ஒரு சுவாரஸ்யமான, பரபரப்பான ரிவார்ட் சேலன்ஜ் நடந்து முடிந்ததுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். இதில் பெரிய சாகசமெல்லாம் ஏதுமில்லை. ஆனால் "அடப்போங்கப்பா...” என்று நாமே பொறுமையை இழக்குமளவிற்கு அத்தனை இம்சையான போட்டியாக இருந்தது.
எந்த அணி வெற்றி பெறும் என்று உறுதியாகச் சொல்லி விட முடியாத படி அதிர்ஷ்டக்காற்று மாறி மாறி வீசியது மட்டுமே இந்தப் போட்டியின் சுவாரஸ்யம்.

சர்வைவர் 60-ம் நாளில் என்ன நடந்தது?
கொம்பர்கள் ‘ரிவார்ட் சேலன்ஜை சந்திக்க வந்திருந்தார்கள். “என்ன இனிகோ. புதிய தலைவர் ஆனவுடனே ரொம்ப பந்தா பண்றீங்களாமே... ‘டிரைபல் கிங்’ன்னுதான் உங்களைக் கூப்பிடணும்னு கட்டாயப்படுத்தறீங்களாமே?” என்று ஆரம்பத்திலேயே ஜாலி மூடை டாப் கியரில் போட்டார் அர்ஜுன். “ஆமாம் சார். இவன் பண்ற அட்ராசிட்டி தாங்க முடியலை” என்று போட்டுக் கொடுத்தார் உமாபதி. “ஒரு கேப்டனா இனிகோவிற்கு எவ்வளவு மார்க் தருவீங்க?” என்கிற அவரின் அடுத்த கேள்விக்கு ‘மைனஸ்’ என்று அம்ஜத் கலாய்க்க ஆரம்பிக்க “மைனஸ் 5000” என்று பங்கம் செய்தார் உமாபதி.

“நேத்து நைட்டு பாம்பு வந்துச்சு சார்” என்று குழந்தைக்குரிய உடல்மொழியில் விஜி சொல்ல “அய்யோ… அடப்பாவமே!” என்று பாவனையாகக் கரிசனை காட்டினார் அர்ஜுன். “நாங்க டென்ட்ல படுக்காம வெளிலதான் படுத்தோம்” என்று அவர்கள் கோரஸாக சொல்ல “புது லீடர் வந்தவுடனே நடுத்தெருவுல நிக்க வெச்சிட்டாரா” என்று இனிகோவை மேலும் வாரினார் அர்ஜுன்.
“உங்களுக்கு ‘மஃப்பின்’… அப்படின்னா என்னன்னு தெரியுமா?” என்று நமட்டுச் சிரிப்புடன் அர்ஜுன் மையமாகக் கேட்க “கொடுங்க சார். சாப்பிட்டுப் பார்த்து சொல்லிடுவோம்” என்று வெள்ளந்தியாகச் சொன்னார் இனிகோ. அது வனேசாவின் வளர்ப்பு நாயின் பெயராம். போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவரிடமும் அர்ஜுன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
அது சார்ந்த தகவல்களை வரிசையாக அர்ஜுன் பகிர்ந்து கொள்ள ஒவ்வொருவரின் முகத்திலும் பரவசம், சோகம், கண்ணீர், மகிழ்ச்சி என்று கலவையான உணர்ச்சிகள் தெரிந்தன. சில உறவினர்கள் அர்ஜுன் பேசும் போது நம்பவில்லையாம். “யாருப்பா விளையாடறது?!” என்று அவர்கள் சலித்துக் கொள்ள அர்ஜுன் மறுபடியும் அழைக்க வேண்டியிருந்ததாம். இதைச் சொல்லும் போது கூட்டம் வாய் விட்டு சிரித்தது. தன் மனைவி, மகளைப் பற்றிய தகவல் கிடைத்ததும் நந்தா கண்கலங்கினார். போலவே அம்ஜத்தும்.
அனைவருடைய தகவலையும் பகிர்ந்து கொண்ட அர்ஜூன், “ஒகே... இந்தப் போட்டில நீங்க ஜெயிக்கறீங்களோ. இல்லையோ... அது ரெண்டாம் பட்சம். கலந்துக்கறதுதான் பெரிய விஷயம்” என்று சொல்லி ஊக்கப்படுத்தினார்.
அடுத்ததாக ‘ரிவார்ட் சேலன்ஜிற்கு’ வந்தார் அர்ஜுன். இது நான்கு பேர் கொண்ட அணியாக ஆட வேண்டிய ஆட்டம். ஒன்பது பேர் இருந்ததால் அதிர்ஷ்டக்கல் மூலம் அணி பிரிக்கப்பட்டது. நீலநிறக்கல் வந்ததால் லேடி காஷ் போட்டியில் பங்கேற்காமல் வெளியில் இருந்தார். ‘எந்த அணி ஜெயிக்கும் என்பதை லேடிகாஷ் சரியாகக் கணித்தால் ரிவார்டில் அவருக்கும் ஒரு பங்கு கிடைக்குமாம். விக்ராந்த், விஜி, இனிகோ, அம்ஜத் ஆகியோர் இருந்த அணியை தேர்வு செய்தார் லேடிகாஷ்.

