Published:Updated:

சர்வைவர்- 21|பார்வதியின் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் பலிக்குதே மக்கா… வேடர்களின் வேற லெவல் பாலிடிக்ஸ்!

சர்வைவர்- 21

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 21-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர்- 21|பார்வதியின் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் பலிக்குதே மக்கா… வேடர்களின் வேற லெவல் பாலிடிக்ஸ்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 21-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:
சர்வைவர்- 21

‘இம்யூனிட்டி சேலன்ஞ்’தான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். இரு அணிகளுமே ஜெயிக்க வேண்டிய நெருக்கடியில் இருந்தார்கள். ரிவார்ட் சேலன்ஞ்சில் ‘காடர்கள்’ அணி ஏற்கெனவே வென்று விட்டதால் வேடர்களுக்கு இப்போது கூடுதல் நெருக்கடி இருந்தது. இது மட்டுமல்லாமல் ‘யார் எலிமினேஷன்’ என்பது தொடர்பாக வேடர்கள் அணிக்குள் உலக சதியே நடந்து கொண்டிருந்தது. இந்தப் போட்டியில் வென்றால்தான் இந்தச் சதிகள் சற்றாவது குறையும்.

ஆக்ரோஷமாக நடந்த ‘இம்யூனிட்டி’ சவாலில் வேடர்கள் அணி பெற்றது. இந்த சேலன்ஞ்சில் தோற்றாவது ‘ராமை’ வெளியேற்றப் போகிறேன் என்று விஜயலட்சுமி முன்பு சொன்ன வாய்முகூர்த்தம் பலித்து விட்டது. ஆக காடர்கள் அணி, ட்ரைபல் பஞ்சாயத்தில் ராமை கட்டம் கட்டி வெளியேற்றும் கொலைவெறி சடங்கு சிறப்பான முறையில் நடைபெறும்.

வெற்றி பெற்றாலும் கூட வேடர்கள் அணியில் மகிழ்ச்சியில்லை. ஒரு குடுமிபிடிச் சண்டைக்கான விதையை லட்சுமி பிரியா இட்டார்.

இந்த இடத்தில் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். பார்வதி ஆரம்பத்தில் அனத்திய புகார்களை நாம் கிண்டலாக நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் ஆரம்பத்திலேயே சொன்ன விஷயங்கள் இப்போது ஒவ்வொன்றாக நிரூபணம் ஆகிக் கொண்டிருக்கின்றன. என்னவொன்று, பார்வதிக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. எனவே ‘பார்வதி’ ஒரு தீர்க்கதரிசி என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

சர்வைவர் 20-ம் நாளில் நடந்தது என்ன?!

சர்வைவர்- 21
சர்வைவர்- 21

வேடர்கள் அணி புதிய போட்டியாளர்களை, குறிப்பாக வனேசாவை கிண்டல் செய்வதோடு நிகழ்ச்சி தொடங்கியது. ‘ராகிங்’ என்கிற கலாசாரம் பரிணமித்தது இப்படித்தான். இது ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு. ஆனால் இதன் பின்னிருப்பது ‘தங்களின் சீனியர் நிலை பறிபோகுமோ’ என்கிற அச்சமும் தாழ்வுணர்வும்தான்.

விடிந்தது. நிகழ்ச்சியில்தான் மசாலா குறைவாக இருக்கிறது என்று பார்த்தால் காடர்கள் அணியிலும் மசாலா கையிருப்பில் இல்லையாம். உப்பு சப்பில்லாத உணவை நெடுநாட்களாக சாப்பிட்டு அவர்களுக்கு நாக்கு செத்துப் போயிருந்தது. ஓட்ஸ் கஞ்சியும் குறைவாக இருந்தது. மசாலா இல்லாத காரணமோ அல்லது தன் குடும்பத்தினரைப் பிரிந்திருப்பது காரணமோ தெரியவில்லை, விஜி கண் கலங்கிக் கொண்டிருந்தார். அவரை உமாபதி தேற்றினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேடர்கள் அணியில், கரையில் ஓடும் நண்டைப் பிடித்து சாப்பிடும் முயற்சியில் ரவி ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் விளையாட்டுக்காக செய்தாலும் ‘பசிக்குது’ என்று அவர் சொன்ன போது சட்டென்று மனம் நெகிழ்ந்தது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அதிகமாகவே பசிக்கும்.

சர்வைவர்- 21
சர்வைவர்- 21

காடர்கள் அணித்தலைவரான உமாபதிக்கு ஒரு ரகசியக் கடிதம் வந்திருந்தது. அதன்படி ஒருவேளை அவர்கள் அணி ‘ட்ரைபல் கவுன்சிலுக்கு’ வர நேர்ந்தால், உமாபதி ஒரு வாக்கை எக்ஸ்ட்ராவாக அளிக்கலாமாம். (அப்ப ராம் மேல ரெண்டா குத்த வேண்டியதுதான்!).

‘‘தனி நபர் கேமையெல்லாம் விடுங்க. இந்தச் சவால்ல ஜெயிக்கறதுல மட்டும்தான் நாம ஃபோகஸ் பண்ணணும். யாரையும் இந்த அணில இருந்து நாம இழக்க வேண்டாம்” என்று ஒருபக்கம் நந்தா உத்வேக உரையை அளித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் காடர்கள் அணியும் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தது.

‘’களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’’ என்கிற தனது வழக்கமான வசனத்தை தவிர்த்து ‘’வாங்க... மை டியர் ஃபைட்டர்ஸ்’’ என்று அன்பொழுக அழைத்தார் அர்ஜூன். காடர்களின் ஷாப்பிங் அனுபவம், இரு அணிகளும் எடுத்த செல்ஃபி அனுபவம், அதனுள் இருந்த பஞ்சாயத்து போன்றவற்றை விசாரித்த பிறகு விஷயத்துக்கு வந்தார். அது புதிய போட்டியாளர்களைப் பற்றியது.

“இந்த இரு புதிய நபர்கள்ல யார் உங்க அணில இருந்தா நல்லாயிருக்கும்?” என்ற கேள்விக்கு ‘இனிகோ பிரபாகரை’ நந்தா கேட்டது சரியான சாய்ஸ். உடல்வலிமை சார்ந்த போட்டிக்கு பிரபாகர் உதவியாக இருப்பார். அது மட்டுமல்லாமல் தேங்காய் பறித்துப்போட அவரின் சேவை மிக அவசியம். “வந்தவுடனே பாத்ரூம் வசதி பத்தி வனேசா விசாரிக்கிறாங்க. அவங்க எங்களுக்கு செட் ஆக மாட்டாங்க” என்பது போல் கிண்டல் செய்தார் அம்ஜத்.

ஆனால், காடர்கள் அணியில் இருந்த விஜயலட்சுமியோ ‘வனேசா’வை கேட்டது ஆச்சரியம். ஆனால் இதன் பிறகு இவரும் உமாபதியும் இணைந்து இளித்துக் கொண்டே சொன்ன இன்னொரு காரணம் அபத்தம். ‘ராமுக்கு ஒரு ரொமான்ஸ் பார்ட்னர் தேவை’ என்பதை மறைமுகமாக சொன்னார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘’கேமரா முன்னால் கிண்டல் செய்ய வேண்டாம்’’ என்று ராம் வேண்டுகோள் வைத்ததை சற்றாவது பரிசிலீத்திருக்கலாம். ‘ரோமியோ’ என்கிற இமேஜை ராமுக்கு தர இவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் இவர்களையும் குறை சொல்ல முடியாது. வனேசாவைப் பார்க்கும் போதெல்லாம் ‘தேன் குடித்த நரி’ மாதிரி ராமின் முகம் மாறி விடுகிறது. “எமோஷனைக் குறைங்க” என்று அர்ஜூனே இது பற்றி கிண்டலடித்தார்.

சர்வைவர்- 21
சர்வைவர்- 21

புதிய வரவுகளான இனிகோவும் வனேசாவும் களத்துக்கு வந்தார்கள். ‘’யார் அணியில் இருக்க உங்களுக்கு விருப்பம்?” என்கிற கேள்வி இவர்களிடமும் கேட்கப்பட்டது. வேடர்கள் அணியை இனிகோவும் காடர்கள் அணியை வனேசாவும் தேர்ந்தெடுத்தார்கள். ஆக.. அந்தந்த அணியின் விருப்பமும் இவர்களின் விருப்பமும் மேட்ச் ஆகி விட்டது.

புதிய போட்டியாளர்களுக்கு லேசான சம்பிரதாய போட்டியை வைத்தார் அர்ஜூன். அதன்படி இருவரும் முள் படுக்கையின் மீது மூன்று நிமிடங்களுக்கு மேல் நிற்க வேண்டுமாம். அப்போதுதான் இவர்கள் கேட்ட அணி கிடைக்குமாம். வனேசா முள்ளின் மீது நின்றாரோ இல்லையோ... அவர் தங்கள் அணிக்கு வந்து விட வேண்டுமே என்று ராம்தான் முள் மீது நின்ற மாதிரி தவித்தார். இருவருமே ஜெயித்து விட்டதால் அவர்களின் கோரிக்கை நிறைவேறியது.

அடுத்ததாக இரு அணிகளுமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘இம்யூனிட்டி சேலன்ஞ்’ பற்றிய அறிவிப்பை தெரிவித்தார் அர்ஜூன். அது ஏறத்தாழ கால்பந்து போட்டிதான். ஒரு சிக்கலான வடிவத்தைக் கொண்ட பெரிய மரப்பந்துகள் இரண்டு இருக்கும். ஒரு சுற்றில் மூன்று நபர்கள் கலந்து கொள்வார்கள். எந்த அணி முதலில் 2 கோல் போடுகிறதோ, அந்த அணியே வெற்றி பெறும்.

முதல் சுற்றில் இரு அணிகளில் இருந்தும் மூன்று ஆண்கள் வரலாம். அடுத்தடுத்த சுற்றுகளில் இது மாறும். வேடர்கள் அணியிலிருந்து நந்தா, இனிகோ மற்றும் ரவி ஆகியோர் வர, காடர்கள் அணியில் இருந்து விக்ராந்த், உமாபதி மற்றும் சரண் வந்தார்கள்.

சர்வைவர்- 21
சர்வைவர்- 21

முதல் சுற்று ஆக்ரோஷமாக ஆரம்பித்தது. ஒவ்வொரு அணியில் இருந்தும் இருவர் கோல் போட பந்தைத் தள்ளிக் கொண்டு செல்ல, எதிர் அணியில் இருந்தவர் இதைத் தடுத்து நின்றார். இந்த வகையில் ரவியின் பங்களிப்பு சிறப்பானது. அவர் திருமலைநாயக்கர் தூண் போல வலிமையாக தடுத்து நிற்க, அவரைத் தாண்டிச் செல்ல காடர்கள் அணி மிகவும் சிரமப்பட்டது. ஒரு கட்டத்தில் உமாபதியை, இனிகோ இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள நந்தா பந்தை தள்ளிச் சென்று முதல் கோலை போட்டார். ஆக முதல் வெற்றி வேடர்களுக்கு.

அடுத்த சுற்றில் 2 ஆண்கள் மற்றும் 1 பெண் கலந்து கொள்ள வேண்டும். வேடர்கள் அணயில் இருந்த ஐஸ்வர்யா துள்ளிக் குதித்துக் கொண்டு வந்தார். (இது பின்னால் பெரிய பஞ்சாயத்தாக மாறப் போகிறது என்பதை அப்போது அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்). அவருடன் நந்தாவும் அம்ஜத்தும் வந்தார்கள். காடர்கள் அணியில் இருந்து விக்ராந்த், ராம் மற்றும் வனேசா ஆகியோர் வந்தார்கள். (ஈவு இரக்கமற்ற காடர்கள் அணி ‘ஒரு பச்ச புள்ளையான’ வனேசாவை வந்தவுடனேயே ஆபத்தில் இறக்குவது கருணையே இல்லாத செயல்!).

இந்தச் சுற்றும் ஆக்ரோஷமாக இருந்தது. எதிர் அணியைத் தடுக்கும் நோக்கில் பந்துக்கு முன்னால் வந்து விழுந்தார் ராம். அவரையும் சேர்த்து உருட்டிக் கொண்டு வேடர்கள் கோலை போட்டார்கள். சக்கரத்தில் மாட்டிக் கொண்ட பேருந்து பயணி போல உருண்டு விழுந்தார் ராம். அதிர்ச்சியிலும் பதற்றத்திலும் சாய்ந்து கிடந்தவர், சிறிது நேரத்துக்குப் பிறகு ஆசுவாசமானார்.

ஆக... வேடர்கள் இரண்டாவது கோலையும் அடித்து வெற்றி பெறும் நிலையில் காடர்கள் ரீமேட்ச் கோரினார்கள். வனேசா முள்படுக்கையில் மூன்று நிமிடம் நின்று சமாளித்தற்காக தரப்பட்ட ‘அட்வான்டேஜ்’ இது.

எனவே இந்தப் போட்டி மறுபடியும் நிகழ்ந்தது. ஐஸ்வர்யா ஆவேசமாக செயல்பட்டு மிக எளிதாக கோல் போட்டார். வேடர்கள் அணி வெற்றி பெற்ற உற்சாகத்தில் துள்ளியது. ‘இறுதிச்சுற்று’ கிளைமாக்ஸ் சீன் மாதிரி நந்தாவின் இடுப்பில் பாய்ந்து ஏறி அமர்ந்தார் ஐஸ்வர்யா.

சர்வைவர்- 21
சர்வைவர்- 21

ஆக ‘இந்த இம்யூனிட்டி சேலஞ்சில்’ வேடர்கள் அணி வெற்றி பெற்று எலிமினேஷன் பிரச்னையை சமாளித்து விட்டது. தோல்வியடைந்த காடர்கள் அணி ‘ட்ரைபல் பஞ்சாயத்தை’ எதிர்கொள்ள வேண்டும். ஆனால் அவர்களுக்கு இதுவொரு வசதிதான். பலியாடு ராம் தயாராக இருக்கும்போது அவர்கள் அதிகம் குழம்பத் தேவையில்லை.

ஒவ்வொரு அணியும் தாங்கள் விளையாடிய அனுபவத்தைப் பற்றி உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தது. ‘ராம் செய்தது நல்ல டிராமா’ என்பது மாதிரி காடர்கள் அணியில் இருந்த சரண் புறணி பேச ஆரம்பிக்க, விக்ராந்த்தும் உமாபதியும் அதை உற்சாகமாக வழிமொழிந்தார்கள். ஆனால் இது அபாண்டமான புறணி.

தங்கள் அணி தோற்று விட்டால் தான் எலிமினேஷனில் பலியாவோம் என்பது ராமுக்கு நன்றாகத் தெரியும். எனவே உயிரைக் கொடுத்து கோலைத் தடுக்க முயன்ற அவரின் அர்ப்பணிப்பைப் பற்றி இவர்கள் வம்பு பேசுவது அநியாயம். என்னதான் ஒருவர் பிடிக்காதவர் என்றாலும் கூட அவர் தந்திருக்கும் நியாயமான உழைப்புக்கு கிரெடிட் தருவதுதான் முறையான செயல்.

இந்தச் சவாலில் வென்றாலும் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடாமல் ஒரு புதிய சர்ச்சையில் வேடர்கள் அணி இறங்கியது. இதைத் தொடங்கி வைத்தவர் லட்சுமி பிரியா. இந்த physical task-ல் முதலில் குதித்துக் கொண்டு ஓடியவர் ஐஸ்வர்யா. ஏதோ அவரால்தான் அனைத்தையும் திறமையாக செய்ய முடியும் என்று நம்புகிறார் போல. எனவே ‘’அனைத்திற்கும் முந்திச் செல்கிறார். அதை அவர் நம்புவது மட்டுமல்ல, அணியில் உள்ள மற்றவர்களும் நம்புகிறார்கள் போல’’ என்பது போல் LP-ன் புகார் நீண்டது.

சர்வைவர்- 21
சர்வைவர்- 21

நிற்க. லட்சுமி பிரியா சொல்லும் இந்தப் புகாரை ஏற்கெனவே, எங்கேயோ கேட்டது மாதிரி இருக்கிறதா? யெஸ். அது நம்ம பார்வதியக்கா ஏற்கெனவே சொல்லியிருந்த புகார்தான். இந்த விஷயம் மட்டுமல்ல, வேடர்கள் அணி பற்றி பார்வதி சொன்ன பல விஷயங்கள் இப்போது நிரூபணமாகிக் கொண்டிருக்கின்றன. என்னவொன்று, பார்வதி அதை அலட்டலாக சொல்லியதால் நகைச்சுவையாகவும் எரிச்சலாகவும் கவனிக்கப்பட்டது.

லட்சுமிபிரியாவின் புகாரை மிக எளிதாக கையாண்டார் ஐஸ்வர்யா. “ஆட்ட சமயத்தில் உடனே முடிவெடுக்க வேண்டிய அவசியம் இருந்தது. ‘நான் செல்கிறேன்’ என்று சொன்னதை யாருமே ஆட்சேபிக்கவில்லை. எனவே சென்றேன். இதில் என்ன தவறு?’’ என்று அவர் கேட்பதும் நியாயமே. உண்மையில் அணித் தலைவரான நந்தாதான் இதை திறமையாக ஒருங்கிணைத்திருக்க வேண்டும். (physical task என்றால் லட்சுமிபிரியா கலந்து கொள்ள முன்வருவதில்லை என்று சொன்னவரும் இதே நந்தாதான்).

ஆனால், இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உடல் வலிமை சார்ந்த போட்டி என்பதால் லட்சுமிபிரியாவை விடவும் ஐஸ்வர்யாதான் திறமையாக விளையாடுவார் என்பது வெளிப்படை. ஆனால் அணியின் வெற்றியை விடவும் தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதுதான் லட்சுமி பிரியாவுக்கு பெரிதாகத் தெரிகிறது. ஆனால் இதைப்பற்றி அவர் புறணி பேசாமல், அணியின் முன்னால் வெளிப்படையாக விவாதித்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

லட்சுமிபிரியாவின் புகாரை அம்ஜத்தும் வழிமொழிந்தார். “இரண்டாவது சுற்றிலும் இனிகோவே மறுபடியும் கலந்து கொள்வதாக இருந்தது. ஐஸ்வர்யாதான் இந்த முடிவை எடுத்தார். இனிகோ சோர்வடைந்திருக்கக்கூடும் என்பதால் நான் செல்வதாக சொன்னேன்” என்று தனக்கு நிகழ்ந்த ஓரவஞ்சனையைப் பற்றி அம்ஜத்தும் இணைந்து புலம்பினார். ஆனால் இது குறித்து இனிகோ பிறகு சொன்ன கருத்து வேறாக இருந்தது.

“இனிமே போட்டில கலந்துக்கணும்னா.. நான் போறேன்னு கையைத் தூக்கிடுங்க... கேட்டாலும் கிடைக்காது. அடிச்சுப் புடுங்கணும்” என்று நாராயணன் சொன்னதை ஆமோதித்தபடி வேடர்கள் அணி கலைந்தது.

ஒருவகையில் நாராயணன் சொல்வதுதான் சரி. ‘சர்வைவர்’ என்பதின் ஆதார பொருளே அதுதான். ‘வலிமையுள்ளது எஞ்சும்’. இனியாவது வேடர்கள் அணியில் குழப்பமில்லாமல் போட்டியாளர்களின் தேர்வு நடக்குமா?

பார்த்துடுவோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism