Published:Updated:

சர்வைவர் - 25 | பார்வதியின் `சைக்கோ' ஃப்ரெண்ட்ஸ்... ஆன்ட்டி கிளைமாக்ஸில் வெற்றி பெற்ற காடர்கள்!

சர்வைவர் - 25 |

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 25-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 25 | பார்வதியின் `சைக்கோ' ஃப்ரெண்ட்ஸ்... ஆன்ட்டி கிளைமாக்ஸில் வெற்றி பெற்ற காடர்கள்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 25-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 25 |

‘ரிவார்ட் சேலன்ஞ்’தான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். உண்மையிலேயே இந்தப் போட்டி பரபரப்பாகவும், பார்க்க மிக சுவாரஸ்யமாகவும் இருந்தது. மிகவும் பின்தங்கியிருந்த காடர்கள் அணி, ஆன்ட்டி க்ளைமேக்ஸ் மாதிரி ஒரு கட்டத்தில் சட்டென முன்னேறி வெற்றி பெற்றார்கள். ‘மூன்றாம் உலகத்தில்’ பார்வதியின் குரலைக் கேட்ட பின்புதான் நிம்மதியாக இருந்தது. தனது ‘சைக்கோ ஃப்ரெண்ட்ஸ்’களைப் பற்றி அவர் விவரித்த விதம் இருக்கிறதே... அடடா! தான் ‘சிங்கிளாக’ இருக்கும் விஷயத்தை உலகத்துக்கு தெரிவித்திருக்கிறார் பார்வதி. சைக்கோ அல்லாதவர்கள் முயற்சி செய்யவும்.

இதற்கிடையில் லேடி காஷின் வீடியோ ஒன்று இணையத்தில் நேற்று வைரல் ஆனது. அவர் இப்போது சர்வைவர் போட்டியில் இல்லை. “நான் எலிமினேட் ஆகவில்லை... ஆனால் போட்டியில் இருந்து வெளியேறவும் இல்லை” என்று மையமாக தெரிவித்த அவர் “நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எனக்கு இழைத்த அநீதி குறித்து துணிச்சலாக சொல்வேன். காத்திருங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’’ என்பது போல் அந்த வீடியோவில் சொல்லியிருக்கிறார். முழு விவரங்கள் வரட்டும்... காத்திருப்போம்.

ஓகே... சர்வைவர் 25-வது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

சர்வைவர் - 25 |
சர்வைவர் - 25 |

“ரெண்டு கேம்ல அவங்க ஜெயிச்சுட்டாங்க. இந்த முறை நாங்க விட்டத பிடிச்சே ஆகணும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார் உமாபதி. காடர்கள் அணியை ஒன்று கூட்டிய விக்ராந்த் “ரிசல்ட் பத்தி கவலைப்படாதீங்க... நம்மளோட நூறு சதவிகித உழைப்பைத் தரணும். அவங்களை விட நாம உடல்ரீதியா பலவீனமா இருக்கோம்னு தோணுது. மூணு வேளையும் சாப்பிடணும். விஜி மட்டுமே சமைக்கணும்னு இல்ல. எல்லோரும் சேர்ந்து சமைப்போம். இந்த வாரம் நாம ட்ரைபல் கவுன்சிலுக்கு போகக்கூடாதுன்றதை மட்டும் மனசுல வெச்சுக்கங்க” என்று வீரயுரை ஆற்றினார்.

காடர்கள் அணியின் மிகப்பெரிய பலமே, உடல்ரீதியாக வலிமையாக உள்ள உமாபதிதான். தீவுக்குள் சென்ற அவர் வேரைப் பிடுங்கி கிழங்கை அநாயசமாக எடுத்தார். பெண்கள் கூட்டணி இதை முயன்று பார்த்து முதலில் முடியாவிட்டாலும் பிறகு சிரமப்பட்டு எடுத்தார்கள். இதற்கு இடையில் காட்டப்பட்ட ஒரு வீடியோ ஃபுட்டேஜில் ஒரு குரங்கு தன் குட்டியை மடியில் வைத்துக் கொண்டு கண்களை மூடி மோனநிலையில் அமர்ந்திருந்த காட்சி, பார்க்க அருமையாக இருந்தது.

இன்று வனேசாவின் பிறந்தநாளாம். எங்கிருந்தோ மலர்க் கொத்து ஒன்றை சம்பாதித்துக் கொண்டு வந்த உமாபதி, தான் கொடுக்க தயங்கி “டீம் லீடர் நீங்கதான் கொடுக்கணும்” என்று சொல்லி விக்ராந்த்திடம் தர, அவரும் தர வெட்கப்பட்டு “வாங்க அணியா... சேர்ந்து கொடுப்போம்” என்று வனேசாவுக்கு வாழ்த்து சொல்லி கொண்டாடினார்கள். “என் குடும்பத்தின் நடுவில் இருப்பது மாதிரியே உணர்கிறேன்” என்று சென்டிமென்ட் கூட்டினார் வனேசா. (இன்னுமா விஜி கூட சண்டை ஆரம்பிக்கலை?!).

வேடர்கள் அணி. “பசிக்குது... உப்பு… சப்பு இல்லாம சாப்பிட்டு நாக்கு செத்துடுச்சு” என்று களைத்துப் போன முகத்துடன் சொன்ன நந்தாவைப் பார்க்க பாவமாக இருந்தது. “இந்த வாரம் ரிவார்டு ஜெயிக்கலாம். கவலைப்படாதீங்க” என்று ஆறுதல் சொன்னார் லட்சுமி. “இப்பத்தான் நாம டீமா உணர்றோம்ல... யாரையும் எலிமினேட் பண்ணத் தோணலை” என்று லட்சுமி சொன்னது ஆச்சரியம். என்னதான் போட்டி என்றாலும் அதையும் மீறி நட்புணர்ச்சி சமயங்களில் தன்னிச்சையாக வந்து விடுகிறது.

சர்வைவர் - 25 |
சர்வைவர் - 25 |

‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்று அழைத்த அர்ஜூன், காடர்கள் அணியின் புதிய தலைவரான விக்ராந்திடம் “எப்படி போயிட்டிருக்கு...” என்று விசாரிக்க “பெண்கள் மட்டும் சமைக்கணும்னு இல்லாம ஆண்களும் சமைக்க முடிவு செஞ்சிருக்கோம். எங்க டீம்ல வேறெந்த பிரச்னையும் இல்ல. பூச்சிக்கடி இருக்குதான். அது கூட வாழப் பழகிட்டோம்” என்று பதில் சொன்னார்.

வேடர்கள் அணியைப் பற்றி விசாரிக்க “நானும் லட்சுமியின் ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோம்” என்று புன்னகைத்தார் ஐஸ்வர்யா. அம்ஜத்தின் எடை கணிசமாக இறங்கியிருந்தது. “பசிக்குது சார்” என்று அந்த இடத்திலும் பரிதாபமாக சொன்னார் நந்தா. “உங்க கிட்டயாவது மசாலாப் பொருட்கள் இருக்கு. எதிர் டீம் கிட்ட அதுவும் இல்லை” என்று அர்ஜூன் சொன்னதும்.. “ஆமாம் சார்... அவங்க நிலைமை எங்களை விட மோசம்தான்’ என்று ஒப்புக் கொண்டார் நந்தா.

வனேசாவின் பிறந்தநாளை சட்டென்று நினைவுகூர்ந்த அர்ஜூன், அவருக்கு வாழ்த்து சொல்லி ஆச்சர்யகரமாக ஒரு பெரிய கேக் வெட்ட ஏற்பாடு செய்தார். கேக்கைப் பார்த்ததும் அனைவரது கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன. வனேசா வெட்டி முடித்ததும் அனைவரின் கண்களும் கேக் துண்டின் மீது இருந்ததைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அத்தனை பசி போல. அவசரம் அவசரமாக கேக்கை விழுங்கினார் நந்தா. “வனேசா... உங்களாலதான் இது கிடைச்சது. மிக்க நன்றி... அடுத்த மாசமும் பிறந்த நாள் வருதா?” என்று அனைவரும் கேட்டது வனேசாவுக்கு மறக்க முடியாத பிறந்த நாள் வாழ்த்தாக அமைந்திருக்கும். ‘வனேசா... யாரை இப்போ மிஸ் பண்றீங்க?’’ என்று அர்ஜூன் கேட்டவுடன் இடைமறித்த உமாபதி “ராமா இருக்கும்” என்று சொன்னது சுவாரசியமான குறும்பு.

ரிவார்ட் சேலன்ஞ் விதிமுறைகளை விளக்க ஆரம்பித்தார் அர்ஜூன். அதைப் பார்க்கும் போது நமக்கே மூச்சு திணறியது. அத்தனை கடினமான தடைகள். உமாபதி போன்றவர்கள் ஓகே. பெண்கள் இதை எப்படி செய்வார்கள் என்று சந்தேகமாக இருந்தது.

சுமார் 15 அடி உயரத்தில், A வடிவத்தில் பிரமிடு மாதிரி இருக்கும் சரிவான இரண்டு மரப்பலகையின் மீது ஏறி மறுமுனையில் சறுக்கி வர வேண்டும். பிறகு பிரம்புகளால் வலை போல் அமைக்கப்பட்டிருக்கும் தடைக்குள் புகுந்து வர வேண்டும். அடுத்ததாக ஒரு மேடையின் மீது ஏறி கட்டைக்கால் மூன்றின் மீது அடி மீது அடி வைத்து செல்ல வேண்டும். இதில் நான்காவது நிலைதான் முக்கியம். ஒரு கனமான மரப்பலகையைத் தூக்கினால் மூன்று டார்கெட்டுகள் தெரியும். தரப்பட்டிருக்கும் கவணால் அந்த மூன்றையும் முதலில் யார் வீழ்த்துகிறாரோ, அந்த அணி வெற்றி பெறும்.

வேடர்கள் அணியில் ஒருவர் எக்ஸ்ட்ராவாக இருந்ததால், மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த ரவி போட்டியில் இருந்து விலகி நின்றார். “பசிக்குது சார்” என்று பரிதாபமாக சொல்லிக் கொண்டிருந்த நந்தா, பிரமிப்பூட்டும் வகையில் மரப்பலகை சரிவில் மளமளவென ஏறி நின்று மற்றவர்கள் ஏறுவதற்கும் உதவி செய்தார். கடைசியில் வந்த அம்ஜத் தூக்கி விடுவதற்கு ஆள் இல்லாமல் சிரமப்பட்டாலும் கட்டையின் முனையைப் பற்றி ஏறி விட்டார்.

நல்ல வேளையாக அடுத்த பலகையில் கயிறு இருந்ததால் வேடர்கள் அணி மளமளவென முன்னேறிக் கொண்டிருந்தது. ஆனால் காடர்கள் அணியிலோ, முதல் பலகையிலேயே ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். விக்ராந்த்தின் விரல்களில் அடிபட்டிருந்ததால் அவர் கயிற்றைப் பிடித்து ஏற முடியாமல் சோர்ந்து விழுந்தார். இதைப் பார்த்து சோகமான உமாபதி “எங்க லீடர் கஷ்டப்படறத பார்த்தப்புறம் இந்தச் சவாலை எப்படியாவது ஜெயிக்கணும்னு உள்ளுக்குள்ள ஒரு வெறி வந்துடுச்சு” என்றார்.

சர்வைவர் - 25 |
சர்வைவர் - 25 |

அடுத்த நிலையான பிரம்பு வலையின் மீது மோதி உடைத்து வழியை ஏற்படுத்தினார் அம்ஜத். பிறகு மற்றவர்களும் சிரமப்பட்டு அவரைப் பின்தொடர்ந்தார்கள். அடுத்ததாக மேடையில் ஏறி மூன்று கட்டைக்கால்களை கடக்கும் பகுதியில் நந்தா எப்படியோ கடந்து விட்டாலும் பின்னால் வந்த லட்சுமியும் ஐஸ்வர்யாவும் சிரமப்பட்டார்கள்.

ஆனால், இந்தப் பகுதியை கடக்கும்போது காடர்கள் அணியின் விஜயலட்சுமி ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தார். அதாவது நின்ற நிலையில் வராமல், அமர்ந்த நிலையிலேயே ஒவ்வொரு கட்டையையும் அவர் தாண்ட, அதைப் பார்த்து வேடர்கள் அணியும் காப்பியடித்தது.

“அவிய்ங்க வேகமாப் போனாங்க... ஆனா, எங்காவது ஒரு இடத்துல ஸ்பீட் பிரேக்கர் வரும்னு எனக்குத் தெரியும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் உமாபதி. அவர் சொல்லுவதில் இருந்து அப்போதே தெரிந்து விட்டது, இதில் காடர்கள் அணி வெற்றி பெற்றார்கள் என்று. (இடையில் வரும் வீடியோக்களில் இம்மாதிரி வரும் க்ளூவை எடிட்டிங் டீம் தவிர்க்க வேண்டும்).

அடிக்க வேண்டிய மூன்று டார்கெட்டுகள் தெரிய வேண்டும் என்றால் ஒரு கனமான மரப்பலகையை தூக்கி, அது கீழே இறங்காதவாறு பிடித்துக் கொள்ள வேண்டும். அம்ஜத் தனியாக இழுத்து முடியாமல் இனிகோ மற்றும் நாராயணனை அழைக்க அவர்களும் வந்து இணைந்தார்கள். இதே போல் விக்ராந்தினால் தனியாக இழுக்க முடியாமல் போக பின்னாலேயே லேடி காஷ் வந்து உதவி செய்தார்.

இதுவரை உடல்வலிமையைக் கோரிய பகுதிகளைக் கடந்து விட்டாலும் கடைசிப்பகுதியை நின்று நிதானமாக செய்தால்தான் ஜெயிக்க முடியும்.

கவணில் கற்களை வைத்து அதிக விசை கொண்டு இழுத்து அடித்தாலும் அது டார்கெட் பக்கத்துக்கு செல்லவில்லை. முன்னாலேயே விழுந்தது அல்லது குறி தவறியது. இந்த நிலையில் இரு அணிகளும் போராடிக் கொண்டிருக்க டார்கெட்டை முதலில் அடித்து வீழத்தினார் உமாபதி. பிறகு வேடர்கள் அணியின் ஐஸ்வர்யாவும் அடிக்க முதல் சுற்றில் போட்டி சமனாகியது.

சர்வைவர் - 25 |
சர்வைவர் - 25 |

லட்சுமிபிரியாவின் முயற்சிகள் வீணாகியதால் ஐஸ்வர்யாவே தொடர்ந்து முயற்சி செய்தார். ‘Physical task’ என்றால் ஐஸ்வர்யாவே ஓடுகிறாரே’ என்று விமர்சித்த லட்சுமிக்கு இப்போது நிதர்சனம் புரிந்திருக்கும். அந்த அளவுக்கு ரியல் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புடன் வேகமாகவும் ஆக்ரோஷமாகவும் விளையாடிய ஐஸ்வர்யாவைப் பார்க்க பிரமிப்பாக இருந்தது. (வெல்டன் ஐஸ்வர்யா!).

காடர்கள் அணியில் அடுத்த டார்கெட்டை சரண் அடித்து விட பரபரப்பு கூடியது. இப்போது ஐஸ்வர்யாவும் இரண்டாவது டார்கெட்டை அடித்து போட்டியை மீண்டும் சமன் செய்தார். எனவே ஆட்டத்தில் சூடு பயங்கரமாக ஏறியது. ஐஸ்வர்யா எத்தனை சிரமப்பட்டு முயன்றாலும் முடியாமல் போனது. மூன்றாவது டார்கெட்டை சுட்டிப் பையன் சரண் அடித்து விட காடர்கள் அணி வென்றது. சோர்வுடன் நடந்து சென்ற ஐஸ்வர்யாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

இவ்வளவு நேரமும் பலகையைத் தாங்கி பிடித்திருந்தவர்களையும் பாராட்ட வேண்டும். பளுவைத் தாங்க முடியாமல் அவஸ்தைப்பட்டாலும் விடாமல் போராடினார் அம்ஜத்.

“போட்டி ஆரம்பிக்கற வரைக்கும் சோர்வாத்தான் இருக்கு. எப்படி பண்ணப் போறோம்னு உள்ளுக்குள்ள தயக்கமாகத்தான் இருக்கு. ஆனா ஆரம்பிச்சவுடனே எங்கிருந்தோ ஒரு வேகம் வந்துடுது.. இந்த உணர்வு நல்லாயிருக்கு” என்று சொன்ன விக்ராந்த்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. சாகசத்துக்குப் பிறகு கிடைக்கும் உடல் வலியில் ஒரு சுகம் இருக்கிறது. சிரமமான இந்த போட்டியில் தங்களின் கடினமான பங்களிப்பைத் தந்த பெண் போட்டியாளர்களை பிரத்யேகமாக பாராட்டினார் அர்ஜூன்.

“கவண் எறிதல் போர்ஷன்ல ஒருத்தர் மட்டுமே செஞ்ச மாதிரி தெரிஞ்சதே?” என்று சரியான பாயின்ட்டைப் பிடித்தார் அர்ஜூன். “ஐஸ்வர்யா அதுல ஒரு மாதிரியா செட் ஆயிட்டாங்க. அதனால அவங்களை அப்படியே விட்டுட்டோம்" என்று நந்தா தந்த விளக்கத்தில் லட்சுமிக்கான செய்தி இருக்கிறது.

வெகுமதி தரப்படும் நேரம். “உப்பு இருந்தா தாங்க சார்... பெட்ஷீட் வேணும். பூச்சிக்கடி தாங்கலை. ரிவார்ட் மேல போர்த்தி வெச்சிருக்கிற துணி கிடைச்சா கூட ஓகே” என்று பரிதாபமாக கெஞ்சினார் விக்ராந்த். அவர்கள் எதிர்பார்த்தது மாதிரியே பெட்ஷீட், தலையணை எல்லாம் கிடைத்தன. கூடவே Pancake, chocolate syrup கிடைத்தவுடன் இரண்டு அணிகளின் கண்களும் விரிந்தன. தோற்றுப் போன வேடர்கள் அணி அந்த உணவை ஏக்கமாக பார்த்தார்கள். “யப்பா சாமிகளா... ஏதாவது சீட்டு கொண்டு வந்து பாதியைப் பிடுங்கிடாதீங்க” என்று வேடர்கள் அணியிடம் ஜாலியாக சொன்ன விக்ராந்த், ‘கல்தோசையும் கெட்டி சட்னியும்’ கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும் என்று உள்ளுக்குள் நினைத்தாராம். (தமிழேன்டா!).

சர்வைவர் - 25 |
சர்வைவர் - 25 |

மூன்றாம் உலகம். ஒருவழியாக தலைவி பார்வதியின் தரிசனம் கிடைத்தது. அவரது காந்தர்வ குரல் காதில் தேனாக ஒலித்தது. கடாயில் மீதமிருந்த சோற்றை எடுத்து பரிதாபமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். (பாவிங்களா...)

“உன் பாய் ஃபிரெண்ட்ஸ் யாராவது உன்னை சாப்பிட கூட்டிட்டு போயிருக்காங்களா?’’ என்று பொழுது போகாத பொம்முவாக மாறிய பார்வதி, காயத்ரியை நோக்கி கேட்டு விட்டு “நான்லாம் பர்ஸே கொண்டு போக மாட்டேம்ப்பா..” என்று பீற்றிக் கொண்டார். (இதான் தெரிஞ்ச கதையாச்சே!). பிறகு தன் ‘சைக்கோ ஃபிரெண்ட்ஸ்’ கதைகளை விலாவாரியாக சொல்ல ஆரம்பித்தார் பார்வதி.

“+2 படிக்கும் போது ரொம்ப நாளா ஒருத்தன் என்னை ஃபாலோ பண்ணான். எனக்குப் பிடிக்கலை. மறுத்துட்டேன். அதுக்காக கஷ்டப்பட்டு எழுதிய என் ரெகார்ட் நோட்டை திருடிட்டான். இவன் பரவாயில்லை. இன்னொருத்தன் இருந்தான். மதுரைலயே நான்தான் சூப்பர் ஃபிகர் ஆச்சே. ஐயாயிரத்துக்கு பட்டுப்புடவை வாங்கி வீட்டுக்கு அனுப்பிச்சிட்டான்... எங்க அம்மாவுக்கு, அக்காவுக்கு எல்லாம் மெசேஜ் அனுப்ப ஆரம்பிச்சிட்டான். கருமம் பிடிச்சவனுக.. கைல கீறிக்கிறது, ரத்தக் கடிதம் அனுப்பறதுன்னு விதம் விதமா இந்த பாய்ஸ் டார்ச்சர் பண்ணுவாங்க” என்று பார்வதி டீடெய்லாக சொல்லிக் கொண்டிருந்த போது ‘என்னெல்லாம் சொல்றான் பாருங்க. கம்பி கட்டற கதையெல்லாம் சொல்றான்’ என்கிற வசனம்தான் நம் மைண்டில் ஓடியது.

“உன் கதையைச் சொல்லு” என்று பார்வதி கேட்டதும் தான் எதிர்கொண்ட சுருக்கமான காதல் கதையை காயத்ரி சொல்லி முடித்ததும் “ஒண்ணும் உப்பு சப்பே இல்லையே... என்னை மாதிரி நல்லா உறைப்பா இருக்க வேணாமா” என்கிற மாதிரி பதில் அளித்தார் பார்வதி.

சர்வைவர் - 25 |
சர்வைவர் - 25 |

ஒரு பெண் தன்னைக் காதலித்தே ஆக வேண்டும் என்கிற தீவிரத்துடன் ஆண்கள் செய்யும் அபத்தங்கள், வன்முறைகள் போன்றவற்றைப் பற்றி பெண்கள் உள்ளூற அஞ்சுவதை, அருவருப்பு கொள்வதை இவர்களின் உரையாடலில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. இதுதான் ஆண்களுக்கான செய்தி.

ஓகே.. இரண்டு அணிகள் போட்டியிடும் போது எந்தவொரு பார்வையாளனுக்கும் ஏதாவது ஒரு அணி மீது மனம் தன்னிச்சையாக பற்று கொண்டு விடும்.

அந்த வகையில் உங்களுக்குப் பிடித்த அணி எது? காடர்களா... வேடர்களா?

கமென்ட் பாக்ஸில் சொல்லுங்கள்!