சர்வைவரில் ‘கொம்பர்கள்’ என்கிற பெயரை இனி நாம் ஒட்டுமொத்தமாக மறந்து விடலாம். அந்த அளவிற்கு அது ‘லுலுவாயான’ அம்சமாக இருக்கிறது. காடர்களும் வேடர்களும் மனதளவில் இன்னமும் அணிகளாகவே பிரிந்திருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
பெரும்பான்மை என்பது ஜனநாயகத்தின் ஒரு நல்ல அம்சம். ஆனால் இந்த அம்சத்தால் சறுக்கல்களும் நேரும் என்பதை காடர்கள் நிரூபிக்கிறார்கள். பெரும்பான்மையான வாக்குகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டு இவர்கள் ‘டிரைபல் பஞ்சாயத்தில்’ ஆடும் முறையற்ற ஆட்டம் கண்டனத்துக்குரியது.
காடர்கள் அம்ஜத்தை இலக்காக வைத்துக் கொண்டு தூக்குவார்கள் என்று நினைத்ததற்கு மாறாக அம்ஜத்தை விடவும் வலிமையான ஆட்டக்காரரான ‘நந்தா’விற்கு ஸ்கெட்ச் போட்டு தூக்கிவிட்டார்கள்.
இந்த இரண்டு அணிகளுக்கும் உள்ளே பிரிக்க முடியாதபடி உறைந்திருக்கும் பாசத்தை நம் சமூகத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். சர்வைவர் என்கிற இந்த ரியாலிட்டி ஷோ துவங்கி ஏறத்தாழ வெறும் அறுபது நாள்களே ஆகின்றன. ஆனால் அதற்குள் இந்த மனிதர்கள் ஓர் அணியின் பெயரால் ஆவேசமான பிணைப்பு கொள்கிறார்கள். எனில், சாதி, மதம், இனம் போன்ற கண்மூடித்தமான, பல நூற்றாண்டுகளாக இயங்கும் கற்பிதங்களின் மீதான அபிமானங்களில் இருந்து நாம் எப்போது வெளியேறுவாம்? நினைத்தாலே திகைப்பாகத்தான் இருக்கிறது.

சர்வைவர் 64-ம் நாளில் என்ன நடந்தது?
டிரைபல் பஞ்சாயத்து ஆரம்பித்தது. “என்ன நந்தா... இம்யூனிட்டி சவால் முடிஞ்சதுல இருந்து சைலண்ட்டா இருக்கீங்க? என்ன காரணம்?" என்று நமட்டுச் சிரிப்புடன் நந்தாவின் வாயைக் கிளறினார் அர்ஜுன். “கை வலி சார். வேற ஒண்ணுமில்ல” என்று சமாளித்தார் நந்தா.
‘இவங்களை இன்னமும் சூடேத்தினாதான் வேலையாகும்’ என்று தீர்மானித்துக் கொண்ட அர்ஜுன், “வேடர்களைவிட காடர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள். இது வேடர்களுக்கு பாதுகாப்பற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறதா?” என்று அவர் கேட்டது மிக நேரடியான கேள்வி.
“நிச்சயம் இருக்கு சார். இல்லைன்னு சொன்னா பொய்யாயிடும். ஆனா கேம் ஃபார்மட் அப்படி இருக்கு” என்று நியூட்ரலாக பேசினார் அம்ஜத். காடர்கள் மெஜாரிட்டியில் இருப்பது ஒரு மிரட்டல்தான் என்பதை வேடர்கள் அனைவருமே ஒப்புக் கொண்டார்கள். “ஆனா அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை” என்றார் நந்தா. இரு அணியையும் விட்டுத்தராமல் பேசினார் நாராயணன். அவரால் காடர்களை முழுமையாக பகைத்துக் கொள்ள இயலவில்லை. இனி அங்குதானே குப்பை கொட்டியாக வேண்டும்?!
“இனிகோ... நீங்க எந்த அணின்னே புரியலை. நீங்களே சொல்லுங்களேன்” என்று சிரிப்புடன் கேட்டார் அர்ஜுன். “டாஸ்க் வரும்போது வேடர்களுக்காகச் சிறப்பாக விளையாடினேன். ஆனால் பாசம் வரும்போது காடர்கள் பக்கம்தான் மனம் செல்கிறது” என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார் இனிகோ. (இதைத்தான் ரவி முன்னமே சூசகமாக எச்சரித்தார்).
“அப்படின்னா இங்க நம்பர் கேம் இருக்கா?” என்று பட்டவர்த்தனமாகவே கேட்டுவிட்டார் அர்ஜுன். “ஆம். இருக்கு சார்” என்று அழுத்தம் திருத்தமாக ஆமோதித்தார் அம்ஜத்.
“வேடர்கள் நாலு பேர்தான் ஒரு போட்டில கடைசியா நின்னோம்-னு ஐஸ்வர்யா ஒருமுறை சந்தோஷப்பட்டாங்க. அவங்க மனசுல அந்த எண்ணம் இருக்குன்னா... எங்க கிட்டயும் அது இருக்கும். நாங்களும் அதுக்கேத்த மாதிரிதான் போகணும்” என்றார் உமாபதி. பெற்றி பெற்றதற்காக வேடர்கள் மகிழ்ச்சியடைவது வேறு. பலமான போட்டியாளர்களைத் திட்டமிட்டு வாக்களித்து வெளியேற்றுவது வேறு.

“Obviously… இது நம்பர்கேம்தான். இதில் தப்பில்லை” என்றார் நந்தா. காடர்களின் ஆதிக்கம் குறித்த ஆதங்கத்தில் அவர் இப்படிச் சொல்லியிருக்கலாம். எண்ணிக்கை விளையாட்டு அங்கு இருப்பது யதார்த்தம்தான். ஆனால் அது சரியா என்பதுதான் கேள்வி. ‘எப்படியாவது ஜெயிக்கணும்' என்பதற்கும் ‘இப்படித்தான் ஜெயிக்கணும்' என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
“உத்திகளைக் கடைப்பிடித்து ஆடும்போது ஒரு நல்ல ஃபைட்டரை தூக்கிட்டா அது அறமா இருக்குமா?” என்று அர்ஜுனின் அடுத்த கேள்வியில் அனல் பறந்தது. “40 சதவிகிதம் கேம். 60 சதவிகிதம் கேரக்ட்டர்” என்று முன்னர் சொன்னதையே இப்போதும் சொன்னார் விக்ராந்த். உமாபதி விளக்கம் அளிக்கும்போது ‘நாங்க... நாங்க’ என்று சொன்னதை சரியாகப் பிடித்த அர்ஜுன் “அப்படின்னா இந்த ‘நாங்க’ன்றது... இன்னமும் இருக்கில்லையா?” என்று கேட்டது சரியான கிடுக்கிப்பிடி. ('முதல்வன்' திரைப்படத்தின் இன்டர்வியூ காட்சி நினைவிற்கு வந்தது). “நாங்க தனித்தனியாத்தான் முடிவு பண்ணுவோம்” என்று விக்ராந்த் மழுப்பலாகச் சொன்னார். (இந்தக் காட்சியெல்லாம் எப்ப வந்தது விக்ராந்த்? அடுத்த சீசன்ல வரும்போல).
“ஒரு வேளை வேடர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்திருந்தாலும் இப்படித்தான் ஆகியிருக்குமா?” என்கிற அனுமானக் கேள்வியை முன்வைத்தார் அர்ஜுன். “கொம்பர்களா ஆனப்புறம் அணியா ஆடறது சரியில்லைன்றதுதான் என் கருத்து. ஒரு நல்ல ஆட்டக்காரர் வெளியே போகக்கூடாது. இதுதான் என் அபிப்ராயம்” என்று நேர்மையாகச் சொன்னார் நந்தா.

வேடர்களிலும் அணிப்பாசம் உள்ளதுதான். அதனால்தான் இனிகோவால் அங்கு முழுமையாக ஒட்ட முடியவில்லை. ஆனால் திறமையான ஆட்டக்காரர்களை வரிசையாக வெளியே அனுப்பி விட்டு, தான் மட்டும் விளையாடும் அளவிற்கு வேடர்கள் அறமற்ற அணியல்ல என்றுதான் தோன்றுகிறது.
“நம்பர் கேம் ரெண்டு பக்கமும் இருக்கு. ஆனால் நல்ல பிளேயர் அடுத்த லெவலுக்கு போகணும்” என்றார் அம்ஜத். “வேடர்கள் அணியிலேயே இருந்திருந்தால் முன்னாடியே என்னை வெளியேத்திருப்பாங்கன்னு லட்சுமிபிரியா சொல்லியிருக்காங்க. அம்ஜத் கூட சொல்லியிருக்கார்” என்று சரியான சமயத்தில் விவாதத்தின் உள்ளே நுழைந்தார் விக்ராந்த். அவர் சொல்வது ஒருவகையில் சரி. ஆனால் ‘கொம்பர்களாக’ மாற்றப்பட்ட பின்பும் அணி மனோபாவம் நீடிப்பது சரியா என்பதை அவர் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
“சொன்னாலும் சொல்லாட்டியும் இது நம்பர்கேம்தான். ஏன்னா இதில் பார்வையாளர்களோ, நீதிபதிகளோ வாக்களிக்க முடியாது. எங்களுக்குள்ளேயேதான் ஆடியாகணும். எனவே டிப்ளமாட்டிக்கா பேசறது வேஸ்ட். இதுதான் யதார்த்தம்” என்று தேங்காய் உடைப்பது போல் விஜி பேச, “அதுதான் யதார்த்தம் என்பது சரி. ஆனால் அது சரியா?” என்று கிடுக்கிப்பிடியை போட்டார் அர்ஜுன். (மறுபடியும் 'முதல்வன்' சீன்). “எனக்கு, உமாபதிக்குக் கூட இது நாளைக்கு நடக்கலாம்” என்று வருங்கால லாஜிக் பேசினார் விஜி.

“இனிகோ... நீங்கதான் கொம்பர்களின் தலைவர். அணி மனோபாவம் நீங்கி ஒற்றுமையா இருக்கறதுக்கு ஏதாவது செஞ்சீங்களா?” என்று வீணான கேள்வியைக் கேட்டார் அர்ஜுன். வேடர்கள் அணியில் இருந்த போதே இனிகோவின் மனம் காடர்கள் பக்கம்தான் இருந்தது. இப்போது கேட்க வேண்டுமா? காடர்களின் முழு விசுவாசியாகி விட்டார். “என்னால முடிஞ்சத பண்ணேன்” என்று பலவீனமாக விளக்கம் அளித்தார் இனிகோ.
“அம்ஜத்... உங்ககிட்ட ஒரு கேள்வி. ‘எலிமினேட் ஆகறதுக்கு நான் ரெடி... ஆனா அதுக்கு முன்னாடி சிலர் வெளியேறணும்'னு சொன்னீங்களா?” என்று கேட்டார் அர்ஜுன். “Hierarchy பத்தி விஜிகிட்ட பேசினேன்” என்று அம்ஜத் விளக்க ஆரம்பித்தபோது “வீக்கான ஒரு ஆள் போகணும்னு சொன்னாரு” என்று இடையில் புகுந்தார் விஜி. “ஆமாம் சார்... வனேசா போகணும்னு சொன்னேன். அவங்க கூட எனக்கு இன்னமும் பினைணப்பு ஏற்படலை” என்று ஒப்புக் கொண்டார் அம்ஜத். “அம்ஜத்கிட்ட நெறைய பேசியிருக்கேன். இந்த விஷயம் பத்தி அவர் என்கிட்ட சொல்லலை” என்று இதை மறுத்தார் வனேசா.

“சார்... இந்த கேம்ல நிறைய லேயர்ஸ் இருக்கு. முதல்ல க்ரூப்பா ஆடணும். அப்புறம் இணைந்து ஆடணும். சில பேரோட கனெக்ட் ஆக முடியாது. ‘Please vote out’–ன்னு நான் வெளிப்படையாவே சொல்லிட்டேன். சிலருடன் ஜெல் ஆக முடிஞ்சா சந்தோஷம்தான். உறவுநிலையை தக்க வைத்திருப்பது இந்த ஆட்டத்தின் முக்கியமான அம்சமாக இருக்கிறது” என்று ஒரு மினி வகுப்பே எடுத்துவிட்டார் நாராயணன்.
“ஐஸ்கட்டி சவாலுக்கு இனிகோ தேர்ந்தெடுத்த ஐந்து நபர்களின் தேர்வு நியாயமாக நடந்ததா?” என்ற கேள்விக்கு ‘ஆம்' என்று அனைவருமே ஒருமனதாக ஆமோதித்தனர். அணித்தலைவராக இனிகோவிற்கான மதிப்பெண்களும் ஆரோக்கியமானதாக இருந்தன. வழக்கம்போல் காடர்கள் பத்து மதிப்பெண் அளித்தார்கள். லேடி காஷ் மட்டும் எட்டு மதிப்பெண்களை அளித்தார். “அவரு மெம்பர்ஸை மிரட்டியிருப்பாரு” என்று பிறகு ஜாலியாக விளக்கம் அளித்தார் லேடி காஷ்.

“ஓகே... வாக்கெடுப்பு நடத்திடலாம்” என்று அந்தச் சடங்கை நிகழ்த்தினார் அர்ஜுன். வாக்குகளை எண்ணுவதற்கு முன்னால் சில திருப்பங்கள் நிகழ்ந்தன. அணித்தலைவரான இனிகோ தனக்கு வழங்கப்பட்ட ஒரு சக்தியை அர்ஜுனிடம் காட்டினார். அதன்படி தன்னையோ அல்லது பிறர் ஒருவரையோ இனிகோ காப்பாற்ற முடியும். ஆனால் அந்த நாணயத்தில் ‘Safe’, ‘Not Safe’ என்று இரண்டு பக்கங்கள் உண்டு. அதிர்ஷ்டம் இருந்தால்தான் அதனால் பயன் உண்டு. லேடி காஷை காப்பாற்ற விரும்புவதாக இனிகோ தெரிவிக்க, நாணயத்தைச் சுண்டினார் அர்ஜுன். ‘Not Safe’ பக்கம் விழுந்தது. ஆகவே அந்தச் சக்தியால் பயன் ஏதுமில்லை.
அடுத்ததாக எழுந்து வந்த உமாபதி, தன்னிடமிருந்த ‘இம்யூனிட்டி ஐடலை’ எடுத்து வந்தார். அவரும் லேடி காஷை காப்பாற்றுவதற்காக அதை ஒப்படைத்தார். ‘வேடர்கள் லேடிகாஷை டார்கெட் செய்யலாம்’ என்று காடர்கள் யூகித்தார்கள் போல. இதனால் லேடி காஷிற்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள் செல்லாது.

வாக்கெடுப்பின் முடிவுகளை அறிவித்தார் அர்ஜுன். நந்தாவிற்கு நான்கு வாக்குகள் வந்திருந்தன. அம்ஜத்திற்கும் வனேசாவிற்கும் எதிராக தலா இரண்டு வாக்குகள் வந்திருந்தன. லேடி காஷிற்கு எதிராக ஒரு வாக்கு வந்திருந்தது. நந்தாவிற்கு எதிரான வாக்கை அளிக்கும்போது, ஒரு நல்ல பிளேயரை அனுப்புவதை எண்ணி விஜி மட்டுமே வருந்தினார். மற்ற மூவர்களான லேடி காஷ், இனிகோ, வனேசா ஆகியோரிடம் வருத்தம் இல்லை. மாறாக "மாறி மாறிப் பேசறாரு” என்கிற புகாரை மட்டுமே தெரிவித்தனர்.
காற்சிலம்பு அதிர்ஷ்டமும் நந்தாவைக் கைவிட்டது. தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் வாழ்த்து சொல்லி விடைபெற்றார் நந்தா. “நீங்க ஒரு சிறந்த ஆட்டக்காரர்” என்று சொல்லி நந்தாவை வழியனுப்பி வைத்தார் அர்ஜுன். அவர் மூன்றாம் உலகத்திற்குச் செல்வார். இதனால் ஐஸ்வர்யாவிற்கு கூடுதல் மகிழ்ச்சி ஏற்படும்.
நந்தாவின் வெளியேற்றம் குறித்து இதர போட்டியாளர்கள் சம்பிரதாயமான வார்த்தைகளைச் சொன்னார்கள். காடர்களின் பிளானே இதுதான். எனவே அவர்களுக்கு அதிகம் வருத்தமிருக்காது. ஆனால், அம்ஜத்தும் நாராயணனும் உண்மையாகவே வருத்தப்பட்டது போல்தான் இருந்தது.

ஆக... காடர்கள் தங்களிடமுள்ள வாக்குபலத்தால் அடுத்த டார்கெட்டை வெற்றிகரமாக வீழ்த்திவிட்டார்கள். வலிமையான போட்டியாளரான நந்தாவை அனுப்பிவிட்டால் தங்களின் பயணம் எளிதாக இருக்கும் என்று விக்ராந்த்தும் உமாபதியும் கணக்கு போட்டிருக்கலாம். இவர்களின் அடுத்த இலக்கு அம்ஜத்தாக இருக்கலாம்.
“மேலும் பல திருப்பங்கள் இந்த ஆட்டத்தில் இருக்கும்” என்றபடி விடைபெற்றுச் சென்றார் அர்ஜுன். அந்தத் திருப்பங்கள் என்னவாக இருக்கும்?