Published:Updated:

சர்வைவர் - 7 | ராம் என்கிற பெயருக்கும் பாலத்துக்கும் ராசியே இல்ல போல... ஆண்களும், சில அலப்பறைகளும்!

சர்வைவர் - 7

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் ஏழாவது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 7 | ராம் என்கிற பெயருக்கும் பாலத்துக்கும் ராசியே இல்ல போல... ஆண்களும், சில அலப்பறைகளும்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் ஏழாவது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 7

‘Immunity Challenge’ தான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். இதில் வெற்றி பெறும் அணிக்கு எலிமினேஷன் கவலை இனி இல்லை. பாதுகாப்பாக இருக்கலாம். இதற்கு அடையாளமாக தரப்படும் வாளை அர்ஜுன் அறிமுகப்படுத்தினார்.

இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந்த ரியாலிட்டி ஷோவில் வரும் பல தொழில்நுட்ப அம்சங்கள் அருமையாக இருக்கின்றன. இரண்டு அணிகளும் பழங்குடிகளை அடையாளமாகக் கொண்டிருப்பதால் அதற்குத் தொடர்பாக சர்வைவர் டீம் உருவாக்கியிருக்கும் Properties ஒவ்வொன்றும் பார்க்கவே அத்தனை அருமையாக இருக்கிறது. போலவே ஒளிப்பதிவு, அதன் கோணங்கள் என்று பல பாராட்டத்தக்க அம்சங்கள் இருக்கின்றன. ஆனால், தொழில்நுட்ப அம்சங்களில் காட்டப்படும் பல மெனக்கெடல்களை உள்ளடகத்திலும் காட்டினால் நிகழ்ச்சி சட்டென்று பிக்கப் ஆகி விடும் என்று தோன்றுகிறது.

நேற்றைய எபிசோடில் நடந்த ‘இம்யூனிட்டி சவால்’ விறுவிறுப்பாகவே இருந்தது. வந்த ஏழாம் நாளிலேயே போட்டியாளர்கள் பல பிரிவுகளாக மாறியிருப்பதும் அவர்களுக்குள் ஏராளமான கருத்து வேறுபாடுகள், ரகசிய விரோதங்கள், உடன்பாடுகள் ஏற்பட்டிருப்பதில் பல சமூகவியல் பாடங்கள் உள்ளன.

ஓகே... ஏழாம் நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் - 7
சர்வைவர் - 7

இரண்டு அணிகளுக்கும் தனித்தனியாக நீண்ட மரத்துண்டுகள் போடப்பட்டிருந்தன. கீழே கடல்நீர். போட்டியாளர்கள் அந்த மரத்துண்டின் மீது வரிசையாக கைகோர்த்து பேலன்ஸ் செய்து நிற்க வேண்டும். கடைசியில் இருப்பவர், ஒவ்வொருவரையும் பிடித்துக் கொண்டு தாண்டி வந்து மேடையை அடைய வேண்டும். இப்படி ஒவ்வொருவராக வந்து சேர்ந்து விட்டால் போட்டி நிறைவுற்றது என்று பொருள்.

எந்த அணி முதலில் வருகிறதோ, அவர்கள் இந்த ‘இம்யூனிட்டி சேலஞ்சில்’ வென்று ‘வாளை’ வெகுமதியாக பெறுவார்கள். இந்த வாள் கையில் இருக்கும் வரை அவர்களுக்கு எலிமினேஷன் பயம் கிடையாது. தோற்ற அணி, Tribal council-ல் சென்று அர்ஜூனை சந்திக்க வேண்டும். வாக்களிப்பின்படி ஒருவர் அதில் வெளியேறுவார். இதுதான் போட்டியின் விதிமுறை.

கேட்பதற்கு எளிதான விளையாட்டு போல் தோன்றினாலும் காட்சியாக பார்க்கும்போதுதான் அதன் சிரமம் தெரிந்தது. ஒரு நீளமான ஒற்றைச் சுவரில் எதிரெதிரே இரு நபர்கள் பாதி தூரத்துக்கு வந்து விட்டால் எப்படி ஒருவரையொருவர் தாண்டிச் செல்வார்கள்? இதைக் கற்பனை செய்து கொண்டால் விளையாட்டின் சிரமம் புரியும். ஒவ்வொருவரும் கைகோர்த்து மரத்துண்டின் மேலே பேலன்ஸ் செய்து நிற்க வேண்டும். அதே சமயத்தில் தன்னை தாண்டிச் செல்வபவரையும் தாங்க வேண்டும். சற்று கால் வழுக்கினாலும் நீரில் விழ வேண்டியதுதான். அப்படி விழுந்தால் மறுபடியும் ஆரம்பிக்க வேண்டியதுதான்.

இது தவிர ‘hidden immunity’ என்கிற இன்னொரு சமாசாரம் பற்றியும் அர்ஜுன் சொன்னார். தீவுக்குள் போட்டியாளர்கள் அலைந்து திரியும் போது குறிப்பிட்ட அடையாளம் கொண்ட ஒரு பொருள் அவர்களுக்குத் தற்செயலாக கிடைக்கலாம். அதைக் கண்டெடுப்பவர்களுக்கும் எலிமினேஷன் பிரச்னை இருக்காது.

போட்டி ஆரம்பித்தது. ‘வேடர்கள்’ அணி தனது உத்தியை சிறப்பாக அமைத்தது. போட்டியாளர்களின் உடல் எடையின் அடிப்படையில் வரிசையை அமைத்தார்கள். எடை அதிகமாக உள்ள பெசன்ட் ரவி கடைசியில் நின்றார். எடை குறைவாக உள்ள ஐஸ்வர்யா முதலில் நின்றார். எடை குறைவாக உள்ளவர்கள் தாண்டி வருவதில் சிரமங்கள் குறைவு.

சர்வைவர் - 7
சர்வைவர் - 7

‘காடர்கள்’ அணியில் விஜயலட்சுமி அதிக சிரமம் இல்லாமல் கடந்து வந்து விட்டார். ‘வேடர்கள்’ அணியில் ஐஸ்வர்யா, சக போட்டியாளர்களின் முன்பக்கமாக கடக்கும் போது சில சிரமங்களைச் சந்தித்தாலும் அவரும் கடந்து விட்டார்.

அடுத்ததாக சரண் கடக்கும்போது காயத்ரியை இறுக்கமாகப் பிடித்துக் கொள்வதில் அவருக்கு தடுமாற்றம் இருந்ததுபோல. மிகவும் போராடினார். ஒரு கட்டத்தில் சரண், ராம், காயத்ரி ஆகிய மூவருமே அறுந்த சங்கிலி போல நீரில் விழுந்தார்கள்.

எதிர்அணியில் பார்வதி சற்று சிரமப்பட்டாலும் தனது டாஸ்க்கை எப்படியோ முடித்து விட்டார். “என்னையாடா.. பலவீனமான போட்டியாளர்னு சொன்னீங்க.. பாத்தேல்ல.. பாத்தேல்ல..’ என்று பெருமையடித்துக் கொள்ளும் வகையில் அவருடைய உடல்மொழி அலட்டலாக இருந்தது.

சர்வைவர் - 7
சர்வைவர் - 7

சரண் மறுபடியும் கடக்க முயலும் போது அவரைத் தாங்க முடியாமல் ராம் நிறைய தடுமாறினார். சரணுக்கு ஸ்டாமினா குறைவாக இருந்தது. சோர்வு காரணமாக அவ்வப்போது அவர் கீழே உட்கார முயற்சித்த போது அர்ஜூன் எச்சரித்தார். மறுபடியும் இந்த அணி நீரில் விழுந்தது. இந்த முறை வரிசை மாறி நந்தா கடக்க ஆரம்பித்தார். ஆனால் அவருமே மிக போராட வேண்டியிருந்தது. ராம் புண்ணியத்தில் மூன்றாவது முறையாக கீழே விழுந்தார்கள். அடுத்த முறை நந்தாவும் நாராயணனும் சேர்ந்து விழுந்தார்கள்.

வேடர்கள் அணி இந்த டாஸ்க்கில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்க ‘காடர்கள்’ ரொம்பவே சொதப்பினார்கள். ராம் நான்காவது முறையாகவும் நீரில் விழுந்து சாதனை படைத்தார். அதென்னமோ ராம் என்கிற பெயருக்கும் பாலத்துக்கும் ராசியே இல்லை போல.

வேடர்கள் அணியில் கடைசியாக அம்ஜத் தாண்டி வர முயன்றார். திருமலை நாயக்கர் தூண் மாதிரி இருந்த பெசன்ட் ரவியைத் தாண்டி வருவதற்குள் அவர் சிரமப்பட்டாலும் எப்படியோ வந்து சேர்ந்ததில் இந்த அணி வெற்றி பெற்றது. தங்களின் ‘Signature movement’-ஐ காட்டி இவர்கள் உற்சாகக் குரல்களை எழுப்பினார்கள். அணியின் தூண் மாதிரி உறுதியாக நின்று அனைவரையும் கரையேற்றிய ‘பெசன்ட் ரவி’யின் பங்களிப்பு பிரத்யேகமாக பாராட்டப்பட்டது.

இந்தப் போட்டியில் ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. சற்று சிரமப்பட்டாலும் பெண்கள் இலகுவாக முடித்த இந்த விஷயத்தை ஆண்கள் செய்து முடிப்பதற்குள் ததிங்கினத்தோம் போட வேண்டியிருந்தது.

காடர்கள் அணியில் ராம் அதிக முறை கீழே விழ காரணமாக இருந்ததால் அவரைக் குற்றவாளி போல பார்த்தார்கள். “நான் கையை ரொம்ப டைட்டா வெச்சிருந்தேன் சார்… அது ஒரு காரணமா இருக்கலாம்” என்று சங்கடத்துடன் விளக்கம் அளித்தார் ராம்.

வேடர்கள் அணி தொடர்ச்சியாக இரண்டாவது சவாலிலும் ஜெயித்து விட காடர்கள் அணி தொங்கப் போட்ட முகத்துடன் தங்களின் இடத்துக்குச் சென்றார்கள். இவர்கள் எலிமினேஷனை எதிர்கொள்ள வேண்டும்.

சர்வைவர் - 7
சர்வைவர் - 7

காடர்கள் அணி தீவுக்கு வந்து சேர்ந்ததும் தோல்வி பற்றிய ரணகள உரையாடல்கள் ஆங்காங்கே குழு குழுவாய் நடந்தேறியது. பெரும்பாலோனோர் ராமையே குற்றம் சொல்லி புறம் பேசினார்கள். குற்றவுணர்வும் சங்கடமுமாய் நின்றிருந்தார் ராம்.

ஆனால் அவரின் நேர்மையை நிச்சயம் பாராட்ட வேண்டும். குழு உரையாடலின் போது ‘இந்தத் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இதை ஒப்புக் கொள்வதில் எனக்கு தயக்கமில்லை. எனக்கு எதிராக நீங்கள் வாக்களியுங்கள். ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால் என் மனஉறுதி அப்படியேதான் இருக்கு” என்று தெரிவித்து விட்டார். ராமுக்கு ஆதரவாக இருந்தவர் காயத்ரி மட்டுமே.

தனித்தனியாக வம்பு பேசும் போது ராமை குற்றம் சாட்டினாலும், குழு உரையாடலின் போது ராம் முழுமையாக சரணாகதி அடைந்து விட்டதால் இதர போட்டியாளர்கள் அதை மென்று முழுங்க வேண்டியதாகிவிட்டது. “எதுக்கு நீ மட்டும் பொறுப்பேற்கணும்?” என்பது போல் சம்பிரதாய ஆறுதல் சொன்னார்கள்.

விக்ராந்த், உமாபதி, சரண் ஆகிய மூன்று ஆண்களும் ஒற்றுமையாக இருப்பதைப் பற்றியும் தான் தனிமையில் ஒட்டாமல் இருப்பதைப் பற்றியும் ராம் திரும்பத் திரும்ப விளக்க, அது ‘குழு மனப்பான்மை’ என்பதைப் போல் தோற்றமளித்து விடுமோ என்கிற அச்சம் விக்ராந்துக்கு ஏற்பட்டது. எனவே ‘இந்த மூணு..பேர்.. மூணு பேர்னு சொல்றதை முதல்ல விடுங்க” என்றார். ராம் அப்படித் தனியாக இருப்பதற்கு அவரேதான் காரணம் என்று உமாபதி உதாரணங்களுடன் விளக்க முயன்றார்.

இந்தக் குழு உரையாடல் காயத்ரிக்கு எதிராகவும் மாறியது. ‘‘இந்திரஜாவை ஏன் பலவீனமான போட்டியாளராக தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று விஜயலட்சுமி சற்று கடுமையான தொனியில் கேட்க “அந்த ட்விஸ்ட்டை நான் எதிர்பார்க்கவில்லை. அங்கே நான் ஒரு முடிவை எடுத்தாக வேண்டியிருந்தது. இந்திரஜா physical task-குக்கு செட் ஆவாரா என்கிற சந்தேகம் இருந்தது’’ என்பதை தயங்கி தயங்கி விளக்கிச் சொன்னார் காயத்ரி. டீம் லீடராக அவர் இதை துணிச்சலாகவே சொல்லியிருக்கலாம்.

சர்வைவர் - 7
சர்வைவர் - 7

இந்த உரையாடலின் போது விக்ராந்துக்கும் காயத்ரிக்கும் இடையில் மறுபடியும் லேசாக முட்டிக் கொண்டது. சட்டென விலகிப் போகும் காயத்ரியின் உடல்மொழியை விக்ராந்த் ரசிக்கவில்லை. “நான் உங்க கிட்ட நேராத்தானே கேட்குறேன். ஏன் முகத்தை திருப்பிக்கிறீங்க” என்று விக்ராந்த் கேட்க, தனது புகழ்பெற்ற தத்துவமான ‘எதுவாக இருந்தாலும் 2 நிமிடம் தள்ளிப்போடு’ பாலிசியின்படி சில நிமிடங்கள் கழித்து மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆனார் காயத்ரி.

அடுத்ததாக காயத்ரி ஒரு விஷயம் செய்தார். ஒரு நெருக்கடியான நிலையில், மனித மனம் எப்படி தானாகவே டிஃபென்ஸ் நிலையை எடுக்கும் என்பதற்கு அவர் செய்தது ஒரு நல்ல உதாரணம். ஏறத்தாழ அணி முழுவதுமே ராமுக்கு எதிராக நின்று கொண்டிருந்ததால், ராமுக்கு தந்து கொண்டிருந்த தனது ஆதரவை கை விட முடிவு செய்தார்.

இங்கு ஒரு ஃபிளாஷ்பேக். துவக்க நாளில் காயத்ரியிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்த ராம் “உங்க கிட்ட மட்டும்தான் ஃப்ரெண்டா ஃபீல் பண்ண முடியுது. எதுவா இருந்தாலும் நாம ரெண்டு பேரும் விட்டுக் கொடுக்காம இருக்கலாம்” என்பது போல் பேசி உறுதிமொழி வாங்கியிருந்தார்.

இந்த ஃபிளாஷ்பேக் ரகசியத்தை ஒவ்வொருவரிடம் தனியாகப் பேசும் போது உடைத்த காயத்ரி “ராமுக்கு கொடுத்த பிராமிஸை கைவிடுவதென்று நான் முடிவு செய்து விட்டேன். எனவே நீங்கள் ராமுக்கு எதிராக வாக்களித்தாலும் பிரச்னையில்லை. நானும் அதைத்தான் செய்யப் போகிறேன்’’ என்பதை ஒவ்வொருவரிடம் தனித்தனியாக தெரிவித்தார். இதன் மூலம் ராமுக்கு தனது ஆதரவு இல்லை என்பதை தெரிவித்ததோடு “நானும் உங்க டீம்தான்” என்பதையும் கூடவே பதிவு செய்ய முயன்றார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஏறத்தாழ அரசியல் கூட்டணியின் ராஜதந்திரம் போல் இது தெரிந்தாலும், பாதுகாப்பு அற்ற சூழ்நிலையில் மனம் இப்படித்தான் முடிவு எடுக்கும்.

காயத்ரியும் ராமும் இப்படி தனிப்பட்ட முறையில் பேசி வைத்துக்கொண்டது கூட ஒருவகையில் முறையற்ற செயல். ‘இந்திரஜாவை பலவீனமான போட்டியாளராக காயத்ரி சொன்னது கூட ராமைக் காப்பாற்றுவதற்காகவா?” என்கிற கேள்வியும் சந்தேகமும் இப்போது எழுகிறது. அணியில் மற்ற அனைவருமே ராமுக்கு எதிராகத்தான் அப்போது வாக்களித்திருந்தார்கள் என்பதை இங்கு நினைவு கூரலாம்.

சர்வைவர் - 7
சர்வைவர் - 7

வேடர்கள் தீவிலும் எதிர்அணியின் முடிவுகளைப் பற்றி வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். ‘இந்திரஜாவின் பெயரைக் குறிப்பிட்டது மோசமான ட்விஸ்ட்’ என்பது போல் அந்த உரையாடல் சென்றது.

இவர்களுக்கு நடுவில் பார்வதியின் ஓவர் ரியாக்ஷன்களை காண சற்று வேடிக்கையாகவும் எரிச்சலாகவும் இருந்தது. “இம்யூனிட்டி சேலஞ்சின் போது உமாபதி மிகையான தன்னம்பிக்கையுடன் செயல்பட்டார்” என்று அம்ஜத் குறிப்பிட்டதும் “எக்ஸாக்ட்லி ப்ரோ... எக்ஸாக்ட்லி’’ என தனது கையைத் தட்டி ஆரவாரமாக உற்சாகம் ஆனார் பார்வதி. இத்தனைக்கும் அம்ஜத்தை பார்வதிக்குப் பிடிக்காது.

பார்வதி இப்படி மேலும் பேசிக் கொண்டேயிருப்பதைப் பார்த்ததும் ‘சரி... வாங்க சமைக்கறதுக்கு உண்டான வேலையைப் பார்ப்போம்’ என்று கூட்டம் கலையத் துவங்கியது. சென்னை -28 திரைப்படத்தில் ‘சரக்கடிக்கலாமா மச்சி?” என்று ஒருவர் உசுப்பேற்றி ஆரம்பித்த பிறகு ‘காசு இல்லை” என்று ஆளாளுக்கு நழுவியவுடன் “டேய் ஏண்டா இப்படி பண்ணீங்க. கை நடுங்குதடா” என்கிற காமெடியைப் போல “நான் பேச ஆரம்பிச்சவுடனே ஏன் இப்படி தெறிச்சு ஓடறீங்க ப்ரோ” என்று சலித்துக்கொண்டு தனியாக நின்றார் பார்வதி.

அன்றைய தினம், பெசன்ட் ரவியின் 25-வது வருட திருமண நாளாம். அதற்காக ஒரு சர்ப்ரைஸ் வீடியோவை அனுப்பியிருந்தார்கள். ‘கல்லுக்குள் ஈரம்’ மாதிரி, பார்ப்பதற்கு முரட்டுத்தனமாகத் தெரியும் ரவி, வீடியோவைப் பார்த்து நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினார். தனது மனைவி மீதும் குடும்பத்தின் மீதும் அவர் வைத்திருந்த அன்பு வெளிப்பட்டது.

‘இம்யூனிட்டி சவாலில்’ தோற்ற ‘காடர்கள்’ அணியிலிருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார். எப்படியும் பெரும்பான்மையான வாக்கு ராமுக்கு எதிராகத்தான் விழப்போகிறது. மக்கள் அந்தளவுக்கு கொலைவெறியுடன் இருக்கிறார்கள். ராமுக்கு ஆதரவாக இருந்த காயத்ரியும் வேறு வழியில்லாமல் கட்சி மாறி விட்டார்.

ராம் பாவனையாக வெளியேற்றப்பட்டாலும், எப்படியும் ‘மூன்றாம் உலகத்தில்’தான் போய் செட்டில் ஆகப் போகிறார். என்ன நடக்கும்?!

பார்த்துடுவோம்!