Published:Updated:

சர்வைவர் - 38 | இனிகோவை கண்டித்த ஐஸ்வர்யா… சரணுக்கு பவர் இல்லையா?!

சர்வைவர் - 38

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 38-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 38 | இனிகோவை கண்டித்த ஐஸ்வர்யா… சரணுக்கு பவர் இல்லையா?!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 38-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 38
இந்த வார தலைவருக்காக, இரு அணிகளுக்கும் நடத்தப்பட்ட போட்டிதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். ஆனால் இது வழக்கம்போல் சுவாரஸ்யமாக அமையாமல் சற்று ‘டொங்கலாக’ நடந்து முடிந்துவிட்டது. மற்றபடி வேடர்கள் அணிக்குள் இருந்த சில உள்விரோதங்களை இன்று தெளிவாக உணர முடிந்தது.

சர்வைவர் 38-ம் நாளில் என்ன நடந்தது?

தங்களின் அணியில் ரவி இல்லாத குறையை வேடர்கள் பேசிப் பேசி மாய்ந்தார்கள். ‘‘நான் தூங்கும்போது அவர் வந்து போர்த்திவிடுவார்’’ என்று சினிமா சென்ட்டிமென்ட் காட்சியை எல்லாம் தூவி உருகிக் கொண்டிருந்தார் நந்தா. இவர்களின் உரையாடலில் கலந்து கொள்ளாமல் தூரமாக அலையில் நின்று கொண்டிருந்தார் இனிகோ.

இந்த வாரத்தின் தலைவர் போட்டியில் பங்குபெற தான் தயாராக இருப்பதாக உற்சாகமாக தெரிவித்தார் சரண். இந்த அணியுடன் இவர் இப்போது நன்கு பொருந்தி விட்டாராம். ஆனால் இவருக்கு முன்பே வந்த இனிகோவால் வேடர்கள் அணியுடன் இன்னமும் கூட ஒட்ட முடியவில்லையோ, என்னமோ ‘தலைவர் போட்டியில் பங்கு பெற தனக்கு விருப்பமில்லை’ என்பதை முகத்தில் அடிக்காத குறையாக நந்தாவிடம் சொல்லிவிட்டார் இனிகோ.

சர்வைவர் - 38
சர்வைவர் - 38

போயும் போயும் சரண் என்கிற சின்னப்பையனுடனா மோத வேண்டும் என்று நினைத்தாரா அல்லது அணியில் நந்தாவின் ஆதிக்கம் அதிகம் இருப்பது நெருடலாக இருக்கிறதா அல்லது போகிற போக்கில் ரவி சொல்லி விட்டுச் சென்ற கமென்ட் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறதா? இனிகோவின் இந்த மறுப்பிற்கு என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை.

வேடர்கள் இப்படி சோர்ந்து போயிருக்க, காடர்கள் அணியிலோ உற்சாகமாக வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். ‘யார் எதிர் டீம்ல இருந்து எலிமினேட் ஆயிருப்பாங்க?’ என்பதுதான் அந்த வம்பின் தலைப்பு. “நூறு சதவீதம் ரவியைத்தான் தூக்கியிருப்பாங்க” என்று அம்ஜத் சொன்னது, வேடர்களை அவர் சரியாகப் புரிந்திருப்பதைக் காட்டுகிறது. (என்ன இருந்தாலும் பழைய பாசம் விட்டு விடுமா?!). ஆனால் லட்சுமியோ "சரணை அனுப்பியிருக்க வேண்டும். அதுதான் நியாயம்” என்று மருகிக் கொண்டிருந்தார்.

இந்த வார தலைவருக்கான தகுதி ‘துணிச்சலாம்’. ‘’நாம இந்த முறையும் வனேசாவையே தலைவர் போட்டில நிக்க வைக்கலாம். நம்மளுக்கு கேக்கு, பிரியாணி எல்லாம் கிடைக்கும். நம்ம டீமோட அதிர்ஷ்ட தேவதை வனேசாதான்’’ என்று காடர்கள் அணி, வனேசாவை பாராட்டு மழையில் நனைத்துக் கொண்டிருந்தது.

சர்வைவர் - 38
சர்வைவர் - 38

‘‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’’ என்று இரு அணிகளையும் வரவேற்ற அர்ஜூன், வழக்கம்போல் பழைய பஞ்சாயத்துக்களைக் கிளறி விட்டு ஃபுட்டேஜ் தேற்றுவதில் ஈடுபட்டார். ஆரம்பத்திலேயே காடர்களைக் கிளறுவதில் அவர் கவனம் சென்றது. “எதிர் டீம்ல ரவி எலிமினேட் ஆயிட்டார். காரணம் என்னன்னு தெரியுமா?” என்று விக்ராந்த்தின் வாயை அர்ஜூன் கிளற ஆரம்பிக்க “தெரியலையே சார்...” என்று விக்ராந்த் சிரிக்க “ஏன் சிரிக்கறீங்க?” என்று கேட்டு அர்ஜூனும் சிரிக்க... அதைப் பார்த்து பதிலுக்கு விக்ராந்த் சிரிக்க... ஒரே கூத்தாக இருந்தது.

‘சரணை இன்னுமா விட்டு வெச்சிருக்காங்க’ என்பதுதான் காடர்களின் ஆட்சேபம். அதை காடர்களின் வாயாலேயே சொல்லவைக்க வேண்டும் என்பதுதான் அர்ஜூனின் நோக்கம். எனவே அர்ஜூன் திரும்பித் திரும்பி சரணைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்க, சரணோ சங்கடமும் கோபமும் கலந்து உட்கார்ந்திருந்தார்.

“உமாபதி... நீங்களாவது சொல்லுங்க” என்று அடுத்து அவரின் வாயைப் பிடுங்க முயன்றார் அர்ஜூன். அவரும் நேரடியாக பதில் சொல்லாமல் “லெட்டர்ல வொய்ஃப் ஏன் என்னைப் பத்தி எழுதலைன்னு ரவி கேட்டுட்டு இருந்தாரு. அதனால போயிருப்பாரு சார்” என்று நக்கலாக பதில் சொன்னார். “யப்பா... யாராவது கரெக்ட்டா பேசுங்கப்பா...” என்று அர்ஜூன் அலுத்துக் கொள்ள “போன வாரம் சரணைத்தான் வோட்டு போட்டு வெளியே அனுப்பறதுக்காக வெச்சிருந்தாங்க. ஆனா இந்த வாரம் என்னாச்சுன்னு தெரியல. ஏதாவது மாற்றங்கள் அந்த அணில நிகழ்ந்திருக்கலாம். எங்களுக்கு எப்படி சார் தெரியும்?” என்றார் விக்ராந்த்.

சர்வைவர் - 38
சர்வைவர் - 38

‘’ரவி வெளியில் அனுப்பப்பட்டது அநீதி. தப்பு செஞ்ச சரணைத்தான் வேடர்கள் அனுப்பியிருக்கணும்” என்று எரிச்சலோடு பதில் சொன்னார் லட்சுமி. “இதுல ஏன் அவங்க தலையிடணும்… அவங்க வேலையைப் பார்க்கச் சொல்லுங்க” என்று பிறகு காண்டானார் சரண். சரணின் இந்த ஆட்சேபம் நியாயமானதுதான். காடர்கள் அணியில் சரணின் நிலை என்னவாக இருந்தது என்பது லட்சுமிக்கு முழுமையாகத் தெரியாது. அவர் அப்போது வேடர்கள் அணியில் இருந்தார். எனில் லட்சுமிக்கு இத்தனை கடுமையான ஆட்சேபம் வருவதற்கு நியாயமில்லை. லட்சுமியின் மறைமுக கோபம் நந்தாவின் மீதுதான் இருக்கும் என்று தோன்றுகிறது.

காடர்கள் அணியில் விஜி முதற்கொண்டு பலரும் பல பிழைகளைச் செய்திருக்க, சரணை மட்டும் அர்ஜூன் அடிக்கடி முன்நிறுத்துவது நியாயமாகத் தெரியவில்லை. தங்களின் மீது ஆயிரம் குற்றங்களை வைத்துக் கொண்டு காடர்களும் சரண் மீது மட்டும் காண்டாக இருப்பது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. சரண் குற்றவாளி என்றால் விஜியும் குற்றவாளியே. அதை மூடி மறைத்த விக்ராந்த்தும், உமாபதியும் கூட குற்றவாளிகளே. இதையெல்லாம் பற்றி அர்ஜூன் வாய் திறப்பதில்லை.

