Published:Updated:

சர்வைவர் - 23|அசத்திய பார்வதி… கடுப்பில் காயத்ரி... மொத்தமாக எலிமினேட் ஆன ராம்!

சர்வைவர் - 23 |

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 23-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 23|அசத்திய பார்வதி… கடுப்பில் காயத்ரி... மொத்தமாக எலிமினேட் ஆன ராம்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 23-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:
சர்வைவர் - 23 |

உலகமெங்கிலும் உள்ள பார்வதி ரசிகர்கள், ‘ஸ்வீட் எடு, கொண்டாடு’ என்று மொமன்ட்டுக்கு நிச்சயம் போயிருப்பார்கள். ஆம், தலைவி பார்வதி தன் அசாதாரண திறமையை உலகுக்கு நிரூபித்த மகத்தான தருணம்தான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். மூன்றாம் உலகத்தில் நடைபெற்ற மிகச் சிரமமான போட்டியில் அவர் வெற்றி பெற்று வாகை சூடினார்.

அவரிடம் தோற்றுப் போன ராம் நிரந்தரமாக எலிமினேட் ஆனார். “பேசிக்கலி... நல்ல பையன்தாம்ப்பா. ஆனா, ஏதோ ஒரு பிரச்னை இவன் கிட்ட இருக்கு” – இதுதான் ராமைப் பற்றி யோசிக்கும் போது தோன்றும் ஒருவரி சித்திரம்.

சர்வைவர் 23-ம் நாளில் நடந்தது என்ன?

சர்வைவர் - 23 | அர்ஜுன்
சர்வைவர் - 23 | அர்ஜுன்

ட்ரைபல் பஞ்சாயத்தில் காடர்கள் அணி கலைந்து சென்ற பிறகு, சர்வைவர் சம்பிரதாயப்படி ராமை தனியாக அழைத்த அர்ஜூன் “எந்தப் பிரச்னையும் உங்க கிட்ட இல்லாமலா இத்தனை பேரும் உங்களுக்கு எதிரா வாக்களிச்சிருப்பாங்க?” என்று கேட்டதில் ஆதாரமான லாஜிக் உள்ளது. அதற்கு நிதானமாக பதில் சொல்ல ஆரம்பித்தார் ராம்.

பல நபர்களிடம் உள்ள பழக்கம் இது. ஒரு பிரச்னையின் உள்ளே இருக்கும் நேரத்தில் அவர்களால் சுயபரிசீலனையுடன் நிதானமாக சிந்திக்க முடியாது. ஆனால் அது எப்படியோ ஒரு முடிவுக்கு வந்து வெளியே வந்தவுடன்தான் ‘ச்சே... நம்ம மேலதான் தப்பு... நாம அப்படி பண்ணியிருக்க கூடாதுல்ல’ என்றெல்லாம் யோசித்து தெளிவுக்கு வருவார்கள்.

ராமுக்கும் இதுவே நிகழ்ந்தது. தான் ஆட்டத்தில் இருந்து எலிமினேட் ஆகி விட்டோம் என்றவுடன் அவர் சற்று சமநிலைக்கு வந்திருக்க வேண்டும். “காயத்ரியுடன் கூட்டணி அமைத்ததுதான் நான் முதலில் செய்த பெரிய தவறு. அதுதான் தொடர்ச்சியாக எனக்குப் பல பின்னடைவுகளைத் தந்தது. காயத்ரி எனக்கு துரோகம் செய்து விட்டார்” என்பதுபோல் ராம் விளக்கம் தந்தார். ‘துரோகம்' என்கிற வார்த்தையை மைண்டில் ஃபிக்ஸ் செய்து கொண்ட அர்ஜூன் ‘இது பின்னாடி உபயோகப்படும்’ என்று அந்த வார்த்தையை பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“கூடாரம் அமைக்கும் பிரச்னையில் காயத்ரிக்கு ஒரு பாலமாகத்தான் நான் செயல்பட்டேன்” என்ற ராம் “விஜயலட்சுமி ஜாலியாப் பேசுவாங்க... ஆனா சமயத்தில வார்த்தைகளை விட்டுடுவாங்க. என்னை ‘செல்ஃபிஷ்’ன்னு சொன்னாங்க. நான் கேமரா கன்டென்ட்டுக்காக சில விஷயங்களை செய்றேனாம். சர்வைவர் நிகழ்ச்சில கன்டென்ட் கொடுத்து பிழைக்க முடியுமா... நீங்களே சொல்லுங்க.?” என்றெல்லாம் தெளிவாகவே பேசினார் ராம். பார்க்கவே சந்தோஷமாகத்தான் இருந்தது.

சர்வைவர் - 23 |
சர்வைவர் - 23 |

“ஓகே... இன்னொரு வாய்ப்பு வந்தா ஏத்துப்பீங்களா?” என்று அர்ஜூன் கேட்டதும் ‘அய்யோ சொல்லுங்க... சர்வைவருக்காக என் உடல், பொருள், ஆவியைத் தியாகம் செய்ய தயாரா இருக்கேன்’ என்று ராம் உற்சாகம் ஆனதும் ‘மூன்றாம் உலகம்’ பற்றிய விஷயத்தைச் சொல்லி வழியனுப்பி வைத்தார் அர்ஜுன்.

‘குடிகாரன் பேச்சு.. விடிஞ்சா போச்சு’ என்கிற பழமொழிக்கு ஏற்ப, ட்ரைபல் பஞ்சாயத்தில் தெளிவாகப் பேசிய ராம், மறுநாள் காலை மூன்றாம் உலகத்திற்கு சென்றவுடன் மறுபடியும் பாயைப் பிறாண்ட ஆரம்பித்து விட்டார். மூன்றாம் உலகத்திற்கு செல்பவர்களுக்கு மூன்று நாட்கள் கழித்துதான் ஒரு மாதிரியாக மனநிலை சரிய ஆரம்பிக்கும். ஆனால் ராமுக்கு அங்கு காலடி எடுத்து வைத்ததுமே மூளை குழம்ப ஆரம்பித்து விட்டது போல.

“யாராவது இருந்தா வாங்கடா டேய்... ஆளே இல்லாத கடைல தலைவர் பதவியா? தனியாகத் தவிக்கின்றேன்…’’ என்று புலம்பல் வசனமும் சினிமாப்பாட்டுமாக அனத்த ஆரம்பித்து விட்டார். என்ன விஷயம் என்றால், அவர் புலம்பிய இடத்திற்கு அருகில்தான் ஒரு கூடாரம் இருந்தது. உள்ளே பார்வதியும் காயத்ரியும் படுத்துக் கொண்டிருந்தார்கள். ராம் நிச்சயம் அதைப் பார்த்திருப்பார். ஆனால் பார்க்காதது போலவே அவர் நெடுநேரம் புலம்பியது ஏன் என்பதை இதுவரை புரிந்து கொள்ள முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்கள் எழுந்து வந்து தன்னை விசாரித்து வரவேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? ராம் அடிப்படையில் நல்லவர் என்றாலும் அவரிடம் ஆதாரமாக ஏதேவொரு மனக்கோணல் உள்ளதாகத் தோன்றுகிறது.

“அய்யோ... தூக்கத்தைக் கெடுக்கவே வந்திருக்கான். ஏன் உள்ள வராம அங்கயே நின்னு புலம்பிட்டு இருக்கான்... நெஜமாவே லூஸாயிட்டானா... இல்ல நடிக்கிறானா... அவனா வரட்டும்... காத்திருப்போம்” என்று காயத்ரியும் பார்வதியும் எழாமலேயே படுத்திருந்தனர். ‘அவன் வரட்டும்... வெச்சு செய்யறேன்’ என்று கறுவிக் கொண்டார் பார்வதி.

சர்வைவர் - 23 |
சர்வைவர் - 23 |

ஒரு கட்டத்தில் ராமின் புலம்பலை தாங்கிக் கொள்ள முடியாமல் செயற்கையாக இருமினார் பார்வதி. அப்போதுதான் அந்த உலகில் இரண்டு ஜீவன்கள் இருப்பதை கண்டு கொண்ட ராம் “அடடே.. எப்படி இருக்கீங்க?” என்று கூடாரத்தின் உள்ளே வந்து விசாரித்தார். (உலக நடிப்புடா சாமி!).

ராமுடன் காயத்ரி பேச விரும்பவில்லை. முதலில் நண்பன் போல் இருந்து விட்டு பிறகு ட்ரைபல் பஞ்சாயத்தில் தனக்கு எதிராக செயல்பட்டதால் அவரால் ராமை மன்னிக்க முடியவில்லை. ஆனால் பார்வதி இதை எளிதில் விட்டு விடுவாரா? ‘நாட்டாமை வேலை பண்ணி ரொம்ப நாளாச்சு. இன்னிக்கு நமக்கு நல்ல என்டர்டெயின்மென்ட் மாட்டுச்சு’ என்பது போல் இரண்டு பக்கமும் உசுப்பி பிரச்னையை எரிய விட்டார்.

“காயத்ரி எலிமினேட் ஆனதில உங்களுக்கு வருத்தமா?” என்று பார்வதி பஞ்சாயத்தை ஆரம்பிக்க, அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு ‘ஆம்’ என்றார் ராம். “அப்ப எதுக்கு விஜயலட்சுமி நல்ல லீடரா இருப்பாங்கன்னு சொன்னீங்க” என்று அல்வா மாதிரி பிரச்னையை பார்வதி கிளற ஆரம்பிக்க, வேறு வழியில்லாமல் காயத்ரியும் இதில் குதிக்க வேண்டியிருந்தது.

கூடாரம் அமைப்பதில் ஏற்பட்ட பிரச்னை, காயத்ரி கோபித்து தனியாகச் சென்றது, ராம் செய்த சமாதானம், பின்பு அணிக்குத் திரும்பி காயத்ரியின் கோபத்தைப் பற்றி ராம் சொன்னது, “உன்னைத்தான் அங்க போய் சொல்ல வேணாம்னு சொன்னேன்ல?” என்று இதற்கு காயத்ரி கோபப்பட்டது போன்ற ஆதிகாலத்து சமாச்சாரங்களை மறுபடியும் மண்ணில் இருந்து தோண்டி எடுத்து உணவுக்குப் பதிலாக மென்று கொண்டிருந்தார்கள்.

சர்வைவர் - 23 |
சர்வைவர் - 23 |

காயத்ரியிடம் இப்போது நல்ல பெயர் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ராம் ‘அதைச் சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு.. என்னை யாரும் தடுக்காதீங்க’ மோடிற்கு சென்று, “காயத்ரியைப் பத்தி தப்பா பேசினாங்க. ஆனா யாருன்னு சொல்ல மாட்டேன்” என்று ஆரம்பிக்க ‘‘இவ்ளோ சொல்லிட்ட ஆளு யாருன்னு சொல்லு ப்ரோ” என்று தூண்டி விட்டார் பார்வதி. (‘சிண்டு முடியறதில நம்மளையே மிஞ்சிடுவாங்க போல’ என்று சர்வைவர் டீம் மகிழ்ந்திருப்பார்கள்).

“ஆமாம்.. பாரு.. நீங்க ஒரு லெட்டர் எழுதி வேடர்களின் மீதே அம்பு மழை விட்டீங்களாமே?” என்று ராம் கேட்க “ஆமாம்... யாரு கிட்ட... கம்ப்ளீட்டா அவங்களை கழுவி எடுத்துட்டோம்ல... லெட்டரை படிச்சிட்டாய்ங்களா. அப்படியே ஆடிப் போயிருப்பாங்களே” என்று சூனாபானா கணக்காக உற்சாகம் ஆனார் பார்வதி.

போட்டி பற்றிய அறிவிப்பு வந்தது. யாராவது இரண்டு பேர் அந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். “வாங்க...மூன்றாம் உலகம் எப்படியிருக்கு?” என்று வரவேற்றார் அர்ஜூன். “ரொம்ப ஜாலியா இருக்கோம் சார்.. காயத்ரிக்கும் எனக்கும் நல்லா செட் ஆயிடுச்சு.. இங்க ரொம்ப நிம்மதியா இருக்கேன்” என்று உற்சாகமாக சொன்னார் பார்வதி. (‘பத்து ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டு வீடு கட்டி செட்டில் ஆகலாம்னு இருக்கேன்’ என்று மட்டும்தான் அவர் சொல்லவில்லை). ஒரு சிலர்தான் தங்களுக்கு கிடைத்த தண்டனையையே பரிசாக மாற்றிக் கொள்ளும் திறமை படைத்தவர்கள்.

“ஏன் ராம்... அப்படி புலம்பினீங்க... என்னாச்சு..?” என்று நமட்டுச் சிரிப்புடன் விசாரித்தார் அர்ஜூன். “தீவுல யாரும் இல்லைன்னவுடனே ஒரு மாதிரி பைத்தியம் பிடிக்கற மாதிரி ஆயிடுச்சு” என்று தன் ‘வெள்ளந்தி’ நடிப்பை ஆரம்பித்தார் ராம். “பக்கத்துலதானே அவங்க இருந்தாங்க பார்க்கலையா?” என்ற கேள்விக்கு ராம் நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பினார்.

இப்போது சரியான சமயத்தில் பாக்கெட்டில் பத்திரப்படுத்தியிருந்த வார்த்தையை எடுத்த அர்ஜூன், “காயத்ரி உங்களுக்கு துரோகம் பண்ணிட்டாங்கன்னு சொன்னீங்களே” என்று போட்டுக் கொடுக்க பதில் அளிக்க முடியாமல் திணறினார் ராம்.

சர்வைவர் - 23 |
சர்வைவர் - 23 |

“ஓகே... போட்டிக்குள்ள போகலாம். யாராவது ரெண்டு பேர்தான் விளையாடணும். காயத்ரி ஏற்கெனவே ரெண்டு முறை போட்டி போட்டு ஜெயிச்சிருக்காங்க. அவங்களை மறுபடியும் விளையாடச் சொல்றது முறையானதல்ல. ஆகவே பார்வதியும் நீங்களும் விளையாடணும்” என்று ராமிடம் அர்ஜூன் சொன்னதும் ராமும் பார்வதியும் ஒப்புக் கொண்டார்கள்.

சர்வைவர் என்கிற ஆங்கில சொல்லை தனித்தனி எழுத்துக்களாக கொண்ட மரத்துண்டுகள் இருக்கும். அதைச் சரியான வரிசையில் அடுக்க வேண்டும். ஆனால் அது அத்தனை எளிதல்ல.

எதிரே இரண்டு பக்கமும் சாயும் பலகை ஒன்று இருக்கும். அந்தப் பலகையின் ஒருமுனையில் உள்ள கயிற்றால் நேராகப் பிடித்துக் கொண்டு எதிர்முனையில் இந்தத் துண்டுகளை அடுக்க வேண்டும். சிறிது தூரத்தில் உள்ள மர பெஞ்ச்சில் இருந்து இந்தத் துண்டுகளை எடுத்து வர வேண்டும். அனைத்து எழுத்துக்களையும் அடுக்கி முடித்த பிறகு பெஞ்ச்சை யார் தொடுகிறார்களோ அவரே வெற்றி பெற்றவர்.

இந்தச் சிக்கலான விளையாட்டை ஆடுவதற்கு நிதானம், கவனக்குவிப்பு, போன்ற விஷயங்கள் வேண்டும். அடுக்கிய மரத்துண்டுகள் நடுவில் சாய்ந்து விழுந்து விட்டால் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

சர்வைவர் - 23 |
சர்வைவர் - 23 |

போட்டி ஆரம்பித்தது. பார்வதியை விடவும் ராம் உயரமாக இருந்ததால் அவருக்கு ஒரு அட்வான்டேஜ் இருந்தது. கையை அதிகமாக நீட்டி துண்டுகளை அடுக்க முடியும். முதல் சுற்றில் மளமளவென்று முன்னேறினார் ராம். பார்வதி நிதானமாக இதைச் செய்து கொண்டிருந்தார்.

மிகவும் சிரமப்பட்டு துண்டுகளை அடுக்கிய ராம், வரிசை ஏறத்தாழ நிறைவு பெறும் நேரத்தில் அவசரப்பட்டதால் துண்டுகள் விழுந்தன. எரிச்சலிலும் ஏமாற்றத்திலும் இவர் கத்தியதால், பார்வதியின் கவனம் குலைந்து அவருடைய துண்டுகளும் விழுந்தன. ‘சத்தம் போடாம விளையாடுங்க’ என்று குழந்தைகளை அதட்டுவது போல் சொன்னார் அர்ஜூன்.

மறுபடியும் ராம் வேகமாக முன்னேறினார். ஆனால் இரண்டாம் முறையும் துண்டுகள் சரிந்து விழுந்தன. கஜினி முகமது போல் நான்காவது முறையும் படையெடுத்தார் ராம். ஆனால் இரண்டாம் சுற்றில் இன்னமும் நின்ற பார்வதி, மிக மிக நிதானமாக, அடி மேல் அடி வைத்து மிக கவனமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

நான்காவது முறையும் துண்டுகள் கீழே விழுந்ததால் மிகவும் அதிருப்தியுற்ற ராம் அப்படியே திகைத்து நின்று விட்டார். “கேம் இன்னமும் முடியல ராம்” என்று காயத்ரி எச்சரிக்கை தந்தாலும் ராமால் செயல்பட முடியவில்லை.

“என்னது பார்வதி பொறுமையா இருந்தாரா?” என்று நாம் ஆச்சரியப்பட்டாலும் அதுதான் உண்மை. தனது பொறுமை, கவனம் ஆகிய அத்தனையையும் ஒன்றாக குவித்துக் கொண்ட பார்வதி, துண்டுகளின் மீது ஃபோகஸ் செய்து ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைத்து ஒருவழியாக கடைசித் துண்டையும் அடுக்கி வைத்து பின்னால் வந்து பென்ச்சைத் தொட்டவுடன் ஹே… ஹே... வெற்றி! வெற்றி!

சர்வைவர் - 23 |
சர்வைவர் - 23 |

அர்ஜுனால் கைத்தட்டுவதை நிறுத்த முடியவில்லை. பார்வதியிடமிருந்து அப்படியொரு அர்ப்பணிப்பு உணர்வு வெளிப்பட்டிருந்தது. “யாரைப் பார்த்துடா கிண்டல் பண்ணீங்க... பார்த்தீங்களா… தனியா நின்னு ஜெயிச்சுட்டேன்” என்று பிறகு பெருமை பேசினார் பார்வதி. ‘தனியா நின்னு ஜெயிச்சேன்’ என்று அவர் பீற்றுவதுதான் பிரச்னை. இதே அர்ப்பணிப்பு டீமாக செயல்படுவதிலும் இருக்க வேண்டும்.

இரண்டே முறை செய்து பார்வதி வெற்றி பெற்று விட நான்கு முறை முயன்றும் ராமால் ஏன் வெற்றி பெற முடியவில்லை? அவர் துண்டுகளை அடுக்குவதை நேர்த்தியாக செய்யவில்லை. அவற்றில் இடைவெளி இருந்ததால் ஒவ்வொரு முறையும் எடை தாங்காமல் விழுந்தது. இது மட்டுமல்லாமல் ‘எங்கே பார்வதி முந்தி விடுவாரோ’ என்கிற பதற்றத்தில் வேகவேகமாக செயல்பட்டார். பார்வதியை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தார். இதுவும் அவரது தோல்விக்கு காரணம்.

இந்தப் போட்டியை திகில் படம் மாதிரி பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி, “ராமுக்குத் தெரியும்... இது மிக நிதானமா செய்ய வேண்டிய போட்டி. ஆனா, ஏன் வேகமா செஞ்சான்னு தெரியல. அவன் ஏன் இப்படில்லாம் பண்றான்னு புரியல. மத்தபடி அவன் நல்லவன்’’ என்று விமர்சித்துக் கொண்டிருந்தார்.

இதை நடைமுறை வாழ்க்கையிலும் பார்க்கலாம். பொறுமையாகவும் நிதானமாகவும் செய்ய வேண்டிய வேலைகளை பெண்களே சிறப்பாக செய்து முடிப்பார்கள். ஆண்கள் சட்டென்று நிதானம இழந்து தூக்கிப் போட்டு விடுவார்கள்.

போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு வரை பார்வதியும் காயத்ரியும் இணைபிரியாத தோழிகளாக இருந்தார்கள். ஆனால் இந்த நட்பு மேலும் நீடிக்குமா எனத் தெரியவில்லை. காரணம், ‘ராமுக்கும் பார்வதிக்கும் இடையில்தான் போட்டி’ என்று அறிவிக்கப்பட்டதும் “ஹப்பாடா.. பார்வதியிடமிருந்து விடுதலை கிடைச்சது’ என்கிற மாதிரி காயத்ரியிடம் வெளிப்பட்ட முகபாவத்தை பார்வதியால் உணர முடிந்ததாம்.

சர்வைவர் - 23 |
சர்வைவர் - 23 |


“எலிமினேட் ஆயிட்டீங்க... என்ன சொல்ல விரும்பறீங்க ராம்?” என்று கேட்டார் அர்ஜூன். “இந்த ஆட்டம் எனக்கு பல விஷயங்களைக் கற்றுத் தந்தது. பல நல்ல நினைவுகள் இருக்கு. ஆனா நான்தான் ரொம்ப கவனக்குறைவா, அலட்சியமா இருந்துட்டேன்” என்ற ராம் தன் தலைத்துணியை நெருப்பில் போடுவதற்கு முன் முத்தமிட்ட காட்சி நெகிழ்வை ஏற்படுத்தியது.

மூன்றாம் உலகத்தில் மறுபடியும் காய்த்ரி மற்றும் பார்வதியின் சாம்ராஜ்யம்தான். ஆனால் முன்பிருந்த அதே நட்பு இப்போதும் இருக்குமோ?

பார்த்துடுவோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism