Published:Updated:

சர்வைவர் - 85: ஐஸ்வர்யாவைக் காப்பாற்றிய அம்ஜத்; பழைய பல்லவியைப் பாடிய காடர்கள்! இனி என்ன நடக்கும்?

சர்வைவர் - 85

“நீங்க ஐஸ்வர்யாவிற்கு ஐடலை தந்தது பெருந்தன்மையான முடிவு. ஆனா நான் அதை சும்மா தமாஷூக்குத்தான் கேட்டேன்” என்று அம்ஜத்தின் நற்குணத்தைப் பாராட்டினார் அர்ஜுன்.

Published:Updated:

சர்வைவர் - 85: ஐஸ்வர்யாவைக் காப்பாற்றிய அம்ஜத்; பழைய பல்லவியைப் பாடிய காடர்கள்! இனி என்ன நடக்கும்?

“நீங்க ஐஸ்வர்யாவிற்கு ஐடலை தந்தது பெருந்தன்மையான முடிவு. ஆனா நான் அதை சும்மா தமாஷூக்குத்தான் கேட்டேன்” என்று அம்ஜத்தின் நற்குணத்தைப் பாராட்டினார் அர்ஜுன்.

சர்வைவர் - 85
“இந்த விளையாட்டில் ஜெயிப்பதை விடவும் நல்ல பெயரோடு வெளியே செல்வதைத்தான் நான் முக்கியமாக நினைக்கிறேன்” என்று நேற்றைய எபிசோடில் நிகழ்ந்த உரையாடலில் சொன்னார் அம்ஜத். (இதையேதான் முன்னர் நந்தாவும் சொன்னார்.) சொன்னதைப் போலவே இந்தப் போட்டியில் இருந்து மிக கம்பீரமாக வெளியேறினார் அம்ஜத். ஒருவர் புகழில் நீடிக்கும் நேரத்தை விடவும் அதிலிருந்து அவர் வெளியேறும் நேரம் உன்னதமாக இருக்க வேண்டும். அப்படியொரு கச்சிதமான வெளியேற்றம் அம்ஜத்திற்கு நேற்று அமைந்தது.

ஏற்கெனவே சொன்னதுதான். இந்த விளையாட்டில் வென்றவர்கள் கூட முக்கியமில்லை. மக்களின் மனங்களை வென்றவர்கள் யார் என்பதுதான் முக்கியம். நந்தாவும் அம்ஜத்தும் இந்த வரிசையில் நிச்சயம் இடம் பெறுவார்கள்.

சர்வைவர் 85-ம் நாளில் என்ன நடந்தது?

மூன்று டாஸ்க்குகளிலும் வென்று இம்யூனிட்டி ஐடலைப் பெற்றிருந்தார் அம்ஜத். இம்யூனிட்டி சவாலில் வெற்றி பெற்று வாளைப் பெற்றிருந்தார் சரண். இருவருக்கும் எலிமினேஷன் பிரச்னையில்லை. ஐஸ்வர்யாவிற்கும் நாராயணனுக்கும்தான் கண்டம். “உன்னோட ஐடலை ஐஸ்வர்யாவிற்கு கொடுத்துடு அம்ஜத். அவதான் உன் பாசமான தங்கச்சியாச்சே” என்று மக்கள் அம்ஜத்தைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கிண்டலின் உள்ளே லேசான உள்குத்து இருந்ததைப் போலவே இருந்தது. “அது அவர் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச அடையாளம். அதை ஏற்க நான் சம்மதிக்க மாட்டேன்” என்று உறுதியாக தெரிவித்துவிட்டார் ஐஸ்வர்யா.

சர்வைவர் - 85
சர்வைவர் - 85

சரணுக்கும் அம்ஜத்திற்கும் பாதுகாப்பு வசதி இருந்ததைப் போலவே விஜிக்கும் இனிகோவிற்கும் அட்வான்டேஜ் இருந்தது. விஜியால் ஒரு வாக்கை தடுத்து நிறுத்த முடியும். இனிகோவால் ஒரு வாக்கை ரத்து செய்ய முடியும்.

