Published:Updated:

சர்வைவர் Finale: உமாபதிக்கு இழைக்கப்பட்ட துரோகம்; அம்மா சென்டிமென்ட்டால் வெற்றி பெற்ற விஜி!

சர்வைவர் Finale

விஜி தனக்கு துரோகம் செய்து விட்டதாக உமாபதி கடைசியில் கலங்கி துடித்ததைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனால் இதற்கு முன்னால் அப்படி எத்தனை துரோகங்களும் பலிகளும் நிகழ்த்தப்பட்டிருக்கும் என்பதையும் இவர்கள் யோசிக்க வேண்டும்.

Published:Updated:

சர்வைவர் Finale: உமாபதிக்கு இழைக்கப்பட்ட துரோகம்; அம்மா சென்டிமென்ட்டால் வெற்றி பெற்ற விஜி!

விஜி தனக்கு துரோகம் செய்து விட்டதாக உமாபதி கடைசியில் கலங்கி துடித்ததைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனால் இதற்கு முன்னால் அப்படி எத்தனை துரோகங்களும் பலிகளும் நிகழ்த்தப்பட்டிருக்கும் என்பதையும் இவர்கள் யோசிக்க வேண்டும்.

சர்வைவர் Finale
சர்வைவர் முதல் சீசன் முடிந்து விட்டது. ஸ்போர்ட்ஸை அடிப்படையாகக் கொண்ட இன்டர்நேனஷல் ஷோ என்பது தமிழுக்குப் புதிது. எனவே ‘இதில் என்னதான் இருக்கிறது?’ என்று பார்க்க வந்தவர்கள் அப்படியே தொடர்ந்திருப்பார்கள். இதனுடைய ஃபார்மட் இப்போதுதான் இங்கு பரிச்சயமாகத் தொடங்கியிருக்கும். ஆனால் இதுவும் ஏறத்தாழ இதர ரியாலிட்டி ஷோக்களின் அதே அடிப்படையைக் கொண்டதுதான். இது வெறும் விளையாட்டுத் திறமையை மட்டும் வைத்து மதிப்பிடும் ஷோ அல்ல. அப்படி இருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால் இத்தனை வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகம். நமக்கு திறமையை பிரமிப்பதை விடவும் வம்புகள் பேசுவதில் ஆர்வம் அதிகம் என்கிற மனித உளவியலை இம்மாதிரியான ஷோக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றன.
சர்வைவர் Finale
சர்வைவர் Finale

திறமை மட்டுமே முக்கியம் என்றால் கச்சிதமான உடல் ஃபிட்னஸ் உள்ளவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். விளையாட்டுக்கள் ஒவ்வொன்றும் பரபரப்பாக இருந்திருக்கும். திறமைசாலிகள் மட்டுமே நீடிப்பார்கள். ஆனால் டப்பிங் படம் மாதிரி சிறிதாவது பிரபல முகங்கள் இருந்தால்தான் நாம் ‘என்னவென்று’ எட்டிப் பார்ப்போம். எனவே ஃபிட்னெஸ் இல்லாத சிறிய பிரபலங்களும் இதில் வந்து பின்தங்கினார்கள்; அதில் சிலர் நம்பர் கேம் காரணமாக சற்று காலம் நீடித்தார்கள்.

ஆனால் மற்றவர்களோடு ஒப்பிடும் போது பலவீனமான போட்டியாளர்களாக கருதப்பட்ட நாராயணன், வனேசா போன்றவர்கள் சில டாஸ்க்குளில் அசத்தினார்கள். குறிப்பாக அணி ஆட்டம் என்பது மாறி தனிநபர் ஆட்டமாக ஆன போது அவர்களின் திறமை நன்றாக பிரகாசித்தது. உடல் வலிமையைக் கோரும் ஆட்டங்களைத் தாண்டி மூளை வலிமை சார்ந்த ஆட்டங்களில் விஜி, வனேசா, லேடிகாஷ் போன்றவர்கள் அசத்தினார்கள்.

பிரபலமான முகமாக இல்லாவிட்டாலும் ஃபிட்னஸ் உள்ள திறமைசாலிகளை மட்டும் வைத்து இந்த ஷோவை நிகழ்த்தியிருந்தால் நிச்சயம் பிரபலமாகியிருக்கும் என்பதற்கு சரியான உதாரணம் ஐஸ்வர்யா. அவர் யாரென்று தமிழ் சமூகத்திற்கு தெரியாது. ஆனால் இந்த சீசனில் பலரைக் கவர்ந்த போட்டியாளர்களில் ஐஸ்வர்யாவும் ஒருவராக இருந்தார். இனி வரும் சீசன்களில் பிரபல முகம் என்பதற்குப் பதிலாக உண்மையான விளையாட்டு வீரர்கள் அதிகமாக்கப்படுவார்கள் என்று நம்புவோம்.

இரண்டு அணிகளாக பிரிந்தால்தான் ஆட்டத்தில் சுவாரஸ்யம் என்பதற்காகத்தான் காடர்கள், வேடர்கள் என்கிற இரு அணிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் ஏதோ பிறந்தது முதலே அந்த அடையாளத்துடன் இருந்தது போல ‘வெற்றி வேல்… வீர வேல்..’ என்று சில போட்டியாளர்கள் உணர்ச்சிவசப்பட்டது கூட ஓகே. ஆனால் தங்களின் அணியின் உறுப்பினர்கள்தான் முன்னணியில் வரவேண்டும் என்பதற்காக திறமையான ஆட்டக்காரர்களை அரசியல் காய் நகர்த்தலின் மூலம் வெளியே தள்ளியது அத்தனை ரசிக்கத்தக்கதாக இல்லை. இதுதான் இந்த ஷோவின் ஃபார்மட் என்பதெல்லாம் புரிகிறது. ஆனால் உண்மையான திறமையாளர்கள் பின்னே நிற்க, ராஜதந்திரத்தின் மூலம் வெற்றி நாற்காலியால் ஒருவர் வந்து இறுதியில் உட்காரும் போது நம்மால் முழு மனதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. பார்த்தீர்களா?

சர்வைவர் Finale
சர்வைவர் Finale

காடர்கள், வேடர்கள் என்று இரு அணிகளுமே தனிநபர் பாசத்தைக் காட்டினார்கள். இதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் காடர்களின் அரசியல் இதில் மேலோங்கியிருந்தது. திறமையானவர்களை பலி கொடுத்தாவது சுமாரான ஆட்டக்காரர்களை பாதுகாக்க அவர்கள் தயங்கவில்லை. ஆனால் வேடர்கள் இதில் மாறுபட்டார்கள். பெரும்பாலான சமயங்களில் பலவீனமான போட்டியாளர்களை மட்டுமே டார்கெட் செய்தார்கள். கொம்பர்களாக மாறி தனிநபர் ஆட்டமாக மாறிய பிறகு கூட இரு அணிகளாலும் அணிப்பாசத்தை விட முடியவில்லை என்பதுதான் கொடுமை. “ஹப்பாடா. எப்படியோ. காடர்கள் நான்கு பேர் ஃபைனலில் வந்து விட்டோம்” என்று பெருமிதத்துடன் உமாபதி பேசியிருந்தார். ஆனால் உண்மையில் அதற்காக அவர் மனம் கூசியிருக்க வேண்டும்.

விஜி தனக்கு துரோகம் செய்து விட்டதாக உமாபதி கடைசியில் கலங்கி துடித்ததைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனால் இதற்கு முன்னால் அப்படி எத்தனை துரோகங்களும் பலிகளும் நிகழ்த்தப்பட்டிருக்கும் என்பதையும் இவர்கள் யோசிக்க வேண்டும்.

எது எப்படியோ, Sole Survivor ஆக விஜி வெற்றி பெற்று விட்டார். காடர்களின் பங்குதாரர் என்கிற விஜி மீதும் நிறைய விமர்சனங்களை வைக்க முடியும் என்றாலும் ரியாலிட்டி ஷோ என்று புதிர்ப்பாதை எப்படியோ அவரை வெற்றியின் நுனியில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது.. ஆனால் வெறும் அதிர்ஷ்டத்தின் மூலம் விஜி இந்த இடத்திற்கு வந்து விட்டார் என்று எளிதாக சொல்லி விட முடியாது.

திருமணமாகி குழந்தை இருந்தாலும் (இதை எதிர்மறையாகவோ, பலவீனமான தொனியிலோ சொல்லவில்லை) இளம் வயதினருடன் சரிக்கு சமமாக போட்டியிடுவதில் விஜி சளைக்கவில்லை. குறிப்பாக தனிநபர் ஆட்டமாக மாறிய போது அவர் ஜெயித்த வெற்றிகள் அபாரமானவை. பலகைகளை கோபுரமாக அடுக்கியது, நீரில் மூச்சடக்கி இரண்டாம் இடத்தைப் பெற்றது, நீரின் நடுகோபுரத்தில் நீண்ட நேரம் தாக்குப் பிடித்தது போன்றவற்றில் தனது திறமையை சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தினார்.

சர்வைவர் Finale
சர்வைவர் Finale

சில பல விமர்சனங்கள் இருந்தாலும் இந்த வெற்றிக்கு ஒருவகையில் விஜி நிச்சயம் தகுதியானவர்தான் இந்த கிளைமாக்ஸ் நிகழும் போது ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ்ஸூம் கூடவே நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை... "சப்பையும் ஆம்பளைதான். எல்லா ஆம்பளையும் சப்பைதான்"

சர்வைவர் 92-ம் நாளில் என்ன நடந்தது?

Grand Finale Day என்றவுடன் ஒரு விறுவிறுப்பான ஆட்டத்திற்குப் பிறகு போட்டியாளர்களின் இறுதி வரிசை உருவாகும் என்று ஆவலாக காத்துக் கொண்டிருந்தால், மங்காத்தா மாதிரி சுருக்கமாக ‘உள்ளே வெளியே’ ஆடி ஆட்டத்தை முடித்து விட்டது சற்று ஏமாற்றமே. சர்வைவர் துவங்கிய முதல் நாளில் இருந்து போட்டியாளர்கள் செயல்பட்ட காட்சிகளின் சில துண்டுகளும் அவர்களின் புகைப்படங்கள் அனிமேஷனிலும் காட்டப்பட்டன. இது நமக்கு நாஸ்டால்ஜியா உணர்வை அளித்தது.
சர்வைவர் Finale
சர்வைவர் Finale

‘வெல்கம் டூ டிரைபல் பஞ்சாயத்து’ என்று இறுதிக் கட்ட போட்டியாளர்களை வரவேற்றார் அர்ஜூன். இதை மறுபடியும் சொல்லியே ஆக வேண்டும். டிரைபல் பஞ்சாயத்து சூழலின் ஒவ்வொரு விஷயமும் அத்தனை வசீகரம். டெக்னிக்கல் டீமிற்கு ஒரு அழுத்தமான கைகுலுக்கல். இன்று கூடுதல் வசீகரத்துடன் இந்தப் பின்னணி அமைந்திருந்தது.

சர்வைவர் – கற்றதும் பெற்றதும்

“ரொம்ப பெரிய பயணம். கடைசில உங்களை இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கு” என்று ஆரம்பித்த அர்ஜூன், முதல் Finalist ஆன விஜியை “Super Mom, Super Woman’ என்று பாராட்டி இம்யூனிட்டி வாள் தந்து வாழ்த்தினார். “என் மகனுக்காகத்தான் இந்தப் போட்டிக்கே நான் வந்தேன். மனநிறைவா இருக்கு. முடிவு இனி கடவுள் கையில்” என்று மகிழ்ந்தார் விஜி.

"இந்த சர்வைவர் பயணம் உங்களுக்கு கற்றுத்தந்தது என்ன?” என்கிற அடுத்த கேள்வியோடு உரையாடலைத் தொடர்ந்தார் அர்ஜூன். “முன்ன எல்லாம் உணவை வீணடிப்பேன். இருட்ல கழிவறைக்குப் போக பயமா இருக்கும். பூச்சின்னா பயம். இப்ப அதேல்லாம் எங்கே போச்சுன்னு தெரியல” என்றார் விஜி. “நெருப்புக்கருவியை உபயோகிக்க கத்துக்கிட்டேன். புதிய மனிதர்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்வதில் உள்ள தயக்கம் போய் விட்டது. இங்க இருந்து வெளியே போகும் போது எதுவும் இல்லைன்னா கூட சமாளிக்கலாம்-ன்ற துணிச்சலை இந்த ஆட்டம் கத்துக் கொடுத்திருக்கு” என்றார் சரண்.

சர்வைவர் Finale
சர்வைவர் Finale
“பொதுவா எனக்கு கண்ணீர் வராது. ஈஸியா உணர்ச்சிவசப்பட மாட்டேன். ஆனா விஜி, விக்ராந்த், இனிகோ போறப்ப அழுகை வந்தது. விளையாட்டில் வெற்றி, தோல்வி முக்கியமில்லை. விளையாடுவதுதான் முக்கியம்’ என்கிற பாடத்தை சர்வைவர் கற்றுத் தந்தது” என்று உமாபதி சொன்னது சிறப்பு.

விஜி கிளறிய ஆப்ரிக்க அல்வா

ஓகே.. விஜி.. அந்த இரண்டாவது ஃபைனலிஸ்ட் யார்? என்று நீங்கள் இப்போது தெரிவிக்கும் நேரம் வந்து விட்டது” என்றார் அர்ஜூன். ‘சென்னை ஆட்டோகாரங்கள்லாம் புத்திசாலிங்கடா.. லெஃப்ட்ல இண்டிகேட்டர் போடுவாங்க. ரைட்ல கையைக் காண்பிப்பாங்க. நேரா போய் டிராஃபிக் கான்ஸ்டபிளையே கன்ப்யூஸ் பண்ணுவாங்கடா” என்று ஒரு நகைச்சுவைக் காட்சியில் சொல்வார் விவேக். விஜி செய்ததும் இப்போது அப்படித்தான் ஆயிற்று.

‘தென்னை மரத்துல ஒரு குத்து.. பனை மரத்துல ஒரு குத்து’ என்பது மாதிரி ‘வனேசாவை நிச்சயம் செலக்ட் செய்ய மாட்டேன்’ என்று ஒருபக்கம் சரணிடம் கூறியவர் “உன்னைத்தான் செலக்ட் செய்வேன். வேற யாரு?” என்று உமாபதியிடம் சத்தியம் செய்து விட்டு பஞ்சாயத்திற்கு வந்தவுடன் ‘வனேசா’ என்று சொல்லி அர்ஜூனுக்கே ஷாக் தந்தார். அர்ஜூன் எவ்ள பெரிய மனுஷன்?! இன்டர்நேஷனல் தீவிரவாதிகளையே அசால்ட்டா ஹாண்டில் பண்ணவரு. அவரே ஒரு கணம் ஷாக்காகி நின்னாரு.

சர்வைவர் Finale
சர்வைவர் Finale

“ஏன் வனேசா?” என்று அர்ஜூன் திகைப்பு மாறாமல் கேட்ட போது “என்னல்லாம் சொல்றான் பாருங்க.. கம்பி கட்டற கதையெல்லாம் சொல்றான்’ என்பது மாதிரி ஒரு விளக்கம் தந்தார் விஜி. ‘உமாபதியும் சரணும் நெருப்பு மூட்டும் விளையாட்டில் திறமைசாலிகள் என்பதால் வனேசாவை தேர்ந்தெடுத்தாராம். இந்தக் காரணத்தை அந்தத் தீவில் உள்ள கடைக்காரர் கூட நம்பியிருக்க மாட்டார். “அவங்க சிங்கக்குட்டிங்க சார்.. உமாபதி எப்படியும் ஜெயிச்சிருவான்” என்று விஜி கிளறித் தந்த அல்வாவில் அந்தத் தீவே சுகர் பேஷண்ட் மாதிரி உறைந்து போனது.

விஜியின் கணக்கு – வெற்றியின் கணக்கு

விஜி இப்படி தோசையைப் பிரட்டி பிட்ஸாவாக திருப்பிப் போட்டதும் உமாபதி, சரண், வனேசா ஆகிய மூவருமே அதிர்ச்சியடைந்தார்கள். விஜி, உமாபதியைத்தான் தேர்ந்தெடுப்பார் என்று அவர்கள் நம்பினார்கள். “வனேசாவை செலக்ட் பண்ண மாட்டேன்னு நீங்க சொன்னதை வீடியோல பார்த்தேனே?” என்று இதன் பிறகும் அழாதகுறையாக அர்ஜூன் கேட்க “எனக்கு ஆண் நண்பர்கள் உண்டு. ஆனால் இதயத்திற்கு நெருக்கமான பெண் நண்பர்கள் கிடையாது. வனேசா அந்த வெற்றிடத்தை நிரப்பினார். கடைசி பஞ்சாயத்தில் அவளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டாலும் மன்னிச்சுட்டேன்; இந்தப் பரிசை தந்துட்டேன்” என்று விஜி சொன்னதைக் கேட்டு வனேசாவிற்கு மயக்கமே வந்திருக்கும்.

சர்வைவர் Finale
சர்வைவர் Finale

உமாபதி அடுத்த இடத்திற்கு வந்தால் ஓட்டு கணிசமாக பிரியக்கூடும் என்று விஜி கணக்கு போட்டிருப்பார். ஒருவேளை சரணுடன் மோதி உமாபதி தோற்றுப் போனால் அது தனக்கு லாபம்தானே என்று விஜி எண்ணியிருக்கலாம். இதெல்லாம் யூகங்கள்தான். இதை நேரடியாகவே அவர் செய்திருக்கலாம். “உனக்கு போட மாட்டேன். உனக்குத்தான் போடுவேன்’ என்று மங்காத்தா ஆட்டம் ஆடியிருக்க வேண்டாம். “எதுவா இருந்தாலும் நான் பஞ்சாயத்தில்தான் தெரிவிப்பேன். ரிசல்ட் எப்படியிருந்தாலும் ஏத்துக்கங்க நண்பர்களே” என்று நேர்மையாக தெரிவித்திருக்கலாம்.

உமாபதி vs சரண் – நெருப்புடா. நெருங்குடா..

“உமாபதியும் சரணும் ஒரு போட்டியை ஏற்க வேண்டும். இதில் ஜெயிப்பவர்கள் மூன்றாவது ஃபைனலிஸ்ட்” என்று அறிவித்தார் அர்ஜூன். வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய அர்ஜூனிடமே “யாரோ பாம் போட்டுட்டாங்க” என்று விஜி குறித்து தொடர்ந்து அனத்திய உமாபதி, அவருடன் இப்போதுதான் சற்று பேசி சமாதானம் ஆனார். ஆனால் மீண்டும் விஜி வீசிய வெடிகுண்டினால் உமாபதிக்கு நிறைய காயம் ஏற்பட்டது. எனவே துரோகத்தின் கத்தியை முதுகில் வாங்கிய வலியுடன் அவர் சோகமாக காணப்பட்டார்.

சர்வைவர் Finale
சர்வைவர் Finale

இந்தப் போட்டியின் கான்சப்ட் மிகச் சாதாரணமானதாக இருந்தது. யானை யாருக்கு மாலை போடுகிறதோ அவரே ராஜா’ என்கிற பழங்கால பாணியின் படி ‘இரண்டாம் ஃபைனலிஸ்ட்’தான் அதிர்ஷ்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று பார்த்தால் மூன்றாம் நிலைக்கான போட்டியும் சம்பிரதாயமாகவே இருந்தது. “மரக்கட்டைகளை வைத்து நெருப்பு உருவாக்கி மேலே இருக்கும் கயிற்றை துண்டிக்க வேண்டும். கயிறு எரிந்து அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கொடிகளில் யாருடையது முதலில் விழுகிறதோ, அவரே வெற்றியாளர்” என்று அறிவித்தார் அர்ஜூன்.

உமாபதியால் தீப்பிடிக்காத ஆட்டம்

சரண் மளமளவென காரியத்தில் இறங்க, மாமியார் சொன்ன வேலை பிடிக்காமல் அரைமனதாக இயங்கும் புதுமருமகள் மாதிரி மிக மிக மெதுவாக செயல்பட்டார் உமாபதி. அவர் வேண்டுமென்றே செய்கிறார் என்பது அனைவருக்கும் புரிந்தது. சரணுக்குமே இது அதிர்ச்சி. தன் போட்டியை நிறுத்தி விட்டு “ஃபாஸ்ட்டா பண்ணுங்கண்ணே” என்று உமாபதியைப் பார்த்து திகைப்புடன் சொன்னார். குற்றவுணர்வுடன் விஜி உட்கார்ந்திருக்க, கண்கலங்கலுடன் வருந்தினார் வனேசா.

அர்ஜூனுக்கும் திகைப்புதான். உமாபதி இப்படிச் செய்தது முட்டாள்தனம். காடர்கள் ஆடாத எண்ணிக்கை ஆட்டமா? இதெல்லாம் ஆட்டத்தின் ஒரு பகுதி என்று சுதாரித்துக் கொண்டு வேகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். உமாபதி இப்படி வேண்டுமென்றே தோல்வியடைவதின் மூலம் சரணின் மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியாமல் அவர் செய்கிறார். இப்படியெல்லாம் செய்வது ஒரு ஸ்போர்ட்ஸ்பெர்ஸனுக்கு அழகல்ல. அர்ஜூன் இதை எடுத்துச் சொல்லியதும் உமாபதியிடம் சற்று சுறுசுறுப்பு ஏற்பட்டது.

இப்போது சரணும் வேகமாக செயல்படத் தொடங்கி, தேங்காய் நார் வெட்டும் வேகத்தில் கைவிரலை வெட்டிக் கொண்டார். காயத்திற்கு முதலுதவி அளிக்கப்பட்டதும் ஆட்டம் தொடர்ந்தது. ஒருவேளை காயம் பட்டதால் சரண் பின்தங்கி, உமாபதி முன்னேறி விடுவாரோ என்று கூட ஒருகணத்தில் தோன்றியது. ம்ஹூம். தியாகி பட்டத்தை வாங்குவதில் உமாபதி உறுதியாக இருந்ததால் சரண் வெற்றியடைந்தார்.

சரண் – மூன்றாவது ஃபைனலிஸ்ட் “உமாபதி ஃபயர் போடுவதை சூப்பரா பண்ணுவார். எனக்குத் தெரியும். ஆனா இங்கு வேணுமின்னா தோத்துட்டார். ஜெயிச்சதுல கூட எனக்கு சந்தோஷமில்லை” என்று சரண் கண்கலங்கியதில் உமாபதி மீதான உண்மையான நட்பு தெரிந்தது. “இந்த கேமிற்கு வந்து நான் இதுவரைக்கும் அழுததில்லை. ஆனால் இந்தச் சமயத்தில் அழுகையா வருது” என்று சரண் கலங்கியது நெகிழ்வை ஏற்படுத்தியது. “என்னோட பார்வைல உமாபதிதான் Sole Survior’ என்று உணர்ச்சிவசப்பட்டார் வனேசா.
சர்வைவர் Finale
சர்வைவர் Finale

“எதுக்கு உமாபதி இப்படி பண்ணீங்க.. ஏதாவது ஒரு நல்ல காரணம் சொல்லுங்க.. பார்க்கலாம்?” என்று மெல்லிய கோபத்தோடு கேட்டார் அர்ஜூன். “என்னால துரோகத்தை ஏததுக்க முடியலை சார். நேத்துவரைக்கும் தவறான புரிதல்னு நெனச்சேன். இங்க வந்து பார்த்தப்புறம்தான் புரியது” என்று உமாபதி வேதனையோடு தெரிவிக்க “இங்க வந்து என்ன போட்டின்னு பார்த்தப்புறம் மாத்தின முடிவு” என்று இந்தப் புகாரை மறுத்தார் விஜி.

“நீங்க கூட மூன்றாம் உலகம் ரீஎன்ட்ரியின் போது அம்ஜத்திற்கு வாக்களித்தீர்களே?” என்று அர்ஜூன் கேட்ட போது “வாக்கு கொடுத்துட்டேன் சார்.. அம்ஜத்திற்கு வாக்கு கொடுத்துட்டேன்” என்று ‘நாயகன்’ வேலுநாயக்கராக மாறி உருகினார் உமாபதி. “இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த சேலஞ்ஜை நீங்க உண்மையா விளையாடியிருக்கணும் இல்லையா.. அதுதானே விளையாட்டு வீரனுக்கு அழகு?” என்று அர்ஜுன் கேட்க “நான் ஒரு எமோஷனல் ஃபூல் சார்” என்று சினிமா காதல் தோல்வி நாயகன் மாதிரி உருக்கமாக சொன்னார் உமாபதி.

“உமாபதியை செலக்ட் செய்யறதா சொல்லியிருந்தீங்களா?” என்று அர்ஜூன் விஜியிடம் கேட்டார். “இங்க வந்து போட்டியை பார்த்தப்புறம் மாத்தினேன்” என்று முதலில் சொன்ன விஜி, பிறகு “விக்ராந்த் இங்க இருப்பாரு. அவர் கிட்ட கேட்கலாம்னு நெனச்சேன்” என்று காரணத்தை மாற்றிய போது அம்பலப்பட்டார். “துரோகம்ன்றதெல்லாம் பெரிய வார்த்தை சார். உமாபதி அம்ஜத்திற்கு போட்ட போது நான் இப்படியெல்லாம் மனவருத்தம் அடையல” என்று விளக்கம் தந்தார் விஜி. ஆனால் விஜிக்கு வாக்கு தந்து விட்டு உமாபதி மாற்றவில்லை என்பது முக்கியமான பாயின்ட்.

உமாபதி – அணையாத நெருப்பு

மனஉளைச்சல் காரணமாக போட்டியை சரியாக கையாளாததால் உமாபதி எலிமினேட் செய்யப்பட்டதாக அர்ஜூன் அறிவிக்க, சரணும் வனேசாவும் அதிகம் வருத்தப்பட்டார்கள். விஜியின் முகத்திலும் சோகம் தெரிந்தது. உமாபதியின் நெருப்பை அர்ஜூன் அணைக்க முயன்ற போது அது அணையாமல் அடம்பிடித்தது. “பாருங்க. உங்க நெருப்பு கூட அணையாமல் போராடுது” என்று அர்ஜுன் சொன்ன பிறகு ‘அடடே! படத்திற்கு டயலாக் எழுதற போதெல்லாம் இப்படியெல்லாம் தோணமாட்டேங்குதே என்று உள்ளுக்குள் அவர் ஃபீல் ஆகியிருக்கலாம்.

சர்வைவர் Finale
சர்வைவர் Finale

தன்னுடைய நெருப்பு பந்தம் அணையாமல் இருப்பதைக் கண்டு உமாபதியும் உணர்ச்சிவசப்பட்டார். பார்வையாளர்களும் கண்கலங்கினார்கள். “சாரி.. சார்..” என்று அர்ஜூனின் காலில் விழுந்து விட்டார் உமாபதி. “ஆல் தி வெரி பெஸ்ட்” என்று மற்ற போட்டியாளர்களை வாழ்த்திய உமாபதி, “ஃபைனலில் மூணு பேர்களும் காடர்கள் என்பது சந்தோஷமா இருக்கு. நான் எப்பவுமே காடர் அணிக்கு விசுவாசமா இருப்பேன்” என்று உணர்ச்சிவசப்பட்டார். (இப்படிப்பட்ட முரட்டு விசுவாசம் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு அல்வா மாதிரி).

“உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார். ஆக்ஷன் கிங்குன்னு சும்மாவா பேர் கொடுத்தாங்க. நானும் அப்படியொரு ஆக்ஷன் ஹீரோவா வர ஆசைப்படறேன்” என்று அர்ஜூனிடம் ஆசி கோரினார் உமாபதி. இப்போது உமாபதியும் ஜூரிகளின் வரிசையில் இணைகிறார்.

இறுதி தேர்தல் – ஜூரிகளின் முடிவு

“இப்ப எல்லா ஜூரிகளும் வருவாங்க. அவங்க முன்னாடி உங்க வோட்டுக்கு நீங்க கேன்வாஸ் பண்ணனும்” என்று அர்ஜூன் சொன்னதும் அனைத்து ஜூரிகளும் உள்ளே வந்தார்கள். அவர்களிடம் நடந்த விஷயங்களைச் சுருக்கமாக விளக்கினார் அர்ஜுன்.

இப்போது ஒவ்வொரு போட்டியாளரும் ஜூரிகளிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். இதில் சரணும் வனேசாவும் தங்களின் பொருளாதார தேவைகளை மறைமுகமாக சொன்னது சற்று நெருடலாக இருந்தது. நிச்சயம் அவர்களின் பின்னணி கரிசனத்தைக் கோருவதுதான். ஆனால் அதற்குப் பதிலாக ‘சர்வைவர் ஆட்டத்தில் தான் அதுவரை ஆடிய ஆட்டங்களின் வெற்றி, பட்ட சிரமங்கள், தாண்டிய காயங்கள் போன்றவற்றை விளக்கி கேட்டிருக்கலாம். “தொண்டைல ஆப்ரேஷன்” என்று புதுப்பேட்டை தனுஷ் மாதிரி கேட்டிருக்க வேண்டாம். தமிழ் நிகழ்ச்சியில் சென்டிமென்ட் உதவும் என்று நினைத்து விட்டார்கள் போல.

சர்வைவர் Finale
சர்வைவர் Finale

தன்னை சிரமப்பட்டு ஆளாக்கிய தந்தையை ஓய்வெடுக்க வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று ஒரு மகனாக சரண் விரும்பினார். தனது தந்தையின் மருத்துவ சிக்கல்கள், குடும்பத்தின் பொருளாதார பினன்ணி போன்றவற்றை வனேசா விளக்கினாலும் இறுதியில் “இது இல்லைன்னாலும் பரவாயில்லை” என்று சொன்னது சிறப்பு. அனுதாப வாக்கை அவர் முழுவதுமாக கோரவில்லை என்பது ஆறுதல்.

விஜியின் அம்மா சென்டிமென்ட்

வனேசாவும் சரணும் பொருளாதார காரணத்தை முன்நிறுத்தினார்கள் என்றால் விஜி மிகவும் பலம் வாய்ந்த ஆயுதத்தை எடுத்தார். அது அம்மா சென்ட்டிமென்ட். பல தமிழ் திரைப்படங்கள் ஓடியதற்கு முக்கியமான காரணமாக இருந்த விஷயம் இது. “என்னோட நிலனுக்காகத்தான் இங்க வந்தேன். இதில் வெற்றி கிடைத்தால் ஒரு தாய்க்கு கிடைத்த வெற்றியாக அவனுக்கு காட்டுவேன்” என்றார் விஜி.

சர்வைவர் Finale
சர்வைவர் Finale

இப்போது ஜூரிகள் போட்டியாளர்களை கேள்வி கேட்கலாம். “உமாபதிக்கு ஏன் இரண்டாவது ஃபைனலிஸ்ட் வாய்ப்பு தரலை?,” என்று கேட்டார் இனிகோ. அதே காரணத்தை மீண்டும் பல்லவியாக பாடினார் விஜி. “ஒரு கோடி வெச்சு என்ன பண்ணுவீங்க?” என்று அப்போதும் தன் குறும்பை விட்டுத்தராமல் கேட்டார் உமாபதி.

சரணும் வனேசாவும் தங்களின் பொருளாதார தேவைகளைச் சொன்னார்கள். ஆனால் ‘கொரானோ உதவி’ என்கிற தர்மகாரியத்தை சொன்ன விஜி, ‘குடும்பத்துடன் வெக்கேஷன் போவோம்’ என்று வெளிப்படையாக சொன்னது பாராட்டத்தக்கது.

யார் அந்த சோல் சர்வைவர்?

“ஓகே.. ஜூரிகள் இப்போது வாக்களிக்கலாம்” என்று அறிவித்தார் அர்ஜூன். ஒவ்வொருவராக சென்று வாக்களித்தார்கள். சரணுக்கு அம்ஜத், உமாபதி, ஐஸ்வர்யா ஆகிய மூவரும் வாக்களித்தார்கள். “இந்தப் பரிசுத் தொகையை வைத்து அப்பாவை சரண் கவனிக்கட்டும்” என்பது அம்ஜத்தின் காரணம். “சரணை நான் எப்போதும் விட்டுத்தர மாட்டேன்” என்பது ஐஸ்வர்யா சொன்ன காரணம். உமாபதி அளித்த காரணம் நன்கு புரிந்து கொள்ளக்கூடியது. விஜி செய்த துரோகம் மற்றும் சக போட்டியாளராக இருந்தாலும் சரண் காட்டிய அன்பு.

விஜிக்கு இனிகோ, விக்ராந்த், நந்தா ஆகியோர் வாக்களித்திருந்தார்கள். முதல் இருவரும் விஜிக்கு வாக்களித்ததில் ஆச்சரியமில்லை. ‘காடர்கள். காடர்கள்’ என்று உருகுவார்கள். ஆனால் நந்தா விஜிக்கு வாக்களித்தது சற்று ஆச்சரியம். சமீபத்திய போட்டிகளில் விஜி பட்ட சிரமத்தினால் அவர் ஈர்க்கப்பட்டிருக்கலாம்.

சர்வைவர் Finale
சர்வைவர் Finale

ஆக விஜியும் சரணும் தலா மூன்று வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தார்கள். விஜிதான் வெற்றி பெறுவார் என்கிற நிலைமையில் சட்டென்று மாற்றம் ஏற்பட்டது. இதனால் அரங்கத்தில் பரபரப்பு கூடியது. பாவம், வனேசாவிற்கு ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. காடர்கள் கருவேப்பிலையாக தூக்கி எறிந்து விட்டார்கள். ‘எனக்கு முன்பே தெரியும்” என்றார் வனேசா.

“யார் வெற்றி பெறுவாங்கன்னு நெனக்கறீங்க?” என்று அர்ஜூன் சஸ்பென்ஸ் வைத்த போது உமாபதி “விஜிதான் சார்” என்றார். ஐஸ்வர்யாவோ சரண் வெற்றி பெற விரும்பினார்.

கடைசியாக பிரிக்கப்படவிருந்தது நாராயணனின் வாக்கு. கையெழுத்தைக் கொண்டு இதுவரை பிரிக்கப்பட்ட வாக்குகளை அடையாளம் கண்டுபிடித்து விட்டார்கள். “நாராயணன் விஜிக்குத்தான் போட்டிருப்பான்” என்று சரியாக யூகித்தார் உமாபதி. அப்படியே ஆயிற்று. “சமீபத்திய போட்டிகளில் விஜி அசத்தி விட்டார்” என்று நாராயணன் காரணம் கூறினார். ஆக காடர்கள் அணிப்பாசத்துடன் இருக்க, வேடர்கள் திறமையைத் தேடியது நல்ல விஷயம்.

ஒரு கட்டத்தில் வாக்கெடுப்பு எண்ணிக்கை சமனாகி விட்டதால் தான் வெற்றி பெறக்கூடும் என்று எண்ணினார் சரண். அவ்வாறு வெற்றி பெற்றால் அதை உமாபதிக்கு சமர்ப்பணம் செய்யவும் அவர் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அது நிறைவேறவில்லை.

“இந்த வெற்றி எனக்கு வேண்டும் அம்மா. எப்படியாவது வாங்கிக் கொடுத்துடு” என்று விஜி தன் தாயை பிரார்த்தனை செய்தாராம். ஆக விஜியின் வெற்றிக்கு அம்மா சென்ட்டிமென்ட்டும் ஒரு காரணம் என்பது மறுமுறை நிரூபணமாயிற்று.

சர்வைவர் Finale
சர்வைவர் Finale
“வாழ்த்துகள் விஜி” என்றபடி ரூபாய் ஒரு கோடிக்கான பரிசுத் தொகையை வழங்கினார் அர்ஜூன். அனைவரும் வந்து விஜிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். "சர்வைவர் முதல் சீசன் இத்துடன் நிறைந்தது. அடுத்த சீசனில் சந்திப்போம்” என்றபடி விடைபெற்றார் அர்ஜூன்.
தொன்னூற்றோரு நாட்கள் இந்தக் கட்டுரைத் தொடரை தினமும் வாசித்து ஆதரவளித்த நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தத் தொடரை, என் மனச்சாட்சிக்கு உட்பட்ட வகையில் பாரபட்சமின்றிதான் எழுதினேன் என்கிற உறுதியை என்னால் தர முடியும். ஆனால் இதில் வெளிப்பட்ட பார்வைகளோடு உடன்படாத, மாற்றுக்கருத்துகள் பல நண்பர்களுக்கு இருக்கலாம். அவற்றை நான் மதிக்கிறேன். அவ்வாறு பல கருத்துக்கள் முட்டி மோதுவதுதான் கருத்துரிமையின் அடையாளம். அதுதான் ஜனநாயகம்.

சர்வைவர் அடுத்த சீசனில் உங்களைச் சந்திக்கிறேன். அதுவரை நன்றியும் பிரியமும்.

இந்த கொரானோ சூழலில், இந்த கோஷம் சர்வைவர் நிகழ்ச்சிக்கு மட்டும் அவசியமானதல்ல. நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கும் இந்த கோஷம் அவசியம். எனவே சேர்ந்து சொல்வோம்.

BETTER SURVIVE, TO BE A SURVIVOR