Published:Updated:

சர்வைவர் - 22 | வெளியேற்றப்பட்ட 'ஹே ராம்'... முதுகில் குத்திய வனேசா எனும் மாயமான்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 22-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

‘இம்யூனிட்டி சேலன்ஞ்சில்’ காடர்கள் அணி தோற்று விட்டதால், அவர்களில் இருந்து ஒருவர் வெளியேறியாக வேண்டும். அது யார்..?

பலியாடு எது என்பதை முடிவு செய்து விட்ட பிறகு நடந்த பிரியாணித் திருவிழா இது. பெரும்பான்மையான எதிர்வாக்குகளைப் பெற்று ராம்தான் இன்று வெளியேற்றப்படுவார் என்பது நாளைக்குப் பிறக்கப் போகிற குழந்தைக்கு கூட தெரியும். அந்தளவுக்கு காடர்களின் அணியின் பெரும்பாலோனோர் ராம் மீது கொலைவெறியில் இருந்தார்கள்.

காடர்கள் அணியினால் ராம் ‘காடை பிரியாணி’ ஆக்கப்பட்டாரா? ராம் சைடில் எந்தப் பிரச்னையுமே இல்லையா?

சர்வைவர் 22-ம் நாளில் நடந்தது என்ன?

சர்வைவர் - 22 |
சர்வைவர் - 22 |

காடர்கள் அணியில் ஏறத்தாழ நடுநிலையில் இருப்பவர் லேடி காஷ். அவருக்கு ராமின் மீது அனுதாபமும் இருந்தது. அதே சமயத்தில் பெரும்பான்மையுடன் சேர்ந்து இருந்தால்தான் பாதுகாப்பு என்கிற எண்ணமும் இருந்தது. இது மனித இயல்புதான். அதே சமயத்தில் ராமின் பிரத்யேக குணாதிசயம் மீது லேடி காஷுக்கு விமர்சனங்களும் இருக்கின்றன.

எலிமினேஷன் தொடர்பாக விவாதம் நடந்தபோது ராமுக்கு ஆதரவாக அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார் லேடி காஷ். “ஆரம்பத்தில் அணியுடன் ஒட்டாதது என் தப்புதான்” என்கிற மனஉளைச்சலில் பேசிக் கொண்டிருந்தார் ராம். இந்த ஆட்டத்தில் இருந்து விலகினால் கூட பரவாயில்லை என்கிற நிலைக்கு அவர் வந்து சேர்ந்திருக்கிறார்.

அந்தப் பக்கம் காடர்கள் அணியின் இதர உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். “யாருக்கு எதிரா வாக்களிக்கணுமோ அது உன் விருப்பம்” என்று புதிய வரவான வனேசாவிடம் சொன்ன உமாபதி “அவர் உன் கிட்ட கூட்டணி மாதிரி எதையாவது பேசினாரா?” என்று போட்டு வாங்கி தெரிந்து கொண்டார். ஏனெனில் காயத்ரியுடன் ராம் இது போல் முன்பு கூட்டணி அமைத்ததால் வந்த சந்தேகக் கேள்வி இது.

“அது போல் எதுவும் இல்லை. ஆனால் அணிக்குள் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டன என்று ராம் சொன்னார்” என்பதை மட்டும் சொல்லி அங்கிருந்து அகன்றார் வனேசா. “ராம் கெட்ட பையன் இல்ல.. ஆனா எங்கோ ஒத்துப் போக மாட்டேங்குது” என்று வருந்தினார் விக்ராந்த். அந்த வருத்தத்தில் உண்மை இருந்தது போல்தான் இருந்தது.

காடர்கள் அணியில் ராமை அதிகம் வெறுப்பவர்களில் முன்னணியில் இருப்பவராக விஜயலட்சுமியை சொல்ல முடியும். தான் வெறுப்பது மட்டுமல்லாமல், அதை தன்னுடைய அணிக்கும் பரப்புகிறார். ராமின் மீதான கிண்டல்கள், விமர்சனங்கள் போன்றவற்றை தொடர்ந்து சொல்வதின் மூலம் காடர்கள் அணிக்கு ஏறத்தாழ ஒரு மூளைச்சலவையை விஜயலட்சுமி நிகழ்த்துகிறார் என்று சொல்லலாம்.

விஜயலட்சுமிக்கு அடுத்தபடியாக ராமை வெறுப்பவர் என்று உமாபதியைச் சொல்லலாம். ஆனால், காடர்கள் அணியிலேயே அதிக உரிமையுடன் ‘வாடா... போடா’ சொல்லிப் பழகுகிறவர்கள் உமாபதி மற்றும் ராம் மட்டும்தான். ‘நண்பன்’ என்கிற பிரியம் இருந்தாலும், ராம் மாற்றி மாற்றிப் பேசுவதால் உமாபதி கடுப்பாகிறார்.

சர்வைவர் - 22 |
சர்வைவர் - 22 |

ஏறத்தாழ விக்ராந்த்தின் நிலைமையும் இதுதான். ஆனால், ராமுக்கு புரிய வைத்து விட்டால் அவர் மாறி விடுவார் என்கிற சிறிய நம்பிக்கை விக்ராந்துக்கு இருக்கிறது. இந்த ஸ்பேஸை தர விக்ராந்த் தயாராகவே இருக்கிறார். ஆனால் ராமுடன் பேச ஆரம்பிக்கும் போது ஏதோவொரு புள்ளியில் உரையாடல் உடைந்து இருவருமே கொலைவெறியை அடைகிறார்கள்.

ஏற்கெனவே சொன்னது போல் லேடி காஷ் ‘நியூட்ரல்’ நிலையில் இருக்கிறார். ‘இருக்கிற இடம் தெரியாம இருந்துடுவோம்’ என்பது இவர் பாலிசி. “தென்னை மரத்துல ஒரு குத்து... பனை மரத்துல ஒரு குத்து’ என்கிற சேஃப் கேம் இவருடையது. வேறு வழியில்லை. இவரது குணாதிசயம் அப்படி.

வனேசா இப்போதுதான் ஆட்டத்தின் உள்ளே நுழைந்திருக்கிறார். எனவே ‘யார் பக்கம் சாய்வது?’ என்கிற குழப்பம் இவருக்கு இருக்கலாம். ராம் சிரிக்க சிரிக்கப் பேசுவதெல்லாம் ஒகே.. ஆனால் மெஜாரிட்டி பக்கம் சாய்ந்தால்தானே பாதுகாப்பு?” என்று யோசிக்கிறார் போல. ஏறத்தாழ லேடி காஷ் நிலைமைதான் இவருக்கும்.

ஓர் அணியில் ஒரு குறிப்பிட்ட நபர் மீது அனைவருக்குமே விமர்சனங்களும் வருத்தங்களும் இருக்கிறது என்றால், அந்த நபர் மீது நிச்சயம் பிழை இருக்கும். இது ஆதாரமான லாஜிக். இந்த வகையில் ராமின் சறுக்கல்கள் என்ன?

பிக் பாஸ் - 1 | கமல்ஹாசனின் கதாகலாட்சேபமும், 18 போட்டியாளர்களின் பரபர என்ட்ரியும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“நேத்திக்கு நந்தா முன்னாடி என்னை தப்பா பேசினீங்க.. இன்னிக்குப் பார்த்தா இனிகோ முன்னாடியும் என்னைப் பத்தி ஏதோ சொல்லியிருக்கீங்க போல இருக்கு. அதனால்தான் அர்ஜூன் சார் முன்னாடி.. ‘காடர்கள் அணியில் மத்ததெல்லாம் ஓகே. ராமை மட்டுமே இக்கு வைத்து பேசுகிறார்கள்’ என்று இனிகோ சொல்கிறார். அதுக்கு என்ன அர்த்தம். எனக்குன்னு ஒரு லைஃப் இருக்கு. என்னைப் புரிஞ்சுக்கோங்க” இதுதான் ராம் தொடர்ந்து அனத்தும் ஆதார ஸ்ருதி.

‘சர்வைவர்’ என்பது அடிப்படையில் ஒரு கேம் ஷோ. இதில் நிச்சயம் பல்வேறு தரப்பட்ட மனிதர்கள் இருப்பார்கள். அவர்களை எதிர்கொள்வதுதான் இந்த சவாலின் ஒரு பகுதியே. ‘ஊர்ல இருந்து பெரியப்பா வந்திருந்தப்ப அவர் முன்னாடி என்னை கேவலமா பேசிட்டிங்கள்ல. என் மானமே பேச்சு’ என்று ஏதோ வீட்டு விவகாரம் மாதிரி ராம் புலம்புவது அபத்தம்.

சர்வைவர் - 22 |
சர்வைவர் - 22 |

“கேமரா பின்னாடி பேசுங்க. முன்னாடி பேசாதீங்க... எனக்குன்னு ஒரு லைஃப் இருக்கு” என்று ராம் தொடர்ந்து வேண்டுகோள் வைப்பதும் ஒருவகையில் சிறுபிள்ளைத்தனமே. இந்த நிகழ்ச்சி கேமராக்கள் முன்னால் நடப்பது என்பதும் அது சார்ந்த எதிர்வினைகள் நிச்சயம் இருக்கும் என்பதையும் ராம் முன்னரே அறிந்திருப்பார். அப்படி உணர்ந்திருந்தால் இந்த புலம்பல்கள் நிச்சயம் நேர விரயம். “எந்த வகையிலும் என்னைக் கிண்டல் செய்யாதீர்கள். எனக்கு அது பிடிக்கவில்லை’ என்று அழுத்தம் திருத்தமாகவே அவர் சொல்லி விடலாம்.

“உங்க ஒவ்வொருவருக்கும் ஒரு பின்னணி இருக்கு. எனக்கு அப்படியல்ல” என்று முதலில் சொல்லி விட்டு ‘நான் அந்த நோக்கத்தில் சொல்லவில்லை’ என்று பிறகு மாற்றிப் பேசுவதும் ராமின் கேரக்ட்டரில் உள்ள பிரச்னையைக் காட்டுகிறது. “மாத்தி மாத்தி பேசறாருங்க” என்று உமாபதி தொடர்ந்து சொல்வதும் இதைத்தான்.

உண்மையில் ராம் நினைத்திருந்தால் இதை வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசி இந்த பிரச்னை பெரிதாகாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம். ‘குடிகாரன் பேச்சு.. விடிஞ்சா போச்சு’ என்று அவரே இந்தப் பிரச்னையை ஊதி அணைத்து விளையாடுவதால் இந்தத் தீ அணையாமல் அவருக்கு எதிராக வளர்கிறது.

ட்ரைபல் பஞ்சாயத்து ஆரம்பித்தது. ஏதோ இலுமினாட்டி ரகசியக்குழுவின் சந்திப்பு போல காட்டின் நடுவே நெருப்பின் வெளிச்சத்தில் மனிதர்கள் ஒவ்வொவருவராக வரத் தொடங்கினார்கள்.

“ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டார் அர்ஜூன். (இந்த பன்ச் டயலாக்கை வேற எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே?!). ஏற்கெனவே எதிர்பார்த்தபடி ராமின் மீது ஏறத்தாழ அனைவரும் குற்றம் சாட்டினார்கள். புதிதாக வந்த வனேசா கூட ராமின் பக்கம் நிற்கவில்லை. (மாயமான்களை நம்பி ராமன் ஏமாறும் விஷயம் ராமாயண காலம் தொட்டே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!).

“உமாபதி... இந்த முறை நீங்க இம்யூனிட்டி சேலன்ஞை ரொம்ப அசால்ட்டா ஹேண்டில் பண்ண மாதிரி இருக்கே?” என்று காடர்கள் அணித்தலைவரை நோக்கி அர்ஜூன் சுற்றி சுற்றி கேட்டது நல்ல செக்மேட்.

சர்வைவர் - 22 |
சர்வைவர் - 22 |

‘‘இந்தச் சவாலில் தோற்றாவது ராமை வெளியேற்றணும்” என்று சீரியஸாகவோ, அல்லது விளையாட்டாகவோ விஜயலட்சுமி முன்னர் சொன்னது உண்மையாகி விட்டது. அவர் பற்ற வைத்த தீ அணியின் சப்கான்ஷியஸில் ஆழமாக பதிந்து விட்டதோ என்னமோ? அல்லது பிளானே அதுதானா?

“அப்படியெல்லாம் இல்லை. எங்க கிட்ட திறமை குறையல. ஆனா வேகம் குறைந்து விட்டது. மேலும் எதிரணியினர் எங்களை விடவும் திறமையாக விளையாடினார்கள்” என்பதை வேறு வேறு வார்த்தைகளில் சொல்லி உமாபதி சமாளித்தாலும் மிகத் திறமையாக குறுக்கு விசாரணையை நிகழ்த்தினார் ஆக்ஷன் கிங். “அய்யோ சார். அந்த டயலாக்கை நான் ஏதோவொரு எரிச்சல்ல சொன்னேன். ராம் செஞ்ச விஷயங்களும் அப்படித்தான் சொல்ல வெச்சுது” என்றார் விஜயலட்சுமி.

“நீங்க என்ன சொல்றீங்க... ராம்?” என்று குற்றம் சாட்டப்பட்டவரிடமே நேரடியாக வந்தார் அர்ஜுன். “எங்கள் அணியில் சில மனஸ்தாபங்கள் இருந்தது உண்மைதான். ஆனால் ஆட்டம் ஆரம்பித்த போது அர்ஜூனனின் குறி போல வெற்றியை நோக்கி மட்டுமே என் கவனம் இருந்தது” என்று ராம் அளித்த விளக்கம் உண்மைதான். இம்யூனிட்டி சவாலில் மிக ஆபத்தான முறையில் தடுப்பாட்டம் ஆடி எதிரணியைத் திணற வைத்தார்.

“மத்தவங்க எல்லாம் சினிமா பின்னணியைச் சேர்ந்தவங்க. அதனால நீங்க ஒதுக்கப்படறதா நினைக்கறீங்களா?” என்று ராமை நோக்கி நேரடி அம்பை எய்தார் அர்ஜூன். “முதல்ல அந்தப் பிரச்னை எனக்கு இருந்தது. இப்ப நான் கூல்” என்று ராம் சமாளித்தார். அவர் உண்மையிலேயே அதில் இருந்து வெளியே வந்திருந்தால் மறுபடியும் இதைப் பற்றி பேசியிருக்கவே மாட்டார்.

சர்வைவர் - 22 |
சர்வைவர் - 22 |

“நெகட்டிவிட்டி-ன்ற வார்த்தையை சம்பந்தப்படுத்தி ரெண்டு மூணு முறை என்னைக் குறிப்பிட்டார். அது என்னை புண்படுத்திடுச்சு. இருந்தாலும் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டேன். பழைய விஷயங்களை மறுபடி மறுபடி போஸ்ட்மார்ட்டம் பண்ணாதீங்கன்னு சொன்னேன். Nepotism பத்தி சொல்றார். எங்க அண்ணன் பேரை உபயோகப்படுத்தி இதுவரை நான் சினிமா டிக்கெட் கூட வாங்கினதில்லை சார்” என்று வருத்தமும் மெல்லிய கோபமும் கலந்து பேசினார் விக்ராந்த்.

வாரிசு அரசியல் பற்றிய தன் அபிப்ராயத்தைச் சொல்லும் போது “திறமைதான் ஒருவரை தொடர்ந்து அழைத்துச் செல்லும். அப்பா செல்வாக்குலாம் கடைசி வரைக்கும் வராது” என்கிற நிதர்சன உண்மையை பதிவு செய்தார் அர்ஜுன். (சினிமாத்துறையில் இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.).

இந்த நிலைமையில் லேடி காஷூம் ராமுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் எடுக்க வேண்டியிருந்தது. ‘அவர் தலைக்குள்ள சில பிரச்னைகள் ஓடிட்டே இருக்கு. நான் கூட சினிமாத்துறையில் இல்லாதவர்தான். இந்த அணியுடன் இயல்பாகத்தான் பழகுறேன். அவர் தனது பழைய சுமைகளை தூக்கியெறிந்து விட்டால் சரியாகிவிடும்” என்று லேடி காஷ் சொன்னது நல்ல பாயின்ட்.

“எங்களை டீம்னு சொல்றே. ஆனா நீ மட்டும் வனேசாவை கூப்பிட்டு தீவை சுத்திக் காண்பிக்கலையா?” என்று உமாபதி கேட்க “அதுக்கு உன் பர்மிஷன் கேட்டுட்டுதான் போகணுமா?” என்று ராமும் கவுன்ட்டர் தந்தார். வனேசாவுடன் பேசுவது தொடர்பாக ராமுக்கும் உமாபதிக்கும் இடையில் சண்டை நிகழலாம் என்பதை இந்தக் கட்டுரைத் தொடரில் முன்பே குறிப்பிட்டிருந்தேன். (பார்வதியைப் போலவே நானும் ஒரு தீர்க்கதரிசிதான்! ஹிஹி).

“மத்தவங்க உங்களைப் பத்தி பேசறாங்கன்னு சொல்றீங்க. ஆனா நீங்களும் அணியில் உள்ள மத்தவங்களைப் பற்றி என் கிட்ட பேசலையா?” என்று புது வரவு வனேசாவும் ராமுக்கு எதிராக வெடிகுண்டு வீச “இந்தப் பொண்ணுங்களே. இப்படித்தான் எஜமான்” என்கிற பரிதாப முக பாவத்திற்கு மாறினார் ராம்.

அந்த வெண்ணெய்தான் ஹீரோ… கூச்சமே படாத விஜய் சேதுபதியும், 8 ஆக குறைந்த மாஸ்டர் செஃப் போட்டியாளர்களும்!

இவர்களின் வாதப் பிரதிவாதங்களில் மண்டை குழம்பிய அர்ஜுன், “இருக்கு.. ஆனா இல்லை” என்று குழப்பும் எஸ்ஜே சூர்யா மாதிரி “ராம்.. பிரச்னை இருக்கா இல்லையா?’ என்று நேரடியாக கேட்க “முதல்ல இருந்தது. இப்ப இல்லை. இந்த அணியில்தான் நான் கடைசிவரை இருப்பேன். இவிய்ங்க அடிச்சா கூட வெளியில் போக மாட்டேன்” என்று அநாவசிய சென்ட்டிமென்ட் தூவிய ராம் “ஆனா ஒருவேளை அணியில் இருந்து போக நேர்ந்தால் அது என் கையில் இல்லை” என்று மறுபடியும் பாயைப் பிறாண்டினார்.

‘இது வேலைக்கு ஆவறதில்லை.. வோட்டிங் போயிடலாம்’ என்று கருதிய அர்ஜூன் வாக்கெடுப்பை நிகழ்த்தத் துவங்கினார். ஏற்கெனவே எதிர்பார்த்த ரிசல்ட்தான். காடர்கள் அணியில் இருந்த அனைவருமே ராமுக்கு எதிராக வாக்களித்திருந்தார்கள். தனது வாக்கை லேடி காஷிற்கு எதிராக அளித்திருந்த ராம், ‘Get well Soon’ என்கிற பாதுகாப்பான பின் குறிப்பையும் எழுதியிருந்தார்.

சர்வைவர் - 22 |
சர்வைவர் - 22 |

மொத்தமுள்ள ஏழு நபர்களில் ராமுக்கு எதிராக ஆறு வாக்குகள் விழுந்ததால் அவர் எலிமினேஷனை சந்திக்க வேண்டியிருந்தது. கடைசி சான்ஸான ‘கண்ணகி காற்சிலம்பும்’ அவரை கை விட்டு விட்டது. வெள்ளை முத்துக்கள்தான் வந்திருந்தன. (அது என்ன டெக்னிக் உருட்டோ?!).

‘ஓகே... ஆல் தி பெஸ்ட் கைஸ்” என்று வாழ்த்தியபடி ராம் வெளியேறிய போது அனைவரின் முகங்களிலும் உண்மையான வருத்தம் தெரிந்தது. “நல்ல பயதான் ஆனா… என்னமோ அவன் கூட சிங்க் ஆகலை” என்கிற மோடில் இருந்தார்கள்.

ராம் லுலுவாய்க்கு எலிமினேட் ஆனாலும் ‘மூன்றாம் உலகத்திற்கு தான்’ செல்வார். அவர் காடர்கள் அணியில் இருந்து தப்பித்து வந்தது ஒருபக்கம் இருக்கட்டும். “அந்த ராம்... இங்கதான் வருவான். வந்தா இருக்கு.. அவனுக்கு” என்று கறுவிக் கொண்டிருக்கும் காயத்ரியிடமிருந்து தப்புவாரா? கூடவே பக்கவாத்தியமாக பார்வதி வேறு இருப்பார்.

நெருப்பில் இருந்து தப்பித்து தீயில் விழுந்த கதைதான் ராமுக்கு. இந்த இருவரையும் அவர் சமாளிப்பாரா?

பார்த்துடுவோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு