வாரத்திற்கு இரண்டு நாள்கள் காரமான மிளகாய் பஜ்ஜி, மீதமுள்ள நாள்களில் சர்க்கரைப் பொங்கல். ஆனால் சில நாள்களில் வெறும் ஆறிப் போன சாதம். இதுதான் சர்வைவரின் வழக்கமான ஃபார்மெட். ரிவார்ட் சேலன்ஞ், இம்யூனிட்டி சேலன்ஞ் ஆகியவை நிகழும் நாள்களில் பரபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி, மற்ற நாள்களில் சுமாராகத்தான் போகிறது. ஆனால் விதிவிலக்காக சில நாள்களில் சுவாரஸ்யமாகவும் அமைந்து விடுகிறது. அப்படியொரு சுவாரஸ்ய எபிசோடுதான் நேற்று நடந்தது.
இரண்டு பொய், ஒரு உண்மை சொல்லும் விளையாட்டில் நடந்த கலகலப்பான உரையாடல் சிறப்பு. அதிலும் பேச்சு சுவாரஸ்யத்தில் ‘அடங்கொய்யால...' என்பது போல் இனிகோவை நோக்கி வனேசா சொன்ன அந்தத் தருணம் செம க்யூட்.
இதை விடவும் ‘மூன்றாம் உலகத்தில்’ ஐஸ்வர்யா வொர்க்அவுட் செய்த காட்சிகள் ஹாலிவுட் திரைப்பட காட்சிகளுக்கு நிகரானவை.

சர்வைவர் 61-ம் நாளில் என்ன நடந்தது?
ரிவார்ட் சேலன்ஜ் முடித்து கொம்பர்கள் தீவிற்குத் திரும்பிய பிறகு, "தங்கள் அணி எப்படியெல்லாம் வெற்றிகரமாகத் ‘தோற்றது’ தெரியுமா?” என்று இனிகோ அளந்து விட்டுக் கொண்டிருக்க, பதிலுக்கு அவரைக் கலாய்த்துக் கொண்டிருந்தார் உமாபதி. “மஃப்பின்றது வனேசா வீட்டு நாயோட பேரு. அதைப் போய் கேக்கு–ன்னு நெனச்சு சாப்பிடக் கேட்டிருக்கே” என்று உமாபதி பங்கம் செய்ய, சூழல் கலகலப்பானது. உமாபதியிடம் சில அடாவடித்தனங்கள் இருந்தாலும் அவர் இல்லையென்றால் சர்வைவர் நிகழ்ச்சியில் கலகலப்பு பெரும்பாலும் குறைந்துவிடும் என்று தோன்றுகிறது.
ரிவார்ட் சேலன்ஜில் வெற்றி பெற்ற நந்தா, உமாபதி, நாராயணன், வனேசா ஆகிய நால்வரும் விருந்திற்குச் சென்றார்கள். விருந்து என்றதும் என்னமோ, ஏதோ என்று பார்த்தால் கடைசியில் அது நம்ம ஊர் கையேந்தி பவன். டான்சானியாவின் பிரத்யேக உணவுகள் வரிசையாக மேசையில் இருக்க, நம்மூர் ரோட்டுக்கடை போலவே சிக்கனை க்ரில்லில் சுட்டுக் கொண்டிருந்தனர். கூடவே ஒரு இனிமையான பாட்டும்.
“அவங்களைப் பார்த்ததும் எங்க அம்மா ஞாபகம் வந்தது” என்று அங்கிருந்த பெண்மணியைப் பார்த்து நெகிழ்ந்தார் வனேசா. ஆப்பிரிக்க அம்மா பரிமாறிய சிக்கன் பீஸ், சிறியதாக இருந்ததால் “என்ன இது... காக்கா பிரியாணி மாதிரி இருக்கு” என்று வனேசா காமெடி செய்ய “எப்பவுமே இங்க ஊழல் நடக்குது. அர்ஜுன் சார். இதை என்னன்னு கேளுங்க” என்று ஜாலியாக புகார் செய்தார் உமாபதி. “ஊளல்’ என்று அந்த வார்த்தையை கையேந்தி பவன் அக்கா மழலைத் தமிழில் சொன்னது சிறப்பு. தேங்காயை வைத்து ஏதோ சிறப்பு உணவு என்று சொன்னார்களே என்று பார்த்தால் அது நம்ம ஊர் தேங்காய் சட்னி. “பாதில இறக்கி கொண்டு வந்துட்டாங்க” என்று கிண்டலடித்தார் உமாபதி.
“ஆத்தா... ஏதாவது பாடு ஆத்தா...” என்று பாசத்துடன் உமாபதி வேண்டுகோள் வைக்க தனக்குத் தெரிந்த ஒரே பாடலை மறுபடியும் பாடினார் அக்கா. “அடுத்த முறை நம்ம தீவுல இருக்கற பூனையைப் பிடிச்சு சுக்கா போட்ற வேண்டியதுதான்” என்று நந்தா காமெடி செய்ய “பூனை சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது” என்று சொன்ன உமாபதி, “ஆனா இது அந்தப் பூனைக்கு நல்லதில்ல” என்று பின்னிணைப்பாக சொன்னது பழைய கமென்ட். அக்காவிற்கு நன்றி சொல்லி அனைவரும் கிளம்பினார்கள்.

“அர்ஜுன் சார்... நாங்க சாப்பாடு செஞ்சு உங்களுக்கு அனுப்பறோம். பதிலுக்கு நீங்களும் அனுப்புங்க” என்று கொம்பர்கள் ஓர் அன்பு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். சர்வைவர் கரன்ஸியைக் கொண்டு நந்தா அணி ஷாப்பிங் செய்ய கிளம்பியது. அதே கறாரான சேல்ஸ்மேன் கம்புடன் குத்த வைத்து உட்கார்ந்திருந்தார். பேரம் பேசினால் எப்போதும் இளகாத அந்த சேல்ஸ்மேன், இம்முறை சற்று இறங்கி வந்தார். வனேசாவைப் பார்த்த ரியாக்ஷனோ என்னமோ!
இது மட்டுமில்லை. இதுவரை நாம் பெரும்பாலும் சீரியஸாகவே பார்த்திருந்த நந்தாவின் இன்னொரு ஜாலியான தருணத்தை இப்போது பார்க்க முடிந்தது. கடைக்காரரை பேரத்திற்கு சம்மதிக்க வைப்பதற்காக அவர் விதம்விதமாக ஆடிக்காட்டிய நடனம் எல்லாம் சுவாரஸ்யமான காமெடி ரகளை. “ஊரோரம் புளியமரம்” என்று ஆரம்பித்து உமாபதி குழுவும் சேல்ஸ்மேனை சுற்றி வந்து ஆடியதில் எக்ஸ்ட்ரா முட்டைகள் கிடைத்தன.
மிளகாய் பொடி, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி, முட்டை போன்றவை கிடைத்ததால் விஜி குஷியாகி விட்டார். “அர்ஜுன் சாருக்கு சமையல் சிறப்பா செய்யணும்” என்று இவர்கள் திட்டமிட “அவருக்கு நாலு முட்டையா... ஒண்ணு போதாதா... அவருக்கு கிடைக்காத சாப்பாடா?!” என்று அம்ஜத் கேட்டது மிக யதார்த்தமான கேள்வி. ஆனால் பஞ்சாயத்தில் இதை வைத்து அர்ஜுன் நிச்சயம் கிண்டல் செய்வார் என்று நினைக்கிறேன்.
“நாங்களே ரேஷன் அளவுலதான் சாப்பிடறோம். இருந்தாலும் இது அர்ஜுனுக்கான ஸ்பெஷல் சாப்பாடுன்றதால அளவுல்லாம் பார்க்காம எல்லாத்தையும் போடறோம்” என்றார் லேடி காஷ். “யப்பா... பார்த்துப்பா... டெய்லி இவிய்ங்க இப்படித்தான் வசதியா சாப்பிடறாய்ங்க போலன்னு அவரு நெனச்சிடப் போறாரு” என்று ஜாலியாக கமென்ட் அடித்தார் விக்ராந்த், (அர்ஜுன் தினமும் ஃபுட்டேஜ்களை பார்க்கிறார்தானே?!) ‘கொம்பர்களின் பாசப் படையல்’ என்று அந்த உணவுப் பார்சலின் மீது லேபிள் ஒட்டினார்கள். 'படையள்’ என்று லேடிகாஷ் தவறாக எழுதிவிட பிறகு அதைத் திருத்தினார் விஜி.

கடை சேல்ஸ்மேன்தான் மெசன்ஜர் வேலையும் செய்கிறார் போலிருக்கிறது. அவரிடம் இந்த பார்சலை கொடுத்து அனுப்ப, சேல்ஸ்மேன், டெலிவரி மேன் ஆகி அதைக் கொண்டு போய் அர்ஜுனிடம் ஒப்படைத்தார். சற்று வசதியான சூழலில் கையில் ஆங்கில நாவலுடன் அமர்ந்திருந்த அர்ஜுன் “ஓ... சாப்பாடு அனுப்பியிருக்காங்களா?” என்று சுவைத்துப் பார்த்து ‘வாவ்’ என்றார். “உங்க உணவுல உப்பு, காரம், இருக்கறது ஒருபக்கம் இருக்கட்டும். அன்பு இருப்பதுதான் முக்கியமானது” என்று திரைப்பட வசனம் போல் சென்டி பேசிய அர்ஜுன், பதில் மொய்யாக ‘அர்ஜுன் கிச்சன்’ல இருந்து உங்களுக்கு ஸ்பெஷல் சாப்பாடு வரும்’ என்று வாக்களித்தார்.
மூன்றாம் உலகம். பெரும்பாலான போட்டியாளர்கள் இந்த ஏரியாவைப் பற்றி சலிப்பும் அச்சமுமாக சொல்லிக் கொண்டிருக்கும் போது பார்வதிதான் வித்தியாசமான பார்வையை முதன் முதலில் முன்வைத்தார். அதற்குப் பிறகு இந்த ஏரியாவை வண்ணமயமாக்கி, ரொமாண்டிக் மூடிற்கு மாற்றுகிற பெருமை ஐஸ்வர்யா – சரண் ஆகிய இருவரைத்தான் சேரும்.
ஐஸ்வர்யா தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த காட்சிகளைப் பார்க்க பரவசமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. ஹாலிவுட் திரைப்படங்களில் ஹீரோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வான். என்றாலும் மனம் சோர்ந்து விடாமல் தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பான். அடுத்து வரும் சவால்களுக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளும் பயிற்சி அது. ஐஸ்வர்யாவைப் பார்க்கும்போது இதுதான் நினைவிற்கு வந்தது.
உடற்பயிற்சி முடித்து திரும்பிய ஐஸ்வர்யா, “சின்னப்பையா. என்ன பண்றே?” என்று சரணை ஜாலியாக கேட்க “யாராவது இப்படி என்னை கூப்பிட்டு மூணு நாளாச்சு” என்று நாஸ்டால்ஜியாவில் இறங்கினார் சரண். சரணுக்கு அதிர்ஷ்டம் அதிகமாக இருப்பதால் அவரை சாமியாராக்கி விடலாம் என்று நந்தா முன்பு காமெடியாகச் சொல்லிக் கொண்டிருந்தது உண்மையாகவே இப்போது நடந்துவிடும் போலிருக்கிறது.

மூன்றாம் உலகம் என்பது சரணிற்கு போதிமரமாக மாறி விட்டிருக்கிறது. “சூர்ய அஸ்தமனத்தின் ஒவ்வொரு துளியையும் பார்த்துக் கொண்டே இருந்தேன். செம ஃபீலா இருந்தது. எந்த யோசனையும் இல்லாமல் அப்படியே வெற்றாக அமர்ந்திருந்தேன். நல்லா இருந்துச்சு. இங்க இருக்கற ஒவ்வொரு சத்தத்தையும் கேட்டுக்கிட்டு இருக்கேன்" என்று இயற்கையோடு ஃபெவிகால் போட்டது போல் ஒட்டிக்கொண்ட சரணைப் பார்த்து “உன்னைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு” என்று கிண்டலடித்தார் ஐஸ்வர்யா.
“நான் நாளைக்கு வொர்க்அவுட் பண்றேன். நீ என்னை மாதிரி வெறுமனே உக்காந்து பாரு” என்று பரஸ்பர ஒப்பந்தத்தை இருவரும் போட்டுக் கொண்டார்கள். விட்டால் சரண் மூன்றாம் உலகத்திலேயே செட்டில் ஆகிவிடுவார் போல!
கொம்பர்கள் தீவிற்கு ஒலை வந்திருந்தது. ஒரு ஜாலியான டாஸ்க். போட்டியாளர்கள் மூன்று ஸ்டேட்மெண்ட்களைச் சொல்ல வேண்டும். அதில் இரண்டு பொய்யாகவும் ஒன்று உண்மையாகவும் இருக்க வேண்டும். எது உண்மை, எது பொய் என்பதை மற்ற போட்டியாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும். சிரிப்பும் கேலியுமாக இந்த டாஸ்க் நடந்தது.
“என் கணவருக்காக ஏழு வாரம் சாப்பிடாம விரதம் இருந்தேன். ஸ்கூல் படிக்கும் போது பள்ளிக்கூடம் போகாம டிபன்பாக்ஸை பிரிச்சு சாப்பிட்டுட்டு வீட்டுக்குப் போயிடுவேன். ஒருமுறை டிரையின் டிராக்ல மாட்டிக்கிட்ட பூனைக்குட்டியை காப்பாத்தினேன்...” என்று மூன்று ஸ்டேட்மென்ட்களை சொல்லி இந்த டாஸ்க்கை ஆரம்பித்தார் விஜி. “நீ ஒரு சோத்துமாடு. விரதம்லாம் இருந்திருக்க மாட்ட. ஸ்கூல் கட் அடிச்சு டிபன்பாக்ஸை மொக்கினதுதான் உண்மையா இருக்கும்” என்று உமாபதி எளிதாக கண்டுபிடித்துவிட, வெடித்து சிரித்தார் விஜி. மற்றவர்கள் தவறான விடையைச் சொன்னார்கள். (இயக்குநர் அகத்தியன் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க வேண்டும்!).
“வெங்கட் பிரபுவே என் கால்ஷீட் கேட்டு சுத்தினாரு. நான் மசிஞ்சு கொடுக்கலையே...“ என்கிற ரேஞ்சிற்கு இனிகோ பில்டப் கொடுக்க அவர் சொன்ன பொய்களை எளிதாக கண்டுபிடித்தார்கள். “மெக்ராத்தே என் கிரிக்கெட் திறமையை ஒருமுறை பார்த்து பாராட்டினார்” என்று விக்ராந்த்தும் அள்ளிவிட “பைக்ல டிரிபிள்ஸ் போய் போலீஸ்கிட்ட அடிவாங்கியது"தான் உண்மையான சம்பவமாம்.

“நான் சின்னப்பிள்ளையா இருக்கறப்ப...” என்று வனேசா ஆரம்பிக்க “நீ இன்னமும் சின்னப்பிள்ளைதான்” என்று இனிகோ வழிந்தார். "அடங்கொய்யா…” என்று வனேசா சட்டென்று அந்தச் சமயத்தில் சொல்லிவிட சூழல் ரணகளமான சிரிப்பில் மூழ்கியது. ஒரு நட்பு எப்போது நெருக்கமாக மாறும் என்பதை அத்தனை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதற்கான தருணங்களில் இதுவும் ஒன்று.
“எங்க அம்மா என்னைக் கவனிக்கலைன்னு ரோட்ல இறங்கி ஒரு ஃபாரினர் கூட போயிட்டேன்” என்று வனேசா இயல்பாக அடுத்து சொன்ன ஒரு சம்பவத்தைக் கேட்டு சபையே வெடித்து சிரித்தது. “என்னது… ஃபாரினர் கூட போயிட்டியா?” என்று உள்குத்து நகைச்சுவையுடன் இனிகோ அதிர்ச்சியாகக் கேட்க, சிரிப்பொலி உச்சத்திற்குச் சென்றது. இதன் பின்னணியில் ‘விடுகதையா,,. இந்த வாழ்க்கை’ என்கிற சோகப் பாடலைப் போட்டு காமெடியைக் கூட்டியது சர்வைவர் எடிட்டிங் டீம். “என் அஞ்சு வயசுல நடந்த விஷயம் இது” என்று வனேசா சொன்னவுடன்தான் ‘ஹப்பாடா!’ என்று நெஞ்சில் நிம்மதியாக கை வைத்துக் கொண்டார் இனிகோ.
தான் கலந்து கொண்டு ஒரு ஆடிஷனில் கேமரா எங்கு இருக்கிறது என்று தெரியாமல் நடித்த கதையை நாராயணன் ஏற்கெனவே சொல்லியிருப்பதால் அம்ஜத் அதை சரியாகக் குறிப்பிட்டு அந்த ஸ்டேட்மெண்ட்தான் உண்மை என்று கண்டுபிடித்து விட்டார்.
“என் செல்போன் நம்பர் மாறினாலும் என் நடிப்புத் திறமையில் வியந்து எப்படியோ என்னை தேடிக் கண்டுபிடிச்சு நடிக்கக் கூப்பிட்டாங்க” என்று அம்ஜத் அள்ளிவிட்டதை சிலர் நம்பிவிட்டார்கள். “ஒரு படம் பாதில நின்னுடுச்சு. இருந்தாலும் எனக்கு ஃபுல் பேமெண்ட் கொடுத்தாங்க” என்று அம்ஜத் சொன்னதை “ஒழுங்கா நடிச்சதுக்கே பேமெண்ட் வாங்கறது கஷ்டம்” என்று சினிமாத்துறை தொடர்பாக சேம் சைட் கோல் போட்டார் விக்ராந்த். அம்ஜத் டீம் உருவாக்கிய இக்ளூ என்கிற குறும்படம், பின்னர் முழுநீளத் திரைப்படமாக ஆகியதுதான் உண்மையான சம்பவமாம்.

லேடி காஷ் ஆயிரம் பாடல்களைப் பாடியிருப்பதை உமாபதி மட்டுமே சீரியஸாக எடுத்துக் கொண்டு உண்மை என்று சரியாகக் கண்டுபிடித்தார். அல்லது அவரும் போகிற போக்கில் அடித்துவிட்டாரோ என்னமோ! எதுவாக இருந்தாலும் லேடி காஷ் செய்திருப்பது ஒரு சாதனை. “ஆறு வயதில் சிகரெட் பிடித்து வீட்டில் அடிவாங்கினேன்” என்று நந்தா சொன்னதை பெரும்பாலோனோர் நம்பவில்லை. அவரது இமேஜிற்கு அது பொருந்ததாதாக இருந்தது. ஆனால் அதுதான் உண்மையான சம்பவமாம்.
கடைசியாக வந்தவர் உமாபதி. இவர் சொன்ன மூன்று சம்பவங்களில் "டிரிபிள்ஸ் போய் போலீஸிடம் அடிவாங்கியதுதான் உண்மையாக இருக்கும்” என்று பலரும் நம்பினார்கள். உமாபதியின் இமேஜ் அப்படி. ஆனால் பள்ளி கலைநிகழ்ச்சிகளில் சான்றிதழ் வாங்கியதுதான் உண்மையான சம்பவமாம்.
இந்த டாஸ்க் சிரிப்பானதாக இருந்தாலும் ஒருவரின் தற்போதைய இமேஜை வைத்து அவரின் பிற முகங்களை கணிப்பது எத்தனை தவறு என்பதை நமக்கு சீரியஸாக உணர்த்தியது.