Published:Updated:

சர்வைவர் 12 | விஜே பார்வதியின் அனத்தல்கள் யூடியூப் உத்தியா அல்லது புத்தியா?!

சர்வைவர் - 12 | விஜே பார்வதி

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 12-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் 12 | விஜே பார்வதியின் அனத்தல்கள் யூடியூப் உத்தியா அல்லது புத்தியா?!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 12-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 12 | விஜே பார்வதி

வேடர்கள் அணி தொடர்ச்சியாக ஜெயிப்பதெல்லாம் பெரிய ஆச்சரியமான விஷயமில்லை. அவர்களுக்கு இருப்பதிலேயே கடினமான சவால், பார்வதியை சமாளிப்பதுதான். அந்த அளவுவுக்கு தனது சக அணியினரை பேசிப் பேசியே விழி பிதுங்க வைக்கிறார் பார்வதி. “என்னை எல்லாத்திலயும் ஒதுக்கியே வைக்கறீங்க... நான் ஒப்பனா பேசற ஆள்... யாருக்கும் என்னைப் பிடிக்கறதில்ல… blah... blah... blah’ என்று அவர் நிகழ்த்தும் தொடர்ச்சியான அனத்தலை சற்று நேரம் பார்க்கும் நமக்கே தலை சுற்றுகிறது எனும்போது அவரது அணியினர் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ என்று தெரியவில்லை.

ஓர் அணியுடன் எப்படி தன்னை இணக்கமாகப் பொருத்திக் கொள்வது என்பதன் அடிப்படையே பார்வதிக்கு தெரியவில்லை. ‘இது போன்ற சர்ச்சைகள்தான் தன்னைத் தொடர்ந்து இந்த விளையாட்டில் நீடிக்க வைக்கும்’ என்பதுதான் அவரது ‘யூ-டியூப்’ உத்தியா என்பதும் தெரியவில்லை.

அதே சமயத்தில் பார்வதியிடம் அரிதான சில நல்ல குணங்களும் இருக்கின்றன. குழு அரசியல் காரணமாக கள்ள மெளனம் சாதிப்பது, பாரபட்சமாக இருப்பது போன்றவை அவரிடம் இருப்பதாக தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக உடைத்துப் பேசி விடுவது நேர்மையான விஷயம்.

சர்வைவர் - 12
சர்வைவர் - 12

வேறென்ன? நேற்றைய எபிசோட் பெரும்பாலும் பார்வதி வம்பு புராணமாகவே இருந்தது. அது முடிந்த பிறகாவது சாகச விளையாட்டுகள் இருக்கும் என்று பார்த்தால் மறுபடியும் ‘அழுகாச்சி’ டாஸ்க்கை தூசு தட்டி எடுத்து விட்டார்கள். இந்த வகையில் பார்த்தால் ‘சர்வைவரை’ பிக்பாஸ் 2.O என்று சொல்லி விடலாம்போல. நாளைக்கும் ஆட்டம் பாட்டம் என்று ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி இருக்கும் போலிருக்கிறது. இதன் நடுவில் ஃபுட்டேஜ் போதாமல் வேடர்கள் அணி சமைப்பதை வேறு நீண்ட நேரம் காட்டினார்கள். (ஓ அப்ப... மாஸ்டர் செஃப்பும் இதில் கலந்திருக்கிறதா?!).

ஆக மொத்தத்தில் சர்வைவரில் ‘சர்வைவரை’ அதிகம் காணோம்.

ஓகே... பன்னிரெண்டாம் நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் - 12
சர்வைவர் - 12

காடர்கள் தீவு. அவர்களுக்கு ஒரு செய்தி வந்திருந்தது. ‘நீங்கள் அடைந்த தோல்வியைப் பற்றி ஆராய வேண்டும். அணியில் கலந்து பேசி உங்களில் ஒரு மோசமான பங்களிப்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவருக்கு ஒரு தண்டனை இருக்கிறது. மசாலா பொடியை நன்றாக அரைத்து எதிர் அணிக்கு அனுப்ப வேண்டும். கூட உதவி செய்ய ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்’ என்பதுதான் அந்த துர்செய்தி.

