Published:Updated:

சர்வைவர் - 20 | மலேசிய மாடல் வனேசா உள்ளே… பார்வதி வெளியே… கடலை சண்டைகள் லோடிங்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 20-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒருவழியாக நேற்று தலைவி பார்வதியின் தரிசனம் கிடைத்தது. ‘எங்கே மனிதன் யாருமில்லையோ... அங்கே எனக்கொரு இடம் வேண்டும்’ என்று அரற்றும் சிவாஜி மாதிரி, ‘வேடர்கள் தீவை’ விடவும் ‘மூன்றாம் உலகம்’ நிம்மதியாக இருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் பார்வதி. (நீங்க இல்லாம யூட்யூப் லாஸ் ஆகிடும். திரும்பி வந்துடுங்க!).

வேறென்ன... ஓர் இனிய ஆச்சரியமாக இரண்டு புதிய போட்டியாளர்களின் நுழைவை இன்று காண முடிந்தது. நடிகர் இனிகோ பிரபாகர் மற்றும் மாடலான வனேசா க்ரூஸ் ஆகியோர் வந்தார்கள். (டாம் க்ரூஸோட தூரத்து சொந்தமோ?!). அந்தத் தீவின் அபாரமான அழகுக்கு நிகராக வனேசாவின் வசீகரம் இருந்தது என்பதை சொல்லியே ஆக வேண்டும். (கட்டுரை ஆசிரியர் தனது கண்ணாடியை மாற்ற வேண்டிய தருணம் இது!).

புதிய போட்டியாளர்கள் எந்தெந்த அணியில் செட்டில் ஆவார்கள் என்பது இனிமேல்தான் முடிவாகும். சர்வைவர் டீம் எதிர்பார்த்தபடி இவர்களின் வருகை இரண்டு அணிகளிலும் சலசலப்பை தொடக்கத்திலேயே ஏற்படுத்தியிருக்கிறது. (ஆனால் ராமுக்கு ஒரு ரொமான்ஸ் பார்ட்னர் கிடைத்து விடுவார் போலிருக்கிறது!).

சர்வைவர் 20-ம் நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் - 20
சர்வைவர் - 20

மூன்றாம் உலகம். நாம் இரண்டு நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்த பார்வதியின் என்ட்ரி. சர்வைவர் டீம் நன்றியுணர்ச்சியுடன் இருந்தால், தனக்கு ஃபுட்டேஜ் சப்ளை செய்யும் பார்வதிக்கு, ஒரு மாஸ் ஹீரோ போல இந்தக் காட்சியை அமைத்திருக்க வேண்டும். ஆனால் கிராமத்து நாயகி சுள்ளி பொறுக்கி வருவது போல, இந்தக் காட்சி இருந்ததில் பார்வதியின் ரசிகர்கள் ஏமாந்திருக்கலாம். “ஹப்பாடா!” என்று தலைச்சுமையை இறக்கிப் போட்டு விட்டு “ஏதாச்சும் டாஸ்க் தந்தா நல்லாயிருக்கும்’’ என்று ஆவலாக இருந்தார் பார்வதி. (வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி).

பார்வதியின் ஆசையை சர்வைவர் டீம் உடனே நிறைவேற்றியது. ‘பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை. அவன் யார்?’ – இந்த மாதிரி பல க்ளுக்கள் ஆங்காங்கே ஒளித்து வைக்கப்பட்டிருக்குமாம். காயத்ரியும் பார்வதியும் இவற்றைக் கண்டுபிடித்து அப்படியே தொடர்ந்து சென்றால் ‘புதையல்’ கிடைக்குமாம்.

முதல் க்ளூ படகின் அருகே இருக்கும் என்றிருந்தது. எனவே படகின் அருகே சென்று நன்றாகத் தேடினார் காயத்ரி. கிடைக்கவில்லை. “என்னா நீ… ஒரு க்ளூவைப் போய் படகுலயா ‘பப்பபரப்பே’ன்னு வெச்சிருப்பாங்க?... தண்ணி அடிலதான் இருக்கும். நல்லாத் தேடு” என்று காயத்ரியை அங்கிருந்து அகற்றினார் பார்வதி. பிறகு அவருக்கே சந்தேகம் வந்து, உள்ளே ‘பட்சி’ சொல்லி படகை மீண்டும் நன்றாக புரட்டிப் போட்டு ஆராய்ந்து பார்த்ததில், ‘முதல் க்ளூ’வை அவரே கண்டுபிடித்து விட்டார்.

இதனால் நொந்து போன காயத்ரி ‘இனிமே என் உள்ளுணர்வை மட்டும்தான் நம்புவேன். பார்வதியை நிச்சயம் நம்பக்கூடாது” என்று சபதம் எடுத்துக் கொண்டார். இப்படியாக ஒவ்வொரு இடமாக அவர்கள் கடந்து சென்ற போதுதான் அந்த விபரீதமான சம்பவம் நடந்தது. ஆம், பார்வதியின் டவுசர் கிழிந்து விட்டது. ‘ஷேம். ஷேம்… பப்பி ஷேம்...’ என்பது மாதிரி சிரித்த காயத்ரியை அடக்கி “சண்டைல கிழியாத டவுசர் எங்க இருக்கு... வா வேலையைப் பார்ப்போம்’’ என்று புதிர் விளையாட்டை கெத்தாக தொடர்ந்தார் பார்வதி.

ஒவ்வொரு புதிரையும் இவர்கள் கடக்கும் போது கிடைக்கும் குறிப்பு தமிழில் இருந்ததால் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து காயத்ரிக்கு சொல்லும் வேலை வேறு பார்வதிக்கு வாய்த்தது. (என் கெரகம்... நான் எங்க, எப்படி இருக்க வேண்டியவ!). இப்படியாக இவர்கள் பல தடைகளைத் தாண்டிச் சென்ற பிறகு ஒரு குடிசை மாளிகையில் கிடைத்த ‘புதையல்’ என்ன தெரியுமா?

சர்வைவர் - 20
சர்வைவர் - 20

வேறென்ன… சோறுதான். “யாரை நம்பி நான் பொறந்தேன்.. போங்கடா போங்க” என்று வேடர்கள் தீவு இருக்கும் திசை நோக்கி கெத்தாக பாடிய பார்வதி, சிக்கன் ரைஸை கும்மாளமாக தின்று தீர்த்தார். (இத்துடன் ‘மூன்றாம் உலக’ காட்சிகள் நிறைவடைந்தன).

அடுத்ததாக இரு அணிகளுக்கும் ஒரு செய்தி வந்திருந்தது. அதன்படி போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் உடல் எடையை பதிவு செய்ய வேண்டும். நிகழ்ச்சியின் துவக்கநாளில் இருந்த எடை மற்றும் தற்போதைய எடை ஆகிய இரண்டையும் போர்டில் எழுத வேண்டும். இதில் அனைவருமே ஏறத்தாழ ஆறில் இருந்து எட்டு கிலோ வரை எடை குறைந்திருந்தார்கள். ஆனால் விதிவிலக்காக அம்ஜத் மட்டும் அதே எண்ணிக்கையில் இருந்தார்.

பிறகு ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ட்விஸ்ட். ‘போட்டியில் கடைசி வரை தன்னுடன் இருக்க வேண்டும்’ என்று விரும்புகிற ஒரு போட்டியாளர் மற்றும் ‘இந்தாள் கிளம்பினா எனக்கு நிம்மதிப்பா’ என்று தான் கருதுகிற போட்டியாளர் ஆகிய இருவரையும் தேர்ந்தெடுத்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் நிச்சயம் இந்த சூழ்ச்சி இருக்கும். சக போட்டியாளரின் மீதுள்ள விருப்பு, வெறுப்பை வெளியே அப்பட்டமாக பதிவு செய்யும்படி ஒரு டாஸ்க் தருவார்கள். இப்படியாக இவர்களின் அந்தரங்க கசப்புகள் வெளியே தெரிய வரும் போது அவை நிகழ்ச்சியில் மேலதிக கசமுசாக்களை உருவாக்கும். அதுதான் நிகழ்ச்சியின் நோக்கமும் கூட. இந்த அடிப்படையை சரியாகப் புரிந்து கொண்டு உணர்ச்சிவசப்படாமல் இருப்பவர்கள் சிலரே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“வெளியே போனவங்க கூட ஃபோட்டோ எடுத்துக்கலாமா?” என்று ஒரு சாமர்த்தியமான கேள்வியைக் கேட்டார் funny guy நாராயணன். “ஏன்... உனக்கு பார்வதி ஞாபகம் வந்துடுச்சா?” என்று ரவி முதலில் கிண்டலாக கேட்டாலும் பிறகு “என்னமோ தெரியல... பார்வதி இல்லாதது ஒரு மாதிரியாத்தான் இருக்கு... அது பாட்டுக்கு என்னென்னமோ க்யூட்டா பேசிட்டு இருந்தது. இப்ப ஷோல இருந்து வெளியே போய் என்னை என்னென்ன திட்டி பேட்டி கொடுத்துக்கிட்டு இருக்கோ?!” என்று பார்வதியின் பிரிவுத் துக்கத்தில் ஏங்கிக் கொண்டிருந்தார் ரவி. (ஒரு மணி நேரம் பார்க்கும் நமக்கே பார்வதி இரண்டு நாட்களாக காட்டப்படாதது பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கும் போது கூடவே வாழ்ந்த வேடர்கள் அணிக்கு அந்தத் துயரம் இருக்கத்தான் செய்யும்!).

சர்வைவர் - 20
சர்வைவர் - 20

புகைப்பட நேரம். முதலில் வந்த நந்தா, “வாங்க அம்ஜத்” என்று அழைத்தவுடன் அனைவருக்கும் சற்று ஆச்சரியம். இருவருக்குள்ளும் ஒரு மறைமுக விரோதம் ஓடிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். அம்ஜத்தையா ‘பிடித்த போட்டியாளராக’ நந்தா சொல்லப் போகிறார்?’ என்ற ஆச்சரியம் ஏற்பட்டது.

ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட்டாக ‘அம்ஜத்துடன் நான் கடைசி வரைக்கும் டிராவல் பண்ண விரும்பலை. ஏன்னா... இவர் வலிமையான போட்டியாளர்’ என்று லுலுவாய் காரணம் சொன்னார் நந்தா. ஆனால் நந்தா உள்ளுக்குள் நினைத்த காரணம் ‘அம்ஜத்திடம் நெகட்டிவிட்டி தென்படத் துவங்கி விட்டது. அணியாக ஆடாமல் தனிநபர் ஆட்டத்தை ஆடுகிறார்’ என்பதே.

‘கடைசி வரை பயணிக்க விரும்பும் போட்டியாளர்’ என்று நாராயணனைத் தேர்ந்தெடுத்தார் நந்தா. இது பாதுகாப்பான காரணம். நாராயணன் ஊறுகாய் மாதிரி. வேண்டுமெனில் தொட்டுக் கொள்ளலாம். வேண்டாமெனில் தூர வைத்து விடலாம்.

தனது முறை வந்த போது ‘பிடித்த போட்டியாளராக’ நந்தாவை ஐஸ்வர்யா தேர்ந்தெடுத்தார். (அப்ப ‘96’ BGM உண்மைதானா?!). ஒரு வலிமையான போட்டியாளர் தன்னுடன் பயணிக்க வேண்டும் என்பது இவரது விருப்பமாம். இந்தப் புகைப்படச் சடங்கின் மூலம் இவர்களின் மனதில் இருந்த உண்மையான அபிப்ராயம், அதை மறைத்து வெளியே பாசாங்காக சொல்லும் வேறொரு காரணம் போன்ற விஷயங்கள் வெளியே வந்தன.

காடர்கள் அணியில் ‘பிடிக்காத போட்டியாளராக’ யார் அதிகம் தேர்வு செய்யப்படுவார் என்பதை நாம் யூகிக்க அதிகம் சிரமப்படத் தேவையில்லை. வேறு யார்,? ‘ராம்’தான். விக்ராந்த் மட்டும் வித்தியாசமாக ‘ஒட்டுமொத்த டீமையும்’ பிடிக்காத போட்டியாளர்களாக அழைத்தது ஒரு நல்ல சேஃப் கேம்.

‘இரண்டு போட்டியாளர்களுக்கு எதிராக நான் எதையும் செய்ய மாட்டேன் என்று எச்சி தொட்டு சத்தியம் செய்திருக்கிறேன்’ என்று சொல்லி உமாபதியை பிடித்த போட்டியாளராக ராம் தேர்வு செய்ததற்கு சொன்ன காரணம் சிறுபிள்ளைத்தனமானது. இப்படியெல்லாம் தனிப்பட்ட வாக்குகளை தருவதே முதலில் அபத்தம். அதை வெளியில் வேறு சொல்லிக் கொண்டு திரிகிறார்.

‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் இரண்டு புது முகங்கள் உள்ளே வந்தார்கள். ஒன்று இனிகோ பிரபாகர். ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தில் ஹீரோ என்பது உள்ளிட்டு பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இன்னொருவர் ‘வனேசா க்ரூஸ்’. மலேசிய மாடல் மற்றும் செஸ் ப்ளேயராம்.

இந்த இருவரும் ஏதோ வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாதிரி, வேடர்கள் தீவுக்கும் காடர்கள் தீவுக்கும் நல்லெண்ண நோக்கத்தில் சிறப்பு விஜயம் செய்தார்கள். இவர்கள் போட்டிக்குள் நுழைகிற சமாச்சாரம், பழைய போட்டியாளர்களுக்குள் சஞ்சலப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் சர்வைவர் டீமின் நோக்கம் என்பது நன்றாக புரிந்தது. அந்த நோக்கம் நன்றாகவே வேலை செய்தது.

சர்வைவர் - 20
சர்வைவர் - 20

‘இந்த மூன்று வாரங்களாக தாங்கள் நிறைய கஷ்டப்பட்டு போட்டி நாட்களைக் கடந்து கொண்டிருக்கும் போது இவர்கள் மட்டும் ‘ஜொய்ங்’ என்று நேராக உள்ளே குதிப்பது நன்றாகவா இருக்கிறது?’ என்பது ஒவ்வொரு போட்டியாளர்களின் மனதில் உள்ள ஆதங்கம். இதை சிலர் வெளிப்படையாகவே கேட்டு விட்டார்கள். இது மனித இயல்புதான். எந்தவொரு பயணத்திலும் புதிதாக உள்நுழையும் நபரை, மற்றவர்கள் சற்று நேரம் ஆரம்பத்தில் விரோதத்துடன்தான் பார்ப்பார்கள். புதிய ஆசாமி தன்னை எப்படி திறமையாகவும் சகஜமாகவும் அங்கு பொருத்திக் கொள்கிறார் என்பதைப் பொறுத்து அவருக்கான வரவேற்பு நடக்கும்.

இந்த வகையில் இனிகோவை இரண்டு அணிகளும் வரவேற்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. இது அடிப்படையில் உடல்வலிமையைக் கோரும் போட்டி என்பதால் பெண்ணை விடவும் ஆணையே ஒவ்வொரு அணியும் அடைய ஆசைப்படும். இந்த நோக்கில் இனிகோ அணியில் ஐக்கியமாவதில் பிரச்னையிருக்காது.

‘எப்படி ஜோதியில் ஐக்கியமாவது?’ என்கிற டெக்னிக் இனிகோவிற்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. வேடர்கள் தந்த உணவை ‘நல்லாயிருக்கு’ என்று சாப்பிட்டார் இனிகோ (பிறகு ‘உவ்வேக்’ என்றார்). பதிலுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லி சரசரவென தென்னை மரத்தில் ஏறி இளநீர்களை பறித்துப் போட்டார். இதன் மூலம் வேடர்கள் அணியில் ஒரு இயல்பான நட்பை சம்பாதித்துக் கொண்டார். “எனக்கும் மரம் ஏற கத்துக் குடுங்கோ” என்று அப்போதே இனிகோவுடன் பழகத் துவங்கி விட்டார் ஐஸ்வர்யா.

சர்வைவர் - 20
சர்வைவர் - 20

ஆனால், எந்த அணியில் சேரப் போகிறார்? என்பதைப் பொறுத்து வனேசாவின் பயணம் அமையும். ஒரு வேளை அவர் ‘காடர்கள் அணிக்குச்’ சென்றால் mark my words.. இவருக்கும் விஜிக்கும் ஒரு கடுமையான மோதல் ஏற்படுவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருக்கின்றன. ‘இருக்குற இடம் தெரியாம இருந்துடுவோம்’ என்கிற லேடி காஷைப் போல வனேசாவைப் பார்த்தால் அத்தனை சாதுவான ஆசாமியாக தெரியவில்லை. ஆரம்பத்தில் சிரிக்க சிரிக்க பேசினாலும் நன்றாக பதிலடி தருவார் என்றே தோன்றுகிறது.

வனேசா காடர்கள் அணிக்கு வந்தால் யாருக்கு லாபமோ... இல்லையோ... ராமுக்கு நல்ல அறுவடை. வந்த முதல் நாளிலேயே வனேசாவுடன் சுவாரசியமாக கடலை சாகுபடி செய்யத் தொடங்கிவிட்டார். ஒட்டுமொத்த அணியும் இவரை வெறுக்கும் போது இவர் புதிய நட்பை சட்டென்று பற்றிக் கொள்வதில் ஆச்சரியமில்லை. “எப்படியோ. நம்மள விட்டா போதும்” என்று விஜி கேங் மேலுக்கு ஆறுதல் அடைந்தாலும் இந்த புதிய கூட்டணியால் உள்ளுக்குள் அவர்கள் ஆத்திரமே கொள்வார்கள். வனேசாவிடம் பேசுவதில் உமாபதிக்கும் ராமுக்கும் இடையில் சண்டை கூட நடக்கலாம்.

‘’என் ஸ்வப்னா ரொம்ப புத்திசாலிடா.. யாரும் அவளை ஏமாத்த முடியாது” என்று ஒரு திரைப்படத்தில் விவேக் சொல்வது போல வனேசா புத்திசாலியாகவும் இருக்கிறார். வேடர்கள் தீவுக்கு வரும் போது அமைதியாக ஒதுங்கிப் போன நந்தாவுடன் சற்று பேசிய பிறகு “இவர்தான் அணியில் முக்கிய முடிவுகளை எடுப்பவர் போல் தோன்றுகிறார்’ என்று உடனே வனேசா கணித்தது புத்திசாலித்தனம்.

புதிய போட்டியாளர்கள் இருவரும் ‘பாய்’ சொல்லி பாய்மரத்தில் ஏறி அகன்ற பிறகு ‘இந்தப் பொண்ணு ரெண்டு நாள் கூட தாங்காது. வந்தவுடனே ‘’பாத்ரூம் எங்கே இருக்குன்னு கேக்குதுப்பா” என்று சொல்லி ‘ஹா...ஹா...ஹா’ என்று சிரித்தார் அம்ஜத்.

‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ என்கிற தத்துவத்தின்படி பார்வதி சென்று விட்டாலும் இன்னொரு வனேசா, வனிதாவாக மாறி அந்த இடத்தை நிரப்புவார் என்று தோன்றுகிறது. புதிய கலகங்களுக்கு வனேசா காரணமாக இருப்பாரா?

பார்த்துடுவோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு