ஏற்கெனவே நொந்து போயிருக்கிற ஒருவனுக்கு அவன் மேலும் வெந்துபோகிற மாதிரியான விஷயங்கள் நடந்தால் எப்படியிருக்கும்? இப்படியாக வேடர்கள் அணிக்கு நடந்த கொடுமைதான் நேற்றைய எபிசோடின் பரிதாப ஹைலைட். சர்வைவரின் அராஜக தண்டனையை துணிச்சலுடன் எதிர்த்து கேள்வி கேட்ட நந்தா பாராட்டுக்குரியவர்.
இதைத் தவிர, கோக்குமாக்கான கேள்விகளைக் கேட்கும் ஜாலி + சீரியஸ் டாஸ்க் ஒன்றும் நடந்தது. ஏற்கெனவே குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் குடும்பத்துக்குள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்த முயலும் ‘சர்வைவர்’ டீமின் கும்மாளமான குறும்பு புரிந்தது.
ஓகே... சர்வைவர் 26-வது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.
‘ரிவார்ட் சேலன்ஞ்சில்’ தோற்றுப் போய், சாப்பிட உணவு கிடைக்காமல் வேடர்கள் அணி பரிதாபமாக திரும்பிக் கொண்டிருந்தது. கரையிலிருந்து ஐஸ்வர்யாவை உப்பு மூட்டை தூக்கிச் சுமந்து வந்தார் நாராயணன். ரிவார்ட் டாஸ்க்கில் ஐஸ்வர்யா காட்டிய வேகத்துக்காக அவரைத் தலையில் கூட தூக்கிச் சுமக்கலாம். அப்படியொரு துடிப்பான ஸ்போர்ட்ஸ்வுமேன்ஷிப்பைக் காட்டினார்.

ஆனால் தீவுக்குத் திரும்பிய அடுத்த கணமே ஐஸ்வர்யாவுக்கு பெரிய ஆப்பு காத்திருந்தது. மற்ற அணித்தலைவர்கள் இதுவரை எதிர்கொள்ளாத ஒரு பெரிய நெருக்கடியை அவர் இன்று சமாளிக்க வேண்டியிருந்தது.
புதிய ஓலை வந்த ஒலியைக் கேட்டதும், “அடிங்க எஜமான்... ஆனா ரெஸ்ட் கொடுத்துட்டு அடிங்க” என்றபடி அதை எடுத்து வாசித்தார் நாராயணன். அது டீம் லீடர் ஐஸ்வர்யாவிற்கு எழுதப்பட்ட ஓலை.
‘’ரிவார்டு சேலஞ்சில் உங்கள் அணி தோற்றதிற்கு யார் காரணம். அந்த Worst Performer யார்? என்பதை அணியாக கூடிப் பேசிய பிறகு நீங்கள் தேர்ந்தெடுங்கள். அவருக்கு ஒரு தண்டனை உண்டு. பொழுது விடிவதுவரை அவர் கைவிலங்குடன் இருக்கவேண்டும்’’ என்று ஆரம்பித்த அந்த ஓலையின் கொடுமை அத்துடன் முடியவில்லை. ‘’அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இன்னொருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இருவரும் கைவிலங்குடன் இருக்க வேண்டும்…’’ இந்த அறிவிப்பைக் கேட்டதும் வேடர்கள் அணி அதிர்ச்சியடைந்தது. ஏனெனில் நேற்றைய டாஸ்க்கில் அனைவருமே தங்களின் சிறந்த பங்களிப்பைத் தந்திருந்தார்கள். இதில் எப்படி ஒருவரை ‘மோசமான பங்களிப்பாளராக’ தேர்ந்தெடுக்க முடியும்? மேலும் ‘கைவிலங்கு தண்டனை’ என்பது அவர்களுக்குக் கோபத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் வேறு வழியில்லை. ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். யார் அவர்?
இது தொடர்பாக தன் அணியில் உள்ள ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சென்று உரையாடினார் ஐஸ்வர்யா. ஆனால் அனைவருமே நழுவினாற்போல் ஜாக்கிரதையாக பேசினார்கள். எனவே குழப்பத்துக்கு ஆளானார் ஐஸ்வர்யா.
