Published:Updated:

சர்வைவர் - 81: ரிவார்ட் சேலன்ஜில் அசத்திய உமாபதி அணி; போராடித் தோற்றாலும் வாய்ப்பை வென்ற ஐஸ்வர்யா!

சர்வைவர் - 81

இந்தச் சமயத்தில்தான் அது நிகழ்ந்தது. பலகையின் மீது அமர்ந்து முழங்காலில் தலையைப் பொருத்திக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ஏதேனும் அடிபட்டு அந்த வலியால் அழுகிறாரோ என்று முதலில் தோன்றியது. ஆனால்...

Published:Updated:

சர்வைவர் - 81: ரிவார்ட் சேலன்ஜில் அசத்திய உமாபதி அணி; போராடித் தோற்றாலும் வாய்ப்பை வென்ற ஐஸ்வர்யா!

இந்தச் சமயத்தில்தான் அது நிகழ்ந்தது. பலகையின் மீது அமர்ந்து முழங்காலில் தலையைப் பொருத்திக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ஏதேனும் அடிபட்டு அந்த வலியால் அழுகிறாரோ என்று முதலில் தோன்றியது. ஆனால்...

சர்வைவர் - 81
நேற்றைய எபிசோடில் நடந்த ரிவார்ட் சேலன்ஜ் கடைசியானது; ஆனால் முக்கியமானது. ஏனெனில் இதில் வெற்றி பெறும் அணி மட்டுமே அடுத்த இம்யூனிட்டி சவாலில் பங்குபெற முடியும். இதில் உமாபதி இருந்த அணி அசால்ட்டாக வெற்றி பெற்றது. தனது சிறப்பான உழைப்பைத் தந்தும் கூட ஐஸ்வர்யா இருந்த அணி தோல்வியடைந்தது.

‘இம்யூனிட்டி வேணும்’ என்று ஆரம்பத்தில் வீரசபதம் எடுத்த ஐஸ்வர்யா, இந்தத் தோல்வியால் அழுது அடம்பிடித்து ஐஸ்கிரீம் கிடைத்த குழந்தை போல எப்படியோ வெற்றி பெற்ற அணியுடன் ஒட்டிக் கொண்டார்.

சர்வைவர் 81-ம் நாளில் என்ன நடந்தது?

மருத்துவ சிகிச்சை முடிந்து விக்ராந்த், உமாபதி, வனேசா ஆகிய மூவரும் மெயின் அணிக்குத் திரும்பினார்கள். விடியற்காலை என்பதால் அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க “உயிரே... உயிரே... எப்படியாவது தப்பித்து ஓடிவிடு’ என்பதை வலுவேலுவின் நகைச்சுவைக் குரலில் பாடியபடி அலாரம் வைத்து அனைவரையும் எழுப்பினார் விக்ராந்த். அதென்னமோ தெரியவில்லை, மருத்துவ சிகிச்சைக்கு சென்று திரும்பிய விக்ராந்த், நகைச்சுவை கூடியவராகத் தெரிகிறார்.

சர்வைவர் - 81
சர்வைவர் - 81

விக்ராந்த்தைப் பார்த்த இனிகோ, உடல் மொத்தமும் உற்சாகமாகி ஆரத்தழுவிக் கொண்டார். அவருடைய உண்மையான மகிழ்ச்சி, வனேசா திரும்பியது குறித்ததாக இருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருந்த விஜியை பயமுறுத்தி எழுப்பிய உமாபதி, வீட்டின் கடைக்குட்டிகள் செய்யும் குறும்புகளை நினைவுப்படுத்தினார்.

