Published:Updated:

சர்வைவர் - 19 | ஓரம் கட்டப்படும் ராம்... 'பிக் பாஸ்' சதியின் உச்சத்தில் வேடர்கள் அணி!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 19-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சர்வைவர் நேற்றைய எபிசோடை பார்த்துக் கொண்டிருக்கும் போது பிக்பாஸ் சீஸன் 5-ஐ தவறுதலாக இந்த சேனலில் தொடங்கிவிட்டார்களோ என்று தோன்றி விட்டது. அந்தளவுக்கு அப்பட்டமான பிக்பாஸ் வாசனை வந்தது. வம்பு, விவாதம், குடுமிப்பிடி சண்டை என்று முழு எபிசோடும் ஒரே ரணகளம்.

சர்வைவர் டீமின் எடிட்டிங் டீமில் யாரோ ஒரு ‘கெளதம் வாசுதேவ் மேனன்’ ரசிகர் இருக்கிறார் போலிருக்கிறது. நந்தா பாடியது, ஐஸ்வர்யா தூங்கிக் கொண்டிருந்தது ஆகிய இரண்டு தனிக்காட்சிகளையும் இணைத்து பின்னணி இசையுடன் ‘ரொமான்ஸ்’ வடிவம் தர முயன்று கொண்டிருந்தார்.

காடர்கள் அணியில் ‘ராம்’-ஐ கட்டம் கட்டி விட்டார்கள் போலிருக்கிறது. விஜி, உமாபதி உள்ளிட்டவர்கள் ‘எப்படா இவன் இடத்தைக் காலி பண்ணுவான்’ என்பது மாதிரியே ராமை தொடர்ந்து கிண்டல் செய்கிறார்கள். குரூப் பாலிட்டிக்ஸ் இங்கு உச்சத்தில் இருக்கிறது.

ராமின் மீதும் பிரச்னை இருக்கிறது. ஏற்கெனவே சொன்னபடி பார்வதியின் சைலன்ட் வெர்ஷன் என்று இவரை சொல்ல முடியும். இன்னொரு பக்கம் இவரைப் பார்த்தால் பரிதாபமாகவும் இருக்கிறது. சினிமாக்காரர்களின் இடையில் மாட்டிக் கொண்ட சராசரி நபராக தவிக்கிறார்.

காடர்கள் அணி, இப்படி ‘சின்னப்புள்ளத்தனமாக’ சண்டை போட்டுக் கொண்டிருக்கையில் வேடர்கள் அணியிலோ ‘ஸ்ட்ராட்டஜி சதிகள்’ உச்சக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. நின்றால் உத்தி, நடந்தால் சதி, படுத்தால் விவாதம் என்று பட்டையைக் கிளப்புகிறார்கள். யார், யார் எந்தக் கூட்டணி என்றே புரியவில்லை.

‘சர்வைவர்’ பத்தொன்பதாம் நாளில் என்ன நடந்ததென்று விரிவாகப் பார்ப்போம்.

சர்வைவர் - 19
சர்வைவர் - 19

வேடர்கள் தீவு. அணியில் நந்தா இல்லாத ஏக்கத்தை ‘கேம்ப் ஃபயர்’ அமைத்து பாட்டு பாடி போக்கிக் கொண்டிருந்தார்கள். ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடலை உருக்கமாக பாடிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. (இதையே பார்வதியின் குரலில் கேட்டால் எத்தனை இனிமையாக இருக்கும்?!). நந்தாவை மிஸ் செய்வதாக இவர்கள் காட்டிக் கொண்டாலும் “ம்... பயபுள்ள நல்லா சிக்கனைத் தின்னுட்டு இருப்பான்...” என்றே உள்ளுக்குள் காண்டாகிக் கொண்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

விடிந்தது. ‘’எங்க போன ராசா... சாயங்காலம் ஆச்சே?” என்று பாடாத குறையாக நந்தாவுக்காக லட்சுமி பிரியாவும் ஐஸ்வர்யாவும் வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். நந்தா மீது LP-க்கு ஒரு சாஃப்ட் கார்னர் இருப்பது போல் தெரிகிறது. இதைப் போலவே ஐஸ்வர்யாவுக்கும் நந்தா மீது ஒரு நல்ல நட்புணர்ச்சி இருப்பது போல் தெரிகிறது. (இதைத்தான் எடிட்டிங்கில் ‘96’ திரைப்பட BGM எல்லாம் போட்டு வேறு மாதிரியாக காட்டுகிறார்கள்).

காடர்கள் தீவு. இவர்களின் உபசரிப்பில் நெகிழ்ந்து கொண்டிருந்தார் நந்தா. (இந்தாளுக்கு எங்கயோ மச்சம் இருக்கு!). காடர்கள் தந்த காபி அருமையாக இருந்ததாம். “சரி காஃபிக்கு பில்லு கட்ட பணம் இல்ல. ஒரு பாட்டுப் பாடிடுறேன்” என்று ‘கண்ணே கலைமானே’ பாடலை நந்தா பாட, அந்தப் பக்கம் ஐஸ்வர்யா கண் அசந்து படுத்திருக்கிற காட்சியை இத்தோடு இணைத்துக் காட்டி கெட்ட அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தது ‘சர்வைவர்’ டீம்.

ஒருவழியாக படகு வர தனது தீவுக்குத் திரும்பினார் நந்தா. வேடர்கள் தீவுக்குத் திரும்பிய இவருக்கு வரலாறு காணாத வரவேற்பு கிடைத்தது. லட்சுமி பிரியாவும் ஐஸ்வர்யாவும் ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள். “கட்சி மாறிட்டீங்களோன்னு நெனச்சேன்” என்று கிண்டலடித்து காலை வாரினார் நாராயணன்.

“அங்க நிலைமை எப்படி இருக்கு?” என்று இவர்கள் விசாரிக்க “நாமெல்லாம் கோடீஸ்வரர்கள். அங்க சாப்பிட ஒண்ணுமே இல்ல” என்று நந்தா சொன்னதும், நம் வீட்டில் கரன்ட் இருந்து, பக்கத்து வீட்டில் கரன்ட் போனது போன்ற மகிழ்ச்சியில் குதித்தது வேடர்கள் அணி. “அவங்க இம்யூனிட்டி சேலஞ்சில் ஜெயிக்கணும்கிற வெறில இருக்காங்க” என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டார் நந்தா. “ஆளு ரொம்ப உஷாருதான். வாயைத் திறக்க மாட்டேங்கிறார்” என்பதைக் கூட புகழ்ச்சியாகவே சொன்னார் LP.

சர்வைவர் - 19
சர்வைவர் - 19

“நந்தாவைப் பார்த்தப்புறம்தான் ஐஸ்வர்யா மூஞ்சுல சிரிப்பே வருது. இதுவரைக்கும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருந்தாங்க” என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார் அம்ஜத். (இதுக்கு எடிட்டிங் டீம் பண்ண வேலையே பரவாயில்லை).

“அப்புறம்... என்ன விஷயம்?” என்று நந்தாவும் ஐஸ்வர்யாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததின் பின்னணியில் அநாவசியமாக 96 திரைப்படத்தின் பேக்ரவுண்ட் மியூசிக் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தது.

காடர்கள் தீவு. “இந்த ராம் பயலை பாத்திரம் கழுவுறதுக்கு அனுப்பிச்சேன். பாவிப்பய எங்க போனான்னே தெரியலையே” என்று பாரதிராஜா படத்து காந்திமதி பாத்திரம் மாதிரி விஜயலட்சுமி புலம்பிக் கொண்டிருந்தார்.

சர்வைவரில் பிக்பாஸ் வாசனை வருகிறது என்று சொன்னேன் அல்லவா? அதனுடன் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆம், ‘சூப்பர் சிங்கர்’ வாசனையும் லைட்டாக அடிக்கிறது. அந்தளவுக்கு ஆளாளுக்கு மூலைக்கு மூலை பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜயலட்சுமியின் அவசரம் புரியாமல் ‘தென் பாண்டி சீமையிலே... மான் போல வந்தவனை” என்று பாடிக் கொண்டே நிதானமாக பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார் ராம். (பாத்திரத்தோடு பாத்திரமாக மாறுவது என்பது இதுதான் போல).

விஜயலட்சுமி நியாயமாக இதற்கு என்ன செய்திருக்க வேண்டும்? ‘ராம்... அப்படியில்ல... அந்த இடத்துல ஸ்ருதி போகுது பாரு... சீமையிலே’ன்னு வரும் போது இன்னமும் கொஞ்சம் இழுக்கணும்” என்றுதானே ஒரு நடுவராக நின்று சரிசெய்திருக்க வேண்டும்? ஆனால் இல்லை. இதுவே விக்ராந்த் அல்லது உமாபதியாக இருந்திருந்தால் விஜி இதைக் கட்டாயம் செய்திருப்பார். ஆனால் ராம்தான் அவருக்குப் பிடிக்காத ஆளாயிற்றே?”