“இனிகோவைத் தேர்ந்தெடுக்கலாம். அவர் அணிக்குள் தாமதமாக வந்தவர். நாம் பார்த்த கஷ்டங்களை அவர் பார்க்கவில்லை” என்கிற பொருத்தமற்ற காரணத்தைச் சொன்னார் அம்ஜத். “இந்த டாஸ்க் மட்டும்தான் கணக்கு. நீங்க சொல்றது சரியில்லை” என்று சரியான கோணத்தில் யோசித்தார் ஐஸ்வர்யா.
டாஸ்க்கில் வேகமாக முன்னேறியவர்களைத் தவிர்த்துவிட்டு யார் மிகவும் பின்தங்கினார்கள், யாருக்கு அதிகம் உதவி தேவைப்பட்டது... என்கிற நோக்கில் சிந்திக்கத் தொடங்கினார் ஐஸ்வர்யா. மற்றவர்கள் தந்த பதில் அவரை அவ்வாறு சிந்திக்கத் தூண்டியது.
இந்த நோக்கில் பார்த்தால் இருப்பதிலேயே பின்தங்கியிருந்தவர் லட்சுமிபிரியாதான். A ஷேப் சறுக்குப் பலகையில் ஏறுவதற்கு அவருக்கு உதவி தேவைப்பட்டது. லட்சுமிபிரியாவிடம் இதைப் பற்றி நேரடியாக சொல்லாமல் மறைமுகமாகக் கேள்விகளைப் போட்டார் ஐஸ்வர்யா. ஆனால் LP மிக மிக புத்திசாலி.

“டீம் லீடரான நீங்க சொன்ன பிளான்படிதான் எல்லாம் நடந்தது. யாருக்கும் உதவி செய்ற மாதிரி சூழல் எனக்கு ஏற்படலை. அதுக்கு நான் என்ன செய்ய?” என்பதுபோல் மிக நேர்த்தியாக பதில் சொல்லி ஐஸ்வர்யாவின் வாயை அடைத்தார் லட்சுமி. ஆனால் ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யாவின் நெருக்கடி அதிகமானவுடன், “சரி... தண்டனையை நான் ஏத்துக்கறேன்” என்று வேறு வழியில்லாமல் தியாகியாக மாறி சரண் அடைய முன்வந்தார்.
இந்தச் சிக்கலை 'Out of the box' முறையில் சிந்தித்தார் நந்தா. எல்லோருமே இந்தத் தண்டனையை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருந்தபோது அவர் மட்டுமே இந்த விஷயத்தை மாற்றுக் கோணத்தில் சிந்தித்தார். அடிமைகளாக இருக்கும் ஒரு கூட்டத்தில் சுதந்திரத்தைப் பற்றி யோசிக்கும் முதல் மனிதன்தான் போராளியாக மலர்வான். நந்தாவின் கேள்விகள் அப்படித்தான் இருந்தன.
“நாம தோத்துப் போனதுக்கு ரிவார்ட் தரலை. அதுதான் நமக்கான தண்டனை. அது ஓகே.. அதுக்கு மேல இன்னொரு தண்டனைன்னா அது டூ மச். நியாயமே இல்லை. அதிலும் கைவிலங்கு போடுவதெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாத விஷயம். மனித உரிமை மீறல். நாம் என்ன சிறைக் கைதிகளா? நான் லீடரா இருந்தா ‘இந்தத் தண்டனையை ஏற்றுக் கொள்வதில்லை’ என்று முடிவு செய்வேன்” என்பதுபோல் பேசி ஒரு புதிய சிந்தனையை விதைத்தார்.
“இந்த டாஸ்க்கில் 'ஒவ்வொரு தனிநபரின் பங்களிப்பும் மதிப்பிடப்படும்’ன்னு முன்னமே சொல்லியிருக்கணும். நாங்க டீமா நின்னு உழைச்சப்பறம் ஒருத்தனைத் தேர்ந்தெடுன்னு சொன்னா எப்படி?” என்று கேட்ட அம்ஜத்தின் கேள்விகளும் முக்கியமானவை. “கைவிலங்கு வேண்டாம். வேற தண்டனை கொடுத்தா கூட பரவாயில்ல” என்று இறங்கிவந்தார் லட்சுமிபிரியா. இதுவும் ஒரு வகையான அடிமைத்தனமே.
நந்தாவின் பலத்த ஆட்சேபமும் கண்டனமும் வேடர்கள் அணிக்கு உத்வேகம் தந்து ஒரு தெளிவான முடிவை எடுக்க வைத்தது. “இந்தத் தண்டனையை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்று அனைவரும் ஒரே குரலில் சொன்னார்கள். அவர்களை சரியான திசையில் யோசிக்கவைத்த நந்தாவுக்கு சபாஷ்.
காடர்கள் தீவு. தங்களுக்கு அளிக்கப்பட்ட ‘சர்வைவர் கரன்ஸி’யை எடுத்துக் கொண்டு விக்ராந்த்தும் விஜயலட்சுமியும் கும்மாளமாக ஷாப்பிங் கிளம்பினார்கள். “பெரிய பையா எடுத்துட்டு போங்க. நிறைய அள்ளிட்டு வாங்க” என்று மற்றவர்கள் உற்சாகமாகச் சொன்னார்கள். ஆனால் ‘கப்பல் வாங்கப் போனவன், பழைய செப்பல் வாங்கி வந்த கதையாக’ அந்த ஷாப்பிங் அனுபவம் ஆகிப் போனது.

‘சர்வைவர் சூப்பர் மார்க்கெட்’ நல்ல லாபத்தில் இயங்குகிறதுபோல. இப்போது கடை இன்னமும் விரிவடைந்து நிறைய பொருள்கள் இருந்தன. அது மட்டுமல்லாமல் ஒரு சேல்ஸ்மேனையும் பணிக்கு நியமித்திருந்தார்கள்.
“அய்... வெங்காயம். தக்காளி இருக்கு. வெஜிடபிள் பிரியாணி பண்ணிடலாம்’’ என்று கடைக்குள் பாய்ந்தவர்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. இவர்கள் வைத்திருந்த 30 கரன்ஸிக்கு ஏதாவது ஒரு பொருளை மட்டுமே வாங்க முடியும். “25 ரூபாய்க்கு அஞ்சு முட்டை எடுத்துக்கறேன். மீதி அஞ்சு ரூபாய்க்கு ஒரு சோப் எடுத்துக்கட்டுமா?” என்று சேல்ஸ்மேனிடம் உடைந்த ஆங்கிலத்தில் பேரம் பேசினார் விக்ராந்த்.
ஆனால் ‘ஸ்ட்ரிக்ட் ஆபிசராக’ இருந்த அந்த சேல்ஸ்மேன் இந்த பேரத்துக்கு “நோ... நோ...” என்று சொல்லி மறுத்து விடவே “போடா வெங்காயம்... சென்னைக்கு வாடா... உன்னை வெச்சுக்கறேன்” என்று லோக்கல் தமிழில் ஜாலியாகத் திட்டிவிட்டு வந்தார் விக்ராந்த். இந்த மொழி அவருக்குப் புரிந்திருந்தால் “நீ போடா வெங்காயம்... இங்க இருக்கற வெங்காயத்தை வாங்கவே உன்கிட்ட காசில்லை’’ என்று பதிலுக்குத் திட்டியிருக்கலாம்.
“இவ்ளோதான்டா கிடைச்சது” என்று ஷாப்பிங் போய் வந்தவர்கள் காலி பையைக் காண்பிக்க, “இதுல பெருசா ஊழல் நடந்திருக்கு. நம்மை ஏமாத்தறாயங்க மாப்ள... அர்ஜூன் சார் கிட்ட புகார் பண்ணணும்” என்று நொந்து போய் பேசிய காடர்கள் அணி வெகுமதியாக வந்திருந்த Pancake-யாவது சாப்பிடலாம் என்று அமர்ந்தது. ஆனால் அதையும் சாப்பிட முடியவில்லை. "இதுக்குப் பதிலா ஒரு முட்டை தோசையாவது கொடுத்திருக்கலாம். இது நல்லாவேயில்ல” என்று ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் வந்த சிறுவனைப் போல முகம் சுளித்தார்கள்.
இப்படியாக வேடர்கள் அணியும் காடர்கள் அணியும் வெவ்வேறு காரணங்களால் நொந்து போய் உட்கார்ந்திருக்க, அதில் ஜாலி பெட்ரோலை ஊற்ற முயன்றது சர்வைவர் டீம். ஆம்... அடுத்த டாஸ்க்.
ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்தமான நண்பரை எவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை சோதிக்கும் டாஸ்க். எனவே போட்டியாளர்கள் இரண்டு பேர் கொண்ட ஜோடிகளாக சேர வேண்டும். வந்த கேள்விகள் பெரும்பாலும் கோக்குமாக்காக, ஒருவரையொருவர் மாட்டிவிடும்படியும் இருந்தன.

'உங்கள் இருவரில் யார் அதிகம் பொய் சொல்பவர்… டைட்டில் ஜெயிப்பதற்காக அடுத்தவரின் முதுகில் குத்தக்கூட தயங்காதவர் யார்?' என்று வில்லங்கமான கேள்விகளாக இருந்தததைப் பார்த்தவுடன் ‘’உங்களில் யார் அடுத்தவரை கொலை செய்வார்னு கூட கேள்வி இருக்கும் போலயே’’ என்று ஜாலி கமென்ட் அடித்தார் நாராயணன்.
"பிரியாணி கிடைத்தால் மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்ளாமல் சாப்பிடுபவர் யார்?”, "எதிர் பாலினத்தவரைப் பார்த்தவுடன் அதிகம் வழிபவர் யார்?” என்பது போன்ற ஜாலியான கேள்விகளும் இருந்தன.
இந்த ‘கோக்கு மாக்கு’ டாஸ்க்கை ஜாக்கிரதையான பதில்களால் ஆடி பலர் சொதப்பினார்கள். சங்கடமான கேள்விகளுக்கு ‘இருவருமே’ என்று பாதுகாப்பாக பதில் அளித்தார்கள். உதாரணமாக சரண் ஆடிய சேஃப் கேம் சகிக்க முடியாதது. வனேசா – லேடி காஷ் ஜோடியும் அதிகம் சொதப்பியது. ‘’இப்படிப் பாதுகாப்பாக பதில் சொல்ல முடியாது. பதிலைச் சரியாக சொல்ல வேண்டும்’’ என்கிற கறாரான கட்டாயத்துடன் அர்ஜூன் தலைமையில் இந்த டாஸ்க்கை அமைத்திருத்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.
இதில் நந்தா – நாராயணன் ஜோடி அனைத்து ஐந்து கேள்விகளுக்கும் ஒற்றுமையான பதிலைச் சொல்லி சாதனை படைத்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக ஐஸ்வர்யா – அம்ஜத் ஜோடி நான்கு பாயின்டுகள் எடுத்திருந்தார்கள். காடர்கள் அணியில் இந்த டாஸ்க் ஜாலியாக அமைந்திருந்தாலும் நேர்மையான பதில்கள் வரவில்லை.
‘கோக்குமாக்கு’ டாஸ்க்கை விளையாட்டாகவும் சற்று சீரியஸ் ஆகவும் ஆடி முடித்த இரு அணிகளுக்கும் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ‘மாற்றம்... ஒன்றே மாறாதது’ என்கிற தலைப்பில் வந்திருந்த ஓலையில் ‘மாற்றம்...’ என்கிற வார்த்தை அதிகம் இருந்தவுடன் வேடர்கள் அணி இதை உடனே கண்டுபிடித்துவிட்டது. காடர்கள் அணி சற்று டியூப்லைட்டாக தாமதமாகக் கண்டுபிடித்தார்கள்.

ஆம்... அது SWAP... ஒவ்வொரு அணியில் இருந்து இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுத்து எதிர் அணிக்கு பரஸ்பரம் மாற்றம் செய்வார்கள். இது சர்வைவர் விளையாட்டின் ஒரு பகுதி. ஏற்கெனவே பழகிய அணியிலிருந்து பிரிந்து புதிய அணியில் எவ்வாறு தன்னைப் பொருத்திக் கொள்கிறார்கள் என்பதைச் சோதிக்கும் சடங்கு இது.
இரு அணிகளுமே இந்த அறிவிப்பைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தலையில் கைவைத்து அமர்ந்து விட்டார்கள்.
‘சர்வைவர்’ அளித்த தண்டனையை ‘வேடர்கள்’ அணி ஏற்க மறுத்தது சரியான முடிவா? இந்த அணி மாற்றம் எப்படியிருக்கும்? நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? கமென்ட் பாக்ஸில் உங்களின் கருத்துக்களைச் சொல்லுங்கள்.