Published:Updated:

சர்வைவர் 36 | பெசன்ட் ரவியை வெளியேற்றிய வேடர்கள்… ஆனால், நந்தா ஏன் அந்த முடிவை எடுத்தார்?!

சர்வைவர் 36 | பெசன்ட் ரவி

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 36-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் 36 | பெசன்ட் ரவியை வெளியேற்றிய வேடர்கள்… ஆனால், நந்தா ஏன் அந்த முடிவை எடுத்தார்?!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 36-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:
சர்வைவர் 36 | பெசன்ட் ரவி

வேடர்கள் அணியில் அனைவரின் பிரியத்திற்கும் பாத்திரமான ரவி நேற்று வாக்களிப்பின் மூலம் வெளியேற்றப்பட்டார். சென்டிமென்ட் தவிர்த்துப் பார்த்தால் இது ஒரு புத்திசாலித்தனமான முடிவுதான். ஆனால் நந்தா செய்த காரியம்தான் சற்று அதிர்ச்சியளித்தது.

சர்வைவர் 36-வது நாளில் என்ன நடந்தது?

இம்யூனிட்டி சேலன்ஞ்சில் வேடர்கள் தோற்று விட்டதால், அவர்கள் கூடி ஆலோசித்து ஒருவரை வெளியேற்றியாக வேண்டும். உடல்ரீதியாக பலவீனமாக உள்ள ரவிதான் இதற்கு ‘பெஸ்ட்’ சாய்ஸ்’. அழுகாச்சி காட்சிகளை கட் செய்து விட்டு கறாராக முடிவு செய்தால் இரண்டே நிமிடத்தில் எடுக்க வேண்டிய முடிவு இது. ‘’எனக்கு வலி தாங்கலை. அனுப்பிச்சிடுங்க” என்று ரவியுமே தானாக முன் வந்து ஒப்புக் கொள்கிறார். எனவே எந்தவொரு சங்கடமும் இல்லை.

ஆனால் இந்த முடிவை உடனே எடுக்காமல் “டீ சூடா இருக்குதா கோயிந்தா?” என்கிற காமெடி போல வேடர்கள் டீயை ஆற்றிக் கொண்டே இருந்தார்கள். ரவி அணியின் தொடக்கத்திலிருந்து பயணம் செய்தவர். வயதில் மூத்தவர். பாசக்காரர். டாஸ்க்குக்கு தனது முழு பங்களிப்பைத் தர முயல்பவர். எனவே அவரை வெளியே அனுப்பும் முடிவை “அத எப்படி என் வாயால சொல்லுவேன்?” என்று ஒவ்வொருவரும் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.

சர்வைவர் 36 |
சர்வைவர் 36 |

தன்னை வெளியேற்றி விடுவார்களோ என்று சரண் உள்ளூற அச்சப்பட்டதிலும் நியாயம் இருந்தது. அவர் அணிக்கு புதிதாக வந்தார். சில தவறுகளைச் செய்திருக்கிறார். எனவே இந்த விவாதங்களில் ‘’நானாக கூட இருக்கலாம்” என்று தாழ்வுணர்வுடன் சொல்லிக் கொண்டிருந்தார். இது அநாவசியமான பயம். தன்னுடைய பங்களிப்பு அணிக்கு பலம் என்கிற நம்பிக்கை சரணுக்கு இருக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் இனிகோ பிறகு பஞ்சாயத்தில் குறிப்பிட்டது போல் மிகையான தன்னம்பிக்கையாகவும் அது போய் விடக்கூடாது. “மக்கள் பார்த்துட்டுதான் இருப்பாங்க. உன் மேல நீ நம்பிக்கை வை” என்று சரணை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா.

தனக்கு எலிமினேஷன் வாக்குகள் வருமோ என்கிற பயம் இனிகோவுக்கும் இருக்கிறது. அவரும் அணிக்குப் புதியவர். சரணை விட சீனியர் என்கிற சிறிய ஆசுவாசம் அவருக்கு இருக்கிறது. ஆனால், ‘பஞ்சாயத்தில் இவர்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றுவார்கள்’ என்கிற குழப்பமும் இனிகோவுக்குள் இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘ட்ரைபல் பஞ்சாயத்து’ தொடங்கியது. “தொடர்ந்து நாலு தடவை தோத்திருக்கீங்க… தொடர்ந்து இரண்டாவது முறையா பஞ்சாயத்துக்கு வர்றீங்க?” என்கிற சங்கடமான கேள்வியுடன் ஆரம்பித்தார் அர்ஜூன். “சோத்துல உப்பு போட்டுதானே சாப்பிடறீங்க?” என்று நடைமுறையில் கேட்பதைப் போல் அவர் கேட்டு விட முடியாது. உண்மையிலேயே அங்கு நிலைமை அதுதான். சோறும் உப்பும் கிடையாது. “எங்கே மிஸ் பண்ணீங்க?” என்று விசாரணையைத் தொடர்ந்தார் அர்ஜூன்.

