Published:Updated:

சர்வைவர் - 87: வெளியேறி ஷாக் கொடுத்த விக்ராந்த், இனிகோ... போட்டியாளர்களின் நாஸ்டால்ஜியா பயணம்!

சர்வைவர் - 87

விக்ராந்த்தும் இனிகோவும் இந்த வெளியேற்றத்தை மிக இயல்பாகவும் சுயபகடியுடனும் எடுத்துக் கொண்டது சிறப்பு. அவர்கள் தங்களின் தோல்வியை முன்னரே உணர்ந்திருந்தார்கள் போல.

Published:Updated:

சர்வைவர் - 87: வெளியேறி ஷாக் கொடுத்த விக்ராந்த், இனிகோ... போட்டியாளர்களின் நாஸ்டால்ஜியா பயணம்!

விக்ராந்த்தும் இனிகோவும் இந்த வெளியேற்றத்தை மிக இயல்பாகவும் சுயபகடியுடனும் எடுத்துக் கொண்டது சிறப்பு. அவர்கள் தங்களின் தோல்வியை முன்னரே உணர்ந்திருந்தார்கள் போல.

சர்வைவர் - 87
‘இம்யூனிட்டி எலிமினேஷன் சேலன்ஞ்’ போட்டியில் விக்ராந்த் – இனிகோ கூட்டணி துரதிர்ஷ்டமாக தோற்று வெளியேறியது. அவர்களின் இந்த நீண்ட பயணத்தை மூன்று பந்துகள் தீர்மானித்தது சோகமான விஷயம்.

அணிப்பாசம், எண்ணிக்கை விளையாட்டு, தனிப்பட்ட ஆசாபாசங்கள் போன்ற அற்பமான விஷயங்கள் ஓய்ந்து தனிநபர் திறமையால் மட்டுமே இனி வெற்றி காண முடியும் என்பது ஆட்டத்தை இன்னமும் சுவாரஸ்யமாக்கியிருக்கிறது.

சர்வைவர் 87-ம் நாளில் என்ன நடந்தது?

உமாபதி - ஐஸ்வர்யா கூட்டணி முதலில் வென்றுவிட்டதால் இதர மூன்று அணிகளிடம் பரபரப்பும் வேகமும் ஏற்பட்டது. வனேசாவின் வழிகாட்டுதலில் நாராயணன் முதல் பந்தை எப்படியோ இட்டு விட்டார். விஜி – சரண் கூட்டணி ஏற்கெனவே முதல் பந்தை இட்டிருந்தது. இப்போது இரண்டாவது பந்திற்காக அவர்கள் மெனக்கெட்டதில் வெற்றி கிடைத்தது.

தோல்வியடைந்த விக்ராந்த் – இனிகோ கூட்டணி

விக்ராந்த் – இனிகோ அணி ஆரம்பம் முதலே தடுமாறிக் கொண்டிருந்தது. அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைந்ததில் சலிப்புற்றார்கள். ஒத்திசைவு சுத்தமாக இல்லாத காரணத்தினால் அவர்களால் பந்தைக் கவனமாக மேலே எடுத்துச் செல்ல முடியவில்லை. வழியில் இருக்கும் துளைகளில் அடிக்கடி விழுந்ததால் எரிச்சலுக்கு ஆளானார் விக்ராந்த்.

சர்வைவர் - 87
சர்வைவர் - 87

விஜி – சரண் கூட்டணி இப்போது மூன்றாவது பந்தையும் முடித்து வெற்றி பெற்ற இரண்டாவது அணியாக மாறியது. ஆக... இப்போது ஆட்டம் வனேசா அணிக்கும் விக்ராந்த் அணிக்கும்தான். “அதுவரைக்கும் ஆட்டத்துலயே ஃபோகஸ் பண்ணிட்டு அப்புறம் வந்து பார்க்கறேன். விக்ராந்த் – இனிகோ ஒரு பந்து கூட போடலை” என்று ஆச்சர்யத்திற்கு உள்ளானார் சரண்.

“விக்ராந்த் டீம் தோத்துச்சின்னா இரண்டு காடர்கள் தொக்கா போயிடுவாங்க” என்று அப்போதும் எண்ணிக்கை விளையாட்டை வைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் வனேசா. நாராயணனுக்கு உத்வேகம் தந்த வனேசா மிகுந்த மெனக்கிடலுக்குப் பிறகு மூன்றாவது பந்தையும் இட்டார். மூன்றாவதாக வெற்றி பெற்ற அணியாக இவர்கள் மாறினார்கள். ஆக... எஞ்சியிருந்த நாலாவது அணி சர்வைவர் ஆட்டத்திலிருந்து வெளியேறாக வேண்டும்.

விக்ராந்த்தும் இனிகோவும் இந்த வெளியேற்றத்தை மிக இயல்பாகவும் சுயபகடியுடனும் எடுத்துக் கொண்டது சிறப்பு. அவர்கள் தங்களின் தோல்வியை முன்னரே உணர்ந்திருந்தார்கள் போல. இருவருமே நிதானமான விளையாட்டில் பலவீனமானவர்கள் என்னும் போது அதற்கேற்ப ஒருவேளை கூட்டணி அமைத்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாமோ, என்னமோ! ‘உங்கள் கூட்டாளியை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்’ என்று சர்வைவர் டீம் வலியுறுத்தியும் அவசரம் அவசரமாக முந்திக் கொண்டார்கள்.

வெளியேறும் நபர்களுக்கு பிரியாவிடை

விக்ராந்த் – இனிகோ வெளியேற்றத்திற்கு அர்ஜுனே மிகவும் வருந்தினார். “சொல்ல சங்கடமாகத்தான் இருக்கு. நீங்க ரெண்டு பேரும் எலிமினேட் ஆகறீங்க...” என்ற அர்ஜுன் “என்ன உமாபதி.. நீங்கதான் முதல்ல வின் பண்ணீங்க... ஆனா முகத்துல சந்தோஷத்தையே காணோமே?” என்று அவரின் வாயைக் கிளறினார். தங்களின் உற்ற தோழர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேறும் விஷயம் உமாபதியை கலங்க வைத்துவிட்டது. விஜியும் வனேசாவும் கூட கலங்கினார்கள்.

“இதுவே டிரைபல் கவுன்சில்ன்னா முடிவு தெரியறதுக்கு டைம் ஆகும். வோட்டு போடுவாங்க. ஆனா இப்ப உடனே தெரிஞ்சிடுச்சு” என்று சமயம் தெரியாமல் சந்தோஷப்பட்டார் ஐஸ்வர்யா. இனி நம்பர் கேம் இருக்காது என்கிற ஆசுவாசம் அவருக்கு. “உன்னை வோட்டு போட்டு அனுப்பிச்சாதான் சந்தோஷமா?” என்று அப்போதும் தனது சர்காஸ்டிக்கான கமென்ட்டை சொன்னார் இனிகோ. ‘நியாயம்தான் ஜெயிக்கும்’ என்று பிறகு வீடியோ டைரியில் சொன்னார் ஐஸ்வர்யா. இதையே நந்தாவும் முன்னர் சொன்னது நினைவிற்கு வருகிறது.

சர்வைவர் - 87
சர்வைவர் - 87

“இரண்டு பெரிய பிளேயர்கள் வெளியே போறதை என்னால நம்ப முடியலை. இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டாங்க?” என்று ஃபீல் செய்தார் விஜி. “என்ன ஆச்சு விக்ராந்த்?” என்று விசாரித்தார் அர்ஜுன். “முதல்ல இருந்தே சிங்க் ஆகலை சார்” என்ற விக்ராந்த், “ஒரு பந்தையாவது போட்டிருந்தா கொஞ்சமாவது மானம் மிஞ்சியிருக்கும்” என்று சிரித்தார். இனிகோ கூலாகவே இந்த வெளியேற்றத்தை எடுத்துக் கொண்டார். “பத்துநாள்தான் இந்த ஆட்டத்துல தாங்குவேன்னு நெனச்சேன் சார். வீட்லயும் அப்படித்தான் சொல்லிட்டு வந்தேன். இவ்வளவு நாள் தாக்குப் பிடிச்சது பெரிய விஷயம்” என்று சொல்லி ஆறுதல் அடைந்தார் விக்ராந்த்.

சுற்றுலா அறிவிப்பு

“இந்த ஓலையை வாசியுங்க” என்று விஜியைக் கூப்பிட்டார் அர்ஜுன். "போட்டியின் இறுதிக்கட்டத்திற்கு வந்து விட்டீர்கள். நீங்கள் முன்னர் வசித்த உங்களின் பழைய தீவுகளுக்கு ஒரு சுற்றுலா சென்று வாருங்கள். நீங்கள் அமர்ந்திருந்த இடம், சாப்பிட்ட இடம் என்று பழைய இடங்கள் உங்களுக்கு ஒரு நாஸ்டால்ஜியா அனுபவத்தை தரும்" என்றது அந்த ஓலை. ஆக... ஒரு எபிசோடிற்கான ஃபுட்டேஜை தேற்ற தீர்மானித்து விட்டார்கள் என்று தெரிந்தது.

“இனிகோ... நீங்க ரெண்டு வாரம்தான் கழிச்சு வந்தீங்க. ஆனா எல்லோர் மனசுலயும் நின்னுட்டீங்க” என்று பாராட்டினார் அர்ஜுன். “தோற்கறது எங்களுக்கு புதுசில்ல. ஜெயிக்கறதுதான் சார் புதுசு” என்று தன் வழக்கமான தத்துவத்தைச் சொன்னார் விக்ராந்த். வருத்தமாக நின்றிருந்த உமாபதியிடம் “ஜாலியா விளையாடு. ஜெயிச்சுட்டு வா” என்று ஆறுதலும் சொன்னார். “சார். ஆனா ஒண்ணு சொல்லணும்... ஒரு ஒட்டு கூட என் மேல விழல” (?!) என்பதை பெருமிதமாகச் சொல்லிக் கொண்டார் விக்ராந்த்.

இனிகோவை பிரிவதை எண்ணி கண்கலங்கினார் வனேசா. (ரியாலிட்டி ஷோக்களில் சும்மாவே ஆடுவார்கள்! இந்த மாதிரி தருணங்களை விட்டு விடுவார்களா என்ன? பிரிவுத் துயரப் பாடல்களை பின்னணியில் போட்டு அட்டகாசம் செய்து விட்டார்கள்). ஆட்டத்திலிருந்து வெளியேறிய இனிகோ மற்றும் விக்ராந்த்திற்கு அனைவரும் பிரியா விடை தந்தார்கள்.

காடர்கள் தீவிற்கு ஒரு பயணம்

சர்வைவர் - 87
சர்வைவர் - 87

முன்னர் காடர்கள், வேடர்களாக பிரிந்திருந்த அனைவரும் இப்போது காடர்கள் வசித்த தீவை நோக்கி பயணப்பட்டார்கள். முந்தைய போட்டியாளர்களின் புகைப்படங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. “சிலை வெச்சிட்டாங்க” என்று நையாண்டியாகக் கூறினார் உமாபதி. “நல்ல வேளை... நம்ம போட்டோ. இங்க இல்லை” என்று ஆறுதல் அடைந்தார் நாராயணன். முதலில் பார்வதியின் போட்டோ இருந்தவுடன் மக்கள் உற்சாகமானார்கள். “பார்வதி பேசறது கொஞ்சம் ஓவரா இருந்தாலும் அவளுக்குள்ள ஒரு ஃபயர் இருந்தது” என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் ஐஸ்வர்யா. பார்வதி தொடர்பான பழைய வீடியோக்களின் தொகுப்பு ஒளிபரப்பானது. நீண்ட நாள்கள் கழித்து தலைவியின் குரலை கேட்டதில் புல்லரிப்பு ஏற்பட்டது.

அடுத்ததாக லட்சுமியின் புகைப்படம் இருந்தது. “ஆயுத பூஜையின் போது புது ஆடையில் லட்சுமிபிரியா ஸ்டைலாக வந்த போட்டோவை நினைவுகூர்ந்தார் வனேசா. “எனக்கு பிடிச்ச போட்டியாளர் லட்சுமி. இந்த விளையாட்டு மேல அவங்களுக்கு அவ்வளவு passion” என்றார் விஜி. Hidden Immunity Idol-ஐ எடுப்பதற்காக இரவு முழுவதும் லட்சுமி தவித்த தவிப்பை சிரிப்புடன் நினைவுகூர்ந்தார் உமாபதி. “ஒரு அக்கா – தம்பி ஃபீல் எங்களுக்குள்ள இருந்தது. ரொம்ப நேர்மையான போட்டியாளர்” என்றார். ஒரு விநாடி வித்தியாசத்தில் காடர்கள் வெற்றி பெற்ற ஆட்டத்தில் லட்சுமி அடைந்த உற்சாகம் தொடர்பான காட்சி காட்டப்பட்டது.

அடுத்ததாக நந்தா. இப்போது நாஸ்டால்ஜியா மொமென்ட்டை ஐஸ்வர்யா கைப்பற்றிக் கொண்டார். “இந்த போட்டோல இருந்த தொப்பியை கடைசி வரை அணியனும்னு அவர் விரும்பினார். ஆனால் எங்கோ தொலைந்து விட்டது. 'பேச்சைக்குறை. நல்லா விளையாடு'ன்னு எனக்கு அட்வைஸ் பண்ணிட்டே இருப்பார்” என்ற ஐஸ்வர்யாவிடம் “ஆனா, அதை நீ கேக்கலையே?” என்று கிண்டல் செய்தார் விஜி. சுத்தமான நீரில் குளித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் நாராயணன். ‘நந்தா ஒரு strongest பிளேயர்’ என்று அர்ஜுன் சொன்ன காட்சி வெளியானது.

அடுத்ததாக அம்ஜத். சறுக்கு மரத்தில் ஏற முடியாமல் அம்ஜத் அழுத காட்சியை உமாபதி நினைவுகூர்ந்தார். “டீஷர்ட்டை கழட்டிட்டான். அவனோட ஃபேமிலியைச் சொல்லி மேல வா–ன்னு மோட்டிவேட் பண்ணேன்” என்றார் உமாபதி. ஆம், நினைவுகூர்ந்தால் அம்ஜத் அந்த நாளில் அடைந்த போராட்டம் மிகப் பெரியது.

பழைய போட்டியாளர்களின் அணிவகுப்பு

சர்வைவர் - 87
சர்வைவர் - 87

அடுத்ததாக ‘ஸ்ருஷ்டி டாங்கே’. ஓ... இவங்களும் இருந்தாங்கள்லே?’ என்பது மாதிரியே தோன்றியது. பார்வதி கீழே விழுந்ததைப் பார்த்து ஸ்ருஷ்டி சிரித்ததால் ஏற்பட்ட சண்டை, ஸ்ருஷ்டி - ஐஸ்வர்யா – பார்வதி மூவரும் மழையில் ஒன்றாக இணைந்து பாடிய பாட்டு தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகின.

அடுத்ததாக ‘பெசன்ட்’ ரவி. “அவரை எனக்கு மொதல்லேயே தெரியும்” என்று சொன்ன நாராயணன், “இது அவருக்கு மணநாள் வாழ்த்து வீடியோ வந்தபோது எடுத்த புகைப்படம்” என்று நினைவுகூர்ந்தார். “அவர் எனக்கு அப்பா மாதிரி” என்றார் ஐஸ்வர்யா. “நான் சர்வைவர் வந்தது, ஐம்பது வயசு இருக்கறவங்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும்-ன்னு ரவியண்ணா சொல்வார். சின்னப்பசங்களுக்கு கூட இன்ஸ்பிரேஷன்தான்–ன்னு நான் சொல்வேன்” என்றார் உமாபதி.

அடுத்ததாக இனிகோ. “அய்... என்னோட ஃபேவரைட்” என்று உற்சாகத்தில் கத்தினார் விஜி. பனிக்கட்டி டாஸ்க்கில் உமாபதி வென்ற காட்சி, இனிகோ தலைவர் ஆன காட்சி போன்றவை தொடர்பான புகைப்படங்கள் அங்கே இருந்தன. “நட்பிற்காக உயிரையும் இனிகோ தருவார்” என்று பரவசப்பட்டார் விஜி.

காடர்கள் தீவு

“அடடா... நாங்க வாழ்ந்த இடம் இது” என்று காடர்கள் பரவசப்பட்டனர். விக்ராந்த் வர முடியாத காரணத்தினால் வருந்தினார் உமாபதி. “ஒவ்வொரு இடத்தையும் கண்ணு தேடுது” என்று பழைய நினைவுகளில் மூழ்கினார் சரண். “எனக்கு இந்தத் தீவு ரொம்ப பிடிக்கும்” என்றார் வனேசா.

அடுத்ததாக இந்திரஜாவின் புகைப்படம் தென்பட்டது. "எங்க டீமோட செல்லக்குட்டி அவதான். எங்களுக்கு எல்லாம் சாப்பாடு அவதான் தருவா” என்று நினைவுகூர்ந்தார் உமாபதி. “என்னால விளையாட முடியுமான்னு கேக்கறாங்க. எனக்கு மனவலிமை அதிகம் இருக்கு” என்று இந்திரஜா சொன்ன காட்சி ஒளிபரப்பானது.

அடுத்ததாக ரொமான்டிக் ஹீரோ ராமின் புகைப்படம். ‘பாத்திரம் கழுவாமல் தாமதம் ஆக்கிய சம்பவத்தை’ நினைவுகூர்ந்தார் விஜி. ராமின் யோகா போஸை நினைத்து, “மண்ணுக்குள்ள தலை புதைந்திடுச்சின்னு நெனச்சேன்” என்று காமெடி செய்தார் உமாபதி. இருக்கும்போது ராமை நன்றாக திட்டி விட்டு, இப்போதோ ‘எனக்கு பிடிச்ச போட்டியாளர்’ என்றார் விஜி.

சர்வைவர் - 87
சர்வைவர் - 87

அடுத்ததாக லேடிகாஷ் புகைப்படம். ‘டான்காஷ்’ என்றார் உமாபதி. “வனேசா புதுசா வரும் போது காண்டுல நாங்க ரெண்டு பேரும் முகத்தைத் திருப்பிக்கிட்ட காட்சி இது” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார் விஜி. லேடிகாஷ் பற்றி அதிகம் பேசாமல் குறைவாக முடித்துக் கொண்டார்கள். (எடிட்டிங்கில் தூக்கி விட்டார்களோ?!).

அடுத்ததாக விக்ராந்த் புகைப்படம். “இதுக்குள்ளயேவா போஸ்டர் ஒட்டிட்டாங்க?” என்று ஆச்சரியமாக இருந்தது. ‘எங்க பெஸ்ட் கேப்டன்” என்று நெகிழ்ந்தார் உமாபதி. “நான் ரிசல்ட் பத்தி கவலைப்பட மாட்டேன். அணியோட நலன்தான் முக்கியம்” என்று விக்ராந்த் சொன்ன காட்சி ஒளிபரப்பானது. "யாரு கண்ணு பட்டுதோ. கேமை விட்டு போயிட்டாரு” என்று வருந்தினார் உமாபதி.

மூன்றாம் உலக உரிமையாளர் காயத்ரி

இந்தச் சுற்றுலா குழு அப்படியே மூன்றாம் உலகத்திற்கும் பயணித்தது. “ரொம்ப பில்டப் கொடுத்தீங்க. அவ்ளோ ஒண்ணும் மோசமா தெரியலையே” என்று கிண்டலடித்தார் உமாபதி. (ஒருவாரம் தனியாக இருக்கச் சொன்னால் தெரியும்). “இங்க என்ன வேலை இருக்கப் போவுது. நல்லா தூங்கித் தூங்கி எழுந்திருச்சிருப்பாங்க. மூன்றாம் உலகத்துல இருந்து வர்றவங்களையெல்லாம் பாருங்க. நல்லா ஃப்ரெஷ்ஷா இருப்பாங்க” என்று உமாபதியின் கிண்டல் நீண்டது.

காயத்ரியின் புகைப்படம் தென்பட்டது. “இவங்கதான் மூன்றாம் உலகத்தின் ஓனரம்மா” என்றார் விஜி. பிறகு இந்த இடத்தில் காயத்ரியுடன் தான் பழகிய அனுபவங்களையும் ஏற்பட்ட நெருக்கத்தையும் நினைவுகூர்ந்தார். “என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த கேமோட பெரிய சாதனையாளர் காயத்ரிதான்” என்றார் விஜி. உண்மைதான். மூன்றாம் உலகத்தில் இருந்த அத்தனை சிரமங்களைத் தாண்டி, அங்கு நிகழ்ந்த பல போட்டிகளில் வென்று மெயின் டீமிற்கு திரும்பாமலேயே போன காயத்ரியின் உழைப்பு நினைவில் வைத்து போற்றக்கூடியது. குறிப்பாக பார்வதியை அவர் சகித்துக் கொண்டதற்காகவே தனியாக விருது தரலாம்.

சர்வைவர் - 87
சர்வைவர் - 87
இந்த நாஸ்டால்ஜியா பயணத்தின் இறுதி ஷாட் அத்தனை அற்புதமானதாக இருந்தது.
அடுத்த சவால் என்னவாக இருக்கும்? அதில் யார் வெற்றி பெறுவார்?

பார்த்துடுவோம்.