சர்வைவர் - 19
சர்வைவர் - 19

எனவே மிகவும் டென்ஷன் ஆகி “நான் இங்க வெயிட் பண்ணிட்டிருக்கேன். அவன் பாட்டுக்கு சாவகாசமா அங்க பாட்டு பாடிட்டு இருக்கான்” என்று எரிச்சலுடன் புலம்பிக் கொண்டிருந்தார். ஒருவழியாக இரண்டு எபிசோடுகள் முடிந்த பின், ராம் பாத்திரத்திலிருந்து பிரிந்து அதை எடுத்துக் கொண்டு வர, புது மருமகளை ஹேண்டில் செய்யும் மாமியார் மாதிரி “இப்படியா கழுவுறது?” என்று பாத்திரத்தைப் பிடுங்கிக் கொண்டு மறுபடியும் கழுவச் சென்றார் விஜி.

தவறு ராமின் பக்கமும் இருக்கிறது. “டைம் ஆச்சு சீக்கிரம்” என்று விஜி நினைவுப்படுத்திக் கொண்டிருக்கும்போது, ரணகளத்தில் கிளுகிளுப்பு போல, சங்கீதப் பயிற்சி தேவைதானா? போதாக்குறைக்கு சமையலை மூடி வைக்கும் கூடையை ராம் தலையில் கவிழ்த்துக் கொண்டிருந்தது வேறு, விஜியை டென்ஷன் ஆக்கி விட்டது. “கேமரா வரும் போது மட்டும் வேலை பண்ற மாதிரி ஆக்ஷன் பண்றான்” என்பது அவரின் புகார்.

“என்னை மிகவும் எரிச்சலூட்டுகிறீர்கள் ராம். ஒரு முட்டாள் மாதிரி நான் அங்கு காத்துக் கொண்டிருக்க முடியாது” என்று விஜி ஆங்கிலத்தில் சொன்னதை ஏதோ உலக சினிமா மாதிரி சப்-டைட்டில் போட்டு நமக்கு புரிய வைத்தார்கள்.

“யாரடிச்சாரோன்னு பாடிட்டு இருந்தான்ல. நான்தான்டா அடிச்சேன்’ன்னு ஒண்ணு போட வேண்டியதுதானே?” என்று டைமிங்காக கமென்ட் அடித்தார் உமாபதி.

சர்வைவர் - 19
சர்வைவர் - 19

வேடர்கள் தீவு. ‘செந்தில்… குணா... அன்பு... இவங்க அத்தனை பேரையும் இணைக்கறது ராஜன்தான்’ என்று ‘வடசென்னை’ திரைப்படத்தில் வரும் ‘வாய்ஸ்ஓவர்’ போல இங்கு ரணகளமான மறைமுக சதி நடந்து கொண்டிருந்தது.

லட்சுமிபிரியா, நந்தாவுடன் இணக்கமாக இருப்பது அம்ஜத்துக்குப் பிடிக்கவில்லை போல. எனவே அவரை தன் பக்கம் இழுப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார். ஆனால் லட்சுமிபிரியாவோ ‘நான் அம்ஜத்தோட கூட்டணில இருக்கேன்’ என்று டபுள்கேம் ஆடிக் கொண்டிருக்கிறார்.

கடந்த ரிவார்டு சேலஞ்சில் வேடர்கள் அணி தோற்றதற்கு அம்ஜத்தான் முக்கிய காரணம் என்பது நந்தாவின் கருத்து. அம்ஜத்தின் காலில் அடிபட்டிருப்பதால் அவர் மரக்கட்டைகளை தூக்க சிரமப்பட்டார். அவருடைய தவறால்தான் உருளை கீழே விழுந்தது. இதனால் நேரம் வீணாகி, எதிரணியினர் வெற்றி பெற்றார்கள்’ என்று நந்தா சொல்லிக் கொண்டிருந்தார்.

“நாராயணா... இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலைடா...” என்பது மாதிரி நாராயணனிடம் பேசிக் கொண்டிருந்தார் அம்ஜத். “ஒண்ணு கவனிச்சியா நாராயணா... ஐஸ்வர்யா செய்யற தப்பை பத்தி மட்டும் நந்தா எதுவுமே பேசறதில்லை... நந்தா மைண்ட்ல இருக்கறது நான்தான். என்னைத் தூக்கத்தான் ஸ்கெட்ச் போடுகிறார்” என்று அம்ஜத் சொன்னதை “பகவானே... நான் என்ன பண்ணுவேன்.. சொல்லுங்கோ” என்பது மாதிரி பரிதாபமாக கேட்டுக் கொண்டிருந்தார் நாராயணன்.

மறுபடியும் காடர்கள் தீவு. ‘விக்ராந்த், விஜி, உமாபதி, சரண்’ ஆகிய நால்வரும் விக்ரமன் படத்தின் உறுப்பினர்கள் போல ‘லாலாலா’ பாடாத குறையாக ஒரு டீமாக இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. பாவம், லேடி காஷ். ‘யாரு பெத்த பிள்ளையோ’ என்பது மாதிரி தனியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். யார் வம்புக்கும் செல்வதில்லை.

எனவே விஜி அணி இணைந்து ராமை அவ்வப்போது கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதை ஏற்கவும் முடியாமல் உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருக்கிறார் ராம். ஒரு கட்டத்தில் உமாபதியை அழைத்து ‘வா… தனியாகப் பேசலாம்” என்று அழைத்துச் சென்றார் ராம். இந்தக் கூட்டணியில் ராமை உரிமையுடன் அதிகமாக கிண்டல் செய்வது உமாபதிதான்.

சர்வைவர் - 19
சர்வைவர் - 19

“நீங்க என்னை ஓட்றீங்க ரைட்டு... ஆனா நேத்திக்கு நந்தா முன்னாடில்லாம் ஓட்றீங்க... கேமரா முன்னாடி கிண்டல் பண்றீங்க... இந்த ஷோ தாண்டி எனக்குன்னு ஒரு லைஃப் இருக்கு” என்று ராம் சீரியஸாக ஆரம்பித்த உரையாடலைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

உமாபதி & கோவின் கிண்டலால் ராம் புண்படுகிறார் என்பது பரிதாபமான விஷயம்தான். ஆனால், ‘சர்வைவர்’ மாதிரியான ஒரு ரியாலிட்டி ஷோவில் வந்துவிட்டு கேமரா முன் கிண்டல் செய்கிறீர்கள் என்று ஆட்சேபிப்பது சரியாக இல்லை.

“நீங்கள்லாம் சினிமா பின்னணி உள்ளவங்க... நான் அப்படி இல்லை. ஒரு படத்துலதான் நடிச்சிருக்கேன். இதுக்காக அமெரிக்க வேலையைக்கூட விட்டுட்டு வந்திருக்கேன். உங்களுக்கெல்லாம் ஒரு பேக்ரவுண்ட் இருக்கு. எனக்கு இல்லை” என்று மறுபடியும் பாயை பிராண்ட ஆரம்பித்து விட்டார் ராம். இது நிச்சயம் அவரின் தாழ்வுணர்ச்சியைக் காட்டுகிறது.

“பிரதர் நீங்க ‘பேக்ரவுண்ட்’-ன்னு சொல்றது… ஆக்சுவலி எங்களுக்கு சுமை. அது எங்களுக்கு விசிட்டிங் கார்டு மாதிரிதான். க்ரெட்டிட் கார்டு மாதிரி இஷ்டத்திற்கு தேய்க்க முடியாது” என்று உமாபதி சொல்வதில் பொருள் உள்ளது. (ஆனால் உமாபதி போகிறபோக்கில் சொன்ன இந்த ரைமிங் வசனம் அட்டகாசம் – விசிட்டிங் கார்ட் – க்ரெடிட் கார்ட்). “எங்களுக்கு அத்தனை சிறந்த பேக்ரவுண்ட் இருந்தா நாங்க ஏன் சர்வைவர் வந்து கஷ்டப்படணும்?” என்று உமாபதி கேட்பதும் சிறந்த பாயின்ட்.

உமாபதியிடம் தொடங்கிய இந்த உரையாடல் குழு உரையாடலாக பிறகு மாறியது. “கேமரா இல்லாதப்ப என்னை கிண்டல் பண்ணா ஓகே... கேமரா முன்னாடியும் பண்ணா எப்படி?” என்று ராம் மறுபடியும் தன் புகாரை ஆரம்பிக்க “பல விஷயங்களை கேமரா இல்லாதபோதுதானே பேசினோம்... நான் அதை உன்கிட்ட சொல்லிட்டுத்தானே செஞ்சேன்... அது உனக்கே தெரியுமில்லையா?” என்று விக்ராந்த் கேட்ட போது ராமால் சரியாக பதில் சொல்ல முடியாமல் திகைத்து அமர்ந்திருந்தார்.

