இந்த வாரத் தலைவர் போட்டியில் தனது புத்திக்கூர்மையால் லேடி காஷ் வென்றதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். வேடர்களில் யாராவது வென்றிருந்தால் அவர்களின் மதிப்பு சற்று கூடியிருக்கும். தலைவர் போட்டி என்பது வர வர சம்பிரதாயத்திற்கு எவ்வித தீவிரமும் இல்லாமல் ஜாலியாக நடக்கிறது. நேற்றைய போட்டியும் அவ்வாறே நடந்தது.
தலைவர் போட்டியில் கலந்துகொள்வதற்கு பலர் ஏனோ முன்வராமல் தயங்குகிறார்கள். குறிப்பாக வேடர்கள் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டிரைபல் பஞ்சாயத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது உள்ளிட்ட பல அனுகூலங்கள் இதனால் கிடைக்கும்.
சர்வைவர் 66-ம் நாளில் என்ன நடந்தது?
உமாபதிக்கு மருத்துவ சிகிச்சை நடந்தது. சுரம், மூட்டு இணைப்பு வலி உள்ளிட்டவை காரணமாக அவர் சோர்ந்து இருந்தார். எனவே தீவிரமான ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளைத் தந்தார்கள்.

நந்தாவிடமிருந்து ஓலை வந்திருந்தது. விவேகானந்தரின் சிகாகோ உரை மாதிரி “அன்பான சகோதர, சகோதரிகளே” என்று ஆரம்பித்த அந்தக் கடிதம் முழுக்க முழுக்க பாசிட்டிவ்வாக இருந்தது.
"அங்கு நான் யாரிடமும் பேசாமல் இருந்திருக்கலாம். யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம். அது என் குணாதிசயம். தனிமை என்பது என் அங்கம். தைரியமாக விளையாடுங்கள். ஆட்டம் முடிந்து வீடு திரும்பும்போது நாம் புதிய மனிதர்களாகி விடுவோம். புதிய உலகம் நம்மை வரவேற்கும்" என்று பொதுப்படையான தொனியில் நேர்மறையான வாக்கியங்களுடன் அந்தக் கடிதம் இருந்தது.
“இவ்வளவு நல்ல மனுஷனை வெளியேற்றி விட்டோமே" என்கிற குற்றவுணர்ச்சி அனைவரும் முகங்களிலும் தெரிந்தது. குறிப்பாக விஜியின் முகத்தில் எக்ஸ்ட்ரா வருத்தம் இருந்தது. “ஓட்டு போட்டு அனுப்பிச்சிட்டு இப்ப சோகமா இருந்தா எப்படி?” என்று இனிகோ கிண்டலடித்தார்.

“ஒரு ஸ்ட்ராங்க் பிளேயரோட மோதி ஜெயிக்கறதுதான் நல்ல கேம்” என்று பின்னர் வருந்திக் கொண்டிருந்தார் அம்ஜத். நந்தாவின் கடிதத்தால் நாராயணன் அப்செட் ஆகி உலவிக் கொண்டிருந்ததை விக்ராந்த்தும் உமாபதியும் பார்த்துக் கொண்டிருந்தனர். “இருக்குமில்ல... நம்மள மாதிரியே அவங்களுக்கு அணிப்பாசம் இருக்குமில்ல” என்கிற முகபாவம் அவர்களின் முகத்தில் காணப்பட்டது. ஆனால் நாராயணனோ “என்ன பண்றது... இதுதான் ஸ்ட்ராட்டஜி. நாங்களா இருந்தா கூட இப்படித்தான் பணியிருப்போம். இது கரெக்டான விஷயம்தான்” என்று மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டிருந்தார்.
நாராயணன் மீது அனுதாபம் ஏற்பட்டதாலோ என்னவோ அவரை தலைவர் போட்டிக்கு நிற்கச் சொன்னார் விக்ராந்த். அவர்களுடன் கலந்து பழகுவதற்கு இதுவொரு வாய்ப்பாக இருக்கும் என்று எண்ணி ஏற்றுக் கொண்டார் நாராயணன்.
தலைவர் போட்டிக்கான ஓலை வந்தது. நேர்மை மற்றும் உண்மைதான் இந்த வார தலைவருக்கான தகுதியாம். “பெண்கள் யாராவது நிக்கட்டும்” என்று விக்ராந்த் ‘முடிவு’ செய்ய, வனேசாவும் லேடிகாஷூம் சம்மதித்தார்கள். “இவங்க மூஞ்சிகளைப் பார்த்தா நேர்மை, உண்மை மாதிரி தெரியலையே” என்று கிண்டலடித்தார் உமாபதி.

‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்று வரவேற்ற அர்ஜுன் உமாபதியின் உடலநிலையை விசாரித்தார். “என்னது.. ஏழு டாப்லெட்டா?” என்று பாவனையாக விசாரித்தார். உமாபதியின் மெடிக்கல் அப்டேட் அவருக்குச் சென்றிருக்காதா என்ன?
"ஓட்டுப் போடும் போது கூட ஒருத்தர் பாட்டு பாடிக்கிட்டே போனாரு... யாருப்பா அது?” என்று அர்ஜுன் சிரித்துக் கொண்டே விசாரிக்க ‘நான்தான்’ என்று கையைத் தூக்கினார் இனிகோ. விருந்து நடந்த சமயத்தில் ‘தீமைதான் வெல்லும்’ என்கிற பாடல் ஒலிபரப்பானது. இதை இனிகோவிற்கு டெடிகேட் செய்தார் நந்தா. இந்த விஷயம் இனிகோவிற்கு உறுத்தியது போல. எனவே டிரைபல் பஞ்சாயத்தில் நந்தாவிற்கு எதிராக வாக்களிக்கச் செல்லும்போது இந்தப் பாடலை முனகிக் கொண்டே சென்றார். “அப்ப இது பழிவாங்கலா?” என்று அர்ஜுன் கேட்க முதலில் தயங்கிய இனிகோ பிறகு “அப்படியே வெச்சுக்கலாம்” என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார்.
“நந்தாவோட லெட்டர் படிச்சீங்களா?” என்று அர்ஜுன் விசாரிக்க ஒவ்வொருவராக பதில் சொன்னார்கள். “நந்தா நல்ல பிளேயர். அந்தக் கடிதம் ரொம்ப முதிர்ச்சியா இருந்தது. அதில் இருந்த ஒரு விஷயத்தை மனசில வெச்சிக்கிட்டேன். ஒரு விஷயம் முடியலைன்னு மனசு நினைக்கிறப்ப ‘உன்னால முடியும்’ன்னு நாமே நினைச்சுக்கணும்னு நந்தா எழுதிய அந்தப் பகுதி ரொம்ப தூண்டுதலா இருந்தது” என்று நெகிழ்வாகப் பேசினார் விஜி.

“ஆமாம் சார். அதே விஷயத்தைத்தான் நந்தா என்கிட்ட சொல்லிட்டே இருப்பார். உடம்பு ரொம்ப வலிச்சு ‘அடுத்த டாஸ்க் செய்யணுமா'ன்னு தோண்றப்ப எல்லாம் என்னை ஊக்கப்படுத்துவார்" என்றார் அம்ஜத்.
ஆனால் லேடி காஷின் பதில் வித்தியாசமாக இருந்தது. அவர் சரண் மீதும் நந்தா மீதும் ஏன் இத்தனை பகைமையுடன் இருக்கிறார் என்பது புரியவில்லை. “எனக்கு கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு. அவர் எலிமினேட் ஆகி போகும்போது 'I Respect you a lot’ன்னு என் கிட்ட சொன்னார். ஆனா நான் அவர் கூட அதிகம் பழகலை. அவர் எழுதிய லெட்டர் ரொம்ப டிப்ளமாட்டிக்கா இருந்தது. என்னோட நேர்மையான அபிப்ராயம் என்னன்னா... இனிமேலாவது அவர் மாத்தி மாத்திப் பேசாம ஒழுங்கா நடந்துக்கணும்” என்று சொல்ல அம்ஜத்தின் முகம் இறுகியது.
“நந்தா நிச்சயம் ஒரு டாப் பிளேயர். ஆனா ஒரு சில விஷயங்களில் எனக்கு முரண்பாடு இருக்கு. சரண் விஷயம்... அப்புறம் கேமராக்கு முன்னாடி ஒரு மாதிரியும், பின்னாடி ஒரு மாதிரியும் பேசற மாதிரியான விஷயங்கள்…” என்றார் விக்ராந்த்.

“விடைபெறும் போது நந்தா சொன்ன ஒரு விஷயம் என்ன தெரியுமா? இங்க Decision Maker ஒருத்தர் இருக்கார்ன்னு சொன்னார். ஆனா யாரு அவர்னு நந்தா சொல்லல” என்று போட்டு வாங்கும் கேள்வியை அர்ஜுன் முன்வைத்தார்.
“அவர் பண்றதை சொல்லியிருப்பார் சார்...” என்று சட்டென்று சொன்னார் விக்ராந்த். “காடர்களில் பேசித்தான் முடிவெடுப்போம். ஆனால் நந்தாவோ “நான் ஃபைனல் போனா–ன்ற மாதிரி பேசியிருக்காரு. அப்ப தன்னைப் பத்திதான் யோசிக்கறாரு...” என்பது போல் விக்ராந்த்தின் ஆட்சேபம் இருந்தது.
“என்ன நாராயணன்... நீங்க என்ன சொல்றீங்க..?” என்று பந்தை அவர் பக்கம் தள்ளினார் அர்ஜுன். நாராயணன் என்ன சொல்வார்? அவர் விக்ராந்த் அணியில் தன்னை பிணைத்துக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறார். எனவே “காடர்களிடம் நல்ல sync இருக்கு. பேசித்தான் முடிவு எடுக்கறாங்க. விக்ராந்த், உமாபதி, இனிகோ... பேசுவாங்க” என்று நாராயணன் தந்த வாக்குமூலத்தில் இருந்த ஓட்டையை சட்டென்று பிடித்த அர்ஜுன். “அப்படின்னா அந்த மூணு பேர் மட்டும்தான் முடிவுகளை எடுக்கறாங்கன்னு சொல்ல வர்றீங்களா?" என்று அவர் கிடுக்கிப்பிடி போட நாராயணன் திகைத்துப் போனார்.

“முதல்ல தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துக்குவாங்க. ‘உங்களுக்கு எது சரின்னு படுதோ அந்த முடிவுகளை எடுங்க'ன்னு விட்டுடுவாங்க” என்று காடர்களுக்கு ஆதரவான சாட்சியத்தை சொன்னார் அம்ஜத்.
“ஓகே. இந்த வாரத் தலைவர் போட்டிக்குப் போகலாம்” என்று அந்த விளையாட்டின் விதிமுறைகளை விளக்கத் துவங்கினார் அர்ஜுன்.
"Hexagon வடிவமைப்பில் தரையில் பிளாக்குகள் இருக்கும். இதன் நான்கு முனையில் நான்கு பேர் நின்று ஆட்டத்தைத் துவங்க வேண்டும். தான் நின்றிருக்கும் பிளாக்கைத் தலைகீழாக வைத்துவிட்டு அடுத்த பிளாக்கில் நிற்க வேண்டும். தலைகீழாக வைக்கப்படும் பிளாக் வேறு நிறத்தில் இருக்கும். தான் நகர்வது மட்டுமல்லாமல் அடுத்தவர் நகர முடியாதவாறு செய்ய வேண்டும். செஸ் ஆட்டம் மாதிரி" என்று அந்த விளையாட்டின் அம்சத்தை விளக்கி முடித்தார் அர்ஜுன்.

வனேசா, லேடி காஷ், நாராயணன், விக்ராந்த் ஆகியோர் களத்தில் இறங்கினார்கள். முதலில் துவங்குபவருக்கு இதில் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்பு கிடைக்கலாம். எனவே அதிர்ஷ்டக்கல் மூலம் வரிசை அமைய, வனேசாவிற்கு முதல் வாய்ப்பு கிடைத்தது.
விக்ராந்த் புதிர் விளையாட்டுகளில் மிக பலவீனமானவர் என்பதால் “ஒண்ணுமே புரியலை” என்று விழித்தபடி நகர்ந்து சென்றார். ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ மாதிரி போஸ் கொடுத்த நாராயணனும் சில நகர்வுகளுக்குப் பிறகு ‘என்ன செய்வது?' என்பது மாதிரி விழித்தார். வனேசாவும் லேடிகாஷூம் திறமையாக தங்களின் யூகங்களை அமைத்தார்கள்.
போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு வேடிக்கை பார்ப்பவர்கள் உதவக்கூடாது என்பது அடிப்படையான விளையாட்டு இலக்கணம். ஆனால் விக்ராந்திற்கு விஜி அடிக்கடி டிப்ஸ் தந்து கொண்டிருந்ததை அர்ஜுன் ஆட்சேபிக்கவேயில்லை. மாறாக தானும் சேர்ந்து டிப்ஸ் தந்ததெல்லாம் அநியாயம். இன்னொரு க்விஸ் மாஸ்டரான இனிகோவும் விக்ராந்த்திற்கு வகுப்பு எடுக்க சீட்டு விளையாட சொல்லித் தரும் வடிவேலுவின் காமெடியை நினைவுப்படுத்தினார் விக்ராந்த்.

ஒரு கட்டத்தில் ஆட்டம் நாராயணன் vs விக்ராந்த் மற்றும் வனேசா vs லேடி காஷ் என்பதாக மாறியது. முதல் ஜோடி ‘தத்தக்கா பித்தக்கா’ என்று முழித்துக் கொண்டிருக்க, பிந்தைய ஜோடியில் லேடி காஷ் மிகத் திறமையாக தன் வியூகத்தை வகுத்தார். அதாவது தனக்கு மிகப்பெரிய ஏரியா கிடைக்குமாறு எல்லைக்கோடுகளை அவர் வகுத்துக் கொள்ள, நகர்ந்து செல்வதற்கு போதுமான இடம் கிடைத்தது. அதே சமயத்தில் மற்றவர்களுக்கு நெருக்கடியும் ஏற்பட்டது.
லேடி காஷின் சாதுர்யத்தால் வனேசா வெளியேற நேர்ந்த சமயத்தில், சொந்த செலவு சூன்யம் போல முதலில் விக்ராந்த் அவுட் ஆனார். அதன் பிறகு வனேசா அவுட். நாராயணனுக்கு வேறு வழியே இல்லை. “உன் கதை முடியும் நேரம் இது” என்று ஜாலியாக பாடினார் விஜி. அவரும் வெளியேற லேடி காஷ் மிக செளகரியமாக வெற்றி பெற்றார்.
ஆனால், இந்த வெற்றியை அர்ஜுன் அறிவிக்காமல் “இந்த ஆட்டம் நியாயமாக நடக்கவில்லை” என்று அறிவிக்க அனைவரின் முகங்களிலும் சற்று திகைப்பு. "மீதமுள்ள இடத்திற்காக இனிகோவும் லேடிகாஷூம் மோதுவார்கள்" என்று அவர் அறிவித்த போதுதான் அது காமெடியான அறிவிப்பு என்பது மற்றவர்களுக்குப் புரிய வாய்விட்டு சிரித்தார்கள்.

க்விஸ் மாஸ்டர் இனிகோ களத்தில் இறங்கி என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, அவரையும் எளிதாகத் தோற்கடித்தார் லேடி காஷ். ஒரிஜினல் போட்டி நடக்கும்போதெல்லாம் கண்டிக்காமல், இந்த ஜாலியான போட்டி நடக்கும்போது மட்டும் “யாரும் சொல்லித் தராதீங்க” என்று எச்சரித்தார் அர்ஜுன். லேடிகாஷின் அதிகாரபூர்வ வெற்றி பிறகு அறிவிக்கப்பட்டது. தலைவருக்கான பிரத்யேக சக்தி அடங்கிய ரகசிய ஓலை வழங்கப்பட்டது. “இதை தனியாவும் படிக்கலாம். விரும்பினா கூட்டத்துலயும் படிக்கலாம்” என்கிற குறிப்புடன் ஓலையை வழங்கினார் அர்ஜுன்.
ஆக... கொம்பர்களின் இந்த வாரத் தலைவர் லேடிகாஷ். அவர் காடர்களுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார் என்பது நாளைக்குப் பிறக்கப் போகிற குழந்தைக்குக் கூட தெரியும்.
மூன்றாம் உலகம்:
“வேலையே இல்ல…” என்று சலித்துக் கொண்டார் சரண். போதி மரத்தின் சக்தி என்னவாயிற்று என்று தெரியவில்லை. “தனக்கு கிடைத்த நாணயத்தை லேடி காஷை காப்பாற்ற இனிகோ உபயோகிச்சார் பார்த்தியா?” என்று சரண் சொல்ல, “ரவியண்ணாவும் நானும் இனிகோவை ஆரம்பத்துல இருந்தே நம்பாததற்கு இதுதான் காரணம். அதை இனிகோ இப்ப ப்ரூவ் பண்றார்” என்ற ஐஸ்வர்யா “இனிகோ எப்பவுமே சுயபுத்தில இருக்க மாட்டார். நம்ம டீம்ல இருக்கறபோது நந்தா சொல்வதைத்தான் கேட்பார்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒரு பிளாஷ்பேக் வீடியோ ஒளிபரப்பானது. அதில் நந்தாவின் வேண்டுகோளை இனிகோ கறாராக நிராகரிக்கும் பகுதி வந்தது. எனில் ஐஸ்வர்யாவின் கருத்தை மறுப்பது போன்ற சாட்சியமாக அந்த வீடியோ அமைந்திருந்தது.
“கேமராக்கு முன்னாடியும் பின்னாடியும் விக்ராந்த் கூடத்தான் மாத்தி மாத்திதான் பேசறாரு. 'லேடி காஷையும் வனேசாவையும் கூடவே வெச்சுக்கலாம். வாக்களிக்க உபயோகித்துக் கொள்ளலாம்' அப்படின்னு கேமரா பின்னாடி விக்ராந்த் சொன்னாரு” என்று முன்னர் சொன்ன அதே புகாரை மீண்டும் கூறிக் கொண்டிருந்தார் சரண்.

“மெயின் டீம் போய் நாக்கைப் பிடுங்கற மாதிரி கேட்கறேன் பாரு. அவங்களால என்ன பண்ண முடியும்? முதுகுலதான் குத்த முடியும். லேடி காஷ், வனேசாவை கூட விட்டுடலாம். இந்த விக்ராந்த்தால ஒரு கேம் தனியா நின்னு ஜெயிக்க முடியுமா?” என்று சவால்விடுவது போல் பேசிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. (ஓவர் பேச்சு உடம்புக்கு ஆகாது. கொஞ்சம் ஆவேசத்தைக் குறைங்க அம்மணி!).
“வழிஞ்சி பேசி ஜெயிக்கணும்னு எனக்கு அவசியமில்லை” என்று சரண் சொல்ல “எப்ப மெயின் டீமிற்கு போவோம்னு எனக்கு ஆவலா இருக்கு” என்று கொலைவெறியுடன் காத்துக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா.
இத்தனை ஆவேசமாகக் காத்துக் கொண்டிருக்கிற ஐஸ்வர்யா ரீஎன்ட்ரி சவாலில் வென்று மெயின் டீமில் மீண்டும் இடம்பிடிப்பாரா?