“இனிகோ... ரவி போகும் போது உங்களிடம் ஒண்ணு சொல்லிட்டு போனாரு... நினைவிருக்கா? எதிர் டீம்ல உங்க ஃபிரெண்டு இருப்பதற்காக குழம்ப வேண்டாம்... இந்த அணிக்கு உண்மையா இருங்கன்ற மாதிரி... ஞாபகம் இருக்கா?” என்று அடுத்த பஞ்சாயத்தைக் கிளப்பினார் அர்ஜூன். இந்த விஷயத்தில் ரவி செய்தது தேவையில்லாத ஆணி. வேடர்கள் அணி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர் உண்மையிலேயே நினைத்திருந்தால் கிளம்பும்போது இனிகோவை சொறிந்து வைக்காமல் இருந்திருக்க வேண்டும். இப்போது அந்தக் குழப்பத்தால் இனிகோ கவலையாக இருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

சர்வைவர் - 38
சர்வைவர் - 38

“அதான் சார் எனக்கும் புரியல. அவர் ஏன் அப்படிச் சொன்னாருன்னு... நான் எங்க அண்ணன்களோட கிரிக்கெட் விளையாடும் போது கூட ரொம்ப தெளிவா இருப்பேன். உறவுமுறை வேற, விளையாட்டு வேற. உமாபதி என் தம்பி மாதிரிதான். ஆனா... நான் ஆடின முதல் போட்டியிலேயே அவனை லாக் பண்ணி கீழே விழ வெச்சேன். இதுக்காக ரவி கூட என்னைப் பாராட்டினார். ஆனா கடைசில ஏன் இப்படிச் சொன்னாருன்னு புரியல” என்று வருந்தியபடி சொன்னார் இனிகோ.

"நான் இதைச் சொல்லியே ஆகணும். இனிகோ நியாயமாத்தான் விளையாடறார்” என்று விக்ராந்த் சான்றிதழ் கொடுக்க, அவரை நன்றியுணர்ச்சியோடு பார்த்தார் இனிகோ.

“யாரை வெளியே அனுப்பலாம்னு நடந்த டிஸ்கஷன்ல இனிகோவோட பெயர் அடிபட்டதாமே... ரவி போகும் போது சொன்ன தகவல் இது” என்று அடுத்ததாக அர்ஜூன் கொளுத்திப் போட்டார். “இல்லியே சார்... அப்படி ஒரு விஷயம் நடக்கவேயில்ல” என்று ஐஸ்வர்யா குழம்பினார். ஐஸ்வர்யா சொல்வது உண்மைதான். சரணைத்தான் பெரும்பாலும் வெளியே அனுப்ப முதலில் முடிவு செய்தார்கள். ஆனால் ரவி தானே முன்வந்து உருக்கமாக VRS கேட்க, வேறு வழியில்லாமல் அவருக்கு வாக்களித்து அனுப்பினார்கள். நடந்தது இதுதான். ஆனால் ரவி ஏன் அப்படிச் சொன்னார் என்பது தெரியவில்லை.

சர்வைவர் - 38
சர்வைவர் - 38
“ஓகே... இந்த வாரத் தலைவர் போட்டிக்குப் போகலாமா?” என்று ஆரம்பித்தார் அர்ஜுன். எதிரெதிரே நின்று கயிறு இழுக்கும் போட்டி இது. (Tug of war). வேட்பாளராக நிற்பவர் தனது பெல்ட்டுடன் கயிற்றை மாட்டிக் கொண்டு வலுவாக இழுத்து எதிரே நிற்பவரை வீழ்த்தி பின்னால் இருக்கும் மணியை அடிக்க வேண்டும். இப்படி மூன்று முறை மணி அடிப்பவர் வெற்றி பெறுவார்.

“நீங்க விரும்பிய ஆளை உதவிக்கு அழைச்சுக்கலாம்” என்று அர்ஜூன் அறிவித்தார். இந்த அறிவிப்புதான் இன்றைய போட்டியில் இருந்த பெரிய கோளாறு. ஏனெனில் அப்படி உதவிக்கு வந்தவர்களுக்குள்தான் உண்மையான போட்டி நடந்தது. ஒருவர் தலைவர் பதிவிக்கு நிற்கும்போது அவரது திறமைதான் முழுமையாக வெளிப்பட வேண்டும். மாறாக இன்னொருவரின் உதவியுடன் தலைவர் ஆவதெல்லாம் நல்லவிதமான ஸ்போர்ட்ஸ் இல்லை.

சர்வைவர் - 38
சர்வைவர் - 38

முதலில் காடர்கள் அணியிலிருந்து லேடி காஷூம் வனேசாவும் மோத வந்தார்கள். லேடி காஷ் உமாபதியை உதவிக்குக் கூப்பிட (புத்திசாலித்தனமான சாய்ஸ்!) வனேசா, அம்ஜத்தை உதவிக்கு அழைத்துக் கொண்டார். ஆனால் போட்டி என்பது உமாபதிக்கும் அம்ஜத்திற்கும் என்பதாகவே இருந்தது. உமாபதியின் அசாதாரணமான வலிமைக்கு முன்னால் அம்ஜத்தால் நிற்க முடியவில்லை. அம்ஜத்தும் நன்றாகவே போராடினார். ஆனால் மூன்று சுற்றுக்களிலும் தோல்வியே கிடைத்தது. எனவே உமாபதியின் ஆதரவில் மிக எளிதாக வென்றார் லேடி காஷ்.

இதே விஷயம்தான் வேடர்கள் அணியிலும் நடந்தது. ஐஸ்வர்யாவும் சரணும் தலைவர் போட்டிக்காக மோதினார்கள். ஐஸ்வர்யாவிற்கு உதவ நாராயணனும், சரணிற்கு உதவ இனிகோவும் வந்தார்கள். எனவே யார் ஜெயித்திருப்பார்கள் என்பதை யூகிப்பது வெகு சுலபம். இனிகோவின் வலிமைக்கு முன்னால் நாராயணனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இவருக்குப் பின்னால் இருந்த ஐஸ்வர்யா கடுமையாகப் போரானாடிலும் இனிகோ இவர்களை எளிதாக வென்றார். ஆக இனிகோவின் புண்ணியத்தில் சரண் வேடர்களின் தலைவர் ஆனார்.

சர்வைவர் - 38
சர்வைவர் - 38

போட்டி முடிந்த பிறகு, “டேய் தம்பி... நீயும் இழுக்கணும்டா... நான் மட்டுமே இழுக்கறேன். நீ சும்மா இருக்கே. நல்லா சாப்பிட்டு உடம்பைத் தேத்து” என்று மெலிதான எரிச்சலுடன் சரணிடம் சொன்னார் இனிகோ. இது பின்னால் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியது.

“இனிகோ ஏன் அப்படி என்கிட்ட சொன்னாருன்னு தெரியல. நான் நல்லாத்தான் இழுத்தேன். தலைவர் பதவிக்கு நிற்க விருப்பமில்லைன்னு முதல்ல சொல்லிட்டு அப்புறம் வேண்டா வெறுப்பா ஏன் எனக்கு அவர் உதவி செய்யணும்?” என்பது சரணின் வருத்தம்.

தங்களின் தீவிற்குத் திரும்பிய பின்னால் இனிகோவிடம் பேசிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. “'உன்கிட்ட பவர் இல்லடா...’ன்னு நீங்க பாட்டுக்கு அங்கேயே சரண் கிட்ட சொல்றீங்க. எதிர் டீம்ல இதைக் கேட்டுட்டு சிரிக்கறாங்க… இங்க வந்த பிறகு சொல்லியிருக்கலாம். நம்ம அணியோட பலவீனத்தை நீங்களே ஸ்பாட்ல சொல்லலாமா?” என்று இனிகோவிடம் ஐஸ்வர்யா கேட்ட கேள்விகள் சிறப்பான விஷயம்.

“அய்யோ நான் இயல்பாத்தான் சொன்னேன்... அவன் சரியா சாப்பிட மாட்டேங்கறான். அதுக்காகத்தான் அப்படிப் பேசினேன். தப்பா இருந்தா மன்னிச்சுக்கடா தம்பி...” என்று சரணிடமே பிறகு மன்னிப்பு கேட்டார் இனிகோ.

சர்வைவர் - 38
சர்வைவர் - 38

இதைப் போல் இன்னொரு விஷயத்தையும் இனிகோவுக்கு தெளிவாக்கினார் ஐஸ்வர்யா. “யாரை எலிமினேட் பண்ணலாம்னு நாங்க பேசினதுல உங்க பேர் வரவேயில்லை. நான் கூட ரவியண்ணாவுக்குத்தான் வாக்களிச்சேன். இதுல ஏதோ குழப்பம் நடந்திருக்கு. நீங்க இதையெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க.. நமக்கு இப்ப டீம் ஸ்பிரிட்தான் முக்கியம்” என்றெல்லாம் இனிகோவை ஐஸ்வர்யா உத்வேகப்படுத்தியது அருமையான காட்சி.

ஐஸ்வர்யா ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ்வுமன் மட்டுமல்ல, ஒரு சிறந்த லீடரும் கூட என்பதற்கான உதாரணக் காட்சிகள் இவை.

தொடர்ந்து சவால்களில் தோற்கும் வேடர்கள் அணி, அடுத்த சேலன்ஞ்சிலாவது ஜெயித்து தன் மீதுள்ள அவப்பழியை போக்கிக் கொள்ளுமா?

பார்த்துடுவோம்.