Published:Updated:

சர்வைவர் தமிழ் - 8| காயத்ரி - ராம் பஞ்சாயத்தும், அர்ஜுன் நடத்திய ரணகள விசாரணை கமிஷனும்!

சர்வைவர் - 8 அர்ஜுன்

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் எட்டாவது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் தமிழ் - 8| காயத்ரி - ராம் பஞ்சாயத்தும், அர்ஜுன் நடத்திய ரணகள விசாரணை கமிஷனும்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் எட்டாவது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 8 அர்ஜுன்

பிக்பாஸின் வார இறுதி நாட்களில் போட்டியாளர்களுக்குள் நிகழ்ந்த சர்ச்சைகள், முட்டல்கள் மற்றும் மோதல்கள் பற்றி கமல்ஹாசன் விசாரிப்பது போல ‘சர்வைவர்’ நிகழ்ச்சியிலும் நேற்று விசாரணை சபை நடைபெற்றது. அர்ஜுனுக்கு பேச்சுத் திறமை இருக்குமோ என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால், ஒவ்வொருவரையும் தனது கூர்மையான விசாரணையின் மூலம் போட்டுத் துளைத்தெடுத்துவிட்டார். (என்ன இருந்தாலும் நிறைய படங்களில் போலீஸ் ஆபிசரா நடித்திருக்கார்... இல்லையா?!).

நேற்றைய எலிமினேஷன் சடங்கில் ராமுக்கு எதிராகத்தான் பெரும்பான்மையான வாக்குகள் விழும் என்று எதிர்பார்த்தோம். நேற்றைய நிலைமை அப்படித்தான் இருந்தது. ஆனால், விசாரணைக்குப் பின் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. ஆம்... ராமின் மீதிருந்த கொலைவெறி அப்படியே காயத்ரியின் மீது திசைமாறி விட்டது. அவருக்கு எதிராகத்தான் அதிக வாக்குகள் விழுந்தன. போட்டியில் இருந்து எலிமினேட் (?!) செய்யப்பட்டார்.

சர்வைவர் எட்டாம் நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் - 8
சர்வைவர் - 8

Tribal Council-ன் சூழல், ஒளிப்பதிவு, லைட்டிங், அதன் பிராப்பர்டிஸ் என்று ஒவ்வொரு விஷயமுமே அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், போட்டியாளர்களின் ஒவ்வொரு ரியாக்ஷனுக்கும் கூட திகிலான பின்னணி இசை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் போட்டது ஓவர் டோஸ்.

‘சர்வைவரின்’ முதல் பஞ்சாயத்தை மங்கலகரமாக ஆரம்பித்தார் அர்ஜூன். “தோல்விக்குப் பிறகுதான் அணியின் ஒற்றுமையில் பெரிதாக விரிசல் ஏற்பட்டது. இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் பார்த்திருக்க வேண்டும்” என்று உமாபதி தொடக்கத்தில் சொன்னது நல்ல பாயின்ட்.

இந்த விசாரணை சபையில் குற்றச்சாட்டுகள் பிரதானமாக ராம் மற்றும் காயத்ரியை சுற்றியே அமைந்திருந்தன. “இம்யூனிட்டி சேலன்ஞ் தோல்விக்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று அணித்தலைவர் காயத்ரியிடம் கேட்கப்பட்ட போது அவர் சுற்றிச் சுற்றி வந்து ராமை குற்றம் சாட்டினார். அணித்தலைவர் என்கிற பொறுப்பை தட்டிக் கழித்தார். ஆனால் ராமோ “மொத்தப் பொறுப்பையும் நான் எடுத்துக் கொள்கிறேன். தோல்விக்கு நான்தான் காரணம்” என்று முழு சரணாகதி அடைந்து விட்டார்.

இந்த விஷயத்தினால் ராம் மீது அனுதாபமும் காயத்ரி மீது வெறுப்பும் இதர போட்டியாளர்களுக்கு வந்திருக்கலாம். நிலைமை தலைகீழாக மாறியதற்கு இதுவே பிரதான காரணம். இந்தப் பிரச்னைகளின் பின்னணியை விரிவாகப் பார்க்கலாம்.

சர்வைவர் - 8
சர்வைவர் - 8

காடர்கள் அணியின் முதல் வெளிப்படையான விரிசல் ‘கூடாரம்’ அமைப்பதில் இருந்து தொடங்கியது. உப்பு பெறாத விவகாரம் இது. விக்ராந்த் டீம் தன்னுடைய பேச்சை கேட்கவில்லையோ என்கிற தாழ்வுணர்ச்சியினால் கோபித்துக் கொண்டு சட்டென வெளிநடப்பு செய்து விட்டார் காயத்ரி. ஓர் அணித்தலைவராக அவர் செய்த மிகப்பெரிய பிழை இது.

“சின்ன வயசுல இருந்தே இதுதான் எனக்கு பழக்கம். கோபம் வந்தா 2 நிமிஷம் தனியாப் போயிடுவேன்” என்று இதைப் பற்றி காயத்ரி சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. இத்தனை பெரிய போட்டியில் தன் தனிப்பட்ட பலவீனங்களைத் தவிர்ப்பதே சரியானது. ஒருவேளை இது அவரது தவிர்க்க முடியாத பலவீனம் என்றால் கூட தன் டீமிடம் ‘2 நிமிஷத்துல வந்துடுறேன்’ என்று சொல்லி விட்டுச் சென்றிருக்கலாம். அதை விடவும் அணித் தலைவர் என்ற முறையில் தன் தலைமைத்துவத்தை வலிமையாக நிரூபித்திருப்பதுதான் முக்கியமானது.

விஜயலட்சுமி கோபத்துடன் சுட்டிக் காட்டியது போல “அவங்க தோக்கட்டும்.. அப்புறம் என் கிட்ட வரட்டும்” என்று காயத்ரி சொன்னது பெரிய பிழை. “நான் கோபமாக இருக்கேன்னு அவங்களுக்கு தெரிய வேண்டாம்” என்று ராமிடம், காயத்ரி சொன்னதும் நல்ல காமெடி. ஓர் உரையாடலில் இருந்து ஒருவர் சட்டென்று துண்டித்துக் கொண்டு செல்வதற்கு காரணம் கோபம் என்று அனைவருக்குமே புரிந்து விடுமே?!

ஜானுவுக்குப் பின்னால் செல்லும் ‘96’ ராம் மாதிரி, இந்த ராமும் கோபித்துக் கொண்டு சென்ற காயத்ரியின் பின்னாலேயே சென்றார். ஒருவேளை காயத்ரியை சமாதானப்படுத்தி உரையாடலுக்கு திரும்ப அழைத்து வரும் நல்லெண்ணத்தில் அவர் செயல்பட்டிருக்கலாம். ஆனால் “ஏம்ப்பா... லீடர் கோச்சுக்குறா மாதிரி பேசறீங்க?” என்று சக போட்டியாளர்களிடம் ராம் பிறகு கேட்டது, அவர் ‘காயத்ரியின் ஆள்’ என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது. இது விக்ராந்த் டீம் இடமிருந்து தனிமையாவதற்கும் காரணமாகிவிட்டது.

இதுத்தவிர காயத்ரியின் மீதுள்ள அடுத்த குற்றச்சாட்டு ‘‘இந்திரஜாவை அவர் ஏன் பலவீனமான போட்டியாளராகத் தேர்ந்தெடுத்தார்?” என்பது. அணித் தலைவர் வாக்களிக்க அழைக்கப்பட்டது என்பது ஒரு ரகசியமான ஏற்பாடு. அந்த நெருக்கடியான சூழலில் அவர் என்ன யோசித்தாரோ அதைத்தான் செயல்படுத்தியிருக்க முடியும். மட்டுமல்லாமல், அணித்தலைவராக முடிவெடுக்கக் கூடிய உரிமையும் அவருக்கு உள்ளது.

சர்வைவர் - 8
சர்வைவர் - 8

இதைத் தயங்கித், தயங்கி மென்று விழுங்கி சொல்லாமல் துணிச்சலாகவே காயத்ரி சொல்லலாம். ‘I don’t want to be bossy’ என்கிறார் காயத்ரி. லீடராக ஒருவர் இருக்கும் போது சில கண்டிப்புகளை மேற்கொண்டுதான் ஆக வேண்டும். இதையேதான் அர்ஜூனும் பல முறை விசாரணையின் போது வற்புறுத்தினார்.

‘’என்னதான் இந்திராஜா சமையல் உள்ளிட்ட பணிகளில் ஆர்வமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும் physical task என்று வரும் போது ராம் அதை விடவும் சிறந்த சாய்ஸாக இருப்பார்’’ என்று காயத்ரி யோசித்ததில் ஒரு தவறும் இல்லை. இதையே விசாரணை சபையில் தன்னுடைய முறை வரும் ‘லேடி’ காஷும் நேர்மையாக தெரிவித்தார். ஒரு நெருக்கடியான சூழலில் அணித்தலைவர் எடுக்கும் முடிவை மற்றவர்கள் கேள்வி கேட்க முடியாது; கேட்கவும் கூடாது. ஆனால், ராமுடன் உள்ள முன்ஒப்பந்தம், நட்பு போன்றவை காரணமாக, தனிப்பட்ட பாரபட்சத்தை காயத்ரி காட்டியிருப்பார் என்றால் அது கண்டிக்கத்தக்கது. அதற்கான முகாந்திரங்களும் இதில் உள்ளன.

ஆனால் காயத்ரியும் சரி, ராமும் சரி, தங்களின் நிலைப்பாட்டை விசாரணை சபையில் அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தாமல் தயங்கித் தயங்கி பேசியது அவர்களிடம் உள்ள குற்றவுணர்வையும் தெளிவின்மையையும் காட்டியது. இது மட்டுமல்ல, இது போன்ற விசாரணைகளில் Communication skill மிகவும் முக்கியம். தன்னுடைய தரப்பை சுருக்கமாகவும் அழுத்தமாகவும் தெளிவாகவும் பதிவு செய்வது மிக மிக அவசியம். இந்த விஷயத்தில் நாம் பலவீனமாக இருந்தால், நம் மீது பிழை இல்லை என்றாலும் கூட நமக்கு எதிரான முடிவுகளைச் சந்திக்க நேரிடும்.

இந்த நோக்கில் பார்க்கும் போது ராம் ஒரு குழப்பமான ஆசாமியாக இருக்கிறார். “நீங்க ஏன் அணியோட சேராம தனியா இருந்தீங்க... தூங்கறப்ப கூட?” என்று அர்ஜூன் கேட்ட போது முதலில் பாம்பு பயத்தை உதாரணம் காட்டியவர், பிறகு ‘’எனக்கு மூக்கடைப்பு இருந்தது. குறட்டை சத்தம் மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்கும்னு நெனச்சேன்” என்று அவர் மாற்றி மாற்றிச் சொன்ன சால்ஜாப்புகளைக் கேட்டு மற்றவர்கள் சிரித்து விட்டார்கள்.

ராமின் கேரெக்டரை புரிந்து கொள்ள முயலும் போது அவர் யாரையாவது சார்ந்திருக்க விரும்புகிறார். தன் மீதே நம்பிக்கையில்லாதவர் என்று தோன்றுகிறது. அதனால்தான் வந்தவுடனே காயத்ரியுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். அவரைத் துருவி துருவி கேட்டால், சட்சட்டென்று தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார். இந்த தத்தளிக்கும் மனோபாவம் அவருக்கு நிறைய பின்னடைவை ஏற்படுத்தலாம்.

சர்வைவர் - 8
சர்வைவர் - 8

“சுத்தி சுத்தி பேசாதீங்க. ஓப்பனா பேசுங்க. நேரடியா பெயர்களைச் சொல்லுங்க” என்று அர்ஜூன் பலமுறை காயத்ரியிடமும் ராமிடமும் சுட்டிக் காட்ட வேண்டியிருந்தது.

‘இந்திரஜாவை பலவீனமான போட்டியாளராக காயத்ரி தேர்ந்தெடுத்தது தவறு’ என்கிற விஷயத்தை இதர போட்டியாளர்கள் சொன்னது கூட ஒருவகையில் ஓகே. ஆனால் விசாரணையின் கடைசியில் ‘செல்ஃப் சைட் கோல்’ போல ராமும் சொன்னதுதான் காமெடியான ஹைலைட். தன் தாயால் விமர்சிக்கப்பட்ட ‘அபூர்வ சகோதரர்கள்’ கமல் மாதிரி அதிர்ச்சியுடன் ராமைப் பார்த்தார் காயத்ரி. (கடவுளே… என்னை ஏன் இந்த மாதிரியானவங்க கூடல்லாம் ஃப்ரெண்ட்ஷிப் சேர வைக்கறே?!” என்கிற கவுண்டமணியின் டயலாக் அவரின் நினைவுக்கு வந்திருக்கலாம்!).

இந்த விசாரணை சபையில் விக்ராந்த்தின் வாக்குமூலம் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்தது. தன் தரப்பில் பிழையில்லையென்றாலும் கூட ஒரு உணர்ச்சிகரமான சூழலில் அவர் காயத்ரியிடம் மன்னிப்பு கேட்கத் தயங்கவில்லை.

‘அணியிடமிருந்து ஏன் விலகி நிற்கிறீர்கள்?” என்று ராமிடம் அர்ஜூன் துருவித் துருவி கேட்ட போது “விக்ராந்த் உள்ளிட்டவர்களை திரையில் மட்டுமே பார்த்திருக்கேன். நேரில் பார்க்கும் போது பேசிப் பழக தயக்கமாக இருந்தது” என்று ராம் சொன்னதை விக்ராந்த் சரியான தொனியில் புரிந்து கொண்டார். இந்த மனமுதிர்ச்சி மிக அவசியமானது. “இந்தக் காட்டுல எட்டு பேர் தனியா நிக்கறோம்... இதுக்கு நடுவுல பகையை வெச்சிக்கிட்டு என்ன சார் பண்றது?!” என்று விக்ராந்த் சொன்னது மிக யதார்த்தமான விஷயம்.

சர்வைவர் - 8
சர்வைவர் - 8

ஒன்று மட்டும் நிச்சயம். என்னதான் மறுத்தாலும் ‘காடர்கள் அணியில்’ விக்ராந்த், சரண், உமாபதி ஆகிய மூவரும் ஒரு குழுவாக இருக்கிறார்கள். அணித்தலைவர் என்பதால் காயத்ரியிடம், ராம் நட்பு பாராட்டிக் கொண்டிருந்தார். இப்போது அதிலும் விரிசல் வந்து விட்டது. விஜயலட்சுமி, லேடி காஷ் ஆகிய இருவரும் எதிலும் சேராமல் நியூட்ரலாக இருக்கிறார்கள். இதில் விஜயலட்சுமியை ஏறத்தாழ விக்ராந்த் டீமில் சேர்த்துவிடலாம். ஒருவேளை இந்திரஜா இப்போது அணியில் இருந்திருந்தால் அவரும் விக்ராந்த்தின் டீம்தான்.

இந்த அணியில் தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் இனிவரப் போகும் நாட்களில் எந்த மாதிரியான எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும்.

‘ஒரு டீம் லீடராக காயத்ரிக்கு எத்தனை மார்க் அளிப்பீர்கள்?” என்று கேட்கப்பட்ட போது பத்துக்கு ஐந்து மதிப்பெண்கள் மட்டுமே பலரும் அளித்தார்கள். ராம் கூட ஐந்து மட்டுமே அளித்தார். லேடி காஷ் ஆறு மதிப்பெண்கள் அளித்தார். அவரால் காயத்ரியின் சங்கடத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

‘‘காலையில் தாமதமாக எழுந்திருக்கிறார், அணியை ஒருங்கிணைப்பதில் திறமையின்மை, பொறுப்பின்மை, தலைமைத்துவம் இல்லாதது’’ போன்ற புகார்கள் காயத்ரி மீது சொல்லப்பட்டன. காயத்ரியின் மீது சொன்ன ஒரு குற்றச்சாட்டை, அர்ஜூனின் கேள்விக்குப் பிறகு திரும்பப் பெற்றுக் கொள்வதாக ராம் சொன்னது அவர் மீதான நம்பகத்தன்மையை வெகுவாகக் குறைத்தது. காயத்ரியே தனக்கு ஆறு மதிப்பெண்களை மட்டுமே அளித்துக் கொண்டது அவரது குறைவான தன்னம்பிக்கையைக் காட்டியது.

