Published:Updated:

சர்வைவர் - 55: வெகுமதியாகக் கிடைத்த சொகுசு வாழ்க்கை... `புஸ்வாணம்’ வனேசா!

சர்வைவர் - 55

தனிநபர் ஆட்டம் என்பதால் இந்த வாரத்தின் ‘இம்யூனிட்டி சவால்’ எப்படி இருக்கும்? தனியாகவா அல்லது அணியாகவா? யார் வெளியேறுவார்? - இப்படிக் கேள்விகளும் குழப்பங்களும் அனைவரின் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தன.

Published:Updated:

சர்வைவர் - 55: வெகுமதியாகக் கிடைத்த சொகுசு வாழ்க்கை... `புஸ்வாணம்’ வனேசா!

தனிநபர் ஆட்டம் என்பதால் இந்த வாரத்தின் ‘இம்யூனிட்டி சவால்’ எப்படி இருக்கும்? தனியாகவா அல்லது அணியாகவா? யார் வெளியேறுவார்? - இப்படிக் கேள்விகளும் குழப்பங்களும் அனைவரின் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தன.

சர்வைவர் - 55

போட்டிகள் நடக்காத சாதாரண நாள்களில் எதையாவது காட்டி ஒப்பேற்ற வேண்டிய நிலையில் சர்வைவரும் இருக்கிறது. அதற்கான உதாரண எபிசோட் இது.

தீபாவளி பட்டாசுகளை வைத்து போட்டியாளர்களுக்குள் கோள்மூட்டி விடுவது, நள்ளிரவில் இனிகோ அள்ளிவிட்ட பேய்க்கதைகள் போன்றவற்றை இட்டு நிரப்பி இந்த எபிசோடை சமாளித்தார்கள்.

ஆனால் இந்த வாரம் நடக்கப் போகும் ‘இம்யூனிட்டி சவால்’ முக்கியமானது. தனிநபர் ஆட்டமாக மாறியிருக்கும் சூழலில், இந்தப் போட்டி எவ்வாறு இருக்கும் என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருக்கிறது.

சர்வைவர் 55-ம் நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் - 55
சர்வைவர் - 55

தங்களுக்குத் தரப்பட்ட கரன்ஸியை வைத்துக் கொண்டு உமாபதியும் சரணும் ஷாப்பிங் கிளம்பினார்கள். ‘அதே டெய்லர்… அதே வாடகை’ என்பது போல, ‘அதே கடைக்காரர், அதே கடை’ இருந்தது. கொசுறு தரும் பழக்கமெல்லாம் ஆப்பிரிக்கத் தீவுகளில் இல்லை போலிருக்கிறது. கடைக்காரர் உஷாராக ‘நோ... நோ’ என்றார். கறிகாய் வாங்கியது ஓகே. ஆனால் இவர்கள் டூத்பிரஷ் வாங்கியது ஏனென்று தெரியவில்லை. தீவில் கிடைக்கும் பொருள்களை வைத்துதான் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பது சர்வைவரின் அடிப்படையான விதிகளுள் ஒன்று. இத்தனை நாள்கள் கடந்தும் மரக்குச்சியில் பல் விலக்குவதை இவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது.

சர்வைவர் - 55
சர்வைவர் - 55

“எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்குது. நான் சரியா விளையாடாததால்தானே நீயும் விளையாட முடியாமப் போச்சு. ஓவர் கான்பிடன்ஸா இருந்துட்டேன். இனிமே பதற்றப்பட மாட்டேன்... சாரி” என்று இனிகோவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. மிக ஆரோக்கியமான அணுகுமுறை இது. ‘ஒண்ணும் பிரச்னையில்ல. பதற்றப்படும் போது பாதி பவர்தான் வெளியே வரும். ஆட்டத்துல இதெல்லாம் சகஜம்தான்” என்று இனிகோ ஆறுதல் சொல்ல, இருவரின் மனஸ்தாபங்களும் அந்த நொடியில் பெரும்பாலும் கரைந்து விட்டன.

தங்களுக்கு வெகுமதியாக கிடைத்த சொகுசு வாழ்க்கைக்கு, உமாபதி, சரண், விஜி, நந்தா ஆகிய நால்வரும் கிளம்பினார்கள். “நான் ஜெயிச்சிருந்தா கெஸ்ட்டா வனேசாவை கூப்பிட்டு போயிருப்பேன். பாவம் சின்னப்புள்ள” என்று வழிந்தார் இனிகோ. (என்னவே நடக்குது இங்க?!).

‘லக்ஸரி ஸ்பா’ என்றவுடன் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரேஞ்சிற்கு விருந்தோம்பல் நடக்கும் என்று பார்த்தால் கரையோரமாக நாலு படுக்கைகளை போட்டு வைத்திருந்தார்கள். மூலையில் இரண்டு பழரச பாட்டில்கள். “கொரானோ வார்டு மாதிரி இருக்கு” என்று கிண்டலடித்தார் உமாபதி. பழங்களை மொக்க ஆரம்பித்த உமாபதியிடம் “மசாஜ் செஞ்சப்புறம்தான் சாப்பிடணும்” என்று தலையில் கொட்டி அழைத்துச் சென்றார் விஜி.

சர்வைவர் - 55
சர்வைவர் - 55

நால்வரும் படுக்கையில் படுத்திருக்க, ஆப்பிரிக்க பெண்கள், இவர்களின் உடம்பை அழுத்தி நீவி விட, அந்த சொகுசில் அப்படியே கண் அயர்ந்து விட்டார்கள். இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வனேசா உள்ளிட்ட குழு ரகளையாக சிரித்து கிண்டலடித்துக் கொண்டிருந்தது. “வாழ்வுதான்..." என்கிற மாதிரி வனேசா கிண்டலடிக்க, வெட்கம் தாங்காமல் கண்களை மூடிக் கொண்டார் உமாபதி.

பிறகு இன்னொரு மூலையில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த ஷவரில் குளித்தார்கள். “ஏறத்தாழ ஐம்பது நாள்களுக்கு அப்புறம் இப்பத்தான் ஷாம்பு, சோப்புல்லாம் போட்டு முறையா குளிக்கறேன்” என்றார் விஜி. நகரத்தின் செயற்கை வசதிகள் நமக்குள் எவ்வளவு ஊறிப் போயிருக்கின்றன என்பதற்கு இது அடையாளம். இயற்கையான விஷயங்கள் மனவிலகலைத் தருகின்றன.

இவர்கள் தீவிற்குத் திரும்பிய போது நல்ல மழை. கூடாரத்திற்குள் தண்ணீர் வந்தது. “உங்க தீவுல டென்ட் வசதியெல்லாம் சிறப்பா செஞ்சிருக்கோம்” என்று அர்ஜுன் சொன்னதற்கு அர்த்தம் இதுதான் போலிருக்கிறது. உள்ளே படுத்தபடியே குளிக்கலாம்.

“வாங்க மக்களே... பட்டாசு வெடிச்சு தீபாவளியை சிறப்பா கொண்டாடலாம்” என்று ஓலை வந்திருந்தது. ஆனால் இவை வில்லங்கமான பட்டாசுகள். அணுகுண்டு, புஸ்வாணம், ராக்கெட், பாம்பு ஆகிய நான்கு வகை பட்டாசுகளின் புகைப்படங்களை வைத்து அதற்குப் பொருத்தமான போட்டியாளர்கள் யாரென்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டுமாம். அணிகள் உடைக்கப்பட்டு தனிநபர் ஆட்டமாக இது மாறியிருக்கும் சூழலில், இவர்களுக்குள் கலகம் பிறந்தால்தான் ஆட்டம் சூடு பிடிக்கும் என்பது சர்வைவர் டீமின் நோக்கமாக இருக்கலாம். "பத்த வெச்சுட்டாய்ங்களா?” என்று சிரித்தார் அம்ஜத்.

சர்வைவர் - 55
சர்வைவர் - 55
‘புஸ்வாணம்’ என்கிற பட்டாசுக்கு சொல்லி வைத்தாற் போல அனைவருமே வனேசாவைத் தேர்ந்தெடுத்தார்கள். குறிப்பாக நான்கு குச்சிகளை வைத்து அவர் கம்பு கட்டிய அழகை நினைவுகூர்ந்த இவர்கள் “விட்டிருந்தா இப்பக்கூட அதை முடிச்சிருக்க மாட்டாங்க” என்று ரகளையாக கிண்டலடிக்க, அனைவரின் கிண்டலையும் முகம் சுளிக்காமல், வெட்கச் சிரிப்புடன் ஏற்றுக் கொண்டார் வனேசா.

ராக்கெட் என்பதற்கு பெருவாரியான வாக்குகள் உமாபதிக்கு வந்திருந்தது பொருத்தமே. முதலில் சைலன்ட்டாக இருந்து பிறகு வயலென்ட்டாக வெடிக்கும் அணுகுண்டு தேர்விற்கு விக்ராந்த் மற்றும் இனிகோவிற்கு சமமான வாக்குகள் வந்திருந்தன. எனவே மறுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் விக்ராந்த் வென்றார்.

சர்வைவர் - 55
சர்வைவர் - 55

இருப்பதிலேயே வில்லங்கமான பட்டம் ‘பாம்பு பட்டாசு’தான். விஷத்தை உள்ளே வைத்துக் கொண்டு கொட்டிக்கொண்டே இருக்குமாம். இதை தானே ஏற்றுக் கொண்ட விஜி அதற்கு அளித்த விளக்கம் நன்றாக இருந்தது. இதைப் போலவே ஐஸ்வர்யாவும் பாம்பு பட்டாசை தானே ஏற்றுக் கொண்டார். இந்தப் பட்டம் சரணிற்கும் நாராயணனிற்கும் அதிகம் வந்திருந்தது. மறுவாக்கெடுப்பில் சரணிற்கு இது கிடைத்தது.

இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட்டேயாக வேண்டும். இந்தக் கட்டுரைத் தொடரில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் விஷயங்களுள் இதுவும் ஒன்று. சரண் செய்தது குற்றம்தான். இதில் மறுப்பில்லை. ஆனால் அவரது பெயரே திரும்பத் திரும்ப சுட்டிக் காட்டப்படுவதில் பெரிய அநீதியுள்ளது. சரணைப் போலவே விஜியும் போனை உபயோகப்படுத்திய விஷயம் பிறகு அம்பலமானது. போதாக்குறைக்கு வழியில் விஜி மீன் வாங்க அதை காடர்கள் சாப்பிட்டிருக்கிறார்கள். மருத்துவமனை சிகிச்சையின் போது அவர்கள் பிஸ்கெட் எடுத்து சாப்பிட்ட புகாரும் இருக்கிறது. சரண் செய்த தவறு விக்ராந்திற்கு தெரிந்திருந்தும் அதை அவர் சர்வைவர் டீமிற்கு முதலிலேயே சொல்லவில்லை.

காடர்களின் மீது இத்தனை புகார்கள் இருக்க, சரண் மட்டும் தொடர்ந்து ‘குற்றம் செய்தவராக' - சர்வைவர் டீமும் சரி, அர்ஜூனும் சரி – தொடர்ந்து சுட்டிக்காட்டுவது எதனால்? இதே சுட்டிக் காட்டல் ஏன் விஜி, விக்ராந்த், உமாபதி போன்றோர்களின் மீது சுட்டிக்காட்டப்படவில்லை? ஏன் இந்தப் பாரபட்சம்?.. சர்வைவர் டீம் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டிய விஷயம் இது.

காடர்கள் அணி மீதுள்ள பாசத்தினால் லேடி காஷ் கூட அமைதியாக இருக்கிறார் எனலாம். ஆனால் அவரும் கூட ஏன் சரணை மட்டும் டார்க்கெட் செய்கிறார்? தவறு இழைத்த விஜி மற்றும் விக்ராந்த்தைப் பற்றி ஏன் அவரும் பேசுவதில்லை. சற்று நேர்மையாகச் செயல்படக்கூடிய லேடி காஷ் கூட ஏன் இந்தப் பாரபட்சத்தை நிகழ்த்துகிறார் என்பதுதான் புரியவில்லை.

சர்வைவர் - 55
சர்வைவர் - 55
“பாவம் சின்னப்பையன்... அவனுக்கு பாம்பு பட்டாசு தொடர்ந்து வந்ததை எப்படி எடுத்துக்குவான்னு தெரியல” என்று இனிகோவும் வருத்தப்பட்டார். “இங்க யாரும் அப்பாவி கிடையாது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான பாம்புங்கதான்” என்று சரண் அளித்த விளக்கம் சிறப்பு.

‘அது நிறையோ அல்லது குறையோ... மற்றவர்களுக்கு ஒரு அடையாளமாவது கிடைத்தது. ஆனால் என்னை யாருமே குறிப்பிடவில்லை. எதிர்பார்த்ததுதான்’ என்று மனம் வருந்தினார் லேடி காஷ். இதனால் இவர் அம்ஜத்துடன் புதிய கூட்டணி அமைக்க முயல்வதைப் போல் தெரிகிறது.

சர்வைவர் - 55
சர்வைவர் - 55

பட்டாசு கொளுத்திய டாஸ்க் முடிந்ததும் இரவில் கேம்ப் ஃபயர் அமைத்து மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். இனிகோ கிராமத்தில் தான் எதிர்கொண்ட பேய்க்கதைகளை அள்ளி விட்டுக் கொண்டிருந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த விஜியை திடீரென்று ‘பே’ என்று கத்தி பயமுறுத்தினார் உமாபதி. சில நிமிடங்கள் கழித்து எரிந்து கொண்டிருந்த சுள்ளி ஒன்று டப்பென்று வெடிக்க, பயந்து நடுங்கினார் விஜி. பேய்க்கதைகளைப் பற்றி பேசும் போது நம் வீடுகளிலும் இவை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதால் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது. “ரொம்ப சொன்னா பயந்துடுவீங்க. நாளைக்கு மிச்ச கதையை சொல்றேன்” என்று நடையைக் கட்டினார் இனிகோ.

பொழுது விடிந்தது. உமாபதி தனக்குக் கற்றுக் கொடுத்த அத்தனை வித்தையையும் மொத்தமாக இறக்கி கம்பு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ‘தத்தக்கா. பித்தக்கா’ என்று அவர் கம்பு மீது நின்று விளையாடிய காட்சியின் பின்னணியில் நடன இசையை ஒலிக்க விட்டது சர்வைவர் டீமின் அநியாயமான குறும்பு. கயிற்று ஊஞ்சலில் படுத்திருந்த விஜியை பின்னால் இருந்து பயமுறுத்தினார் உமாபதி. பேய்க்கதைகளைக் கேட்டு தூங்கிய விஜிக்கு கனவிலும் அது போல் சில காட்சிகள் வந்ததாம். இதற்குப் பின்னணியில் ‘காஞ்சனா’வின் தீம் மியூசிக்கை ஒலிக்க விட்டார்கள்.

சர்வைவர் - 55
சர்வைவர் - 55

“ஏண்டா பயமுறுத்தினே? நான் ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போயிருந்தா?” என்று விஜி ஜாலியாக கேட்க “ஹப்பாடா! காம்படிஷன்ல ஒண்ணு குறைஞ்சுதுன்னு நெனச்சுப்பேன்” என்று அதை விடவும் ஜாலியாக பதில் சொன்னார் பாசக்காரத் தம்பி.

சர்வைவர் - 55
சர்வைவர் - 55

லேடிகாஷூம் அம்ஜத்தும் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இனிகோவின் இரட்டை வேடத்தைப் பற்றி நான் இங்கு பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். அதே விஷயத்தைக் குறிப்பிட்டு அம்ஜத்தும் வருந்தினார். “இடத்துக்கு ஏத்த மாதிரி பேசறார். அது கூட ஓகே. ஆனா ரொம்பவும் இறங்கி கிண்டலடிக்கறது நல்லால்ல” என்று அவர் இனிகோவைப் பற்றி மதிப்பிட்டது சரியான விஷயம்.

“நான் வெளில போகப் போறேன்னு நெனச்ச போது வேடர்கள் அணியை வாழ்த்திட்டுதான் போனேன். கெட்ட பெயரோட வெளியில் போக நான் விரும்பலை. ஆனா இப்ப இது தனி நபர் ஆட்டமா மாறுது.” என்று அம்ஜத் சொல்ல “என் கூட நிப்பீங்களா?” என்பது போல் பேசி கூட்டணி அமைத்தார் லேடி காஷ்.

சர்வைவர் - 55
சர்வைவர் - 55

தனிநபர் ஆட்டம் என்பதால் இந்த வாரத்தின் ‘இம்யூனிட்டி சவால்’ எப்படி இருக்கும்? தனியாகவா அல்லது அணியாகவா? யார் வெளியேறுவார்? இப்படிக் கேள்விகளும் குழப்பங்களும் அனைவரின் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தன. எனவே இது பற்றி ஆங்காங்கே தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘கொம்பர்களாக’ ஆகிவிட்டாலும் வேடர்களும் காடர்களுக்குமான பிரிவு இன்னமும் மீதமிருக்கிறது என்பதை உணர முடிந்தது.

வரப்போகிற இம்யூனிட்டி சவால் எப்படியிருக்கும்?

பார்த்துடுவோம்.