Published:Updated:

சர்வைவர்- 1| காடர்கள் Vs வேடர்கள்... எமோஷன்களை பிடிங்கி எறிந்து டாஸ்க்கில் மாஸ் காட்டினாரா அர்ஜுன்?

சர்வைவர் -1, அர்ஜூன்

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் முதல் எபிசோட் எப்படி இருந்தது? இப்போட்டியில் கடைசிவரை தாக்குப்பிடித்து போட்டியை வெல்பவருக்கு ‘சர்வைவர்’ டைட்டிலோடு ஒரு கோடி ரூபாய் பரிசாகக் கிடைக்குமாம்!

Published:Updated:

சர்வைவர்- 1| காடர்கள் Vs வேடர்கள்... எமோஷன்களை பிடிங்கி எறிந்து டாஸ்க்கில் மாஸ் காட்டினாரா அர்ஜுன்?

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் முதல் எபிசோட் எப்படி இருந்தது? இப்போட்டியில் கடைசிவரை தாக்குப்பிடித்து போட்டியை வெல்பவருக்கு ‘சர்வைவர்’ டைட்டிலோடு ஒரு கோடி ரூபாய் பரிசாகக் கிடைக்குமாம்!

சர்வைவர் -1, அர்ஜூன்
‘நினைவில் காடுள்ள மிருகம்’ – மனிதனைப் பற்றி இப்படி அற்புதமான படிமமாக குறிப்பிடும் ஒரு வரி, மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் கவிதையில் உள்ளது. மனிதன் எத்தனைதான் நாகரிக உலகை நோக்கி ஆவேசமாக நடைபோட்டாலும் அவனுடைய ஆழ்மனதில் ‘காடு’ குறித்த நினைவேக்கம் கல்வெட்டாக பதிந்துள்ளது.

அதனால்தான் மனிதர்கள் விடுமுறை நாட்களில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களுக்குச் செல்கிறார்கள். இயற்கை குறித்து இன்னமும் தீவிர ஆர்வம் உள்ளவர்கள் டிரெக்கிங் போன்ற ஆழமான தேடல்களுக்குச் செல்கிறார்கள். மலையுச்சியில் ஏறுகிறார்கள். கடலின் ஆழத்தை கண்டறிய முயல்கிறார்கள்.

எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்து பல பரிணாமங்களைக் கடந்து விட்டாலும் நமக்குள் உள்ள ‘ஆதிமனிதன்’ எப்போதும் அழிவதில்லை. ஒருபக்கம் இயற்கையை அழித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் இயற்கையைத் தேடுகிற பயணங்களை நாம் எப்போதும் மேற்கொண்டிருக்கிறோம். ‘சர்வைவர்’ போன்ற ரியாலிட்டி ஷோக்களின் நவீன வடிவத்தையும் இதன் பாதிப்பு என்று சொல்லலாம்.

‘சர்வைவர்’ நிகழ்ச்சியின் அடிப்படை வடிவமானது Charlie Parsons என்கிற பிரிட்டிஷ் தொலைக்காட்சி தயாரிப்பாளரால் உருவாக்கப்பட்டது. 1997-ல் ‘ராபின்சன்’ என்கிற தலைப்பில் ஸ்வீடன் தொலைக்காட்சியில்தான் இது முதன்முதலில் ஒளிபரப்பானது. இதன் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க தொலைக்காட்சியில் ‘சர்வைவர்’ என்கிற பெயர் மாற்றத்துடன் 2000-ம் ஆண்டில் புதிய அவதாரம் எடுத்தது. இதுவரை 40 சீஸன்களைக் கடந்து பெருவாரியான வெற்றியைப் பெற்றிருக்கும் இந்த ரியாலிட்டி ஷோ, அமெரிக்க தொலைக்காட்சி வரலாற்றில் அதிக ரேட்டிங் மற்றும் அதிக லாபம் பெற்ற நிகழ்ச்சியாக சாதனை படைத்துள்ளது.

சர்வைவர் -1
சர்வைவர் -1

‘பிக்பாஸ்’, ‘மாஸ்டர்செஃப்’ போன்று சர்வதேச ஏரியாக்களில் ஹிட் அடித்திருக்கும் ரியாலிட்டி தொடர்கள், தமிழில் ஏற்கெனவே வரத்தொடங்கிவிட்டன. அதன் சமீபத்திய வரவுதான் ‘சர்வைவர்’.

பிக்பாஸ் என்பது வீட்டுக்குள் நிகழும் உளவியல் யுத்தம் என்றால் ‘சர்வைவர்’ என்பது காட்டுக்குள் நிகழும் யுத்தம் என்று சொல்லலாம். முன்னதில் மனவலிமை முக்கியம் என்றால் பின்னதில் மனவலிமையோடு உடல் வலிமையும் மிக முக்கியம்.

‘சர்வைவர்’ தமிழ் ஒளிபரப்பு நேற்று இரவு தொடங்கியது. 90 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பதினாறு போட்டியாளர்கள். இயற்கை வளம் சூழ்ந்திருக்கும் ஒரு தனித்தீவில் போட்டியாளர்கள் விடப்படுவார்கள். மிக அடிப்படையான பொருட்கள் மட்டுமே அவர்களுக்கு தரப்படும். மற்றபடி சமையலுக்கான நெருப்பு முதல் பல விஷயங்களை காட்டுக்குள் அவர்கள் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு குலங்களாக (Tribe) பிரிக்கப்படும் இரண்டு அணிகளுக்கு இடையில் போட்டிகள் நிகழும். இவற்றில் வெல்வதற்கேற்ப எக்ஸ்ட்ரா வசதிகள் கிடைக்கும். மேலும் போட்டியில் தொடர்வதற்கான, தங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான விஷயங்களை (immunity) அடைவார்கள். பிக்பாஸ் நாமினேஷன் போலவே இதிலும் Tribal Council-ல் ஒருவரை எதிர்த்து வாக்களிக்கும் சடங்கு உண்டு. இதில் பின்னடைவைச் சந்திப்பவர்கள் எலிமினேட் ஆவார்கள். இதுதான் அடிப்படை விதி. மற்றபடி இன்னபிற எக்ஸ்ட்ரா விதிகளும் உண்டு. தங்களுக்குள் சண்டையிட்டு அடித்துக் கொண்டால் போட்டியிலிருந்து அவர் உடனே விலக்கப்படுவது முதற்கொண்டு பல உள்விதிகள் இருக்கின்றன.

கடைசிவரை தாக்குப்பிடித்து போட்டியை வெல்பவருக்கு ‘சர்வைவர்’ டைட்டிலோடு ஒரு கோடி ரூபாய் பரிசாகக் கிடைக்கும். ‘சர்வைவர்’ தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகர் அர்ஜூன். தனது உடலை மிக கச்சிதமாக பராமரித்து வரும் நடிகர்களின் முன்னணி வரிசையில் அர்ஜூனை வைக்கலாம். எனவே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்தளிப்பதற்கு அவர் மிக பொருத்தமானவர் என்று சொல்லலாம்.

இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பல பெயர்கள் ஏற்கெனவே வெளியான நிலையில் சில போட்டியாளர்களின் பெயர்கள் கடைசி நேரத்தில்தான் அறிவிக்கப்பட்டது.

அந்த பதினாறு போட்டியாளர்களின் பட்டியலைப் பார்த்து விடுவோமா?

சர்வைவர் -1
சர்வைவர் -1

1. பெசன்ட் ரவி

அடிப்படையில் இவர் ஒரு ஸ்டன்ட் நடிகர். தமிழ் சினிமாவின் பல சண்டைக்காட்சியில் இவரைப் பார்த்திருக்கலாம். நகைச்சுவைக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

2. அம்ஜத்கான்

நடிகர். 2010-ம் ஆண்டில் ‘புகைப்படம்’ என்கிற திரைப்படத்தில் அறிமுகமாகிய இவர், ‘மாயா', ‘கைதி’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

3. வி.ஜே. பார்வதி

YouTuber, VJ, RJ, நடிகர் என்கிற பல முகங்களைக் கொண்டவர். சமூக வலைத்தளங்களில் மிகப்பிரபலம்.

4. விக்ராந்த்

நடிகர். 2005-ல் ‘கற்க கசடற’ திரைப்படத்தில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

5. லட்சுமி பிரியா

நடிகை. தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் அடிப்படையில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். நேஷனல் லெவல் கிரிக்கெட் பிளேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

6. ஸ்ருஷ்டி டாங்கே

நடிகை. 2010-ல் ‘காதலாகி’ என்கிற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

7. லேடி காஷ்

சிங்கப்பூரைச் சேர்ந்த பிரபலமான ராப் பாடகர். ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா போன்றோர்களின் இசையில் தமிழிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.

8. காயத்ரி ரெட்டி

இவர் அடிப்படையில் ஒரு மாடல். மிஸ் இந்தியா பட்டத்தை 2016-ல் வென்றுள்ளார். ‘பிகில்’ திரைப்படத்தின் சிங்கப்பெண்களில் ஒருவர்.

9. உமாபதி ராமையா

நடிகர். ‘அதாகப்பட்டது மகாசனங்களே’ என்கிற திரைப்படத்தில் அறிமுகம். இயக்குநர், நடிகர் தம்பி ராமையாவின் மகன்.


10. நந்தா

நடிகர். 2002-ல் ‘மெளனம் பேசியதே’ திரைப்படத்தில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

11. விஜயலட்சுமி

நடிகை. இயக்குநர் அகத்தியனின் மகள். ‘சென்னை-28’ திரைப்படத்தில் அறிமுகம். பிக்பாஸ் நான்காவது சீஸனில் பங்குபெற்ற அனுபவமும் உண்டு.

12. இந்திரஜா சங்கர்

நடிகர் ரோபோ சங்கரின் மகள். ‘பிகில்’ திரைப்படத்தில் நடித்தவர்.

13. ஐஸ்வர்யா – விளையாட்டு வீராங்கனை

14. சரண் சக்தி

நடிகர். ‘கடல்’ திரைப்படத்தில் அறிமுகம். ‘வடசென்னை’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளவர். ‘வடசென்னை’யில் தனுஷ் பெண் பார்க்க வரும் அந்த சீனில் இவரை மறக்க முடியுமா?!

15. நாராயணன் லக்கி

நடிகர். ‘பயணம்’ திரைப்படம் தொடங்கி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

16. ராம்.சி

நடிகர் - ‘வானம் கொட்டட்டும்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர்.

ஜான்சிபார் என்பது டான்ஜானியா நாட்டின் ஒரு பகுதியாக உள்ள தீவுக்கூட்டம். கிழக்கு ஆப்ரிக்க கடற்கரைக்கு அருகில் உள்ளது. இங்குதான் ‘சர்வைவர்’ தமிழ் போட்டி நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து சுமார் 5000 கி.மீ. தொலைவில் உள்ளது.

காட்டுப்பகுதியில் ஜீப்பில் ஸ்டைலாக வலம் வந்தபடி மாஸ் என்ட்ரி தந்தார் அர்ஜுன். இவர் நடிக்க வந்து 37 வருடங்கள் ஆகிறதாம். ‘வந்தாரை ஏற்றுக் கொள்ளும் தமிழ்மக்கள் என்னையும் ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி’ என்று ஆரம்பத்திலேயே உருக வைத்தவர், நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த ஆரம்பித்தார். ‘’பல லட்சம் வருடங்களுக்கு முன்னால் மனித இனம் ஆப்ரிக்காவில்தான் தோன்றியது. எனவே நம்முடைய வேர்கூட இங்குதான் இருக்கும்’’ என்று சொன்னவர், அடுத்தபடி ஹெலிகாப்டரில் பறந்தபடி நிகழ்ச்சியைத் தொடர்ந்தார்.

சர்வைவர் -1
சர்வைவர் -1

ஹெலிகாப்டர் வியூவில் கீழே பார்க்க அத்தனை அழகாக இருந்தது. ‘’அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும்னு சொல்லுவாங்க. இதுவும் அப்படி ஆபத்து சூழ்ந்திருக்கும் பகுதி. இப்படியொரு ஏரியாவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள பதினாறு பேர் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்காங்க” என்று அவர் சொன்னவுடன் போட்டியாளர்களின் புகைப்படங்கள் காட்டப்பட்டன.

‘சுராங்கனி’ பாடியபடி போட்டியாளர்கள் ஒரு படகின் மூலம் அந்தத் தீவிற்குச் செல்ல, அர்ஜூன் மட்டும் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். (என்ன இருந்தாலும் முதலமைச்சரா நடிச்சவர் இல்லையா?!)

பிறகு போட்டியாளர்களிடம் பேசத் தொடங்கிய அர்ஜூன், “இந்தப் போட்டியில் கலந்து கொள்ள உடல் மற்றும் மன வலிமை தேவை. ஒரு பழமையான வாழ்க்கை முறைக்குள் (primitive lifestyle) நீங்கள் சென்றாக வேண்டும். அதாவது ஆதிமனிதனைப் போல. என்னவொன்று... துணிமணிகள் மட்டும் அணிந்து கொள்ளலாம். அதற்கு மட்டும் பர்மிஷன்” என்று அவர் சொன்னதும் ஒரு கணம் திக்கென்றுதான் ஆகி விட்டது.

முதல் டாஸ்க்கே மங்கலகரமாக இருந்தது. அனைவரின் செல்போன்களையும் அர்ஜூன் பிடுங்கி வைத்துக் கொள்ள, தங்களுடைய உடலின் ஒரு பகுதியையே பறிகொடுப்பது போல போட்டியாளர்கள் மெல்லிய துக்கத்தில் மூழ்கினார்கள். அவற்றை பிடுங்கி வைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் ‘‘செல்போன் இல்லாம எப்படி இருப்பீங்க” என்றொரு கேள்வி கேட்டு வெறுப்பேற்றவும் அர்ஜூன் தவறவில்லை.

“மேகங்களைத் தூது விட்டு என் ஆசை மகனுடன் தினமும் பேசுவேன்” என்று சென்டியைக் கூட்ட முயன்றார் விஜயலட்சுமி. (நீங்க சீரியலுக்கு வசனம் எழுதப் போனா நல்லா வருவீங்க மேடம்!).

அனைவருக்கும் ‘Survivor Bag’ என்கிற பை தரப்பட்டது. மிக மிக அடிப்படையான பொருட்களை மட்டும் அதில் வைத்துக் கொள்ளலாமாம். ‘‘கடவுளே.. இத்துணுண்டு பையில நான் உள்ளாடையை வைப்பேனா... பாடி ஸ்பிரேயை வைப்பேனா” என்று மைண்ட் வாய்ஸை சவுண்டாக அலறவிட்டபடி மக்கள் அங்கலாய்க்கத் தொடங்கினார்கள்.

“உங்க எல்லோர்கிட்டயும் ஏதாவது ஒரு சென்ட்டிமென்ட்டான பொருள் இருக்கும். இல்லையா... அதைச் சொல்லுங்க” என்று அர்ஜூன் உசுப்பேற்றியதும் ‘அப்பா போட்டோ, மனைவிக்கு எழுதிய கடிதம். அம்மா புகைப்படம்’ என்று ஆளாளுக்கு விக்ரமன் பட ரேஞ்சுக்கு சென்டியைக் கூட்டினார்கள்.

அம்ஜத்கான் மட்டும் வித்தியாசமாக “தேங்காய் எண்ணைய் வைத்திருக்கிறேன்” என்றார். அதற்கு சொன்ன காரணம்தான் விநோதமாக இருந்தது. அவருடைய தலைமுடி மிக நீளமாக வளர்ந்து டாஸ்க் செய்ய இடையூறை ஏற்படுத்துமாம். அப்போது எண்ணைய் தடவிக் கொள்வாராம். “அதெல்லாம் இங்க கிடைக்கற தேங்காயை வெச்சு பிழிஞ்சு எடுத்துக்கங்க” என்று அந்த கோரிக்கையை இடது கையால் ஹேண்டில் செய்தார் அர்ஜூன்.

சர்வைவர் -1
சர்வைவர் -1

‘சென்டியான பொருட்களை சொல்லுங்க” என்ற அர்ஜூன் ‘அதை மட்டும் வைத்துக் கொள்ளலாம்’ என்று சிறப்பு அனுமதி வழங்கப் போகிறார் என்று பார்த்தால், “இந்தப் போட்டியில் உணர்வு ரீதியான பலம் ரொம்ப முக்கியம். எனவே அதையெல்லாம் கொடுத்துங்க” என்று மறுபடியும் ‘மங்காத்தா’ ஸ்டைலில் காற்றை இறக்கி விட்டார். “அடப்பாவி மக்கா... சும்மா இருந்தவங்களை ஏன்யா சொறிஞ்சு விட்டீங்க?” என்றுதான் கேட்கத் தோன்றியது.

‘சர்வைவர்’ நிகழ்ச்சியை ‘Father of reality show’னு சொல்லுவாங்க” என்ற அர்ஜூன், அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தார். (அப்ப அம்மா யாரு?!).

பதினாறு போட்டியாளர்கள், இரண்டு குலங்களாக (Tribe) பிரிக்கப்பட்டு தனித்தனி தீவுகளில் விடப்படுவார்கள். அரிசி, பருப்பு மட்டும் தரப்படும். சமைப்பதற்கான நெருப்பு முதற்கொண்டு இதர பல விஷயங்களை அவர்களேதான் சம்பாதிக்க வேண்டும். (எந்த ஆப்பிலும் உணவு ஆர்டர் செய்ய முடியாது!)

ஒவ்வொரு வாரமும் இரண்டு முக்கியமான சவால்கள் தரப்படும். இதில் வெல்பவர்களுக்கு இரண்டுவிதமான பலன்கள் கிடைக்கும். ஒன்று, Reward Challenge. இதில் வெல்பவர்களுக்கு கட்டில், எக்ஸ்ட்ரா சாப்பாடு போன்ற கூடுதல் செளகரிய வசதிகளைப் பெறுவார்கள். இரண்டு, Immunity Challenge. இதில் வெல்பவர்களுக்கு போட்டியில் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான விஷயங்கள் கிடைக்கும். இதில் தோற்கும் அணி, Tribal council-ல் தங்களில் ஒருவரை வெளியேற்றுவதற்கான வாக்குகளை அளிக்கும். அந்த நபர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

“ஓகே... கேமுக்குள்ள போகலாம். நீங்க இரண்டு tribe-ஆ பிரியப் போறீங்க. உங்க ப்ரொஃபைலை வெச்சு இரண்டு நபர்களை முதல் உறுப்பினரா செலக்ட் செஞ்சிருக்கோம். அது விக்ராந்த் மற்றும் லட்சுமி பிரியா. மஞ்சள் மற்றும் சிவப்பு அணியாக இது இருக்கும்.யாருக்கு எந்த அணி விருப்பமோ. அங்க போய் சேர்ந்துக்கலாம்” என்று அர்ஜூன் சொன்னதும்தான் தாமதம், ’ஹேய் அந்தப் பக்கம் சுண்டல் தர்றாங்களாம்’ என்ற அறிவிப்பைக் கேட்டது போல பார்வதி உள்ளிட்ட பல பெண்கள் விக்ராந்த் பக்கம் பாய்ந்தார்கள்.

ஒரு வலிமையுள்ள ஆணின் மீது தான் பெண்ணுக்கு தன்னிச்சையாக வசீகரம் உருவாகும் என்கிற ஆதிக்குணம் இங்கேயும் வெளிப்பட்டது. ‘மிருகங்களிடமிருந்தும் பகைவர்களிடமிருந்தும் தன்னை ஒரு வலிமையான ஆணால்தான் காப்பாற்ற முடியும்’ என்று பெண் குலம் காட்டு வாழ்க்கையில் நினைத்ததுதான், Social Security என்பது உள்ளிட்ட பல நவீன வடிவங்களாக இன்றும் தொடர்கிறது. ஆனால் மனித குலத்தின் தொடக்கத்தில் தாய்வழிச் சமூகமாகத்தான் இருந்திருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.

சர்வைவர் -1
சர்வைவர் -1
சர்வைவர் -1
சர்வைவர் -1
சர்வைவர் -1
சர்வைவர் -1

விக்ராந்த்தின் பக்கம் பெண்கள் கூட்டம் அலைமோதியதால் மீதமிருந்த ஆண்கள் வேறுவழியின்றி லட்சுமிபிரியாவின் பக்கம் வந்தார்கள். ‘‘தன் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லையே’’ என்று லட்சுமிபிரியா சற்று சங்கடம் அடைந்தார். உண்மையில் அவரே ‘விக்ராந்த் இருக்கும் டீமில் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று முதலில் நினைத்தவர்தான்.

‘’நின்னூட்டீங்களா... இது இல்ல மேட்டர். ஆட்டத்தைக் கலைங்க... அணியை செலக்ட் பண்றதுக்குன்னு ‘சர்வைவர்ல’ ஒரு முறை இருக்கு” என்று ‘மங்காத்தா கிளைமாக்ஸ்’ ஸ்டைலில் சீட்டைக் கலைத்து விளையாடினார் அர்ஜூன். (என்னா வில்லத்தனம்?!).

அதன்படி விக்ராந்த் மற்றும் லட்சுமிபிரியாவின் புகைப்படம் இரண்டு தனித்தனி போர்டுகளில் ஒட்டப்பட்டிருக்கும். அந்த போர்டுகளில் இதர போட்டியாளர்களின் இடங்கள் காலியாக இருந்தன. போட்டியாளர்களின் புகைப்படம் கொண்ட மேக்னடிக் காயின்கள், எந்த போர்டில் ஒட்டுகிறதோ, அவர்கள் தன்னிச்சையாக அந்த அணியைச் சேர்ந்தவர்களாகி விடுவார்கள்.

இதன்படி விக்ராந்த் (மஞ்சள்) அணியில் சரண், ராம், இந்திரஜா, லேடி காஷ், விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி மற்றும் உமாபதி ஆகியோர் வந்து சேர்ந்தார்கள். லட்சுமிபிரியா (சிவப்பு) அணியில் அம்ஜத்கான், ஸ்ருஷ்டி, நந்தா, லக்கி நாராயணன், பெசன்ட் ரவி, ஐஸ்வர்யா, பார்வதி ஆகியோர் வந்தார்கள். இதனால் சமநிலையான வலிமையைக் கொண்ட இரு அணிகள் உருவாகின.

விக்ராந்த் அணிக்கு ‘காடர்கள்’ என்றும் லட்சுமி பிரியா அணிக்கு ‘வேடர்கள்’ என்று பெயர் இடப்பட்டது. காடர்கள், வேடர்கள் என்பதின் பெயர்க்காரணம், இவர்கள் 900 வருடங்களுக்கு முன்பு தமிழ் சமூகத்தில் இருந்த ஆதிக்குடிகள். இவர்கள் வீர, தீர, சூரர்களாக இருந்தார்கள். அதாவது உடல் வலிமை, மனவலிமை, அறிவுக்கூர்மையில் சிறந்தவர்களாக விளங்கினார்களாம்.

“நீங்களும் இப்படி இருக்கீங்களான்னு பார்ப்போம்” என்ற அர்ஜூன், இரண்டு அணிகளுக்குமான முதல் டாஸ்க்கைத் தரத் தொடங்கினார்.

அந்தச் சவால் என்ன?

பார்த்துடுவோம்!