Published:Updated:

சர்வைவர் - 52: கொம்பர்களின் புதிய தலைவர் விக்ராந்த்... இனிகோ - ஐஸ்வர்யா கடந்த காலத்தை மறப்பார்களா?!

சர்வைவர் - 52

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 52-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 52: கொம்பர்களின் புதிய தலைவர் விக்ராந்த்... இனிகோ - ஐஸ்வர்யா கடந்த காலத்தை மறப்பார்களா?!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 52-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 52
சர்வைவர் போட்டியின் மிக முக்கியமான திருப்பம் இந்த எபிசோடில் நிகழ்ந்தது. ஆம், வேடர்கள், காடர்கள் என்கிற இரு அணிகளும் கலைக்கப்பட்டு ஒரே குழுவாக ஐக்கியமாகி ‘கொம்பர்கள்’ என்கிற புதிய நாமகரணம் சூட்டப்பட்டது. (அப்ப இத்தனை நாள் வேடிக்கை பார்த்த நாம?!).

ஆக... சர்வைவர் விளையாட்டு இனி தனிநபர் ஆட்டமாக மாறும். ஒவ்வொருவரும் தனக்கான உத்திகளை சுதந்திரமாக வடிவமைத்துக் கொள்ளலாம். எனில் சண்டைகளும் துரோகங்களும் இன்னமும் அதிகமாக உற்பத்தியாகும். ‘வானத்தைப் போல அணி’ உடைக்கப்பட்டதுதான் இதில் இருப்பதிலேயே ஜாலியான விஷயமாகத் தெரிகிறது.

‘கொம்பர்கள்’ என்று அறிவிக்கப்பட்டு விட்டாலும் இரு அணிகளாலும் இன்னமும் மனம் மாற முடியவில்லை. ஏ செக்ஷனில் அமர்ந்திருந்த மாணவர்கள் சிலரை இடம் மாற்றி பி செக்ஷனில் அமர வைத்ததுபோல் ஒட்டாமலேயே உர்ர்ர்ர்... என்று முகத்தை வைத்தபடி இருந்தார்கள்.

இனிகோ மற்றும் ஐஸ்வர்யாவிற்கான மறைமுக சண்டைகள் முடிந்து நேரடியான முட்டல்கள் ஏற்படுவதற்கான அடையாளங்கள் ஆரம்பித்திருக்கின்றன.

சர்வைவர் - 52
சர்வைவர் - 52

சர்வைவர் 52-ம் நாளில் என்ன நடந்தது?

“விஜியும் அம்ஜத்தும் அவங்கவங்க அணிக்குத் திரும்பிட்டாங்க... ஹேப்பிதானே?” என்று விசாரித்த அர்ஜுன், அடுத்த வாக்கியத்திலேயே ஒரு வெடிகுண்டை தூக்கிப் போட்டார். “எல்லாக் கோட்டையும் அழிங்க. நான் முதல்ல இருந்து சாப்பிடறேன்” என்கிற பரோட்டா காமெடி போல, “இனி காடர்கள், வேடர்கள் என்கிற அணிகள் கலைக்கப்படும். இனி நீங்கள் ஒரே குழுவாகச் செயல்படுவீர்கள். தனிநபர் ஆட்டமாக இது இருக்கும்” என்று சொல்லப்பட்டவுடன் அனைவருக்கும் அதிர்ச்சி. ஆனால் விளையாட்டு இப்படித்தான் பயணிக்கும் என்பது எல்லோருக்கும் உள்ளூற தெரியும்.

"இனி மேல் நீங்கள் ‘கொம்பர்கள்’ என்று அழைக்கப்படுவீர்கள்” என்று புதிய பெயரைச் சூட்டினார் அர்ஜுன். (சர்வைவரில் கலந்து கொண்டவர்களை "நீ என்ன கொம்பனா?” என்று இனிமேல் யாரும் கேட்டுவிட முடியாது!). தமிழ்நாட்டில் பல வருடங்களுக்கு முன்பு ‘கொம்பர்கள்’ என்கிற ஆதிவாசி இனம் இருந்ததாகவும் அவர்கள் யானைகளை அடக்கி ஆள்வதில் திறமைசாலிகளாக இருந்ததாகவும் அர்ஜுன் ஒரு தகவலைச் சொன்னார்.

“உங்களோட தலைத்துணியையெல்லாம் தூக்கிப் போடுங்க. தோய்ச்சு ரொம்ப நாளாகியிருக்கும். இனிமே மஞ்சள், சிவப்புலாம் கிடையாது. நீலம்தான் இனிமே உங்க கலர்” என்று அதற்கான துணிகளை தூக்கிப் போட்டார் அர்ஜுன். தங்களின் அழுக்குத் துணிகளை இழக்க விரும்பாத பலரும், ஆசையாக அதை முகர்ந்து பார்த்துவிட்டு பின்பு தூக்கி எறிந்தார்கள். (இன்னா ஃபீலிங்க்ஸா?!).
சர்வைவர் - 52
சர்வைவர் - 52

ஒரே குழுவாக அமர்ந்திருந்தவர்களிடம் இனிகோவை மட்டும் டார்கெட் செய்தார் அர்ஜுன். “என்ன இனிகோ... பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் நடுவுல அல்லாடிக்கிட்டு இருந்த ஒரே ஆள் நீங்கதான். இனி எப்படியிருக்கும்?” என்று அவர் ஜாலியாக விசாரிக்க “கூட்டுக்குடித்தனம்னு முடிவாகிடுச்சு. இனிதான் பிரச்னைகள் அதிகமாகும்” என்கிற யதார்த்த உண்மையை இனிகோ போட்டு உடைக்க சபை வெடித்து சிரித்தது.

“ஓகே... இனிமே நீங்க 'வேடர்கள்’ தீவில் இருப்பீங்க...” என்று சொன்ன அர்ஜுன் விடைபெற்றுச் சென்றார். நள்ளிரவில் அனைவரும் தீவிற்குச் சென்று இறங்கினார்கள். “அந்தத் தீவை மிஸ் பண்ற மாதிரி இருக்கு. இந்தப் புது எடத்துல எப்படி கனெக்ட் ஆகப் போறேன்னு தெரியல” என்று அனத்தினார் லேடி காஷ். கேம்ப் ஃபயர் அமைத்து அனைவரும் குளிர்காய ‘வசீகரா’ பாடலை அழகாகப் பாடினார் காஷ்.

ஓலை வந்தது. இந்த வாரத் தலைவருக்கான போட்டி. இதில் நான்கு நபர்கள் போட்டியிடுவார்கள் என்கிற தகவல் இருந்தது. தலைவன் என்பவன் முன்னோடியாக இருக்க வேண்டுமாம். அதுதான் இந்த வாரத் தலைவருக்கான தகுதி. “நான் போட்டியிடறேன்” என்று ஐஸ்வர்யா உடனே முன்வந்தார். “நான் லீடரா இருந்தப்ப செஞ்ச சில தவறுகளையெல்லாம் திருத்திக்க விரும்பறேன்” என்பது அவர் சொன்ன காரணம். ஆனால் மற்ற எவருமே போட்டியிட முன் வரவில்லை. “நீங்க போங்களேன்... நீங்கதான் போங்களேன்” என்கிற காமெடி மாதிரி ஒதுங்கி நின்றார்கள். விஜி அரைமனதாக சம்மதித்தார். "மிச்ச ரெண்டு பேரை அங்க போயி பார்த்துக்கலாம்” என்று கிளம்பினார்கள்.

சர்வைவர் - 52
சர்வைவர் - 52
ஒரே குழுவாக மாற்றப்பட்டு விட்டாலும் இரண்டு அணிகளும் இன்னமும் மனதளவில் தனித்தனியாகவே இருக்கிறார்கள் என்பது அர்ஜுனின் விசாரணையில் தெரிய வந்தது. “இப்போதான் வந்திருக்கோம். கொஞ்சம் டைம் ஆகும்” என்கிற யதார்த்த காரணத்தைச் சொன்னார் லேடி காஷ்.

‘’வனேசாவை இளநீரில் குளிப்பாட்டுவேன்” என்று கவிதைத்தனமாக இனிகோ சொன்னாராம். “என்னவே... கதை அப்படிப் போகுதா?” என்று இனிகோவை கிண்டலடித்தார் அர்ஜுன். இனிகோ அணிந்திருந்த டீஷர்ட்டில் ‘V’ என்கிற எழுத்து வேறு இருக்க, கிண்டல் கூடிக்கொண்டே சென்றது. ‘அது விக்ராந்த்’ என்று சமாளித்தார் இனிகோ. “அப்படியல்லாம் இல்லை. இனிகோ சாதாரணமா சொன்னதை உமாபதிதான் ஏத்தி விடறாரு” என்ற வனேசா, பிறகு அநியாயத்திற்கு வெட்கப்பட்டார்.

அடுத்து ஐஸ்வர்யாவை விசாரித்தார் அர்ஜுன். “இன்னும் sync ஆகலை சார்” என்று அவர் சொல்ல, படு ஜாலியான மூடில் இருந்த அர்ஜுன், “யார் கூட இன்னும் sync ஆகலை?” என்று ரகளையாக கிண்டலடித்தார். “நான் ரெண்டு டிரைப்லயும் இருந்திருக்கேன். எனக்கு பிரச்னையில்லை” என்றார் சரண்.

சர்வைவர் - 52
சர்வைவர் - 52

“ஓகே. இந்த வாரத் தலைவர் போட்டிக்குப் போகலாம். இதில் இரண்டு ஜோடிகள் முதலில் போட்டியிட வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் மூன்றாவது போட்டியில் மோதுவார்கள். இதில் வெல்பவர்தான் ‘கொம்பர்களின்’ புதிய தலைவர் என்று போட்டியைப் பற்றி அறிவித்தார் அர்ஜுன். கேரமையும் பௌலிங்கையும் கலந்து செய்த விளையாட்டைப் போல் அது இருந்தது. ஒரு பெரிய மேஜையில் மூன்று தடைகள் இருக்கும். போட்டியாளர்கள் தங்களிடமுள்ள தட்டுகளை வைத்து தள்ளிவிட வேண்டும். அது மேஜையின் முனையில் உள்ள சாம்பல் பகுதியில் சரியாக நின்று விட்டால் ஒரு பாயிண்ட் கிடைக்கும்... கீழே விழுந்து விட்டாலோ, கிரே ஏரியாவில் நிற்காவிட்டாலோ பாயிண்ட் கிடைக்காது. முதலில் மூன்று பாயிண்ட் எடுப்பவர் வெற்றியாளர்.

பார்ப்பதற்கு எளிய போட்டியாக இருந்தாலும் நீண்ட நேரத்தை எடுப்பதாக இது இருந்தது. முதலில் ஐஸ்வர்யாவும் விஜியும் களத்தில் இறங்கினார்கள். ஐஸ்வர்யா எப்போதுமே துடிப்பாகச் செயல்படுவார். ஆனால் அவரிடமிருந்த வேகம்தான் இதற்கு தடையாக இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் அவர் சுதாரித்துக் கொண்டு முதல் பாயிண்டை எடுத்தார். பிறகு அடுத்த பாயிண்ட்டையும் எடுத்துவிட ஆட்டம் சூடு பிடித்தது. “நான் மட்டும் தக்காளி தொக்கா?” என்று விஜியும் அடுத்து இரண்டு பாயிண்டுகளை எடுத்தார். ஐஸ்வர்யாவோடு ஒப்பிடும்போது விஜியின் வேகம் மிதமாகவும் சாதுர்யமாகவும் இருந்தது. ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா 3வது பாயிண்ட்டை எடுத்துவிட அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அடுத்ததாக விக்ராந்த் – நாராயணன் ஜோடி களத்தில் இறங்கியது. முதல் சுற்றில் ஆடிய விஜியும் ஐஸ்வர்யாவும் தட்டுகளை நேராகத் தள்ளி விளையாடினார்கள். ஆனால் நாராயணன் இதில் ஒரு புதிய உத்தியைக் கடைப்பிடித்தார். மேஜையின் பக்கவாட்டுப் பக்கத்தில் அடிப்பதின் மூலம் தடைகளின் இடைவெளி வழியாக தட்டு செல்லுமா என்பதை அவர் முயற்சி செய்து பார்த்தார். ஆனால் பலமுறை முயன்றும் அவரால் இயலவில்லை.

சர்வைவர் - 52
சர்வைவர் - 52

இதே பாணியைப் பயன்படுத்திய விக்ராந்த் மிக எளிதாக மூன்று தட்டுகளையும் கிரே ஏரியாவில் நிறுத்தி வெற்றி பெற்றார். “என்னய்யா... வீட்ல பிராக்டிஸ் பண்ணிட்டு வந்துட்டியா?” என்று விக்ராந்த்தைலக் கிண்டலடித்தார் அர்ஜுன்.

அடுத்ததாக இறுதிப் போட்டி, தலைவரைத் தீர்மானிக்கும் போட்டி. இதில் ஐஸ்வர்யாவும் விக்ராந்த்தும் மோதினார்கள். ஏற்கெனவே சொன்னது போல் ஐஸ்வர்யாவின் வேகம்தான் அவருக்கு பின்னடைவை அளித்தது. அவர் தள்ளும் தட்டுகள் மேஜையைத் தாண்டி கீழே விழுந்தன. சற்று மிதமாகத் தள்ளியிருந்தால் அது இலக்கில் சரியாக நின்றிருக்கக்கூடும்.

முதல் ஆட்டத்தில் நன்கு பயிற்சி பெற்றுவிட்ட விக்ராந்த், மிக எளிதாக மூன்று பாயிண்ட்டுகளை எடுத்து விட, அவர்தான் நிச்சயம் வெற்றி பெறுவார் என்கிற நிலை ஏற்பட்டது. ஆனால் சுதாரித்துக் கொண்ட ஐஸ்வர்யா, குறுகிய நேரத்தில் மூன்று பாயிண்ட்டுகளை எடுத்து விக்ராந்த்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் இருவருமே சமநிலையில் இருந்தார்கள். ஐந்தாவது பாயிண்ட்டை யார் எடுப்பாரோ அவரே வெற்றியாளர். ஆட்டத்தில் பரபரப்பும் சூடும் ஏறியது.

ஐஸ்வர்யா தள்ளிவிட்ட தட்டு மேஜையின் நுனிக்குச் சென்று பிறகு தயங்கி கீழே விழுந்ததை துரதிர்ஷ்டம் எனலாம். இன்னொரு சமயத்தில் தன்னுடைய தட்டுகளை தானே சேம் சைட் கோல் அடித்து அவை கீழே விழுவதற்கு ஐஸ்வர்யாவே காரணமாக இருந்தார். அடுத்து விக்ராந்த் அடித்தது மிகச்சரியாக இலக்கில் நின்றதால் அவரே வெற்றியாளர். "அப்படி போட்றா தெறிக்க...” என்று உற்சாகத்தில் அர்ஜுன் கத்தியது சுவாரஸ்யம்.

சர்வைவர் - 52
சர்வைவர் - 52
ஆக... கொம்பர்களின் புதிய தலைவர் விக்ராந்த். “உங்களுக்கு சில கூடுதல் சலுகைகள் இருக்கு. உங்க கூடாரத்திற்குள்ள சில விஷயங்கள் இருக்கும். நீங்கதான் பார்க்கத் தவறிடறீங்க” என்று எச்சரிக்கை மணி அடித்தார் அர்ஜுன். பிறகு ஒரு ரகசிய ஓலையை தலைவரிடம் ஒப்படைத்தார்.

தீவிற்குத் திரும்பியதும் தனியான இடத்தில் ஓலையைப் பிரித்து வாசித்தார் விக்ராந்த். டிரைபல் பஞ்சாயத்தில் வாக்கெடுப்பு நடக்கும் போது ஒரு வாக்கை விக்ராந்த்தினால் பிளாக் செய்ய முடியும். அது தொடர்பான சலுகைதான் அந்த ஓலையில் இருந்தது.

‘இந்த விஷயத்தை ரகசியமாக வைத்துக் கொள்ளவும்’ என்கிற குறிப்பு இருந்தாலும் உமாபதி மற்றும் இனிகோவிடம் இந்த விஷயத்தை உடனே சொல்லிவிட்டார் விக்ராந்த். (ஓட்டை வாய்ப்பா உனக்கு!). “அப்படின்னா இதை வெச்சு நம்ம நாத்தனாரை முதல்ல தூக்கிடலாம். ஒரே சேட்டை செய்யுது” என்று ஐஸ்வர்யா குறித்து இனிகோ கிண்டலடிக்க மூவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

சர்வைவர் - 52
சர்வைவர் - 52

இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா “இனிகோ மேல நம்பிக்கையில்லன்னு ரவியண்ணா ஏற்கெனவே சொன்னாரு. எனக்கும் இவர் மேல ஆரம்பத்துல இருந்தே நம்பிக்கையில்ல. இங்க இருக்கும் போது நந்தா கிட்ட ஒட்டறது. அங்க இருக்கும் போது விக்ராந்த் கூட ஒட்டிக்கறது. அப்படின்னா இவர்கிட்ட தனித்தன்மையே இல்லையா... பச்சோந்தி மாதிரி இடத்துக்கு ஏத்த மாதிரி மாறிடறாரு” என்று கடுமையான விமர்சனங்களை வைத்தார் ஐஸ்வர்யா.

“நம்ம கூட பேசவே மாட்டேன்றாரு” என்று வருத்தப்பட்டார் சரண். நந்தாவும் நாராயணனும் புத்திசாலித்தனமாக அமைதியாக இருந்தார்கள். இனிமேல் இந்த ஆட்டம் தனிநபர் பாதையில் பயணிக்கப் போகிறது. ஐஸ்வர்யா இனியும் பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருக்காமல் தூக்கிப்போட்டுவிட்டு தன் ஆட்டத்தில் ஃபோகஸ் செய்யலாம்.
சர்வைவர் - 52
சர்வைவர் - 52

ஆனால் அவரால் அப்படி இருக்க முடியவில்லை. இனிகோ திரும்பி வந்ததும் அவரிடம் காரசாரமான மோதலை ஆரம்பிக்க “நீங்கதான் சொல்லிட்டீங்கள்லே... எனக்கு எதிராத்தான் ஓட்டு போடுவேன்னு... அப்புறம் எப்படி நான் உங்ககிட்ட இயல்பா பேச முடியும். நான் குளிக்கப் போகணும்” என்று இனிகோ கழன்று கொள்ள முயன்றாலும் வம்படியாக மறுபடியும் அவரை அழைத்து மறுபடியும் ஐஸ்வர்யா பேச முயலும்போது, "திரும்பத் திரும்ப ஏன் இதைப் பேசணும்” என்று சலிப்புடன் எழுந்து சென்றுவிட்டார் இனிகோ.

பழைய கதைகளைப் பேசுவதில் உபயோகமில்லை என்று இனிகோ நினைப்பது சரியே. இனி ஆட்டத்தின் புதிய போக்கில் கவனம் செலுத்துவதுதான் சரி. ஆனால் இனிகோவிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அது புறம் பேசுதல். அவரால் வேடர்கள் அணியுடன் ஒட்ட முடியவில்லை. அதற்கான நியாயமான காரணங்கள் இருக்கலாம். சில விஷயங்களை அவர் நேரடியாகவே பேசி விடுவதும் நல்ல விஷயம்தான். ஆனால் தான் சார்ந்திருந்த அணியை சமயங்களில் எல்லை மீறி அவர் கிண்டலடித்துப் பேசுவதுதான் நெருடலாக இருக்கிறது.

சர்வைவர் - 52
சர்வைவர் - 52
காடர்களும் வேடர்களும் மனதளவில் அவரவர்களின் கூடாரங்களில் இருந்தாலும் இந்த ஆட்டம் இனியும் அவர்களை அப்படி இருக்க விடாது. அவர்களுக்குள்ளேயே நிச்சயம் மோதல் நிகழும். இனி ஆட்டம் எப்படி இருக்கும்?

பார்த்துடுவோம்.