Published:Updated:

சர்வைவர் - 37 | ‘’சரணா சின்னைப் பையன்?!’’ வெகுண்டெழுந்த விஜி, கடுப்பில் காயத்ரி!

சர்வைவர் - 37

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 37-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 37 | ‘’சரணா சின்னைப் பையன்?!’’ வெகுண்டெழுந்த விஜி, கடுப்பில் காயத்ரி!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 37-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 37

சர்வைவர் போட்டியில் இருந்து பெசன்ட் ரவி நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார். இது எப்போதோ எதிர்பார்த்த விஷயம்தான். எனவே பெரிய அதிர்ச்சியில்லை. இது அவருக்குமே ஒருவகையான விடுதலைதான். ஆனால், ‘கெளம்பு காத்து வரட்டும்’ என்பது போல் மற்றவர்கள் எரிச்சலோடு வெளியேற்றப்பட, ரவி மட்டும் பிரிய மனமேயின்றி பாசத்தோடு வழியனுப்பி வைக்கப்பட்டார் என்பதுதான் இவருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

இன்னொரு விஷயம். மேலை நாடுகளில் 18 வயதைக் கடந்தவர்களுக்கு ‘கட்டாய ராணுவப்பயிற்சி’ என்பது நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் கட்டுப்பாடுள்ள குடிமகன்களை ஒரு சமூகம் உருவாக்க முடியும்ம் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இந்தியாவில் தனிநபர் விருப்பத்தில் அரசு நுழைய முடியாது என்பது தொடங்கி இதன் பின்னால் ஏராளமான காரணங்களைச் சொல்லப்படுகிறது.

ஆனால், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களை தகுந்த மேற்பார்வையில் வனப்பிரதேசங்களுக்கு அனுப்பி குறைந்தது ஒரு வாரமாவது அவர்கள் அங்கு வாழும் பயிற்சியைத் தர வேண்டும். இது ஏதோ டூர் போய் விட்டு திரும்பி வரும் ஜாலியான நிகழ்ச்சியாக அல்லாமல், சர்வைவர் போல உண்மையிலேயே அடிப்படையான விஷயங்கள் மட்டுமே தரப்பட வேண்டும். இதனால் இயற்கையோடு இயைந்து வாழ்வது எத்தனை அருமையானது, அவசியமானது என்பது இளம் மனங்களில் ஆழமாகப் பதியும்.

“சர்வைவர்ல என்ன பாடம் கத்துக்கிட்டீங்க?” என்று ரவியிடம் அர்ஜூன் கேட்டதற்கு “ஒரு மெக்கானிக்கா அடிமட்டத்துல இருந்து கஷ்டப்பட்டு மேலே வந்தேன் சார். என் பசங்களுக்கும் என் கஷ்டத்தை நிறைய சொல்லியிருக்கேன். ஆனா நானே இங்க வந்து பல பாடங்களைக் கத்துக்கிட்டேன்” என்று ரவி சொல்வதைக் கவனியுங்கள்.

சர்வைவர் - 37
சர்வைவர் - 37

சர்வைவர் 37-வது நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் சம்பிரதாயப்படி வெளியேறும் போட்டியாளரிடம் ‘மூன்றாம் உலகம்’ பற்றிய ரகசியத்தை அவிழ்க்க வேண்டும். அந்தச் சடங்கு தொடங்கியது. “வாங்க ரவி” என்று வரவேற்ற அர்ஜுன் “மத்தவங்களை எல்லாம் பிடிக்காமத்தான் வோட்டு போட்டு வெளியே அனுப்பினாங்க. ஆனா, நீங்க மட்டும் விதிவிலக்கு. உங்களை எல்லோருக்கும் பிடிக்கும். இருந்தாலும் உடல்நலம் காரணமா உங்களை அனுப்பியிருக்காங்க” என்று அர்ஜூன் இந்த விசாரணையை ஆரம்பித்து வைத்தார்.

“ஆமாம் சார்... ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது. எங்க டீம்ல ஒரு நல்ல vibe இருந்தது. தொடர்ச்சியான தோல்விதான் இப்போ நாங்க டல்லா இருக்கறதுக்கு காரணம். ஒரு கேம்ல ஜெயிச்சிட்டோம்னா பழைய கலகலப்பு திரும்பிடும்” என்று உணர்வுபூர்வமாக சொன்னார் ரவி.