போட்டியின் கான்செப்டை விளக்கத் துவங்கினார் அர்ஜுன். இரண்டு ஆள் உயரமுள்ள மரச்சட்டத்தின் உச்சியில் ஒரு சாவி இருக்கும். இரண்டு கொம்புகளைக் கொண்டு அந்தச் சட்டத்தில் உள்ள துளைகளைக் கொண்டு படிக்கட்டுகளை அமைத்து ஒருவர் ஏற வேண்டும். அவர் உச்சியை அடைந்து சாவியை எடுத்து தந்தவுடன் அதைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் மிதவையை ரிலீஸ் செய்ய முடியும். நால்வரும் அந்த மிதவையில் ஏறி, கடல்நீரில் சிறிது தூரம் பயணித்து ஒரு மேடையில் வைக்கப்பட்டிருக்கும் மூட்டைகளை எடுத்துக் கொண்டு யூடர்ன் அடித்து திரும்பி வர வேண்டும்.
அந்த மூட்டையில் சர்வைவர் பெயர் பொறித்த புதிர்க்கட்டைகள் இருக்கும். இந்தப் புதிர்க்கட்டைகளை சரியாக அடுக்கி விட்டு சிறிது தூரத்தில் உள்ள கம்பத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்களே வெற்றியாளர். இந்தப் புதிர்க்கட்டைகளை அமைப்பதுதான் இருப்பதிலேயே பெரிய சவால். ஏனெனில் நான்கு ஊசலாடும் பலகையின் மீதுதான் அந்தப் புதிர்க்கட்டைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். எனில் நான்கு போட்டியாளர்களும் கயிறு கொண்டு அந்தப் பலகை சாயாதவாறு நிமிர்த்திப் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்னொரு பக்கம் அதன் மேல் புதிரை அமைக்க வேண்டும்.

உயரமான மரச்சட்டத்தில் ஏறி சாவியை எடுப்பதற்காக நந்தாவும் அம்ஜத்தும் அவரவர்களின் அணியில் இருந்து கிளம்பினார்கள். இரண்டு மரத்துண்டுகளை அடுத்தடுத்த துளைகளில் பொருத்தி கால் வைப்பதற்கான படிக்கட்டை ஏற்படுத்திக் கொண்டே மேலே செல்ல வேண்டும். நந்தா இதை எளிதாக முடித்து விட்டு சாவியை எடுத்து தனது அணியிடம் ஒப்படைத்தார். சில நிமிடங்கள் கழித்து அம்ஜத்தும் சாவியை எடுத்தார்.
இவர்கள் அந்தச் சாவியைக் கொண்டு மிதவையை ரிலீஸ் செய்ய வேண்டும். “நாராயணன் கூட சரியான காமெடி. அவர் பக்கம் இருக்கிற முடிச்சை அவிழ்த்துட்டு இன்னமும் அவிழ்க்கலை... ன்னு சொல்லிட்டே இருந்தாரு. நான் போய்ப் பார்த்தேன்’ என்று சலித்துக் கொண்டார் உமாபதி. இதனால் மிதவையைக் கிளப்புவதில் சில நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. நந்தா அணி சற்று முன்னிலையில் இருந்தாலும் விக்ராந்த் அணியும் பின்னால் வந்தது. ஒரு கட்டத்தில் இரு அணிகளும் சமமாக மிதவையில் மேடையை நோக்கி சென்றன. அதன் மீது பாயும் போது நந்தா கால் வழுக்கி தண்ணீருக்குள் விழுந்தார். என்றாலும் சமாளித்துக் கொண்டு மூட்டைகளை எடுத்து விட்டார்.
இரண்டு அணிகளும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் திரும்பி வந்தன. இந்தச் சமயத்தில் உமாபதியின் துடுப்பு உடைந்து விட்டதால் அவர் கையைப் பயன்படுத்தி நீரைத் தள்ளிக் கொண்டு வந்தார்.