“மண்ணைத் தோண்டுதல், இளநீர் எறிதல் ஆகிய இரண்டு நிலைகளிலும் நாங்கள் பின்தங்கி விட்டோம்” என்று இனிகோ துவங்கி வைத்ததை நந்தாவும் வழிமொழிந்தார். “உங்கள் அணிக்கு சரண் ப்ளஸ்ஸா, மைனஸா?” என்று போட்டு வாங்கும் கேள்வியை அடுத்துக் கேட்டார் அர்ஜூன். இது குழப்பமே இல்லாமல் பதில் அளிக்க வேண்டிய கேள்வி. கூட்டிக் கழித்துப் பார்த்தால் நிச்சயம் ப்ளஸ்தான். ஆனால் வேடர்கள் இதற்கு சுற்றி சுற்றி வந்து பதில் அளித்தார்கள்.

சர்வைவர் 36 | சரண்
சர்வைவர் 36 | சரண்

“தம்பி ஓகேதான். ஆனா ஓவர் கான்ஃபிடன்ஸ இருக்கான். ரிவார்டை நான் அடிச்சுத் தர்றேன்னு சொல்றான். அப்ப நாங்க எல்லாம் இங்க தேங்கா பொறுக்கவா வந்தோம்?” என்பது போல் இனிகோ எரிச்சலானார். “அந்த மீனிங்க்ல சொல்லல. ஒரு ஃப்ளோல ஏதாச்சும் சொல்லியிருப்பேன். நான் மட்டும் எப்படி ஜெயிக்க முடியும்? அணியாத்தான் செய்ய முடியும்” என்று சமாளித்தார் சரண்.

ஆனால் இனிகோ சொன்னதில் உண்மையிருக்கலாம். இதற்கு முந்தைய சவாலில் கயிற்றில் கொக்கி மாட்டுதல் போன்றவற்றில் மற்றவர்கள் திணறிய போது சரணால்தான் அதைச் செய்ய முடிந்தது. எனவே அது சார்ந்த நம்பிக்கை சரணிடம் சற்று கணிசமாக உயர்ந்திருக்கலாம்.

“உங்கள் அணி சரணை ஏற்றுக் கொள்வதில் ஐஸ்வர்யாவின் செல்வாக்கு இருந்ததா?” என்பது அர்ஜூனின் அடுத்த கேள்வி. இது நந்தாவின் ஈகோவை உசுப்பி விட “அப்படியெல்லாம் இல்லை” என்று அவசரமாக மறுத்தார். ஆனால் ஐஸ்வர்யாவின் ஆதரவு சரணுக்கு இருக்கிறது என்பது வெளிப்படை. ஐஸ்வர்யா அடிப்படையில் ஒரு ஸ்போர்ட்ஸ் நபர். எனவே அணியின் வெற்றியைத்தான் அவர் பார்ப்பார். அதுதான் சரியான பார்வையும் கூட.

“இனிகோ... நீங்க கூட்டுக்குடித்தனத்துல இருந்து வர்ற ஆள். ஆனா இங்க தனியாவே இருக்கீங்களே ஏன்?” என்றோரு முக்கியமான கேள்வியைக் கேட்டார் அர்ஜூன். ஒரு அணி ஏன் தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கிறது என்பதை 360 டிகிரியிலும் ஆராய்ந்தால்தான் பதில் கிடைக்கும். “நான் தனிமையை விரும்பாத நபர். ஆனால் இங்கு சில விஷயங்களில் எனக்கு தனிமை தேவைப்படுகிறது” என்று இனிகோ சொல்வதில் இருந்து அங்கு ஏதோவொரு ‘இக்கு’ இருப்பதாகத் தோன்றுகிறது. “அப்படியெல்லாம் இல்ல சார். எல்லாத்துக்கும் அவரை கூப்பிட்டு வெச்சு பேசுவோம். சமயங்களில் அவரது ப்ரைவஸியை கெடுக்க வேணாம்னு நெனப்போம்” என்றார் அணித்தலைவர் நாராயணன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘ரிவார்ட் சேலன்ஞ்சில் வெற்றி பெற்றவுடன் லட்சுமிபிரியா நடனம் ஆடினாரே?” என்ற கேள்வியை அர்ஜூன் கேட்டதும்தான் தாமதம், வேடர்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். “அது ஏண்டா என்னைப் பார்த்து நீ அப்படியொரு கேள்வியைக் கேட்டே?” என்கிற கரகாட்டக்காரன் காமெடி மாதிரி, இனிகோவைப் பார்த்துதான் ஒவ்வொரு முறையும் லட்சுமி நடனம் ஆடுகிறாராம். “நான் பதிலுக்கு இன்னிக்கு டான்ஸ் ஆடி பழிவாங்கலாம்னு வந்தேன். ஆனா முடியாமப் போச்சு” என்று அசடு வழிந்தார் இனிகோ.

சர்வைவர் 36 |
சர்வைவர் 36 |

முன்னர் லட்சுமிக்கு இனிகோ செய்ய வந்த உதவிகளை “அதெல்லாம் என்னால முடியும்” என்று தட்டி விட்டாராம் லட்சுமி. அது சார்ந்த புகைச்சல் இருவரிடமும் இருந்திருக்கும் போலிருக்கிறது. எனவே தனது வெற்றியை இனிகோவை பார்த்து லட்சுமி கொண்டாடி விட்டார்.

அடுத்ததாக உமாபதியின் ‘Attitude’ பற்றிய பேச்சு வந்தது. உமாபதியின் உடல்மொழி நெருடலை ஏற்படுத்தினாலும் இது அனைத்து விளையாட்டுக்களிலும் சில ஆட்டக்காரர்கள் காட்டும் Attitudeதான். இது Part of the Game. எதிரணியின் மீது உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்தும் உத்தியாகவும் இதைப் பயன்படுத்துவார்கள். எனவே இதை பெரிய குற்றமாகச் சொல்ல முடியாது. ஆனால் உண்மையான ஸ்போர்ஸ்ட்மேன்கள் இதைச் செய்ய மாட்டார்கள்.

ஏலத்தின் போது உணவின் மீதான விலையை உமாபதி கூட்டியதுதான் முறையற்ற விஷயம். அந்த இடத்தில் உணவிற்காக ஒவ்வொருவரும் எப்படி ஏங்குவார்கள் என்பது உமாபதிக்குத் தெரியும். தன்னிடம் அதிக பணம் இருக்கிறது என்பதற்காக மற்றவர்களின் வயிற்றில் அடிப்பதைப் போல் உமாபதி செயல்பட்டது நெருடலாகத் தெரிந்தது. (இதையேதான் ரவியும் பிற்பாடு சொன்னார்) ஆனால் அந்த வயதுக்கேயுரிய விளையாட்டு மனநிலையில் உமாபதி இதைச் செய்திருப்பார் என்றுதான் யூகிக்கத் தோன்றுகிறது. மத்தபடி அவர் ஒரு ‘பாசக்காரப்பயதான்’.

வேடர்களுக்கு உமாபதியின் Attitude எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பது உண்மை. இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்கள். அதே சமயத்தில் இது part of the game என்கிற நிதர்சனமும் அவர்களுக்குப் புரிந்திருக்கிறது. ஐஸ்வர்யா இதைச் சரியாகக் குறிப்பிட்டார். ‘ஜெயித்தால் நான் அப்படி ஆட மாட்டேன்” என்பதையும் ஐசு பின்குறிப்பாகச் சொன்னது சிறப்பு.

“இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்ட பிறகும் கொடியை நடாமல், எதிரணியை வெறுப்பேற்றுவது போல் உமாபதி தெனாவெட்டாக அமர்ந்திருந்தது எனக்கும் நெருடலை ஏற்படுத்தியது. ஆனால் அந்தச் சமயத்திலும் நான் மேலும் இரண்டு படிக்கட்டுக்களை அமைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்” என்று நந்தா சொல்லியதுதான் உண்மையான sportsmanship.

“உங்க டீம்ல யார் முடிவுகளை எடுக்குறா? இப்ப யாரு உண்மையான லீடர்?” என்றொரு முக்கியமான கேள்வியைக் கேட்டார் அர்ஜூன். இந்தப் புகார் வேடர்களின் மீது தொடக்கக் காலத்திலிருந்தே இருக்கிறது. பார்வதியும் இதை ஆரம்பத்தில் குறிப்பிட்டார். வேடர்கள் தீவில் ஒரே நாள் மட்டுமே தங்கிய வனேசா கூட “இந்த அணியில் நந்தாதான் முடிவுகளை எடுப்பது போல் தெரிகிறது” என்று சரியாக கணித்து விட்டார்.

சர்வைவர் 36 |
சர்வைவர் 36 |

ஆகவே நந்தாதான் அங்கு நிரந்தர தலைவராக இருப்பது போல் தெரிகிறது. ஒருவகையில் இது சர்வாதிகாரம் என்றாலும் இன்னொரு வகையில், அணியுடன் கூடிப் பேசி, வரும் கருத்துக்களை அலசி ஆராய்ந்து, ஜனநாயகத்தன்மையுடன் ஒருவர் சரியான முடிவை எடுக்கும் தகுதி கொண்டிருந்தால், அவரே பெரும்பலான முடிவுகளை எடுப்பதில் தவறில்லை. அந்த முடிவுகள் பாரபட்சமின்றி அமைந்து வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறதா என்பதையே பார்க்க வேண்டும். இந்த நோக்கில் நந்தா சரியான தலைவரா என்பதுதான் கேள்வி.

“நாங்கள் அணியாக விவாதிக்கிறோம். ஆனால் அந்த முடிவுகளை தொகுத்து வெளியில் சொல்லும் ஒரு வாய்ஸாக நந்தா சிறப்பாக செயல்படுகிறார்” என்று நாராயணன் சொன்னது ஒருவேளை சரியாகவே இருக்கலாம். ஆனால் அவர்தான் இந்த வாரத்தின் தலைவர். எனவே அதை நினைவில் இருத்திக் கொண்டு பதில் சொல்லியிருக்கலாம்.

“ஓ… அப்ப நந்தாதான் உங்க டானா.. இந்த வார முடிவும் அவர் எடுத்ததுதானா?” என்று கிண்டலடித்த அர்ஜூன், அடுத்ததாக ரவியின் பக்கம் வண்டியைத் திருப்பி “என்னை வெளியேத்திடுங்கன்னு எப்பப்பாரு சொல்லிட்டே இருக்கீங்க.. அதுக்கு நீங்களாகவே வெளில போயிடலாமே?” என்று கடுமையான கேள்வியைக் கேட்க “சார்... எனக்குப் பார்த்தீங்கன்னா உடம்பு வலி… டாஸ்க் வரும் போது என்னோட பெஸ்ட்டை தர்றேன்” என்று ஆரம்பித்த ரவியை “அதெல்லாம் புரியது. அதுக்குத்தான் சொல்றேன். வாக்அவுட் பண்ணிடலாமே” என்று கிடுக்கிப்பிடி போட்டார் அர்ஜூன்.

சர்வைவர் 36 | பெசன்ட் ரவியை வெளியேற்றிய வேடர்கள்… ஆனால், நந்தா ஏன் அந்த முடிவை எடுத்தார்?!

தனது உடல்நிலை குறித்த யதார்த்தம் ஒரு பக்கம் ரவிக்குப் புரிகிறது. எனவேதான் ‘’எனக்கு வாக்களியுங்கள்” என்று அணியிடம் தானாக முன் வந்து சொல்கிறார். தன்னால் அணிக்குப் பின்னடைவு வந்து விடக்கூடாது என்கிற நல்லெண்ணமும் அவருக்கு இருக்கிறது. அதே சமயத்தில் ‘தோல்வியை ஒப்புக் கொண்டு வெளியேறுவதை’ அவரது ஈகோ தடுக்கிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் அடிப்படையில் ஒரு ஸ்டன்ட் மேன். ‘சர்வைவர்’ என்கிற போட்டியில் தானாக முன்வந்து வெளியேறுவது அவருக்குத்தான் சங்கடம். ‘இறுதி வரை போராடியிருக்க வேண்டும்’ என்கிற விமர்சனங்கள் வரும். வெளியேற்றம் தானாக நடந்தால் அது அவருக்கு சற்று ஆசுவாசத்தை தரும்.

‘ஒழுக்கமான அணி-ன்னு வேடர்கள் பெயர் வாங்கியிருக்கீங்க... ஆனா உங்க கிட்ட கலகலப்பு குறைஞ்சு போச்சு. சிரிப்பே இல்லையே?” என்று அர்ஜூன் கேட்க “தொடர்ச்சியான தோல்விகள் அப்படியொரு மனநிலையை உருவாக்கியிருக்கலாம். நாங்கள் மீண்டு வருவோம்” என்று பாசிட்டிவாக பதில் அளித்தார் நந்தா. இவர் சொன்ன இன்னொரு காரணம் ‘உணவு’. இந்த விஷயத்தில் நந்தா சொல்லும் புகாரை தொடர்ந்து கவனிக்கிறோம். மனதுக்கு நிறைவான உணவு கிடைக்காதது கூட ஒருவகையான உளைச்சலை ஏற்படுத்தி விடலாம். ரிவார்டு சேலன்ஞ்சிலும் இவர்கள் தோற்பது உணவு கிடைப்பதை அரிதாக்கியிருக்கிறது. ‘’Physically weak ஆக இருக்கோம்” என்று நந்தா சொன்ன வசனத்தை மட்டும், “இதுக்கு முன்னாடி மும்பைல என்ன செஞ்சிட்டு இருந்தீங்க... சொல்லுங்க. சொல்லுங்க சொல்லுங்க” என்கிற ‘பாட்ஷா’வின் எக்கோ எபெக்ட்டில் தனியாக ஒலிக்க வைத்தார்கள்.

‘வெளியேற்றுவதற்காக யாரை தேர்ந்தெடுப்பது’ என்கிற விஷயத்தில் இன்னமும் கூட வேடர்களால் ஒற்றுமையான முடிவை எட்ட முடியவில்லை போலிருக்கிறது. எனவே ‘’நீங்க பேசிட்டு இருங்க. நான் போய் டீ குடிச்சிட்டு வர்றேன்” என்று கிளம்பினார் அர்ஜூன். ஒருவகையில் இது வேடர்களின் பலவீனத்தைக் காட்டுகிறது. முடிவெடுப்பதில் உள்ள தடுமாற்றம்.

திரும்பி வந்த அர்ஜூன் வாக்களிப்பை ஆரம்பித்தார். எதிர்பார்த்தபடியே ரவிக்கு எதிராக 4 வாக்குகள் வந்திருந்தன. சரணுக்கு எதிராக ஒரு ஓட்டு இருந்தது. இதை ரவி போட்டிருப்பார் என்பது எளிதாக எதிர்பார்க்கக்கூடியதுதான். ஆனால் நாராயணனுக்கு எதிராக நந்தா இட்ட வாக்குதான் ஆச்சரியம். அணியில் ரவிதான் அதிகம் பலவீனமானவர் என்பது நந்தாவுக்கு நன்றாகவே தெரியும். மேலும் அதிகம் உணர்ச்சிவசப்படாமல் முடிவுகளை எடுக்கக்கூடியவர் நந்தா. மேலும் நாராயணனும் நந்தாவும் நெருக்கமான நண்பர்களும் கூட. எனில் நந்தா ஏன் இந்த முடிவை எடுத்தார்?

முத்து அதிர்ஷ்டமும் ரவியை கை விட்டது. தனது அணியிடம் மிக பாசிட்டிவ்வாக பேசி விட்டு ரவி சென்றார். “எதிர் டீம்ல உங்க ஃபிரெண்டு இருக்கறதால எதையும் விட்டுக் கொடுக்காதீங்க” என்று போகிற போக்கில் இனிகோ மீது கொளுத்தி விட்டுப் போனதை மட்டும் அவர் தவிர்த்திருக்கலாம். லட்சுமிபிரியா, அம்ஜத் ஆகியோரையும் மறக்காமல் ரவி நினைவுகூர்ந்தது சிறப்பான விஷயம்.

ரவியை வெளியேற்றுவது என்பது வேடர்களுக்கு மிகுந்த மனச்சங்கடத்தையும் துயரத்தையும் தரக்கூடிய விஷயம். எனவே ஒவ்வொருவரும் உள்ளுக்குள் கலங்கியபடிதான் வாக்களித்தார்கள். ரவி பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக தெரிந்தாலும் உள்ளே எத்தனை இனிமையானவர் என்பதை சர்வைவர் மூலம் அறிய முடிந்தது.

என்றாலும் அவர் மூன்றாம் உலகத்திற்குச் சென்று விஜியின் கையால் நண்டுகுழம்புதான் சாப்பிடப் போகிறார். இனி வேடர்களின் அணியின் மாற்றங்கள் எவ்வாறு இருக்கும்?

பார்த்துடுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism