Published:Updated:

சர்வைவர் - 2|அலறித் துடித்த விக்ராந்த், பற்றவைத்த பார்வதி… களைகட்டப்போகும் 'தலைவர்' போட்டி!

சர்வைவர் - 2

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் இரண்டாவது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 2|அலறித் துடித்த விக்ராந்த், பற்றவைத்த பார்வதி… களைகட்டப்போகும் 'தலைவர்' போட்டி!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் இரண்டாவது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 2
‘சர்வைவர்’ இரண்டாம் நாளின் நிகழ்வுகளுக்கு செல்லும் முன்பாக சில விஷயங்கள்...

இரண்டு மனிதர்கள் சேர்ந்தாலே அங்கு நான்கு அணிகளும் எட்டு கருத்து வேறுபாடுகளும் உருவாகிவிடும். அதிலும் தமிழர்கள் இந்த விஷயத்தில் பயங்கர கில்லாடிகள். அதை நிரூபிக்கும் வகையில் இரண்டாவது நாளன்றே போட்டியாளர்களுக்குள் குடுமிப்பிடி சண்டைகள் ஆரம்பமாகி விட்டன. இந்த நோக்கில் வி.ஜே.பார்வதி சர்ச்சைகளின் மையமாக இருப்பார் என்று தோன்றுகிறது.

இருட்டு, புதிய சூழல், உணவு, தங்குமிடம் போன்றவற்றுக்காக நிகழ்த்த வேண்டிய போராட்டம் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் சக மனிதர்களின் ஈகோவோடு மோத வேண்டிய சூழலையும் பார்க்க முடிகிறது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். என்னதான் இதில் நிறைய நடைமுறைச் சங்கடங்கள், நெருக்கடிகள் இருந்தாலும் அந்தத் தீவுகளின் அட்டகாசமான அழகைப் பார்க்கிறபோது ‘நாமும் இது போல் சில நாட்கள் ஆதிமனிதர்களாக வாழ்ந்து பார்க்க வேண்டும்’ என்கிற ஆவலை இந்த நிகழ்ச்சி உருவாக்குகிறது.

ஓகே... இரண்டாவது நாளில் என்ன நிகழ்ந்தது?

சர்வைவர் - 2
சர்வைவர் - 2

காடர்கள் அணியும், வேடர்கள் அணியும் தங்களின் முதல் சவாலை இன்றுதான் சந்திக்கப் போகிறார்கள். இரண்டு விஷயங்களுக்காக அவர்கள் போட்டியிடப் போகிறார்கள்.

ஒன்று, வசதியுள்ள தீவு. இன்னொன்று நெருப்பு உருவாக்கும் கருவி. வசதியுள்ள தீவு என்றால் அங்கு தேங்காய், பப்பாளி போன்ற விஷயங்கள் கிடைக்கும். ஆனால், நெருப்பு இருக்காது. வசதியில்லாத சுமார் தீவில் தேங்காய் கிடைக்காது. ஆனால் கையில் நெருப்பு கருவி இருக்கும்.

நெருப்பா, உணவா? இதுதான் நேற்றைய சவால்.

இதற்கு முன்பாக அவர்கள் ஒன்றை செய்தாக வேண்டும். கரையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற படகில் காய்கறிகளும், சமைப்பதற்கான உணவுப்பொருட்களும் இருக்கும். எந்த அணி நீந்திச் சென்று படகை முதலில் அடைகிறதோ, அவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் உணவுகளை முதலில் அள்ளிக் கொண்டு வரலாம். பொருட்களை எடுத்து வருவதற்காக தெப்பம் (Raft) தரப்பட்டிருந்தது.

இதுவே நம்முடைய அன்றாட வாழ்க்கை என்றால் “அண்ணாச்சி... கால் கிலோ தக்காளி கொடுங்க” என்று பக்கத்துக் கடையில் சென்று எளிதாக வாங்கி வர முடிகிற சாதாரண விஷயம்தான். ஆனால் இது காட்டுக்குள் நிகழ்கிற ‘சர்வைவல்’ போராட்டம் ஆயிற்றே! அனைத்துக்கும் சிரமம்தான்.

இரண்டு அணிகளும் தெப்பத்தை தூக்கிக் கொண்டு ஆவேசமாக கடலுக்குள் இறங்கினார்கள். மிக எளிதாக நடந்து சென்று விடலாம் என்று கற்பனை செய்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி. நடக்க, நடக்க நீரின் ஆழம் அதிகமாக இருந்தது.

முதலில் முந்திச் செல்ல வேண்டும் என்கிற ஆவேசத்துடன் வேகமாக நீந்திச் சென்ற விக்ராந்த், இடையில் சோர்ந்து விட எதிர் அணியைச் சேர்ந்த ஐஸ்வர்யா அவரை முந்திச் சென்று சில முயற்சிகளுக்குப் பின் படகில் எப்படியோ தாவி ஏறி விட்டார்.

ஆனால் அவரைப் பின்தொடர்ந்து வந்து சேர்ந்த விக்ராந்துக்கு சோர்வு அதிகமாக இருந்ததால் படகில் ஏற முடியாமல் பல முறை தடுமாறி உரத்த குரலில் அலறி உதவி கோரினார். அருகில் இருந்த மெடிக்கல் டீம் உடனே வந்து விக்ராந்தை அழைத்துச் சென்றது.

சர்வைவர் - 2
சர்வைவர் - 2

‘’வேகமாகச் சென்றும் தன்னால் பொருட்களை எடுக்க முடியவில்லையே!’’ என்று கரையில் சோர்ந்து அமர்ந்திருந்த விக்ராந்தின் உடல்நிலையை அர்ஜூன் அக்கறையுடன் விசாரித்தார்.

உடல் வலிமையில் ஆண் சிறந்தவராக சொல்லப்படுவதை உடைத்து ஒரு பெண் முந்திச் சென்றது பாராட்டுக்குரிய விஷயம். ஐஸ்வர்யா படகில் ஏறி கடகடவென்று பொருட்களை எடுத்து வைத்தாலும் அவருடைய அணி படகை நெருங்க முடியாமல் தூரத்தில் தடுமாறிக் கொண்டிருந்தது.

ஐஸ்வர்யாவைச் சேர்ந்த வேடர்கள் அணி இன்னொரு பிரச்னையையும் சந்தித்தது. பெசன்ட் ரவியால் தொடர்ந்து நீரில் நடந்து வர முடியாமல் சோர்வு அடைந்து விட்டதால், அவர் அப்படியே தெப்பத்தில் ஏறி படுத்து விட்டார். எனவே அவருடைய எடையையும் சேர்த்து தள்ளிக்கொண்டு வர நேர்ந்தது. ஒருவரின் உடல் பலத்தை விட ஸ்டாமினாவே முக்கியம் என்பதை இது போன்ற நிகழ்வுகளின் மூலம் அறிய முடிகிறது.

முதலில் ஏறி விட்டாலும் ஐஸ்வர்யா மட்டும் படகில் நின்று தவித்துக் கொண்டிருக்க, அவரைத் தொடர்ந்து படகில் ஏறிய சரண், அங்கிருந்த கயிறு ஒன்றை எடுத்து வீசினார். சமயோசித உணர்வு இது. எனவே கயிற்றைப் பிடித்துக் கொண்டு ‘காடர்கள்’ அணியால் படகின் அருகே வர முடிந்தது.

இப்படியாக சில பல போராட்டத்துக்குப் பிறகு இரு அணிகளும் தங்களின் பொருட்களை தெப்பத்தில் சேகரித்துக் கொண்டு மூச்சு வாங்க கரைக்கு திரும்பினார்கள். (ச்சை! என்னய்யா வாழ்க்கை இது! கால் கிலோ தக்காளிக்கு உயிரை பணயம் வைக்க வேண்டியிருக்கு!)

இதற்குப் பிறகுதான் முக்கிய சவால் அவர்களுக்கு காத்திருந்தது. மணல் பகுதியில் இரண்டு பெரிய வட்டங்கள் இருந்தன. ஒன்றில் ‘நல்ல தீவுக்கான’ மேப் இருக்கும். இன்னொன்றில் நெருப்பு உருவாக்கும் கருவி இருக்கும். அணிகளின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து அவை கிடைக்கும்

ஒருபக்கம் விஜயலட்சுமியும், இன்னொரு பக்கம் நந்தாவும் மண்ணை ஆவேசமாக கையால் தோண்டினார்கள். அவர்களுக்கு சோர்வு ஏற்பட்டதும் வேறு நபர்கள் வந்தார்கள். ‘‘ரெண்டு பேரா கூட ட்ரை பண்ணலாம்” என்று அர்ஜூன் சற்று சலுகை தந்தவுடன் உதவிக்கு ஆள் கிடைத்தது. என்றாலும் கூட மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சமாச்சாரத்தை தேடி எடுப்பது அத்தனை எளிதான விஷயமாக இல்லை. பெரும் போராட்டத்துக்குப் பிறகு ‘காடர்கள்’ அணிக்கு நெருப்பு கருவி கிடைத்தது. வேடர்கள் அணிக்கு ‘நல்ல தீவு மேப்’ கிடைத்தது.

சர்வைவர் - 2
சர்வைவர் - 2

இரண்டு அணிகளும் தனித்தனியான படகில் அவரவர்களின் தீவுகளுக்கு சென்று இறங்கினார்கள். அவர்கள் இறங்கிய நேரம் இரவாக இருந்ததால் ஒரே கும்மிருட்டு. நல்ல வேளையாக நிலா வெளிச்சம் சற்று இருந்தது.

