Published:Updated:

சர்வைவர் - 76: ஐஸ்வர்யா பற்றி இனிகோவின் ஆட்சேபகரமான கமென்ட்ஸ்... 3-ம் உலகில் கண் கலங்கிய நந்தா!

சர்வைவர் - 76

"கல்யாணத்தால இவ்ள நல்ல விஷயங்கள் நடக்குமா?” என்று ஐஸ்வர்யா ஆர்வத்துடன் கேட்க “ஆமாம். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ. வாழ்க்கையே மாறிடும். நான் கியாரண்டி” என்று உற்சாகமானார் விஜி.

Published:Updated:

சர்வைவர் - 76: ஐஸ்வர்யா பற்றி இனிகோவின் ஆட்சேபகரமான கமென்ட்ஸ்... 3-ம் உலகில் கண் கலங்கிய நந்தா!

"கல்யாணத்தால இவ்ள நல்ல விஷயங்கள் நடக்குமா?” என்று ஐஸ்வர்யா ஆர்வத்துடன் கேட்க “ஆமாம். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ. வாழ்க்கையே மாறிடும். நான் கியாரண்டி” என்று உற்சாகமானார் விஜி.

சர்வைவர் - 76
எதிர் அணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் விஜிக்கு பல விதங்களில் ஐஸ்வர்யா உதவியதை நாம் பார்த்தோம். ரீஎன்ட்ரி சேலன்ஞ்ஜில் விஜி வெற்றி பெற ஐஸ்வர்யாவின் உதவிதான் முக்கியமான காரணமாக இருந்தது. தனக்கு விருந்து வாய்ப்பு வந்தபோது விஜியை அவர் அழைத்துச் சென்றது நல்ல பண்பு. ஆனால் இதன் மறுபக்கத்தில் துரோகத்தின் அடையாளமாக இயங்குகிறார் இனிகோ. வேடர்கள் அணியில் இருந்த போது அங்கு அவர் முழு விஸ்வாசமாக இல்லை. ஆனால் கொம்பர்களாக மாறியபோது மட்டும் காடர்களுக்கு முழு விசுவாசமாய் மாறிவிட்டார். ரவி இவரைப் பற்றி யூகித்ததை இப்போது நிஜமாக்கிக் கொண்டிருக்கிறார் இனிகோ.

ஓகே. இனிகோவின் கதை நமக்கு ஏற்கெனவே தெரியும். ஆனால் துவக்கம் முதலே வேடர்கள் அணியில் இருந்த நாராயணன் கூட இப்படி ஐஸ்வர்யாவிற்கு எதிராக நிறம் மாறியது ஏன்? கொம்பர்களாக அணி மாறிய போது, காடர்கள்தான் எண்ணிக்கையில் அதிகமுள்ளவர்கள் என்பதால் அந்தப் பக்கம் சாய்வதற்கு பலவழிகளிலும் முயன்றார் நாராயணன். இப்போது இனிகோவுடன் இணைந்து கொண்டு ஐஸ்வர்யாவைப் பற்றி புறம் பேசுவது ரசிக்கத்தக்கதாக இல்லை. வெஜ் நூடுல்ஸ் கிடைக்காததற்காக ஒருவர் இத்தனை காண்டாவாரா என்ன?

சர்வைவர் 76-ம் நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் - 76
சர்வைவர் - 76

ஐஸ்வர்யா வென்ற ரிவார்ட் சேலன்ஜ் விருந்து. விருந்தாளிகளான விஜியும் அம்ஜத்தும் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் இருந்த இனிகோவிடம் “எடுத்துக்குங்க பிரதர்” என்று அம்ஜத் உபசரிக்க “நாங்கள்லாம் மானஸ்தங்க” என்று அதை மறுத்து வீறாப்பு பேசினார் இனிகோ. எனில் உணவு சாப்பிடும் போது அங்கு பக்கத்திலேயே அமர்ந்து அவர்களுக்கு தர்மசங்கடம் தரலாமா? நாராயணனுக்கு சற்று சபலம் என்றாலும் இனிகோவோடு சேர்ந்து அவரும் வீறாப்பு காட்டினார். “வெஜ் அயிட்டம் கம்மி. நாராயணனைக் கூப்பிட்டிருந்தா எனக்கு போதாம போயிருக்கும்” என்று வெளிப்படையான காரணத்தை சொன்னதை ஐஸ்வர்யா தவிர்த்திருக்கலாம். இதுவும் நாகரிகம் அல்ல. உணவு விஷயத்தில் ஒருவரின் மனம் காயப்படும் போது அவரின் கோபம் வேறெங்காவது திரும்பலாம். அதுதான் நாராயணனுக்கு இப்போது நடந்திருக்கிறதோ, என்னமோ! தன்னை விட்டு விட்டு அம்ஜத்தை ஐஸ்வர்யா தேர்ந்தெடுத்தது அவருக்கு பயங்கர ஏமாற்றத்தை அளித்திருக்கலாம்.

சர்வைவர் - 76
சர்வைவர் - 76
“விஜி கிட்ட அப்பவே சொன்னேன். எப்படியாவது ஜெயிச்சுருன்னு” என்று தாமதமாக ஆதங்கப்பட்டார் இனிகோ. குடும்பத்திடம் வந்து வந்திருக்கும் வீடியோ மெசேஜை பார்க்க முடியவில்லையே என்று அவருக்கு மனக்குறை. எனில் ரிவார்ட் சேலன்ஜை முழு மனதோடு அவர் விளையாடியிருக்க வேண்டும்.

இவர்கள் உணவருந்தும் போதே வீடியோ செய்திகள் ஒளிபரப்பாகத் துவங்கின. கடைக்காரர்தான் அங்கு ஆல்இன்ஆல் அழகுராஜா போலிருக்கிறது. ரிமோட்டை கொண்டு வந்து தந்தார். முதல் வீடியோவில் அம்ஜத்தின் குடும்பம் வந்து வாழ்த்து சொல்லியது. அம்ஜத்தின் அம்மா ‘சலாம் அலைக்கும்’ என்று சொன்ன போது ‘அலைக்கும் சலாம்’ என்று தன்னிச்சையாகச் சொன்னார் அம்ஜத். மனைவி, மகளைப் பார்த்தவுடன் அப்படியே உடைந்து போனார். “பாப்பா உங்களைத் தேடறா. டெடிபேர்தான் அப்பாவாம்... அதைதான் கட்டிப்பிடிச்சு தூங்கறா. அதுக்கு டாட்டா சொல்லிட்டு போறா” என்று அம்ஜத்தின் மனைவி விவரிக்க நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றார் அம்ஜத். சர்வைவர் டீம், ‘கண்ணான கண்ணே’ பின்னணியில் பாடலைப் போட்டு நம்மையும் கலங்க வைத்தார்கள். பின்னர் இது பற்றி விவரிக்க முயன்ற போது, அம்ஜத்தால் பேசவே முடியாமல் கேவிக் கேவி அழுதார். (மகளைப் பார்க்கணும் மாதிரி இருக்கு. அவ என்கிட்ட பேசவே இல்லை).

சர்வைவர் - 76
சர்வைவர் - 76

அடுத்த வீடியோ விஜிக்கு வந்தது. அவரது அக்கா கனி, “யார் ஜெயித்தாலும் சந்தோஷம்” என்று வாழ்த்து தெரிவித்தார். பிறகு விஜியின் மகன் வந்து ‘ஐ லவ் யூ மம்மி’ என்று பெரிய hug தர தானும் குழந்தையாக மாறி கைகளால் அணைப்பது போன்ற பாவனையை செய்தார் விஜி. பிறகு வந்த விஜியின் கணவர், மணநாள் வாழ்த்துகளைச் சொல்லி “நான் எவ்வளவு தப்பு பண்ணியிருந்தாலும் என்னை மன்னிச்சு மகிழ்ச்சி தந்திருக்கே. நீ தந்த சிறப்பு பரிசு இது” என்று அவர்களின் மகனைக் காட்டினார். “எல்லாவற்றிற்கும் நன்றி. நீ சீக்கிரம் திரும்பி வா” என்று கணவர் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்தார் விஜி.

“கல்யாணத்தால இவ்ளோ நல்ல விஷயங்கள் நடக்குமா?” என்று ஐஸ்வர்யா ஆர்வத்துடன் கேட்க “ஆமாம். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ. வாழ்க்கையே மாறிடும். நான் கியாரண்டி” என்று உற்சாகமானார் விஜி. (பக்கத்து வீட்ல மட்டும் கரண்ட் இருந்தா, நமக்கு காண்டாவும்தானே?!)

