Published:Updated:

சர்வைவர் 79: சின்னப் பையன் ஜெயிக்கட்டும்ன்னு விட்டுக் கொடுத்தாரா நந்தா?

Saran & Nandha

‘இந்த ஆட்டத்தில் நந்தா ஜெயிக்க வேண்டும்’ என்று ஐஸ்வர்யா விரும்பினார். ஏறத்தாழ அனைவரின் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருக்கும்.

Published:Updated:

சர்வைவர் 79: சின்னப் பையன் ஜெயிக்கட்டும்ன்னு விட்டுக் கொடுத்தாரா நந்தா?

‘இந்த ஆட்டத்தில் நந்தா ஜெயிக்க வேண்டும்’ என்று ஐஸ்வர்யா விரும்பினார். ஏறத்தாழ அனைவரின் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருக்கும்.

Saran & Nandha
ரீஎன்ட்ரி சவாலில் நந்தா தோற்று போட்டியில் இருந்து எலிமினேட் ஆனது, சக போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, அர்ஜூனுக்குமே அதிர்ச்சியை அளித்தது. காடர்களைச் சேர்ந்த இனிகோவும் விஜியும் கூட இதற்கு மனமார வருந்தினார்கள். பெரும்பாலான பார்வையாளர்களும் இதையே பிரதிபலித்திருக்கக்கூடும். ஒரு திறமையான ஆட்டக்காரன் தோற்கும் போது எதிரணியைச் சேர்ந்தவர்களும் அதற்காக வருந்துவதுதான் உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் குணாதிசயம்.
 சர்வைவர் 79 Nandha
சர்வைவர் 79 Nandha

இங்கு ஒரு விஷயத்தை சற்று விளக்கமாகப் பார்த்து விட வேண்டும். ‘சர்வைவர்’ ஆட்டத்தின் வடிவமைப்பும், விதிகளும் இப்படித்தான்’ இது உங்களுக்குப் புரிகிறதா, இல்லையா.. என்கிற கேள்விகள் எழுகின்றன.

உலகத்தில் நம்மைச் சுற்றி எத்தனையோ கீழ்மைகள், அநீதிகள், முறைகேடுகள் நிகழ்கின்றன. வேறுவழியின்றி அவற்றை ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் தன்னிச்சையாக அவற்றை நியாயப்படுத்தவும் தொடங்கி விடுகிறோம். “அரசியல்வாதின்னா ஊழல் செய்யத்தான் செய்வான். இதெல்லாம் பெரிய விஷயமா” நாமே அதை சிரித்தபடி கடந்து செல்கிறோம்.

நடைமுறையில் எத்தனை கீழ்மைகள் நிகழ்ந்தாலும் நீதியின் குரல் அடிநாதத்தில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனுடைய குரல் பலவீனமாக, சிறுபான்மையாக இருக்கலாம். ஆனால் அது இறந்து விடக்கூடாது. எனில் நாம் காட்டுமிராண்டி வாழ்க்கைக்குத்தான் திரும்புவோம்.

அது எந்தவொரு ஆட்டமாக இருந்தாலும் அதில் ஆதாரமான விதிகள் நியாயமாக அமைக்கப்பட வேண்டும். பெரும்பாலான விளையாட்டுக்கள் அப்படித்தான் வடிவமைக்கப்படுகின்றன. குத்துச்சண்டை போட்டியாக இருந்தால் கூட சமமான எடையுள்ளவர்களைத்தான் மோத வைக்கிறார்கள். ஒரு கால் இழந்தவரோடு, ஒரு சராசரி ஆசாமியை ஓட வைக்கும் பந்தயம் எங்கும் கிடையாது. ‘கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் ஆட்டம்’ என்று கூட ஒரு அபிப்ராயம் உண்டு.

ஆனால் சர்வைவர் போன்ற ரியாலிட்டி ஷோக்கள் எவ்வித கட்டுப்பாடுகளுக்கும் நியாயமான விதிகளுக்கும் அடங்காதவை. ஷோவின் பரபரப்பிற்காக, சுவாரசியத்திற்காக, வணிகத்திற்காக அதன் விதிகளை எவ்வகையிலும் வளைப்பார்கள். ஆட்ட வடிவமைப்பின் படி ஒரு சாதாரண போட்டியாளர் பாதுகாப்பாக உள்ளே அமர்ந்திருக்க, திறமையானவர் வெளியே சென்றால் அதற்காக வருந்துவதுதான் அறம். அப்படியொரு அநீதியை எதிர்ப்பதுதான் முறையானது. “கேம் பார்மட் இப்படித்தான்” என்று நியாயப்படுத்தினால், இது போன்ற அநீதிகளுக்கு வழக்கம் போல் தன்னிச்சையாக நாம் துணை போகிறோம் என்றுதான் பொருள்.

‘நீதி, அறம் போன்ற விழுமியங்கள் நமக்குச் சலிப்பூட்டுபவையாக, பழசானதாக தெரியலாம். ஆனால் எந்தவொரு சமூகத்திலும் இவை அடிப்பரப்பில் இயங்கிக் கொண்டிருத்தல்தான் அதன் இயக்கம் ஓரளவிற்காவது நியாயமாக இயங்கும்.

திறமையான போட்டியாளரான நந்தா நேற்று வெளியேறிய போது பாரபட்சமின்றி அனைவருமே உள்ளூற வருந்தியிருப்பார்கள். இதுதான் அறத்தின் குரல். ‘ஒரு நல்ல பிளேயரை வோட்டு போட்டு அனுப்பிட்டேன்” என்று இனிகோ கூட வருந்தினார். இப்படி எண்ணிக்கை அரசியல் ஆடுவது சரியல்ல என்பதைத்தான் முதலில் இருந்தே நாம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு திறமையான போட்டியாளரை முறையான வழியில் வென்று ஜெயிப்பதுதான் எந்தவொரு விளையாட்டுக்காரனுக்கும் ஆத்ம திருப்தி அளிக்கும். மாறாக குறுக்கு வழியில் கிடைக்கும் வெற்றி உறுத்திக் கொண்டே இருக்கும். நேர்மையான பார்வையாளர்களுக்கும் கூட அது திருப்தி தராது.

சர்வைவர் 79
சர்வைவர் 79

சர்வைவர் 79-ம் நாளில் என்ன நடந்தது?

மூன்றாம் உலகம். நந்தாவும் சரணும் வார்ம்அப் செய்து மெயின் டீம் அழைப்பிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். ஓலை வந்தது. அதில் ஒரு சவால் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைச் செய்தால் ஒரு வெகுமதி கிடைக்கும். தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு திடீரென்று விவசாயிகளின் மீது கருணை வந்ததைப் போன்று சர்வைவர் நிகழ்ச்சியிலும் ஒரு கிம்மிக்ஸ். நந்தாவும் சரணும் மரவள்ளிக் கிழங்கு செடிகளை நட வேண்டுமாம். இதுவரை கிழங்குதான் இவர்களின் பிரதான உணவாக இருந்தது. எனவே அதற்கான நன்றிக்கடன். ஏதோ தீவிரவாதிகளின் இடத்திற்கு அழைத்துச் செல்வது போல இதற்கு கண்களை கட்டி இவர்களை அழைத்துச் சென்றார்கள்.

நந்தாவும் சரணும் செடி நடுவதை கண்காணிக்க ஒரு லோக்கல் சூப்பர்வைசர் வேறு. சற்று சிரமமான பணிதான். என்றாலும் தங்களின் கையால் மண் தோண்டி செடி நட்டு அதற்கு நீர் ஊற்றுவது ஆத்மார்த்தமான நிறைவைத் தரும். ‘விதை நான் போட்டது..” என்று தேவர்மகன் சிவாஜி மாதிரி பிற்காலத்தில் வசனம் பேசலாம். தங்களின் பணியை முடித்து விட்டுப் பார்த்தால் சூப்பர்வைசர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி நம்ம ஊர் குத்து நடனம் ஒன்றை அவருக்கு கற்றுக் கொடுத்தார் நந்தா. (பாப்பா..பாடும் பாட்டு.. என்கிற பழைய பாடலை சர்வைவர் டீம் பின்னணியில் இணைத்தது செம சுவாரஸ்யம்). தங்களின் இருப்பிடத்திற்குத் திரும்பியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. சாதம், சாம்பார், ஊறுகாய் என்று தமிழக உணவுகள் காத்துக் கொண்டிருந்தன.

கொம்பர்கள் தீவு. நாராயணனுக்கும் இனிகோவிற்கும் குடும்ப வீடியோ வந்தது. ‘அதைப் பார்த்தா வீட்டுக்குப் போகத் தோணும்” என்று முதலில் அநாவசிய வீறாப்பு காட்டிய இனிகோ, இப்போது அதைப் பார்க்க ஒப்புக் கொண்டார். முதலில் இனிகோ குடும்பத்தின் வீடியோ. தனது அண்ணன் மகன்கள் விளையாடுவதையும் சிறார்களின் மொழியில் அவர்கள் பேசுவதையும் கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தார் இனிகோ. “நமக்கு காடு ஒண்ணும் புதுசு இல்ல. நாம வேலை செஞ்சது தமிழ்நாட்டு காடு. அது ஆப்ரிக்க காடு. ஜெயிச்சுட்டு வா. அர்ஜூன் சாரை கேட்டதா சொல்லு” என்று இனிகோவின் அண்ணன் வாழ்த்தினார். நாராயணனின் டென்னிஸ் கிளப் நண்பர்கள் வரிசையாக வந்து வாழ்த்து சொன்னார்கள்.

மறுபடியும் மூன்றாம் உலகம். “உங்களின் காத்திருப்பு முடிகிறது. மெயின் டீமிற்கு கிளம்பி வாங்க” என்று ஓலை வந்தது. இத்தோடு மூன்றாம் உலகம் கலைக்கப்படுகிறதாம். (ஓனர் காயத்ரிக்கு இந்த விஷயம் தெரியுமா?!) “உங்கள் இருவருக்கும் ரீஎன்ட்ரி சேலன்ஞ் நடக்கும். அதில் வெல்பவர் மெயின் டீமில் இணைவார்” என்று அறிவிப்பு சொன்னதால் இருவரும் குழப்பத்தோடு கிளம்பினார்கள். ‘பை பை.. மூன்றாம் உலகம்” என்று பாசத்தோடு விடை கொடுத்தார் சரண்.

சர்வைவர் 79
சர்வைவர் 79

‘ஒரு முக்கிய நிகழ்வு. கிளம்பி வாங்க” என்று கொம்பர்கள் தீவிற்கும் ஒலை சென்றது. “என்னவா இருக்கும்?” என்று விஜி பாவனை செய்தாலும் மூன்றாம் உலகத்தில் இருப்பவர்கள் திரும்புவார்களோ என்கிற பீதி தெரிந்தது.

“களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்று கொம்பர்களை அழைத்தார் அர்ஜூன். “இன்னிக்கு இரண்டு விருந்தாளிகள் வரப்போறாங்க” என்றவுடனேயே அனைவருக்கும் தெரிந்து விட்டது. நந்தாவும் சரணும் உள்ளே நுழைய முகமலர்ச்சியோடு ஃபிளையிங் கிஸ் தந்தார் ஐஸ்வர்யா. அம்ஜத் மற்றும் நாராயணன் முகங்களிலும் மகிழ்ச்சி.

“நந்தா எங்களை சரியா பார்க்கலை. ஏதோ யோசனையில் இருந்தார்” என்றார் நாராயணன். “ரொம்ப நாள் கழிச்சு வரோம். நம்ம கிட்ட இவங்க எப்படி பழகுவாங்களோ?” என்கிற யோசனையில் இருந்தார் சரண். சரண் தயாரித்து வைத்திருந்த ஸ்பெஷல் மாலையை ஆசையோடு வாங்கி போட்டுக் கொண்டார் அர்ஜூன்.

“ஆட்கள் குறைஞ்ச மாதிரி தெரியுதா” என்று நந்தாவை நமட்டுச் சிரிப்புடன் விசாரித்தார் அர்ஜூன். “அவங்க எலிமினேட் ஆயிருப்பாங்களா. என்னாச்சு” என்று குழம்பிய நந்தாவிடம் “அவங்களுக்கு உடம்பு சரியில்லை” என்று அர்ஜூன் சொன்னவுடன் நம்பாமல் நந்தா பார்க்க “அட உண்மையாத்தான்” என்றவுடன்தான் நம்பினார்.

“இப்ப சரணுக்கும் நந்தாவிற்கும் இடையே ஒரு போட்டி நடக்கும். அதில் ஜெயிப்பவர் மெயின் டீமில் இணைவார். தோற்பவருக்கு இனி எலிமினேஷன் கிடையாது. அவர் இந்த சீசன் முடியும் வரை ஜூரியாக இருப்பார். இனிவரும் போட்டிகளிலும் தோற்பவர் ஜூரியாக மாறுவார்கள். இவர்கள் பஞ்சாயத்திலும் போட்டிகளிலும் பார்வையாளர்களாக கலந்து கொள்வார்கள். ‘Soul Survivor’க்கான கடைசி போட்டியில் வாக்களிக்கும் உரிமை இவர்களுக்கு உண்டு” என்று விளக்கினார் அர்ஜூன். எனில் ஆட்டம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது புரிந்தது.

‘இந்த ஆட்டத்தில் நந்தா ஜெயிக்க வேண்டும்’ என்று ஐஸ்வர்யா விரும்பினார். ஏறத்தாழ அனைவரின் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருக்கும். போட்டியின் கான்செப்டை விளக்கினார் அர்ஜூன். விஜி, லட்சுமி ஆகிய இருவரும் முன்னர் ரீஎன்ட்ரி சேலன்ஞ்சிற்காக விளையாடிய அதே ஆட்டம், இங்கு மினியேச்சர் சைஸில் இருந்தது.

சர்வைவர் 79
சர்வைவர் 79

மினி ரோலர் கோஸ்டரில் துவக்க நிலையில் இரண்டு பந்துகள் வரும். இதில் இருவழிகள் உள்ளன. ஒன்றில் பந்து சற்று தாமதமாக வெளியே வரும் இன்னொன்றில் சீக்கிரம் வரும் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு கூடுதல் பந்துகள் சேர்க்கப்படும். பந்து கீழே விழாமல் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆட்டத்தில் ஒரு கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறைகளை விளக்கினார் அர்ஜூன்.

போட்டி ஆரம்பித்தது. தனது இடது கையை பயன்படுத்த முடிவு செய்தார் சரண். இதன் மூலம் பந்து உருண்டு வருவது கண்பார்வைக்கு மறையாமல் தெரியும் என்பது அவரது உத்தி. நந்தா வழக்கம் போல் கவனக்குவிப்புடன் செயல்பட ஆரம்பித்தார். இரண்டு பந்துகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. மூன்றாவது பந்தை இட வேண்டிய சமயம். “நந்தா தப்பு பண்ணிட்டாரு” என்று விஜி மனதிற்குள் அலறினார். போடுங்க போடுங்க’ என்று ஐஸ்வர்யாவும் மெளனமாக அலறிக் கொண்டிருந்தார்.

நந்தா மூன்றாவது பந்தை இட்ட விதம் அவருக்கு பாதகத்தை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து வேகமாக வந்த பந்துகளை பிடிக்க முடியாமல் போக ஒரு பந்து கீழே விழுந்ததால் அவர் தோல்வியைத் தழுவினார். இந்தக் கணத்தில் ஜான்சிபார் தீவே ஒரு கணத்தில் அதிர்ச்சியில் உறைந்து போனது. ஓரக்கண்ணில் இதைக் கவனித்தாலும் தொடர்ந்து தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தினார் சரண்.

“சரண் வின்னர்” என்று அர்ஜூன் அறிவித்தவுடன் நந்தாவின் தோல்வி குறித்து அனைவருக்குமே அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்பட்டது. “என்னாச்சு நந்தா. நீங்க ஒரு திறமையான ஆட்டக்காரர். வேணுமின்னே விட்டுக் கொடுத்திட்டீங்களோ?” என்பதை திரும்பத் திரும்ப கேட்டார் அர்ஜூன். “இல்லை. சார். மனதில் சில குழப்பங்கள் இருந்தன” என்பதை தயங்கி பிறகு ஒப்புக் கொண்டார் நந்தா. சிறிது நேரத்திற்கு முன்னால் குடும்ப வீடியோவில் தன் மகளைப் பற்றி பேசியதால் உணர்ச்சிவசப்பட்டிருந்தாரோ?