சர்வைவர் - 19
சர்வைவர் - 19

உமாபதி, விஜியைப் போல ராமை விக்ராந்த் வெளிப்படையாக நிராகரிக்கவில்லை. ‘இவனுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் தந்துதான் பார்ப்போம்” என்கிற நல்லெண்ணத்தில் இருப்பது போல்தான் தெரிகிறது. ஒரு கட்டத்தில் ராமின் அனத்தல் தாங்காமல், விக்ராந்த் கோபித்துக் கொண்டு எழுந்து சென்று விட, ராமும் புலம்பிக் கொண்டே இடத்தை விட்டு அகன்றார்... பாவம்!

மறுபடியும் வேடர்கள் தீவு. இவர்களின் பாலிட்டிக்ஸ் இப்போது உச்சக்கட்டத்துக்கு சென்று கொண்டிருந்தது. ‘அம்ஜத்துக்கு காலில் அடிபட்டிருக்கிறது. ரவி உடல்ரீதியாக பலவீனமாக இருக்கிறார்’ என்று காரணங்களை அடுக்கிக் கொண்டிருந்தார் நந்தா. ஆக வரும் ‘இம்யூனிட்டி சேலஞ்சில்’ வேடர்கள் அணி ஒருவேளை தோற்று விட்டால் இந்த இருவரில் ஒருவரை எலிமினேட் செய்யலாம் என்கிற விதையை அவர் போடுகிறார் போல.

லட்சுமிபிரியா மதில் மேல் பூனையாக எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாய்வார் என்கிற நிலையில் இருக்கிறார். “எனக்கு காலில் அடிபட்டதைப் பத்தி யாருமே அக்கறையா விசாரிக்கலை. ஆனால், தோல்வி வரும் போது மட்டும் என்னைக் கை காட்டுகிறார்கள்” என்று அம்ஜத் சொல்லும் போது பரிதாபம் ஏற்பட்டாலும் “இது ஒரு கேம்... ஸ்ட்ராட்டஜியாத்தான் இதை விளையாட முடியும்” என்று நேற்று சொல்லிக் கொண்டிருந்தவரும் இதே ஆசாமிதான்.

“உங்க கால் காயத்தினால்தான் நாம தோத்தோம்ன்ற மாதிரி நந்தா சொல்றாரு” என்று பிறகு அம்ஜத்திடம் LP பேசிக் கொண்டிருந்தார். ‘புல்ஷிட்... கட்டை நந்தா பக்கம்தான் சாய்ந்தது... அவர்தான் சரியா தூக்கலை” என்று அம்ஜத் சொன்னதும், சம்பந்தப்பட்ட வீடியோ துண்டை காட்டினார்கள். இப்போது அம்ஜத் சொன்னது சரி என்பது போல் தோன்றியது. (‘விருமாண்டி’ படத்தின் ஸ்கிரிப்டை மிஞ்சி விடுவார்கள் போல!).

“இந்த லட்சுமியைக் கவனிச்சீங்களா... இந்தம்மா ஏதோ புத்திசாலியாம். க்விஸ் புரோக்ராம்ல மட்டும்தான் கலந்துக்குவாங்களாம்... ஆனா physical task-ன்னு வந்தா அம்மணி முன்னாடி வர்றதில்லை” என்று ஐஸ்வர்யாவிடம் லட்சுமிபிரியா பற்றி புறணி பேசிக் கொண்டிருந்தார் நந்தா. (யாரைத்தான் நம்புவதோ... பேதையின் நெஞ்சம்?!).

“சரிப்பா எல்லாத்தையும் விடுவோம்.. இம்யூனிட்டி சேலன்ஞ்சில் தோல்வி என்கிற பேச்சுக்கே இடமில்லை. இப்போது அணி ஒற்றுமைதான் முக்கியம். பிறகு தனிநபர் ஆட்டத்தைப் பற்றி பார்த்துக் கொள்ளலாம்” என்று நந்தா முன்மொழிந்ததை வேடர்கள் அணி ஒருமாதிரியாக ஒப்புக் கொண்டது.

நேற்றைய எபிசோடிலும் தலைவி பார்வதியைக் காட்டாமல் இருந்தது, ‘சர்வைவர்’ டீம் மீது பலத்த அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அடுத்த எபிசோடில் பார்வதியின் கந்தர்வ குரலில், இளையராஜாவின் பத்து பாடல்களை ‘அந்தாக்ஷரியாக’ கேட்டால்தான் நிம்மதியாக தூக்கம் வரும். இந்தக் குறைந்தபட்ச கோரிக்கையையாவது அவர்கள் நிறைவேற்றுவார்களா?

பார்த்துடுவோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு