Published:Updated:

சர்வைவர்-9 : ''ஒதுக்கி வெக்கிறாங்க, தள்ளி வெக்கிறாங்க'' - பார்வதியின் ‘நானும் ரவுடிதான்' அலப்பறைகள்!

சர்வைவர் - 9 - பார்வதி

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் ஒன்பதாவது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர்-9 : ''ஒதுக்கி வெக்கிறாங்க, தள்ளி வெக்கிறாங்க'' - பார்வதியின் ‘நானும் ரவுடிதான்' அலப்பறைகள்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் ஒன்பதாவது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 9 - பார்வதி

காயத்ரி எலிமினேட் செய்யப்பட்டு விட்டாலும் அவரை மறுபடியும் விசாரணை சபைக்கு தனியாக அழைத்த அர்ஜூன், காயத்ரி மீது சொல்லப்பட்ட புகார்களுக்கு விளக்கம் கேட்டார். ஒருவேளை சபையில் சில விஷயங்களைச் சொல்ல காயத்ரி தயங்கியிருக்கலாம்.

‘‘இந்திரஜாவை நாமினேட் செய்தது தவிர, நான் வேறு எந்த தவறும் செய்யவில்லை’’ என்று கலங்கியபடி சொன்னார் காயத்ரி. இது மட்டுமல்ல, ‘‘physical task-குக்கு இந்திரஜா சரியாக இருக்க மாட்டார்’’ என்று விஜயலட்சுமி முன்னர் சொன்னதையும் இங்கு போட்டுக் கொடுத்தார். (ஆனால் நாமினேஷனின் போது மாற்றிச் சொல்லி விட்டார் விஜயலட்சுமி).

“யாரெல்லாம் உங்களுக்கு எதிராக வாக்களித்திருப்பார்கள்.. யூகிக்க முடியுமா?” என்று அர்ஜூன் கேட்டதும், “லேடி காஷ், ராம் தவிர மற்ற அனைவரும் எனக்கு எதிராகத்தான் வாக்களித்திருப்பார்கள்” என்று மிகச்சரியாக யூகித்தார் காயத்ரி. அந்தச் சமயத்தில் இந்திரஜாவும் ஸ்ருஷ்டியும் அங்கு ஆச்சரிய வருகையைத் தந்தார்கள். அவர்களை மகிழ்ச்சியும் ஆச்சரியமுமாக பார்த்தார் காயத்ரி.

சர்வைவர் - 9
சர்வைவர் - 9

காயத்ரி எலிமினேட் ஆகியிருப்பதைப் பார்த்ததும் ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்கிற பழமொழிதான் இந்திரஜாவின் மனதில் தோன்றியதாம். “காயத்ரி 99% ஒகேதான். ஆனால் ஒரு உரையாடலின் நடுவே மூட் அப்செட் ஆகி சட்டென்று வெளியே போயிருக்கக்கூடாது. நான் ஒருவேளை டீம்ல இன்னமும் இருந்திருந்தா காயத்ரி அக்காவைத்தான் நாமினேட் செஞ்சிருப்பேன்” என்று வெளிப்படையாகவே அர்ஜூனிடம் சொன்னார் இந்திரஜா.

“லட்சுமிபிரியாவை என்னோட அக்கா மாதிரி நெனச்சேன். அவங்களை நம்பினேன். அவங்க என்னை நாமினேட் பண்ணதை ஜீரணிக்க முடியலை” என்று வருத்தத்துடன் சொன்னார் ஸ்ருஷ்டி.

இதெல்லாம் விளையாட்டின் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொள்ளாமல் ஏன் இப்படி உணர்ச்சிகரமாக இந்த விஷயங்களை அணுகுகிறார்கள் என்று தெரியவில்லை. இப்படி புகார் சொல்கிறவர்கள், நாளை அவர்கள் அணித்தலைவராகும் போது நிச்சயம் இது போன்ற சர்ச்சைகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

“ஓகே... உங்க மூணு பேருக்கும் உங்க தோல்வியை சரி செய்ய ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு... செய்றீங்களா?” என்று கடைசி வாய்ப்பை தந்தார் அர்ஜூன். தன்னை பலவீனமான போட்டியாளர் என்று சொன்ன காயத்ரியிடமே மோதி தன்னை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்திரஜா மிகவும் மகிழ்ந்தார். அதே சமயத்தில் காயத்ரியுடன் இனி எப்படி சகஜமாகப் பழகுவது என்கிற சங்கடமும் அவருக்கு இருந்தது. “சரி... நீங்க ‘மூன்றாம் உலகத்துக்கு போங்க. அறிவிப்பு வரும்’ என்று சொல்லி அவர்களை வழியனுப்பி வைத்தார் அர்ஜூன்.

மூன்றாம் உலகம். இங்கு மரங்கள், பழங்கள் என்று எதுவும் கிடையாது. எனவே வந்து இறங்கிய மறுநிமிடமே உணவைத் தேடி அலைந்தார் காயத்ரி. “ஒரு வார முன் அனுபவம் இருக்கறதால கொஞ்சம் தாக்குப் பிடிக்க முடியுது. முதல்லயே இங்க வந்திருந்தா நிச்சயம் நான் அழுதிருப்பேன்” என்றார் காயத்ரி (அழுமூஞ்சி கேப்டன்!). இவர்கள் மூன்று பேரும் அங்கு சுற்றுவதைப் பார்த்து ஏதோவொரு பாத்திரக் கம்பெனி அங்கு பிரான்ச் திறந்து விட்டார்கள் போலிருக்கிறது. ஒரு பள்ளத்தில் இருந்த சமையல் பாத்திரங்களைப் பார்த்து உற்சாகத்தில் காயத்ரி கத்த, மற்ற இருவரும் அதில் மகிழ்ச்சியுடன் இணைந்து கொண்டார்கள். (ஹைய்யா... சோறு.. சோறு..)

இவர்கள் சமையலுக்காக ஆயுத்தம் செய்து கொண்டிருந்த போது பழைய பஞ்சாயத்தை மறுபடியும் தூசு தட்டி கிளப்பினார்கள். “நீங்க ஏன் இந்திரஜாவுக்கு எதிராக வாக்களிச்சீங்க?” என்று ஸ்ருஷ்டி கேட்க “அட... ச்சை… மறுபடியுமா?” என்று காயத்ரி நொந்தே போயிருப்பார். “ஒரு டீம் லீடரா என்னோட பார்வை அப்படித்தான் இருந்தது. இந்திரஜாவை விட ராம் டாஸ்க் நல்லா செய்வார்னு தோணுச்சு” என்று கண்டிப்பான குரலில் சொன்னார் காயத்ரி. (இதை முன்பே செய்திருக்கலாம்).

சர்வைவர் - 9
சர்வைவர் - 9

“இன்னொருத்தர் பொழச்சிட்டு போகட்டும்ன்னுதான் நான் வெளியே வந்தேன்” என்று சவடாலாக பேசினார் இந்திரஜா. அது அர்த்தமேயில்லாத வெற்று வார்த்தைகள் என்பது அவருக்கே புரிந்தால் சரி.

‘ஒரு ரகசியத்தைச் சொல்லி இந்தப் பொண்ணுக்கு உலகத்தைப் புரிய வெக்க வேண்டியதுதான்’ என்று முடிவு செய்த காயத்ரி, துவக்கத்தில் விஜயலட்சுமியே இந்திரஜாவை நாமினேட் செய்ய யோசித்ததைப் பற்றி இப்போது ‘போட்டுக் கொடுக்க”, “அக்காவா அப்படிச் சொன்னாங்க…? நான் அவங்களைப் பார்த்து நிச்சயம் கேட்பேன்” என்று அதிர்ச்சியானார் இந்திரஜா. எனில் இன்னொருவரும் ‘வினை’ விதைத்திருக்கிறார் என்பது இந்திரஜாவுக்கு இப்போது புரிந்திருக்கும். (ஹப்பாடா!.. அப்ப இன்னொரு பஞ்சாயத்து நிச்சயம் இருக்கு!).

‘மூன்றாம் உலகத்தில்’ ஒரு பிரேக்கிங் நியூஸ் வந்தது. போட்டிக்கு இவர்கள் தயாராக வேண்டும். ஆனால் இது தொடர்பாக மூவரும் கலந்து பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும். போட்டி என்பது இரண்டு பேருக்குள் மட்டும்தான். ‘யார் அந்த இரண்டு பேர்?’ என்பதை இவர்களே கலந்துரையாடி தேர்வு செய்ய வேண்டுமாம். (அடிச்சக்கறதுக்கு எப்படியெல்லாம் பிளான் பண்றாங்கப்பா!)

இருவருக்குள் நிகழும் போட்டியில் தோற்பவர் ‘உண்மையாகவே’ எலிமினேட் ஆவாராம். (அப்புறம் ‘நாலாம் உலகம்’-ன்னு ஒரு ட்விஸ்ட் கொடுத்தீங்கன்னா.. எங்களுக்கு கெட்ட கோபம் வந்துடும்).

காயத்ரி சட்டென்று விட்டுக் கொடுத்து விட்டு ஸ்ருஷ்டியையும் இந்திரஜாவையும் ‘போட்டியிடுங்கள்’ என்று சொல்லி விட்டார். மேலோட்டமாக பார்த்தால் இது தியாகம் போல் தோன்றினாலும் அதிலொரு உள்குத்து இருந்தது.

சர்வைவர் - 9
சர்வைவர் - 9

‘எந்த இருவர் போட்டியிடப் போகிறார்கள்?’ என்று இவர்களால் முடிவெடுக்க முடியவில்லையென்றால் ‘Tribal council’ –ல் உள்ள அர்ஜூன் அந்த முடிவை எடுப்பார். இவர்கள் அங்கு சென்றதும்தான் நமக்குத் தெரிந்தது. தீவில் எடுத்த முடிவை இவர்கள் அங்கு மாற்றி விட்டார்கள். ‘’யார் அந்த இரண்டு பேர்?” என்பதை அர்ஜூனின் முடிவுக்கே விட்டு விட்டார்கள். (தான் கிரேட் எஸ்கேப் என்பதை இந்திரஜா பிறகுதான் உணர்ந்தார்).

ஒரு சாக்குப்பையில் இரண்டு வெள்ளை நிற கற்களும் ஒரு கறுப்பு நிற கல்லும் இருக்கும். மூன்று போட்டியாளர்களும் கண்களை மூடி அதை எடுக்க வேண்டும். வெள்ளை நிறம் எடுக்கும் இருவர் போட்டியிடுவார். அதில் ஒருவர் ‘நிரந்தரமாக’ வெளியேற்றப்படுவார்.

கறுப்பு நிறக் கல்லை எடுப்பவர் கேமில் தொடர்ந்து இருப்பார். இந்திரஜாவுக்கு ‘கறுப்பு கல்’ கிடைத்தது. ‘ஹப்பாடா! என்று மகிழ்ச்சியடைந்தவரை “இது தற்காலிகம்தான் அம்மணி. எப்படியும் நீங்கள் இன்னொரு போட்டியை சந்தித்துதான் ஆக வேண்டும்” என்று அந்த மகிழ்ச்சியில் பாறாங்கல்லை உடனே தூக்கிப் போட்டார் அர்ஜூன்.

ஆக... காயத்ரியும் ஸ்ருஷ்டியும் போட்டியிட வேண்டும். பார்ப்பதற்கு எளிதானது போல் தெரிந்தாலும் அவர்கள் ஆடும் போதுதான் அது எத்தனை சிக்கலான போட்டி என்பது தெரிந்தது. (இந்த விளையாட்டையெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்க போல).

சர்வைவர் - 9
சர்வைவர் - 9

‘jigsaw puzzle’ போலத்தான் இருந்தது. வெவ்வேறு அளவுகள் உள்ள மரக்கட்டைத் துண்டுகள் தரப்படும். இதை நெட்டுக்குத்தலாக வைத்து ஒரு வட்டத்தை ஏற்படுத்த வேண்டும். பிறகு அதன் மீது ஒரு இரும்பு வளையத்தைப் பொருத்த வேண்டும். இது போல் மூன்று அடுக்குகளைச் செய்து விட்ட பிறகு அது ‘மூன்று விநாடிகளுக்கு’ மேல் விழாமல் இருந்தால் சக்ஸஸ். யார் இதை முதலில் செய்து முடிக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.

