Published:Updated:

சர்வைவர் - 29 | தவறிழைத்த சரணே தண்டனை தரலாமா... விஜயலட்சுமி வெளியேறியது நியாயமா?

சர்வைவர் - 29 |

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 29-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 29 | தவறிழைத்த சரணே தண்டனை தரலாமா... விஜயலட்சுமி வெளியேறியது நியாயமா?

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 29-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 29 |

இம்யூனிட்டி சேலன்ஞ்சில் வேடர்கள் அணி தோற்றதால் எலிமினேஷன் ஆபத்து சடங்கை அவர்கள் சந்தித்தார்கள். அணியில் இருந்து வெளியேற்றப்பட்டது யார்? அதில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம் என்ன? அதன் பின்னிருந்த காரணங்கள் என்ன? நேற்றைய எபிசோடின் ட்ரைபல் பஞ்சாயத்தில் நிறைய ஆச்சரியங்கள் காத்திருந்தன. என்னவென்று பார்ப்போம்.

சர்வைவர் 29வது நாளில் என்ன நடந்தது?

‘எலிமினேஷனுக்கு யாரை வெளியேற்றலாம்?’ என்கிற விவாதம் வேடர்கள் அணிக்குள் மும்முரமாக நடந்தது. புதிய வரவுகளான சரண் மற்றும் விஜயலட்சுமிதான் டார்கெட்டின் டாப் லிஸ்ட்டில் இருந்தார்கள். மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் உடல் ரீதியாக ரவியும் பலவீனமானவர்தான். ஆனால் அணிப்பாசத்தினால் அவரை யாரும் வெளியேற்ற வேடர்கள் நினைக்கவில்லை.

சர்வைவர் - 29 |
சர்வைவர் - 29 |

‘போன் உபயோகித்து தவறு செய்த சரணை வெளியேற்றலாம்’ என்பது நந்தாவின் உத்தேசம். ஆனால் டீம் லீடரான ஐஸ்வர்யா வேறு மாதிரியாக நினைக்கிறார். “சரண் ஒரு நல்ல ப்ளேயர். சமீபத்திய இம்யூனிட்டி சவாலில் அவருடைய பங்களிப்பு சிறப்பாக இருந்தது. எனவே அவர் இருந்தால் அணிக்கு பலமாக இருப்பார்”. ஐஸ்வர்யா இவ்வாறு கருதுவதில் ஆச்சரியமில்லை. விளையாட்டில் துடிப்புள்ள ஒருவர், தன்னைப் போல் இருக்கும் இன்னொருவரைத்தான் விரும்புவார்.

ஆனால் விஜயலட்சுமியால் உத்திகளை சிறப்பாக யோசிக்க முடியும் என்கிற கோணமும் இருந்தது. “உடல் வலிமையா, புத்தி கூர்மையா... எது தேவை?” என்கிற பட்டிமன்றத்தை ஆங்காங்கே ஆவேசமாக நடத்திக் கொண்டிருந்தார்கள்.

சரண்தான் பெரும்பான்மையாக டார்கெட் செய்யப்படுவார் என்பது விஜிக்குத் தெரியும். என்றாலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விஜி நினைக்கிறார். இதில் தவறில்லை. ‘சர்வைவர்’ என்கிற பொருளே அதுதான். எனவே “அணி பெரும்பான்மையாக என்ன முடிவு எடுக்கிறதோ.. அதற்கு நான் ஒப்புக் கொள்வேன். இந்த விளையாட்டில் நான் நீடிக்க விரும்புகிறேன்” என்று தெளிவாக தெரிவித்து விட்டார் விஜி.

இது மட்டுமில்லாமல் தன்னுடைய நிலைப்பாட்டை சரணிடமும் நேர்மையாக தெரிவித்து விட்டார். “உனக்கு எதிராக நான் வாக்களிக்கறதுக்கும் வாய்ப்பு இருக்கு” என்று அவர் வெளிப்படையாக சொன்னதை ஆட்சேபிக்காமல் ஏற்றுக் கொண்டார் சரண். போன் செய்து பிரச்னையில் சிக்கிக் கொண்டோமே என்கிற குற்றவுணர்வு அவருக்கு. என்றாலும் ‘’விஜியக்கா இப்படி செய்கிறாரே” என்கிற வருத்தமும் சரணிடம் உள்ளூற இருக்கிறது. எனவேதான் ‘’நான் முதுகில் குத்த மாட்டேன். இந்த அணிக்கு விசுவாசமாக இருப்பேன்’ என்று பிறகு அணி விவாதத்தில் சொன்னார்.

“யப்பா சாமிகளா... நான் யாருக்கும் துரோகம் பண்ண விரும்பலை. என்னை கெட்டவனா மாத்திடாதீங்க... ஆளை விடுங்க” என்று ஜாலியாக பதறினார் ரவி. தனது அணி பெரும்பான்மையாக என்ன நினைக்கிறதோ அதைப் பின்பற்றலாம் என்பது ரவியின் எண்ணம்.

சரணுக்கு ஆதரவாக ஐஸ்வர்யாவும் விஜிக்கு ஆதரவாக நந்தாவும் உரையாடினார்கள். ஒரு மாதிரியாக குழப்பமான நிலையில் இந்த அணி உரையாடல் நடந்து முடிந்தாலும் பெரும்பான்மை என்பது சரணுக்கு எதிராகவே இருந்தது. அதற்கு டீம் லீடர் ஐஸ்வர்யாவின் ஸ்ட்ராட்டஜி முக்கிய காரணமாக இருக்கலாம்.

சர்வைவர் - 29 |
சர்வைவர் - 29 |

ட்ரைபல் பஞ்சாயத்து ஆரம்பித்தது. “ஐஸ்வர்யா உங்க தலைமைல ரெண்டு சவால்ல தோத்துட்டிங்க... என்ன சொல்றீங்க?” என்று எடுத்த எடுப்பிலேயே பஞ்சாயத்தின் சூட்டை அதிகரித்தார் அர்ஜூன். ‘’நான் பொறுப்பேற்கிறேன்” என்று ஒரு லீடருக்குரிய பொறுப்புணர்வுடன் தோல்வியை ஏற்றுக் கொண்டார் ஐஸ்வர்யா.

“ஆனா... இம்யூனிட்டி சவாலை நாங்க ரொம்ப போராடித்தான் தோற்றோம். எங்க அணில எல்லோருமே பெஸ்ட்டா பண்ணாங்க. எனவே எனக்கு சந்தோஷம்தான். வென்றிருந்தா கூடுதல் சந்தோஷமா இருந்திருக்கும்” என்ற ஐஸ்வர்யா “சரணால்தான் அந்த இரண்டு கொக்கிகளையும் போட முடிந்தது’’ என்கிற பாயின்ட்டையும் கூடவே இணைத்தார். இதன் மூலம் சரணைக் காப்பாற்ற விரும்பும் தன் உள்நோக்கத்தை சபையில் மறைமுகமாக தெரிவித்து விட்டார்.

“டீம் லீடரான ஐஸ்வர்யாவுக்கு என்ன மார்க் கொடுப்பீங்க?” என்று நந்தாவிடம் கேட்டார் அர்ஜூன். இதன் மூலம் அவர் மனதை அறிய விரும்புவதே நோக்கம். ‘’பத்துக்கு பத்து கொடுப்பேன். பெஸ்ட் லீடரா செயல்பட்டாங்க” என்று பாராட்டுரை வழங்கினார் நந்தா. (பின்னணியில் ‘இறுதிச்சுற்று’ இசை வரவில்லை).

“நீங்க disciplined tribe-ன்னு சர்வைவர் டீமால் பேர் வாங்கியிருக்கீங்க” என்று வேடர்கள் அணிக்கு சான்றிதழ் கிடைத்தது மிக முக்கியமான விஷயம். பசி, பட்டினி ஆகியவற்றைப் பொறுத்துக் கொண்டு மிக நேர்மையாக இந்த விளையாட்டை ஆடுவது வேடர்கள் அணிதான் என்பது இதன் மூலம் பதிவாகிறது.

இதற்குப் பின்னால் சில காரணங்கள் இருக்கின்றன. காடர்கள் அணி தீவில் இருந்தவர்களிடம் பழம், மீன் போன்றவற்றைக் கேட்டுப் பெற்றது, மருத்துவமனையில் இருந்த போது அங்கிருந்த பிஸ்கெட்டை எடுத்துச் சாப்பிட்டது, மிக முக்கியமாக சரண் போன் பேசியது, அதை டீம் லீடரான விக்ராந்த் உடனே சர்வைவருக்கு தெரிவிக்காதது… போன்ற பல முறைகேடுகள் அவர்களுக்கு கெட்ட பெயரை வாங்கித் தந்திருக்கின்றன.

“நீங்க ஒருமுறை விருந்திற்காக காடர்கள் அணிக்கு போனீங்க. பிறகு அணி மாற்றத்தினால் மீண்டும் ஒருநாள் போனீங்க. மறுபடியும் திரும்பிட்டீங்க. இந்த மாற்றங்கள் உங்களின் தனிப்பட்ட உத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதா?” என்கிற கேள்விக்கு ‘ஆம்’ என்று ஒப்புக் கொண்டார் நந்தா.

சர்வைவர் - 29 |
சர்வைவர் - 29 |

Tribe swap என்கிற விஷயம் தன்னை மிகவும் பாதித்ததாக விஜயலட்சுமியும் சொன்னார். “காடர்கள் அணியில் இருந்த போது நான் ரொம்ப செளகரியமா ஃபீல் பண்ணேன். அணி மாறி இங்க வந்த போது ஆரம்பத்துல அசெளகரியமா இருந்துச்சு. ஆனா இப்ப கொஞ்சம் ஓகே.. ஆனா புதுசா வந்தவங்களைத்தான் இவங்க டார்க்கெட் பண்ணுவாங்கன்றது நான் எதிர்பார்த்ததுதான்” என்று அவர் சொல்ல “நீங்களா ஏன் முடிவு பண்றீங்க. தானா வந்து ஏன் எலிமினேஷன் ஜீப்ல ஏர்றீங்க?” என்று அர்ஜூன் குறுக்கிட்டது சரியான விஷயம்.

இதே விஷயத்தை சரணிடமும் விசாரித்தார் அர்ஜூன். “ஆமாம் சார். அணி மாற்றம் எனக்கு ரொம்பவும் அப்செட் பண்ணுச்சு... ஆனா இனிகோ, நாராயணன், ஐஸ்வர்யா போன்றவங்க நல்லா ஊக்கம் தந்தாங்க... அதுக்கு நன்றி சொல்லணும்” என்று பாசிட்டிவ்வாக பேசினார்.

“ஆரம்பத்துல நான் கேமை விட்டு போறேன்னு அடிக்கடி சொன்னீங்களா?” என்று அடுத்த கேள்வியை சரணை நோக்கி வீசினார் அர்ஜூன். “ஆமாம் சார்... அணி மாற்றப்பட்ட விதம் எனக்கு நியாயமா படலை. பேலன்ஸ் இல்லாத மாதிரி இருந்தது. வேடர்கள் அணி வீக்கா இருந்த மாதிரி இருந்தது. எனக்கு நம்பிக்கை குறைஞ்சது” என்று சரண் சொன்னதும் “அதை யோசிச்சுதானே ஒரு நபரை திருப்பிக் கொடுத்துட்டோம். நந்தா உங்க கிட்ட மறுபடியும் வந்துட்டாரே... அப்புறம் என்ன... இதெல்லாம் விளையாட்டின் ஒரு பகுதிதானே?’’ என்று அர்ஜூன் சொன்னதைக் கேட்டு சரணால் பதில் எதையும் சொல்ல முடியவில்லை.

“போன் பண்ணது மட்டும்தான் சார் என் தப்பு... மத்த விஷயங்கள் நான் செய்யலை” என்று சபையில் காடர்கள் அணியை போட்டுக் கொடுத்தார் சரண். போன் விஷயம் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டிருந்தாலும் மறுபடியும் இந்தப் பஞ்சாயத்தில் அதைக் கிளப்பினார் அர்ஜூன். “மனமார மன்னிப்பு கேட்கிறேன்” என்று சரண் உருக்கமாகச் சொன்னதும் அவர் மீதான கோபம் மறைந்து அனுதாபம்தான் மற்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

“நந்தா... உங்க டீம்ல இருந்து இப்படி யாராவது செஞ்சிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?” என்று அர்ஜூன் கேட்டதும் “உடனே சர்வைவர் டீமுக்கு தகவல் சொல்லி அவங்க எலிமினேட் ஆவறதுக்கு உண்டான வேலையைச் செஞ்சிருப்பேன்” என்று நந்தா சொன்ன பதிலை விக்ராந்த் அங்கு அமர்ந்து ஒருவேளை கேட்டிருந்தால் முகம் வெளிறிப் போயிருப்பார்.

சர்வைவர் - 29 |
சர்வைவர் - 29 |

“விஜயலட்சுமி நீங்களும் கேமை விட்டுப் போறதா புலம்பனீங்களா... தகவல் வந்ததே?” என்று அர்ஜூன் விசாரிக்க “ஆமாம் சார்... நானும் மனுஷிதானே..? அங்க செளகரியமா இருந்தேன். புது இடத்துக்கு வந்ததும் குழப்பமா இருந்தது. அப்போதைய உணர்வில் சொல்லிட்டேன். ஆனா, இந்த அணில எனக்கு எல்லோரும் ஊக்கம் தந்தாங்க. இப்ப ஓகே... வேடர்கள் அணியில் உமாபதியை ரொம்ப மிஸ் பண்ணுவேன். ஏன். வேடர்கள் தீவையே மிஸ் பண்றேன்.. நான் ஒரு விஷயத்துல அட்டாச் ஆயிட்டா வெளிய வர்றதுக்கு டைம் ஆகும்” என்று உணர்ச்சிகரமாகச் சொன்னார் விஜயலட்சுமி.

“நந்தா... ஒரு அணில பாசிட்டிவா இருக்குற நபர் தேவையா... இல்ல பர்ஃபாமென்ஸ் செய்யற நபர் தேவையா... என்ன முடிவெடுப்பீங்க?” என்று அர்ஜூன் பொதுவாக கேட்டாலும் அதில் இருந்த உள்குத்து சரண் மற்றும் விஜயலட்சுமி பற்றியதுதான். “பாசிட்டிவ் நபர்தான் எனக்குத் தேவை. அதன் மூலமா வெற்றியடைய முடியும். நெகட்டிவ் நபர் இருந்தா அணி பாதிப்படையும்” என்று நந்தா சொன்னதை மற்றவர்களும் வழிமொழிந்தார்கள். ஐஸ்வர்யாவும் வேறுவழியின்றி இதைத்தான் சொல்ல வேண்டியிருந்தது.

“சரி... வோட்டிங் போயிடலாம்” என்று வாக்கெடுப்பை நடத்த ஆரம்பித்தார் அர்ஜூன். பரபரப்பான நிமிடங்களுக்குப் பிறகு இதன் முடிவுகள் வந்தன. சரண் ஐந்து எதிர் வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருந்தார். விஜிக்கு எதிராக இரண்டு வாக்குகள் வந்திருந்தன. ஆகவே சரண்தான் இன்று வெளியேற வேண்டும்.

ஆனால், அவருக்கு இன்னொரு வாய்ப்பு இருந்தது. காற்சிலம்பு அதிர்ஷ்டம். தங்க முத்து வந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். சர்வைவர் சீசனில் முதன்முறையாக சரணுக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்தது. தங்க முத்து கிடைத்து போட்டியில் நீடிக்கும் வாய்ப்பை சரண் அடைந்தார். சரண் காப்பாற்றப்பட்டது தொடர்பாக தனது வெளிப்படையான மகிழ்ச்சியை உடனே வெளிப்படுத்தினார் ஐஸ்வர்யா.

சர்வைவர் - 29 |
சர்வைவர் - 29 |

ஆனால் இப்போது இதில் இன்னொரு ட்விஸ்ட். தங்க முத்து கிடைத்த காரணத்தினால் சரண் இன்னொருவரை எலிமினேட் செய்ய முடியும். என்னதான் ‘சர்வைவர்’ விளையாட்டின் ரூல் என்றாலும் இது கோக்குமாக்கான விதியாக இருந்தது. எவ்வித தவறும் செய்யாமல் எப்படி இன்னொவருக்கு தண்டனை கிடைக்க முடியும்?

இந்த வகையில் சரணின் முடிவு புத்திசாலித்தனமாக இருந்தது. வேடர்கள் அணியில் ஏற்கெனவே இருக்கிறவர்களை தேர்ந்தெடுத்தால் அணியின் பகைமைக்கு ஆளாக நேரிடலாம். எனவே விஜியை அவர் தேர்ந்தெடுத்தார். “உனக்கு எதிராக வாக்களிக்க வேண்டியிருந்தா அதைத்தான் செய்வேன்” என்று முன்னர் விஜி சொல்லியிருந்த அதே தர்மத்தை இப்போது சரண் கடைப்பிடித்தார்.

சரண் தன்னைத்தான் தேர்ந்தெடுப்பார் என்பது விஜிக்கும் தெரிந்திருந்தது போல. எனவே வலுக்கட்டாயமான புன்னகையுடன் இந்த முடிவை ஏற்றுக் கொண்டார். அவருக்கும் காற்சிலம்பு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை.

விஜியின் குடும்பத்தார் அவருக்கு எழுதிய கடிதத்தை வாசிக்கத் தந்தார் அர்ஜூன். “என்னை அழ வெச்ச அனுப்பனும்னு நெனக்கறீங்களா. அது நடக்காது” என்று சொன்னாலும் கடிதத்தை வாசிக்கும் போது தன்னிச்சையாக கலங்கினார் விஜி. பிறகு வேடர்கள் அணிக்கு வாழ்த்து சொல்லி விட்டு கிளம்பினார்.

“அவங்க கேம்ல தோத்துட்டுப் போயிருந்தா கூட சரியான முடிவா இருந்திருக்கும். தப்பு செய்யாமலேயே வெளியே போறது சங்கடமா இருக்கு” என்றார் நந்தா.

“விஜிக்கு எதிரா இரண்டு வாக்குகள் வந்திருக்கு. அந்த இரண்டாவது வாக்கை அளித்தவர் யார்?” என்று ‘கரகாட்டக்காரன்’ வாழைப்பழ காமெடி மாதிரி கேட்டார் அர்ஜூன். யார் அளித்திருப்பார்கள் என்று யாருக்கும் புரியவில்லை அல்லது புரியாதது மாதிரி நடித்தார்கள். எனவே ஒரு கட்டத்தில் ‘நான்தான் சார் போட்டேன்” என்று தானே முன்வந்து ஒப்புக் கொண்டார் ஐஸ்வர்யா. “இதை நான் முன்னமே தெளிவா சொல்லிட்டேன்” என்பது அவரின் விளக்கம். அப்புறம் ஏன் வேடர்கள் அணி அந்த முழி முழித்தார்கள் என்று தெரியவில்லை.

வேடர்கள் அணிக்கு வாழ்த்து சொல்லியும் தன்னை மகிழ்ச்சியாக வைத்திருந்த காடர்கள் அணிக்கு நன்றி சொல்லியும் விஜயலட்சுமி எழுதிய கடிதத்தோடு எபிசோட் நிறைவுற்றது.

தங்க முத்து அதிர்ஷ்டத்தின் மூலம் ஒருவர் காப்பாற்றப்படுவது சரி. ஆனால் அவர் இன்னொருவரை எலிமினேட் செய்ய முடியும் என்கிற விதி அபத்தமாக இருக்கிறது. அதிலும் மொபைல் உபயோகித்து தவறு செய்த சரண், இன்னொருவருக்கு தண்டனை தந்தது ஒருவகையில் அநீதியாக இருக்கிறது.

இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?... கமென்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.