“'காடர்களில் எண்ணிக்கை குறையும் போது நிச்சயம் உங்களை கழட்டி விட்டுடுவாங்க. நீங்களும் நானும் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கடைசி வரைக்கும் செல்லலாம். நான் விசுவாசமா இருப்பேன்'-ன்னு ஐஸ்வர்யா என்கிட்ட ஒரு டீல் சொல்றா. யோசிச்சி சொல்றேன்னு சொல்லிட்டேன். அம்ஜத்தும் இதையேதான் சொல்றாரு” என்று இனிகோவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் விஜி. காடர்களுக்கு எதிராக விஜி செயல்பட மாட்டார் என்று ஐஸ்வர்யாவிற்குத் தெரியும். என்றாலும் தன்னால் இயன்ற முயற்சியில் ஈடுபட நினைத்திருப்பார் என்று தோன்றுகிறது.

“ஐடல் இருக்கிறதால என்கிட்ட பேச வரமாட்டாங்க. காடர்கள் அப்படியே கல்லு மாதிரி நிக்க பிளான் பண்றாங்க” என்றார் அம்ஜத். சரணும் இந்தச் சமயத்தில் காடர்கள் அணியில் இணைந்து கொண்டார். “அவனுக்கு வேறு வழியும் இல்ல. ஒவ்வொரு முறையும் இம்யூனிட்டி ஜெயிக்க முடியுமா என்ன?” என்றார் விக்ராந்த். எண்ணிக்கை விளையாட்டு எத்தனை துணிச்சலாகப் பேச வைக்கிறது?!

காடர்களின் வியூகம்

காடர்களின் முதல் இலக்கு ஐஸ்வர்யாவாக இருந்தது. அடுத்த இலக்கு அம்ஜத். அடுத்தது நாராயணன். "ஒருவேளை அம்ஜத் தன் ஐடலை ஐஸ்வர்யாவிடம் கொடுத்துவிட்டால் என்ன செய்வது?” என்றும் யோசித்தார்கள். “இந்த மாதிரி கடைசி நேரத்துல முட்டாள்கூட தரமாட்டான்” என்றார் சரண். என்றாலும் அதற்கேற்ப தன் வாக்குகளை பிரித்துப் போட காடர்கள் திட்டமிட்டார்கள். அவர்களின் வழக்கமான உத்தி இது. இதுபோன்ற விபத்தில்தான் முன்னர் நந்தா பலியானார்.

சர்வைவர் - 85
சர்வைவர் - 85

உமாபதி, நாராயணன் மீது கோபமாக இருந்தார். “இனிகோ நாராயணனுக்காக எவ்வளவோ செஞ்சிருக்கார். ஆனால் நாராயணனின் போக்கு வேறு மாதிரியாக இருக்கிறது” என்பது உமாபதியின் கோபத்திற்குக் காரணம். “சிலருக்கு வாக்களிக்கணும்னா தகுந்த காரணமே இல்லையே?” என்று அம்ஜத் நியாயவுணர்ச்சியுடன் சொல்ல, “இந்த கேம்ல அப்படியெல்லாம் பார்க்க முடியாது. நம்மள காப்பாத்திக்கறதுதான் முக்கியம். அடுத்த லெவலுக்கு போகணும்” என்று யதார்த்தம் பேசினார் விக்ராந்த். “நல்ல பெயரோட இந்த கேமை விட்டுப் போகணும்னு நெனக்கறேன்” என்று பிறகு வீடியோ டைரியில் சொன்னார் அம்ஜத்.

