Published:Updated:

சர்வைவர் - 6 | என்னதான் ட்விஸ்ட்னாலும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா… பார்வதி செம கிரேட் எஸ்கேப்!

சர்வைவர் - 5 |

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் ஆறாவது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 6 | என்னதான் ட்விஸ்ட்னாலும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா… பார்வதி செம கிரேட் எஸ்கேப்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் ஆறாவது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 5 |

வலிமையுள்ளதே எஞ்சும் – இந்த பிரபஞ்ச விதியானது, ‘சர்வைவர்’ நிகழ்ச்சிக்கும் பொருந்தும். இருப்பதிலேயே பலவீனமான போட்டியாளர், வாக்கெடுப்பின் மூலம் வெளியேற்றப்படுவார். இந்த எலிமினேஷன் சடங்குதான் நேற்றைய நாளின் ஹைலைட். ஆனால், இந்த ‘எலிமினேஷன்’ என்கிற விஷயத்தை வைத்துக் கொண்டு ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் ஆக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவை பெரும்பாலும் அபத்தமாக இருந்தது. ‘ட்விஸ்ட்’ என்கிற வார்த்தையின் மீதுள்ள மதிப்பும் அர்த்தமும் போய் விடும் போல் இருந்தது.

ஏனென்றால் இப்படிப்பட்ட 'ட்விஸ்ட்’களின் பின்னால் பொருத்தமாக ஒரு லாஜிக் இருக்க வேண்டும். நேற்றைய எபிசோடில் அது பெரும்பாலும் இல்லை.

பெரும்பான்மையோரின் தேர்வுப்படி ஒருவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றால் கூட அதில் ஒரு ஜனநாயக தர்க்கம் இருக்கிறது. ஆனால், அதிலும் ஒரு ‘ட்விஸ்ட்’ என்று சொல்லி ஒரு தனிநபரின் (அணித்தலைவர்) தேர்வுதான் செல்லுபடியாகும் என்று மாற்றினால் எப்படி ஐயா?.. பின்னர் அதிலும் ஒரு 'ட்விஸ்ட்’. (முடியல!).

என்னதான் நேற்று ‘எலிமினேஷன்’ என்று சொல்லி விட்டாலும் இந்த கடைசி ‘டிவிஸ்ட்’-ஐ பலரும் யூகித்திருப்பார்கள். அத்தனை செலவு செய்து ஒரு போட்டியாளரை ஆப்ரிக்க தீவுக்கு அழைத்து வந்து விட்டு ஐந்தே நாட்களிலேயே வெளியேற்ற 'சர்வைவர்' டீமுக்கு பைத்தியமா என்ன? அதையும் தாண்டிய உள்விவகாரங்கள் இதில் இருக்கின்றன.

சர்வைவர் ஆறாம் நாளில் என்ன நடந்ததென்று விரிவாகப் பார்ப்போம்.

சர்வைவர் - 5 |
சர்வைவர் - 5 |

‘இருப்பதிலேயே பலவீனமான போட்டியாளர் குறித்து ஒவ்வொருவரும் ரகசியமாக வாக்களிக்க வேண்டும்’ என்கிற அறிவிப்பு வந்தவுடன் தீவில் பரபரப்பு ஏற்பட்டது. ‘’யார் பலவீனமான போட்டியாளர்?’’ என்கிற விவாதங்கள் மூலைக்கு மூலை ரகசியமாக நிகழ்ந்தன. சிலர் துணிச்சலாக ஒருவரின் பெயரைச் சொன்னார்கள். சிலர் மென்று முழுங்கி மழுப்பினார்கள். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களைச் சொன்னார்கள். ‘இந்த வாரம் தாங்கள் எஸ்கேப்’ என்பதால் அணித்தலைவர்கள் குஷி மூடில் இருந்தார்கள்.

‘இத்தனை குறைந்த காலத்தில் எப்படி ஒருவரை ‘பலவீனம்’ என்று சொல்லி தேர்ந்தெடுக்க முடியும்?’ என்கிற கேள்வி எல்லோரிடமும் இருந்தது நியாயமான விஷயம். ஆனால் ஆக்ஷன் கிங் சொல்லி விட்டபிறகு அதைச் செய்துதானே ஆக வேண்டும்? போட்டியின் டிசைன் அப்படி.

‘‘என்னைத்தான் வெளியேற்றுவாங்க... நான் தான் போவேன். நான்தான் வெளிப்படையா பேசுற ஆள்... என்னைத்தான் பலருக்கும் பிடிக்காது’’ என்று உடனே வெளியே போகப் போகிறவரைப் போல் ‘பார்வதி’ தொடர்ந்து அனத்திக் கொண்டேயிருந்தார். ஆனால் இப்படி ஒரே வாரத்தில் தான் வெளியேற்றப்படுவதில் உள்ளூற அவருக்கு விருப்பமே இல்லை என்பது பிறகு நன்றாகவே தெரிந்தது. பிறகு ஏன் இந்த வம்படி ஜீப் பயணம்?

உடல்நிலை சரியில்லாததால் நாமினேஷன் லிஸ்ட்டில் ‘ஸ்ருஷ்டி’யின் பெயர் நிறைய அடிபட்டது. இதைப் போலவே ‘ராம்’ பெயரையும் பலர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ராமின் பெயர் அடிபடுவதற்கு காரணம் என்னவாக இருக்கும்?

என்னதான் ஒற்றுமையாகப் பழகினாலும் பெண்களுக்குள் எப்போதுமே ஒரு ரகசிய விலகலும் மெலிதான வெறுப்பும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், ஆண்கள் குழு என்பது அப்படியல்ல. நட்பு இறுக்கமாகி விட்டால் கடைசிவரை ஒருவரையொருவர் சட்டென்று விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

இந்த வகையில், காடர்கள் அணியின் ஆண்களான விக்ராந்த், உமாபதி, சரண் ஆகிய மூவரும் நல்ல நண்பர்களாக இருப்பது போல் தெரிகிறது. ஆனால் ராம் ஏன் கைவிடப்பட்டார்? அவர் காயத்ரியுடன் நண்பராக இருப்பது காரணமாக இருக்கக்கூடும். ‘‘நிறைய பொய் சொல்கிறார்’’ என்கிற நாமினேஷன் காரணத்தைச் சொன்னார் உமாபதி.

சர்வைவர் - 5 |
சர்வைவர் - 5 |

நாமினேஷன் குறித்து ஐஸ்வர்யாவிடம் சிரித்துப் பேசிய பார்வதி, அவர் நகர்ந்த பிறகு “இவளையெல்லாம் நம்ப முடியாது” என்று அதிரடி ஸ்டேட்மென்ட் தந்தார். (நீங்க அரசியலுக்கு வந்துடலாம்ஜி!).

வேடர்கள் அணித்தலைவரான லட்சுமிபிரியாவின் கூடாரத்துக்குள் ஒரு ரகசிய செய்தி வந்திருந்தது. இந்த அணிக்கு ஒரு ரகசிய அனுகூலம் இருக்கிறதாம். அதன் பெயர் ‘ஸ்டீலர் ரிவார்ட்’. தொடர்ந்து மூன்று முறை ‘ரிவார்ட் சேலன்ஜில்’ இந்த அணி வெற்றி பெற்றால், தாங்கள் விரும்பும் பொருளை எதிர் அணியிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியுமாம். எதிர் அணிக்குத் தேவைப்படும் மிக அவசியமான பொருளை, இந்த அணி பிடுங்கிக் கொண்டால் வெற்றி வாய்ப்பு கூடும் என்பதே இதிலுள்ள ஸ்ட்ராட்டஜி.

ரகசிய வாக்களிப்பு சடங்கு ஆரம்பித்தது. ஒவ்வொருவரும் ‘பலவீனமான’ போட்டியாளரை’ தாளில் எழுதி போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர், உண்மையிலேயே பலவீனமானவரா அல்லது வாக்களிப்பவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளும் இருக்கிறதா என்பது அவரவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். யாருக்கு அவர்கள் வாக்களிக்கிறார்கள் என்பது நமக்கு காட்டப்படவில்லை.

இப்படியொரு ரணகள சூழலில் முதல் ட்விஸ்ட் ஆரம்பித்தது. அணித்தலைவர்களை மட்டும் சந்திக்க வரச்சொல்லி அர்ஜூன் செய்தி அனுப்பியிருந்தார். “மத்தவங்க வாக்களிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அணித்தலைவர் என்கிற முறையில் ‘பலவீனமான போட்டியாளரை’ நீங்க தேர்ந்தெடுத்து எழுதிப் போடுங்க’ என்றார். இதற்குப் போய் ‘நாலு குதிரை’ கதை உதாரணமெல்லாம் சொல்லி நேரத்தைக் கடத்தினார்.

‘தங்களை தனியாக வாக்களிக்க அழைப்பார்கள்’ என்பதை இரண்டு அணித்தலைவர்களுமே எதிர்பார்க்கவில்லை. இத்தனை குறைந்த அவகாசத்தில் எப்படி ஒருவரை பலவீனம் என்று சுட்ட முடியும்?’ என்கிற தயக்கம் அவர்களுக்குள் இருந்தது. என்றாலும் அர்ஜூன் வலியுறுத்திய பின்னால் தங்களின் வாக்குகளைச் செலுத்தினார்கள்.

அர்ஜூனும் அணித்தலைவர்களும் கடல் நீரின் மேல் நின்று கொண்டிருந்த செட்அப்பானது மிக வசீகரமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

சர்வைவர் - 5 |
சர்வைவர் - 5 |

பிறகு போட்டியாளர்களும் படகில் அந்த இடத்துக்கு வரவழைக்கப்பட்டார்கள். “பொட்டியை திறந்து பார்த்துடலாமா?” என்று தேர்தல் அதிகாரி அர்ஜூன் கேட்டதும் ஒவ்வொருவரின் முகத்திலும் டென்ஷன் ஏறியது. “யாரு நம்மள கவுத்திருப்பாங்களோ?!” என்கிற சந்தேகமும் அச்சமும் ஒவ்வொருவரின் மனதிலும் ஓடியிருக்கும். அதிலும் ஹிட் லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருந்த பார்வதி, இந்திரஜா, ராம் ஆகியோர்களின் இதயங்கள் ஓவர் டைமில் துடித்திருக்கும்.

முதலில் ‘காடர்கள்’ அணியின் பெட்டி உடைக்கப்பட்டது. இதில் டாப் லிஸ்ட்டில் இருந்தவர் ‘ராம்’. இவருக்கு எதிராக ஐந்து வாக்குகள் இருந்தன. “என்னாச்சு ராம்... இத்தனை அருமையான நண்பர்கள் உங்களுக்கு இருக்காங்க?” என்பது போல் அர்ஜுன் கேட்டதும் ராம் ஏறத்தாழ உடைந்து அழுது விட்டார். “எனக்கு ஒருத்தர் கிட்ட நட்பு வளர டைம் எடுக்கும். இன்னும் நிறைய பேர் கூட நான் ஒட்ட ஆரம்பிக்கலை. என்னை ஊக்குவிச்சா நல்லா செயல்படுவேன். எதிர்மறையான நபர்களை என்னால் கையாள முடியல” என்கிற ராமின் விளக்கம் உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததே ஒழிய, அறிவுப்பூர்வமாக இல்லை.

ராமுக்கு அடுத்த நிலையில் இரண்டு வாக்குகளைப் பெற்றிருந்தார் இந்திரஜா. “என்னை physically weak-ன்னு எதிரா வாக்களிச்சவங்க நினைக்கலாம். நான் அப்படி கிடையாது. வந்த முதல் நாள்லயே கைல அடிபட்டுச்சு. அதனாலதான் task-ல சரியா கலந்துக்க முடியல. மத்தபடி நான் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலமான போட்டியாளர்” என்று ஸ்போர்டிவாக இந்திரஜா விளக்கம் அளித்தது சிறப்பு. டாஸ்க்கில் இந்திரஜா அதிகம் பங்கெடுக்காவிட்டாலும் சமையல் உள்ளிட்ட பல பணிகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொள்வதை இதர போட்டியாளர்களும் வழிமொழிந்தார்கள்.

அடுத்ததாக ‘வேடர்கள்’ அணியின் வாக்குப் பெட்டி உடைக்கப்பட்டது. இதில் டாப் லிஸ்ட்டில் இருந்தவர்… யெஸ்... உங்க யூகம் சரி. நம்ம சர்வைவர் ஹீரோயின் பார்வதிதான். அவரே இதை உள்ளூற எதிர்பார்த்திருந்தார்.

“நான் task எல்லாம் நல்லாத்தான் செஞ்சேன்.. என்னவொன்னு…. மனசுக்குள்ள இருக்கறதை அப்படியே வெளியே சொல்லிடற பொண்ணு நான். அது பலருக்கு பிடிக்காம போயிருக்கலாம். கருத்து சுதந்திரம்னு ஒண்ணு இருக்கணும் இல்லையா? அதனாலேயே பலரோட ஒட்ட முடியாமப் போச்சு” என்று பார்வதி அளித்த விளக்கத்துக்கு “எல்லாத்துக்கும் ஏதாவது சொல்லி கருத்து கந்தசாமியா இருந்தே ஆகணுமா?” என்று கவுன்ட்டர் பதில் தந்தார் அம்ஜத்கான். அம்ஜத்துக்கும் பார்வதிக்கும் வந்த நாள் முதலே ஏழாம் பொருத்தமாக இருக்கிறது.

பார்வதிக்கு அடுத்தபடியாக மூன்று வாக்குகளைப் பெற்றிருந்தவர் ஸ்ருஷ்டி. “என் உடல்நிலை காரணமாக அவர்கள் வாக்களித்திருக்கலாம். ஆனால் நான் பலமான போட்டியாளர்தான். அவங்க முடிவு எனக்கு ஆச்சரியமளிக்கிறது” என்று பலவீனமான விளக்கம் தந்தார் ஸ்ருஷ்டி.

ஆக இரண்டு அணியிலும் டாப் லிஸ்ட்டில் இருப்பவர்கள் ராம் மற்றும் பார்வதி. இரண்டாவது ட்விஸ்ட்டை இப்போது வெளியிட்டார் அர்ஜூன். இதர போட்டியாளர்கள் அளித்த வாக்குகள் எல்லாம் லுலுலாயிக்காம். (இன்னாங்கடா... இது பித்தலாட்டமா இருக்கு. என்னதான் டிவிஸ்ட்டுன்னாலும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா?!).

சர்வைவர்
சர்வைவர்

அணித்தலைவர்கள் அளித்த வாக்குகள்தான் இறுதியாம். அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறவர்தான் இன்று எலிமினேட் ஆவார்களாம். தாங்கள் ரகசியமாக வாக்களித்த விஷயம் பொதுவில் தெரிய வந்ததும் இரு அணித்தலைவர்களும் வெட்கப்பட்ட அழகு இருக்கிறதே... அடடா!

பாரதிராஜா பட ஹீரோயின் மாதிரி தலையைக் குனிந்து கொண்டு கையால் முகத்தை மூடிக் கொண்டு சங்கடத்துடன் புன்னகைத்தார் காயத்ரி. இன்று தேர்ந்தெடுக்கப்பட்டவர் போட்டியில் இருந்தே எலிமினேட் செய்யப்படுவார் என்று சொல்லப்பட்டதும் ‘வாட்?” என்று மிகையாக அதிர்ந்தார். (எலிமினேஷன்னா அதானே... ஏம்மா இந்த ஓவர் ரியாக்ஷன்?!)

நாம் நெடும் நேரம் பஸ்ஸுக்காக காத்துக் கொண்டிருக்கும் போது ‘இந்தப் பாழாப் போன பேருந்து எப்போது வரும்?” என்று நம் முகத்தில் ஒரு சலிப்பு வந்து விடும் அல்லவா? அப்படியொரு விநோதமான எக்ஸ்பிரஷனை பெரும்பாலான சமயங்களில் லட்சுமிபிரியாவின் முகத்தில் பார்க்க முடிகிறது. இப்போதும் அதே மாதிரியான முகபாவத்தில் நின்று கொண்டிருந்தார்.

அணித்தலைவர்கள் இத்தனை சங்கடமும் வெட்கமும் கொள்ள வேண்டியதில்லை. தனது அணியை சரியாக வழிநடத்துவதற்காக அவர்கள் செய்ய வேண்டிய துணிச்சலான முடிவுதான் இது. ஆனால் இந்த ட்விஸ்ட்டை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அணித்தலைவர்களின் தேர்வுப்படி காடர்கள் அணியில் ‘இந்திரஜாவும்’, வேடர்கள் அணியில் ‘ஸ்ருஷ்டி’யும் பலவீனமான போட்டியாளர்களாக இருந்தார்கள். ஆக... அவர்கள் இருவரும்தான் இன்று எலிமினேட் ஆவார்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால், பெரும்பான்மையோரின் வாக்குக்கு எதிராகவே தலைவர்களின் வாக்கு இருந்தது. (தலைவர்கள்னாலே... இப்படித்தான் குழப்பம் பண்ணுவாங்க போல!).

சர்வைவர் - 5 |
சர்வைவர் - 5 |

காடர்கள் அணியில் ‘ராம்’தான் அதிக எண்ணிக்கையிலான எதிர் வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால், காயத்ரி தேர்ந்தெடுத்ததோ இந்திரஜாவை. இதுபோல ‘வேடர்கள்’ அணியில் ஹிட் லிஸ்டில் இருந்தவர் ‘பார்வதி... ஆனால் லட்சுமிபிரியா தேர்ந்தெடுத்தது ‘ஸ்ருஷ்டி’யை. (அர்ஜூனுக்கே இவர்கள் ட்விஸ்ட் தந்தார்கள்போல).

“ஏன் இந்த முரண்?” என்று அணித்தலைவர்களிடம் விசாரித்தார் அர்ஜூன். “இந்திரஜா mentally strongதான். ஆனா டாஸ்க்லாம் செய்யற அளவுக்கு physically strong-ஆ –ன்னு எனக்கு சந்தேகம் வந்தது” என்று சங்கடத்துடன் விளக்கம் அளித்தார் காயத்ரி.

“நான் ஒண்ணும் பிசிக்கலி வீக் கிடையாது. டீம் லீடரை விட ஸ்ட்ராங். இப்படி முதல் வாரத்துலயே வெளியேறி எங்க அம்மா, அப்பா நம்பிக்கையை காப்பாத்த முடியலையேன்னுதான் கஷ்டமா இருக்கு” என்று இந்திரஜா கண்கலங்கத் துவங்க மற்றவர்கள் அவரைத் தேற்றினார்கள். இந்திரஜா அப்படியொன்றும் பலவீனமான போட்டியாளர் இல்லை என்பதே மற்றவர்களின் மதிப்பீடும் கூட. ‘ராமை’ விட்டு விட்டு டீம் லீடர் ஏன் இந்திரஜாவைத் தேர்ந்தெடுத்தார் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. காயத்ரியும் ராமும் நண்பர்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

லட்சுமி பிரியா அணியிலும் இதே மாதிரியான குழப்பம்தான். பார்வதியை விட்டு விட்டு ஏன் ஸ்ருஷ்டியை லட்சுமி பிரியா தேர்ந்தெடுத்தார் என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு லட்சுமிபிரியா அளித்த பதில் நேர்மையாகத் தெரிந்தது.

“ஸ்ருஷ்டியை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நானும் அவளும் நல்ல ஃபிரெண்ட்ஸ்தான். ஆனா, அவளுக்கு இங்க வந்ததுல இருந்து கொஞ்சம் இன்ஃபெக்ஷன் ஆயிடுச்சு. உடல்நிலை சரியில்லை. எனக்கு வலிமையான போட்டியாளர்தான் தேவை. ஒரு லீடரா அணியை வழிநடத்த அதைத்தான் நான் முக்கியமாக பார்த்தேன்” என்கிற LP-ன் விளக்கம் சரியானதாக இருந்தது.

சர்வைவர் - 5 |
சர்வைவர் - 5 |

லட்சுமிபிரியாவின் முடிவு ஸ்ருஷ்டிக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தந்திருந்தாலும் முகத்தில் அதிகம் காட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தார். “நான் ஒண்ணும் வீக் கிடையாது” என்று சொல்லும் போது அவருடைய முகத்தில் மெல்லிய கோபம் எழுந்தது.

எப்படியோ... தான் கிரேட் எஸ்கேப் ஆகி விட்டோம் என்பதில் பார்வதி மேடத்திற்கு ஒரே குஷி. வானத்தை நோக்கி கைவிரித்து நன்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.

போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஸ்ருஷ்டியும் இந்திரஜாவும் படகில் பயணம் சென்றார்கள். இங்குதான் மூன்றாவது ட்விஸ்ட். அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை. “மூன்றாம் உலகம்” என்று தலைப்பிடப்பட்டிருந்த இன்னொரு கூடாரத்திற்குத்தான் சென்றார்கள். (பிக்பாஸில் வரும் ‘சீக்ரெட் ரூம்’ போல). ‘Game is not over’ என்கிற குறிப்பு அவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் இருவருக்கும் ஒரே மகிழ்ச்சி.

இப்படி பல ட்விஸ்ட்கள் நேற்றைய எபிசோடில் இருந்தாலும் இதனுள் பல உள்விவகாரங்கள் இருக்கின்றன.

‘யார் யாரை நாமினேட் செய்திருக்கிறார்’ என்பது வெளிப்படையாகத் தெரியும் போது அது ஒவ்வொருவருக்குள்ளும் உளவியல் ரீதியாக பல குழப்பங்களை ஏற்படுத்தும். ‘யார் நண்பர், யார் துரோகி, யார் நேர்மையாக முடிவெடுப்பவர், யார் பாரபட்சம் காட்டுபவர்’ என்று பல கேள்விகள் அவர்களுக்குள் எழும். இந்தக் களேபரங்கள் சூடு பிடிக்கும் போது போட்டியில் நிறைய கசமுசா சண்டைகள் எழும். நிகழ்ச்சியும் சுவாரசியமாகும்.

‘சர்வைவர்’ டீம் அதைத்தான் எதிர்பார்க்கிறது. இன்னொரு வகையில் நாம் எதிர்பார்ப்பதும் அதைத்தானே?