Published:Updated:

சர்வைவர் - 10 | எலிமினேஷன் பயத்தில் பார்வதியின் ஒப்பாரியும், புலம்பல்களும்… ‘மண்ட பத்திரம்' பாய்ஸ்!

சர்வைவர் - 10 | பார்வதி

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் பத்தாவது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 10 | எலிமினேஷன் பயத்தில் பார்வதியின் ஒப்பாரியும், புலம்பல்களும்… ‘மண்ட பத்திரம்' பாய்ஸ்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் பத்தாவது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 10 | பார்வதி

இரண்டு அணிகளும் தங்களின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் சடங்குதான் நேற்றைய நாளின் ஹைலைட். தேர்தல் என்றாலே அதற்குரிய உள்குத்துகள், துரோகங்கள், விசுவாசங்கள், புலம்பல்கள் போன்றவை நிகழ்வது வழக்கம்தானே? எனவே அந்தச் சம்பிரதாயங்கள் குறைவின்றி நடந்தன. (அரசியல்ல... இதெல்லாம் சாதாரமணப்பா!).

குறிப்பாக பார்வதி ஓவர் டைம் எடுத்து, எக்ஸ்ட்ரா எனர்ஜியுடன் நிகழ்த்தும் தனி ஆவர்த்தன அனத்தல்கள் இருக்கிறதே...அடடா! இவரைத் தனியாக ஓரங்கட்டி பேச வைத்து விட்டு விட்டால் போதும்… கேமராமேன் போய் நிதானமாக லன்ச்சே முடித்து விட்டு வந்து விடலாம். அந்தளவுக்கு சர்வைவர் நிகழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் கன்டென்ட் தருகிறார். “தலைவர் பதவிக்கு நான் தகுதியில்லையா... இவங்க பேசி வெச்சிக்கிட்டு செயல்படறாங்க... என்னால வெளிப்படையாத்தான் இருக்க முடியும்... ஜிங் சா போட முடியாது” என்றெல்லாம் ஒரே ஒப்பாரி.

பெசன்ட் ரவி ஒரு திருவாக்கியம் சொன்னார். “தலைவராக வர விரும்புகிறவர்கள் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்”. எக்ஸாக்ட்லி... இதுதான் பார்வதியின் புலம்பல்களுக்கான பதில். அவரின் துறுதுறுப்பு, ஆசை, வெளிப்படைத்தன்மை, யாரையும் சாராமல் இருப்பதாக சொல்வது போன்றவையெல்லாம் கூட ஓகே. ஆனால் ‘நான்தான்... நான்தான்...’ என்று எப்போதும் முட்டி மோதிக் கொண்டேயிருப்பது அவரது டீம் ஆசாமிகளுக்கு மட்டுமல்ல, நமக்கே கூட எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறது. ஒருவேளை இப்படி சர்ச்சைகளை உருவாக்கி நிகழ்ச்சிக்குள் தன்னை தக்க வைத்துக் கொள்வதுதான் அவரது ஸ்ட்ராட்டஜியோ என்னவோ?! ஆனால் ஒன்று, பார்வதி எலிமினேட் ஆகி விட்டால் இந்த நிகழ்ச்சியின் காமெடி என்டர்டெயின்மென்ட் குறைந்து விடும் என்பது மட்டும் உறுதி.

சர்வைவர் பத்தாம் நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

சர்வைவர் - அர்ஜுன்
சர்வைவர் - அர்ஜுன்

காடர்கள் தீவு. என்னதான் ராம் எலிமினேஷனில் இருந்து மயிரிழையில் தப்பி விட்டாலும் விக்ராந்த் அணி அவரை முழு மனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆங்காங்கே நின்று அவரைப் பற்றி புறணி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த உரையாடலின் போது விக்ராந்த், உமாபதியிடம் சொன்ன ஒரு வசனம் ரசிக்கத்தக்காக இருந்தது. ‘இந்த கேம்ல எப்ப, என்ன ட்விஸ்ட் நடக்கும்னே தெரியல மாப்ள... என்ன வேணா பண்ணுவாய்ங்க” என்பது போல் அவர் சொன்னதிற்கேற்ப இதில் பல அதிரடி/அபத்த திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

வேடர்கள் தீவு. தலைவர் பதவிக்கான உரையாடலின் போது தன்னை யாருமே கன்ஸிடர் செய்யாததால் நொந்து போன பார்வதி, “யாராச்சும் ஒருத்தராவது எனக்கு ஓட்டு போடுங்களேன்” என்று அலைமோதிக் கொண்டிருந்தார். இவரின் உடல்மொழியை ரவி கிண்டல்செய்ய அதற்கும் சிரித்து வைத்தார் பார்வதி.

“நமக்கு எதிராத்தான் எல்லோரும் ஓட்டு போடுவாங்கன்னு பார்வதி நெனச்சிட்டு இருப்பாங்க... அதை பிரேக் பண்ணி ஒரு ஆன்ட்டி கிளைமாக்ஸ் செஞ்சி பாருவுக்கு ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தா எப்படியிருக்கும்?” என்று ‘விக்ரம் வேதா’ ஸ்டைலில் அம்ஜத் கோக்குமாக்காக யோசிக்க “அப்படி செய்றதால டீமுக்கு என்ன உபயோகம்?” என்று சொல்லி அந்த விபரீத யோசனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் லட்சுமிபிரியா.

அம்ஜத் மற்றும் ரவி ஆகிய இருவரையும் இந்த வார தலைவர் தேர்தலில் நிற்க வைக்கப் போவதாக காடர்கள் அணி முடிவு செய்து வைத்திருந்தது. ஆனால் இந்த முடிவில் மிகவும் அதிருப்தியுற்ற பார்வதி தனியாவர்த்தன கேமராவில் தொடர்ந்து புலம்பிக் கொண்டேயிருந்தார். பல்லைக் கடித்துக் கொண்டு சொற்களை மிக அழுத்தமாக உச்சரிக்கும் இவரது பாணி கேட்பதற்கு காமெடியாக இருக்கிறது. ‘தனக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டால் தலைவர் பதவி தானாக தேடி வரும்’ என்பதில் பார்வதிக்கு நம்பிக்கையில்லை போல.

சர்வைவர்
சர்வைவர்

‘காடர்கள்’ தீவில் விஜயலட்சுமி மற்றும் லேடி காஷை தலைவருக்கான தேர்தலில் நிற்க வைக்கப்போவதாக பேசிக் கொண்டார்கள். இதில் விஜிக்கு அதிக ஆதரவு இருந்தது. “ஆள் இல்லைன்னா சொல்லுங்க... நான் சும்மாத்தான் இருக்கேன்” என்று ஒரு பிட்டை ராம் போட்டு வைக்க ‘பார்க்கலாம் பார்க்கலாம்’ என்று அவரை ஓரமாக அமர வைத்தார்கள். ராம், பார்வதியின் இன்னொரு சைலன்ட் வெர்ஷனாக இருக்கிறார்.

‘‘இந்த வாரம் எங்களுக்கு முக்கியமானது. கடந்த வாரத்தின் தவறுகளை சரிசெய்து கொள்ள வேண்டும். எனவே விஜியின் சேவை எங்களுக்கு தேவை’’ என்று வீர முழக்கம் செய்தார் விக்ராந்த்.

தேர்தல் அதிகாரி அர்ஜூனின் என்ட்ரி. இரு அணிகளும் சமர்த்தாக அமர்ந்திருந்தார்கள். “என்னப்பா வேடர்களா? காடர்கள் அணியைக் கவனிச்சீங்களா. ஆள் கம்மியா இருக்கு... அவங்க லீடரேயே ஸ்கெட்ச்சு போட்டு தூக்கிட்டாங்க. ஜாக்கிரதையா இருங்க” என்பது போல் ஜாலியான கமென்ட்டுடன் பஞ்சாயத்தை ஆரம்பித்தார் அர்ஜூன். காயத்ரி எலிமினேட் செய்யப்பட்டது பற்றி எதிர்அணியான வேடர்கள், ஆளாளுக்கு ஒரு கருத்து சொன்னார்கள். ‘இந்திரஜாவை டீம்ல இருந்து தூக்கியது காயத்ரியோட ஒரு தப்பான மூவ்” என்றார் ரவி.

“அவங்க யூகம் சரியா இருக்குதா?” என்று விக்ராந்திடம் கேட்க “ரொம்ப புத்திசாலிங்க” என்று சர்காஸ்டிக்காக பதில் சொன்ன விக்ராந்த், “இந்த கேம்ல எப்போ என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது” என்கிற டேக்லைனை மறுபடியும் இணைத்துக் கொண்டார். (விட்டால் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’-ன்னு மாத்தி வெச்சிடுவாரு போல).

கடந்த வாரத்தில், தலைவர் என்பதற்கான அடிப்படை தகுதி ‘தைரியம்’ என்பதாக இருந்ததல்லவா? இந்த வாரத்தின் தகுதி ‘நன்றியாம்’.

“பிள்ளைங்களா... ‘நன்றி’ன்ற தலைப்புல ஆளாளுக்கு வந்து பத்து மார்க் வாங்குற மாதிரி பேசுங்க பார்க்கலாம்” என்று அர்ஜூன் ஹோம் வொர்க் தர, “குளிரும் போது பசங்க வந்து போர்த்தி விட்டாங்க… பொண்ணுங்க நான் சுச்சா போக கூடவே வந்து அச்சாவா ஹெல்ப் பண்ணாங்க... பாசக்காரப்பயலுவ” என்பது போல் நெகிழ்ந்து போனார் விஜயலட்சுமி.

சர்வைவர்
சர்வைவர்

இப்படியாக தலைவர் தேர்தலில் நிற்கும் மூன்று வேட்பாளர்களும் ‘நன்றி’ என்கிற தலைப்பில் சுருக்கமாக பட்டிமன்றம் நடத்தி விட்டுப் போனார்கள்.

ஏற்கெனவே விவாதித்திருந்தபடி காடர்கள் அணி விஜயலட்சுமி மற்றும் லேடி காஷை வேட்பாளர்களாக நிறுத்தியது. ஒப்புக்கு சப்பாணியாக ராமும் கூட நின்றார். இதில் பெரும்பான்மையான வாக்குகள் விஜிக்கே கிடைத்தன. “எங்களைக் காக்க வந்த வீரமங்கை, சர்வைவரின் ஜான்சி ராணி” என்பதுபோல் உற்சாக வாழ்த்துகள் இவருக்கு குவிந்தன. ‘அக்கா அக்கா… “ என்று ஓவராக ஐஸ் வைத்து உருகினார் சரண். (இருப்பா தம்பி... இந்திரஜாவுக்கு செஞ்ச மாதிரி அக்கா உனக்கும் ஒருநாள் பாயாசத்தைப் போட்டுறப் போறாங்க!).

பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற விஜியும் அதற்கு அடுத்த நிலையில் வந்த லேடி காஷூம் இப்போது போட்டியில் மோத வேண்டும். இரண்டு பேருக்கும் ஒரு மண்டை ஓடு தரப்படும். (பயப்படாதீங்க... செட் பிராப்பர்ட்டிதான்). அதை தன்னுடைய இடது கையில் உள்ள மரப்பலகையின் மேலே வைத்துக் கொள்ள வேண்டும். தான் வைத்திருக்கும் மண்டை ஓடு கீழே விழாமல் பார்த்துக் கொள்ளும் அதே சமயத்தில் தன்னுடன் போட்டியிடுபவர் வைத்திருக்கும் மண்டை ஓட்டை கீழே தள்ளி விட வேண்டும். இதில் யார் அதிக முறை தள்ளி விடுகிறாரோ. அவரே தலைவர். (‘மண்ட பத்ரம்’ என்று இந்தப் போட்டிக்கு தலைப்பிட்டிருக்கலாம்!).

சர்வைவர்
சர்வைவர்

லேடி காஷ் வைத்திருந்த மண்டையோட்டை தள்ளும் சுவாரசியத்தில் தான் வைத்திருந்த மண்டை ஓட்டை இரண்டு முறை தானே தள்ளி ‘சேம் சைட் கோல்’ போட்ட விஜி, அடுத்த சுற்றில் இருந்து சுதாரித்துக் கொண்டார். போட்டியின் இறுதியில் லேடி காஷை விட மூன்று பாயின்ட்டுகள் அதிகம் எடுத்து விஜி தலைவராக தேர்வானார். (சோழர் பரம்பரையில் மற்றும் ஓர் எம்.எல்.ஏ!).

“தலைவரே என்ன சொல்றீங்க... என்னென்ன திட்டங்கள் வெச்சிருக்கீங்க” என்று விஜியை நோக்கி அர்ஜூன் கேட்க, “இனிமே வரப் போற எல்லா சவால்களிலும் நாங்க ஜெயிக்கணும். எங்க அணி ஒற்றுமையா இருக்கணும்... இதுக்கான வேலைகளைச் செய்யப் போறேன்” என்றார் விஜி. (அணி ஒற்றுமை பற்றி விஜி பேசிய போது ‘சர்வைவர்’ டீம் உள்ளுக்குள் சத்தம் போட்டு சிரித்திருப்பார்கள்). “புதிய தலைவி சிறப்பாக வழிநடத்தி ஆப்ரிக்க காட்டிலிருந்து எங்களை ஆஸ்ரேலிய தீவுக்கு அழைத்துச் செல்வார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று காடர்கள் அணி ஒரே குரலில் கோரஸ் பாடியது. (‘தலைவி’ படம் பார்த்துட்டீங்களா மக்கா?!).

இப்போது ‘வேடர்கள்’ அணியில் என்ன நடந்ததென்று பார்க்கலாம்.

நன்றி நவிலல் பட்டிமன்றம். முதலில் வந்தவர் ரவி. “சார்.. முதல்வன் படத்துல ரகுவரனுக்குப் பதிலா நான்தான் போய் சேர்ந்திருப்பேன். அந்த ஷூட்டிங்ல நீங்க மட்டும் என்னைக் காப்பாத்தலைன்னா” என்று அர்ஜூனை நோக்கி கையெடுத்து கும்பிட்டு உருகினார் ரவி. ஆனால் அர்ஜூனோ, ‘இந்தச் சம்பவம் எப்பய்யா நடந்தது” என்பது மாதிரியே பார்த்துக் கொண்டிருந்தார். “இந்தத் தீவுக்கு வந்த ஆரம்பத்துலயே எனக்கு அடிபட்டிருந்தது. ஆனா என்னோட அணி என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க” என்று தனது டீமையும் நன்றியோடு நினைவுகூர்ந்தார் ரவி.

‘’தலைவராகும் ஆசை எனக்கு இல்லை” என்று முன்பே சொல்லியிருந்தார் அம்ஜத். ஆனால் இவர்தான் பிறகு தலைவராக ஆனார். இதில் ஏதோ ஒரு செய்தி இருக்கிறது. (குறிப்பாக பார்வதிக்கு!). “எனது அணிக்கு நான் பெரிய ஆதரவாக இருப்பேன்” என்று தனது முறை வரும் போது நன்றி சொன்னார் அம்ஜத்.

அடுத்து வந்தாரய்யா பார்வதி. தலைவர் போட்டிக்காக வம்படியாக ஜீப்பில் ஏறியவர் “கத்துக்கறேன் தலைவரே... நான் தினமும் என் அணியிடம் கத்துக்குறேன்” என்றார். ஆனால் இவர் கேமராவில் தனியாக பேசியதையெல்லாம் இப்போது இணைத்துக் காட்டி எடிட்டிங் அணி காமெடி ரகளை செய்து கொண்டிருந்தார்கள். தனியாவர்த்தனத்தில் “இவனுங்க முன்னாடியே தலைவரை செட் பண்ணிட்டாங்க... நான் நின்னா மட்டும் குத்தமா” என்று தன் அணியினரைப் போட்டு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார் பார்வதி. இவர் சபையில் பேசுவது, தனியாக பேசுவது ஆகிய இரண்டையும் அடுத்தடுத்து பார்த்துக் கொண்டிருப்பதே சுவாரசியமாக இருக்கிறது.

வேட்பாளருக்கான தேர்தலில் பெசன்ட் ரவி அதிக வாக்குகளைப் பெற்றார். இதற்கு அடுத்த நிலையில் வந்தவர் அம்ஜத். (பார்வதிக்கு ஒரு வாக்கு கூட விழவில்லை) ரவிக்கும் அம்ஜத்துக்கும் இடையே ‘மண்டை ஓடு’ போட்டி நடந்தது. ஆரம்பத்திலிருந்தே அம்ஜத் முன்னணியில் இருந்தார். தலைவர் பதவிக்கு ஆசையில்லை என்றாலும் ‘போட்டின்னு வந்துட்டா அதுக்கு நியாயம் செய்யணுமில்லையா?” என்பது இவரின் நியாயமான கொள்கை.

தான் வைத்திருந்த மண்டை ஓட்டை மிக பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அதே சமயத்தில் எதிரே ரவி வைத்திருந்த மண்டை ஓட்டை மிக லாவகமாக தட்டி விட்டார். ஒரு கட்டத்தில் ரவியும் சுதாரித்துக் கொண்டு விளையாடினார். இறுதியில் 5 புள்ளிகளைப் பெற்று அம்ஜத் வெற்றி.

சர்வைவர்
சர்வைவர்

‘‘நான் நிக்கறேன்... நான் நிக்கறேன்’ என்று தலைவர் போட்டிக்காக அலைமோதிக் கொண்டிருந்த பார்வதி 'மண்ட பத்ரம்’ போட்டியில் நடந்த ஆக்ரோஷ மோதலைப் பார்த்து திகில் அடைந்து உட்கார்ந்திருந்தார். ‘இவிய்ங்க இருக்குற ஹைட்டுக்கு நான் எப்படி போட்டியிட முடியும்?” என்பது அவரின் கேள்வி. என்றாலும் ‘’ஒரு பய புள்ளயும் எனக்கு வாக்களிக்கவில்லை என்பதில் வருத்தம்தான்” என்பது போல் கெத்து குறையாமல் பேசினார்.

தலைவர் போட்டி முடிந்து அவரவர் தீவுகளுக்குத் திரும்பினார்கள். புதிய தலைவியான விஜி “முதல்ல சோத்துப் பிரச்னையைப் பார்க்கலாம்” என்கிற முக்கியமான விஷயத்தைச் சொல்ல காடர்கள் அணி அதை உற்சாகமாக ஆமோதித்தது. (சோறு முக்கியம் குமாரு!).

அந்தப் பக்கம் வேடர்கள் அணியில் புதிய தலைவர் அம்ஜத்தின் கூடாரத்தில் பழங்கள் பரிசாக வைக்கப்பட்டிருந்தன. சாப்பிட்ட உற்சாகத்துடன் எதிரணி பற்றி வம்பு பேச ஆரம்பித்தார்கள். “போன வாரம் காயத்ரியைத் தூக்கினாங்க... இந்த வார எலிமினேஷனில் ராமைத் தூக்கிடுவாங்க பாரு” என்று புறணி கலாசாரம் உற்சாகமாகத் தொடங்க “அப்ப நம்ம டீம்ல இந்த வார எலிமினேஷனுக்கு யாரை செலக்ட் பண்ணுவீங்க” என்று நந்தா கேட்க “வேற யாரு... நம்ம பார்வதி அக்காதான்” என்று சொல்லி விட்டு வில்லன் பாணியில் உரக்கச் சிரித்தார் ரவி.

சர்வைவர்
சர்வைவர்

“இவிய்ங்க கூட குப்பை கொட்டறது பெரும்பாடா இருக்குது. என்னால யாருக்கும் ஜிங் சா போட முடியாது. நானே போய் பேசினாலும் என்னைத் தள்ளித்தான் வெக்கிறாய்ங்க” என்று தனியாவார்த்தன புலம்பலின் உச்சநிலைக்குச் சென்று கொண்டிருந்தார் பார்வதி. எப்படியாவது இந்த வார தலைவர் போட்டியில் வென்று தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ளலாம்’ என்று முட்டி மோதியவருக்கு தான் Danger Zone-க்கு வந்து விட்டதாக பாதுகாப்பற்ற உணர்வு வந்து விட அந்த பீதியில் தனிமையில் புலம்பிக் கொண்டேயிருந்தார்.

ஆச்சா... அந்தப் பக்கம் காடர்கள் அணியும் இவர்களைப் பற்றி புறணி பேசிக் கொண்டிருந்தது. (வேற என்ன பொழுதுபோக்கு?!). “அவிய்ங்க ஒத்துமையா இருக்கற மாதிரி நடிக்கறாங்க... உள்ளுக்குள்ள ஒரே ரப்ச்சர் மாப்ள” என்று வம்பு களை கட்டியது. “இந்த நந்தா ஓகே... ஆனா, பார்வதி ஓவரா பண்றாங்கள்ல’ என்று பார்வதியின் பெயரைச் சொன்னதுமே சபை வெடித்து சிரித்தது. “பாடுறதுக்கு பார்வதி... ஆடுறதுக்கு ஐஸ்வர்யா” என்று ரைமிங்கில் புறணி பேசினார்கள். “ரவியண்ணன்... சூப்பர்பா’ என்று வாழ்த்துரை வழங்கவும் தவறவில்லை.

ஆக... போட்டி, பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி ஆகிய கல்யாணக்குணங்களோடு நேற்றைய நாள் இனிதே நிறைவுற்றது. அடுத்தது புதிய சவால்களும், எலிமிஷேன் சடங்கும் நடைபெறும். அவற்றில் என்னவெல்லாம் கலாட்டாக்கள் நடக்கும்?!

பார்த்துடுவோம்!