எங்கோ சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த அம்ஜத்திடம் “பதட்டப்படாம வா” என்று விக்ராந்த் சொல்ல அதை ‘சுருக்’ கமெண்ட்டாக அம்ஜத் எடுத்துக் கொண்டார். விக்ராந்த் அதை நகைச்சுவையான தொனியில் கூட சொல்லியிருக்கலாம். “யாரு பதறினது. உங்காளுங்க விஜி, இனிகோதான் இத்தனை நாளு பதறிட்டு இருந்தாங்கன்னு எனக்கு சொல்லணும்போல இருந்தது” என்று பிறகு வீடியோ டைரியில் சொன்னார் அம்ஜத்.

“நாம திரும்பி வந்ததில் யாருக்கும் சந்தோஷம் இல்ல போலிருக்கே?” என்று உமாபதி சர்காஸ்டிக்காக சொல்ல, திகைத்துப் போயிருந்த சரண் மற்றும் ஐஸ்வர்யாவின் முகத்தை கேமரா காண்பித்தது. எடிட்டிங் டீம் நினைத்தால் ஒரு காட்சியை என்ன மாதிரியாகவும் காட்ட முடியும். “நீங்க நேரடியா ஷோல வருவீங்கன்னு நெனச்சேன்” என்று சமாளித்தார் அம்ஜத்.

“நாங்க அங்க போன போது 4 காடர்கள், 2 வேடர்கள் இருந்தாங்க. யாரு மூஞ்சும் சரியில்ல. வெளிறிப் போயிருந்தது” என்றார் வனேசா. “நம்பவே முடியல. புதிர்ப் போட்டியில் நீ ஜெயிச்சியாமில்ல?” என்று இனிகோவைக் கேட்டார் விக்ராந்த். “ஆமாம். விஜி சொல்லிக் கொடுத்தாங்க. அடுத்த போட்டில நூறு கட்டைகளைக் கொடுத்து அடுக்குங்கன்னுட்டாங்க. தலை சுத்திடுச்சு. அதான் விஜிகிட்ட கொடுத்துட்டேன்” என்றார் இனிகோ. (எனில் உடம்பு சரியில்லை என்று சொன்னதெல்லாம்?!). இத்தோடு நிறுத்தாமல், “நான் இறங்கியிருந்தா... நானும் ஐசுவும் இன்னமும் கூட அந்த டாஸ்க்கை பண்ணிட்டு இருப்போம்” என்று ஐஸ்வர்யாவையும் சேர்த்து பங்கம் செய்தார் இனிகோ.

“உங்க வீடியோ பார்த்து கண்கலங்கிட்டேன்” என்றார் இனிகோ. “ஃபேமிலி ரீயூனியன் மாதிரி இருந்தது” என்றார் வனேசா. “நெறைய குழப்பங்கள் இருக்கு. இனிமேதான் தெரியும். என்ன ஆகப் போகுதுன்னு” என்று முனகினார் சரண்.

சர்வைவர் - 81
சர்வைவர் - 81

ஆட்டத்திலிருந்து நந்தா வெளியேறியது குறித்து பேச்சு வந்தது. “அவரை ஜூரி ஆக்கிடணும்னு ஏற்கெனவே பிளான் பண்ணயிருந்தோம்… ஆனா அது இத்தனை சீக்கிரம் நடக்கும்னு எதிர்பார்க்கலை” என்று வருந்தினார் வனேசா. (அடப்பாவிகளா?!) இனிகோவையும் வனேசாவையும் தனியாக விட்டு விட்டு “நீங்க பேசுங்க” என்று விக்ராந்த் குறும்புடன் விலகிச் சென்றார். “நான் இந்தப் பக்கம் போகலாமா?” என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டார் அம்ஜத்.

“உங்க எல்லோரையம் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்” என்று வனேசா சொல்ல “என்னைப் பத்தி மட்டும் யோசிச்சிட்டு இருந்தியா?” என்று கடலை போட்டார் இனிகோ. (ரொம்ப தைரியம்தான்!).

பிறகு விக்ராந்த்தை தனியாக ஓரங்கட்டி அழைத்துச் சென்ற இனிகோ, பஞ்சாயத்தில் ஐஸ்வர்யா சொன்ன புகாரைப் பற்றி விரிவாகச் சொல்லி “ஐசு... அழுது சீன் போட்டுட்டா. நல்லவேளை, விஜியும் நாராயணனும் சாட்சி சொன்னாங்க. அர்ஜுனும் என்னை தப்பா நெனக்கலை. இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்?” என்று இனிகோ பதற கேமரா இருப்பதாலோ, என்னமோ “சரி,.. ஓகே. இனிமே நடக்கறதைப் பார்ப்போம்” என்று அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார் விக்ராந்த்.

சர்வைவர் - 81
சர்வைவர் - 81
(இங்கு ஒரு வெளித்தகவல்: ‘இனிகோ வில்லங்கமான நோக்கத்தில் எதையும் சொல்லியிருக்க மாட்டார். அவரது மொழி வெள்ளந்தியானது’ என்று லட்சுமி பிரியா ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்).

"களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்" என்று அழைத்த அர்ஜுன், “Welcome to the Magnificent...” என்று சொல்லி இடைவெளி விட “ஷோ” என்று முடித்தார் அம்ஜத். இல்லையாம். “Magnificent Game" என்று அதைத் திருத்தினார் அர்ஜுன். சிகிச்சை முடிந்து மெயின் அணிக்குத் திரும்பிய மூவரையும் அர்ஜுன் வரவேற்றுப் பாராட்டிய போது “நீங்களும் சர்வைவர் டீமும் ரொம்ப நல்லாப் பார்த்துக்கிட்டீங்க... ரொம்ப நன்றி” என்று நெகிழ்ந்தார் விக்ராந்த். (லேடி காஷ் பற்றி யாருமே பேசவில்லை).

“தோல்வியடைந்து கேமை விட்டுப் போறது வேற. உடம்பு சரியில்லாம போய் வெளியேறி விடுவோமோன்னு கவலையா இருந்தது. அத்தனை உழைப்பும் வீணாகப் போயிருக்கும்” என்று விக்ராந்த் சொன்னது சரியான விஷயம்.

சர்வைவர் - 81
சர்வைவர் - 81

“ஓகே... நம்மளோட வியாபாரத்தைப் பார்க்கலாம்” என்ற அர்ஜுன், அன்றைய ரிவார்ட் சேலன்ஜின் முக்கியத்துவத்தை விளக்கினார். “9 பேர் இருக்கீங்க. இதில் எட்டு பேர்தான் விளையாட முடியும். அவங்க ரெண்டு அணியா பிரியணும். ஒருத்தர் விளையாடாம வெளில இருப்பார்...” என்ற அர்ஜுன், “ஜெயிக்கிற அணி மட்டும்தான் அடுத்த இம்யூனிட்டி சேலன்ஜில் பங்கேற்க முடியும்” என்கிற புதிய வெடிகுண்டை வீசினார்.

அதிர்ஷ்டக்கல் மூலம் அணி பிரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. சரண் எப்பொதுமே அதிர்ஷ்டக்காரர். அவருக்கு நீலக்கல் வந்ததால் அவர் ஆடத் தேவையில்லை. ஆனால் வெற்றி பெறும் அணியுடன் இணைந்து கொள்ளலாம். “அவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்காம இருந்தாதான் அதிசயம்” என்று நொந்து போனார் நாராயணன்.

விஜி, வனேசா, உமாபதி, இனிகோ ஆகியோர் ஓர் அணியாகவும் விக்ராந்த், அம்ஜத், ஐஸ்வர்யா, நாராயணன் ஆகியோர் ஓர் அணியாகவும் பிரிந்தார்கள்.
சர்வைவர் - 81
சர்வைவர் - 81

“ஓகே. போட்டி என்னன்னு பார்த்துடலாம்” என்று அதனை விளக்கினார் அர்ஜுன். முன்பு பார்த்த அதே போட்டிதான். சைக்கிள் குண்டுகள் போட்டிருக்கும் பிளாஸ்டிக் டப்பாவை வளைத்து வளைத்து நடுவில் கொண்டு செல்லும் விளையாட்டை இளமைப் பருவத்தில் ஆடியிருப்போம் அல்லவா? அதே விஷயம் மெகா சைஸில் செட்டப் போடப்பட்டு இருந்தது. ஆட்கள் ஏறி நின்று அசைத்தால்தான் அது முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாக நகரும்.