அடுத்ததாக ஐஸ்வர்யாவின் வீடியோ. இதில் அழுகாச்சி பிசினஸ் எல்லாம் இல்லை. ஐஸ்வர்யாவின் அப்பா வந்தார் “உன்னை நினைச்சு பெருமைப்படறேன். இங்க எப்படி இருக்கியோ... அப்படியேதான் அங்கயும் அடிச்சு நவுத்தறே. பிக் பேங் பூம்... அமைதியா இரு. குறைவா பேசு. நடக்கறதை கவனி” என்று ஆலோசனை சொன்ன அவர் “பல இளம் பெண்களுக்கு உன்னோட வெற்றி தூண்டுதலா இருக்கும்” என்று சொன்னது சத்தியமான உண்மை. சர்வைவர் பார்க்கும் பல பெண்களுக்கு ஐஸ்வர்யாவின் ஸ்போர்ட்ஸ் குணம் தூண்டுதலை அளிக்கலாம்.

சற்று வயதான இன்னொரு ஐஸ்வர்யாவைப் போன்ற தோற்றத்தில் இருந்தார் அவரது அம்மா. “ராசாத்தி. தினமும் ஆவலா டிவி பார்ப்பேன். நல்லா விளையாடறே. வெற்றி உனக்கே” என்று ஐஸ்வர்யாவை மாதிரியே அவர் படபடவென்று பேச “அவங்களும் என்னை மாதிரியே ஹைபர்” என்று சொல்லி சிரித்தார் ஐஸ்வர்யா. இதை விடவும் ஐஸ்வர்யாவின் அம்மா சொன்ன இன்னொரு விஷயம்தான் சிறப்பு. “எனக்கு கூட சர்வைவர் மாதிரி கேம்ல கலந்துக்க ஆசையா இருக்கு. அம்மா – மகள் கலந்துக்கற மாதிரி ஏதாவது நிகழ்ச்சி இருந்தா சொல்லு. ஜாலியா போகலாம்” என்று அவர் சொன்னபோது ஐஸ்வர்யாவின் அந்த வேகம் எங்கிருந்து வந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. "ஒரு ஐஸ்வர்யாவையே தாங்க முடியலை” என்று இந்தச் சமயத்தில் சர்காஸ்டிக்காக சொன்னார் விஜி. என்ன ஊட்டி வளர்த்தாலும் காடர்களின் குணம் வெளியே வந்து விடுகிறது.

சர்வைவர் - 76
சர்வைவர் - 76

வீடியோ செய்திகள் முடிந்ததும் “சரி. வாங்க ஷாப்பிங் போகலாம்” என்று கிளம்பினார்கள். பாதி உணவு அப்படியே இருந்தது. திரும்பி வந்து சாப்பிடுவார்களோ? “இப்பத்தான் முதல் முறையாக ஷாப்பிங் வரேன்” என்ற அம்ஜத், கடைக்காரரிடம் பேரம் பேசுவதற்காக அவரை கட்டியணைத்து கமல் ரேஞ்சில் நெருக்கமாக என்னென்னமோ செய்தார். அம்ஜத் கடைக்காரரை மறைத்திருக்கும் போது விஜியும் ஐஸ்வர்யாவும் பொருட்களை ‘அபேஸ்’ செய்ய திட்டமிட்டார்கள். பிறகு கடைக்காரரைக் குழப்பி எக்ஸ்ட்ரா பொருட்களை எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியேறினார்கள். இது போல் உமாபதி முன்னர் செய்தது தவறென்றால் இவர்கள் ஜாலியாகச் செய்ததும் தவறான விஷயமே.

இவர்கள் ஷாப்பிங் சென்றிருந்த சமயத்தில் நாராயணனும் இனிகோவும் வம்பு பேச ஆரம்பித்தார்கள். ‘கல்லூரி’ படத்தில் வரும் மாணவ ஜோடிகள் மாதிரி “நீங்க ஏதாவது சொல்லுங்க.” என்று ஒருவர் ஆரம்பிக்க “நீங்கதான் சொல்லுங்களேன்” என்று இன்னொருவர் இழுத்தார். இந்தச் சமயத்தில் இனிகோ அடித்த கமெண்ட் அருவருப்பானது. “ஐசுவோட அம்மா தன் பொண்ணை சீக்கிரம் பார்க்க ஆசைப்படறாங்க. அப்படின்னா... ஐசுவை சீக்கிரம் அனுப்பி வெச்சிட வேண்டியதுதான். அப்படியே பாசக்கார அண்ணனையும் சேர்த்து அனுப்பிடணும். அவனையும் குடும்பத்துல தேடறாங்க” என்று சொல்லி சிரித்தார் இனிகோ. இதனுடன் நாராயணனும் இணைந்து சிரித்ததுதான் பெருங்கொடுமை.

பிரிந்திருக்கும் குடும்ப உறவினர்கள் அதன் துயரம் தாங்காமல் “சீக்கிரம் வீட்டுக்கு வாங்க” என்று சொல்வது ஒரு வழக்கமான விஷயம்தான். இனிகோவின் குடும்பம் கூட இப்படிச் சொல்லியிருக்கக்கூடும். இதை வைத்தா ஒருவர் காமெடி செய்வது? விஜியின் குடும்பத்தார் கூடத்தான் "சீக்கிரம் வாம்மா” என்று வீடியோவில் சொன்னார்கள். எனில் அதை வைத்து ஏன் இனிகோ காமெடி செய்யவில்லை? இனிகோவின் வெளிப்படைத்தன்மையும் நகைச்சுவையுணர்வும் பாராட்டத்தக்கது என்றாலும் சமயங்களில் அவர் மனதில் கசிந்து வரும் வன்மம் திகைக்க வைக்கிறது. இது ஒரு விளையாட்டு. அவ்வளவே. இதுவே வாழ்க்கையல்ல. வலிமையான போட்டியாளர்களை வெளியேற்றி விட்டு இவர் மட்டும் காலி மைதானத்தில் வெற்றி அடைவாரா?

சர்வைவர் - 76
சர்வைவர் - 76

“ஐசு வந்தவுடனே அம்ஜத்தோட குணம் அப்படியே மாறிடுச்சு. நாத்தனாரைக் கல்யாணம் செஞ்சு வெச்சு அவங்க புகுந்த வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதான்” என்று இனிகோ சொல்ல “வீட்டுக்கு வந்த மருமகளான நீ எல்லோரையும் வெளியே அனுப்பிச்சிட்ட” என்று நாராயணன் குத்தலாக சொன்னார். “ஆக்சுவலி… அவங்க எனக்கு சிலை வைக்கணும். பிரிஞ்சி இருந்தவங்க ஒவ்வொருத்தரையும் மூன்றாம் உலகத்துல சேத்து வெச்ச நல்ல காரியத்தைத்தான் நான் செஞ்சேன்" என்று ஆறிப்போன ஜோக்கை மீண்டும் கிளறிக் கொண்டிருந்தார் இனிகோ. “ஐஸ்வர்யாவிற்கு எதிரா நான் ஓட்டு போட்டது அவளுக்கு தெரியாதா என்ன... சரண் சொல்லியிருக்க மாட்டானா? சரணுக்கும் இவளுக்கும் ஒரே வயசாம். அப்ப போய் PG காலேஜ்ல படிக்கணும்” என்று இனிகோவின் அநாகரிமான கிண்டல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

தான் அப்பட்டமாகச் செய்து கொண்டிருக்கும் தவறு நாராயணனுக்கு அப்போதுதான் தெரிந்ததோ, என்னமோ. அவர் சட்டென்று பேச்சை மாற்ற “ஏன் டைவர்ட் பண்றீங்க?” என்று கேட்ட இனிகோ, பிறகு தானும் உஷாராகி பேச்சை மாற்றி விட்டார்.

மூன்றாம் உலகம். சேவல் பண்ணை போல நந்தாவும் சரணும் ஊரைச் சுற்றி வந்த போது ஓலை காத்திருந்தது. ஒரு சவால். அதை முடித்தால் ரிவார்ட் கிடைக்குமாம். Survivor என்று பொறிக்கப்பட்ட இரண்டு புதிர்ப்பலகைகள் தனித்தனி துண்டுகளாக இருந்தன. 30 நிமிட நேரத்திற்குள் இருவரும் சேர்ந்து அதை சரியாக அடுக்க வேண்டுமாம். “Puzzle-ன்னா எனக்கு கஸல் கேட்கற மாதிரி” என்று ஆர்வத்துடன் இறங்கிய சரண், 15 நிமிடத்தில் முடித்து அடுக்கி விட்டார். பிறகு மிகவும் தடுமாறிக் கொண்டிருந்த நந்தாவிற்கு உதவி செய்து அதையும் முடித்து சவாலின் இரண்டாம் கட்டத்திற்குச் சென்றார்கள்.

இரண்டு கால் மட்டுமே வைக்க முடிகிற ஒரு மேடையில் நிற்க வேண்டும். கையில் உள்ள வட்ட பலகையில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பந்து வைக்கப்படும் இப்படியாக நான்கு பந்துகளை 20 நிமிடத்திற்கு சுமந்து முடித்தால் ஆட்டம் ஓவர். வெகுமதி நிச்சயம். கவனமாக பேலன்ஸ் செய்து ஆட வேண்டிய விளையாட்டு இது.

சர்வைவர் - 76
சர்வைவர் - 76

முதலில் களத்தில் இறங்கிய சரண், மூன்று பந்துகள் வரை திறமையாகத் தாக்குப் பிடித்தாலும் வேகமான காற்று அடித்ததால் கீழே இறங்கி விட்டார். அடுத்து ஏறிய நந்தா, சரணின் உதவியாலும் உத்வேகமான வார்த்தைகளாலும் நான்கு பந்துகள் வரை மிகவும் சிரமப்பட்டு நின்று சவாலை வெற்றிகரமாகக் கடந்தார். தீவிற்குத் திரும்பிய அவர்களுக்கு வெகுமதி காத்திருந்தது. பிரியாணி இல்லை. பிரியமானவர்களிமிடருந்து வந்த வீடியோ.

“உன்னோட வீடியோவை முதல்ல பாரு” என்று விட்டுத்தந்தார் நந்தா. “ஆமாமாம். அவரோட வீடியோவைப் பார்த்தா நிச்சயம் அழுதுடுவாரு” என்று எண்ணிக் கொண்ட சரண், தன் வீடியோவை முதலில் பார்த்தார். சரணின் தந்தை உற்சாகமாக வந்து "கப்பு முக்கியம் பிகிலு” என்று ஊக்க வார்த்தைகளைச் சொன்னார். தந்தையின் ஆரோக்கியம் இயல்பாக இருந்ததை எண்ணி மகிழ்ச்சியடைந்தார் சரண்.

அடுத்ததாக அழுகாச்சி சீன். வீடியோவைத் தயக்கத்துடன் திறந்த நந்தா, தன் மனைவியையும் குழந்தையையும் பார்த்த அடுத்த கணமே உடைந்து அழுதார். சரண் இதை முன்பே எதிர்பார்த்திருந்ததால் ஆறுதலாக அமர்ந்திருந்தார். “ஹாய் மச்சான்...” என்று அழைத்த நந்தாவின் மனைவி “மக உங்க நினைப்பாவே இருக்கா. ஒருவேளை மறந்துடுவாளோன்னு நீங்க பயப்பட்டீங்க. அப்படியெல்லாம் இல்லை. உங்க டிரெஸ்ஸையெல்லாம் தொட்டுப் பார்க்கறா. உங்களை மறக்கலை” என்று சொல்ல, வெடித்து அழுதார் நந்தா “என் மனைவியோட குரல் ஒருபக்கம் கேட்குது. ஆனா பாப்பாவோட முகத்தைத்தான் நான் பார்த்துட்டு இருந்தேன்” என்று தனது ‘ஒலியும் ஒளியும்’ அனுபவத்தை நந்தா விவரித்தது நெகிழ்வாக இருந்தது.

“அப்பா...” என்று அழைத்து மகள் பிளையிங் கிஸ் தந்த போது மிகவும் பரவசப்பட்ட நந்தா, “நான் கிளம்பிய போது பார்த்த முகம் இல்லை இது. வேற யாரோ மாதிரி இருக்கு. நிறைய வளர்ந்திட்டா” என்று ஒரு தந்தையாக பெருமிதத்துடன் கலங்கினார். பின்னணியில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாள்’ பாட்டை ஒலிக்க விட்டு சென்டிமென்ட்டை சரியாகக் கூட்டியது சர்வைவர் டீம். நந்தாவின் மனைவி, மகள் இருவருமே நந்தாவின் புகைப்படம் அச்சிட்ட டீஷர்ட்டை அணிந்து ஆதரவு அளித்தார்கள். (ப்பா. என்னவொரு டெடிகேஷன்?!).

“வழக்கத்திற்கு மாறான இந்த மாதிரியான தருணங்கள் மிகக் குறைவானதாக இருந்தாலும் அது நம் வாழ்க்கையையே மாத்திடுது” என்று உணர்வுபூர்வமாக நந்தா சொன்னது சிறப்பு.

அடுத்து வரும் இம்யூனிட்டி சவாலில் யார் ஜெயிப்பார்?