டிரைபல் பஞ்சாயத்து உரையாடல்கள்

டிரைபல் பஞ்சாயத்து ஆரம்பித்தது. “12-வது வாரமாச்சு. இனிமே Smashing Idol, Hidden immunity Idol போன்ற விஷயங்கள் எல்லாம் செல்லுபடியாகாது. இந்த வாரம்தான் கடைசி” என்கிற முக்கியமான அறிவிப்புடன் உரையைத் துவங்கினார் அர்ஜுன். “அம்ஜத். என்ன பண்ணப் போறீங்க. உங்க ஐடலை தங்கச்சிக்கு கொடுக்கப் போறதா குருவி வந்து சொல்லுச்சே?” என்று அம்ஜத்தின் வாயைக் கிளற ஆரம்பித்தார் அர்ஜுன். “எனக்கே அது தெரியாது சார். எனக்குத்தான் பாயசம் போடுவாங்கன்ற நிலைமை” என்று சிரித்தார் அம்ஜத்.

“நாங்க சும்மாதான் கலாய்ச்சிட்டு இருந்தோம்” என்று விக்ராந்த் சொல்ல, “அப்படியெல்லாம் அம்ஜத் தர மாட்டார்” என்று உசுப்பேற்றிக் கொண்டிருந்தார் இனிகோ. இந்தச் சமயத்தில் முதல் ஜூரியான நந்தா சபையில் நுழைய அவரை வரவேற்றார் அர்ஜுன். தாடி, மீசையை எடுத்துவிட்டு டிப்டாப்பான ஆடையை அணிந்திருந்தாலும் குழி விழுந்த கன்னத்துடன் இருந்த நந்தாவைப் பார்க்க வேறு ஆசாமி மாதிரியே இருந்தது. “வெளியுலக வாழ்க்கைக்கு இன்னமும் நான் பழகலை சார். ரெண்டு நாளா தரையிலதான் படுத்தேன். பெட்ல படுக்கத் தோணலை.” என்றார் நந்தா.

சர்வைவர் - 85
சர்வைவர் - 85

கொம்பர்களிடம் உரையாடலைத் தொடர்ந்த அர்ஜுன், “இனிகோ... எப்படி சேஃப்ட்டியா ஃபீல் பண்றீங்களா?” என்று கேட்க “ஆமாம் சார்... போன வாரம் நிலைமை வேற மாதிரி இருந்தது. ரெண்டு பேர்தான். இப்ப உறவுகள் திரும்பி வந்துட்டாங்க. திருப்தியா இருக்கேன்” என்று புன்னகையுடன் சொன்னார் இனிகோ. ஆனால் ஆட்கள் குறையக் குறைய இந்த உறவுகளும் மாறும் என்பதுதான் நிதர்சனம். “சரண் மேல இருந்த கோபமெல்லாம் போயிடுச்சா?” என்ற அடுத்த கேள்விக்கு “மூன்றாம் உலகம் போறப்ப... ‘உங்க வீட்டு பிள்ளையா நெனச்சு மன்னிச்சுடுங்க’ன்னு சென்ட்டியா சொல்லிட்டுப் போனான். அப்பவே மன்னிச்சுட்டோம்” என்பது போல் சொன்னார் உமாபதி.

“ஐஸ்வர்யா. நீங்க ஒரு வலிமையான போட்டியாளர். சேஃப்பா ஃபீல் பண்றீங்களா?” என்று அர்ஜுன் அவரிடமும் அந்தக் கேள்வியை முன்வைக்க, “என்னைக் காப்பாத்திக்கறதுக்காக என்னால வீக்கா நடிக்க முடியாது. என் இயல்புபடிதான் இருக்க முடியும்” என்று பதில் அளித்த ஐஸ்வர்யாவிடம் “இல்ல... ஸ்ட்ராங்கா இருக்கற பிளேயரைத்தானே முதல்ல தூக்குவாங்க?” என்று சிரித்தபடியே அர்ஜுன் கேட்க, “சில கேம்ல சிலர் ஸ்ட்ராங்கா இருப்பாங்க. வேற சில கேம்ல வேற சிலர் ஸ்ட்ராங்கா இருப்பாங்க. அப்படி குறிப்பிட்டுச் சொல்ல முடியாது” என்று ஐஸ்வர்யா சொன்ன பதில் சிறப்பு.

“இல்ல.,. உங்களுக்கு சப்போர்ட் குறையுதேன்னு கேட்டேன்” என்று அடுத்த தூண்டிலை அர்ஜுன் போட, “என்னை நம்பித்தான் இந்த விளையாட்டிற்கு வந்தேன். யாரை நம்பியும் நான் இல்லை” என்று கெத்தாகச் சொன்னார் ஐஸ்வர்யா. “சரணுக்கு நிபந்தனையில்லாத ஆதரவெல்லாம் கொடுத்தீங்க... ஆனா... இப்போ அதைப் பத்தி பேசலாமா?” என்று தூண்டிலை மாற்றிப்போட்டார் அர்ஜுன். “நான் அவனை சப்போர்ட் பண்ணா... அவன் எனக்கு வோட்டு போடுவான்-னு கணக்கு போட்டெல்லாம் நான் பழகல. யாருக்கு வாக்களிக்கணும்ன்றதெல்லாம் அவனோட தனிப்பட்ட விருப்பம்” என்று ஐஸ்வர்யா சொன்ன பதில்கள் ஒவ்வொன்றும் காடர்கள் அணி மீது பலமாக விழுந்திருக்கும். “அவங்க சப்போர்ட் எனக்கு உதவியாக இருந்தது. இப்ப நான் நியாயமான காரணத்திற்காகத்தான் வாக்களிப்பேன். யாருடைய செல்வாக்கும் இருக்காது” என்று பதிலளித்தார் சரண். (ஆனால், 'அம்ஜத் அல்லது நாராயணனுக்கு வாக்களிப்பேன்’ என்று விக்ராந்திடம் குழு விவாதத்தில் சொன்னார்).

“நாராயணன் நீங்க சேஃப்பா?” என்று அர்ஜுன் கேட்க, “இந்த விளையாட்டில் இருக்கும் வரைதான் நான் பாதுகாப்பாக உணர்வேன். வெளில போறதை நினைச்சாதான் பயமா இருக்கு. நந்தாவோட அனுபவங்கள் காரணம்” என்று ‘அதுக்கு இது பதில் இல்லையே’ என்பது மாதிரி சொன்னார் நாராயணன்.

சர்வைவர் - 85
சர்வைவர் - 85

“இந்த தொன்னூறு நாள்கள் பயணம் என்னை ரொம்ப மாத்திடுச்சு. யோசிக்க நிறைய டைம் கிடைச்சது. அதுவரைக்கும் வாழ்க்கைல நிறைய தப்பு பண்ணியிருப்போம். மன்னிப்பு கேட்டிருக்க மாட்டோம். இனிமே யாரையும் காயப்படுத்தக்கூடாது என்கிற பாடத்தை இந்த ஆட்டம் கற்றுத்தந்தது. எதுவுமே இல்லாமல் சந்தோஷமா வாழ முடியும்ன்ற பாடமும் கிடைச்சது” என்று தத்துவார்த்தமாக பேசினார் நந்தா.

“காடர்கள் ரீ-என்ட்ரி பத்தி என்ன நெனக்கறீங்க?” என்று கேட்ட போது “சில ஆட்டங்கள் ஆடாம அவங்க உள்ளே வந்துட்டாங்க. அந்தக் கேள்வி அப்படியேதான் இருக்கும். அதையும் மீறி அவங்க ஜெயிச்சாங்கன்னா. என்ன பண்றது? இந்த கேம் அப்படி” என்று யதார்த்த உண்மையை வெளிப்படையாகச் சொன்னார் நாராயணன். “லீடர் விஜிக்கு எவ்வளவு மார்க் போடுவீங்க?” என்றபோது வழக்கம் போல் காடர்கள் பத்து மார்க் என்றனர். “பாட்டுப்பாடி கொன்னாங்க சார். அதுக்காக ஒரு மார்க் கம்மி பண்ணிடுவேன்” என்று காமெடி செய்தார் விக்ராந்த். உமாபதி 9.5 அளித்தார். "நெகட்டிவ் வைப் வரலை” என்று ஒன்பது மதிப்பெண் தந்தார் ஐஸ்வர்யா.

வாக்களிப்பில் நடந்த திருப்பங்கள்

“ஓகே... வோட்டிங் போயிடலாம்” என்று அந்தச் சடங்கை ஆரம்பித்தார் அர்ஜுன். நாராயணன் எழுந்து வாக்களிக்கச் செல்லும்போது தனது சக்தியைப் பயன்படுத்தி அவரின் வாக்கை தடுத்தார் விஜி. வாக்கெடுப்பு முடிந்ததும் ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. தன்னிடமிருந்த இம்யூனிட்டி ஐடலை கொண்டு போய் அர்ஜுனிடம் தந்த அம்ஜத், “இது ஐஸ்வர்யாவிற்காக” என்றார். “நோ... நோ... நீங்க தரக்கூடாது” என்று ஐஸ்வர்யா வன்மையாக மறுத்தும் அம்ஜத் கேட்கவில்லை. சிரித்துக் கொண்டே தன் இருப்பிடம் திரும்பிவிட்டார். காடர்கள் ஐஸ்வர்யாவை முதன்மையாக டார்கெட் செய்திருப்பார்கள் என்று அம்ஜத் கணக்கு போட்டிருக்கலாம். தன்னுடைய ஐடலை வைத்து ஐஸ்வர்யாவைக் காப்பாற்ற அவர் முடிவு செய்திருக்கலாம்.

சர்வைவர் - 85
சர்வைவர் - 85

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஐஸ்வர்யாவிற்கு எதிராக மூன்று வாக்குகள் வந்திருந்தன. இம்யூனிட்டி ஐடல் காரணமாக அவை செல்லாது. நாராயணனின் வாக்கு தடுக்கப்பட்டுவிட்டது. இறுதியில் நாராயணனுக்கு எதிராக மூன்று வாக்குகளும் அம்ஜத்திற்கு இரண்டு வாக்குகளும் வந்திருந்தன. இப்படியே முடிந்திருந்தால் நாராயணன் வெளியேற்றப்பட்டிருப்பார். இந்தச் சூழலில் இனிகோ எழுந்து வந்தார். அவரால் தன் சக்தியைப் பயன்படுத்தி ஒரு வாக்கை ரத்து செய்ய முடியும். ஆனால் அது யாருக்கு போட்ட வாக்கு என்பது அவருக்குத் தெரியாது. “சரண் போட்ட ஓட்டை ரத்து செய்யறேன்” என்றார் இனிகோ. சரண் நாராயணனிற்குப் போட்டிருந்தார். எனவே எண்ணிக்கை சமன் ஆகியது. சரண் நாராயணனுக்கு வாக்களிப்பார் என்பது இனிகோவிற்குத் தெரிந்திருக்கும். அவர் அம்ஜத்தை வெளியேற்ற நினைத்திருக்கிறார்.

மறுவாக்கெடுப்பில் நடந்த டிவிஸ்ட்

முதல் வாக்கெடுப்பில் முடிவு எட்டப்படாததால் மறுவாக்கெடுப்பு நடத்த அர்ஜுன் முடிவெடுத்தார். இதில் அம்ஜத் மற்றும் நாராயணன் கலந்து கொள்ள முடியாது. மற்ற ஏழு பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
சர்வைவர் - 85
சர்வைவர் - 85

இந்த வாக்கெடுப்பின் இறுதியில் அம்ஜத்திற்கு நான்கு வாக்குகளும் நாராயணனுக்கு மூன்று வாக்குகளும் வந்திருந்தன. ஆக அம்ஜத் ஆட்டத்திலிருந்து வெளியேற நேர்ந்தது. இனிகோ, வனேசா, விக்ராந்த், விஜி ஆகிய நால்வரும் அம்ஜத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்கள். ஐஸ்வர்யா, சரண், உமாபதி ஆகிய மூவரும் நாராயணனிற்கு எதிராக வாக்களித்திருந்தார்கள். இம்யூனிட்டி ஐடலை ஐஸ்வர்யாவிற்காகத் தியாகம் செய்த அம்ஜத், கட்டம் கட்டுதலின் அடுத்த வரிசையில் இருந்ததால் எளிதில் பலியானார்.

“நீங்க ஐஸ்வர்யாவிற்கு ஐடலை தந்தது பெருந்தன்மையான முடிவு. ஆனா நான் அதை சும்மா தமாஷூக்குத்தான் கேட்டேன்” என்று அம்ஜத்தின் நற்குணத்தைப் பாராட்டினார் அர்ஜுன். “இங்க எல்லோர்கிட்டயும் எனக்கு அன்பு இருக்கு. கடந்த வாரம் ரொம்ப ஜாலியா போச்சு. நாங்க சந்தோஷமா இருந்தோம். இதே பாசிட்டிவிட்டியோட ஆட்டத்தைவிட்டு போறதுல எனக்கு சந்தோஷம்தான். எனக்கு விதிக்கப்பட்ட வெற்றிகளை கடவுள் தருவார்” என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் அம்ஜத். இவரின் வெளியேற்றம் காரணமாக ஐஸ்வர்யா மிகவும் அதிர்ச்சியடைந்தார். “எனக்கு தராதீங்கன்னு சொல்லிட்டே இருந்தேன்” என்றவரின் முகத்தில் குற்றவுணர்வும் சோகமும் தெரிந்தது.

அம்ஜத்தின் பிரியாவிடை

சர்வைவர் - 85
சர்வைவர் - 85

சக போட்டியாளர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் நேர்மறையான வார்த்தைகளில் பாராட்டிய அம்ஜத் அனைவரையும் கட்டியணைத்து விடைபெற்றார். நந்தாவைத் தொடர்ந்து அவர் இரண்டாவது ஜூரியாக இருப்பார். போடுகிற வாக்குகளை ஒரு பக்கம் போட்டு விட்டு “நல்ல பிளேயர் சார்... போயிட்டாரு” என்கிற வழக்கமான பாடலை காடர்கள் பாடினார்கள். “நாங்க காமெடிக்குத்தான் சொன்னோம். அம்ஜத் ஐடலை கொடுத்துட்டாரு. கெத்துதான். நானா இருந்தா கூட பண்ணியிருக்க மாட்டேன்” என்று நேர்மையாகச் சொன்னார் விக்ராந்த். “நான்தான் போவேன்னு நெனச்சேன்” என்ற நாராயணனின் முகத்தில் வருத்தம் தெரிந்தது. உமாபதியும் அம்ஜத்தை மனமார பாராட்டினார். “மூணு டாஸ்க்லயும் ஜெயிச்ச ஐடலை கொடுத்துட்டு மாஸா வெளியே போனார்” என்பது அவரின் கருத்து. “சில மனிதர்கள்தான் தங்களின் செயலால் உயரத்திற்கு போயிடுவாங்க. அம்ஜத் அப்படிப்பட்டவர். நான் அவரோட ஃபேன் ஆயிட்டேன்” என்று பரவசமானார் விஜி.

“ஓகே... இந்த ஆட்டத்துல இனி பல ஆச்சரியங்கள் இருக்கும். டேக் கேர்” என்றபடி விடைதந்தார் அர்ஜுன். அப்படியென்ன ஆச்சரியங்கள்?

பார்த்துடுவோம்.