ஒவ்வொரு போட்டியாளரும் நீரில் குதித்து நீந்திச் சென்று மேடையை அடைய வேண்டும். அதில் ஒருவர் அருகிலிருக்கும் பந்தை எடுத்து வருவார். அதை ஆரம்பப் புள்ளியில் வைத்து விட்டு, அது நடுப்பகுதியில் உள்ள குழியில் வந்து பொருந்துமாறு அந்தப் பலகையை போட்டியாளர்கள் அசைக்க வேண்டும். மூன்று பந்துகளைக் கொண்டு மூன்று குழிகளிலும் முதலில் பொருத்தும் அணி வெற்றி பெறும்.

சர்வைவர் - 81
சர்வைவர் - 81

போட்டி ஆரம்பித்தது. முதல் ஆளாக மின்னல் வேகத்தில் நீரில் பாய்ந்த ஐஸ்வர்யா, மிக ஸ்டைலாக குதித்து, சில தடைகளைத் தாண்டி வேகமாக நீந்திச் சென்று மேடையை அடைந்தார். எதிரணியில் இருந்த இனிகோவால் இவருக்குப் பின்னால்தான் வர முடிந்தது. (நீச்சல் பயிற்சியில்லாதவர்கள் தத்தக்கா பித்தக்கா என்று நீரில் குதிப்பதற்கும் அதை ஸ்டைலாக செய்பவர்களுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன).

“கிணத்துல கல்லைப் போட்ட மாதிரி தொபக்குன்னு தண்ணிக்குள்ள விழுந்தாங்க” என்று வனேசா குதித்ததைப் பற்றி கிண்டலடித்தார் உமாபதி. நாராயணனும் அம்ஜத்தும் ஏறத்தாழ நீரில் நடந்து சென்றார்கள். உமாபதி மிகப் பொறுமையாக வந்து மேடையில் ஏறினார்.

சர்வைவர் - 81
சர்வைவர் - 81

ஐஸ்வர்யா தந்த முதல் வேகம் காரணமாக அவரது அணி முன்னிலையில் இருந்தது. ஆனால் உமாபதி தாமதமாக வந்தாலும் கூட அவரது அணி, பலகையை அசைத்து அசைத்து பந்தை நடுவில் கொண்டு வந்தது. பிறகு சில பல தள்ளாட்டங்களுக்குப் பிறகு முதல் பந்தை வெற்றிகரமாக குழியில் பொருத்தியது உமாபதி அணிதான்.

“எங்களுக்கு முதல்ல சரியா செட் ஆகலை. ஆளுக்கொரு பக்கம் நகர்ந்துக்கிட்டு இருந்தோம்” என்றார் அம்ஜத். ஆனால், சில பல நிமிடங்கள் போராடிய பின்னால் ஐஸ்வர்யா அணியும் முதல் பந்தைப் பொருத்தி விட்டது.

“மத்தவங்க நின்னுக்கிட்டு இருந்த ஏரியால பந்தை நகர்த்திக் கொண்டு வந்தா போதும். நான் இருக்கற ஏரியாலதான் அதை குழிக்குள்ள தள்ளும் பகுதி இருந்தது. எனவே எனக்குத்தான் அதிக சவாலா இருந்தது” என்ற விஜி, போட்டியின் போது தடுமாறி நீருக்குள் விழுந்துவிட்டார். பலகை அவருடைய தோளை சிராய்த்ததில் ரத்தக் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் உமாபதி அணி, இரண்டாவது பந்தையும் பொருத்தி முன்னிலைக்குச் சென்றது.

உமாபதி மூன்றாவது பந்தைக் கொண்டு வரச் சென்ற போது ஏணி உடைந்து இனிகோவின் உதவியால் மேலே வந்தார். இந்தக் கட்டத்தில் ஐஸ்வர்யா அணியும் இரண்டாவது பந்தைப் பொருத்தி ஆட்டத்தை சமனாக்கியது. மூன்றாவது பந்தை எடுத்து வரச் சென்ற ஐஸ்வர்யா, அங்கிருந்தே அதை தன் அணியிடம் தூக்கியெறிந்தார்.

இப்போது இரு அணிகளுக்குமே ஆட்டம் ஒரு மாதிரியாக பழகிவிட்டதால் மூன்றாவது பந்திற்காக மளமளவென ஆடிக் கொண்டிருந்தார்கள். எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்று ஐஸ்வர்யா அணி மல்லுக்கட்டியது. உமாபதி அணியும் விடாமல் போராட, இறுதியில் அவர்களுக்கே வெற்றி கிட்டியது. கடைசி பந்து ஆடி அசைந்து நகர்ந்து சரிந்து குழியில் தன்னைப் பொருத்திக் கொண்ட போது உமாபதி அணியினர் ஒருவரையொருவர் கட்டியணைத்து வெற்றியைக் கொண்டாடினர்.

சர்வைவர் - 81
சர்வைவர் - 81

இந்தச் சமயத்தில்தான் அது நிகழ்ந்தது. பலகையின் மீது அமர்ந்து முழங்காலில் தலையைப் பொருத்திக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ஏதேனும் அடிபட்டு அந்த வலியால் அழுகிறாரோ என்று முதலில் தோன்றியது. இல்லையாம். இம்யூனிட்டி சவாலில் வென்று எப்படியாவது இறுதிக்கட்டத்திற்கு தன்னை பாதுகாப்பாக நகர்த்திச் செல்ல விரும்பிய ஐஸ்வர்யா, அது இயலாமல் போன துயரத்தில் வந்த அழுகை அது.

“நந்தாவும் தோத்துட்டார். காடர்களின் எண்ணிக்கையும் மறுபடி பலமாயிடுச்சு. இந்தச் சூழலில் ஐஸ்வர்யாவிற்கு இருக்கிற ஒரே நம்பிக்கை ‘இம்யூனிட்டி ஐடல்’தான். அது இல்லைன்னவுடனே அழறா. எனக்கு அந்தப் பயம் புரியுது” என்றார் விஜி. “ஐஸ்வர்யா அழாத. இது ஒண்ணுமில்ல” என்று எதிர்ப்பலகையில் இருந்து கூவி ஆறுதல் சொன்னார் இனிகோ.

இந்தச் சமயத்தில் விக்ராந்த் சொன்ன ஆறுதல் முக்கியமானது. “ஓப்பனா ஒண்ணு சொல்லவா? மூன்றாம் உலகத்தில் இருந்து நந்தா மட்டும்தான் ஜெயிச்சு வருவார்னு நான் நெனச்சிருந்தேன். அங்க எல்லாம் போராடி ஜெயிச்சிருக்கே. இது அணியா சேர்ந்து ஆடின ஆட்டம். தனிநபர் ஆட்டத்தில் தோத்தியிருந்தன்னா கூட அதுக்கு நீ பொறுப்பு” என்று பல்வேறு வகைகளில் ஐஸ்வர்யாவைத் தேற்றினார் விக்ராந்த்.
சர்வைவர் - 81
சர்வைவர் - 81

“ஆட்டம் எப்படியிருந்தது?” என்று விசாரித்தார் அர்ஜுன். “கூலா ஆடி ஜெயிச்சிட்டோம்” என்றார் இனிகோ. விஜிக்கு அடிபட்டதைப் பற்றி அர்ஜுன் விசாரிக்க “இது விழுப்புண் சார். சர்வைவர் ஞாபகமாக இருக்கும்” என்று விஜி பந்தா செய்ய “அதெல்லாம் பத்து நாள்ல போயிடும். சீன் போடாத” என்று கிண்டல் செய்தார் உமாபதி.

