Published:Updated:

சர்வைவர் - 59: `சின்னப்பையன்' சரண் அர்ஜுனுக்குக் கொடுத்த கவுன்ட்டர்; கேம்னாலும் பாம்பெல்லாம் வரலாமா?

சர்வைவர் - 59

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 59-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 59: `சின்னப்பையன்' சரண் அர்ஜுனுக்குக் கொடுத்த கவுன்ட்டர்; கேம்னாலும் பாம்பெல்லாம் வரலாமா?

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 59-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 59

கொம்பர்களின் இரண்டாவது வாரத் தலைவர்களுக்கான போட்டியில் இனிகோ தேர்வானார் என்பதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். பட்டாசு டாஸ்க்கில் விஜி பாம்பைத் தேர்ந்தெடுத்ததாலோ, என்னமோ, இரவில் அவருடைய தலையணையின் அடியில் பாம்பு இருந்தது. இந்த விஷயத்தை தினச்செய்திகளின் மொழியில் சொல்வதென்றால், ‘இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.’

சர்வைவர் - 59
சர்வைவர் - 59

சர்வைவர் 59-ம் நாளில் என்ன நடந்தது?

கொம்பர்களின் தீவில் ஐஸ்வர்யா இல்லாத காரணத்தினால் ‘அம்போ’வென்று தலையைக் கவிழ்ந்து உட்கார்ந்திருந்தார் நந்தா. "அது ப்ளூ பாக்ஸ் இல்ல. வெடிகுண்டு" என்றார் நாராயணன். “சரண் மூணாவது முறையும் தப்பிச்சிருந்தான்னா அவன் பெயரை ‘சரணானந்தா’ன்னு மாத்தி சாமியாரா வெச்சு பூசை பண்ணிடலாம்” என்று நந்தா சொல்ல, “ஆமாம். அதிர்ஷ்டக்காரப் பய” என்று வியப்பும் எரிச்சலுமாக சொன்னார் விஜி.

சர்வைவர் - 59
சர்வைவர் - 59

சரண் கடிதம் அனுப்பியிருந்தார். விக்ராந்திற்கு எழுதிய குறிப்பில் “என்னை ஆரம்பத்துல நீங்க தம்பியா பார்த்தீங்க... நடுவுல ஏதோ தப்பு நடந்து போச்சு. சாரி” என்று எழுதப்பட்டிருக்க அதற்காக மனம் இளகினார் விக்ராந்த். “அவன் போகும் போது எனக்கு வருத்தமா இருந்தது” என்றார். (அம்ஜத்திற்கும் இதையேதான் சொன்னீங்க பாஸ்!). விக்ராந்த் மனம் மாறியதால் உமாபதியின் மனமும் மாறியது. “ஐஸ்வர்யா வந்தாலும் ஓகே... ஆனா சரண் வந்தா நல்லாயிருக்கும்” என்று அவர் ஆதங்கப்பட்டார். உமாபதியும் சரணும் இணைந்து சமீபத்தில் விளையாடி அமோகமாக வெற்றி பெற்றதால் அவர்கள் நெருக்கமாகியிருக்கிறார்கள்.

விஜிக்கு எழுதிய குறிப்பில் "வெச்சு செஞ்சிட்டியே அக்கா” என்று சரண் எழுதியிருந்தார். அதன் உள்குத்து விஜிக்குப் புரிந்தததால் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்பது போல் கையசைத்தார். சரண் இனிகோவிற்கு எழுதியிருந்த குறிப்பும் முக்கியமானது. “இங்க யாரும் அப்பாவிங்க கிடையாது. எனவே இளநீர் சாப்பிட்டு கூலா இருங்க” என்று சரண் நக்கலாக எழுதியிருந்ததைப் பார்த்ததும் அனைவருக்கும் சிரிப்பு வந்தது.

சர்வைவர் - 59
சர்வைவர் - 59
கடிதத்தின் இறுதியில் ‘சின்னப்பையன்’ என்று சரண் கையெழுத்திட்டிருந்தார். இது அர்ஜுனுக்கான கவுன்ட்டர் மாதிரியே இருந்தது.

அடுத்த கடிதம் ஐஸ்வர்யாவிடமிருந்து வந்திருந்தது. “அம்ஜத்... எனக்குத் தெரியும். நீ என்னைக் காப்பாத்த டிரை பண்ணியிருப்பே. லவ் யூ பிரதர்” எனகிற குறிப்பைப் பார்த்ததும் அம்ஜத் உணர்ச்சிவசப்பட்டார். உமாபதிக்கு எழுதியிருந்த ஐஸ்வர்யா “உங்க விளையாட்டுத் திறமை எனக்குப் பிடிக்கும். பரஸ்பரம் நாம வெறுப்பேத்திட்டு இருந்திருக்கோம். இருந்தாலும் நீங்க என் இன்ஸ்பிரேஷன்” என்பது போல் குறிப்பிட்டிருந்த வரிகளைப் பார்த்து “எங்க அக்காவோட பாப்பாவும் இப்படித்தான். துறுதுறுன்னு இருக்கும். ஆனா ஐஸ்வர்யாவை விடவும் சரண் திரும்பி வந்தா நல்லாயிருக்கும்” என்றார் உமாபதி.