சுற்றிலும் இருளாக இருந்ததால், உண்மையிலேயே நடுக்காட்டில் இறக்கி விடப்பட்ட பேருந்து பயணிகளைப் போல போட்டியாளர்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். அம்ஜத்கானின் தேடல் எப்போதுமே வித்தியாசமாக இருக்கிறது. அவர் கையோடு ‘லுங்கி’ கொண்டு வந்திருந்தார். ‘உடுத்திக்கலாம், போர்த்திக்கலாம், துடைச்சுக்கலாம்’ என்று மல்ட்டி பர்ப்பஸ் ஆடையாக அதைப் பயன்படுத்துவேன் என்றார்.

வேடர்கள் அணியிடம் நெருப்பு இல்லாததால் அவர்கள் இருட்டில் பிஸ்கட் சாப்பிட்டு சமாளித்தார்கள். காடர்கள் அணியிடம் நெருப்புக் கருவி இருந்ததால் அதை வைத்து Camp fire அமைத்து சுற்றி அமர்ந்து கொண்டார்கள். Camp fire அமைக்கும் விஷயத்தில் லேடி காஷுக்கு நல்ல அனுபவம் இருந்தது.

ஆதிமனிதனின் வாழ்க்கையில் ‘நெருப்பை’ அவன் முதன் முதலில் உருவாக்கிய பரவச தருணம் எப்படி இருந்திருக்கும் என்பதை இந்தச் சமயத்தில் உணர முடிந்தது. நெருப்பு இல்லாமல் இருளில் தவித்த ‘வேடர்கள்’ அணி, தட்டுத் தடுமாறி அந்த ஏரியாவில் சுற்றியதில் ஒரு பெட்டி தட்டுப்பட்டது. அதில் அரிவாள் உள்ளிட்ட பல உபயோகப் பொருட்கள் இருந்தன. எப்போது விடியும்? என்று இரு அணிகளுமே ஆவலாக எதிர்பார்த்தன. (விடியட்டும், முடியட்டும்).

விடிந்தது. அடடா! அதிகாலையின் சூரிய வெளிச்சத்தில் தீவின் அழகைப் பார்ப்பதற்கு அத்தனை அட்டகாசமாக இருந்தது. பாத்ரூமோ, பல் துலக்கும் வசதியோ என்று எதுவும் இல்லாததால், முகச்சுளிப்புடன் வேப்பங்குச்சியை போட்டியாளர்கள் மென்று கொண்டிருந்தார்கள். (இன்னொரு விஷயத்துக்கு என்ன செய்தார்கள் என்பது காட்டப்படவில்லை. நல்லவேளை!).

வேடர்கள் அணியின் நிகழ்வுகளும் காடர்கள் அணி செய்வதும் மாற்றி மாற்றி காட்டப்பட்டதில், என்னதான் சப்டைட்டில் இருந்தாலும், ‘யார்... யார்... எந்த அணி?” என்பது குழப்பமாகவே இருக்கிறது.

வேடர்கள் அணி இருந்த இடம் ‘நல்ல தீவு’ என்பதால் தென்னை மரம் இருந்தது. எனவே இளநீர் அருந்தி காலை நேரத்து பசியைப் போக்கலாம் என்று முடிவு செய்தார்கள். ஆண்கள் உதவி செய்ய ஐஸ்வர்யா சட்டென மரத்தில் ஏறி இளநீர்க்காய்களை பறித்துப் போட்டார். (இந்த பொண்ணுதாம்ப்பா.. எல்லாத்துலியும் கில்லியா இருக்கு!).

நெருப்புக் கருவி இருந்ததால் ‘காடர்கள்’ அணி, அரிசி, பருப்பு வைத்து கஞ்சி தயாரித்தது. விஜயலட்சுமி + இந்திரஜா கூட்டணி சமைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். இருக்கிற பசியில் இஞ்சியைக் கொடுத்தாலே சுவைக்கும் ரேஞ்சில் இருந்தவர்களுக்கு அந்த ‘கஞ்சி’ அமோகமான சுவையுடன் இருந்ததில் ஆச்சரியமில்லை.

சர்வைவர் - 2
சர்வைவர் - 2

நெருப்பு இல்லாத வேடர்கள் அணியில் இருந்த லட்சுமி பிரியா, ஐந்தாம் வகுப்பில் படித்திருந்ததையெல்லாம் நினைவில் வைத்திருந்து பூதக்கண்ணாடியின் மூலம் சூரிய வெளிச்சத்தை பிரதிபலிக்க வைத்து ‘நெருப்பை’ உண்டாக்க முடியுமா என்று நிதானமாக முயன்று பார்த்தார். ம்ஹூம். பூதம் கூட வந்து விடும் போலிருக்கிறது. நெருப்பு வரவில்லை. இன்னொரு பக்கம் பெசன்ட் ரவி, கற்களை வைத்து உரசிக் கொண்டிருந்தார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை.

அடுத்ததாக இரு அணிகளும், மழைக்கு ஒதுங்குவதற்காக ‘கூடாரத்தை’ அமைக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள். ஈகோ எனும் ஓட்டகம் அவர்களின் கூடாரத்தில் அப்போதுதான் மெல்ல நுழையத் தொடங்கியது.

மரம் வெட்டச் சென்றதில் அம்ஜத் கானுக்கும் பார்வதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மெல்ல புகையத் தொடங்கியது. ‘நான் செய்யறேன்’ என்று அடம்பிடித்த பார்வதியிடம், “உங்களால பண்ண முடியாதுன்னு நான் சொல்லலை. எல்லாத்துக்கும் Opposite-ஆ ரியாக்ட் பண்ணாதீங்க” என்று ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார் அம்ஜத்கான்.

இந்தப் பஞ்சாயத்து தவிர “கேமரா வர்றப்ப மட்டும் வேலை செய்யறியா?” என்று ஸ்ருஷ்டி டாங்கேவைப் பார்த்து பார்வதி கேட்டு விட்டார் போலிருக்கிறது. எனவே அவர் ஒருபக்கம் தனியாக புகைந்து கொண்டிருந்தார். (இருக்கு... இந்த வாரம் என்டர்டெயின்மென்ட் இருக்கு).

வெறுமனே இப்படி புகைந்து கொண்டிருந்தால் என்ன உபயோகம்? அது திகுதிகுவென பற்றி எரிய வேண்டாமா? எனவே ‘சர்வைவர்’ டீம் அடுத்த அஸ்திரத்தை எடுத்தார்கள். அணிக்கு யார் தலைவர் என்பதை முடிவு செய்ய வேண்டும். (அடடா! தலைவர் போட்டியா... செம அயிட்டமாச்சே இது!).

சர்வைவர் - 2
சர்வைவர் - 2

தலைவர் பதவிக்கு அடிப்படையான தகுதியாக ‘தைரியம்’ இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. இந்தப் பதவிக்காக இருவரை நாமினேட் செய்யலாம். அந்த இருவருக்குள் நிகழும் போட்டியில் வெல்பவருக்கு ‘தலைவர்’ போஸ்ட்.

வேடர்கள் அணியில் ‘நந்தா’வை நாமினேட் செய்தார் அம்ஜத். “எதுக்குப்பா போட்டியெல்லாம்... பேசாம ஐஸ்வர்யாவை நாம ஒருமனதாக செலக்ட் செஞ்சு தலைவராக்கிடலாம். ஒருவேளை போட்டி அவசியம் இருக்கணும்னு சொன்னா.. அப்போ இன்னொரு ஆளை நாமினேட் செய்யலாம்” என்று சமாதானக் கொடியை பறக்க விட்டார் பெசன்ட் ரவி. (ஆசை, தோசை, அப்பளம், வடை.. போட்டி இல்லாம எப்படிய்யா நாங்க ஃபுட்டேஜ் தேத்தறது?!- இது சர்வைவர் டீமின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம்!).

இந்தச் சமயத்திலும் பார்வதி தன் வாய்ஸை பதிவு செய்யத் தவறவில்லை. “ஒரு தலைவராகப்பட்டவர் வெறுமனே தைரியசாலியாக இருந்தால் போதாது. அனைவரையும் நல்ல முறையில் ஒருங்கிணைக்கிறவராக இருக்க வேண்டும்” என்று ஆட்சேபித்துக் கொண்டிருந்தார். (அப்படிப் பத்த வை ராசாத்தி... நீதான் நல்ல பொண்ணு - சர்வைவர் டீம்).

“நானும் இங்கு பல விஷயங்களை தானாக முன்வந்து செய்தேன். ஆனால் அந்த உழைப்புக்கான அங்கீகாரம் எனக்கு தரப்படவில்லை” என்று நந்தாவிடம் நேரடியாக கம்ப்ளெயின்ட் செய்து கொண்டிருந்தார் பார்வதி. ஆனால் அவரோ, ‘மெளனம் பேசியதே’ நந்தாவாக மாறி அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

ஆனால் தலைவர் பதவிக்கான போட்டி நிச்சயம் இருக்கிறது. அடுத்த எபிஸோடில் இந்தப் போட்டியின் துளியை காட்டினார்கள். அதில் சோடா பாட்டில்கள் ஆவேசமாக வீசப்பட்டுக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. தலைவர் ஆவதற்கான முதல் பாலபாடமே சோடா பாட்டில் வீசுவதுதானே?!

பார்த்துடுவோம்!