“உங்க டீம்ல இருக்கறவங்களோட ப்ளஸ் மற்று மைனஸ் சொல்லுங்க” என்கிற அடுத்த கேள்விக்கு “நந்தா நல்லா யோசிப்பாரு. ஆனா, சமயங்கள்ல குழப்பிடுவாரு. நாராயணன் பிளான் பண்ணுவாரு. இனிகோவுக்கு எதிர் டீம்ல ஃபிரெண்டு இருக்கார். அவர் கொஞ்சம் குழப்பமா இருக்காரு. இங்க உண்மையா உழைன்னு அவர் கிட்ட சொல்லியிருக்கேன்” என்று பட்டியலிட்டார் ரவி.

“யாருக்கு வோட் பண்றதுன்றதுல ரொம்ப குழப்பம் இருந்தது போலிருக்கே?” என்ற கேள்விக்கு “ஆமாம் சார்... இனிகோ இல்லைன்னா சரணைத்தான் சொன்னாங்க. ஆனா… நான்தான் சொன்னேன். அவங்க விளையாட வேண்டிய பசங்க. என்னால முடியல. நான் போறேன்னு. நந்தா, ஐஸ்வர்யாலாம் அழுதுட்டாங்க” என்றார் ரவி.

சர்வைவர் - 37
சர்வைவர் - 37

“ஓகே... மூன்றாம் உலகம்ன்னு ஒண்ணு இருக்கு.. அங்க போறீங்களா?” என்று அர்ஜூன் கேட்க “இல்ல சார் வீட்டுக்குப் போறேன்” என்று ரவி சொல்லி விடுவார் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால் ஆசை யாரை விட்டது? “ஓகே சார்” என்று ரவி ஒப்புக் கொண்டவுடன் ‘ஆல் தி பெஸ்ட்’ என்றபடி அர்ஜூன் விடைபெற்றுக் கொண்டார்.

முன்பே சொன்னதுதான். ரவியின் மனம் உண்மையிலேயே ஓய்வை மட்டுமே எதிர்பார்க்கும். உடம்பு வலி, குடும்பத்தைப் பார்க்கும் ஆசை போன்ற விஷயங்கள் அந்தப் புள்ளியை நோக்கித்தான் அவரை நகரச் சொல்லும். ஆனால் அவருக்குள் இருக்கிற ஸ்டன்ட்மேன், தோல்வியை அத்தனை சீக்கிரம் ஒப்புக் கொள்ள அனுமதிக்க மாட்டார். ‘சரி... கடைசி வரை பார்ப்போம்” என்றுதான் தோன்ற வைக்கும்.

ரவியிடமிருந்து வந்த ‘பாசிட்டிவ் எனர்ஜி’ ஓலையைப் பார்த்தவுடன் வேடர்கள் மிகவும் கண்கலங்கி நெகிழ்ச்சியடைந்தார்கள். “நான் நிறைய அவமானங்களை சந்திச்சிருக்கேன். ஆகவே நீ அதையெல்லாம் பத்தி கவலைப்படாம உன் திறமையை வெளிப்படுத்து” என்று சரணுக்கு ரவி எழுதிய குறிப்பு முக்கியமானது. “சரி.. அடுத்த கேம்ல நாம ஜெயிக்கறோம்” என்று அனைவரும் உரக்க கத்தி தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டனர்.

மூன்றாம் உலகம். சமையல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த விஜியும் காயத்ரியும் ‘ஹாய்’ என்கிற ரவியின் குரலைக் கேட்டு ‘யம்மா...’ என்று நெஞ்சில் கை வைத்து திடுக்கிட்டார்கள். (இந்த சீன் ஏதோ செட்டப் மாதிரியே தெரியுதே?!). “ஹப்பாடா... விஜி இங்க இருக்காங்களா? அப்ப சோத்துக்கு கவலையில்லை” என்று தெலுங்கில் பேசி உற்சாகமானார் ரவி.

“அவர் ஏதோ பிளானோட வந்திருக்கிற மாதிரி எனக்குத் தோணுது” என்று மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டார் காயத்ரி. பாவம், மூன்றாம் உலகத்தில் பல காலமாக வசித்து, பிள்ளைப்பூச்சியைப் பார்த்தால் கூட பயப்படுகிற அளவுக்கு காயத்ரி மாறி விட்டார் போலிருக்கிறது.

சர்வைவர் - 37
சர்வைவர் - 37

அணியில் நடந்த பழைய விஷயங்களைக் கிளறினார் விஜி. ஆனால் ரவி மிக ஜாக்கிரதையாக, தன் சொற்களை நேர்மறையாக அளந்து வெளியிட்டது நல்ல பண்பு. “உமாபதி உனக்கு பரிசு தந்திருக்கான்” என்பதைக் கேட்டதும் விஜி மிகவும் நெகிழ்ந்து விட்டார். இந்தத் தகவல் அவரை உற்சாகப்படுத்துவதற்குப் பதிலாக பிரிவு ஏக்கத்தை அதிகப்படுத்தி விட்டது.

சரணைப் பற்றி நோண்டி அறிவதில் விஜி ஆர்வமாக இருந்தார். அவரை வெளியேற்றிய வில்லன் ஆயிற்றே? “பாவம் சரண்… சின்னப்பையன்” என்று ரவி பெருந்தன்மையாக சொன்னாலும் “அவனா சின்னப்பையன்..? ரவிக்கு இன்னமும் அவனைப் பத்தி தெரியல” என்று விஜி காண்டானார். (அக்கா, அண்ணா என்று மேலுக்கு பாசத்தைப் பொழிந்தாலும், சரண் உண்மையிலேயே காடர்கள் அணியில் அசெளகரியமாக இருந்தார் என்பதை இப்போதுதான் உணர முடிகிறது!).

“மூன்றாம் உலகத்தில் நான் மட்டும் ஏன் நிறைய நாள் தனியா இருக்கணும்? இத்தனைக்கும் நான் இங்க நடந்த எல்லா கேம்லயும் ஜெயிச்சிருக்கேன். எனக்கு சலிப்பா இருக்கு. வீட்டுக்குப் போகணும்னு தோணுது” என்று காயத்ரி சலிப்புடன் எண்ணுவது நியாயமான விஷயமே. அவரை உடனே அணிக்குத் திருப்பியனுப்புவதுதான் முறையான செயலாக இருக்கும்.

ஓலை வந்தது. ‘மூன்றாம் உலகத்தில்’ நிகழும் சவாலுக்கான அழைப்பு அது. “எனக்கு ரொம்ப போரடிக்குது. நான் போட்டிக்கு தயாரா இருக்கேன்” என்று உற்சாகமாக முன்வந்தார் விஜி. ஆனால் ரவிக்குள் இருந்த தயக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அவர் இப்போதுதான் ‘மூன்றாம் உலகத்திற்குள்’ வந்திருக்கிறார். மட்டுமின்றி இதுவரை அணியாகச் செயல்பட்ட ரவி, முதன்முறையாக தனியாக நின்று தன் திறமையைக் காண்பிக்க வேண்டும். ‘அந்தப் போட்டி எப்படி இருக்குமோ என்று அவர் தயங்குவது இயல்புதான். ஆனால் விஜி தொடர்ந்து வற்புறுத்தவே ஒரு கட்டத்தில் ஒப்புக் கொண்டார் ரவி.

‘வாங்க சர்வைவர்ஸ்’ என்று இவர்களை வரவேற்றார் அர்ஜூன். தான் நண்டு பிடித்த கதையை விஜி உற்சாகமாக சொல்ல “அப்படியா?” என்று செயற்கையான ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டார் அர்ஜூன். ‘இந்தப் பக்கம் ஒரு பாவப்பட்ட நண்டு நிக்குது… அதை முதல்ல பாருங்க சார்’ என்பது போல் பரிதாபமாக நின்ற காயத்ரி “மூன்றாம் உலகத்துல ரொம்ப நாளா இருக்கேன். நேத்திக்குதான் உப்பு கிடைச்சது. ரொம்ப கஷ்டமா இருக்கு. பார்த்துப் பண்ணுங்க சார்” என்பது போல் கேட்டதற்கு “ஏன்... கடல் தண்ணீர்ல உப்பு எடுக்க முடியாதா.. ட்ரை பண்ணீங்களா?” என்று கேட்டு காயத்ரியின் வெந்த புண்ணில் உப்பைத் தடவினார் அர்ஜூன்.

சர்வைவர் - 37
சர்வைவர் - 37

சமைப்பதற்கு கடல் நீர் உகந்ததல்ல. கடுமையான சுகாதாரக் கேடுகள் ஏற்படும். ஆனால் நண்டு போன்ற உயிரினங்களை சில பாதுகாப்பு முறைகளுக்குப் பின்பு கடல்நீரில் சமைக்க முடியும் என்கிறார்கள்.

“மூன்றாம் உலகத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக இரண்டு போட்டியாளர்கள் தங்களுக்குள் பேசி ஒத்துக்கிட்டு வந்திருக்கீங்க. ஓகே... சவாலுக்குள் போகலாமா?” என்ற அர்ஜூன் போட்டியின் விதிமுறையை விளக்கினார்.

ஒரு நீண்ட மேஜையில் Maze எனப்படும் புதிர்ப்பாதை அமைக்கப்பட்டிருக்கும். எழுத்தாணி போன்ற விஷயத்தை கையில் பிடித்து அந்தப் பாதையில் வழிகண்டுபிடித்து வெளியே வர வேண்டும். பிறகு கிடைக்கும் சாவியைக் கொண்டு மூடியிருக்கும் ஒரு பெட்டியை உடைத்தால் அதன் உள்ளே ‘Puzzle blocks’ இருக்கும். அதைக் கொண்டு அந்த புதிரை முதலில் சால்வ் செய்பவர் வெற்றியாளர்.

புதிர்ப்போட்டி என்றதுமே இதில் விஜிதான் வெற்றி பெறுவார் என்பது முதலிலேயே தெரிந்து போயிற்று. ஏனெனில் ‘நான் puzzle-ல் வீக்’ என்பதை ரவியே சொல்லியிருக்கிறார். ஒருவேளை இந்தப் போட்டி விஜிக்கும் காயத்ரிக்கும் இடையில் நிகழ்ந்திருந்தால் சுவாரசியமாக அமைந்திருக்கலாம்.

போட்டி தொடங்கியது. ஆச்சரியப்படும் படியாக முதல் நிலையில் விஜியை விடவும் முன்னணி நிலையில் இருந்தார் ரவி. பிறகு இருவரும் ஒரே கட்டத்தில் அதை முடித்து இரண்டாம் கட்டத்திற்கு வந்தார்கள். ஆனால் ரவி இங்குதான் மாட்டிக் கொண்டார். பிட் அடிக்க முயலும் மாணவன் மாதிரி அவரும் என்னென்னமோ விழித்துப் பார்க்கிறார். ஒன்றும் நடக்கவில்லை.

ரவி பலகையின் வடிவங்களை வைத்து மட்டும் பார்த்து ஒட்ட வைக்க முயன்றாரே ஒழிய, அதன் உருவம் சரியாக வருகிறதா என்பதை கவனிக்கவில்லை. விஜிக்கும் ஆரம்பத்தில் சற்று திகைப்பாக இருந்தாலும் வடிவம் மற்றும் உருவம் ஆகிய இரண்டையும் கவனித்து புதிரின் மையப்பகுதியை முதலில் செட் செய்து விட்டு பிறகு ஓரங்களை அமைக்கத் தொடங்கினார். “யம்மா... சீக்கிரம் நீ முடிம்மா... என்னால முடியல” என்கிற மைண்ட் வாய்ஸூடம் இன்னொரு பக்கம் ரவி திகைத்துக் கொண்டு நின்றார். ஒரு கட்டத்தில் அந்தப் புதிரின் சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட விஜி எளிதாக அமைத்து வெற்றி பெற்றார்.

சர்வைவர் - 37
சர்வைவர் - 37

மூன்றாம் உலகத்தில் தான் சந்தித்த முதல் சவாலில் வெற்றி பெற்ற விஜிக்கு சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்பட்டது. “தோத்தது எனக்கு கஷ்டமாத்தான் இருக்கு. என்றாலும் வீட்டுக்குப் போகும் சந்தோஷம் அதை விடவும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்ற ரவி “எங்க டீம் என்னை நல்லாப் பார்த்துக்கிட்டாங்க... வீட்ல இருந்த ஃபீல் இருந்தது” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னபடி விடைபெற்றார்.

சினிமாத்துறையில் ரவியின் வளர்ச்சிக்கு அர்ஜூன் மிகவும் உறுதுணையாக இருந்திருப்பார் போலிருக்கிறது. அர்ஜூன்தான் இவரை அறிமுகப்படுத்தினாராம். எனவே அர்ஜூனை சந்திக்கும் ஒவ்வொரு தருணத்திலும் தனது விசுவாசத்தையும் பணிவையும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார் ரவி.

ரவி இல்லாதது வேடர்கள் அணிக்கு மனரீதியான இழப்புதான் என்றாலும் ஒருவகையில் சுமை குறைந்தது என்பதுதான் யதார்த்தம். இனி அவர்களின் பயணம் எப்படி இருக்கும்?

பார்த்துடுவோம்!