்காக வனேசாவிற்கு வாக்களித்திருந்தார் உமாபதி. இதனால் மூன்று எதிர் வாக்குகளைப் பெற்று ஆட்டத்தில் இருந்து லட்சுமி வெளியேற நேர்ந்தது.

ஆக... இன்று எலிமினேட் ஆகப் போகிறவர்கள் லட்சுமி மற்றும் சரண். “இதில் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு” என்று அர்ஜூன் சொன்னதும் குழப்பம் தாங்காமல் தலையைப் பிய்த்துக் கொண்டார் லட்சுமி. “இன்னிக்கு ஒரு எலிமினேஷன்தான் இருக்கு” என்ற அர்ஜுன் வெள்ளை மற்றும் கறுப்பு நிற கற்களை வைத்து அதிர்ஷ்ட முறையில் சோதிக்க ஆரம்பித்தார். டென்ஷன் தாங்காமல் தலையை கவிழ்த்துக் கொண்டார் உமாபதி.

ஆஹா... சரணிற்கு இரண்டாவது முறையாக அதிர்ஷ்டம் அடித்தது. கறுப்பு நிற கல் அவருக்கு வர அவர் ‘சேஃப்’. சரண் காப்பாற்றப்பட்டதை அறிந்ததும் ஐஸ்வர்யா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். (எமோஷனைக் குறை ஆத்தா!).

இரு அணிகளுக்கும் வாழ்த்து சொல்லி லட்சுமி விடைபெற்றதும் சரணின் அதிர்ஷ்டம் பற்றி சபையில் அர்ஜுன் விசாரிக்கும் போது “ஷாக்காத்தான் இருக்கு” என்று சொல்லி அனைவரையும் வெடித்து சிரிக்க வைத்தார் இனிகோ. “நான் சரணுக்குத்தான் வோட்டு போட்டேன்... அந்தப் பக்கம் லட்சுமி போனது சங்கடமா இருக்கு. அவங்க ஒரு நல்ல பிளேயர்" என்றெல்லாம் தன் அபிப்ராயங்களை வெளிப்படையாகவே பதிவு செய்தார் இனிகோ.

சர்வைவர் - 50
சர்வைவர் - 50

வேடர்கள் அணிக்கு ஏற்கெனவே இனிகோவின் மீது முழு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ரவியின் கமெண்ட் வேறு இதில் குழப்பத்தை அதிகரித்துவிட்டது. போதாக்குறைக்கு உமாபதியின் நட்பு வேறு வேடர்களுக்கு நெருடலை அளித்தது. என்றாலும் இதற்குப் பிறகான டாஸ்க்குகளில் இனிகோவின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்தவுடன் இனிகோ மீது சற்று நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் ஐஸ்வர்யாவும் சரணும் கடைசிவரை நம்ப தயாராக இல்லை.

இப்போதைய நிலைமை மீண்டும் குழப்பம்தான். ‘இம்யூனிட்டி ஐடலை’ யாரிடமும் சொல்லாமல் இனிகோ ஒளித்து வைத்திருந்ததைப் பற்றி நந்தாவும் நாராயணனும் அதிருப்தியுடன் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். “நாங்க உங்களை நம்பினோம். அதனால்தான் உங்களுக்கு சப்போர்ட்டா வாக்களிச்சோம். ஆனா எங்க மேல உங்களுக்கு இன்னமும் நம்பிக்கை வரலை. இல்லையா... சரி” என்றபடி நொந்து விலகிச் சென்றார் நந்தா.

வேடர்களிடம் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பங்களும் விரிசல்களும் அவர்களின் வெற்றியைப் பாதிக்குமா? இனி ஆட்டம் எந்த வகையில் செல்லும்?

பார்த்துடுவோம்.