Published:Updated:

சர்வைவர் - 51: மெயின் அணியில் அம்ஜத், விஜி... லட்சுமி நிரந்தர வெளியேற்றம் - தனிநபர் ஆட்டம் ஆரம்பம்!

சர்வைவர் - 51

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 51-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 51: மெயின் அணியில் அம்ஜத், விஜி... லட்சுமி நிரந்தர வெளியேற்றம் - தனிநபர் ஆட்டம் ஆரம்பம்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 51-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 51
நேற்றைய எபிசோடு மனதிற்கு நிறைவான நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. மூன்றாம் உலகம் கலைக்கப்பட்டு அதில் இருந்தவர்கள், மெயின் அணிக்கு திரும்பிய சம்பவம் உணர்வுபூர்வமானதாக இருந்தது.
லட்சுமிக்கு அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் சேர்ந்தே வந்தது. மூன்றாம் உலகத்திற்கு சென்ற கையோடு அணிக்கு அவர் திரும்ப நேர்ந்ததை அதிர்ஷ்டம் எனலாம். ஆனால் பிறகு நடந்த போட்டியில் தோற்று சர்வைவரில் இருந்து நிரந்தரமாக அவர் வெளியேறியது துரதிர்ஷ்டம்.
அம்ஜத் தனது தாய் வீடான வேடர்கள் அணியில் திரும்பியது நெகிழ்ச்சிகரமான தருணம். இதைப் போலவே விஜியும் காடர்கள் அணிக்குத் திரும்பியதும் மகிழ்ச்சியான விஷயம்.

ஆனால் – இந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியாதபடி ஒரு பிசிறு இருக்கிறது. ஆம், அது காயத்ரி. மூன்றாம் உலகத்தில் நீண்ட நாள்கள் சிரமப்பட்டு இருந்து, பல சவால்களில் வென்றாலும் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதை துரதிர்ஷ்டத்தின் உச்சம் எனலாம். அவரும் மெயின் அணிக்குத் திரும்பியிருந்தால் மகிழ்ச்சி முழுமை பெற்றிருக்கும்.

இந்த 51வது எபிசோட் ஆனது, கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தும் தருணங்களைக் கொண்டிருந்தது. ‘இரு அணிகளும் கலைக்கப்பட்டு இனி சர்வைவர் ஒரே குழுவாக மாறும்’ என்கிற அதிரடியான திருப்பத்தை இன்றைய பிரமோவில் அர்ஜுன் தெரிவித்திருக்கிறார்.

சர்வைவர் - 51
சர்வைவர் - 51

எனில் ‘வானத்தைப் போல’ அணியான காடர்கள் அணி இவ்வாறு செயல்படும் என்பதைப் பார்க்க வேண்டும்.

சர்வைவர் 51-ம் நாளில் என்ன நடந்தது?

வெள்ளை நிறக்கல் வந்து அதிர்ஷ்டத்தைப் பறித்துவிட்டதால் எலிமினேட் ஆன லட்சுமியை தனி விசாரணைக்கு அழைத்தார் அர்ஜுன். “கடைசிவரைக்கும் இருக்கணும்னுதான் ஆசை. ஆனா என்ன பண்றது. விளையாடிய வரை எனக்கு மகிழ்ச்சிதான்” என்ற லட்சுமியிடம் ‘மூன்றாம் உலகம்’ என்கிற அதிபயங்கர சீக்ரெட்டை அவிழ்த்தார் அர்ஜுன். ஆனால் இந்த மூன்றாம் உலகம் பற்றி அனைத்துப் போட்டியாளர்களுக்கும் ஒரு குன்சாக தெரியும் போலிருக்கிறது. என்றாலும் அர்ஜுன் சொல்லும்போது ‘இன்னாடா அவார்டா கொடுக்கறாங்க?' என்பது போல் ஓவர் மகிழ்ச்சியை செயற்கையாக காண்பிக்கிறார்கள்.

லட்சுமியும் அதே போன்ற முகபாவத்தைக் காண்பித்து “இந்த ஆட்டத்தை முழுமையாக முடிக்கலையேன்னு நெனச்சேன். தனி நபர் ஆட்டத்தில் என்னோட திறமை வெளிப்படலையேன்னு தோணுச்சு. எனக்கு அதிர்ஷ்டம்தான் உதவி செய்யலை. ஆனா கடின உழைப்பு நிச்சயம் உதவி செய்யும்” என்று பன்ச் டயலாக் பேசி மூன்றாம் உலகத்திற்குள் நுழைந்தார்.

அம்ஜத் ஏற்கெனவே திட்டமிட்ட தன் டிராமாவை ஆடத் துவங்கினாரோ என்னமோ, சிட் பண்டில் காசைப் போட்டு இழந்தவரைப் போல் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்க “ஹாய் ரமேஷ்... ஹாய் சுரேஷ்…’ என்கிற சாக்லேட் விளம்பரம் போல் லட்சுமியும் விஜியும் ஒருவரையொருவர் ஆச்சரியத்துடன் பார்த்து நலம் விசாரித்துக் கொண்டார்கள். (உலக நடிப்புடா சாமி!).

சர்வைவர் - 51
சர்வைவர் - 51

அணியில் நிகழ்ந்த விஷயங்களை லட்சுமி சொல்ல “இந்த சரண் எப்பவுமே லக்கி ஃபெல்லோ” என்று தன் பொறாமையைக் கொட்டினார் விஜி. “மூன்றாம் உலகத்தில் தூங்கி தூங்கித்தான் எழுந்திருக்கணும். போட்டி எப்பவாவதுதான் நடக்கும்” என்று விஜி சொன்னவுடன் மலையைப் புரட்டிப் போடும் உற்சாகத்துடன் வந்த லட்சுமி “ஐய்யோ... என்னால சும்மா உக்கார முடியாதே” என்கிற சலிப்பான முகபாவத்தைத் தந்தார்.

இரு அணிகளுக்கும் ஓலை வந்தது. ‘கா – பா – அஃக்’ என்று மூன்று ஆவிகள் இருக்கிறதாம். அது மனித உருவிலும் வருமாம். ஆவிகள் உருவிலும் இருக்குமாம். அவை வரமாகவும் அமையுமாம் அல்லது சாபமாகவும் அமையலாமாம். ‘மூன்றாம் உலக’ போட்டியாளர்கள் அணிக்குத் திரும்பவிருக்கும் சடங்கை இப்படி ‘உள்குத்தாக’ ஓலையில் எழுதியிருந்த ஸ்கிரிப்ட் ரைட்டருக்கு பாராட்டு.

‘ஒரு முக்கியமான சம்பவம் நடக்கப் போவுது. கிளம்பி வாங்க’ என்று ஓலை அவசரமாக அழைத்ததால், காது குத்துக்கு கிளம்பியது போல் இரு அணிகளும் ஊர்வலமாகக் கிளம்பிச் சென்றன. ‘வாங்க சர்வைவர்ஸ்’ என்று இரு அணிகளையும் வரவேற்று அமர வைத்தார் அர்ஜுன்.

“இதுவரை எட்டு பேர் எலிமினேட் ஆகியிருக்காங்க. யாரை ரொம்ப மிஸ் பண்றீங்க?” என்று அர்ஜுன் கேட்டதும் நாராயணனும் ஐஸ்வர்யாவும் அம்ஜத் பெயரைச் சொன்னார்கள். விஜியின் பெயரை சரண் சொன்னது சற்று ஆச்சரியமாக இருந்தாலும் நெகிழ்வாக இருந்தது. “என்னாலதான் அவங்க போக வேண்டியிருந்தது” என்று உருகினார் சரண். காஷ், லட்சுமியின் பெயரைச் சொன்னார். “உமாபதி... நீங்க யாரை மிஸ் பண்றீங்க... ராமையா?” என்று அர்ஜுன் கிண்டலடிக்க, "தலைவனை மறக்க முடியுமா” என்று சிரித்தார் உமாபதி.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே லட்சுமி, அம்ஜத், விஜி ஆகிய மூவரும் சபையில் நுழைந்து திடீர் சர்ப்ரைஸ் தந்தவுடன், ‘குஸ்காவில் லெக்பீஸ் கிடைத்தது போல்’ அனைத்துப் போட்டியாளர்களும் ஆச்சரியத்தில் வாய்பிளந்து உற்சாகத்தில் மகிழ்ச்சியடைந்தார்கள். “மூன்றாம் உலகம் மிக கொடுமையான ஏரியா. அனுபவிச்சாதான் தெரியும்” என்று அங்குள்ள பிரச்சினைகளை உருக்கமாகச் சொன்னார் விஜி. (நண்டு குழம்பை மறைத்துவிட்டது சாமர்த்தியம்).

சர்வைவர் - 51
சர்வைவர் - 51
“இவங்களை அணில சேர்த்துக்கலாமா?” என்று அர்ஜுன் கேட்டதும் "டபுள் ஒகே” என்று அனைவரும் கையைத் தூக்க “ஆனா இதுல ஒரு சிக்கல் இருக்கு. இதுல இருந்து ரெண்டு பேர் மட்டும்தான் அணிக்குத் திரும்ப முடியும்” என்று அந்த மகிழ்ச்சியில் நெருப்பைத் தூக்கிப்போட்டார் அர்ஜுன்.