‘’காயத்ரி உடல் அளவில் பலவீனமான போட்டியாளர் அல்ல’’ என்பதை விக்ராந்த் உள்ளிட்டவர்கள் வெவ்வேறு வார்த்தைகளில் திரும்பத் திரும்ப சொன்னார்கள். ‘’என் அணியை முன்னே நகர்த்திச் செல்ல வேண்டியதின் காரணமாக நான் அந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது’’ என்று கடைசியில் மட்டும் அழுத்தம் திருத்தமாக சொன்னார் காயத்ரி. இது சக போட்டியாளர்களால் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. இந்திரஜாவின் மீதுள்ள பாசத்தால் காயத்ரியின் முடிவை அவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

சர்வைவர் - 8
சர்வைவர் - 8

விசாரணை முடிந்தவுடன் ரகசிய வாக்களிப்பு ஆரம்பித்தது. ஏற்கெனவே சொன்னபடி நேற்று ஹிட்லிஸ்டில் இருந்த ராம் தூக்கப்பட்டு இப்போது காயத்ரி அதில் சேர்க்கப்பட்டார். எனவே ஏறத்தாழ அனைவருமே காயத்ரிக்கு எதிராகத்தான் வாக்களித்தனர். தன்னுடைய முறை வரும் போது ராமுக்கு வாக்களித்தார் காயத்ரி (என்னவொரு டிவிஸ்ட்!). உமாபதிக்கு வாக்களித்தார் ராம்.

ஆக, காயத்ரி அணியிலிருந்து வெளியேற்றப்படுவது ஏறத்தாழ உறுதியாகி விட்டது. டீம் லீடராக இருந்து கொண்டு அவர் இதைச் சந்திப்பது சங்கடமான விஷயம். ஆனால் ஒரு கடைசி லைஃப் லைன் அவருக்கு இருந்தது.

சர்வைவர் - 8
சர்வைவர் - 8

கண்ணகி காற்சிலம்பு போன்ற பிராப்பர்ட்டிகள் இருந்தன. அவற்றில் ஒன்றை காயத்ரியே தேர்ந்தெடுக்க வேண்டும். அதை உடைத்துப் பார்க்கும் போது உள்ளே தங்க முத்துக்கள் இருந்தால் காயத்ரி காப்பாற்றப்படுவாராம். வெள்ளை முத்துக்கள் இருந்தால் எலிமினேஷன் உறுதியாம். (இது என்ன புது உருட்டா இருக்கு!). காயத்ரியின் துரதிர்ஷ்டம், வெள்ளை முத்து வந்ததால் அணியிலிருந்து வெளியேறினார்.

‘‘கடைசியாக உங்கள் அணிக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்று அர்ஜூன் கேட்ட போது காயத்ரியிடம் வெறும் விரக்தியே மிஞ்சியது. ஆனால் அடிஷனல் ஷீட் எல்லாம் வாங்கி ஒரு பெரிய கடிதத்தை எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்.

என்னதான் எலிமினேஷன், எலிமினேஷன் என்று இவர்கள் பூச்சாண்டி காட்டினாலும், வெளியேற்றப்படுகிறவர்கள், அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘மூன்றாம் உலகத்துக்கு’த்தான் அனுப்பப்படவிருக்கிறார்கள் என்கிற ரகசியம் நமக்கு முன்பே தெரியும் என்பதால் எலிமினேஷன் என்பதில் நமக்கு அத்தனை பரபரப்பு ஏற்படவில்லை. ஆனால் மற்ற போட்டியாளர்களுக்கு உள்ளூற பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஆனால், கடைசி ட்விஸ்ட்டாக ‘மூன்றாம் உலக’ உறுப்பினர்களுக்கு இடையேயும் ஒரு போட்டி நடக்குமாம். அதுதான் இறுதி எலிமினேஷனாம். அதிலும் ட்விஸ்ட் வைக்காமல் இருந்தால் சரி.