சர்வைவர் - 59
சர்வைவர் - 59

“என்னடா இது?! இந்த வானத்தைப் போல அணியை நம்பவே முடியாது போல இருக்கு. சரண் மேல அத்தனை கொலை வெறியா இருந்தாங்க. அதனால்தான் நானும் காண்டாகி சரணுக்கு எதிரா ஓட்டு போட்டேன். இப்ப என்னடான்னா ஒரு லெட்டர் வந்தவுடனே சரணுக்காக இப்படி உருகறானுங்க. தப்பே பண்ணாத ஐஸ்வர்யாவை போய் அனுப்பிச்சட்டமேடா. எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு” என்று பிறகு நாராயணனிடம் அனத்தினார் அம்ஜத். ஆனால் நாராயணனனோ “நம்மள மீறி இப்படித்தான் சில விஷயங்கள் நடக்கும்” என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னது யதார்த்தம்தான். ஆனாலும் ‘இப்படியா ஒரு மனுஷன் இருப்பான்?!' என்றும் கூடவே தோன்றியது.

ஓலை வந்தது. ‘இந்த வார தலைவருக்கான போட்டி’. பொறுமை என்பதுதான் அதற்கான தகுதியாம். எனில் லேடி காஷைத்தான் கேள்வியே கேட்காமல் தலைவராக்க வேண்டும்.

சர்வைவர் - 59
சர்வைவர் - 59
“வாங்க சர்வைவர்ஸ்” என்று கொம்பர்களை வரவேற்ற அர்ஜுன், “ரெண்டு எலிமினேஷன் அடுத்தடுத்து நடந்தது. இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?” என்று பஞ்சாயத்தை ஆரம்பித்தார். “ரொம்ப கஷ்டமான நிலைமை. ஐஸ்வர்யா கிளம்பும் போது வேற யாரோ ஒரு ஆளைப் பார்க்கற மாதிரி இருந்தது. என்னை சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவாங்க. இப்ப என்னை சாப்பிடச் சொல்ல யார் இருக்கா?” என்று சினிமா சென்டிமென்ட் காட்சி மாதிரி கலங்கினார் நந்தா.

“துறுதுறுன்னு சுத்திட்டு இருக்கும். நான்தான் அவங்களுக்கு எதிரா வோட் பண்ணேன். எவ்வளவோ சொன்னேன். சரணுக்கு ஆதரவா இருந்தாங்க” என்றார் இனிகோ. “அப்படின்னா ஒரு ஆளை பிடிக்கலைன்னு நீங்க வோட் பண்றீங்களா? ஒரு பைட்டர்னு ஒரு ஆளை நீங்க பார்க்கலையா... கேரக்ட்டர்தான் முக்கியமா?” என்று முக்கியமான கேள்வியை அர்ஜுன் கேட்டதும் “ஆமாம் சார்... கேரக்டர் முக்கியம்” என்றார் இனிகோ. “கேரக்டர் + நம்பிக்கை. ரெண்டும் முக்கியம்” என்றார் உமாபதி. “40% தான் சார் கேம்... மிச்சம் அந்த ஆளு எப்படின்னுதான் பார்ப்பேன்” என்றார் விக்ராந்த். “நான் ஐஸ்வர்யா கிட்ட அதிகம் பேசினதில்ல” என்று விக்ராந்த் சொன்னதையே வழிமொழிந்த லேடி காஷ், “என்னால ஆளுங்களைக் கணிக்க முடியும்னு ஐஸ்வர்யா ஒருமுறை என்கிட்ட சொன்னாங்க. ஆனா அதிலே அவங்களே தவறிட்டாங்களோன்னு தோணுது” என்று அவர் பின்னிணைப்பாகச் சொன்னது சரண் தொடர்பானது என்பது வெளிப்படை.

சர்வைவர் - 59
சர்வைவர் - 59

பஞ்சாயத்திற்கான ஃபுட்டேஜ் தேறியதும் “ஓகே. தலைவர் போட்டியைப் பற்றிப் பார்க்கலாம்” என்று அடுத்த விஷயத்திற்குத் தாவினார் அர்ஜுன். இது சீரியஸே இல்லாமல் காடர்களுக்கு இடையே நிகழ்ந்த ஜாலியான போட்டி மாதிரியே இருந்தது.