“தோற்று போனதை விடவும் இந்தத் தண்டனை அதிக அவமானமாக இருக்கிறதே?” என்று காடர்கள் அணியின் மீசை துடித்தது. இதுதான் சர்வைவர் டீமின் நோக்கமும் கூட. இதன் மூலம் மேலதிக கசமுசா சண்டைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் போல. ஒரு தலைவியின் லட்சணத்துடன் ‘’நான் இந்தத் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்” என்று விஜயலட்சுமி முன் வந்தது நல்ல விஷயம். அவருக்கு உதவி செய்யும் பொறுப்புக்கு எல்லோருமே முன்வந்தார்கள். பிறகு விக்ராந்த் உதவி செய்தார்.

பார்வதியை வைத்துக் கொண்டு பாடுபடும் வேடர்கள் அணியை விடவும் காடர்கள் அணியில் ஒற்றுமை சற்று அதிகம் இருக்கிறது. விக்ரமன் படம் மாதிரி அடிக்கடி ‘லா...லா...லா...’ பின்னணி இசை கேட்கிறது. இந்த ஒற்றுமை உண்மையானதுதானா என்பது சில நாட்களில் தெரிந்து விடும் அல்லது சர்வைவர் டீம் தெரிய வைத்து விடுவார்கள்.

மூவேந்தர் அணியுடன் ஒட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ராம், ஒருவழியாக அங்கு செட்டில் ஆகி விட்டது நல்ல விஷயம். அவருக்குப் பிரியமான எதிரியான உமாபதியுடன் இப்போது நன்றாக நெருக்கமாகி விட்டார் போலிருக்கிறது.

மூன்றாம் உலகம். ‘பாவம்... யாரு பெத்த பிள்ளைகளோ... இப்படி அநாதைகளா நிக்குதுங்களே..’ என்று நம் மைண்ட் வாய்ஸ், ஷெனாய் இசை பின்னணியுடன் ஒலிக்கும்படி காயத்ரியும் இந்திரஜாவும் அங்கு பரிதாபமாகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். பசி, தனிமை, வெப்பம் போன்றவற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். “இரண்டு நாளா சாப்பிடலை” என்கிற அவரது வாக்குமூலங்கள் கண்ணீர் சிந்த வைத்தன. தன்னுடைய ஹோம் சிக்னெஸ் பற்றி கலங்கிய கண்களுடன் சொல்லிக் கொண்டிருந்தார் இந்திரஜா.

சர்வைவர் - 12
சர்வைவர் - 12

நுண்ணுணர்வும் நகைச்சுவைத் திறனும் சமயோசித அறிவும் கொண்டவர்கள் எந்தவொரு சிக்கலான சூழலையும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வார்கள். தமக்குத் தரப்படும் தண்டனையைக் கூட சொர்க்க உலகமாக மாற்றிக் கொள்ளும் புத்திசாலிகளும் உண்டு.

வேடர்கள் தீவு: முந்தைய நாள் இரவில் பார்வதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் மிக நெடிய வாய்ச்சண்டை ஒன்று நிகழ்ந்ததாம். அது என்ன சண்டை என்பது நமக்கு காட்டப்படவில்லை. கள்ளமெளனமாக அதைக் காட்டாமல் ‘பீகாரில் வெள்ளம்’.. என்கிற நியூஸ் ரீல் போல “பார்வதி – ஐஸ்வர்யா மோதல்’ என்று வாய்ஸ்ஓவரில் சொல்லி முடித்து விட்டார்கள். அப்படி அவர்கள் சொல்லவில்லையென்றால் கதை வசனம் நமக்கு சுத்தமாக புரிந்திருக்காது.

அதாவது என்ன ஆச்சுன்னா… ஊடகத்துறை தொடர்பாக ஐஸ்வர்யாவுக்கு டிப்ஸ் தர ஆரம்பித்தாராம் பார்வதி. இந்த நிகழ்ச்சியில் நீ இப்படியெல்லாம் நடந்து கொண்டால் அதிக கவனத்தைப் பெறலாம் என்பது போல் உபதேசங்கள் சொன்னாராம். ஆனால் ஐஸ்வர்யா அதையெல்லாம் கேட்காமல் “இது சர்வைவர் நிகழ்ச்சி. நாம் ஒழுங்காக விளையாடினால் வெற்றி கிடைக்கப் போகிறது. எதற்கு இந்த கிம்மிக்ஸ் எல்லாம்?’’ என்பது போல் சொல்லி பார்வதியின் உபதேசங்களை மறுத்தாராம். இந்த கருத்து வேறுபாடு உக்கிரமான சண்டையாக மாறி ஒன்றரை மணி நேரத்துக்கு நீண்டதாம்.

