Published:Updated:

சர்வைவர் 62: ஐஸ் டாஸ்க்கில் இம்யூனிட்டி ஐடல் ஜெயிச்சது இருக்கட்டும்... உமாபதி உடம்புக்கு என்னாச்சு?!

சர்வைவர் - 62

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 62-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் 62: ஐஸ் டாஸ்க்கில் இம்யூனிட்டி ஐடல் ஜெயிச்சது இருக்கட்டும்... உமாபதி உடம்புக்கு என்னாச்சு?!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 62-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 62
உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும் ‘ஐஸ்கட்டி’ சவாலில் போட்டியிட்டு ‘இம்யூனிட்டி ஐடலை’ உமாபதி வென்றதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். மற்றபடி வேறு ஒன்றுமே இல்லை. ‘சிரிப்பு டாஸ்குகளை’த் தந்து நிகழ்ச்சியை ஒப்பேற்றினார்கள். ஆனால் இவற்றின் மூலம் போட்டியாளர்களின் மனங்களில் உறைந்துள்ள சில ரகசிய பக்கங்களின் சிறிய துளிகளை நம்மால் அறிய முடியும். அவ்வளவே.

சர்வைவர் 62-ம் நாளில் என்ன நடந்தது?

சுரம், மூட்டுவலி, இருமல் போன்ற உடல் உபாதைகளால் உமாபதி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்ததால் ஆளாளுக்கு வந்து அவரை நலம் விசாரித்தார்கள்.

‘சர்வைவர் போட்டியாளர்களில் நாலைந்து பேருக்கு கொரானோ வந்ததால் திட்டமிட்ட நாள்களுக்கு முன்பே நிகழ்ச்சி முடித்து வைக்கப்பட்டது’ என்பது போன்ற தகவல்கள் ஏற்கெனவே உலவிக் கொண்டிருக்கின்றன. நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய லேடி காஷின் புகாரிலும் இது குறித்த தகவல் இருந்தது. உமாபதியின் உடல்நலக்குறைவு அதன் ஆரம்பத்தைத்தான் காட்டுகிறதா?

சர்வைவர் - 62
சர்வைவர் - 62

ஐஸ்வர்யாவைப் போலவே நந்தாவும் தீவிரமாக வொர்க்அவுட் செய்து கொண்டிருக்க “என் அக்கா பொண்ணு அஞ்சலை... வெச்சேன் பாரு நெஞ்சுல” என்று பாடி தேவாவின் கானா இசையை வியந்து கொண்டிருந்தார் விக்ராந்த். உமாபதிக்கு மருத்துவ சிகிச்சை தரப்பட்டது. “உங்க நுரையீரலை பரிசோதிக்கணும்” என்று அழைத்துச் சென்ற மருத்துவர் அதற்கான மருந்துகளைத் தந்தார்.

“இந்த இம்யூனிட்டி சவாலை ‘நாம’ எப்படி ஹேண்டில் பண்ணப் போறோம்?” என்று பழக்க தோஷத்தில் அம்ஜத் கேட்டு வைக்க “நாம இல்ல... நான்...ன்னு சொல்லிப்பழகு. இப்ப தனிநபர் ஆட்டம்” என்று தெளிவாகப் பதில் சொன்னார் நாராயணன்.

ஓலை வந்தது. மூன்று பாட்டில்களும் ஒரு குடுவையும் இருந்தன. ஒவ்வொரு பாட்டிலையும் வரிசையாகத் திறந்து அதிலுள்ள டாஸ்க்குகளை அதில் சொல்லியிருக்கும் ஆர்டரில் செய்ய வேண்டுமாம். இந்த வரிசையை கறாராகப் பின்பற்ற வேண்டும். இதில் எந்த ஊழலும் நடக்கக்கூடாது. இதை தலைவர் இனிகோ கண்காணிக்க வேண்டும் என்று கட்டளைகள் இருந்தன.

சர்வைவர் - 62
சர்வைவர் - 62

“நீங்க எதையெல்லாம் ஒதுக்கறீங்களோ, அதுதான் உங்களுக்கு அவசியமானதா இருக்கும்” என்று யோசிக்க வைக்கும் பொன்மொழியுடன் ‘யோகா’ பற்றிய முதல் டாஸ்க் அறிவிக்கப்பட்டது. சில யோகா பொஷிஷன்களின் புகைப்படங்களைக் காட்டி அதன்படி போட்டியாளர்கள் போஸ் தர வேண்டுமாம். உடல் ஃபிட்னெஸ் இல்லாவிட்டால் நம் உடல் வளைவதற்கு எத்தனை சிரமப்படும் என்பது இந்தத் தருணத்தில் தெரிந்தது. மேலும் அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் யோகா செய்து பழகாதவர்கள் என்பதை உணர முடிந்தது. என்றாலும் சில போஸ்களை அவர்கள் புகைப்படத்திற்கு நெருக்கமாக செய்து முடித்தது பாராட்டத்தக்கது. நமக்குள் இருக்கும் ஆற்றலை நாமே பல சமயங்களில் அறிய மாட்டோம். இது போன்ற சவால்கள்தான் நம்மை நமக்கே அடையாளம் காட்டுகின்றன.

ஆணின் கால் மீது பெண் ஏறி நிற்பது போன்ற முதல் போஸை சில ஜோடிகள் குத்துமதிப்பாக செய்து முடித்தன. முதுகை பின்பக்கமாக வில் போல வளைத்து இருவர் எதிரும் புதிருமாக நிற்கும் நிலையையும் தோராயமாக செய்தார்கள். ஆணின் தொடை மீது பெண் ஏறி நிற்கும் டாஸ்க்கை செய்யும்போது வனேசாவைத் தூக்கிய இனிகோ தடுமாறினார். ஒற்றைக் காலை மடித்து சூர்ய நமஸ்காரம் செய்யும் போஸை எளிதாக செய்தார்கள். ‘புன்னகை மன்னன்’ தீம் மியூசிக் பாடலில் கமலும் ரேவதியும் நிற்கும் ஒரு போஸை ஜாலியாக செய்து முடித்தார்கள். கடைசியாக வந்ததுதான் மிகக் கடினமான போஸ். என்றாலும் உமாபதி – விஜி, நந்தா – வனேசா ஆகிய இரண்டு ஜோடிகளும் புகைப்படத்திற்கு நெருக்கமாக செய்து முடித்தன.

இந்த ‘யோகா’ டாஸ்க்கை சிறப்பாக செய்த ஐவரை தலைவர் இனிகோ தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்கள் அடுத்து நிகழும் ‘இம்யூனிட்டி சவாலில்’ பங்கேற்க தகுதியடைவார்கள். இதைக் கேட்டவுடன் “இதை முதல்ல சொல்லியிருந்தா சீரியஸா பண்ணியிருப்பேன்” என்று அங்கலாய்த்தார் நாராயணன். ‘இந்த டாஸ்க்குகளை சரியாக செய்ய வேண்டும்’ என்பது அறிவிப்பில் இருந்ததே?

சர்வைவர் - 62
சர்வைவர் - 62
சிறந்த பங்கேற்பாளர்களாக விக்ராந்த், நந்தா, வனேசா. உமாபதி மற்றும் விஜியைத் தேர்ந்தெடுத்தார் இனிகோ. தலைவர் என்பதால் அவரும் தன்னிச்சையாகத் தேர்வானார்.

‘இம்யூனிட்டி சவால் பற்றிய குறிப்பு இருக்கும் பாட்டிலை எடுத்து வந்தார் இனிகோ. அது ஐஸ்கட்டியை கையில் சுமக்கும் சவால் என்பதால் பங்கேற்க மறுத்துவிட்டார் உமாபதி. உடல்நிலை இன்னமும் மோசமானால் என்ன செய்வது என்கிற அவரின் கவலை நியாயமானதே. ஆனால் விக்ராந்த் உள்ளிட்டவர்கள் வற்புறுத்தியதால் வந்து கலந்து கொண்டார். அது எத்தனை சிறந்த முடிவு என்பது பிறகுதான் தெரிந்தது.

ஒவ்வொரு போட்டியாளரும் ஐஸ்கட்டியை கையில் சுமந்து நிற்க வேண்டும். யார் அதிக நேரம் தாக்குப் பிடிக்கிறாரோ அவரே வெற்றியாளர். நந்தா வழக்கம் போல் ஃபோகஸ் செய்து கண்களை மூடி சிலை போல் நின்றார். சிலர் இரண்டு கைகளிலும் பிடித்திருக்க, சிலர் ஒற்றைக்கையைப் பயன்படுத்தினர். பிறகு கையை மாற்றிக் கொள்ளலாம் என்பது அவர்களின் நல்ல திட்டம். இந்த விஷயம் சர்வைவர் டீமிற்கு இப்போதுதான் உறைத்ததோ என்னமோ... “முதல் ஐந்து நிமிடங்களுக்கு மட்டும் கை மாற்றலாம். பிறகு ஒரே கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என்கிற அறிவிப்பை நாராயணன் செய்தார். “அதுக்குள்ள கையை மாத்தி மாத்தி வெச்சு செட்டில் ஆயிடுங்க” என்பது அவரின் டிப்ஸ்.

எந்தக் கையில் செட்டில் ஆவது என்பதைத் தீர்மானிக்கும் போது நந்தாவின் சாய்ஸ் தவறாகிவிட்டது. அவர் பிழையாக வலதுகையை தேர்ந்தெடுத்துவிட்டார். அவருக்கு அங்கு ஏற்கெனவே அடிபட்டிருப்பதால் சமாளிக்க முடியவில்லை. இப்போது போட்டியில் அடுத்த அறிவிப்பு வந்தது. கையை நன்றாக நீட்டிய படி பனிக்கட்டியை பிடித்திருக்க வேண்டும். இது போட்டியாளர்களுக்கு மேலும் சிரமத்தைக் கூட்டியது.

சர்வைவர் - 62
சர்வைவர் - 62

‘நரம்பு இழுக்குது’ என்று சொல்லி ஐஸ்கட்டியை முதலில் கீழே போட்டவர் விஜி. பிறகு வனேசாவும் இணைந்து கொண்டார். உமாபதி தனது கையை மிகச்சரியாக நீட்டியிருந்தார். ஆனால் மற்றவர்கள் இதை பின்பற்றாததால் உமாபதிக்குக் கோபம் வந்தது. குறிப்பாக நந்தாவின் கை சற்று மடங்கியிருந்ததால் “டாஸ்க்கை ஒழுங்கா செய்யற நாங்கள்லாம் பைத்தியக்காரனா?” என்று கத்த ஆரம்பித்து விட்டார். நாராயணனும் இது குறித்து நந்தாவைத் தொடர்ந்து எச்சரித்தார். பிறகு நந்தாவும் விக்ராந்த்தும் சமாளிக்க முடியாமல் விட்டுவிட எஞ்சியிருந்த உமாபதி வெற்றி பெற்றார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் போட்டியில் கலந்து கொள்ள முதலில் மறுத்த உமாபதி பின்பு அதில் வெற்றி பெற்றதில் ஒரு படிப்பினை உள்ளது. உடல்வலிமையை விடவும் மனவலிமை முக்கியமானது என்கிற பாடம்தான் அது. ‘இம்யூனிட்டி ஐடல்’ இருக்கிற இடத்தின் க்ளூ அடங்கிய ரகசிய ஓலை உமாபதியிடம் வழங்கப்பட்டது.

மூன்றாவது பாட்டிலில் இருந்தது, சிரிப்பும் சீரியஸூமாக இருந்த டாஸ்க். போட்டியாளர்கள் தரப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உண்மையாக பதில் சொல்ல வேண்டும்.

‘சர்வைவர் முடிந்த பிறகு தொடர்பில் இருக்காமல் போகக்கூடிய நபர் யார்?’ என்பது முதல் கேள்வி. வனேசாவின் பெயரைச் சொன்னார் விக்ராந்த். “அவங்க மலேசியாவுல இருக்காங்க” என்பது அவர் சொன்ன காரணம். (இதெல்லாம் ஒரு காரணமா?! நிகழ்ச்சியை விக்ராந்த்தின் மனைவி பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மையான காரணமாக இருக்கும்!).

“இனிமே இனிகோவோட சகவாசமே வேண்டாம்” என்று உமாபதி ஜாலியாகச் சொல்ல “நானும் உன் பேச்சு கா” என்று அதை எதிரொலித்தார் இனிகோ. “நாராயணன்தான் என் கூட டச்ல இருக்க மாட்டார்ன்னு தோணுது. அவர் கூட இன்னமும் நான் கனெக்ட் ஆகலை” என்று வனேசா சொல்ல, “எனக்கும் அப்படித்தான் தோணுது” என்றார் நாராயணன். (பிழைக்கத் தெரியாதவரா இருக்காரே! இனிகோவைப் பார்த்து கத்துக்கங்க பிரதர்).

சர்வைவர் - 62
சர்வைவர் - 62

இரண்டாவது கேள்வி: ‘இந்தப் போட்டியில் அதிகம் ஏமாற்றுபவர் யார்?’ – தன்னுடைய பெயர் பெரும்பான்மையாக சொல்லப்பட்டதைக் கண்டு உள்ளூற அதிர்ச்சி அடைந்தார் அம்ஜத். "வேடர்கள் அணியிலும் கும்மியடிச்சாரு. காடர்கள் அணியிலும் சிங்க் ஆனாரு. கொம்பர்கள் அணியிலும் ஒட்டிக்கிட்டாரு” என்றே பலரும் காரணம் சொன்னார்கள். “அதானே கேம்” என்று சமாளித்த அம்ஜத், “அப்படின்னா நான் நியூட்ரலா இருந்திருக்கேன்னுதானே அர்த்தம்” என்று லாஜிக் பேசினார்.

‘நட்பை விடவும் புகழ்ச்சிக்கு அடிமையானவர் யார்?’ என்பது அடுத்த கேள்வி. இதில் கலவையான பெயர்கள் வந்தாலும் அம்ஜத்தை மூன்று நபர்கள் குறிப்பிட்டார்கள்.

‘பரபரப்பான செய்திகளில் அடிபடுவதற்காக எதையும் செய்யத் துணிபவர் யார்?’ என்பது நான்காவது கேள்வி. நாராயணனும் நந்தாவும் இனிகோவின் பெயரைச் சொன்னார்கள். இனிகோ, நாராயணனின் பெயரை பதிலுக்குச் சொல்லி பழிவாங்கினார். உமாபதியின் பெயரை விஜி, அம்ஜத் சொன்னார்கள்.

‘சர்வைவரின் மூலம் பாடங்கள் கற்று புதிய மனிதராக மாறியவர் யார்?’ என்கிற ஐந்தாவது கேள்விக்கு ‘வனேசாவின்’ பெயரை அசடு வழிந்து கொண்டே சொன்னார் இனிகோ. ஏனெனில் அதற்கு முன்பாக இனிகோவின் பெயரை வனேசா சொல்லியிருந்தது காரணமாக இருக்கலாம். உமாபதியின் பெயரை நாராயணன் சொன்னார். அம்ஜத்தின் பெயரை மூவர் சொன்னார்கள். தன்னுடைய கோபத்தை இனி குடும்பத்தில் அவர் காட்டவே மாட்டாராம்.

அடுத்தது மிக ஜாலியான கேள்வி. சர்வைவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேட்கக்கூடாது. ‘கல்யாணத்தில் இருந்து ஓடிப் போகக்கூடிய நபர் யார்?’ என்கிற வில்லங்கமான கேள்விக்கு பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஜாலியாக வெற்றி பெற்றார் உமாபதி. ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கூட சொல்லலாம்.
சர்வைவர் - 62
சர்வைவர் - 62
"மிகவும் சென்சிட்டிவ்வான நபர்” என்கிற கேள்விக்கு நாராயணன் விக்ராந்த்தையும், அம்ஜத் வனேசாவையும் நந்தா இனிகோவையும், லேடிகாஷ் உமாபதியையும், விஜி வனேசாவையும், வனேசா விஜியையும், உமாபதி லேடிகாஷையும், விக்ராந்த் உமாபதியையும், இனிகோ உமாபதியையும் குறிப்பிட்டார்கள். (தலை சுத்துதா?!)

‘சிறந்த பொய்யர்’ என்கிற டெரரான கேள்வி அடுத்து வந்தது. ‘இனிகோ’ என்று வனேசா சொன்னதும் ‘அப்படியே ஷாக் ஆயிட்டேன்’ என்கிற போஸ் கொடுத்தார் இனிகோ. இது வில்லங்கமான கேள்வி என்பதால் “யாரும் இல்ல போல” என்று தீர்ப்பு சொல்லி இந்த டாஸ்க்கை முடித்து வைத்தார் இனிகோ.

‘இம்யூனிட்டி ஐடல்’ இருந்த இடத்தை தேடக் கிளம்பினார் உமாபதி. இந்தத் தீவு பற்றி இனிகோவிற்கு நன்கு தெரியும் என்பதால் உதவிக்கு அவரையும் அழைத்துக் கொண்டார். ‘வடக்கே உள்ள மாமரத்தில் தெற்குப் பார்த்த மரக்கிளையில், கிழக்கு சூரியன் உதிக்கும் போது மேற்குப் பக்கத்தின் அடியில் இருக்கும்’ என்று மரத்தடி ஜோசிய வரிகள் மாதிரி க்ளு எழுதியிருந்ததை வைத்து இருவரும் எப்படியோ கண்டுபிடித்து விட்டார்கள்.

சர்வைவர் - 62
சர்வைவர் - 62

இருவரும் தீவிற்குத் திரும்பிய போது “கொண்டு வந்துட்டியா. கொடு. நான் பார்த்துட்டு தந்தடறேன்” என்று புதுமாடல் மொபைலைக் கேட்பது போல் நாராயணன் கேட்க “கண்டுபிடிக்க முடியலை” என்கிற மகா பொய்யை சொல்லி அங்கிருந்து நகர்ந்து சென்றார் உமாபதி.

இம்யூனிட்டி ஐடல் கையில் இருப்பதால் இந்த வாரத்தில் உமாபதி வெளியேற மாட்டார். எனில் வரப்போகிற ‘இம்னியூட்டி சவாலில்' யார் தோற்று வெளியேறுவார்கள்?

பார்த்துடுவோம்.