நடுவேயுள்ள பலகையில் ஒரு சிறிய மணல் மூட்டை இருக்கும். நடுவர் குரல் தந்ததும் இருபுறமிருந்தும் வரும் போட்டியாளர்களில் எவர் அந்த மணல் மூட்டையை சாதுர்யமாக முதலில் எடுத்துச் செல்கிறாரோ, அவருக்கு இரண்டு பாயிண்ட். எதிராளி தொட்டுவிட்டால் அவருக்கு ஒரு பாயிண்ட் கிடைக்கும். மொத்தம் பத்து பாயிண்ட் எடுத்தவர் வெற்றியாளர்.

சர்வைவர் - 59
சர்வைவர் - 59

முதலில் விஜியும் உமாபதியும் போட்டியில் இறங்கினார்கள். “இதை ஜாலியாகத்தான் விளையாடப் போறேன்” என்று உமாபதி முதலிலேயே அறிவித்துவிட்டார். என்றாலும் அது மிகையான ஜாலியாக மாறிவிட்டது. உமாபதி முன்னிலையில் இருக்க, விஜி தொடர்ந்து தோற்றுக் கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டு அவரும் பாயிண்ட்டுகளில் முன்னேற, ஒருவழியாக ஆட்டத்தை முடித்துவைத்தார் உமாபதி.

அடுத்ததாக இனிகோவும் அம்ஜத்தும் மோதினார்கள். இந்த ஆட்டம் தீவிரமும் இயல்பும் கலந்திருந்தது. கபடி ஆடி பழக்கமுள்ள இனிகோ இந்த விளையாட்டை மிக லாகவமாகக் கையாண்டார். சில இடங்களில் அவரது ரிப்ளெக்ஸ் அசைவுகள் அவருக்கு அபாரமாக ஒத்துழைத்தன. அம்ஜத்தும் இனிகோவிற்கு ஈடு கொடுத்தாலும் கடைசியில் இதில் இனிகோ வென்றார்.

இப்போது கடைசியாக உமாபதியும் இனிகோவும் மோதியாக வேண்டும். இதிலும் தனது ஜாலியான பாணியைப் பின்பற்றினார் உமாபதி. ஒரு கட்டம் வரைக்கும் இது சுவாரஸ்யமாக இருந்தாலும் பிறகு “முடிச்சுத் தொலைங்கப்பா” என்று சலிப்பு வந்தது. இதில் இனிகோ வென்றார். ஆக... கொம்பர்களின் புதிய தலைவர் இனிகோ. அவருக்கான அனுகூலங்களும் சக்திகளும் வழங்கப்பட்டன.

சர்வைவர் - 59
சர்வைவர் - 59
“உங்க பழைய எமோஷன் பேக்கேஜையெல்லாம் இன்னமும் சுமந்திக்கிட்டு இருக்காம அதை தூக்கிப் போட்டுட்டு விளையாடுங்க” என்று அறிவுறுத்திய பின்னர் அர்ஜுன் புறப்பட்டுச் சென்றார்.

அனைவரும் தீவிற்குத் திரும்பிய பின்னால் இரவில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. விஜியின் தலையணையில் அடியில் ஒரு பாம்பு இருந்ததைப் பார்த்ததும் போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். “விஷமில்லாத பாம்புன்னு சொல்றாங்க. நமக்கு எப்படிங்க தெரியும். வீட்டுக்கு யாரு பதில் சொல்றது. It is not a joke” என்றார் நந்தா. “நாம ஒண்ணா நின்னு போராடணும்” என்றார் விக்ராந்த். “முழுசா வலை அடிச்சு கொடுத்தாதான் தூங்க முடியும். இல்லைன்னா கஷ்டம்” என்றார் இனிகோ.

சர்வைவர் - 59
சர்வைவர் - 59
“தோழர்களுக்கு ஏற்பட்ட இடையூறு துரதிர்ஷ்டமானது. ஆனால் அது விஷமற்ற பாம்பு” என்று சர்வைவர் டீமில் இருந்து ஒரு வெள்ளைக்காரர் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.

‘சர்வைவர் விளையாட்டிற்குச் சென்றுவிட்டு பாம்பைக் கண்டு பயப்படலாமா?' என்று ஒருபக்கம் தோன்றினாலும் போட்டியாளர்களின் நோக்கில் இருந்து பார்க்கும்போது அவர்களின் அச்சத்தை புறந்தள்ளி விடமுடியாது. இதற்குப் பழக்கப்படாத பின்னணியில் இருந்து வந்தவர்கள்தானே?!

ஆனால், மனிதர்களை விடவும் பாம்பு அதிக ஆபத்தில்லாதது என்பதுதான் யதார்த்தமான உண்மை.