அப்படி பார்வதி என்னதான் உபதேசம் செய்திருப்பார் என்று சும்மா ஒரு கற்பனை ஓடியது...

“இந்தா பாரு புள்ள ஐசு... எந்த கேமுன்னாலும் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாடி ஓடிப் போயி கயித்துல ஏறிட்டு அப்புறம் முழிச்சிட்டு நிக்கறே... எதுக்கு? கேமரா உன்னைப் பார்க்கணும்தானே? கேமராவை நாம தேடி போகக்கூடாது... அதுவா நம்மள தேடி வரணும். இப்ப என்னைப் பாரு... வந்த நாள்ல இருந்து இந்த மரத்துக்கிட்டயேதான் குத்த வெச்சு பேசிட்டு இருக்கேன். நான் பண்ற அலப்பறைல எனக்குன்னு தனியா ஒரு கேமராமேனையே இவிய்ங்க அப்பாய்ன்ட் பண்ணியிருக்காங்க.. இந்த கேமரா தம்பியும் பாவம் டீ கூட குடிக்கப் போகாம என் பக்கத்துலயே உட்கார்ந்திருக்கான். “இல்லக்கா.. நீங்க பேசற எதையும் மிஸ் பண்ணாம ரெக்கார்ட் பண்ணனும்’னு ஸ்டிரிக்ட்டா சொல்லியிருக்காங்க..’ன்னு ஒரே அழுகாச்சி. என்னவொன்னு ரெண்டு காதுலயும் பஞ்சை அடைச்சு வெச்சிருக்கான். அதையும் மீறி அவனுக்கு காதுல ரத்தம் வருது... நம்மளால இந்த நிகழ்ச்சி பொழச்சிக் கெடந்தா நமக்கு அது பெருமைதானே... என்ன சொல்ற ஐசு... என்னைப் பார்த்து கத்துக்க” என்று பார்வதி ஆரம்பித்து அதனால் சண்டை ஏற்பட்டிருக்குமோ?!

சர்வைவர் - 12
சர்வைவர் - 12

பார்வதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம். இந்த லட்சணத்தில் பார்வதி எப்படி டிப்ஸ் கொடுக்க ஆரம்பித்திருப்பார்? ஒரு பார்வதியையே நம்மால் சமாளிக்க முடியவில்லை என்னும் போது க்ளோனிங் மாதிரி அவரே இன்னொரு பார்வதியை உருவாக்கினால் நம் நிலைமை என்னவாவது?

ஆனால் ஒன்று சில விஷயங்களில் (மட்டும்) ஆண்கள் புத்திசாலிகள். ‘இரு பெண்களுக்குள் நிகழும் சண்டை என்பது புயல் உருவாகும் பகுதியைப் போன்றது. அதில் போய் இவர்கள் சற்று தலையிட்டால் கூட போதும். தலை மண்ணில் உருளும்’ என்கிற நிதர்சனத்தைப் புரிந்தவர்கள். வேடர்கள் அணியும் இதற்கு விதிவிலக்கலல. “ரொம்ப நேரமா சண்டை நடந்தது... ஆனா கிட்ட போக பயமா இருந்தது” என்று அணியின் ஆண்கள் பரிதாப வாக்குமூலம் தந்தார்கள்.

இதுபற்றி ஐஸ்வர்யாவிடம் பிறகு பேசிக் கொண்டிருந்த நந்தா “பிரச்னையை பேசி தீர்த்துக்குறது நல்லதுதான். ஆனா ரொம்ப நேரம் பேசினீங்க. அதான் பிரச்னை” என்று ரைமிங்காக சொல்ல, ஐஸ்வர்யாவே சிரித்து விட்டார்.

இந்த விவகாரத்தினால், தனியாகவும் சோகமாகவும் அமர்ந்திருந்த பார்வதியிடம் ஆறுதலாக நாலு வார்த்தை பேசலாமே என்று லட்சுமிபிரியா சென்றார். ஒரு வாரம் தலைவராக இருந்த கெத்தைக் காண்பிக்க முடிவு செய்தார் போல. அத்தனை பெரிய புதிரையே சால்வ் செய்த லட்சுமிக்கு, பார்வதியை ஹேண்டில் செய்வது புதிரை விடவும் சிரமமான விஷயமாக இருந்தது.

வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சி ஒன்று உண்டு. லேண்ட் லைனில் வரும் ஒரு அழைப்பை அவர் எடுப்பார். எதிரில் இருப்பவர் வடிவேலுவை ஒரு வார்த்தை கூட பேச விட்டார்… “ஆங் ஆங்...’’ என்று இவர் ஏதோ சொல்ல வருவதற்குள் எதிர் ஆசாமி இடைமறித்து தொடர்ச்சியாக பேசி போனை வைத்தவுடன் வடிவேலுவுக்கு கொலைவெறியே வந்து விடும். “நன்னாரிப் பயலே’’ என்று திட்டுவார்.

ஆறுதல் சொல்லப்போன லட்சுமிபிரியாவுக்கும் ஏறத்தாழ இதுதான் நிகழ்ந்தது. அவரை எதையும் பேச விடாதது மட்டுமல்ல, தான் தனிமையாக உணர்வதற்கு லட்சுமிபிரியாவும் காரணம் என்பது மாதிரி சொல்லி, அவரையும் பார்வதி இழுத்துப் போட ‘தப்பித்தோம்... பிழைத்தோம்’ என்று அலறியடித்துக் கொண்டு திரும்பினார் சென்ற வார தலைவி.

“அடுத்து வரப்போற immunity challenge-ல ஒருவேளை நாம தோத்துட்டம்னா... எலிமினேஷனுக்கு யாரை நாமினேட் பண்ணலாம்?” என்று அணியில் இருந்தவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார் லட்சுமி. பதில் தெரிந்து கொண்டே கேட்கப்படும் கேள்வி இது. “வேற யார் நம்ம பார்வதிதான்” என்று நந்தாவும் ரவியும் கோரஸாக பதில் சொன்னார்கள். அவர்கள் அதற்கான காரணங்களை அடுக்க ஆரம்பித்த போது ‘இல்ல இது பற்றி அதிகம் பேச வேண்டாம்” என்றார் லட்சுமி. (ப்பா.. பயங்கர புத்திசாலிதான்!).

எவ்வளவு நேரம்தான் பார்வதி பற்றிய வம்பையே மென்று கொண்டிருப்பது? எனவே வேடர்கள் சமையல் செய்ய ஆரம்பித்தார்கள். பரிசாக கிடைத்த மசாலா பொருட்கள் வேறு அவர்களின் ஆசையைக் கிளப்பிக் கொண்டிருந்தது. சமையலை ஆரம்பித்து காய் அரிந்து போட்டு தண்ணீர் ஊற்றிய பிறகு “மசாலாவைப் போடுங்க.. அதிகமாப் போடுங்க…” என்று ஒவ்வொருவரும் அப்போதே நாக்கை சப்புக் கொட்ட ஆரம்பித்து விட்டார்கள். மசாலா இட்ட பிறகு கொதிக்கும் நீரை ஆளுக்கொரு சொட்டு கையில் இட்டு சுவைக்கும் போது… அடடடடா!

சர்வைவர் - 12
சர்வைவர் - 12

டீம் லீடரான அம்ஜத்தை ஓரங்கட்டிய பார்வதி, தன் பிரச்னையை ஆரம்பித்து “தலைவரே... இப்படி கண்டுக்காம இருந்தா எப்படி?” என்று ஆரம்பிக்க பார்வதியோடு மல்லுக்கட்டுவதென்பது பாறாங்கல்லோடு மோதுவது என்பதை சரியாக உணர்ந்து கொண்ட அம்ஜத் “ஸாரி... மன்னிச்சுக்க” என்றுபடி சரணாகதி அடைந்து எஸ்கேப் ஆகி வெளியே வந்தார். அந்த பக்கம் தண்ணீர் எடுக்கச் சென்ற நாராயணனையும் பிடித்து பார்வதி தன் பஞ்சாயத்தை ஆரம்பிக்க அவரும் காதில் ரத்தத்துடன் திரும்பினார்.

