Published:Updated:

சர்வைவர் - 56: சரணைத் தூக்க நினைக்கும் அம்ஜத், இன்னமும் `லாலாலா' பாடும் பழைய காடர்கள்!

சர்வைவர் 56

‘இம்யூனிட்டி சவால்’ தொடங்கியது. இரண்டு கால் மட்டுமே வைக்க முடிகிற, சாயக்கூடிய ஒரு சிறு மேடையில் போட்டியாளர் நிற்க வேண்டும்.

Published:Updated:

சர்வைவர் - 56: சரணைத் தூக்க நினைக்கும் அம்ஜத், இன்னமும் `லாலாலா' பாடும் பழைய காடர்கள்!

‘இம்யூனிட்டி சவால்’ தொடங்கியது. இரண்டு கால் மட்டுமே வைக்க முடிகிற, சாயக்கூடிய ஒரு சிறு மேடையில் போட்டியாளர் நிற்க வேண்டும்.

சர்வைவர் 56

இந்தப் போட்டி இனி எப்படி பயணிக்கப் போகிறது என்பது தொடர்பான சில முக்கியமான தடயங்களை நேற்றைய எபிசோடில் காண முடிந்தது. சர்வைவரில் வெல்வதற்கு விளையாட்டுத் திறமை, உடல் வலிமை போன்ற அடிப்படையான தகுதிகளைத் தாண்டி சக போட்டியாளர்களிடம் எத்தனை இணக்கமாக இருக்கிறோம் என்பதும் முக்கியம். ஆம். எண்ணிக்கை விளையாட்டு என்பது இங்கும் உண்டு. ஒருவகையில் இது சுவாரஸ்யம்தான். ஆனால் இன்னொரு வகையில் முறையற்றது. திறமையற்றவர்கள் பாதுகாப்பாக இருக்க, திறமையுள்ளவர்கள் வீட்டுக்குப் போவது அநீதி. ஆனால் இவையெல்லாம் ரியாலிட்டி ஷோக்களின் தவிர்க்க முடியாத அநீதிக்கதைகள்.

சர்வைவர் 56-ம் நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் 56
சர்வைவர் 56

இந்தப் போட்டி தனிநபர் ஆட்டமாக மாறிவிட்ட பிறகு நடக்கவிருக்கும் முதல் ‘இம்யூனிட்டி சவால்’ இது. ஆனால் மனதளவில் காடர்களும் வேடர்களும் ஏறத்தாழ அப்படியேதான் இருக்கிறார்கள். கொம்பர்களாக மாறவில்லை. இதை நம் சமூகத்திலும் பொருத்திப் பார்க்கலாம். ஒரு தலைவரின் கீழ்மைகள் அம்பலமானாலும் கூட கணிசமான மக்கள் அத்தனை எளிதில் தங்களின் விஸ்வாசத்தை விட்டுத் தருவதில்லை. வேறு சில பெருமிதக் காரணங்களுக்காக அவரை தொழுவதை நிறுத்த மாட்டார்கள். இப்படி உணர்ச்சிகளின் அடிமைகளாக இருக்கும் போது ஏமாற்றுதல்கள் நிறைய நிகழும். அது மட்டுமல்லாமல், தகுதியுள்ளவர்கள் அந்த ஏரியாவிற்குள் வரவே முடியாது.

சர்வைவர் 56
சர்வைவர் 56
‘இம்யூனிட்டி சவால்’ துவங்கியது. ‘மசாஜ் அனுபவமெல்லாம் எப்படி இருந்தது?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அர்ஜூன். “மஜாவா இருந்தது. ரொம்ப நாள் கழிச்சு நல்லா குளிச்சோம்” என்றார்கள். “நான் கூட போட்டியாளரா இருந்திருக்கலாம். பொறாமையா இருந்துச்சு” என்பது போல் ஜாலியாகச் சொன்னார் அர்ஜூன். (எப்படியும் உங்களுக்கு அங்க இருக்கிற நல்ல ஹோட்டல்லதான் ரூம் போட்டிருப்பாங்க!).

Mauro Prosperi என்கிற இத்தாலியரின் வாழ்க்கையில் நடந்த உணர்ச்சிகரமான சம்பவத்தைப் பற்றி சொன்னார் அர்ஜுன். மாரோ ஒரு மராத்தான் வீரர். சஹாரா பாலைவனத்தில் நடந்த ஒரு நீண்ட மராத்தான் போட்டியில் கலந்து கொள்ள சென்றார். மணற்புயல் காரணமாக அவர் தொலைந்துவிட்டார். பசி, தாகம், பயம் போன்ற உணர்வுகளால் அவர் பீடிக்கப்பட்டார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. வழியில் கிடைக்கும் சிறு உயிரனங்களை உண்டும், தன்னுடைய சிறுநீரைக் குடித்தும் உயிர் பிழைப்பதற்காகப் போராடிய மாரோ, ஒரு கட்டத்தில் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். தன் கைகளை வெட்டிக் கொண்டார். ஆனால் உடலில் நீர்ச்சத்து கடுமையாக குறைந்திருந்ததால் ரத்தம் வெளியே வராமல் கட்டிக் கொண்டது.

ஒரு வழியாக நடந்து நடந்து அவர் ஒரு கிராமத்தை அடைந்து அங்குள்ளவர்களால் காப்பாற்றப்பட்டார். ஒன்பது நாள்கள் நீண்ட இந்த கடுமையான பயணத்தால் அவரின் சிறுநீரகங்கள் பாதிப்படைந்தன. உடல்நிலை மோசமாகியது. குறிப்பாக மன உளைச்சலின் உச்சத்தை அடைந்திருந்தார். ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டதுதான் மனவலிமையின் உச்சம். இவரைப் பற்றிய ஆவணப்படங்கள் வெளிவந்துள்ளன. ‘Soul Survivor’ என்பதற்கான inspiring story –ஆக இந்தச் சம்பவத்தை பகிர்ந்து கொண்டார் அர்ஜூன்.

சர்வைவர் 56
சர்வைவர் 56

‘இம்யூனிட்டி சவால்’ தொடங்கியது. இரண்டு கால் மட்டுமே வைக்க முடிகிற, சாயக்கூடிய ஒரு சிறு மேடையில் போட்டியாளர் நிற்க வேண்டும். அவருக்கு எதிரேயுள்ள பிடிமானத்தில் உள்ள கயிற்றில் நான்கைந்து முடிச்சுகள் தள்ளித் தள்ளி இருக்கும். 8 நிமிடங்கள் நீடிக்கிற முதல் நிலையில் முதல் முடிச்சை பிடித்து சமாளிக்கும் போட்டியாளர், அடுத்த நிலையில் இரண்டாவது முடிச்சை பிடித்து சமாளிக்க வேண்டும். கால், கை, உடல் மடங்காமல் நிற்க வேண்டும். யார் அதிக நேரம் தாக்குப் பிடித்து நிற்கிறாரோ, அவரே வெற்றியாளர்.

இந்த நிலையில் ஒரு ட்விஸ்டை கொண்டு வந்தார் அர்ஜுன். “டிரைபல் பஞ்சாயத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று நினைப்பவர் ஆடத் தேவையில்லை. அவர் வெளியே வந்து சமைக்கப்படும் மீனை சாப்பிட்டு வேடிக்கை பார்க்கலாம்" என்பதே அந்த ட்விஸ்ட். “விளையாட வந்து விட்டு வேடிக்கையா பார்ப்பது?” என்கிற ஈகோ உந்துதல் அனைவருக்கும் ஏற்பட யாரும் அந்தச் சலுகையை ஏற்கவில்லை. ஆனால் அருகிலிருந்த பழரச பாட்டிலை அர்ஜுன் எடுத்து முகர்ந்த போது சிலருக்கு சஞ்சலம் ஏற்பட்டது.

சர்வைவர் 56
சர்வைவர் 56
“போட்டி ஈஸியா இருக்கும்னு நெனச்சேன். ஆனா நின்னு பார்க்கும் போதுதான் தெரியுது. எவ்வளவு கடினம் என்று” என்றார் விஜி. “இந்த ஆட்டத்தில் என்னால் நூறு சதவிகிதம் ஜெயிக்க முடியும் என்கிற உறுதியை முதலிலேயே ஏற்படுத்திக் கொண்டேன்” என்று நந்தா சொன்னது சிறப்பான உத்தி.

முதல் 8 நிமிடங்களை போட்டியாளர்கள் அனைவருமே ஒரு மாதிரியாக சமாளித்து கடந்தார்கள். “மூஞ்சு அரிக்குது. ஒரு கையை வெச்சு சொறிஞ்சக்கலாமா?” என்று காமெடி செய்தார் நாராயணன். இன்னொரு பக்கம் மீன் சமையல் நடந்து கொண்டிருந்தது. “யாருக்கும் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். அதனால் நானே சாப்பிடுவேன்” என்றார் அர்ஜுன்.

இரண்டாவது நிலை ஆரம்பம். ஐஸ்வர்யாவின் கால் மடங்கியிருப்பதைக் கண்டு பக்கத்தில் இருந்த வனேசா சுட்டிக் காட்ட “என் கால் அப்படித்தான். உன் வேலையைப் பாரு” என்பது போல் ஐஸ்வர்யா பதில் அளிக்க, வனேசா காண்டானார். கைவிரல்களில் பிரச்னையுள்ள விக்ராந்தால் சமாளிக்க முடியாததால் போட்டியிலிருந்து முதல் நபராக வெளியேறினார்.

சர்வைவர் 56
சர்வைவர் 56

நந்தா சிலை போல் ஒரே பொஷிஷனில் ஆடாமல் அசையாமல் கண்களை மூடி நிற்க, மற்றவர்கள் ஒரு மாதிரியாக தங்களை சரிசெய்து கொண்டே இருந்தார்கள். லேடி காஷூம் அம்ஜத்தும் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து போட்டியிலிருந்து வெளியேறினார்கள்.

மூன்றாவது நிலை ஆரம்பித்தது. இந்தச் சமயத்தில் உமாபதி வெளியேறியது ஆச்சரியம். ‘கையை மடக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. என்னால முடியல. நான் தப்பு பண்ண விரும்பலை’ என்பது அவர் சொன்ன காரணம். இதே சமயத்தில் விஜியும் இனிகோவும் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து கடல் நீரில் விழுந்தார்கள். “பேசிக்கிட்டே இருக்காங்க. எனக்கு எரிச்சலா வருது” என்று ஐஸ்வர்யா குறித்து முணுமுணுத்த வனேசாவும் அடுத்து நீரில் விழுந்தார்.

சர்வைவர் 56
சர்வைவர் 56

போட்டியில் இப்போது நான்கு பேர் இருந்தார்கள். 14 நிமிடங்கள் கடந்திருந்தன. சமாளிக்க முடியாமல் சரணும் கீழே விழ, ஐஸ்வர்யா, நாராயணன், நந்தா ஆகிய மூவர் மட்டும் இன்னமும் தாக்குப்பிடித்தார்கள். “ஹைய்யா. எல்லாமே எங்க டீம்” என்று பெருமைப்பட்டார் ஐஸ்வர்யா. பலவீனமான போட்டியாளராக கருதப்பட்ட நாராயணனின் மனவலிமையை இப்போது அனைவருமே வியந்தார்கள்.

நான்காவது நிலை ஆரம்பிப்பதற்கு சில நொடிகளுக்கு முன்னால் ஐஸ்வர்யா விழுந்தார். நான்காம் நிலை ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள் நாராயணனும் கீழே விழ, நந்தா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆட்டத்தில் மட்டும் ஃபோகஸ் செய்த நந்தாவின் மனவலிமைக்கு கிடைத்த வெற்றி இது. அனைவருமே நந்தாவைப் பாராட்டினார்கள். ரன்னர் அப்பாக வந்த நாராயணனுக்கும் பாராட்டு கிடைத்தது.

சர்வைவர் 56
சர்வைவர் 56
‘இம்யூனிட்டி ஐடல்’ நந்தாவிற்கு வழங்கப்பட்டது. டிரைபல் பஞ்சாயத்தில் நந்தாவை எதிர்த்து யாரும் வாக்களிக்க முடியாது. கூடுதல் போனஸாக மீனையும் பழரசத்தையும் அவருக்கு வெகுமதியாக வழங்கினார் அர்ஜூன். மற்ற போட்டியாளர்களோடு ஒப்பிடும் போது ‘Soul Survivor’ ஆகும் தகுதி நந்தாவிற்கு அதிகம் இருப்பதைப் போல் தெரிகிறது. கை வலிக்காக மருத்துவ சிகிச்சையில் இருந்தாலும் நந்தா இந்த வெற்றியை சாதித்திருப்பது பாராட்டத்தக்கது.

நீல நிறத்தில் இருந்த ஒரு மர்ம பெட்டியை தலைவர் விக்ராந்திடம் ஒப்படைத்தார் அர்ஜுன். அதன் சாவி அர்ஜுனிடம் இருக்குமாம். பெட்டிக்குள் இருக்கிற சில விஷயங்களை வைத்துதான் டிரைபல் பஞ்சாயத்து நடக்குமாம். “இருக்கு... ஒரு தரமான சம்பவம் இருக்கு” என்பதே அனைவரின் மனதிலும் ஓடியது.

கொம்பர்கள், அதாவது வேடர்களும் காடர்களும் தங்களின் தீவிற்குத் திரும்பிய பிறகு ‘இம்யூனிட்டி சவாலை’ விடவும் அதிக பரபரப்பான விளையாட்டு ஒன்று நடந்தது. ஆம், ‘இந்த வாரம் யாரை வெளியேற்றுவது?’ என்கிற சதுரங்க ஆட்டம் உச்சக்கட்ட சுவாரஸ்யத்தில் நடந்து கொண்டிருந்தது.

சர்வைவர் 56
சர்வைவர் 56
“உலகமே தலைகீழானாலும் சரணிற்குத்தான் நான் வாக்களிப்பேன்” என்பதில் தீர்மானமாக இருந்தார் அம்ஜத். தான் கலந்து கொண்ட அனைத்து உரையாடல்களிலும் இதையே தொடர்ந்து உறுதியாக சொன்னார்.

சரணின் சில நடவடிக்கைகள் அம்ஜத்திற்குப் பிடிக்கவில்லையாம். “பலவீனமான போட்டியாளர்களாக இருந்தால் கூட நம்பர் கேமிற்காக சிலரை கூடவே வெச்சிருக்காங்க” என்று காடர்களை மறைமுகமாக தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார் சரண்.

"இன்னமுமே இங்க இரண்டு டீமாத்தான் இருக்காங்க” என்று நேர்மையாக ஒப்புக் கொண்ட நாராயணன், யாருக்கு வாக்களிப்பது என்கிற குழப்பத்தில் இருக்கிறார். அவரது தேர்வு லேடிகாஷ் அல்லது வனேசாவாக இருக்கலாம். அல்லது திடீரென்று மனம் மாறி சரணிற்கு எதிராகவும் குத்தலாம். காடர்கள் அணி மொத்தமும் சரணின் மீது கொலைவெறியுடன் இருந்தது. “அவனுக்கு மூணாவது முறைல்லாம் லக் அடிக்காது” என்று சொல்லிக் கொண்டிருந்தார் விஜி.

சர்வைவர் 56
சர்வைவர் 56
“நாங்க யாரையும் டார்கெட் பண்ணி தூக்க மாட்டோம். அது காடர்களின் ஸ்டைல் இல்ல” என்று ‘நியாயமாக’ பேசிக் கொண்டிருந்தார் உமாபதி. (அப்படிங்களா?!).

குழு உரையாடலின் போது ‘நான் சரணிற்கு எதிராகத்தான் வாக்களிப்பேன்’ என்று வெளிப்படையாக சொன்ன இனிகோவின் நேர்மை பாராட்டத்தக்கது. “ஏன் என் மேல இவ்வளவு காண்டா இருக்காங்கன்னு தெரியல. போன முறை இனிகோவிற்கு எதிரா வோட் பண்ணினேன்றதுக்காக அவரு என் மேல கோவமா இருக்காரு போல” என்று புலம்பினார் சரண்.

பலராலும் தூற்றப்பட்டாலும் சரணிற்கு உறுதியான ஆதரவைத் தந்தார் ஐஸ்வர்யா. ஒரு திறமையான ஆட்டக்காரர், உள்அரசியல் காரணமாக போட்டியிலிருந்து விலகக்கூடாது என்பது அவரது எண்ணமாக இருந்தது. எனவே ‘என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்’ என்கிற பாடலை சரணிற்கு உபதேசித்துக் கொண்டிருந்தார். “உன் மேல நம்பிக்கை வை. நல்லதே நடக்கும்” என்பது ஐஸ்வர்யாவின் பாசிட்டிவ் அப்ரோச்.

“ஐஸ்வர்யா சரணிற்கு எதிரா வாக்களிக்க மாட்டா. அவ இனிகோவை டார்கெட் பண்ணலாம்" என்று காடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். “சரண் சின்னப் பையன். தப்பு பண்ணிட்டான். மன்னிப்பும் கேட்டுட்டான். ஆனா அவனையே விடாம ஏன் இன்னமும் டார்கெட் பண்றாங்கன்னு புரியல” என்று வருத்தப்பட்டார் நந்தா. இதனால் “என்ன நடந்தாலும் சரி... சரணிற்கு எதிரா வாக்களிக்க மாட்டேன்” என்று உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

சர்வைவர் 56
சர்வைவர் 56

‘அது போன வாரம். இது இந்த வாரம்’ என்கிற காமெடி போல “அணி ஆட்டம்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு. இனிமே இது தனிநபர் ஆட்டம். அதற்கேற்பதான் என் உத்திகளை அமைப்பேன். முடிவுகளை எடுப்பேன்” என்று நந்தா திட்டமிட்டிருப்பதும் அதை வெளியில் சொல்வதும் மிகச் சரியான விஷயம்.

காடர்கள் அணி இன்னமும் கூட லாலா பாடிக் கொண்டிருக்கிறது. 'வலிமையான போட்டியாளரை வெளியேற்றினால் அது வருங்காலத்திற்கு உதவும்’ என்கிற நோக்கில் அவர்கள் சரணை வெளியேற்றினால் கூட அதை ஒரு உத்தியாக, லாஜிக் ஆக சொல்லலாம். (ஆனால் ஒரு நல்ல ஆட்டக்காரர், இன்னொரு நல்ல ஆட்டக்காரரை வெளியேற மனதார விரும்ப மாட்டார்.) ஆனால் காடர்களின் நோக்கம் அதுவல்ல. அணிப்பாசத்தால் அவர்கள் இன்னமும் லேடிகாஷ் மற்றும் வனேசாவை காப்பாற்றுவதற்காகவும் சரண் மீதுள்ள தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சரணை பலியிட நினைப்பது ஸ்போர்ட்மேன்ஷிப் இல்லை. இது காடர்களின் முறையற்ற சிந்தனை.

"நான் நிச்சயம் ஒரு நல்ல போட்டியாளருக்கு எதிரா வாக்களிக்க மாட்டேன். பஞ்சாயத்தின் போக்கைப் பார்த்து அந்தச் சமயத்தில் தீர்மானிப்பேன்” என்றார் சரண். நந்தா மற்றும் நாராயணனின் முடிவும் கூட இப்படித்தான் என்று தெரிகிறது. "பலவீனமான போட்டியாளர்களைக் காப்பாற்ற நினைப்பது முறையானதல்ல” என்று வனேசாவிடமே சரண் சொன்னதும், வனேசா காண்டாகி விட்டார். "நந்தா மாற்றி மாற்றிப் பேசுகிறார்” என்று காடர்கள் அணி புகார் சொல்லிக் கொண்டிருந்தது.

“அவங்க ஒரு கேம் ஆடறாங்கன்னா... பதிலுக்கு நாங்களும் ஒரு கேம் ஆடப் போறோம். எப்படிப் போகுதுன்னு பார்க்கலாம்” என்று காடர்கள் அணி திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. அதன்படி வாக்குகளை பிரித்து அளிக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். எப்படியோ சரணை வெளியேற்றுவதுதான் அவர்களின் பிரதான இலக்கு.

சர்வைவர் 56
சர்வைவர் 56

இந்தச் சூழலில் ஒரு வாக்கை பிளாக் செய்வதற்கான சக்தி, தலைவரான விக்ராந்த்திடம் தரப்பட்டிருக்கிறது. நீல நிறப் பெட்டியில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இந்தச் சூழலில் ‘டிரைபல் பஞ்சாயத்தில்’ என்னவெல்லாம் நடக்கும்?

பார்த்துடுவோம்.