Published:Updated:

சர்வைவர் - 35 | லட்சுமியின் சுயநலமும், உமாபதியின் ஆட்டிட்யூடும், காடர்களின் வெற்றியும்!

சர்வைவர் - 35

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 35-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 35 | லட்சுமியின் சுயநலமும், உமாபதியின் ஆட்டிட்யூடும், காடர்களின் வெற்றியும்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 35-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 35

நேற்றைய எபிசோடில் நிகழ்ந்த ‘இம்னியூட்டி சேலன்ஞ்’ வழக்கம் போல் விறுவிறுப்பாக அமைந்தது. வேடர்களை ஏன் துரதிர்ஷ்டம் துரத்திக் கொண்டேயிருக்கிறது என்று புரியவில்லை. லட்சுமிபிரியாவின் சுயநல, துரோகப் பண்புகளும் நேற்று வெளிப்பட்டன.

சர்வைவர் 35-வது நாளில் என்ன நடந்தது?

லட்சுமி பிரியாவுக்கு சாக்லேட் பெட்டியில் இரண்டு ரகசிய ஓலைகள் கிடைத்தன. ‘Immunity Idol’ ஒளித்து வைத்திருக்கப்படும் இடத்தை அடைவதற்கான குறிப்பு அதில் இருக்கும். ஒருவேளை எலிமினேஷனை லட்சுமி சந்தித்தால் இதை வைத்து தன்னை அவர் காப்பாற்றிக் கொள்ள முடியும். சர்வைவர் பெட்டியின் அடியில் அந்த Idol இருக்கிறது.

இந்தப் புதையல் அவருக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் என்று சொல்வதை விட ஒருவகையில் தண்டனை எனலாம். ஆம், புதையல் காக்கும் பூதம் போல பெட்டியையே அவர் சுற்றிச் சுற்றி வந்ததை உமாபதி மோப்பம் பிடித்து விட்டார். ‘என்னமோ நடக்கிறது’ என்பது அவருக்குப் புரிந்து விட்டது.

சர்வைவர் - 35
சர்வைவர் - 35

மறுநாள் உமாபதி மட்டுமல்லாமல், காடர்கள் அனைவருக்குமே அந்தச் சந்தேகம் வந்து விட்டது. புத்திசாலி என்று கருதப்படும் லட்சுமிபிரியா, அந்த அளவிற்கு ‘பப்பரப்பபே’ என்று நடந்து கொண்டார் போலிருக்கிறது. தன்னால் கண்டுபிடிக்க முடியாது என்கிற நிலைமை வந்தவுடன் அவர் விஷயத்தை வெளியே சொன்னார். முதலிலேயே சொல்லியிருந்தால் அணியின் நம்பிக்கையையாவது அவர் பெற்றிருக்கக்கூடும். ‘’எனக்கே விபூதி அடிக்கப் பார்த்தல்ல” என்றது விக்ராந்த்தின் மைண்ட் வாய்ஸ்.

விஷயம் தெரிந்தவுடனே உமாபதி உற்சாகமாக ஓடிச் சென்று Idol-ஐ எடுத்து வந்து ‘’நான்தான் கண்டுபிடிச்சேன்” என்று கூவினார். அது விளையாட்டுதான். நிச்சயம் உமாபதி திரும்பத் தந்துவிடப் போகிறார். ஆனால் அந்தச் சில நிமிடங்களுக்குள் லட்சுமியின் முகம் மாறிவிட்டது. ஒரு குழந்தையிடம் “உன் பொம்மை அழகா இருக்கு… விளையாடிட்டு தர்றேன்” என்று வாங்கி வைத்துக் கொண்டால், அந்தக் குழந்தையின் கண்கள் பொம்மை மேலேயேதான் இருக்கும். “எப்போடா திருப்பித் தருவே?” என்கிற கேள்வி அதன் கண்களில் தெரியும். பொம்மையை திரும்ப வாங்கிய பிறகுதான் அதன் முகத்தில் நிம்மதி வரும். லட்சுமி பிரியாவின் நிலைமையும் இப்படித்தான் இருந்தது.

‘’இதை வெச்சுட்டு கொஞ்சம் அம்ஜத்கிட்ட விளையாடலாம்” என்று முடிவு செய்த உமாபதி, அதை கழுத்தில் போட்டுக் கொண்டு அம்ஜத்தின் கண் முன்னால் சுழற்றிக் காட்ட அம்ஜத் “ஹே… சூப்பர்டா” என்பது போல் உற்சாகமானார். ஆனால் அதற்கே லட்சுமிக்கு பொறுக்க முடியவில்லை. “மாப்பிள்ளை அவர்தான்... ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை என்னோடது” என்கிற நகைச்சுவையை சொல்வதின் மூலம் அந்தப் பொம்மை தன்னுடையது என்பதை சமூகத்திற்கு பதிவு செய்ய அவசரப்பட்டார்.

சர்வைவர் - 35
சர்வைவர் - 35

லட்சுமிக்கு கிடைத்த இரண்டாவது ஓலையில் “வேடர்கள் தீவில் இருக்கும் Immunity idol பற்றிய குறிப்பு இதில் இருக்கிறது. அந்த அணியில் யாருக்காவது தரலாம்” என்று குறிப்பு இருந்தது. ஆனால் லட்சுமியோ “இதை யாருக்கும் தரப்போவதில்லை” என்று அறிவித்தது சற்று அதிர்ச்சிதான்.

சர்வைவர் ஆட்டத்தின் படி லட்சுமியின் இந்த ஸ்டராட்டஜி சரிதான். ‘வலிமையுள்ளது எஞ்சும்’ என்பதுதான் இதன் ஆதார விதி. ஆனால் தார்மீக அடிப்படையில், ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் நோக்கில் பார்த்தால் லட்சுமியின் முடிவு சரியானதாகத் தெரியவில்லை. எதிரணிக்கும் பாதி பலத்தை தந்து விட்டு மோதுவதுதான் வீரத்தின் தர்மம்.

இன்னொரு விஷயம். லட்சுமியும் சரி, அம்ஜத்தும் சரி, எதிர் அணியைப் பற்றி காடர்களிடம் புறணி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அங்கு சில துரோகங்களை சந்தித்திருக்கலாம். ஆனால் அதைப் பற்றி இங்கு புகாராக சொல்லிக் கொண்டிருப்பது அவர்கள் மீதான நம்பகத்தன்மையை குறைக்கும். மேலும் அது நாகரிகமான செயலும் அல்ல.

“இந்த டீமா இருந்ததால சொன்னேன். அந்த டீமா இருந்திருந்தா.. ‘இம்யூனிட்டி ஐடல்’ ரகசியத்தைச் சொல்லியிருக்க மாட்டேன்” என்று வெற்று வீறாப்பு காட்டினார் லட்சுமி.

ஏல நிகழ்ச்சியில், ஐசு தனது கடிதத்தை வாசிக்கும் போது ‘சந்தோஷத்தில் அப்பா குதித்துக் கொண்டிருந்தார்’ என்கிற வாக்கியத்தை ‘குடித்துக் கொண்டிருந்தார்’ என்று தவறாக வாசித்து விட்டார் போலிருக்கிறது. ‘என்னடா இது… குடிப்பதையெல்லாமா கடிதத்தில் எழுதுவார்கள்’ என்று நான் கூட அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். நாராயணன் இந்த விஷயத்தைப் பற்றி கிண்டலடிக்க “ஆமாம்... தவறா வாசிச்சிட்டேன். ஆனா என்ன இப்ப?... குடிக்கறது எங்க அப்பாவிற்கு passion’’ என்று விட்டுக் கொடுக்காமல் கெத்தாக பேசினார் ஐசு. குடிப்பழக்கம் இருப்பதில் தவறில்லை. குடிகாரர்களாக மாறுவதுதான் தவறு. அளவுக்கு மிஞ்சினால் ஆல்கஹாலும் விஷம்.

சர்வைவர் - 35
சர்வைவர் - 35

ஏலத்தில் பங்கமாக தோற்றுப் போன அம்ஜத்திற்கு ‘Auction Hero’ என்ற பட்டத்தை காடர்கள் ஜாலியாக வழங்கி மகிழ்ந்தார்கள். “வனேசாவிற்கு எப்பவுமே அதிர்ஷ்டம் அடிக்குது’’ என்றும் சொல்லி மகிழ்ந்தார்கள். யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். “எதிர் டீம்ல பார்த்தீங்களா... ஏதோ கணக்கு வகுப்பு மாதிரி உர்ருன்னு உக்காந்திருந்தாங்க... நான் வேற விலையை ஏத்தினதுல அவிய்ங்க காண்டாயிட்டாங்க” என்று சிரித்தார் உமாபதி.

உமாபதியின் ஜாலி கமென்ட்டுகளும் நகைச்சுவையும் பல சமயங்களில் ரசிக்க வைக்கிறது என்பது உண்மை. இதைப் போலவே டாஸ்க்கிலும் அவர் கில்லியாக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் சுவாரசியத்துக்கு அவர் ஒரு முக்கிய காரணம் என்பதில் மறுப்பில்லை. ஆனால் ஒருவரை வெறுப்பேற்றுவதில் அவருக்கு இருக்கும் ஈடுபாடும், அவருடைய உடல்மொழியில் இருக்கும் நக்கலும் பல சமயங்களில் முகஞ்சுளிக்க வைக்கிறது. “நல்லவன் என்கிற ஒற்றைத் தகுதியோடு திரும்புவது முக்கியம்’ என்று உமாபதியின் தந்தை கடிதத்தில் எழுதிய வரி அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது.

அணி மாற்றத்தின் போது தன்னையோ, உமாபதியையோ தேர்ந்தெடுக்காமல் நந்தா தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்னால் இருந்த அரசியலை உமாபதியிடம் விளக்கிக் கொண்டிருந்தார் அம்ஜத். நந்தா கண்காட்டியதின் பேரில் அவரையே தேர்ந்தெடுத்து அழைத்துக் கொண்டார் ஐஸ்வர்யா. ‘உமாபதிதான் சிறந்த சாய்ஸாக இருந்திருக்கும்’ என்று அப்போதே நான் எழுதியிருந்தேன். அப்போது தவறு செய்ததனின் பலனை இப்போது வேடர்கள் அனுபவிக்கிறார்கள். ஒருவரின் மீதுள்ள தனிப்பட்ட பாசம், அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்படி தலைவர்கள் நடந்து கொள்ளவே கூடாது. ஐஸ்வர்யா இந்தத் தவறைச் செய்து விட்டார்.

பதிலுக்கு உமாபதியும் இன்னொரு ரகசியத்தைச் சொன்னார். இனிகோவுக்கும் நாராயணுனுக்கும் நடந்த தலைவர் போட்டியின் போது இனிகோ ஒரு கட்டத்தில் கீழே இறங்கி விட்டார். ‘தன்னால் கட்டையில் தொங்கி சமாளிக்க முடியவில்லை’ என்பதே அப்போது அவர் சொன்ன காரணம். ஆனால் அப்போதே ஏதோ பொறி தட்டிற்று. இப்போதுதான் விஷயம் விளங்குகிறது. நந்தாதான் இனிகோவை கீழே இறங்கச் சொன்னாராம். நாராயணன் தலைவர் ஆக நந்தா விரும்புகிறார் போலிருக்கிறது. இதனால் இனிகோவிற்கு பின்னடைவு ஏற்படுமே? இதற்கு எப்படி இனிகோ ஒப்புக் கொண்டார்? என்னமோ போடா நாராயணா… ஒண்ணும் புரியலை.

சர்வைவர் - 35
சர்வைவர் - 35

‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்று அழைத்தார் அர்ஜூன். ‘’Be Water, My Friend. Empty your mind. Be formless, shapeless, like water’’ என்று புரூஸ்லீ சொன்னதை மேற்கோள் காட்டி இரண்டு அணிக்கும் உத்வேகம் அளித்தார்.

போட்டியின் கான்செப்ட் விளக்கப்பட்டது. சர்வைவரில் வரும் போட்டிகளின் வடிவமைப்பில் உள்ள பொதுத்தன்மையைக் காண முடிகிறது. முதலில் சில பல தடைகளை கடந்து விட்டு இறுதி நிலையில் ஒரு புதிருக்கு தீர்வு காண வேண்டும். அதாவது இதில் ஜெயிப்பதற்கு உடல்வலிமை + புத்திக்கூர்மை ஆகிய இரண்டுமே வேண்டும்.

இந்த ‘இம்யூனிட்டி சவால்’ போட்டியும் இதே போல்தான் அமைந்திருந்தது. முதலில் 15 அடி உயரமுள்ள கோபுரத்தில் கயிற்றின் உதவி இல்லாமல் ஏற வேண்டும். பிறகு மண்ணால் நிரப்பப்பட்டுள்ள தொட்டியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கத்தியை தோண்டி எடுக்க வேண்டும். அதன் பிறகு அந்தக் கத்தியைக் கொண்டு கயிற்றை வெட்டினால் ஏராளமான இளநீர் காய்கள் விழும். அந்தக் காய்களை குறிபார்த்து ஒரு பையில் எறிந்தால் ஒரு குறிப்பிட்ட அளவு எடை வந்தவுடன் பை இறங்கும். அதன் மூலம் கிடைக்கும் ஒரு சாவியைக் கொண்டு பெட்டியைத் திறந்தால் புதிர்ப் பலகைகள் கிடைக்கும். அதைக் கொண்டு கோபுரத்தில் படிக்கட்டுகள் அமைத்து மேலே சென்று மேடையின் மீது தனது அணியின் கொடியை நட்டால்.. அந்த அணியே வின்னர்… (எழுதும் போது எனக்கே மூச்சு வாங்குகிறது!).

15 அடி கோபுரத்தில் அம்ஜத் முதலில் ஏறி விட்டார். பிறகு காடர்கள் அணியில் ஒவ்வொருவராக மற்றவர்களின் உதவியுடன் ஏறினார்கள். கடைசியில் இருந்தவர் உமாபதி. அவர் எப்படி ஏறுவார் என்று ஆவலாக பார்த்துக் கொண்டிருந்த போது, சில அடிகள் பின்னால் நகர்ந்தவர், வேகமாக ஓடி வந்து மேடை மீது பாய, மேலே இருந்த விக்ராந்த்தும் அம்ஜத்தும் அவரை அப்படியே கை பிடித்து தூக்கிய காட்சி அற்புதம். உமாபதியின் ஃபிட்னெஸ் வியக்க வைக்கிறது.

சர்வைவர் - 35 | லட்சுமியின் சுயநலமும், உமாபதியின் ஆட்டிட்யூடும், காடர்களின் வெற்றியும்!

ஆனால் வேடர்கள் அணி சற்று தடுமாறியது. நாராயணன் முதலில் முயன்று ஏற முடியாமல் விட்டு விட்டார். உடல் எடை அதிகமுள்ள ரவியை முதலில் ஏற்றி விடலாம் என்று வேடர்கள் திட்டமிட்டது புத்திசாலித்தனம். எப்படியோ தூக்கிச் சுமந்து ரவியை மேலே ஏற்றி விட்டார்கள். ஒருவகையில் இது நல்லதாகப் போயிற்று. பின்னால் ஏறுபவர்களை எல்லாம் மூட்டை போல் இழுத்துப் போட்டார் ரவி. கடைசியாக வந்தவர் ஐஸ்வர்யா. இவரும் உமாபதியைப் போல் ஏதாவது சாகசம் செய்வார் என்று எதிர்பார்த்தால்... அது நடக்கவில்லை. சற்று சிரமப்பட்டு ஏறிய இவரை மேலேயுள்ளவர்கள் பாலம் அமைத்து மேலே தூக்கினார்கள்.

அடுத்த நிலைதான் மிகச் சிரமமானது. மணலில் புதைக்கப்பட்டிருக்கும் கத்தியை தோண்டி எடுக்க வேண்டும். அது மணல் மட்டுமல்ல, கற்களும் இணைந்துள்ள கடினமான மணல். இரண்டு அணிகளும் கையால் ஆவேசமாகத் தோண்டின. ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே தோண்ட வேண்டும் என்பதால் வரிசையாக வந்து முயற்சித்தார்கள். ஒவ்வொருவரின் முகத்திலும் புழுதி படிந்து ஆளே மாறி விட்டார்கள். கத்தி எந்தப் பக்கம் இருக்கிறது என்று தெரியாமல் அகலமும் ஆழமுமாக தோண்டுவது கடினமான பணி. உமாபதி கத்தியை முதலில் கண்டுபிடித்து எடுத்து ஆவேசமாக ஓடிச் சென்று கயிறுகளை வெட்டினார். இளநீர்க்காய்கள் விழுந்தன. ஒரே சமயத்தில் இருவர் மட்டுமே காய்களை கூடையில் எறிய வேண்டும். ஒரு கட்டத்தில் விக்ராந்த் – உமாபதி ஜோடிக்கு இந்த பேட்டர்ன் செட் ஆகி விட்டதால் அவர்களே முயன்று மிக கச்சிதமாக தங்களின் பணியை முடித்தார்கள்.

மண்ணைத் தோண்டி கத்தி எடுப்பதில் வேடர்கள் அணி மிகவும் பின்தங்கியது. இத்தனைக்கும் நந்தா உள்ளிட்டவர் ஆவேசமாகத் தோண்டியதில் வேடர்கள் அணிதான் அதிக அளவு மண்ணை வெளியில் எடுத்துப் போட்டிருந்தார்கள். ஆனால் அதிர்ஷ்டம் உடனே கிடைக்கவில்லை. ஒருவழியாக இனிகோவின் கையில் கத்தி கிடைக்க அவர் ஓடி வந்து கயிற்றை வெட்டினார். ஆனால் காய்களை கூடையில் போடும் நிலையில் இவர்கள் மறுபடியும் பின்தங்கினார்கள். நந்தா – சரண் ஜோடி ஒரளவுக்கு வெற்றி பெற்றது.

ஆனால் காடர்கள் அணி இதை விடவும் முன்னிலையில் இருந்தது. காய்களை நிரப்பி பையை இறக்கி அதில் இருக்கும் சாவியைக் கொண்டு புதிர்ப்பலகைகளை எடுத்து விட்டார்கள். ‘Puzzle queen’ லட்சுமியும் உமாபதியும் இணைந்து பலகைகளை வேகமாக அமைத்துக் கொண்டிருந்தார்கள். பின்னாலேயே வேடர்கள் அணியும் வந்து சேர்ந்தது.

சர்வைவர் - 35
சர்வைவர் - 35

ஆனால் காடர்களின் வெற்றி அப்போதே உறுதியாகி விட்டது. இறுதிப் படிக்கட்டை அமைத்து விட்டாலும் ஏறிச் சென்று கொடியை நடாமல் வேண்டுமென்றே எதிரணியை வெறுப்பேற்றும் வகையில் உட்கார்ந்து கொண்டிருந்தார் உமாபதி. பிறகு ஆவேசமாக சென்று கொடியை நட்டு ‘’This is for you விஜி” என்று கத்தினார். உமாபதியின் ஆவேசம் மிகையாகத் தெரிந்தாலும் அத்தனை சிரமங்களுக்குப் பிறகு வெற்றி பெறும் நிலையில்தான் அதை யோசிக்க வேண்டும். ‘Game attitude’ என்று சரியான வார்த்தையை பிறகு குறிப்பிட்டார் அர்ஜுன். உமாபதி வெறுப்பேற்றினாலும் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புடன் கைத்தட்டி நந்தா பாராட்டியது நல்ல விஷயம்.

ஆக… காடர்கள் தொடர்ச்சியாக அடையும் நான்காவது வெற்றி இது. வனேசாவின் அதிர்ஷ்டமும் இம்முறை இணைந்தது. “நீங்களும் நல்லாத்தான் பண்றீங்க… ஆனா ஏதோ ஒண்ணு மிஸ் ஆவுதே?” என்று வேடர்களின் தோல்வியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார் அர்ஜூன். “மண் தோண்டுவதிலும் குறி எய்வதிலும் சற்று பின்தங்கி விட்டோம்” என்று நந்தா விளக்கம் அளித்தார். ஆனால் வேடர்களோடு ஒப்பிடும் போது காடர்களில் உள்ளவர்கள் அனைவருமே இளைஞர்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

ஆக… வேடர்கள் அணி தோற்று விட்டதால் ட்ரைபல் பஞ்சாயத்தில் எலிமினேஷனை எதிர்கொள்ள வேண்டும். தன்னைத்தான் டார்கெட் செய்வார்கள் என்று சரண் இப்போதே உள்ளூற அச்சம் கொள்ள ஆரம்பித்து விட்டார். ஆம்.. வேடர்கள் அதைத்தான் செய்வார்கள் என்று எதிர்பார்ககலாம். ஆனால் நல்ல ப்ளேயரான சரணை இழப்பது அவர்களுக்குத்தான் பலவீனம். இதற்குப் பதிலாக, சென்ட்டிமென்ட்டை ஓரமாக வைத்து விட்டு ரவியின் உடல்நலம் கருதி அவரை வழியனுப்பி வைத்தால் அது வேடர்களுக்கு பலமாக அமையும். வேடர்கள் என்ன முடிவு எடுப்பார்கள்?

பார்த்துடுவோம்!