பார்வதியைப் பற்றி உற்சாகமாக வம்பு பேசும் போது கூடவே பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கிண்டலடித்தார் அம்ஜத். “பார்வதி என்ன நெனச்சிருப்பாங்கன்னா... காலைல எட்டு மணிக்கு எழுந்து, போடுற பாட்டுக்கு ஜாலியா டான்ஸ் ஆடிட்டு ஏஸி ரூம்ல கும்மாளமா வம்பு பேசலாம்னு வந்திருப்பாங்க... ஆனா இங்க வேற மாதிரி இருக்குன்றதை இப்போதான் புரிஞ்சிருக்காங்க” என்று அம்ஜத் சொன்னதும் சபையே வெடித்து சிரித்தது. (அப்போ பிக்பாஸ் அடுத்த சீஸன்லயும் யாராவது ஒருத்தர் ‘சர்வைவரை’ மறைமுகமா கிண்டல் பண்ணி பேசுவாங்கன்னு இப்பவே உள்ள ஒரு பட்சி சொல்லுது!).

இரு அணிகளுக்கு அடுத்த பணி பற்றி அறிவிப்பு வந்தது. அதேதான்... அழுகாச்சி டாஸ்க். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ‘Sorry மற்றும் Thanks’ சொல்ல வேண்டுமாம்.

நந்தா, ராம், பார்வதி, விக்ராந்த், அம்ஜத், ரவி, உமாபதி ஆகியோர் பேசினார்கள். இதில் பெரும்பாலான ஆண் போட்டியாளர்கள் தன்னுடைய அப்பாவுக்கு உண்மையான வருத்தத்துடன் ‘ஸாரி’ சொன்னார்கள்.

சர்வைவர் - 12 - பெசன்ட் ரவி
சர்வைவர் - 12 - பெசன்ட் ரவி

அப்பா - மகன் உறவு என்பது எப்போதுமே சற்று சிக்கலானது. இளமையில் அப்பாவின் புத்திமதியும் கண்டிப்பும் எப்போதுமே மகனுக்கு கசக்கும். அவரை வில்லனாகவே பார்க்க வைக்கும். ஆனால், காலம் நகர்ந்து மகனும் அப்பாவாகிற போதுதான் இந்தக் கஷ்டங்கள் புரியும். தன் அப்பாவின் அருமையும் தெரியும். இது காலம் காலமாக தொடர்ந்து நடந்தால் கூட யாரும் மாறுவதில்லை. இளமையின் அறியாமையில் தவறு செய்து பிறகே மனம் வருந்துகிறார்கள்.

“என் அக்கா என்னோட லவ்வை பிரிச்சுட்டா... அதுக்காக நான் தேங்க்ஸ் சொல்லணும்” என்று பார்வதி சொன்னதும் வேடர்கள் அணி சிரித்தது. (ஆக்சுவலி.. அந்தப் பையன்தான் பார்வதியோட அக்காவுக்கு தேங்க்ஸ் சொல்லியிருப்பான்). அக்காவோட லவ் மேரேஜை குடும்பத்துடன் இணைந்து தானும் கடுமையாக எதிர்த்ததற்காக இப்போது மனம் வருந்துவதாக சொன்னார் பார்வதி.

“நீங்களே காரை ஓட்டுங்க” என்று தன் அப்பாவிடம் அம்ஜத் கோபித்துக் கொண்ட சம்பவம் ஒரு நெகிழ்வான சிறுகதை போல இருந்தது. அம்ஜத் தாங்க முடியாமல் குலுங்கி அழுததும் அணியினர் ஓடிவந்து தேற்றினார்கள். கண்டிப்பாக தன்னை வளர்த்த அப்பாவை தவறாக புரிந்து கொண்டதற்கு ஸாரி சொன்ன ரவி, தனக்கு ஸ்டன்ட் சொல்லித் தந்த குருமார்களுக்கும் நன்றி சொன்னார்.

நாளைக்காவது சவால் ஏதாவது இருக்குமா என்று பார்த்தால்.. இல்லை போலிருக்கிறது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாம். சரி, அப்படியென்ன ஆட்டம், பாட்டம் நிகழப் போகிறது?

பார்த்துடுவோம்!