Published:Updated:

சர்வைவர்- 4|வெள்ளத்துக்கு வந்த எம்எல்ஏ-போல் அர்ஜுன், மயிலுக்கு போர்வை தந்த வள்ளலாய் போட்டியாளர்கள்!

சர்வைவர்- 4

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் நான்காவது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர்- 4|வெள்ளத்துக்கு வந்த எம்எல்ஏ-போல் அர்ஜுன், மயிலுக்கு போர்வை தந்த வள்ளலாய் போட்டியாளர்கள்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் நான்காவது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர்- 4

Reward Challenge தான் நேற்றைய நாளின் ஹைலைட். எந்த அணி இதில் வெல்கிறதோ, அவர்களுக்கு சில வெகுமதிகள் கிடைக்கும். குறிப்பாக வேடர்கள் அணியிடம் நெருப்புக் கருவி இல்லாததால் அவர்கள் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட முடியாமல் அல்லாடிக் கொண்டிருந்தார்கள். எனவே நேற்றைய போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்கிற நெருக்கடியும் வெறியும் அவர்களுக்கு இருந்தது.

“ஒவ்வொருத்தன் உள்ளேயும் ஃபயர் இருக்கு” என்று ஆவேசமாக வேண்டுமானால் டயலாக் பேசலாம். என்றாலும் கேஸ் சிலிண்டர் வருவதற்காக தேவுடு காக்கத்தான் வேண்டியிருக்கிறது. வேடர்கள் அணியும் அந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.

ரிவார்ட் சேலஞ்சில் வென்று எந்த அணி வெகுமதிகளைப் பெற்றது... வேடர்களுக்கு நெருப்பு கிடைத்ததா?

சர்வைவர் - நான்காவது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

சர்வைவர்- 4 - அர்ஜுன்
சர்வைவர்- 4 - அர்ஜுன்

காடர்கள் அணியிடம் நெருப்பு இருந்ததால் சப்பாத்தியெல்லாம் சுட்டுக் கொண்டு கும்மாளமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் நெருப்பை இன்னமும் உருவாக்க முடியாத வேடர்கள் அணி, சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று தீவை பரிதாபமாக சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. பப்பாளி, வாழை போன்றவைகள் காயாக இருந்ததால் அதைச் சாப்பிட முடியாது.

திடீரென ஓரிடத்தில் மரவள்ளிக்கிழங்கு புதைந்தருப்பதை அம்ஜத் கண்டுபிடித்து சொல்ல, பெசன்ட் ரவி மிகவும் உற்சாகமாகி அதைப் பிடுங்கியெடுத்தார். இந்தக் கிழங்கின் தாயகமே தென்னாப்ரிக்காதான். கார்போஹைட்ரேட் கொண்டது.

அம்ஜத் தன்னுடைய குழந்தையின் பிரிவை எண்ணி அவளுடைய பெயரை கடற்கரை மணலில் எழுதி கலங்கிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம், பெசனட் ரவியும் தன் குடும்பத்தை பிரிந்து வந்தது குறித்து நெகிழ்ந்து அழுது கொண்டிருந்தார். ஸ்டன்ட் நடிகர்கள் பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் ‘பாசக்காரயிங்க’ இருக்காங்க என்பதை அறிய முடிந்த தருணம் அது.

“இங்க நீதான் எனக்கு கிடைச்ச முதல் ஃபிரெண்டு” என்று காயத்ரியை ஓரங்கட்டி தனியாக ‘முஸ்தபா’ பாடிக் கொண்டிருந்தார் ராம். மஞ்சள் நீராட்டு விழா சடங்குக்கு ஓலை கட்டுவது போல, தென்னம் ஓலைகளை வைத்து தங்குமிடம் அமைக்கும் முயற்சியும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.

மழை பெய்ய ஆரம்பித்தது. காடு என்றாலே அங்கு எப்போது மழை பெய்யும் என்பதை சொல்ல முடியாது. சில கண நேரத்தில் நன்கு இருட்டி சட்டென்று தபதபவென்று மழை பெய்யும். ஸ்ருஷ்டி - ஐஸ்வர்யரா – பார்வதி கூட்டணி சாண்ட்விச் போல் ஒருத்தரோடு ஒருவர் இறுக்கமாக ஒட்டி கட்டிக் கொண்டு ‘மழை’ பாட்டுக்களாக பாடிக் கொண்டிருந்தார்கள். (அப்ப நேத்து போட்ட சண்டையெல்லாம் பொய்யா கோப்பால்?!).