கரைக்குத் திரும்பியதும் மூட்டையைப் பிரித்து புதிர்க்கட்டைகளை எடுக்கத் துவங்கினார்கள். இனிதான் அவர்களுக்கு பயங்கர சோதனை ஆரம்பம். விக்ராந்த் இருக்கும் அணியில் விஜியைத் தவிர அனைவருமே புதிர் தீர்ப்பதில் பலவீனமானவர்கள். அதிலும் இனிகோ இதில் பூஜ்யம். எனவே கட்டைகளை எவ்வாறு அமைப்பது என்கிற பொறுப்பை ஒட்டுமொத்தமாக விஜியிடம் ஒப்படைத்து விட்டார்கள். போலவே நந்தா அணியிலும் பொறுப்பை வனேசாவிடம் ஒப்படைத்து விட்டார்கள். (நிதானமாக அமர்ந்து சிக்கலைத் தீர்க்கும் வேலை என்றால் அது பெண்களுக்கு என்றாகி விட்டது!)
புதிர்க்கட்டைகளை அமைப்பதில் விஜி சற்று வல்லவர்தான் என்றாலும் இந்தச் சமயத்தில் மிகவும் தடுமாறினார். மாறாக வனேசா ஆச்சரியப்படுத்தினார். அவர் கட்டைகளை சரியான வாக்கில் அடுக்கினார். இப்போதுதான் உண்மையான சவாலே ஆரம்பிக்கும். அதாவது நான்கு பேரும் கயிற்றைப் பிடித்து நான்கு துண்டு பலகைகளும் சாயாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் மீது புதிர்க்கட்டைகளை அமைக்க வேண்டும். நால்வரும் பொறுமையாக ஒத்திசைவுடன் செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும். ஒருவர் கயிற்றை தவற விட்டால் கூட அனைவரின் உழைப்பும் சேர்த்து வீணாகும்.
இவர்கள் அடுக்கும் போது வனேசா வைத்திருந்த ஒரு கட்டை கீழே விழுந்து விட்டது. வெடிகுண்டை எடுக்கும் நிதானத்துடன் அதை காலால் நகர்த்தி எடுத்தார். நந்தா அணி ஒரு மாதிரியாக புதிரை முக்கால் பாகம் முடிக்கும் போது விக்ராந்த் அணியின் அதுவரை அடுக்கியிருந்த குறைந்தபட்ச கட்டைகள் கூட சரிந்து விட்டன. காற்று வேறு பலமாக அடித்துக் கொண்டிருந்ததால் போட்டியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

நாராயணன் கட்டையை அடுக்குவதில் சற்று சொதப்பியதால் உமாபதி டென்ஷன் ஆகி கத்திவிட்டார். “அவர் எப்பவுமே ஜாலியா ஆடுவார். இவ்ளோ டென்ஷன் ஆகி நான் பார்த்ததில்ல” என்றார் வனேசா. நந்தா அணி ஒரு மாதிரியாக புதிரை முழுமையாக அமைத்து முடித்து விட்டார்கள். இப்போது அவர்கள் கயிற்றைப் பிடித்துக் கொண்டே பின்னால் நகர்ந்து அங்குள்ள நிலையைத் தொட வேண்டும். ஆனால் இந்தச் சமயத்தில் கட்டைகள் சரிந்தன. பாவம், மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
இதே சமயத்தில் விக்ராந்த் அணியின் புதிர்க்கட்டைகள் ஏறத்தாழ முடியும் நிலையில் இருந்ததால் ஆட்டம் தலைகீழாகத் திரும்பியது. இவர்கள் அணி முந்திக் கொள்ளுமோ என்று தோன்றியது. இந்தச் சமயத்தில் அம்ஜத்தின் பக்கத்திலுள்ள கட்டைகள் சரிந்து விழுந்தன. ஒரு கட்டை முன்பக்கத்தில் விழுந்ததால் அவருடைய பார்வைக்கு அது படவில்லை. “எங்கே இன்னொரு துண்டு?” என்று அவர் அலறிக் கொண்டிருக்க அர்ஜுன் வந்து உதவினார்.

நந்தா அணி இரண்டாவது முறையாக அடுக்கி முடித்தார்கள். இதை அடுக்குவதில் அவர்களுக்கு சற்று அனுபவம் வந்து விட்டதால் மளமளவென வேலை முடிந்தது. இவருடைய அணியில் ஒவ்வொருவராக பின்னால் சென்று எல்லையைத் தொட்டு விட்டார்கள். நந்தா மட்டும் பாக்கி. அவர் மிக மிக நிதானமாக பின்னால் நகர்ந்து சென்றார். ‘ஹப்பாடா! ஆட்டம் முடியப் போகிறது’ என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அந்தக் கொடுமை நிகழ்ந்தது. கட்டைகள் சரிந்து விழுந்தன. நந்தா அணியில் ஒருவரின் முகத்திலும் அசைவில்லை. பேயடித்தது போல் உறைந்து நின்றார்கள்.
இந்தச் சமயத்தில் மறுபடியும் விக்ராந்த் அணி முன்னேற அவர்கள் வென்று விடுவார்களோ என்று தோன்றியது. ஆனால் அவர்களின் கட்டைகளும் சரிய “போங்கடா... டேய்” என்று நமக்கே வெறுப்பாகியது. என்றால் அவர்கள் எத்தனை பொறுமையை இழந்திருக்க வேண்டும்?!
இப்படியே விட்டால் இந்தப் போட்டி முடியாது என்கிற நிலைமை அர்ஜுனுக்கும் புரிந்திருக்க வேண்டும். போட்டியாளர்கள் பின்னால் நகர்ந்து செல்ல வேண்டிய எல்லையை சற்று குறைத்து முன்னால் அமைத்தார். நந்தா அணி மறுபடியும் தங்களின் பகீரதப் பிரயத்தனத்தை ஆரம்பித்தது. மீண்டும் அவர்கள் மளமளவென அடுக்கி, ஒன்றன் பின் ஒருவராக எல்லையைத் தொட்டனர். நந்தா மட்டும் பாக்கி. மீண்டும் பழைய நிலைமையாக ஆகி விடுமோ என்று நமக்கே பதற்றமாக இருந்தது. விக்ராந்த் அணி கூட தங்களின் விளையாட்டை நிறுத்திவிட்டு திகிலுடன் இவர்களை வேடிக்கை பார்த்தனர்.

நந்தா மிகப் பொறுமையாகவும் கவனமாகவும் அடி மேல் அடி வைத்து பின்னால் நகர்ந்து ஒருவழியாக எல்லைக் கோட்டின் மீது காலை வைத்ததும் தானே ஜெயித்தது போல் மகிழ்ச்சியில் கூக்குரல் எழுப்பினார் அர்ஜுன். பாவம் அவரும் எவ்வளவு நேரம்தான் வேடிக்கை பார்ப்பார்? நந்தா அணி உற்சாகத்துடன் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டார்கள். உண்மையில் இது அவர்களின் அசாதாரணமான பொறுமைக்கும் கூட்டணிக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. குறிப்பாக புதிரை தலைமை தாங்கி அமைத்து தந்த வனேசா தனித்துக் குறிப்பிடப்பட வேண்டியவர்.
லேடிகாஷின் கணிப்பு பொய்த்து விட்டதால் அவருக்கு ரிவார்டில் பங்கு கிடைக்காது, “என்னாச்சு உமாபதி... இனிகோ அண்ணன் விட்டுக் கொடுத்துட்டாரா” என்று ஜாலியாக அவரை நோண்டினார் அர்ஜுன். “சார்... அவருக்கு puzzle-க்கு ஸ்பெல்லிங்கே தெரியாது சார்” என்று அண்ணனின் காலை வாரினார் உமாபதி.

“உங்களுக்கு என்ன ரிவார்டு தெரியுமா” என்று அர்ஜுன் கேட்க நந்தா அணி ஆவலாக பார்த்தது. அந்தத் தீவின் பிரபல செஃப் ஒருவர் வந்து பிரத்யேகமான உணவுகளைத் தயாரித்து தருவாராம். இதுதவிர சிக்கன் கிரில் உள்ளிட்ட விருந்தும் உண்டாம். மேலும் சர்வைவர் கரன்ஸியில் 30 மதிப்புள்ள நாணயத்தை தந்து அவர்களை விடையனுப்பினார் அர்ஜுன்.