நேற்றைய எபிசோடில் நடந்த இம்யூனிட்டி சவால் மிகவும் பொறுமையை சோதிப்பதாக அமைந்திருந்தது. இதில் சரண் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதுதான் ஹைலைட். ஆக, இந்த வாரப் பஞ்சாயத்தில் சரணையும் அம்ஜத்தையும் யாரும் நாமினேட் செய்ய முடியாது.
சர்வைவர் 84-ம் நாளில் என்ன நடந்தது?
களத்திற்கு வாங்க சர்வைவர்ஸ் என்று போட்டியாளர்களை வரவேற்றார் அர்ஜுன். இம்யூனிட்டி வாளை அர்ஜுனிடம் ஒப்படைத்தார் விஜி. குடும்பத்திடமிருந்து வந்த வீடியோ கால்களைப் பற்றி அர்ஜூன் விசாரிக்க தங்களின் நெகிழ்ச்சியான உணர்வுகளை போட்டியாளர்கள் பகிர்ந்து கொண்டார்கள். "என்ன... அம்ஜத் சந்தோஷமா இருக்கீங்க?" என்று அர்ஜுன் விசாரித்தபோது இம்யூனிட்டி ஐடல் வென்ற மகிழ்ச்சி அம்ஜத்தின் முகத்தில் பிரதிபலித்தது. அவரிடம் ஐடலை ஒப்படைத்தார் அர்ஜுன்.

இம்யூனிட்டி சவால் பற்றி விளக்க ஆரம்பித்தார் அர்ஜுன். Reward challenge வென்ற அணி மற்றும் ஐஸ்வர்யா, சரண் ஆகியோர் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
Better survive survivor என்கிற ஆங்கில எழுத்துக்கள் குறிக்கப்பட்ட பலகைகள் தனித்தனியாக இருக்கும். அவற்றை ஒரு சமமற்ற, ஆடிக்கொண்டே இருக்கும் அமைப்பின் மீது அடுக்க வேண்டும்.
சற்று தூரத்தில் இருக்கும் மேசை மீதிருந்து பலகைகளை கொண்டு வர வேண்டும். இந்தச் சமயத்தில் அந்த அமைப்பை லாக் செய்ய முடியும். பலகைகளை அடுக்கும்போது லாக்கை ரிலீஸ் செய்துவிட்டுதான் அடுக்க வேண்டும். இது அத்தனை எளிதான விஷயம் அல்ல.

பலகைகளை ஆங்கில எழுத்து வரிசையில் எளிதாக அடுக்கிவிடலாம். ஆனால், கூடுதல் பலகைகளை கொண்டுவந்த பிறகு லாக்கை ரிலீஸ் செய்யும்போது அந்த ஜெர்க்கில் எல்லா பலகைகளும் கீழே விழுந்துவிடும் அபாயம் உண்டு. அதன் டிசைன் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மிக கவனமாகவும் நிதானமாகவும் ஆட வேண்டிய விளையாட்டு இது.
உமாபதி, விஜி, ஐஸ்வர்யா, சரண், வனேசா மற்றும் இனிகோ ஆகியோர் களத்தில் இறங்கினார்கள். ஐஸ்வர்யா முதலில் பலகைகளை கொண்டு வந்து அடுக்கத் தொடங்கினார். 'கட்டைகள் கீழே விழுந்தால் மீண்டும் அவற்றை மேஜையின் வைத்துவிட்டுதான் கொண்டு வர வேண்டும்' என்று கறாராக விதியை தெரிவித்தார் அர்ஜுன்.

Better என்கிற வார்த்தையை முதலில் வெற்றிகரமாக முடித்துவிட்டார் வனேசா. ஆனால் லாக்கை ரிலீஸ் செய்யும்போது கட்டைகள் அப்படியே சரிந்தன. விஜிக்கும் இதேபோல்தான் நேர்ந்தது. Better என்ற வார்த்தையை இனிகோ எழுத்துப் பிழையுடன் அடுக்கிய போது அர்ஜுன் அதைத் திருத்தினார்.
இது நிதானமாக ஆட வேண்டிய விளையாட்டு என்பதை முதலிலேயே பார்த்தோம். எனவே ஐஸ்வர்யா இதை எப்படி கையாண்டிருப்பார் என்பதை பார்க்காமலேயே நம்மால் யூகிக்க முடியும். பலகைகள் கீழே தொடர்ந்து விழுந்தாலும் கூட லாக்கை ரிலீஸ் செய்யும்போது அவரால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. போட்டி முடியும் வரை இதே நிலைமையில் அவர் தள்ளாடிக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில், லாக்கின் கன்ட்ரோல்தான் இந்த ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் என்பது சரணுக்கு தெளிவாகப் புரிந்தது. எனவே ஒரு டைம் பாமை கையாளும் கவனத்துடன் அவர் லாக்கை கையாளத் தொடங்கினார்.

"இந்த ஆட்டத்தை சரண் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.." என்று அர்ஜுன் கமென்டரி தரும் அளவிற்கு சரணின் கவனம் அமைந்திருந்தது. ஒரு கட்டத்தில் வனேசா 2 வரிசைகளை முடித்துவிட்டார். ஆனால் சில நொடிகளிலேயே அவை சரிந்து விழுந்தன. இதற்கு லாக் மட்டும் காரணம் இல்லை. காற்று அடிக்கும் வேகமும் ஒரு தொந்தரவாக அமைந்திருந்தது.
சரண் இப்பொழுது மூன்றாவது வரிசைக்கு வேகமாக முன்னேறி இருந்தார். ஐஸ்வர்யா கட்டைகளை எடுக்கச் சென்றபோது அவர் கால் பட்டு லாக் விலகி பலகைகள் சரிந்தன. அம்மணிக்கும் பொறுமைக்கும் எப்போதுமே தொடர்பு இல்லை. எல்லாமே 'டமால் டுமீல்' தான்.
சரண் மிகுந்த கவனத்துடன் மூன்றாவது வரிசையை அடுக்கியபோது காற்று வந்து சில எழுத்துக்களை கீழே தள்ளியது. இனிகோ ஆச்சரியகரமாக இரண்டாவது வரிசையை முடித்திருந்தார். "இன்னமும் இரண்டு எழுத்துக்களை வைத்துவிட்டால் சரண் வின்னர்" என்று அர்ஜுன் அறிவிக்கும் போது மிகுந்த கவனத்துடன் பணியில் ஈடுபட்டார் சரண். அனைத்து எழுத்துகளையும் முடித்தபிறகு மிக மிக நிதானத்துடன் லாக்கை போட்டார். இந்தச் சமயத்தில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அவரது மொத்த உழைப்பும் பறிபோய்விடும். லாக்கை போட்டுவிட்டு அவர் டேபிளை தொட்டவுடன் "சரண் வின்னர்" என்று உற்சாகமாகக் கூவினார் அர்ஜுன். அவருக்கு இம்யூனிட்டி வாள் தரப்பட்டது.

ஜூரியாக அறிவிக்கப்பட்ட பிறகு நந்தாவை நாம் பார்க்க முடியவில்லை. இப்போது அவரை பார்க்க முடிந்தது. தனியறையில் அமர்ந்து இருந்தார். "போன் உபயோகிக்கணும் என்று தோன்றவே இல்லை. வீட்டுக்கு போன் செய்ய தயக்கமாக இருக்கிறது" என்ற நந்தா "இந்த எண்பது நாள் சர்வைவர் பயணம் தனது குணாதிசயத்தை மிகவும் மாற்றிவிட்டது" என்று உணர்வுப்பூர்வமாக சொன்னார்.
பிறகு வீட்டுக்கு அழைத்து வீடியோ காலில் தனது மனைவியிடம் பேசினார். தான் ஜூரி ஆகிவிட்ட விஷயத்தை சற்று சோகத்துடன் சொன்னார். நந்தாவின் மனைவி மேலதிக விவரங்களை கேட்டபோது "கேம் பற்றி சொல்லக் கூடாது" என்று மறுத்துவிட்டார் நந்தா.

"எப்போதும் நல்ல பெயர் எடுக்கணும்னு சொல்லுவே இல்லையா..? அதை நான் எடுத்து விட்டேன்" என்று நந்தா சொன்னபோது "நீங்கதான் எல்லா டாஸ்க்கையும் உண்மையா செஞ்சீங்க. இந்த வெற்றிக்கு முழு தகுதியும் உங்களுக்குத்தான் இருக்கிறது. உங்களை விடவும் வயதில் இளையவர்களிடம் சரிக்கு சமமாக நின்று நூறு சதவீத உழைப்பைத் தந்தீர்கள். நீங்க மற்றவர்களிடம் இவ்வளவு நட்பா பழகுவீர்கள் என்று எனக்கு இப்போதான் தெரியுது" என்று நந்தாவின் மனைவி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
"பாப்பாக்கு என்னை அடையாளம் தெரியுதா?" என்று நந்தா கேட்டபோது "முதலில் எனக்கே அடையாளம் தெரியல. முதல்ல போயி தாடியை எல்லாம் எடுங்க" என்று நந்தாவின் மனைவி சொல்லியது சுவாரஸ்யமான நகைச்சுவை. "பாப்பா பேச ஆரம்பித்து விட்டாளா?" என்று தன் மகளின் குரலைக் கேட்டு நெகிழ்ச்சியுடன் கண்கலங்கினார் நந்தா. தன் மகள் தன்னை அடையாளம் கண்டு கொண்டு "ப்பா..." என்று கூப்பிட்ட போது உணர்ச்சிப்பெருக்கில் தாங்க முடியாமல் அழத் தொடங்கினார். "You made me very proud" என்று நந்தாவின் மனைவி கூறியதும் அவருக்கு மிகுந்த ஆசுவாசமாக இருந்தது. "வீடியோ கால் பேசிய பிறகுதான் மனதில் ஒரு அமைதி வந்தது" என்று மலர்ச்சியான முகத்துடன் தன் அனுபவத்தை கூறி முடித்தார் நந்தா.

கொம்பர்கள் தீவு. மக்கள் கேம்ப் பயர் அமைத்து சினிமா பாடல் பாடும் விளையாட்டை ஆடிக் கொண்டிருந்தார்கள். 'லேசா லேசா' பாடலை இனிகோ பாடியபோது வனேசா பெயரை இணைத்து கிண்டல் செய்தார் உமாபதி. 'நான் ஆணையிட்டால்' பாடலை இவர்கள் பாடும்போது ஐஸ்வர்யாவின் மனதில் பழைய நினைவுகள் ஓடியிருக்கும். "எத்தனை பேர் வீட்டில் டிவி உடையப் போகுதோ?" விக்ராந்த் கிண்டலடிக்க, 'முஸ்தபா... முஸ்தபா...' பாடலோடு இந்த விளையாட்டு நிறைந்தது.
இந்த வார டிரைபல் பஞ்சாயத்தில் சரண் மற்றும் அம்ஜத்துக்கு ஆபத்து இல்லை. ஆனால் ஐஸ்வர்யாவின் கதி என்னவாகும்?