‘‘இனிமே மெரீனா பீச் பக்கம் கூட போகத் தோணாது.. அந்தளவுக்கு அனுபவம் இங்கு கிடைத்திருக்கிறது” என்று இந்திரஜா சொன்னதை, விஜயலட்சுமி ஆமோதித்துக் கொண்டிருந்தார். வந்து மூன்று நாட்கள் ஆவதற்கு முன்பே தீவு அனுபவம் அவர்களை அத்தனை சங்கடத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. அந்த அளவுக்கு குளிர்.

சர்வைவர்- 4
சர்வைவர்- 4

“இந்திரஜா வேலையெல்லாம் செய்யுறா... அது ஓகே... ஆனா டாஸ்க்குக்கு சரிப்பட்டு வருவாளான்னு தெரியல” என்று டீம் லீடர் காயத்ரி, விஜியிடம் பிறகு புறணி பேசிக் கொண்டிருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல கேமராக்கள் நிலையாக இருக்கும். எனவே போட்டியாளர்களுக்கு ஒரு கட்டத்தில் கேமரா இருப்பதே மறந்து விடும். ஆனால் காட்டுப்பகுதியில் அப்படி செய்ய முடியாது. எனவே போட்டியாளர்களைச் சுற்றி கேமரா அசைந்து கொண்டே இருப்பதால், அவர்களால் இயல்பாக பேசவோ, நடமாடவோ முடியாது என்றே தோன்றுகிறது.

‘டாஸ்க்’ பற்றிய அறிவிப்பு தாளில் எழுதப்பட்டு ஒரு பாட்டிலின் உள்ளே கிடந்தது. அதை தற்செயலாக கண்டுபிடித்தவர்கள், அடுத்த சவால் என்னவென்று அறிவதற்கு ஆர்வம் காட்டினார்கள்.

அதற்கு முன், ஒவ்வொரு டீமும் தங்களுக்கான ‘Signature Movement ’ஐ உருவாக்க வேண்டுமாம். எனவே ‘மான் கராத்தே ஸ்டைல்’, ‘தேவனே என்னைப் பாருங்கள்” என்று மண்டியிட்டு அமர்ந்து வானத்தை நோக்கி தொழுவது என்று வித்தியாசமாக ஐடியாக்கள் பிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள்.

வந்தார் அர்ஜூன். ஆசாமி அங்கு ஏதாவது ஹோட்டலில் தங்கி செளகரியமாக இருக்கிறார் போலிருக்கிறது. பார்க்க தெம்பாக இருந்தார். “எப்படி இருக்கீங்கன்னு கேட்க மாட்டேன். உங்களைப் பார்த்தாலே தெரியுது... இருந்தாலும் கேட்கிறேன்... எப்படி இருக்கீங்க?” என்று அவர் போட்டியாளர்களை நோக்கி கேட்க “மழை சார்... குளிர் சார்... பசி சார்” என்று ஆளாளுக்கு தாங்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளை கோரஸாக சொன்னார்கள்.

“வீட்டுக்குப் போறேன்” என்று விஜயலட்சுமி நேற்றிரவு அழ ஆரம்பித்து விட்டாராம். ‘’என்ன ஆச்சு?” என்று விசாரித்தார் அர்ஜூன். ‘திடீர்னு கண்ணைத் திறந்து பார்த்தா மேலே வானம் தெரியுது. கீழ மண்ணு... கடல் காத்து சத்தம் வேற” என்று விஜி சொன்னதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. நகர வாழ்க்கையில், நாலு சுவற்றுக்குள் பாதுகாப்பாக தூங்கிப் பழகியவர்களை, எலியைத் திறந்து விடுவது போல் திடீரென வெட்ட வெளியில் விட்டு விட்டால் ஒருவிதமான பாதுகாப்பற்ற உணர்ச்சி வந்து விடும்.

“இவ்ளோ கடினமா இருக்கும்னு நீங்க எதிர்பார்க்கலையா,. ஜாலியா இருக்கும்னு நெனச்சீங்களா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டு வெந்த புண்ணில் வெந்நீரைப் பாய்ச்சினார் அர்ஜூன்.

வேடர்கள் அணியிடம் நெருப்பு இல்லாததால் ‘ஐயா... சரியா சாப்பிட்டு மூணு நாளாச்சுய்யா” என்று கதற ஆரம்பித்து விட்டர்கள்.

வெள்ள சேதத்தை பார்க்க வந்த லோக்கல் எம்.எல்.ஏ போல “உங்களுக்கு ஏதாச்சும் வசதி தேவைப்படுதா?” என்று பாவனையாக கேட்டார் அர்ஜுன். மயிலுக்கு போர்வை தந்த வள்ளல் போல “எங்களுக்கு எதுவும் வேணாம் சார்.. பெண்களுக்கு மட்டும் நாலு போர்வை வேண்டும்” என்றார் நந்தா.

“அது சரி... அதை நீங்க போட்டில ஜெயிச்சு இல்ல வாங்கணும்” என்றார் அர்ஜூன். “அப்ப ஏம்யா பெரிய பரோபகாரி மாதிரி என்ன வேணும்னு கேட்டீரு?” என்று போட்டியாளர்களால் சட்டென்று கேட்டு விட முடியாது. என்ன இருந்தாலும் ஆக்ஷன் கிங் இல்லையா?

“சரி.. போட்டிக்கு போகலாம்…உங்க சிக்னேச்சர் மூவ்மென்ட்டை காட்டுங்க” என்று அர்ஜூன் சொன்னவுடன் காடர்கள் அணி, சிவகார்த்திகேயன் மாதிரி மான் கராத்தே ஸ்டைலில் நின்றது. வேடர்கள் அணியோ “ஹூ...ஹா... ஹூ... ஹா’ என்று பழங்குடியினர் பாணியில் கத்தி நெஞ்சில் அடித்துக் கொண்டார்கள். (டிஸ்கவரி சேனலில் பார்த்திருப்பார்கள் போல).

ஓகே... அந்த ‘ரிவார்ட் சேலன்ஞ்’ என்ன?

சர்வைவர்- 4|
சர்வைவர்- 4|

Sledge எனப்படும் சக்கரமில்லாத வண்டியை ஒவ்வொரு அணியும் தள்ளிக் கொண்டு செல்ல வேண்டும். மூன்று வெவ்வேறு இடங்களில் இருக்கும் மரக்கட்டைகளை சேகரித்துக் கொள்ள வேண்டும். பின்பு இன்னொரு இடத்தில் ‘கேம்ப் ஃபயர்’ மாதிரி செய்ய வேண்டும். அவர்கள் உருவாக்கும் நெருப்பின் மூலம் மேலே உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிறு நெருப்பு பட்டு அறுந்து விழ வேண்டும். இதுதான் டாஸ்க்.

நெருப்பு வேண்டுமென்று ஒருபக்கம் வேடர்கள் அணி தவித்துக் கொண்டிருக்கும் போது, அதை வைத்தே டாஸ்க்கை உருவாக்கியது ‘சர்வைவர் டீமின்’ ஒரு நல்ல குறும்புதான்.

“ஒண்ணும் அவசரம் வேணாம். நிதானமா பண்ணுவோம். நாம ஜெயிப்போம்” என்று ஒவ்வொரு அணியும் ஒரே விஷயத்தை கூடிப் பேசிக் கொண்டது.

போட்டி ஆரம்பித்தது. தொடக்கத்தில் வேடர்கள் அணியால் வண்டியை சற்று எளிதாக தள்ளிச் செல்ல முடிந்தது. ஆனால் காடர்கள் அணி மிகவும் தடுமாறியது. அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது. அவர்கள் சென்ற பாதையில் சேறு உள்ளிட்ட தடைகள் எக்ஸ்ட்ராவாக அமைந்து விட்டது.

வேடர்கள் அணி மூன்று நாட்களாக சாப்பிடாததால் ‘நெருப்பை’ வெல்வதற்காக நிச்சயம் வெறி கொண்டு தீயாக வேலை செய்வார்கள் என்பது காடர்கள் அணிக்குத் தெரியும். எனவே அவர்கள் கடுமையான உழைப்பின் மூலம் சேற்றை சிரமப்பட்டு தாண்ட முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருவழியாக வேடர்கள் அணி முந்திச் சென்றது. அவர்கள் மூன்று இடங்களிலும் மரக்கட்டைகளை சேகரித்துக் கொண்டு, ஆடி மாத அம்மன் கோயிலில் பொங்கல் வைப்பது போல் சட்டென்று நெருப்பைப் பற்ற வைக்க ஆரம்பித்தார்கள். சற்று தூரத்தில் இருந்த நெருப்பை பற்ற வைத்துக் கொண்டு ஒலிம்பிக் தீப்பந்தம் போல ஐஸ்வர்யா ஓடி வந்தார்.

மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு காடர்கள் அணியும் பின்னால் வந்து சேர்ந்தது. இவர்கள் அணியில் உமாபதி நெருப்பை எடுத்துக் கொண்டு வருவதற்காக போனார். ஆனால் அவர் செய்த பிழை என்னவென்றால், பந்தத்தில் தீ நன்றாக பற்றுவதற்கு முன்பே எடுத்து வந்து விட்டார். எனவே தீ அணைந்து விட்டது. சரண் சக்தி மீண்டும் ஓடிப் போய் நெருப்பு எடுத்து வர வேண்டியிருந்தது.

வேடர்கள் அணி வைத்த தீ உயரே எரிந்து கயிற்றைத் தொட்டு விடும் போல்தான் இருந்தது.

“வடக்கு பக்கம் வெக்குறாங்க. தெற்கு பக்கம் வெக்குறாங்க.. வடமூலைல வெச்சிருந்தா தீ நல்லா பரவியிருக்கும்.. இந்த நந்தா சுத்த வேஸ்ட்டு. ஒண்ணுமே பண்ணலே” என்று பிறகு கமென்ட்ரி தந்து கொண்டிருந்தார் பார்வதி.

“ஹே... நீங்க சீட்டிங் பண்றீங்க” என்று இரண்டு அணியும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டதில், கட்டையில் நெருப்பு பற்றிக் கொள்வதை விடவும் இவர்களின் உரையாடல்களில்தான் அதிக சூடு இருந்தது. இரண்டு அணியும் ஒருவரையொருவர் முறைத்தபடி நெருப்புடன் போராடிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் பார்த்தால் காடர்கள் அணி வென்று விடும் போல் இருந்தது. அவர்கள் வைத்த நெருப்பு ஏறத்தாழ கயிற்றைத் தொட்டு விடும் தூரத்தில் இருந்தது. “பார்த்து பண்ணுங்க... கட்டை சரிந்து விட்டால் நீங்க மறுபடியும் வீடு கட்டணும்” என்று அர்ஜுன் எச்சரித்து முடிப்பதற்குள், இரண்டு அணியின் கட்டைகளும் சரிந்து விழுந்தன. (நல்ல வாய் முகூர்த்தம் ஆக்ஷன் கிங்!)

இரண்டு அணிகளுமே உச்சியில் நெருப்பு சென்று சேர வேண்டும் என்பதற்காக விதவிதமான உத்திகளைப் பயன்படுத்தினாலும் அவை எல்லாமே தோல்வியில்தான் முடிந்தது. தீ கீழ்பக்கமாக மளமளவென்று எரிந்ததால் வெப்பத்தின் சூடு, புகை போன்றவற்றால் போட்டியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. உமாபதிக்கு தீக்காயம் பட்டு அலறிக் கொண்டு பின்வாங்கினார்.

சர்வைவர்- 4|
சர்வைவர்- 4|

“நீங்க கயித்துல நேரா கூட பத்த வைக்கலாம்” என்று விதியை சற்று இலகுவாக்கினார் அர்ஜூன். ‘அடப்பாவி மக்கா... இதை முன்னமே சொல்லக்கூடாது?!’ என்று மனதிற்குள் அலறியபடி உத்திகளை மாற்றினார்கள்.

இந்தச் சமயத்தில் பெசன்ட் ரவி ஒரு வித்தியாசமான உத்தியை செய்தார். அனைவருமே கயிற்றின் நடுப்பக்கத்தில் பற்ற வைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்த போது, அவர் கயிற்றின் ஒருபக்க முனையில் உள்ள முடிச்சில் தீயை வைத்தார். அது நல்ல டெக்னிக் ஆக அமைந்தது. கயிற்றில் தீ நன்கு பற்றிக் கொண்டு அறுந்துவிழ, வேடர்கள் அணி வெற்றி பெற்றது. அவர்கள் சமைப்பதற்கு ‘நெருப்பு’ கிடைத்ததுதான் மிக முக்கியம். தங்கள் அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வேடர்கள் அணியில் இருந்த அனைவரும் உற்சாக வெள்ளத்தில் விழுந்தார்கள். ஒருபக்கம் நந்தா மண்ணில் விழுந்து வணங்க, இன்னொரு பக்கம் இறுதிச்சுற்று கிளைமாக்ஸ் மாதிரி ஐஸ்வர்யா ஓடிவந்து பெசன்ட் ரவியின் இடுப்பில் ஏறிக் கொண்டார்.

நந்தா கீழே விழுந்து வணங்கும் போது “ஆமா... ஒண்ணுமே பண்ணாம போடற சீனைப் பாரு” என்பதாக பார்வதியின் மைண்ட் வாய்ஸ் அப்போது இருந்திருக்கலாம்.

“எப்படி ஜெயிச்சீங்க.. என்னென்ன உத்திகளைப் பயன்படுத்தினீங்க?” என்று பிறகு அர்ஜூன் ஒவ்வொரு அணியிடமும் விசாரித்த போது மிகவும் பரவசப்பட்ட நிலையில் இருந்தார் பெசன்ட் ரவி.

“சார்... சினிமால உயிரைப் பணயம் வெச்சு எத்தனையோ ஸ்டன்ட் காட்சிகள் செய்யிறோம்.. உங்களுக்கே அது நல்லா தெரியும். அங்கெல்லாம் நல்ல பெயரை வாங்கிட்டு, இங்க வந்து கேமரா முன்னாடி ஏதாச்சும் அசிங்கப்பட்றுவேனோனு பயமா இருந்தது. எப்படியோ சாதிச்சிட்டோம். “ ‘அவசரப்படாதே.. எப்போதுமே நிதானமா யோசி’ன்னு என் பொண்ணு சொல்லி அனுப்பிச்சா. அது ஞாபகம் வந்தது. ஓரமா நெருப்பு வெச்சேன். நாங்க ஜெயிச்சிட்டோம்” என்று நெகிழ்ச்சியுடன் விவரித்த பெசன்ட் ரவி, விட்டால் அழுது விடும் நிலையில் இருந்தார்.

அவர் சொன்னதைப் புரிந்து கொள்ள முடிகிறது. முதல் சவாலில், அவர் நீரில் நீந்த முடியாமல் எளிதில் சோர்ந்து, தெப்பத்தின் மீது ஏறி படுத்துக் கொண்டதைப் பார்த்த போது “அப்ப… சினிமால மட்டும்தான் இவங்க ஸ்டன்ட் பண்ண முடியுமா” என்று நமக்குத் தோன்றியது உண்மை. இந்த அவப்பழியை தனது வித்தியாசமான சிந்தனையின் மூலம் நேற்று போக்கி விட்டார் ரவி.

சர்வைவர்- 4|
சர்வைவர்- 4|

வேடர்கள் அணி வென்றதில், காடர்கள் அணி காண்டாகி நிற்பது நன்றாகவே தெரிந்தது. என்றாலும் “வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்” என்கிற வலுக்கட்டாயமான புன்னகையுடன் விளக்கம் தந்தார்கள்.

துணி போட்டு மூடி வைத்திருந்த வெகுமதிகளை அர்ஜூன் திறந்து காட்ட, வேடர்களின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. ஆனால் அங்கு இருந்தவையெல்லாம் நாற்காலி, போர்வை, வலை போன்ற சாதாரண விஷயங்கள்தான். ஆனால் அந்தச் சூழலில் அதன் மதிப்பு அவர்களுக்குத்தான் நன்கு தெரியும். மேலும் உயிரைக் கொடுத்து வெற்றி பெற்று அதைப் பரிசாக வாங்கியிருப்பதால் அதன் மதிப்பு அவர்களுக்கு அதிகம்.

“அருவா... நல்ல ஷார்ப்பா இருக்குமா சார்” என்று விசாரித்துக் கொண்டிருந்தார் பார்வதி. அவர் இன்னொரு இளநீரை மல்லாக்க படுக்க வைத்து கொத்து பரோட்டா போடும் காட்சியை விரைவில் பார்க்கலாம் போலிருக்கிறது. நந்தாவும் எதற்கும் உஷாராக இருப்பது நல்லது.

“ஓகே... உங்க இடத்துக்கு கிளம்புங்க. போட்டி இருந்தாலும் உங்க ஆரோக்கியம்தான் மிக மிக முக்கியம். அதைப் பார்த்துக்கங்க’ என்றபடி விடைதந்தார் அர்ஜூன்.

கும்மிருட்டின் நடுவே இருந்த மங்கலான வெளிச்சத்தில், நெருப்புக்கருவியின் மூலம் சமையல் செய்து ‘வேடர்கள் அணி’ மகிழ்ச்சியுடன் அரிசி கஞ்சி சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

'சோறு முக்கியமா… சங்கம் முக்கியமா?' என்கிற ஆதாரமான கேள்விக்கு ‘சோறுதான் முக்கியம்’ என்பதுதான் எப்போதுக்குமான பதில்!

பார்த்துடுவோம்!