Published:Updated:

சர்வைவர் தமிழ் - 14 | பார்வதியின் வெற்றிகரமான தோல்வி… வேடர்களை வீழ்த்திய காடர்களின் சாகசம்!

சர்வைவர் - 14 அர்ஜுன்

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 14-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் தமிழ் - 14 | பார்வதியின் வெற்றிகரமான தோல்வி… வேடர்களை வீழ்த்திய காடர்களின் சாகசம்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 14-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 14 அர்ஜுன்

இந்த நிகழ்ச்சியின் தலைப்புக்கு சற்றாவது நியாயம் சேர்ப்பது போல, ‘வாழ்வா... சாவா..’ என்கிற சவால் நேற்றைய எபிசோடில் அமைந்திருந்ததுதான் ஹைலைட். இந்த இம்யூனிட்டி சேலஞ்சில் காடர்கள் அணி முதன்முறையாக வெற்றி பெற்றது கூடுதல் ஹைலைட்.

தனது அணி வெற்றி பெற வேண்டும் என்பதை விடவும் தான் எலிமினேஷனில் சென்று விடக்கூடாது என்பதற்காக நீரில் மூழ்கி சிறப்பாக தம் கட்டிய பார்வதிக்கு ஸ்பெஷல் பாராட்டு. இப்படிச் செய்வதின் மூலம் அவர் சிறிது நேரமாவது பேச விடாமல் செய்ததற்காக சர்வைவர் டீமுக்கு சிறப்பு நன்றிகள். (பாவம்... அந்த கேமரா தம்பி இன்னிக்குதான் கொஞ்சம் நிம்மதியா மூச்சு விட்டிருப்பான்!).

ஆக்ஷன், காமெடி காட்சிகள் முடிந்தவுடன் சற்று சென்ட்டிமென்ட் காட்சி வருவது போல், போனால் போகிறதென ‘மூன்றாம் உலகத்தில்’ இருந்து சில துண்டு காட்சிகளை இதுவரை காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இன்று அதையும் காணோம். காயத்ரியும் இந்திரஜாவும் என்ன செய்கிறார்களோ... பாவம்!

சர்வைவர் பதினான்காம் நாளில் என்ன நடந்ததென்று விரிவாகப் பார்ப்போம்.

சர்வைவர் - 14
சர்வைவர் - 14

இம்யூனிட்டி சேலன்ஞ்சில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டுமென்று இரு அணிகளும் காலையிலேயே எழுந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தன. “நேத்து நைட்டுதான் நல்லா தூங்கினோம்” என்று வேடர்கள் அணி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தது. (அந்தத் தூக்கத்திலும் பார்வதி பேசிக் கொண்டிருந்தாரா என்பது காட்டப்படவில்லை).

ஆச்சரியப்படத்தக்க வகையில் ராம் தனது உடலை வில்லாக வளைத்து காட்டினார். நைட்டி அணிந்த குடும்பத்தலைவியாக, லட்சுமிபிரியா காலையிலேயே எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்து விட்டாராம். ‘அய்யய்யோ... பல் தேய்க்க மறந்துட்டேனே’ என்று அலறினார் பார்வதி. (வேடர்கள் அணியின் நிலைமை... உண்மையிலேயே பாவம்தான்!).

‘சுவிட்சர்லாந்து’ செல்லும் போது அங்கு மைனஸ் 47 டிகிரி குளிர் இருந்தது என்று அளந்து விட்டுக் கொண்டிருந்தார் ராம். “என்னது.. மைனஸ் 47 டிகிரியா...?” என்று மற்றவர்கள் ஜாலியாக அலறினார்கள். ஃபாரன்ஹீட்டை அவர் செல்சியஸ் என்று மாற்றி தவறாக சொல்லி விட்டதை, ஏதோ பெரிய ‘கரகாட்டக்காரன்’ வாழைப்பழ காமெடி வெலலுக்கு பேசி ஓட்டிக் கொண்டிருந்தார்கள். (பாவம்... அவர்களுக்கும் பொழுது போக வேண்டுமே?!)

தனது அணி இந்த இம்னியூட்டி சேலன்ஞ்சில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்று பரிதவித்துக்கொண்டிருந்தார் பார்வதி. நோ... நோ... அணிப்பாசத்தால் அல்ல. ஒருவேளை வேடர்கள் தோற்று விட்டால், எலிமினேஷன் பஞ்சாயத்தில் அத்தனை பேரும் தன்னை நோக்கி திரும்பி விடுவார்கள் என்று அவருக்குத் தெரிந்திருந்தது.

“களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்” என்று அழைப்பு விடுத்தார் அர்ஜூன். இரு அணிகளையும் குசலம் விசாரித்தார். “வேடர்கள் அணிக்குள் ஏதோ கசமுசா இருக்கிற மாதிரி தெரியுதே?” என்று அவர் போட்டு வாங்க முயல “சண்டைல கிழியாத சட்டை எங்க சார் இருக்குது?” என்கிற காமெடி மாதிரி “குடும்பம்னா அதுல நாலு சண்டை சச்சரவு வரத்தான் செய்யும்” என்று சமாளித்தார் பார்வதி. “ஓகே... போட்டிக்கு போலாமா?” என்று சீரியஸ் பிசினஸூக்கு வந்தார் அர்ஜூன்.

சர்வைவர் - 14
சர்வைவர் - 14

இன்று இரு அணிகளும் எதிர்கொள்ளப் போவது ‘Under Water Challenge’. ஒவ்வொரு அணியிலும் இரண்டு நபர்கள் Water tub மாதிரியான வடிவமைப்பின் உள்ளே படுத்துக் கொள்வார்கள். அது ஒரு தண்ணீர் தொட்டியுடன் இணைக்கப்பட்டிருக்கும். தொட்டியில் ஊற்றப்படும் நீர், tub-ல் வந்து கொஞ்சம் கொஞ்சமாக நிறையும். எனவே உள்ளே படுத்திருப்பவர்களில் யார் அதிக நேரம் நீரில் மூச்சடக்கி தாக்குப் பிடிக்கிறாரோ அவரே வெற்றியாளர். அவர் மூக்கை மட்டும் வெளியே நீட்டும்படியாக ஓர் துவாரம் இருந்தது.

ஒவ்வொரு அணியும் கடல் நீரை பக்கெட்டில் எடுத்து வந்து எதிரணியில் உள்ள போட்டியாளர் படுத்திருக்கும் டப்பில் ஊற்ற வேண்டும். அவர்கள் நீர் கொண்டு வரும் போது கோணல் மாணலாக அமைக்கப்பட்டுள்ள ஒற்றைக் கால் மரப்பாலத்தை கடக்க வேண்டும். ஒருவேளை அதில் சறுக்கி விழுந்தால் மீண்டும் ஆரம்பத்திலிருந்து வர வேண்டும்.

ஆடல், பாடல் போட்டியில் வென்ற காடர்கள் அணிக்கு ஒரு ‘அட்வான்டேஜ்’ இருக்கிறது என்று முன்னர் சொல்லப்பட்டது அல்லவா? அது என்னவென்று இப்போது தெரிந்தது. வேடர்கள் அணிக்கு விதம் விதமான மசாலாப் பொருட்கள் கிடைத்திருக்கும் நிலையில், காடர்களுக்கு ஒரு இட்லிப்பொடியாவது கிடைக்குமா என்று பார்த்தால் இல்லை.

காடர்கள் அணி முதல் சுற்றில் நீர் அள்ளத் தேவையில்லையாம். அது நான்கு பக்கெட்டுகளில் ஏற்கெனவே நிரப்பி வைக்கப்பட்டிருக்குமாம். போலவே அவர்கள் zigzag பாதையில் வரத் தேவையில்லை. ஆனால் இது முதல் தடவைக்கு மட்டுமே பொருந்தும். இதன் மூலம் சில நிமிடங்களை அவர்கள் மிச்சம் பிடிக்கலாம்.

சர்வைவர் - 14
சர்வைவர் - 14

வேடர்கள் அணியில் ஒரு நபர் அதிகமாக இருப்பதால், அணியுடன் கூடிப்பேசி விலகச் சொன்னார் அர்ஜூன். அந்த வகையில் லட்சுமிபிரியா போட்டியில் இருந்து விலகி வெளியே நின்றார்.

பாத் டப்பில் எந்த இருவர் படுப்பார்கள்? வேடர்களின் அணியில் இருந்து பார்வதி மற்றும் ஐஸ்வர்யா வந்தார்கள். காடர்கள் அணியில் இருந்து விஜி மற்றும் லேடி காஷ் வந்தார்கள். உடல் எடை குறைந்தவர்களாக இருந்தால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியும் என்பது ஸ்ட்ராட்டஜியாம். நீரில் மூழ்கி தாக்குப் பிடிக்கும் இந்தச் சிரமமான டாஸ்க்கில் பங்கேற்க வந்த இந்த நால்வருமே பெண் போட்டியாளர்கள் என்பது ஒரு சிறப்பு.

நந்தா இரண்டு கைகளிலும் பக்கெட் தூக்கிக் கொண்டு வந்தார். இது நல்ல யோசனைதான். ஆனால் கோணல் மாணல் பாதையில் சறுக்கி விழுந்தால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். என்றாலும் நந்தா இதை திறமையாகச் சமாளித்தார். உமாபதியும் இதே டெக்னிக்கை பின்பற்றி இரண்டு பக்கெட்டுக்களை தூக்கி வந்தார்.

நீர் சிந்தி அதில் மண்ணும இணைந்து கொண்டதால் zigzag பாதை சறுக்க ஆரம்பித்தது. ஒருமுறை அம்ஜத் சறுக்கி கீழே விழுந்தார். இந்தப் பாதையைக் கடப்பதற்கு ராம் மிகவும் சிரமப்பட்டார். இந்தச் சமயத்தில் சரண் செய்த ஓர் உத்தி பாராட்டத்தக்க வகையில் இருந்தது. மிகவும் சறுக்கலாக இருந்த இடத்தில் ஸ்கேட்டிங் செய்வது போல் காலை வழுக்கிக் கொண்டு அவர் சென்றது நல்ல சமயோசித உணர்வு.

வரிசையாக நீர் எடுத்து வந்தவர்கள் சோர்வினால் ஒருபக்கம் சிரமப்பட்டார்கள் எனும் போது உள்ளே படுத்திருந்தவர்களுக்கு வேறு மாதிரியான சிரமம் இருந்தது. உடலை குறுக்கிப் படுக்க வேண்டியிருந்த அதே சமயத்தில் வெயில், கடல்நீர் நாற்றம், அழுக்கு போன்றவற்றையும் அவர்கள் தாக்குப் பிடிக்க வேண்டியிருந்தது.

லேடி காஷின் நீர் படுக்கை முதலில் டார்கெட் செய்யப்பட்டது. அவர் படுத்திருந்த தொட்டி முழுக்க நிரம்பி மூக்கிற்கு அருகே நீர் நெருங்கியது. இந்தச் சிக்கலான நிலைமையை லேடி காஷ் நன்றாகவே சமாளித்தார். “முடியலைன்னா வந்துடுங்க” என்று அர்ஜூன் அவ்வப்போது எச்சரித்துக் கொண்டேயிருந்தார்.

‘’இது நிபுணர்களின் மேற்பார்வையில் நடத்தப்படும் போட்டி. யாரும் இதை முயற்சித்துப் பார்க்காதீர்கள்’’ என்கிற disclaimer அவ்வப்போது காட்டப்பட்டது. (சென்னைல இருக்கற தண்ணீர் பஞ்சத்துக்கு இதெல்லாம் கட்டுப்படியாகுமா?!)

சர்வைவர் - 14
சர்வைவர் - 14

லேடி காஷ் இயன்ற வரையிலும் போராடிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் எதிரணியில் இருந்த ஐஸ்வர்யாவும் இதே போல வெகு சிரமத்துடன் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். பரபரப்பான நிமிடங்கள் அவை. “இன்னமும் ஊத்து ஊத்து” என்று லட்சுமிபிரியா தனது அணியினரை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். (என்னாவொரு வில்லத்தனம்?!).

ஒரு கட்டத்துக்குப் பிறகு லேடி காஷ் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியே வந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யாவும் அதே போல் வெளியே வந்தார். ஆக வேடர்களுக்கு சாதகமாக நிலைமை சென்று கொண்டிருந்தது.

லேடி காஷ் எழுந்து விட்டதும் அடுத்த டார்கெட்டாக விஜயலட்சுமியை நோக்கி வேடர்கள் பாய்ந்தார்கள். “எங்க கிட்டயும் சீப்பு இருக்கு... நாங்களும் தலை வாருவோம்” என்பது போல காடர்களும் பார்வதியை நோக்கி பாய்ந்தார்கள்.

ஆனால் சும்மா சொல்லக்கூடாது. லேடி காஷ், ஐஸ்வர்யாவைப் போலவே பார்வதியும் இறுதி நொடி வரை மூச்சடக்கி தாக்குப் பிடிக்க முயன்றார். மூக்கிற்கு அருகே நீர் நிரம்பிக் கொண்டிருந்த போது கூட விட்டுத்தராமல் போராடினார். என்னதான் அவரை நிறைய கிண்டல்கள் செய்தாலும் கூடவே இந்த அர்ப்பணிப்பையும் பாராட்ட வேண்டும்.

சர்வைவர் - 14
சர்வைவர் - 14

பார்வதியோடு ஒப்பிடும் போது விஜயலட்சுமி படுத்திருந்த தொட்டியில் நீர் குறைவாக இருந்தது. எனவே அப்போதே தெரிந்து போயிற்று, பார்வதியால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாது என்று. அப்படியே ஆயிற்று. பார்வதி வெளியே வந்தார்.

ஆக... காடர்கள் அணியின் முதல் வெற்றி இது. ஒரு பிரபல தமிழ் திரைப்படத்தின் பரபரப்பான பின்னணி இசையைப் போட்டு அமர்க்களப்படுத்தினார்கள். காடர்கள் மிக உற்சாகமாக தங்களின் வெற்றியைக் கொண்டாடினார்கள்.

வேடர்களுக்கு ஏன் இந்தத் தோல்வி கிடைத்தது என்று யோசித்துப் பார்ததால், எதிரணியில் இருந்த அனைவருமே இளைஞர்கள். எனவே மிக வேகமாக அவர்களால் நீர் கொண்டு வர முடிந்தது. வேடர்கள் அணியில் இருந்த ரவி, அந்த வயதிலும் தனது சிறந்த உழைப்பைத் தந்தார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இளைஞர்களின் வேகத்தோடு ஒப்பிடும் போது உடல்எடை அதிகம் கொண்ட ரவி பின்தங்குவது தவிர்க்க முடியாதது.

வேடர்களின் தோல்வி பற்றி அர்ஜுன் விசாரித்த போது “அவங்களுக்கு முதல் அட்வான்டேஜ் இருந்தது சாதகம்” என்பது போல் அம்ஜத் பதில் அளித்தது அநாவசியமான மழுப்பல். இதை சரியாக உடைத்துப் போட்டார் அர்ஜூன். “முதல்ல இருந்தது வெறும் நாலு பக்கெட்தான். ஆனா அவங்க வெற்றிக்கு மேலும் 25 பக்கெட் நீராவது தேவைப்பட்டது” என்றார். எனில் காடர்கள் அணி அத்தனை வேகம் வேகமாக நீரை எடுத்து வந்திருக்கிறார்கள். இந்த முறை நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்கிற உத்வேகமும் வெறியும் அவர்களைச் செயலாற்ற வைத்திருக்கலாம்.

இறுதி நொடி வரை நீரில் போராடிய பார்வதி மற்றும் ஐஸ்வர்யாவுக்கு உண்டான நியாயமான கிரெடிட்டை தந்தார் அம்ஜத். போலவே தனது அணியின் வெற்றிக்கு நீர் தூக்கி வந்த ஆண்கள்தான் காரணம் என்று பாராட்டி மகிழ்ந்தார் விஜயலட்சுமி.

சர்வைவர் - 14
சர்வைவர் - 14

பார்வதியை இன்னமும் கொஞ்ச நேரம் நீரில் போட்டிருக்கலாம் என்று தோன்றும் அளவுக்கு வெளியே வந்தவுடன் மறுபடியும் அனத்த ஆரம்பித்து விட்டார். “நான் மொதல்லேயே சொன்னேன். நான் வெளியே இருக்கேன். வேற யாராவது பாத்டப்புக்கு போங்கன்னு... இவிய்ங்க கேக்கலை. இந்தத் தோல்விக்கு என்னைத்தான் பலி போடுவாங்கன்னு முன்னாடியே எனக்குத் தெரியும். அதுக்குத்தான் பிளான் பண்ணி என்னை அனுப்பிச்சாங்க” என்பது போல் டிசைன் டிசைனாக அவரது அனத்தல்கள் தொடர்ந்தது.

தோற்ற அணி இன்று ட்ரைபல் பஞ்சாயத்தில் அர்ஜூனை சந்திக்க வேண்டும். வேடர்கள் அணி, பார்வதியின் மீது ஏற்கெனவே கொலைவெறியில் இருக்கிறது. எனவே இன்று பார்வதி எலிமினேட் ஆவாரா? பார்வதி எலிமினேட் ஆனால் காமெடி என்டர்டெயின்மென்ட் குறைந்து விடும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மூன்றாம் உலகத்தில் இருக்கும் காயத்ரிக்கும் இந்திரஜாவுக்கும் ஏற்கெனவே இருக்கும் சோகம் போதாது என்று பார்வதியையும் வேறு சேர்த்து சமாளித்தாக வேண்டும்.

ஆனால் பஞ்சாயத்தில் யாரோ ஒருவர் ரவிக்கு எதிராகவும் வாக்களித்திருந்தார். ரிசல்ட் என்னதான் ஆகும்?

பார்த்துடுவோம்!