“இப்ப வாக்கெடுப்பு நடக்கும். அதுல யாருக்கு அதிகம் ஓட்டு விழுதோ... அவங்க அணில நேரடியா சேருவாங்க. மீதமிருக்கிற ரெண்டு பேருக்கும் இடையில ஒரு போட்டி நடக்கும். அதுல ஜெயிக்கறவங்கதான் அணிக்குத் திரும்ப முடியும். தோற்றவர் நிரந்தரமாக வெளியேற்றப்படுவார்” என்று அர்ஜுன் தெரிவித்ததும் பரபரப்பு ஏற்பட்டது.

“இந்த மூணு பேர்ல யாருக்கு ஓட்டு போடப் போறீங்க?” என்று அர்ஜுன் வாக்கெடுப்பை ஆரம்பித்ததும் இரு அணியின் முகங்களிலும் சங்கடமும் தயக்கமும் பெருகி வழிந்தது. யாரை விட்டுக் கொடுத்தாலும் அது தப்பாகி விடும். என்ன செய்வது அவர்கள் விழிக்கும் போது ‘எமோஷனைக் குறைங்க. வேலையைப் பாருங்க” என்று அறிவுறுத்தினார் அர்ஜுன்.

அம்ஜத்தை நந்தா தேர்ந்தெடுத்தது நெகிழ்வான தருணம். உமாபதி விஜியைத்தான் தேர்ந்தெடுப்பார் என்பது அந்த ஆப்பிரிக்க தீவில் உள்ள அனைவருக்குமே தெரியும். ஆனால் அதில் அதிர்ச்சியான திருப்பம் தருவது போல் “அக்காவிற்கு இது புரியும். கால் அடிபட்டிருந்தாலும் காடர்கள் அணிக்காக விசுவாசத்துடன் விளையாடிய அம்ஜத்திற்கு வாக்களிக்கிறேன்” என்று உமாபதி சொன்னதைக் கேட்டு விஜி பயங்கர அதிர்ச்சியானார்.

சர்வைவர் - 51
சர்வைவர் - 51

லட்சுமியை காஷ் தேர்வு செய்ய, அம்ஜத்தை ஐஸ்வர்யா பாசத்துடன் தேர்ந்தெடுத்தார். விஜிக்கு ஒரு ஓட்டாவது வருமா என்று அவரே திகைத்து நிற்கும் போது நல்ல வேளையாக வனேசா வந்து காப்பாற்றினார். “நான் பிராயச்சித்தம் செய்ய விரும்புகிறேன்" என்கிற சென்டியான காரணத்தைச் சொல்லி விஜியைத் தேர்ந்தெடுத்தார் சரண். இந்த முடிவை அனைவருமே கைத்தட்டி பாராட்டினார்கள்.

நாராயணன் அம்ஜத்தைத் தேர்ந்தெடுத்தார். “அம்ஜத்தை வெளியில் அனுப்பியதால் கில்ட்டியாக இருக்கிறேன்” என்று முன்னர் உருகிய விக்ராந்த், இப்போது அம்ஜத்தைத் தேர்ந்தெடுப்பார் என்று பார்த்தால் அணிப்பாசத்தைக் காட்டி விஜியை அவர் தோந்தெடுத்தார். கடைசியாக வந்த இனிகோ லட்சுமிக்கு வாக்களித்தார். (இம்யூனிட்டி ஐடல் தந்து உதவிய பாசத்திற்காக).

ஆக... வாக்கெடுப்பின் முடிவில் அம்ஜத் அதிகபட்சமாக 4 வாக்குகளைப் பெற்றிருந்தார். விஜி 3 வாக்குகளும் லட்சுமி 2 வாக்குகளும் பெற்றிருந்தார்கள். ஆக பெரும்பான்மை வாக்கு பெற்ற அம்ஜத் அணிக்குத் திரும்புவார். “எந்த அணிக்குப் போகப் போறீங்க. காடர்களா... வேடர்களா?” என்று அர்ஜுன் கேட்க “இரு அணியிலுமே நான் உண்மையா இருந்திருக்கேன். ஆயிரம் இருந்தாலும் வேடர்கள் அணிதான் என் தாய் வீடு. காடர்கள் இதைப் புரிஞ்சுப்பாங்கன்னு தெரியும்” என்று அவர் சொன்னதும் ஐஸ்வர்யா மகிழ்ச்சியில் ஓடி வந்து இறுதிச்சுற்று கிளைமாக்ஸ் காட்சியை மீண்டுமொரு முறை செய்து காட்டினார்.

சர்வைவர் - 51
சர்வைவர் - 51

ஆக... லட்சுமியும் விஜியும் போட்டி போட வேண்டும். இருவரும் ஆளுக்கு ஓர் உதவியாளரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். முதலில் அழைக்கப்பட்ட லட்சுமி, புத்திசாலித்தனமாக உமாபதியை அழைத்துக் கொண்டார். "யாரை அழைக்கலாம்?” என்று விஜி சுற்றும் முற்றும் பார்க்கும் போது "என்னைக் கூப்பிடு” என்று ஐஸ்வர்யா சாடை செய்த காட்சி சுவாரஸ்யமானது. “எனக்கு அங்க இருந்துதான் சிக்னல் வருது. பாசிட்டிவ்வா இருக்கு. ஐஸ்வர்யாவைக் கூப்பிடறேன்” என்று விஜி முடிவு செய்த நேரம், நல்ல நேரமாக இருக்க வேண்டும்.

போட்டியைப் பற்றி விளக்கினார் அர்ஜுன். இதை பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். போட்டிகளும் அதற்காக செய்யப்படும் செட்அப் அமைப்புகளும் மிக அற்புதமாக இருக்கின்றன. இரண்டு மர உருளைகள், வெவ்வேறு திசைகளில் சரிவாக அமைக்கப்பட்டுள்ள பாதைகளின் வழியாக உருண்டு கீழே வரும். அந்த உருளை தரையில் படாதவாறு பிடிக்க வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து இதில் மூன்றாவது உருளை சேரும். இதைப் போல கடைசியில் ஐந்து உருளைகள் வரிசையாக வந்து கொண்டேயிருக்கும். போட்டியில் கலந்து கொள்ளும் இரு நபர்களும் உருளை கீழே விழாதவாறு பிடிக்க வேண்டும். யார் அதிக நேரம் இதில் தாக்குப் பிடிக்கிறாரோ, அவரே வெற்றியாளர்.

சர்வைவர் - 51
சர்வைவர் - 51

இத்தனை முக்கியமான ஆட்டத்தை தனிநபர் போட்டியாக வைத்திருக்கலாம். கூட இருப்பவரை நம்பி ஆடும் போட்டியாக வைத்திருக்கக்கூடாது. “யார் முதலில் விளையாடுகிறீர்கள்?” என்று கேட்ட போது குலுக்கலின் மூலம் தேர்ந்தெடுக்கலாம் என்றார் லட்சுமி. இதன்படி லட்சுமி + உமாபதி அணி முதலில் விளையாட தேர்வாகியது. இன்னொரு அணி வெளியே அனுப்பப்பட்டது. (உத்திகளை கற்றுக் கொள்வார்களாம்!).

இந்தப் போட்டி காலம், நேரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. உடல் வலிமையோடு மனவலிமையும் தாளகதியிலான ஒத்திசைவும் வேண்டும். இரண்டு போட்டியாளர்களும் சரியான புரிந்துணர்வோடு சீரான தாளகதியில் செயல்பட்டால் மட்டுமே அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியும்.

லட்சுமியும் உமாபதியும் ஆட ஆரம்பித்தார்கள். முதல் இரண்டு உருளைகள் வரை பிரச்னையில்லை. மூன்றாம் உருளை இணைத்த பிறகு இருவரும் வேகமாக ஓட வேண்டியிருந்தது. நான்காவது உருளையைத் தாண்டி ஐந்தாவது உருளையையும் வைக்கும் அளவிற்கு இவர்கள் திறமையாக விளையாடினார்கள். ஒரு கட்டத்தில் ஏறத்தாழ கீழே விழப்போன உருளையை பாய்ந்து வந்து உமாபதி கேட்ச் பிடித்த காட்சி அற்புதம். (கேமரா வொர்க் வழக்கம் போல் அசத்திவிட்டார்கள்).

சர்வைவர் - 51
சர்வைவர் - 51
ஆனால் இந்த இடத்தில்தான் லட்சுமி தவறு செய்தார். உமாபதி உருளையை தவற ட்டு விட்டாரோ என்று நினைத்து தான் ஆடுவதை நிறுத்தி விட அடுத்த உருளை மடமடவென்று பாய்ந்து கீழே விழுந்துவிட்டது. ஆக லட்சுமி தோல்வி.

‘உமாபதியை தேர்வு செய்தது தவறான சாய்ஸோ’ என்று லட்சுமி பிறகு யோசித்துக் கொண்டிருந்தார். உமாபதியிடம் வழக்கமாக இருக்கும் வேகமும் விவேகமும் இன்று அவ்வளவாக இல்லையாம். போட்டியின் நடுவிலேயே இந்த வீடியோவைக் காண்பிக்கும் போது முடிவு எப்படியாக இருக்கும் என்பதை அப்போதே யூகித்து விட முடிகிறது. இதை சர்வைவர் டீம் தவிர்க்கலாம்.

சர்வைவர் - 51
சர்வைவர் - 51

“நல்ல வேளை. லட்சுமியோட தவறினால்தான் தோல்வி ஏற்பட்டது. இல்லையென்றால் விஜிக்கு வாய்ப்பளிக்கத்தான் நான் வேண்டுமென்றே தோற்றேன் என்கிற கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கலாம்” என்று பெருமூச்சு விட்டார் உமாபதி. இந்த அணி 6 நிமிடம் 29 நொடிகள் நேரத்திற்கு தாக்குப் பிடித்திருந்தது. எனவே அடுத்து வரும் விஜி + ஐஸ்வர்யா ஜோடி இதை விடவும் கூடுதலாக ஒரு நொடி தாக்குப் பிடித்தால் வெற்றி.

“விஜிக்கு எப்படியாவது இந்த வெற்றியை வாங்கித் தரணும்னு விரும்பினேன்”என்றார் ஐஸ்வர்யா. (லட்சுமி மேல் கொலைவெறியோ?!) இந்த அணி களத்தில் இறங்கியது. ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. மூன்றாவது உருளையை சரியான நேரத்தில் போடாமல் விஜி தாமதம் செய்துவிட்டார். அறியாமல் நிகழ்ந்த பிழையோ? லட்சுமி இதை ஆட்சேபிக்க, ‘10 நொடிகள் பெனால்ட்டி’ என்று அறிவித்தார்.

சர்வைவர் - 51
சர்வைவர் - 51

இன்னொரு சமயத்தில் ஐஸ்வர்யா உருளையை உருட்டி விட சில நொடிகள் தாமதித்தார். இந்தப் போட்டியை பரபரப்பாக பார்த்துக் கொண்டிருந்த இரு அணிகளும் தலையைப் பிய்த்துக் கொண்டன. சிறிய பிசகு ஏற்பட்டாலும் கூட தோல்விதான். ஆனால் பார்வையாளர்களின் ஆதரவு இந்த ஜோடிக்கு அதிகமாக இருக்கவே, அபராத நொடிகளையும் சேர்த்து எக்ஸ்ட்ராவாக செய்து முடிக்க... ஐஸ்வர்யாவின் உதவியால் விஜி அமோகமாக வெற்றி பெற்றார். இந்த அணி 6 நிமிடம் 40 நொடிகள் போட்டியில் இருந்தது. ஐஸ்வர்யாவிற்கு மனமார்ந்த நன்றிகளைச் சொன்னார் விஜி. (உமாபதி இந்தச் சமயத்தில் தலையைக் கவிழ்ந்து கொண்டார்).

“எந்த அணியில் சேரப் போறீங்க?” என்று விஜியிடம் கேட்கப்பட்ட போது “இது என்ன கேள்வி?. எப்போதுமே நான் காடர்கள் அணிதான். இதுதான் என் தாய் வீடு” என்று அந்தப் பக்கம் சென்றதும் விஜியை அனைவரும் அரவணைத்துக் கொண்டார்கள். மஞ்சள் நிற தலைத்துணியை விஜியின் தலையில் வைத்து அழகு பார்த்தார் உமாபதி. “இந்த தருணத்திற்காகத்தான் நான் மூன்றாம் உலகத்தின் அனைத்துக் கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டேன்” என்று நெகிழ்ந்தார் விஜி.

சர்வைவர் - 51
சர்வைவர் - 51

“எனக்கு வருத்தமில்லை. நல்லா விளையாடினேன். மகிழ்ச்சி” என்று கிளம்பிய லட்சுமிக்கு அனைவரும் பிரியாவிடை தந்தார்கள்.

ஆக... அம்ஜத்தும் விஜியும் அவரவர்களின் தாய் அணிக்குத் திரும்பி விட்டார்கள். ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்கிற தத்துவம் மறுபடியும் நிரூபணம் ஆயிற்று.
சர்வைவர் தனிநபர் ஆட்டமாக மாறப் போகிற நிலையில், அணிப்பாசமெல்லாம் இனி என்னவாகும்?

பார்த்துடுவோம்.