நந்தா தனது ஆட்டத்தை விட்டுக் கொடுத்திருக்க நியாயமில்லை. ‘தனிநபர் ஆட்டம் முக்கியமானது’ என்பதை வலியுறுத்துபவர்களில் அவரும் ஒருவர். ஆனால் மூன்றாம் உலகத்தில் சரணுடன் இணைந்து பழகியதால் அது சார்ந்த நெருக்கத்தில் “சின்னப் பையன் ஜெயிக்கட்டும்’ என்று விட்டுக் கொடுத்தாரா? இருக்கலாம். இல்லாமலும் போகலாம். யார் மனதை யார் அறிவார்?
சர்வைவர் 79
சர்வைவர் 79

எது எப்படியோ? சரணுக்கு அவரது உழைப்போடு அதிர்ஷ்டமும் கூடவே தொடர்ந்து வருகிறது. “ஒருவகைல நந்தாவை விட சரண் உள்ளே வந்தா நல்லது. எனக்கு போட்டி குறைவு” என்று உள்ளூற மகிழ்ந்தார் விஜி. ஆனால் நந்தாவின் தோல்வி குறித்து அவருக்கும் வருத்தம் இருந்தது.

“நந்தா தோத்தது எனக்கு வருத்தமா இருக்கு. ஆனா அவரு அசால்ட்டா ஆடின மாதிரி இருந்தது. அவர் நல்ல பிளேயர். ஆனா அவரை எதிர்த்து நானும் ஓட்டு போட்டேன்…ஸாரி” என்று இப்போது வருந்தினார் இனிகோ. “நீங்க ஓட்டு போடலைன்னா இது நடந்திருக்காதில்ல?” என்று செல்லமாக இனிகோவை கோபித்துக் கொண்டார் ஐஸ்வர்யா.

சர்வைவர் 79
சர்வைவர் 79

தன்னுடைய தோல்வி குறித்து இத்தனை பேர் வருந்துவது குறித்து மகிழ்ச்சியடைந்தார் நந்தா. “இவங்கள்லாம் நல்ல பிளேயர்ஸ். இவங்களே எனக்காக வருந்தறாங்கன்னா. அதை விட வேறென்ன வேண்டும்?” என்று நெகிழ்ச்சியடைந்தார்.

“சரண் ஜெயிச்சதில எனக்கு ரொம்ப சந்தோஷம். மூன்றாம் உலகத்துல அவனும் நானும் ரொம்ப நெருக்கமாயிட்டோம். ஒரு அண்ணன் போனா என்ன.. இன்னொரு அண்ணன் நான் இருக்கேன்” என்று நந்தா சொன்னவுடன் பாசத்துடன் வந்து நந்தாவை அணைத்துக் கொண்டார் சரண். பிறகு வெற்றிப்பலகையில் தன் கைத்தடத்தை பதித்தார்.
“ஓகே.. வாழ்த்துகள். நீங்கதான் முதல் ஜூரி. உங்க இம்பிரிண்டையும் வைங்க” என்று அர்ஜூன் சொன்னவுடன் தன்னுடைய கைத்தடத்தையும் பதித்தார் நந்தா. நந்தாவிற்காக பின்னணியில் சேர்க்கப்பட்ட வீடியோ அருமையாக இருந்தது.
சர்வைவர் 79
சர்வைவர் 79

“ஓகே. இறுதிப் போட்டியை நோக்கி போயிட்டிருக்கோம். ஆல் தி பெஸ்ட்: என்று போட்டியாளர்களை வழியனுப்பி வைத்தார் அர்ஜூன். நந்தா ஒரு திசையில் செல்ல, சரணுடன் மற்ற போட்டியாளர்கள் வந்த வழியே திரும்பினார்கள்.

ஒரு முக்கியமான ஆட்டக்காரரான நந்தா வெளியேறிய நிலையில் இனி வரும் ஆட்டம் எப்படி இருக்கும். அடுத்த எலிமினேஷன் யார்?

பார்த்துடுவோம்...