காயத்ரியும் ஸ்ருஷ்டியும் பரபரப்பாக போட்டியை ஆரம்பித்தார்கள். பார்ப்பதற்கு ஒரே அளவு கட்டைகள் மாதிரி தெரிந்தாலும் அடுக்கி விட்டு மேலே வளையத்தைப் பொருத்தும் போதுதான், கட்டையில் உள்ள லேசான இடைவெளிகள் தெரிகின்றன. முதல் வட்டத்தை ஒரு மாதிரியாக ஸ்ருஷ்டி செய்து கொண்டிருக்கும் போது காயத்ரியால் அதைக் கூட செய்ய முடியவில்லை. மிகவும் வியர்த்துப் போன அவருக்கு ‘ஒரு கட்டத்தில் ஆட்டத்திலிருந்து வெளியேறி விடலாமா?’ என்கிற படி மண்டை காய்ந்து விட்டதாம். இது மூளை வலிமையைக் கோரும் விளையாட்டு.

45 நிமிடங்கள் கடந்தும் முதல் ரவுண்டை முடிக்க முடியாமல் இருவரும் திணறிக் கொண்டிருக்கும்போது, அடுத்த படத்தின் ஷூட்டிங்குக்கு டைம் ஆச்சோ என்னமோ, அர்ஜூன் இறங்கி வந்து ‘Magic wand’ என்கிற அயிட்டத்தைக் கொடுத்தார். (பாவி மக்கா… இதை முதல்லேயே கொடுத்திருக்கலாம்ல!). ஒரு கட்டையின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை கச்சிதமாக உணர்த்தும் அடையாளம் அது.

இது கையில் கிடைத்ததும் போட்டியில் வேகம் கூடியது. ஸ்ருஷ்டி முதல் வளையத்தை முடித்து விட, காயத்ரியும் பின்னாலேயே வந்து சேர்ந்தார்.

இரண்டாம் கட்ட வட்டத்தைப் பொருத்த இருவரும் சிரமப்பட்டார்கள். “கவனிங்க... முதல் வட்டத்தை எப்படி செட் பண்ணீங்களோ.. அதே மாதிரிதான் அடுத்தடுத்த வட்டங்களும் செட் பண்ண வேண்டும். இதைப் புரிஞ்சிக்கிட்டீங்கனா கேமை ஈஸியா ஜெயிக்கலாம்’ என்று அர்ஜூன் டிப்ஸ் கொடுத்தார். உண்மையில் இது போட்டியாளர்கள், அவர்களாகவே புரிந்து கொண்டிருக்க வேண்டிய விஷயம். பதற்றத்தில் புரியவில்லை போல.

சர்வைவர் - 9
சர்வைவர் - 9

அர்ஜூன் தந்த டிப்ஸை கச்சிதமாக ‘கேட்ச்’ செய்து கொண்ட காயத்ரி அடுத்தடுத்த நிலைகளை நோக்கி வேகமாக நகர்ந்தார். ஆனால் ஸ்ருஷ்டி இன்னமும் குழம்பி குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். மொழிப் பிரச்சினையால் அர்ஜூன் சொன்னது அவருக்குப் புரியவில்லையா, அல்லது பதற்றத்தில் அதைச் சரியாக கேட்கவில்லையா என்று தெரியவில்லை. இந்த விஷயம் காயத்ரிக்கு சாதகமாகப் போனது.

காயத்ரி மளமளவென்று வட்டங்களை உருவாக்கி மூன்றாவது கட்டத்தையும் அடைந்து வளையத்தைப் பொருத்தியவுடன் அது பைசா நகரத்தின் நேரான கோபுரம் போல கச்சிதமாக நின்றது. அர்ஜூன் மூன்று எண்ணி முடிக்கும் வரையில் கூட இல்லை.. அந்த எபிசோட் முடியும் வரை நின்று கொண்டிருந்தது. இந்த சவாலில் காயத்ரி ஜெயித்து விட்டார்.

ஆக... ஸ்ருஷ்டி உண்மையாகவே ‘சர்வைவர்’ போட்டியில் இருந்து எலிமினேட் ஆகிறார். “எனக்கு அட்வென்ச்சர்.. பிடிக்கும். இந்த ஏழு நாள் எனக்கு வாழ்நாள் அனுபவமாக இருக்கும். உண்மையிலேயே இங்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். ஏதோ பூங்காவில் வாக்கிங் போகும் சமாச்சாரம் கிடையாது” என்ற ஸ்ருஷ்டி, தன் தலைத்துணியை எடுத்து தீயில் போட்டு விட்டுச் சென்றார். இதுதான் ஒரு போட்டியாளர் நிரந்தரமாக நீங்குவதற்கான அடையாளமாம். (இந்த ப்ரோட்டாகாலுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்ல!).

சென்டிமென்ட் எல்லாம் பார்க்காமல் யோசித்தால் ஸ்ருஷ்டி வெளியேறியது நல்ல விஷயம்தான். உடல் ஃபிட்னெஸ் கொண்டு பார்க்கும் போது காயத்ரிதான் பெட்டர் சாய்ஸ்.

சர்வைவர் - 9
சர்வைவர் - 9

வேடர்கள் தீவு. ஆக்ஷன் காட்சி முடிந்ததும் காமெடி காட்சியை இணைப்பது போல ‘’உங்களில் யார் அடுத்த தலைவர்?” என்கிற தலைப்பில் வேடர்கள் அணி ரணகளமாக உரையாடிக் கொண்டிருந்ததை காண்பித்தார்கள்.

தலைவர் போஸ்ட்டின் சிரமம் என்னவென்பதை இப்போது இவர்கள் உணர்ந்திருந்தார்கள் போல. நந்தா, ஐஸ்வர்யா போன்றவர்கள் ‘இப்போது நாங்கள் போட்டியிட விரும்பவில்லை’ என்று ராஜதந்திரத்துடன் தெரிவித்து விட்டார்கள்.

ஆனால், சர்வைவர் ஹீரோயின் பார்வதியோ, நான்தான் தலைவர், நான்தான் தலைவர் என்று எல்லோரிடமும் சென்று முட்டி மோதிக் கொண்டிருந்தார். ‘’என்னை ஒதுக்கி வைக்கிறாங்க… என்னை தள்ளி வைக்கிறாங்க'’ என கேமரா முன் புலம்பிக்கொண்டிருந்தார். வழக்கம் போல் யாருமே அவரை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் காமெடி. பார்வதி தலைவர் போட்டிக்கு ஆசைப்படுவதும், அதற்காக துறுதுறுப்புடன் இருப்பதும் நியாயமான விஷயம்தான். ஆனால் அவருடைய அணுகுமுறைதான் வம்படியாக ஜீப்பில் ஏறும் ‘’நானும் ரவுதான்'’ காமெடிபோல் அமைந்து விடுகிறது.

சர்வைவர் - 9
சர்வைவர் - 9

“ஐஸ்வர்யா டாஸ்க் நல்லா பண்றாங்கதான். ஆனா அவங்க தலைவர் போட்டியை மறுத்தாக் கூட அவங்களை கன்ஸிடர் பண்றீங்க... Why not me?” என்று நந்தா மற்றும் அம்ஜத்திடம் அலப்பறை தந்து கொண்டிருந்தார் பார்வதி. “நீ போட்டில நில்லும்மா... யாரு வேண்டாங்கிறா” என்பது மாதிரியே சொல்லி அவர்கள் எஸ்கேப் ஆனார்கள். ‘பார்வதியெல்லாம் தலைவரா’ என்கிற மைண்ட் வாய்ஸ்தான் அனைவரிடமும் அங்கு ஓடிக் கொண்டிருந்தது.

இந்த இடத்தில் எடிட்டிங் டீமின் குறும்பையும் சொல்ல வேண்டும். இவர்களுடைய உரையாடலின் இடையே காட்டின் ஃபுட்டேஜ்களை இணைத்தார். நண்டு வளைக்குள் தப்பிப் போவது, பாம்பு வெளியே வருவது, மேலே பருந்து பறந்து வருவது.. போன்ற காட்சிகள். உரையாடலின் உள்ளடகத்தையும் இந்தக் காட்சிகளையும் பொருத்திப் பார்த்து யோசிப்பது ஜாலியான விஷயமாக இருந்தது.

ஆக.. ‘யார் அடுத்த வார தலைவர்?’ என்பதற்கான போட்டி இரு அணிகளுக்கும் தனித்தனியாக நடக்கும். எனவே இன்னொரு பஞ்சாயத்து.. இன்னொரு விசாரணை சபை. இன்னொரு எலிமினேஷன். என்ன நடக்கும்?!

பார்த்துடுவோம்!