ஐஸ்வர்யாவோடு சேர்த்து சரணையும் வெளியே அனுப்பிய காடர்கள், அவர்களுக்கு ‘மூன்றாம் உலக’ தண்டனை தந்து விட்டதாக ஒருவேளை நம்பிக் கொண்டிருக்கலாம்... ஆனால் அது அவர்களுக்கு ஜாலியான பரிசு என்பதை காடர்கள் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு நல்ல நட்பு இருந்தால் அது பாதாள உலகமாகவே இருந்தால் கூட மிக இனிமையாக மாறிவிடும் என்பதற்கு நேற்றைய எபிசோட் ஒரு நல்ல உதாரணம்.
சர்வைவர் 58-ம் நாளில் என்ன நடந்தது?
ஐஸ்வர்யா வெளியேற்றப்பட்ட பிறகு மர்ம பெட்டியைத் திறந்த அர்ஜுன் அதிலிருந்த செய்தியை வாசிக்கச் சொன்னார். ‘இன்று இன்னொரு எலிமினேஷன் இருக்கிறது’ என்கிற அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. இதில் கூடுதல் ட்விஸ்ட்டாக ‘இது ரகசிய வாக்கெடுப்பாக இருக்காது. 'Open Nomination’ ஆக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

“யாரோட இன்ஃப்லுயன்ஸூம் இல்லாம ரகசியமா பேரை எழுதுங்க” என்று அர்ஜுன் அறிவுறுத்தினாலும், யார் வெளியே அனுப்பப்படுவார் என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது. அதை சரணும் உணர்ந்திருந்தார். ஒட்டுமொத்த காடர்கள் அணியும் இணைந்து தங்கள் பலத்தைச் சேர்த்து ஒரு ‘சின்னப்பையனுக்கு’ எதிராக வாக்களிக்க வேண்டிய அவலமான சூழல். வாக்கெடுப்பின் முடிவில் சரணுக்கு ஆறு ஓட்டுகளும் லேடி காஷிற்கு இரண்டு ஓட்டுகளும் வந்திருந்தன.
லேடி காஷிற்கு வந்த இரண்டு வாக்குகளை யார் அளித்தது என்று பார்த்தால் அது நந்தா மற்றும் சரண். நாராயணன் கூட காலை வாரிவிட்டார். இனிமேல் அந்தக் கும்பலை பகைத்துக் கொண்டு வாழ முடியாது என்கிற தற்காப்பு உணர்ச்சி ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், நந்தாவும் சரணும் 'பலவீனமான' போட்டியாளருக்கு (லேடி காஷ்) எதிராகத்தான் வாக்களித்தார்கள். காடர்களைப் போல் நல்ல ஆட்டக்காரரை டார்கெட் செய்து தூக்கவில்லை.

ஒரு திறமையான ஆட்டக்காரரை வெளியே அனுப்புவது கூட ஒருவகையில் நல்ல யுக்திதான். ஆனால் காடர்களின் உள்நோக்கம் சரண் மற்றும் ஐஸ்வர்யாவின் மீதுள்ள தனிப்பட்ட பழிவாங்குதலை நிகழ்த்துவதே. சரண் நினைத்திருந்தால் - அது வீண் என்றாலும் கூட – உமாபதிக்கோ, விக்ராந்திற்கோ எதிராக வாக்கு அளித்து தன் எதிர்ப்பைக் காட்டியிருக்க முடியும். ஆனால் அவர் வனேசாவை விடவும் பலவீனமான போட்டியாளரான லேடி காஷைத்தான் தேர்ந்தெடுத்தார்.
காற்சிலம்பு உடைத்தல் சடங்கை இரண்டாவது முறை நிகழ்த்த முடியாது என்கிற விதியைக் காட்டி சரணை வெளியேற்றி மூன்றாம் உலகத்திற்கு அனுப்பினார் அர்ஜுன். விடைபெறும் போது மிகவும் பாசிட்டிவ்வான முறையில் பேசிய சரண் “தப்பு செஞ்சதுக்கு சாரி. எல்லாத்துக்கும் தாங்க்ஸ்” என்று சுருக்கமாகச் சொல்லி விடைபெற்றார். அப்போது காடர்களின் முகங்களில் குற்றவுணர்வு தென்பட்டது போன்ற பிரமை.
“அடுத்தடுத்து இரண்டு எலிமினேஷன் நடந்தது. உங்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருக்கும். இனிமேலாவது நேர்மையான உத்திகளைப் பயன்படுத்தி தனிநபர் ஆட்டமா ஆடுங்க” என்று அறிவுறுத்தி விடைபெற்றார் அர்ஜுன்.
சரணும் ஐஸ்வர்யாவும் நள்ளிரவில் மூன்றாம் உலகத்திற்கு வந்து இறங்கினார்கள். கூட இருப்பது சரண் என்பதால் ஐஸ்வர்யாவின் முகத்தில் சந்தோஷமே இருந்தது. இதுவே வனேசா வந்திருந்தால் மூன்றாம் உலகம் இரண்டாக உடைந்து ஆறாம் உலகமாக மாறியிருக்கலாம்.

“என்ன… இங்க எதுவுமே இல்ல” என்று திகைத்த ஐஸ்வர்யாவிடம் “இதை ஒரு அனுபவமா எடுத்துக்கோ. எல்லாம் நல்லதுக்குத்தான்” என்று சரண் திடீர் ஞானோதயம் பெற்று சொல்ல “என்னடா.. என் ரோலை நீ பண்றே?” என்று சிரித்தார் ஐஸ்வர்யா. “இங்க அமைதியா இருக்கு. நாம ரெண்டு பேரும்தான் இருக்கோம்” என்று அந்தக் கடினமான சூழலையும் பாசிட்டிவ் மோடிற்கு மாற்றினார் சரண்.
“அம்ஜத் இப்ப ரொம்ப வருத்தப்படுவான் இல்ல…” என்று ஐஸ்வர்யா யூகித்தது சரியான விஷயம். ஐஸ்வர்யா வெளியேற்றப்பட்ட போது அம்ஜத் தன்னிச்சையாகக் கண்கலங்கிவிட்டார். அணி மாறியிருந்தாலும் அவருக்குள் இருக்கிற ‘வேடன்’ இன்னமும் சாகவில்லை.
“நான் போன பிறகு நந்தா, நாராயணன், அம்ஜத்லாம் என்ன சொன்னாங்க. எப்படி ரியாக்ட் பண்ணாங்க?” என்று சரணை கேள்விகளால் துளைத்துவிட்டார் ஐஸ்வர்யா. “நீ போனதுமே எனக்கு ஒண்ணுமே புரியலை. தலையே சுத்திடுச்சு” என்றார் சரண்.

“கேமராக்கு முன்னாடியும் பின்னாடியும் காடர்கள் மட்டும் எதையும் பேசலையா? நல்ல கதையா இருக்கே... இம்யூனிட்டி சவால்ல உமாபதி மட்டும்தான் ஜெயிக்க முடியும். மத்த காடர்கள் யாராவது ஜெயிக்கறாங்களான்னு பார்த்துடுவோம்” என்று சிரித்தார் ஐஸ்வர்யா.
ஒரு திறமையான ஆட்டக்காரர் எதிரணியில் இருந்தாலும் அவரை மனம் திறந்து பாராட்டுவதுதான் ஐஸ்வர்யாவின் பழக்கம். சரண் மீது இவர் கொண்டிருக்கும் நட்பு கூட அவர் அணி மாறிய பிறகு நன்றாக விளையாடிய காரணத்தினால்தான். இனிகோவின் விளையாட்டுத் திறமையிலும் கூட ஐஸ்வர்யாவிற்கு மதிப்புண்டு. ஆனால் அவர் வம்பு பேசுவது மட்டுமே பிடிக்காது.
காடர்கள் அணியில் பாதுகாப்பாக இருப்பவர்களைப் பற்றி ஐஸ்வர்யா குறிப்பிடும்போது, “நான் செத்தாலும் அவங்க மாதிரி என்னால மாற முடியாது. எனக்கு மானம், சூடுல்லாம் இருக்கு. மத்தவங்களை ஜெயிக்க வைக்கறதுக்காக இங்க நான் வரலை. நான் ஜெயிக்கத்தான் வந்திருக்கேன்” என்று பொங்கிய ஐஸ்வர்யாவின் பேச்சில் சூடு இருந்தாலும் உண்மையும் கூடவே இருந்தது.
“என்னை வோட் பண்ணி அனுப்ப மாட்டாங்கன்னு நெனச்சேன். என் ஆட்டத்தைப் பார்த்து பயப்படறாங்க போல. விடமாட்டேன். திரும்ப வருவேன்...“ என்று மாஸ் ஹீரோ கணக்காக பன்ச் டயலாக்குகளை கெத்தாக அள்ளி விட்டுக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா.

சவாலைச் சந்திப்பதற்காக ஓலை வந்தது. சென்றார்கள். “வாங்க.. மூன்றாம் உலகம் எப்படியிருக்கு?” என்று விசாரித்தார் அர்ஜுன். “செமயா இருக்கு சார். ரொம்ப பிடிச்சிருக்கு. காம்ப்பாக்ட்டா இருக்கு. சீ வ்யூ... பாசிட்டிவ் vibe-ஆ இருக்கு” என்று இன்பச்சுற்றுலா பயணி மாதிரி ஐஸ்வர்யா பரவசப்பட்டு பேச, “என்னம்மா நீயி.. இதுவரைக்கும் மூன்றாம் உலகம் வந்தவங்கள்லாம் தெறிச்சு ஓடியிருக்காங்க. ஒருவேளை பிடிக்காத மனிதர்கள் இங்க இல்லைன்றதால அமைதியா தெரியுதோ” என்று சிரித்தார் அர்ஜுன்.
“என்ன சரண்... நீயும் ஸ்மார்ட்டா தெரியற?” என்று சரணின் வாயையும் கிண்டினார் அர்ஜுன். “நீங்க போனப்புறம் நந்தா, நாராயணன், அம்ஜத்லாம் ஒரு மாதிரி மந்திரிச்சி விட்ட மாதிரி ஆயிட்டாங்க. அழாத குறை” என்று அர்ஜுன் சொன்னதும் “அப்படியா?” என்று விக்ரமன் படத்தின் நாயகி ஃபீல் ஆனார் ஐஸ்வர்யா. “நான் ஹேப்பியா இருக்கேன்னு அவங்க கிட்ட சொல்லுங்க சார்” என்று குழந்தை போல் சிரித்தார்.
“ஓகே... இன்னிக்கு சேலன்ஜ் பத்தி பார்க்கலாமா? அதுக்கு முன்னாடி சில முக்கியமான விஷயங்கள். இது எலிமினேஷன் போட்டி இல்ல. இந்தப் போட்டில ஜெயிக்கறவங்க, அணிக்குத் திரும்பும்போது நடக்கற ரீ என்ட்ரி சவால்ல சில சலுகைகளைப் பெற முடியும். தோத்தவங்க அடுத்த சவால்களில் பங்கேற்க முடியாது. அவங்களுக்கு சலுகைகளும் கிடைக்காது. நேரடியா ரீஎன்ட்ரி சேலன்ஜ் மட்டும்தான்” என்று இந்தப் போட்டியின் முக்கியத்துவத்தை கவனமாக எடுத்துரைத்தார் அர்ஜுன்.
ஆட்டம் துவங்கியது. முயல் – ஆமை கதையின் சிறந்த உதாரணமாக இந்தப் போட்டியை சொல்லலாம். அப்படியொரு சுவாரஸ்யமான ட்விஸ்ட் நடந்தது.

ஒரு பெரிய தோசைக்கரண்டி மாதிரியான மரப்பலகையில் ஐந்து குழிகள் இருக்கும். ஒரு ஸ்டான்டில் பொருத்தப்பட்டிருக்கும் அந்தப் பலகை மேலும் கீழும் அசையும் படியாக இருக்கும். தரப்படும் பந்துகளை வைத்து பாதையின் வழியாக உருட்டி ஐந்து குழிகளில் ஐந்து பந்துகளை நிறுத்த வேண்டும்.
கேட்பதற்கு எளிதான விஷயம் போல் இருந்தாலும் ஆடுவது மிக கடினமான சவால். மிகுந்த நிதானமும் பொறுமையும் கவனமும் தேவைப்படுகிற ஆட்டம் இது. இதைச் சொல்லும்போதே புரிந்துவிட்டிருக்கும். இது ஐஸ்வர்யாவிற்கு பொருந்தாத ஸ்டைல் ஆட்டம். அணியுடன் இணைந்து வேகமாகச் செயல்பட வேண்டுமென்றால் ஐஸ்வர்யா துடிப்பாகச் செயல்படுவார். ஆனால் நிதானமாக செயல்பட வேண்டிய க்விஸ் போன்ற ஆட்டங்களில் அவர் பலவீனமானவர்.
எனவே பந்தைப் போட்டு போட்டு தோசைக் கரண்டியை படகின் துடுப்பு போல ஆட்டி ஆட்டி ஐஸ்வர்யா விளையாடியதில் நீண்ட நேரம் கழித்தும் ஒரு பந்து கூட குழியில் அமரவில்லை.
கூட ஆடுவது சரண் என்கிற நண்பன் என்பதால் ஐஸ்வர்யாவிற்கு போட்டி வெறி வரவில்லையாம். என்றாலும் "அதுக்காக நான் விட்டுத் தர மாட்டேன். போட்டி வேற. நட்பு வேற” என்று தெளிவாக இருந்தார். ஆனால் தனது ஆட்டத்தை ஐஸ்வர்யா மெதுவாகவாவது ஆடியிருக்கலாம். பந்தை தொப் தொப் எனப் போட்டு எடுத்துக் கொண்டிருந்தார். இதனால் சரணின் கவனம் கலையக்கூடும். ‘ஆட்டத்தின் போது கத்துகிறார்… சக ஆட்டக்காரர்களிடம் பேசி இம்சை செய்கிறார்’ என்பது ஐஸ்வர்யாவின் மீதுள்ள பொதுவான புகார்.
ஆனால் சரண் எந்தக் கவனமும் கலையாமல் மிகப் பொறுமையாக விளையாடினார். முதல் பந்தைக் குழியில் பொருத்திவிட்ட பிறகுதான் கூடுதல் கவனம் தேவை. ஏனெனில் பலகையை சற்று சாய்த்துவிட்டால் கூட அத்தனை சிரமப்பட்டு பொருத்திய அந்தப் பந்து விழுந்துவிடும். மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான்.

முதல் மூன்று பந்துகளை மிகவும் சிரமப்பட்டு சரண் பொருத்திவிட்டாலும் நான்காவது பந்து நெடும் நேரத்திற்கு ஆட்டம் காட்டியது. அவர் மிக கவனத்துடன் நகர்த்தும்போது அது வழுக்கி கீழே விழுந்து விடும். என்றாலும் விடாமுயற்சியுடன் சரண் முயன்று கொண்டே இருந்தார்.
எப்படியும் சரண்தான் ஜெயிக்கப் போகிறார் என்று ஏறத்தாழ முடிவான நிலையில் ஆட்டத்தில் ஓர் அதிசய திருப்பம் நிகழ்ந்தது. அதுவரை தோசைக்கரண்டியை வைத்து மனம் போன போக்கில் விளையாடிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா, முதல் பந்தை பொருத்தியவுடன் சற்று சீரியஸ் ஆகிவிட்டார். அவருக்கு அதிர்ஷ்டமும் உதவியதோ, என்னமோ, மிகவும் குறுகிய நேரத்தில் அடுத்தடுத்த பந்துகளைப் பொருத்தி சரணிற்கு சமமாக வந்துவிட்டார். உண்மையில் இதை ‘மெடிக்கல் மிராகிள்’ என்றே சொல்ல வேண்டும்.
ஆச்சர்யம் இத்தோடு நின்று விடவில்லை. ஐந்தாவது பந்தை பொருத்துவதற்காக சரண் பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருந்த போது, ஐஸ்வர்யா சட்டென்று ஆட்டத்தை முடித்தது பெரிய அதிசயம். அவராலேயே அதை நம்ப முடியவில்லை.
“சரண் என்ன ஆச்சு?” என்று அர்ஜுன் விசாரித்த போது “நான் நாலாவது பந்துக்காக போராடிய போது ஐஸ்வர்யா ஈக்வலா வந்துட்டாங்க... ஐந்தாவது பந்தை அவங்க உடனே போட்டது எனக்கு மகிழ்ச்சிதான்” என்று சரண் பரவசப்பட, “என்னப்பா.. நீ ஆடினதைப் பத்தி கேட்டா... ஐஸ்வர்யா ஆடியதற்கு புகழ் மாலை பாடறே?” என்று கிண்டலடித்தார் அர்ஜுன்.
இந்தப் போட்டியில் ஐஸ்வர்யா வென்றுவிட்டதால் ரீஎன்ட்ரி சேலன்ஜின் போது சில சலுகைகள் அவருக்குக் கிடைக்கும். சரண் அடுத்த போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது. நேராக ரீஎன்ட்ரி சவால்தான்.

மூன்றாம் உலகத்தில் நிகழும் போட்டி என்றாலே காயத்ரியின் நினைவு உடனே வந்து விடுகிறது. பாவம் அவர். நீண்ட நாள்கள் இங்கு தங்கி, பல போட்டிகளில் வென்றிருந்தாலும் கூட அணிக்குத் திரும்ப முடியாமல் அப்படியே எலிமினேட் ஆனதை துரதிர்ஷ்டம் என்பதா, சர்வைவர் ஆட்டத்தின் அரசியல் என்பதா என்று தெரியவில்லை.