“ஐஸ்வர்யா... ஏன் அழுதீங்க..?” என்று அர்ஜுன் விசாரிக்க, “இம்யூனிட்டி போயிடுச்சே சார்” என்று குழந்தை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார் ஐஸ்வர்யா. “அப்படியொரு அழுகை அழுவுது சார் இந்தப் பொண்ணு. நாங்க கூடத்தான் தோத்துட்டு ரோஷமே இல்லாம நிக்கலை” என்று சுயபகடி செய்து கொண்டார் விக்ராந்த்.

“ஓகே... உமாபதி, என்ன ரிவார்ட் வேணும்?” என்று அர்ஜுன் கேட்க. “ஜெயிச்சு... ஜெயிச்சு போர் அடிக்குது சார். நீங்களே ஏதாச்சும் பார்த்து பண்ணுங்க” என்று மிதப்பாக சொன்னார் உமாபதி. “இனிகோ நீங்க சொல்லுங்க” என்று அர்ஜுன் கேட்க "மலேசியாவிற்கு ஒரு டிக்கெட்” என்று உமாபதி இடைமறித்து சொன்ன கமெண்ட் ரகளையானது. உமாபதியை செல்லமாக முறைத்தார் வனேசா.

“ஓகே... உங்களுக்கு சிக்கன் சாண்ட்விச், வெஜ் சாண்ட்விச் ஆகிய உணவு வகைகளோடு கூடுதலா ஒரு அட்வான்டேஜ் இருக்கு. உங்க குடும்பத்தோட வீடியோ கால் பேசலாம்” என்றதும் ஐந்து பேரும் மகிழ்ந்தார்கள். (ஆம், சரணுக்கும் இந்த வாய்ப்பு!).

சர்வைவர் - 81
சர்வைவர் - 81

“தோற்ற அணிக்கும் ஒரு வெகுமதி இருக்கு” என்று சஸ்பென்ஸ் வைத்தார் அர்ஜுன். அனைவரும் அவரை ஆவலாகப் பார்க்க “உங்க அணில இருந்து யாராவது ஒருத்தர் இம்யூனிட்டி சேலன்ஜில் கலந்துக்கலாம்” என்கிற அதிர்ஷ்ட சலுகையை அளித்தார் அர்ஜுன். இதைக் கேட்டதும் அனைவரும் ஒருமனதாக ஐஸ்வர்யாவை தேர்ந்தெடுத்தார்கள். “அவங்க அப்படி அழுதது மனசுக்குக் கஷ்டமாக இருந்தது” என்றார் விக்ராந்த். ஆக... அழுது அடம்பிடித்து எப்படியோ இம்யூனிட்டி போட்டியில் ஐஸ்வர்யா கலந்து கொள்கிறார். ஐஸ்வர்யா அம்ஜத்தை அணைத்து நன்றி சொன்னபோது “விக்ராந்திடம் சொல்லு” என்பது போல் ஐஸ்வர்யாவை அம்ஜத் தள்ளிவிட்டதில் 'அண்ணன்கார பாசம்’ தெரிந்தது.

"சர்வைவர் ஷாப்பிங்கில் நீங்க இரண்டு பொருள்களை வாங்கிக்கலாம்” என்று வெற்றி பெற்ற அணியிடம் சொன்ன அர்ஜுன் “எதையும் சுடாதீங்க” என்றார் குறும்பாக.

ஆக... அடுத்து நிகழும் இம்யூனிட்டி சவால் வேடர்களுக்கு மிக முக்கியமானது. என்ன நிகழும்?

பார்த்துடுவோம்.