Published:Updated:

சர்வைவர் - 3 |பாட்டில் வீசிய தலைவர்கள்... ரொம்ப லென்த்தா போன பார்வதி - ஸ்ருஷ்டி பஞ்சாயத்து!

சர்வைவர் - 3

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் மூன்றாவது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 3 |பாட்டில் வீசிய தலைவர்கள்... ரொம்ப லென்த்தா போன பார்வதி - ஸ்ருஷ்டி பஞ்சாயத்து!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் மூன்றாவது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 3

காடர்கள் மற்றும் வேடர்களின் அணிக்கு தனித்தனியாக ‘தலைவர்’ போட்டி நடந்ததுதான் நேற்றைய நாளின் ஹைலைட். உண்மையில் இதை ‘தலைவி’களுக்கான போட்டி என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பெண் போட்டியாளர்கள்தான் முன்னணியில் இருந்தார்கள். உடல் வலிமை சார்ந்த இந்த ஷோவில் பெண்கள் தங்களின் திறமைகளை நிரூபிப்பது மகிழ்ச்சி.

போட்டியாளர்களுக்குள் சிண்டு முடிந்து விடுதல் இது போன்ற ஷோக்களின் அடிப்படை. அப்போதுதான் ‘தரமான சம்பவங்கள்’ கிடைக்கும். எனவே தலைவருக்கான நாமினேஷன் சடங்கின் போது, போட்டியாளர்களுக்குள் இருந்த தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள், கோப தாபங்களும் வெளிப்பட்டன.

இது தவிர விஜே பார்வதி வேறு உப்புச் சப்பில்லாத ஒரு விஷயத்திற்காக நீள….மான பஞ்சாயத்தைக் கூட்டிக் கொண்டிருந்தார்.

ஓகே... மூன்றாவது நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் - 3
சர்வைவர் - 3

அர்ஜூன் தேர்தல் அதிகாரியாக அமர்ந்து இரண்டு குலங்களுக்குமான தேர்தலை நடத்திக் கொண்டிருந்தார். தலைவர் என்றாலே அது பாட்டில் வீசுவதில் இருந்து ஆரம்பிப்பதுதானே நம்முடைய மரபு?! எனவே போட்டி அது தொடர்பாகத்தான் இருந்தது.

தலைவராக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தனியான கூடாரம் உள்ளிட்ட சில வசதிகள் கிடைக்கும். இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அது மட்டுமல்லாமல் தலைவருக்கு பொறுப்புகளும் உண்டு. தனது அணியை திறமையாக ஒருங்கிணைத்து வேலை வாங்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் தலைவர் போட்டிக்கான தேர்தல் நடக்கும்.

இந்த வார தலைவர் தேர்தலில், அடிப்படையாக எதிர்பார்க்கப்பட்டது ‘தைரியம்’. முதலில் ‘காடர்கள்’ அணியை அழைத்தார் அர்ஜூன். தலைவர் போட்டிக்கான வேட்பாளர்களாக நான்கு நபர்கள் நிற்கலாம். அவர்களில் இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குள் நடக்கும் போட்டியில் வெல்பவர் அணியின் தலைவராக மாறுவார்.

காடர்கள் அணி கூடிப் பேசியதில் காயத்ரி, லேடி காஷ், விஜயலட்சுமி மற்றும் இந்திரஜா ஆகியோர் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டு வந்தார்கள். இதில் நால்வருமே பெண்கள் என்பது சிறப்பு. ‘ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் ஓர் ஆண் இருப்பான்’ என்று உலகத்துக்கு ஒரு புதிய பழமொழியை சொல்ல காடர்கள் அணியின் ஆண்கள் விரும்பினார்கள் போல.

தலைவருக்கான நாமினேஷன் சடங்கு தொடங்கியது. அந்த அணியில் உள்ளவர்கள், யாரை தேர்வு செய்ய விரும்புகிறாரோ, அவர் வைத்திருக்கும் தீப்பந்தத்தில் மணிமாலையைக் கட்ட வேண்டும். (இப்படியெல்லாம் props-ஐ காண்பித்து பழங்குடியினர் எபெஃக்டை கொண்டு வருகிறார்களாம்!)

இந்த நாமினேஷனில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றவர் லேடி காஷ். இவருக்கு camp fire உள்ளிட்ட காட்டு அனுபவம் இருப்பதாலும் உடல் வலிமையில் சிறந்து விளங்குவதாகவும் இவரை தலைவர் ஆக்க விரும்புவதாக பலரும் சொன்னார்கள். இவருக்கு ஐந்து வாக்குகள் கிடைத்தன. இவருக்கு அடுத்தபடியாக 2 வாக்குகளைப் பெற்றவர் காயத்ரி. விஜயலட்சுமிக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது.

ஆக... லேடி காஷுக்கும் காயத்ரிக்கும் இடையே தலைவர் போட்டி நடக்கும். அந்தப் போட்டி என்ன?

சர்வைவர் - 3
சர்வைவர் - 3

கால்பந்து விளையாட்டில் ‘பெனால்ட்டி கிக்’ என்று ஒரு சமாசாரம் இருக்கிறதில்லையா? இந்தப் போட்டியும் ஏறத்தாழ அது போலத்தான். பின்னணியில் 17 பாட்டில்கள் அடுக்கப்பட்டிருக்கும். எறிவதற்காக 50 பந்துகள் தரப்படும். சற்று தூரத்தில் இருந்து இருவர் பந்துகளை எறிவார்கள். கோல் கீப்பர் எத்தனை பாட்டில்களைக் காப்பாற்றுகிறார் என்பதைப் பொறுத்து அவரின் வெற்றி வாய்ப்பு அமையும்.

முதலில் வந்த லேடி காஷ், ‘கோல் கீப்பர்’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்தார். எனவே அவருடன் போட்டியிடும் காயத்ரி பந்து எறிதலைச் செய்ய வேண்டும். அவர் துணைக்கு ஒருவரை அழைத்துக் கொள்ளலாம். அதன்படி அவர் தேர்ந்தெடுத்தது, சரண். உண்மையில் சரணுக்கு ‘லேடி காஷ்’ தலைவரானால் நன்றாக இருக்கும் என்றுதான் விருப்பம் இருந்தது. ஆனால் சூழல் அவரை எதிர் திசையில் நிறுத்தி வைத்தது. இருந்தாலும் தன்னை மதித்து அழைத்த காயத்ரிக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். சரண் குறிபார்த்து அடித்து நிறைய பாட்டில்களை விழச் செய்தார். லேடி காஷால் ஒன்பது பாட்டில்களை காப்பாற்ற முடிந்தது.

இப்போது பதிலுக்கு பந்து எறிவது லேடி காஷின் முறை. அவர் துணைக்கு விக்ராந்த்தை அழைத்துக் கொண்டார். விக்ராந்துக்கு கிரிக்கெட் ஆடிய அனுபவம் இருக்கிறது என்பதால். ஆனால் காயத்ரி ஒரு திறமையான கோலியாக நின்று பல பந்துகளை அநாயசமாக தடுத்தார். 13 பாட்டில்களை அவரால் காப்பாற்ற முடிந்தது. எனவே ‘காடர்கள்’ அணியின் தலைவராக காயத்ரி தேர்வானார்.

ஆக... பாட்டில்கள்தான் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் முக்கிய காரணியாக அமைந்தது. (நோ... நோ... நான் டாஸ்மாக் பாட்டில்களைச் சொல்லவில்லை).

இங்கு இடைச்செருகலாக ஒன்று சொல்ல வேண்டும். பந்தால் அடிபட்டு பாட்டில் கீழே விழும் காட்சிகள் பார்ப்பதற்கு அத்தனை அழகாக பதிவாக்கப்பட்டிருந்தது.

இப்போது ‘வேடர்கள்’ அணியின் தலைவருக்கான தேர்தல். ஐஸ்வர்யா, லட்சுமி பிரியா, அம்ஜத்கான், நாராயணன் ஆகிய நால்வர் வேட்பாளர்களாக இருந்தார்கள். இதில் லட்சுமி பிரியாவுக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்தன. LP (அப்படித்தான் இவரை அழைக்கிறார்கள்) பொறுமையானவராகவும் அணியை சிறப்பாக ஒருங்கிணைக்கிறவராகவும் இருக்கிறாராம்.

பெசன்ட் ரவி, LP-யின் தீவிரமான ஆதரவாளர் போலிருக்கிறது. “இவங்க சொல்றதைக் காது கொடுத்து கேட்கறாங்க சார்” என்று முகத்தில் பரவசம் கொப்பளிக்க அர்ஜூனிடம் சொன்ன போது “அடப்பாவி மனுஷா... நான் உனக்கு சினிமால நடிக்கறதுக்கு வாய்ப்பு தந்தபோது கூட உன் முகத்துல இவ்ளோ எக்ஸ்பிரஷன் வரலையே” என்று சிறப்பாக நக்கலடித்தார் அர்ஜூன்.

சர்வைவர் - 3
சர்வைவர் - 3

சும்மாவே ஆடுபவருக்கு சலங்கையும் கட்டி விட்டால்..? இந்த நாமினேஷன் சடங்கை தரமான சம்பவமாக பயன்படுத்திக் கொண்டார் பார்வதி. “நான் ஐஸ்வர்யாவை நாமினேட் செய்ய விரும்புகிறேன்” என்று ஆரம்பித்தவர், ‘தைரியம்’ என்கிற தகுதி அவருக்கு நிறைய இருக்கிறது. தலைவர் என்பவர் அணியை சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டும். குழு மனப்பான்மை கூடாது. நான் இங்கு வந்ததில் இருந்து தனிமையாகவே உணர்கிறேன்” என்று ஏகப்பட்ட மறைமுக புகார்களைக் கூறிக் கொண்டிருந்தார்.

“யாரு… உங்களை அப்படி செஞ்சது... சொல்லுங்க” என்று அர்ஜுன் புன்னகையுடன் கேட்ட போது... ‘ஹிஹி... பொதுவா சொன்னேன்’ என்று பின்வாங்கி விட்டார்.

லட்சுமிபிரியாவுக்கு வாக்களித்த நாராயணன், ‘இந்தத் தீவுக்கு வந்த நிமிஷத்துல இருந்து நெருப்பை உண்டாக்குவதற்காக தொடர்ந்து ஆராய்ச்சி பண்ணிட்டே இருக்காங்க. அந்த விடாமுயற்சி எனக்குப் பிடிச்சது” என்கிற காரணத்தைச் சொன்னார். (சர்வைவர் முடிவதற்குள் LP நெருப்பைப் பற்ற வைத்து விடுவார் என்று நம்புவோம்).

இந்த நாமினேஷன் வைபவத்தில் லட்சுமி பிரியா அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். அடுத்த இடத்தில் வந்தவர் ஐஸ்வர்யா. எனவே இந்த இருவருக்குள்தான் ‘கோல் கீப்பர்’ போட்டி நடக்கும்.

முதலில் லட்சுமிபிரியா கோல் கீப்பராக நின்றார். இவர் நேஷனல் லெவல் கிரிக்கெட் பிளேயர் என்பதால் சிறப்பாக தடுத்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவருக்கு எதிராக பந்து எறிய வந்த ஐஸ்வர்யா, அம்ஜத்தை துணைக்கு அழைத்துக் கொண்டார். அம்ஜத் திறமையாக பந்துகளை எறிந்து சிலபல பாட்டில்களை விழச் செய்தார். லட்சுமிபிரியாவால் 9 பாட்டில்களைக் காப்பாற்ற முடிந்தது. ஆக அடுத்த கோல்கீப்பர் இதை விடவும் அதிக எண்ணிக்கையில் பாட்டில்களைக் காப்பாற்றினால்தான் தலைவராக முடியும்.

அடுத்த கோல் கீப்பர் ஐஸ்வர்யா. இவருக்கு எதிராக பந்து எறிய வந்த லட்சுமிபிரியா, துணைக்கு பெசன்ட் ரவியை அழைத்துக் கொண்டார். இந்தக் கூட்டணி முந்தைய நபர்கள் செய்த தவறை செய்யவில்லை. அதாவது முன்பு வந்தவர்கள் ஏதோ அவசரம் அவசரமாக தேங்காய் பொறுக்குவதைப் போன்று பந்துகளை கடகடவென்று எறிந்தார்கள். பிறகு வந்த அம்ஜத் மட்டும் சற்று நிதானத்தைக் காட்டினார்.

எனவே லட்சுமிபிரியாவும் பெசன்ட் ரவியும் நேரம் எடுத்துக் கொண்டு நிதானமாக எறியலாம் என்று முடிவு செய்தார்கள். இந்த உத்தி ஓரளவிற்கு நன்கு வேலை செய்தது. கோல்கீப்பர் ஐஸ்வர்யாவால் 8 பந்துகளை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. எனவே வேடர்கள் அணியின் தலைவராக லட்சுமிபிரியா தேர்வானார்.

உண்மையில் தலைவர் பதவியில் போட்டியிடுவதற்கான எண்ணமோ, விருப்பமோ லட்சுமிபிரியாவுக்கு இல்லை. நாமினேஷன் சமயத்தில் மற்றவர்கள் அழைத்ததால் போட்டியில் கலந்து தலைவராகி விட்டார்.

சர்வைவர் - 3
சர்வைவர் - 3

காடர்கள் அணியிலும் ஐஸ்வர்யாதான் தலைவர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் அவர்தான் மெஜாரிட்டியான நாமினேஷனைப் பெற்றார். ஆனால் போட்டியின் முடிவு காயத்ரியை தலைவராக்கியது. லட்சுமி பிரியாவுக்கு நிகழ்ந்ததும் அதுவே. விரும்பாமலேயே தலைவரானார்.

தேர்தல் சடங்கு முடிந்ததும் “சரி... எல்லோரும் அவங்க அவங்க தீவுக்குப் போங்க” என்று சூனா பானா மாதிரி கூட்டத்தைக் கலைத்த அர்ஜூன், அவர்கள் சென்றதும் தானும் ஒரு பந்தை எடுத்து விளையாட்டாக வீசிப் பார்த்தார். அது ‘நச்’சென்று சரியாக பாட்டிலை அடித்து வீழ்த்தியது. ஆக்ஷன் கிங்குனா... சும்மாவா?! (ஆனால் இதற்கு எத்தனை டேக் ஆகியது என்கிற ரகசியம் நமக்கு காட்டப்படவில்லை).

“சூரிய வெளிச்சம் இருக்கும் போதே சாப்பிடறதுக்கு எதையாவது தேடி எடுத்துட்டு வாங்க” என்று வேடர்கள் அணியின் தலைவர் LP ஆணையிட “சரிங்க தலைவரே... கத்துக்கறேன் தலைவரே” என்று NGK சூர்யா மாதிரி பலர் கிளம்பினார்கள்.

கறிக்கடை பாய், ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாடலை கற்றுக் கொண்டே ஆட்டை வெட்டும் காமெடி காட்சி மாதிரி, ஒரு இளநீரை நெட்டுக்குத்தாக படுக்க வைத்து அரிவாளால் அதன் மீது கொத்து பரோட்டா போட்டுக் கொண்டிருந்தார் பார்வதி. பாவம், அந்த இளநீர்க்காய்க்கு பத்து தலைமுறையைக் கடந்து வலித்திருக்கும்.

உணவை தேடிச் சென்ற டீம் பப்பாளிகளைப் பறித்து ‘ஸ்வாகா’ செய்து கொண்டிருந்தது. மற்றவர்கள் சென்று விட்டதால், இளநீர் குடித்த களைப்பு போக பார்வதியும் ஐஸ்வர்யாவும் இணைந்து சிறிது நேரம் புறணி பேசிக் கொண்டிருந்தார்கள். வேறென்ன? தலைவர் தேர்தல் பற்றியதுதான்.

ஸ்ருஷ்டி டாங்கேவை சைடில் ஒதுக்கிய நந்தாவும் இன்னொரு பக்கம் புறணி பேசிக் கொண்டிருந்தார். “இந்த பார்வதி புள்ள... என் கிட்ட என்ன சொல்லுச்சு தெரியுமா?” என்று அவர் ஆரம்பிக்க “சொல்லு... சொல்லு...” என்று முகம் நிறைய சிரிப்புடன் வம்பு கேட்க ஆர்வமானார் ஸ்ருஷ்டி.

எவ்வளவு நேரம்தான் தேங்காயையும் பப்பாளிளையும் வெட்டிக் கொண்டிருப்பார்கள்? போரடிக்க ஆரம்பித்ததால் குழுவாக அமர்ந்து பெட்ஷீட்டை உதறி பஞ்சாயத்தை ஆரம்பித்தார்கள். பஞ்சாயத்தின் மையமாக இருந்தவர்... வேறு யார்? பார்வதிதான்.

சர்வைவர் - 3
சர்வைவர் - 3

“எதிர் டீம்ல பாருங்க.. எவ்வளவு ஒத்துமையா இருக்காங்க.. இந்திராஜாவை மடியில் போட்டு தாலாட்டறாங்க… இங்க நான் வந்ததுல இருந்து தனியாவே ஃபீல் பண்றேன்” என்று பார்வதி ஆரம்பிக்க “எதுக்கு தயங்கறே... எதுவா இருந்தாலும் ஓப்பனா பேசு” என்று எடுத்துக் கொடுத்தார் பெசன்ட் ரவி.

‘ஓப்பனா பேசுறது பத்தி எனக்கே பாடமா?! இதோ வர்றேன் பாரு’ என்கிற தீர்மானத்துடன் முகத்தை மாற்றிக் கொண்டு தனது பஞ்சாயத்தைத் தொடர்ந்த பார்வதி, ஸ்ருஷ்டியிடம் நேரடியாக மோதலை ஆரம்பித்தார். “நான் மணலில் ஓடி வந்த சமயத்தில் கீழே விழுந்த போது நீ ஏன் சிரிச்சே... அது எனக்குப் பிடிக்கல. எதுவா இருந்தாலும் முன்னாடி பேசுங்க. பின்னாடி பேசாதீங்க” என்று அலப்பறையைக் கூட்டினார். வெளிச்சம் மறைந்து இருட்டத் தொடங்கியது. அப்போதும் பார்வதியின் பிராது முடியவில்லை.
அந்தத் தீவில் புலியோ…சிங்கமோ – அப்படி ஏதாவது இருந்தால் - அது டின்னர் சாப்பிட்டு பரஸ்பரம் ‘குட்நைட்’ சொல்லி உறங்கக்கூட சென்றிருக்கலாம். அப்போது கூட பார்வதியின் பிராது மிக லென்த்தாகச் சென்று கொண்டேயிருந்தது.

“என் இடுப்ப பார்த்தியா... இல்ல... நீ என் இடுப்பைத்தான் பார்த்தே..’ என்கிற குஷி ‘ஜோதிகா’ மாதிரி, பார்வதி தன் புகாரை இழுத்துக் கொண்டே போக, “நான் உன் இடுப்பைப் பார்க்கல” என்று பம்மும் விஜய் மாதிரி “நான் வேணும்னுட்டு சிரிக்கலை. நான் அந்த மாதிரி ஆள் கிடையாது. எனக்கு சர்காஸ்ட்டிக்கா பேச வராது” என்றெல்லாம் தற்காப்பு ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார் ஸ்ருஷ்டி.

ஒரு கட்டத்தில் ஸ்ருஷ்டியும் பதிலுக்கு தாக்குதல் ஆட்டத்தை ஆரம்பித்தார். “கேமரா வர்றப்ப மட்டும் வேலை செய்யறாங்கன்னு… என்னைப் பத்தி நீங்க சொல்லலை?!” என்று கேட்க, ‘காலைல ஆறு மணி இருக்கும். கோழி கொக்கராக்கோன்னு கூவுச்சு’ காமெடி போல அதற்கு பதில் விளக்கம் அளிக்கத் தொடங்கினார் பார்வதி.

சர்வைவர் - 3
சர்வைவர் - 3

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் சிங்கம் புலி கூட ‘யாருடா இவங்க தூங்க விடாம... நொய்.. நொய்ன்னு’ என்று தங்களுக்குள் எரிச்சலுடன் முனகியிருக்கலாம். அப்படியொரு ரணகளமான பஞ்சாயத்து.

நெடுநேரம் பேசி முடித்து பார்வதியும் ஸ்ருஷ்டியும் சற்று இடைவெளி விட்ட நேரம் பார்த்து, அதுவரை மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த தலைவி லட்சுமிபிரியா நடுவில் தலையிட்டார். “எதுவா இருந்தாலும் ஒண்ணா உக்காந்து பேசிப்போம்” என்று அவர் முறையிட, சரி ஒழிந்து போகிறது என்று பார்வதியும் ஸ்ருஷ்டியும் பரஸ்பரம் சிரித்து கை குலுக்கிக் கொண்டார்கள்.

இத்தனை நேரம் இந்த ரணகள காமெடியை பார்த்துக் கொண்டிருந்த நமக்கு இப்போதுதான் கோபம் வந்தது. ‘பஞ்சாயத்தாடா... இது... இது பஞ்சாயத்தே இல்லைடா!” என்று தேவர் மகன் சிவாஜி மாதிரி நாற்காலியை எடுத்து வீச வேண்டும் போல் தோன்றியது.

பார்வதி அடுக்கிய புகார்களில் அவருடைய கோணத்தில் சில நியாயங்கள் கூட இருந்திருக்கலாம். மறுக்கவில்லை. ஆனால் அதைச் சுருக்கமாக பேசி தீர்த்துக் கொள்ளாமல், நாடகத்தனமாக இழுப்பது, கவனஈர்ப்பு உத்தியோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

நாளை பளு இழுக்கும் போட்டி மாதிரி ஒரு சவால் இருக்கிறது போல. ‘நீ ரசத்தை ஊத்து... அதுல பூனை கிடக்குதான்னு பார்ப்போம்!” என்கிற மோடில் நான் இருக்கேன்!